அமெரிக்க பத்திரிகை ஒன்றுதான் முதன்முதலாக இந்தியப் பிரதமராக
தகுதியானவர் மோடியா, ராகுலா என்ற ''ஆரோக்கியமற்ற, ஜனநாயக விரோத'' விவாதத்தை
கிளப்பிவிட்டது. இந்தப் பின்னணியில்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு அத்வானி
வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையில் மோடியை பிரதமர் வேட்பாளராக
முன்னிறுத்துமாறு பாஜகவுக்கு உத்தரவிட்டது.
அன்று துவங்கி மோடி தான்
பிரதமர் என்கிற பிரச்சார சுனாமியை பாஜக மட்டுமல்ல, கார்ப்பரேட் ஊடகங்களும்,
வாடகைக்கு அமர்த்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களும் காது ஜவ்வை கிழிக்கும்
வகையில் செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் கூட வைகோ, தமிழருவி போன்றவர்கள்
மோடி அலை நாடு முழுவதும் வீசுகிறது என்று புல்லரித்து புளகாங்கிதம்
அடைந்தார்கள். பல்வேறு தளங்களில் இந்த மோசடிப் பிரச்சாரம் நடைபெற்று
வருகிறது.
நாட்டில் எங்கும் மோடி அலை வீசவில்லை. மாறாக கோடை
காலத்தின் துவக்கமாக வெப்பஅலை தான் வீசத்துவங்கியுள்ளது. இந்நிலையில்
வியாழனன்று வெளிவந்த நாளேடுகளில் ''பாஜகவுக்கு 63 சதவீத இந்தியர்கள்
ஆதரவு - அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்'' என்ற செய்தி பிரதானமாக
இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘பெவ்’ என்ற நிறுவனம் தான் இந்த
ஆய்வை நடத்தியதாம். அவர்கள் நடத்திய ஆய்வில் பத்தில் ஆறு பேர் நாடாளுமன்றத்
தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றும் பத்தில் இரண்டு பேர்
காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் இந்த நிறுவனத்திடம்
கூறினார்களாம்.
விரிந்து பரந்த இந்தியாவின் வாக்காளர்கள் எண்ணிக்கை
தற்போது 81.4 கோடியாக உள்ளது. இது பல நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை
விட பல மடங்கு உயர்வு. இவ்வளவு பெரிய வாக்காளர் எண்ணிக்கை கொண்ட
இந்தியாவில் அமெரிக்க நிறுவனம் 2464 பேரிடம் ஆய்வு நடத்திதாம். அவர்களில்
63 சதவீதம் பேர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார்களாம்.
மூளை வேலை
செய்கிற யாரும் இத்தகைய முட்டாள்தனமான ஆய்வுகளை ஏற்றுக் கொள்வார்களா? இந்த
செய்தியை மிகப்பெரிய செய்தியாக வெளியிட்டு இந்திய பத்திரிகைகளும் தங்கள்
மோடிவிசுவாசத்தையும், அமெரிக்க விசுவாசத்தையும் ஒரு சேர காட்டிக்கொள்கின்றன.
திறந்த வீட்டில் ஆளாளுக்கு நுழைந்து அகப்பட்டதை சுருட்டுவது போல யார்
வேண்டுமானாலும் இந்த நாட்டில் நுழைந்து ஆய்வு நடத்தலாம். முடிவைத்
தெரிவிக்கலாம். மக்களை திசை திருப்பலாம்.
இதேபோன்று இந்திய நிறுவனம்
ஒன்று அமெரிக்காவில் ஆய்வு நடத்தி அந்த நாட்டில் உப்புமாவுக்கு இருக்கும்
மரியாதை கூட ஒபாமாவுக்கு இல்லை என்று செய்தி வெளியிட்டால் அந்த நாடு சும்மா
இருக்குமா? இந்தியா என்றால் இளக்காரமா? இன்னொரு செய்தியும் பத்திரிகைகளில்
வெளியானது. அது என்னவென்றால் ''மோடி பிரதமரானால் பொருளாதாரம் வளரும்'' என்று
''மூடிஸ்'' தரச்சான்று நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளதாம்.
சைபால்
களிம்பு அரிப்பு, சொறியை நன்றாக குணமாக்கும் என்று தரச்சான்று வழங்குவது
போல மோடிக்கு சான்று வழங்கியுள்ளது அந்த நிறுவனம். இதுவும் பிரபலமான
நிறுவனம் தானாம். தொழில்துறையினருக்கு மோடி மிகுந்த நண்பனாகத் திகழ்வதால்
பொருளாதாரம் வளரும் என்று மூடிஸ் என்கிற அந்த நிறுவனம் தனது ஆய்வை திறந்து
காட்டியுள்ளது. இத்தகைய நிறுவனங்கள் பெருமுதலாளிகளால் நடத்தப்படுவதுதான்.
டாடா எனும் பெருமுதலாளிக்கு நானோ கார் தொழிற்சாலை
அமைக்க அடிமாட்டு விலைக்கு நிலம் கொடுத்த மோடி பதவிக்கு வரவேண்டும் என்றே
முதலாளிகள் விரும்புகின்றனர். அம்பானிக்கு எதிராக தான் எடுத்த நடவடிக்கை
குறித்து உங்கள் கருத்து என்ன? என்று தில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால்
கேட்டதற்கு மோடி இன்று வரை வாய்திறக்கவில்லை. ஆனால் ஊர்ஊராகச் சென்று
தசாவதாரம் கமலஹாசன் போல பல்வேறு கெட் -அப்புகளில் தோன்றி முழக்கம்
செய்துகொண்டிருக்கிறார்.
கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் பல்வேறு
தருணங்களில் நிகழ்த்தப்பட்ட கருத்துத் திணிப்புகளை தகர்த்தெறிந்து இந்திய
வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மோடி
குறித்த மோசடியான பிரச்சாரப் புயலை இந்திய வாக்காளர்கள் புறந்தள்ளுவார்கள்
என்பது உறுதி.
அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் சரி, அனகோண்டா
நிறுவனமாக இருந்தாலும் சரி அப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய்
வைத்துக் கொள்வார்கள் என்று அறிய இப்போதே ஆவலாக இருக்கிறது.
-மதுரை சொக்கன்
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக