ப.சிதம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ப.சிதம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஏப்ரல், 2013

வாஷிங்டனில் இன்சூரன்ஸை ஏலம்விட்ட அமினா சிதம்பரம்...!


                இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்பை உயர்த்துவது ஐ.மு. கூட்டணி அரசின் முன்னுரிமை செயல்திட்டம் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். இதனை அவர் எங்கே, எவர் முன்னிலையில் கூறியிருக்கிறார் என்பது கூடுதல் கவனத்திற்கு உரியது. அமெரிக்காவில், வாஷிங்டன் நகரில், பீட்டர்ஸன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இன்டர்நேசனல் எகனாமிக்ஸ் என்ற பொருளாதார ஆய்வு நிறுவனத்தில் சனிக்கிழமையன்று உரையாற்றிய சிதம்பரம் இவ்வாறு உறுதியளித்திருக்கிறார். பொருளாதார ஆய்வறிக்கைகளின் பெயரால் உலகமய-தனியார்மய-தாராளமய கொள்கைகளை மற்ற நாடுகள் ஏற்று நடைமுறைப்படுத்த வைப்பதற்கான ஏற்பாடுகளில் ஒன்றான அந்த நிறுவனத்தின் மூலமாக அமெரிக்காவின் பன்னாட்டுத் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு சிதம்பரம் ஒரு சமிக்ஞை காட்டியிருக்கிறார் என்று சொல்லலாம். எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புடன் இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட முன் வரைவு நிறைவேறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
         காங்கிரஸ் ஆட்சியை எதிர்ப்பது போல் எதிர்த்துக்கொண்டு, அதன் இப்படிப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளுக்குக் கூச்சமின்றி ஆதரவளித்து வரும் பாஜக உள்ளிட்ட கட்சிகளை மனதில் வைத்துக்கொண்டுதான் இப்படிப்பட்ட நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியிருப்பார் என்பது ஒன்றும் ஊகிக்க முடியாததல்ல. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு பிரச்சனையில் இந்த “எதிர்க்கட்சிகள்” மன்மோகன் சிங் அரசுக்கு அளித்த ஒத்துழைப்பை மறந்துவிட முடியுமா? இந்த சட்டமுன்வரைவின் எதிர்ப்பாளர்களை காப்பீட்டு நிறுவனங்கள் அணுகியிருப்பதைப் பாராட்டியிருக்கிறார் அவர். காப்பீட்டு நிறுவனங்களின் இந்த முயற்சி எதிர்க்கட்சிகள் பிரச்சனையைப் புரிந்துகொள்ளவும், சட்டமுன்வரைவு நிறைவேறவும் உதவும் என்று உறுத்தலே இல்லாமல் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். 
       சில்லரை வர்த்தகத்துறை விவகாரத்தில் வால்மார்ட் நிறுவனம் தனது வர்த்தக மேம்பாட்டுத்திட்டத் தின் ஒரு பகுதியாக இந்தியாவில் ரூ.160 கோடி வரை செலவிட்டுள்ளது என்றும், எதிர்ப்புத் தெரிவித்தவர்களை “அனுசரித்துப் போகச் செய்வதற்கான” முதலீட்டுச் செலவுதான் அது என்றும் செய்திகள் வந்துள்ளன. இந்தியாவுக்குள் அரசியல் ரீதியாக அந்நிய காப்பீட்டு நிறுவனங்கள் தலையிடுவதற்கும் அதற்காக “செலவு செய்வதற்கும்” அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை ஐ.மு. கூட்டணி அரசு அளிக்கிறது என்பதற்கு சிதம்பரத்தின் இந்தப் பாராட்டைவிடவும் வேறு சாட்சியம் தேவையில்லை.
            இந்திய காப்பீட்டுத் துறையில் இதுவரை முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது உலகளாவிய வருவாயின் ஒரு பகுதியை இந்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் உள்கட்டுமான வளர்ச்சிக்கும் திருப்பிவிடும் என்று ஆரம்பத்தில் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டன. இன்று வரையில் சுமார் 6,700 கோடி ரூபாய் அளவுக்கு கூட்டுப்பங்கு முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அவ்வாறு தங்களது உலக வருவாயின் ஒரு சிறுபகுதியைக் கூட இந்திய தொழில் - உள்கட்டுமான வளர்ச்சிக்கு ஒதுக்கியதாக ஒரு ஆதாரமும் கிடையாது என்பதை அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆக மக்கள் நலன்களை விடவும் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் மனம் குளிரச் செய்வதிலேயே ஐ.மு.கூட்டணி அரசு அக்கறையோடு இருக்கிறது. அதை முறியடிக்க நடக்கிற போராட்டத்திற்கு பேராதரவு அளிப்பது ஒரு தேசப்பற்றுக் கடமை.

 நன்றி :


திங்கள், 4 மார்ச், 2013

பெண்களுக்கான ‘வங்கிகள்’ வெறும் கண்துடைப்பே...! - நீதிபதி ஜே.எஸ்.வர்மா

          அர்த்தமுள்ள வகையில் சமூகத்தை அடியோடு மாற்றியமைக்காதவரை, ‘பெண்களுக்கான சிறப்பு வங்கி’ போன்ற அறிவிப்புகள் ‘வெறும் கண்துடைப்பாகவே’ அமைந்திடும் என்றும், இத்தகைய அறிவிப்புகளால் நாட்டில் பெண்களுக்கு சமநீதியைப் கொண்டு வந்து விட முடியாது என்றும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா கூறினார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் கே.பி.சிங் நினைவு சொற்பொழிவு சென்ற சனிக்கிழமையன்று நடைபெற்றது. 
        இதில் உரையாற்றிய போதே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக இருந்த நீதிபதி ஜே.எஸ்.வர்மா இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது :-
        ‘‘நிதியமைச்சர் ப.சிதம்பரம் வியாழனன்று பட்ஜெட் உரையின்போது, பெண்களுக்காகத் தனி வங்கி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுபோன்ற ‘பெயரளவிலான’ அறிவிப்புகளால் பெண்களுக்கு சமநீதி கிடைத்திடாது. அரசாங்கத்திடமும், சமூகத்திடமும் பெண்கள் பற்றி இருந்து வரும் மனோபாவம் ஒட்டு மொத்தமாக மாற வேண்டும். எந்தவொரு சமூகத்திலும், நீதியின் சாராம்சம் நேர்மையானதாக இருக்க வேண்டும். நம்முடைய குடும்பங்களிலேயே பெண்களுக்கு சமநீதியைப் பேணிவளர்க்கக்கூடிய முறையில் நம் சமூகம் மாறவேண்டும். சமூகம் அத்தகைய பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட நாட்டில் அமலில் இருந்து வரும் சட்டங்களில் பல்வேறு திருத்தங்களைப் பரிந்துரைத்திருக்கிறோம். ஆயினும், சமூகத்தின் ஆதரவு இல்லாமல் சட்டத்தால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியாது. தற்போது இருந்து வரும் சட்டங்களும், வழிகாட்டுதல்களும், ஆட்சி பரிபாலன அமைப்பு முறையும் சரியாக இருந்திருக்குமானால், டிசம்பர் 16 அன்று தலைநகர் தில்லியில் நடைபெற்ற மிகக் கொடூரமான பாலியல் வன்கொலைக் குற்றம் நடந்திருக்காது.
          ஆயினும், அக்கொடுமைக்கு எதிராக இளைஞர்கள் மத்தியில் உடனடியாக ஏற்பட்ட கோபாவேசம் தான் பெண்களுக்கு சமநீதியைப் பெற்றுத்தருவதற்கான இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து சமூகத்தின் உயர் அடுக்கில் உள்ளவர்களிடமிருந்து வரும் கருத்துக்கள் மிகவும் அபத்தமானவை மட்டுமல்ல; ஒருதலைப்பட்சமானதும் ஆகும். இது ஆணாதிக்க சமூகத்தின் அணுகுமுறைக்கு சரியான எடுத்துக்காட்டுகளாகும். உயர்மட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளிடமே இத்தகைய ஒருதலைப்பட்சமான குறைபாடுள்ள அணுகுமுறைதான் இருக்கிறது. இதனால்தான் இவர்கள் பாலியல் கொடூரத்திற்குள்ளான பெண்களை ‘‘நடமாடும் பிணங்கள்’’ என்று சித்தரித்தார்கள். இவை இவர்களின் கருத்து மட்டுமல்ல, சமூகத்தின் மனோபாவம் இது மாதிரியாகத்தான் இருக்கிறது. எனவே சமூகத்தின் மனோபாவமே அடியோடு மாறியாக வேண்டும்''.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

புதுச்சேரியில் உலாவரும் ''சிதம்பர ரகசியம்''...!



          கடந்த ஒரு மாதமாக புதுச்சேரியில் மாநிலம் முழுதுமே எல்லா வங்கிகளிலும், ரேஷன் கடைகளிலும், ஆதார் கார்டு மையங்களிலும், ஜெராக்ஸ் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
        மக்கள் தங்களுடைய அனைத்து வேலைகளையும் விட்டுட்டு தினமும் இந்த நான்கு இடங்களிலும் கூடிவிடுகின்றனர். இந்த இடங்களில் தங்கள் வேலை முடிந்தவுடன் எதோ சாதனை புரிந்தது போன்று ''அப்பாடி.... வந்த வேலை முடிந்தது...." என்று பெருமூச்சி விட்டு செல்கின்றனர். புதுச்சேரியில் தான் இதை பார்க்கமுடிகிறது. எதற்காக இப்படி அலைமோதுகிறார்கள் இந்த மக்கள்...?
           மத்திய அரசு வருகிற ஜனவரி 1 - ஆம் தேதி - புத்தாண்டு தினத்தன்று ''உங்கள் பணம் உங்கள் கையில்'' என்ற கவர்ச்சிகரமான திட்டத்தை தொடங்கவிருக்கிறது. இந்த என்பது மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் ஆகிய புத்திசாலிகளின் மூளைகளில் உதித்த உன்னத திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம், இதுவரையில் மத்திய அரசு ரேஷன் பொருட்களுக்கும், சமையல் எரிவாயுக்கும் கொடுத்துவந்த மானியத்தை இனிமேல் நம் கைகளிலேயே தந்துவிடுவார்களாம். அரசு தருகிற அந்த ''கொஞ்சப்'' பணத்தோடு, நாம் ''நிறைய'' நம் பணத்தையும் சேர்த்து இதுவரையில் ரேஷன் கடையில் வாங்கி வந்த பொருட்களை வெளியில் வாங்கிக்கொள்ள வேண்டுமாம். இந்த திட்டம் என்பது நம் பாக்கெட்டை காலிப் பண்ணுவதற்கான வேலை தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. நாம் வாங்கப்போகும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர உயர அரசு கொடுக்கும் மானியம் உயராது. அது அப்படியே தான் இருக்கும். அதேப்போல் நாம் வாங்கப்போகும் எரிவாயுவின் விலை உயர உயர அரசு கொடுக்கும் மானியம் உயராது. அது அப்படியே தான் இருக்கும். விலைவாசிக்கு தகுந்தாற்போல் நம் பாக்கெட்டும் காலியாகும். ''கையில வாங்கினேன் பையிலப் போடல... காசுப் போன இடம் தெரியல...'' என்ற மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் தான் ஞாபகம் வருகிறது.
         பலகீனமாக இருந்த நாய்க்கு அது வாலை வெட்டி அதுக்கே சூப் வெச்சி கொடுக்கிற கதை தான் இது. நாய் வாலை  வெட்டி நாயிற்கே சூப் வெச்சிக் கொடுத்தா அந்த திட்டத்திற்கு என்ன பெயர் வைப்பார்கள் தெரியுமா...''உங்கள் வால் உங்கள் வாயில்...'' அது போல் தான் இந்த ''உங்கள் பணம் உங்கள் கையில்...'' என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
           ''உங்கள் பணம் உங்கள் கையில்'' திட்டப்படி மக்களுக்கு தங்கள் கையில் பணம் கிடைக்க வேண்டுமென்றால், இப்போது தங்கள் கையில் இருக்கும் பணத்தை செலவு செய்தாக வேண்டும். அது தான் அந்த நான்கு இடங்களிலும் தினமும் அவ்வளவுக் கூட்டம் கூடுகிறது.
          பேருல தான் உங்கள் பணம் உங்கள் கையில் - னு  இருக்கே தவிர, அரசு பணத்தை மக்கள் கையில்  தரமாட்டார்கள். குடும்பத்தலைவரின் வங்கிக்கணக்கில் தான் போடுவார்களாம். மாதம் தோறும் அந்த குடும்பத்தலைவர் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கடைக்குப் போயி சரக்கு வாங்கிகிட்டு வருவாராம். ஆனால் அந்த குடும்பத்தலைவர் எந்தக் ''கடைக்கு'' போயி என்ன ''சரக்கை'' வாங்கிகிட்டு வாருவார் என்பது அந்த குடும்பத்தலைவிக்குத் தான் தெரியும்.
          அந்தப் பணத்தைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கு இல்லாதார்கள் வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்கிறார்கள். அதனால் அனைத்து வங்கிகளிலும் மக்கள் கூட்டம். ரேஷன் கடையில் வங்கிக் கணக்கு புத்தகத்தின் ஜெராக்ஸ் காப்பியும், ஆதார் கார்டின் ஜெராக்ஸ் காப்பியும் தரவேண்டும். அதனால் ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம். ஆதார் கார்டு இல்லாதவர்கள் ஆதார் மையங்களில் கூடுகிறார்கள். அதனால் அங்கே மக்கள் கூட்டம். இவை எல்லாவற்றுக்கும் வங்கிப் புத்தகம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை - இவைகளின் ஜெராக்ஸ் காப்பி தேவை. அதனால் ஜெராக்ஸ் கடைகளில் கூட்டம்.
          இத்தனை இடங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவதால் தான் புதுச்சேரியே ஒரே பரபரப்பாக இருக்கிறது.
           இந்த திட்டத்தை ஆரம்பத்தில் மத்திய அரசு 50 மாவட்டங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்துகிறது. அந்த ஐம்பதில் ஒன்று புதுச்சேரி என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் புதுச்சேரியையும் ஐம்பதில் ஒன்றாக சேர்த்தார்கள் என்பதில் தான் ''சிதம்பர ரகசியமே'' இருக்கிறது. அது என்ன ''சிதம்பர ரகசியம்''...? இரகசியம் எல்லாம் ஒன்னும் இல்லை. புதுச்சேரியில் இன்று வெளிப்படையாக பேசப்படுகின்ற இரகசியம் தான்.
          சென்ற 2009 - ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் சிவமான கங்கையில் ருத்திரத்தாண்டவம் ஆடியவரால் வெற்றிபெற முடியாமல் போனது என்பதும், மறு எண்ணிக்கை என்ற பெயரில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டது என்பதும், அது சம்பந்தமான வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதும் மக்கள் மறந்திருக்க முடியாது. வருகின்ற 2014 - ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத்தேர்தலில் அந்த சிவமான கங்கைக்காரரான ருத்திரத்தாண்டவத்தாரால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் டெபாசிட்டுக் கூட வாங்கமுடியாது என்ற செய்தி அம்பலத்திற்கு வந்ததையடுத்து, ''பிரதமர் வேட்பாளர்'' என்று கூட அறிவிக்கப்படலாம் சொல்லப்படுகின்ற அவர் நிச்சயம் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் அவரது பார்வை புதுச்சேரியில் விழ, பின் அவரது பாதத்தை புதுச்சேரியில் பதிக்க தொடங்கினார். கடந்த காலங்களில் மோகன் குமாரமங்கலம், பாலாபழனூர் போன்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை புதுவை மக்கள் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள் என்பதால், புதுச்சேரி தான் ருத்திரத்தாண்டவத்தாருக்கு பாதுகாப்பான தொகுதி என்ற அடிப்படையில்  காங்கிரஸ் கட்சியும் அதற்கான வேலைகளை தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
          அவரின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகத் தான் ''உங்கள் பணம் உங்கள் கையில்'' திட்டத்தை முதல் கட்டமாக புத்தாண்டு தினத்தன்றே தொடங்குவதற்கு, தாண்டவத்தாரே புதுச்சேரிக்கு நேரில் வங்கி அதிகாரிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
          இந்தத் திட்டத்தின் மூலம் அவர்  ''உங்கள் பணம் உங்கள் கையில்'' என்பதைப் போல் ''உங்கள் ஓட்டு எங்கள் பையில்'' என்று தேர்தல் நேரத்தில் ''காசு போட்டா ஓட்டுப்போடும் எந்திரமான மக்களிடம்'' போய்  நிற்பார் என்று தான் மக்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

சனி, 3 நவம்பர், 2012

கொள்ளைக்குத் துணைபோகும் கொள்கை...!

        "கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக அல்ல - கடந்த 15-20 ஆண்டுகளாகவே அமலாக்கப்பட்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கையினால் மக்களுக்குப் பலன் கிடைக்கும், நாடு வல்லரசாக மாறும்'' என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருக்கிறார். நிதியமைச்சரின் கூற்று உண்மைக்கு மூடுதிரை போடுவதாக உள்ளது.
        1991-ஆம் ஆண்டு துவங்கி மத்திய அரசு அமலாக்கிவரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் ஆக்கிடுவதற்கே வழி வகுத்துள்ளது.
       ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையில் இமாலய இடைவெளியை உருவாக்கியுள்ளது. மேலும், நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட இக்காலத்தில் வரலாறு காணாத ஊழல்கள் நடந்தேறி வருகின்றன.
            இரண்டாண்டுகளுக்கு முன்புவரை விவசாயம், தொழில், சேவைத்துறை ஆகிய மூன்றும் சேர்ந்து நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார உற்பத்தி மதிப்பு 7-8 சதவிகிதம் வரை அதிகரித்தது. இந்த வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி, நாடு வல்லரசாகப் போகிறது என மார்தட்டிக் கொண்டார்கள். மொத்த உற்பத்தி அதிகரித்து வந்த இதே காலத்தில்தான் வறுமையில் வாடுவோரின் மொத்த எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது என்பதை புறம்தள்ளக் கூடாது.
         தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிவரத்தின்படி 1993-1994-ஆம் ஆண்டில் கிராமப்புறத்தில் 59 சதவிகிதமாக இருந்த வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை 2009-2010-இல் 76 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
          நகர்ப்புறங்களில் வறுமையில் வாடுவோர் 1993-1994-இல் 57 சதவிகிதமாக இருந்தது.  2009-2010-இல் 73 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு 2,100 கலோரி சத்துள்ள உணவும், கிராமப்புறங்களில் 2,200 கலோரி சத்துள்ள உணவும் கிடைக்காதவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளதாகக் கணக்கிடப்படுகிறது. (இதற்கு முன்பு 2,400 கலோரி என்று இருந்ததை 2,200 கலோரி ஆக அரசு குறைத்திருக்கிறது)  வளர்ச்சி 8 சதவிகிதத்தை எட்டினாலும், அதன் பலன் சாதாரண மக்களுக்குக் கிடைக்காதது மட்டுமல்ல, வளர்ச்சியின் பலன் பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டுப் பெரிய முதலாளிகளுக்கும் கிடைத்துள்ளது என்பதே உண்மை.
             கடந்த 20 ஆண்டுகளில் இந்திய பெரிய வர்த்தக நிறுவனங்களின் சொத்து மதிப்பு வேகமாக பலமடங்கு உயர்ந்துள்ளது. 2003-இல் "டாலர் பில்லியனர்'களின் எண்ணிக்கை (ஒரு பில்லியன் டாலர் உத்தேச மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி) 13 ஆக இருந்ததிலிருந்து 2011-ல் 55 ஆக உயர்ந்துள்ளது.
           அரசின் கொள்கையும், இவர்களுக்கு அரசு அளித்த சலுகையும், இன்றைய பொருளாதார அமைப்பு முறையும்தான் டாலர் பில்லியனர்களின் சொத்து பலமடங்கு அதிகரிக்க வழி வகுத்துள்ளது.
           மேலும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்ட காலத்தில் ஆளும் அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள், அதிகாரிகள், கூட்டுக் கொள்ளையும் இத்தகைய போக்குக்குத் துணையாக இருந்துள்ளது.
             வறுமை ஒருபக்கமும், செழிப்பு மறுபக்கமும் உருவாவதற்கு இன்னொரு காரணம் தொழில் துறையில் நிகர மதிப்பு கூட்டலில் 1980-களில் ஊதியத்தின் பங்கு 30 சதவிகிதமாக இருந்தது 2010-இல் 10 சதவிகித அளவுக்குக் குறைந்து விட்டது.
             முறைசார் அல்லது நிரந்தரத்தன்மையுள்ள துறையில் வேலைவாய்ப்பு 1998-இல் 2.82 கோடியாக இருந்தது. 2008-இல் 2.75 கோடியாகக் குறைந்துள்ளது. நிரந்தரத்தன்மையுள்ள வேலைவாய்ப்பு குறைந்து, உத்தரவாதமும், சமூகப் பாதுகாப்பும் இல்லாத முறைசாராத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது நவீன தாராளமயப் பொருளாதார கொள்கையின் விளைவேயாகும்.
                   நாட்டின் ஒட்டுமொத்த உழைப்பாளர்கள் எண்ணிக்கையில் (45.6 கோடி) 86 சதவிகிதம் (39.3கோடி) முறைசாராத் தொழிலாளர்கள் தான். குழந்தைகள், முதியோர் ஆகிய பிரிவைத் தவிர்த்து மற்ற பகுதியினரில் ஒட்டுமொத்த உழைப்பாளர்கள் எண்ணிக்கை 45.6 கோடி. மேற்கண்ட முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் கடந்த 20 ஆண்டுகளில் உயரவில்லை. மாறாக, சரிந்துள்ளது.
               நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் தொடங்கிய இக்காலத்தில், அரசு திட்டமிட்டு பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டுப் பெரிய முதலாளிகளுக்கும் மூலதனம் சேர்க்க, தங்கள் சொத்தைப் பெருக்கிக்கொள்ள சலுகை அளித்து வருகிறது.
         உண்மையில், சில அம்சங்களில் சலுகையல்ல - முறைகேடுகள் மூலமாக - மூலதனம் ஈட்ட முதலாளிகளுக்கு அரசு தன்னுடைய தவறான கொள்கை மூலம் துணை போயுள்ளது. இது நாட்டினுடைய இயற்கை வளத்தை முதலாளிகள் கொள்ளையடிக்கவே வழி வகுத்துள்ளது.
             "2ஜி'' அலைக்கற்றை ஊழலில், 1,76,000 கோடி ரூபாயும், நிலக்கரி ஒதுக்கீட்டில் 1,86,000 கோடி ரூபாயும், கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாதுவை வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்ததன் மூலம் ரூ.50,000 கோடியும், தமிழகத்தில் உரிய அனுமதியின்றித் தனியார் கிரானைட் வெட்டி எடுத்து விற்பனை செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாயும் என இயற்கை வளங்களை முதலாளிகள் கொள்ளையடிக்க அனுமதிப்பதும் நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியே.
            ரிலையன்சுக்குச் சொந்தமான "சாசன் அல்ட்ரா' மெகா மின் திட்டத்துக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்ததில் மட்டும் அரசுக்கு ரூ.29,033 கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை (சி.ஏ.ஜி.) அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.  
           ப.சிதம்பரம் நிதியமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, அரசுக்கு "வோடாபோன்' நிறுவனம் செலுத்த வேண்டிய வரி ரூ.12,000 கோடியை வசூலிக்கத் தேவை இல்லை என அறிவித்துவிட்டார். (இத்தொகையை வசூலிக்க ஏற்கெனவே சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது).
              தில்லி சர்வதேச விமான நிலையக் கட்டுமானத்திற்கு ஜி.எம்.ஆர். என்ற தனியார்  நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்தது. விமான நிலையத்திற்கான மொத்த நிலத்தில் பெரும் பகுதியை ஜி.எம்.ஆர். கம்பெனிக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.100-க்கு குத்தகைக்கு விட்டது. ஆனால், ஜி.எம்.ஆர். கம்பெனி, "வளர்ச்சிக் கட்டணம்' என்ற பெயரில் பயணிகளிடமிருந்து ரூ.3,415 கோடி அளவுக்குச் சட்டவிரோதமாக வசூலித்துள்ளது!
          கிருஷ்ணா - கோதாவரி நதிப் படுகையில் இயற்கை எரிவாயு எடுப்பதை ரிலையன்ஸ் கம்பெனிக்கு அளித்ததையே மார்க்சிட் கட்சி ஆட்சேபித்தது. தான் உற்பத்தி செய்கிற எரிவாயுவுக்கு மிக அதிகமாக செலவாகிறது என்று கணக்கை மிகைப்படுத்திக் காட்டி, மிக அதிகபட்சமான விலையை நிர்ணயிக்க வேண்டுமென அரசை நிர்பந்தித்து, திட்டமிட்டு ஒரு விலை உயர்வை ஏற்படுத்தி ரிலையன்ஸ் நிறுவனம் கொள்ளை லாபம் அடித்தது.
        இதன் விளைவாக மின்சாரம் மற்றும் உர விலை அதிகரித்தது போன்ற அனைத்து அம்சங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்திருக்கிறார்கள்.
             மீண்டும் விலையை உயர்த்திட அரசுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் பல வகைகளில் நிர்பந்தம் கொடுத்து வருகிறது. ரிலையன்ஸ் கம்பெனி நிர்பந்தத்தை ஏற்று எரிவாயு விலையை உயர்த்தக் கூடாது என 2012 மே மாதத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தபன் சென், பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதினார்.
            விலையை உயர்த்த வேண்டும் என்று ரிலையன்ஸ் கம்பெனியின் கோரிக்கையை பெட்ரோலிய அமைச்சகம் நிராகரித்த பின்னரும்கூட ரிலையன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகத்திற்குப் பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது!
             2014 ஏப்ரல் வரையில் விலை உயர்வு இல்லை என்று ஏற்கெனவே அரசுக்கும் ரிலையன்ஸ்  கம்பெனிக்கும் ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு முரணாக விலையை உயர்த்த முடியாது என பெட்ரோலியத்துறை அமைச்சராக இதற்கு முன் பதவி வகித்த ஜெய்பால் ரெட்டி கூறியிருக்கிறார்.
              ரிலையன்ஸ்  கம்பெனியின் விலை உயர்வு கோரிக்கையை நிராகரித்த ஜெய்பால் ரெட்டியை மாற்றிவிட்டு வீரப்ப மொய்லியைப் பெட்ரோலியத்துறை அமைச்சராகக் கொண்டு வந்ததே ரிலையன்ஸ் கம்பெனியின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகத்தான் என பிரதமர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
         மத்திய அமைச்சரவை உருவாக்கத்தில் பெரு முதலாளிகளின் தலையீடு எந்த அளவுக்கு உள்ளது என்பதை முன்னர் வெளியான "நீரா ராடியா டேப்' உரையாடல் மூலம் புரிந்துகொள்ள முடியும்.
               இயற்கை வளங்களை அன்னியக் கம்பெனிகளும், உள்நாட்டுப் பெரு முதலாளிகளும் "கொள்ளை அடிக்க' அனுமதிப்பதையே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு "கொள்கை'யாகக் கொண்டு உள்ளது.
           இத்தகைய கொள்கையைத்தான், "கொஞ்சம் கொஞ்சமாக ஏழை,எளிய மக்களின் வறுமையைப் போக்கும்' என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறுகிறார். இவர்களுடைய பார்வையில் அம்பானிபோன்ற பெரு முதலாளிகள் தான் "பரம ஏழைகள்'' போலும்.
 ரிலையனஸ் - க்கு சலுகை வழங்கத் துடிக்கும் இவர்கள்தான், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அனைத்தின் விலைகளையும் ஏற்றி இந்திய மக்களின் தலையில் மேலும் மேலும் சுமையை ஏற்றுகிறார்கள்.
            "பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ''  என்று அன்று நாடு அடிமைப்பட்டிருந்தபோது மகாகவி பாரதி கண்டனக் குரல் எழுப்பினார். இன்று நாடு சுதந்திரம்பெற்ற பிறகும், நாட்டின் சொத்துகள் - கொள்கை என்ற பெயரில் - கொள்ளையடிக்கப்படும்போது பாரதியின் முழக்கத்தை மீண்டும் எழுப்பவேண்டிய தேவை உள்ளது.

நன்றி :
தினமணி / 03.11.2012

செவ்வாய், 31 ஜூலை, 2012

''பங்குச்சந்தை'' சிதம்பரம் மீண்டும் நிதியமைச்சர் ஆனார்...!

     
   மத்தியில் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்த பிரணாப்முகர்ஜி குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் நம்ப ''பங்குச்சந்தை'' சிதம்பரம் மீண்டும் மத்திய நிதியமைச்சர் ஆனார். ''சிதம்பரம் ஒரு திறமை வாய்ந்த நிதியமைச்சர்'' என்று  அமெரிக்க பிணந்தின்னிகளால் வாயாரப் பாராட்டப்பட்டவர். சும்மா சொல்லக்கூடாது. அந்த அளவிற்கு இந்தியாவில் உள்ள பொதுத்துறைகளையும், பொதுத்துறைப் பங்குகளையும் அமெரிக்க முதலாளிகள் வாங்குவதற்கு ''தரகு'' வேலைகளைப் பார்த்திருக்கிறார்.  சென்ற முறை முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே நான்கு ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்தார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு மட்டுமே பாராளுமன்ற அவைக்கு வருவார். ஆனால் அதன் பிறகு  பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதி சம்பந்தமாக  - பட்ஜெட் சம்பந்தமாக  கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குக் கூட பாராளுமன்ற இரு அவைகளுக்கும் வரமாட்டார். உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவரது இணையமைச்சர் பதில் சொல்லுவார் அல்லது சிதம்பரமே தன் அலுவலகத்தில் இருந்தப்படியே எழுத்துப்பூர்வமாக பதிலளிப்பார்.  தப்பித்தவறிக்கூட அவைக்குள்ளே நுழைய மாட்டார்.  காரணம் இந்திய - அந்நிய பெருமுதலாளிகளோடு இந்திய அரசு நிறுவனங்களின் விற்பனை சம்பந்தமாக உரையாடிக்கொண்டிருப்பார். இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, இந்திய மக்களின் சம்பளத்தை வாங்கிக்கொண்டு - அமெரிக்காவிற்கு எஜமான விசுவாசம் காட்டும் பணிகளை மட்டும் தான் செய்துகொண்டிருப்பார். ஒட்டு மொத்தமா சொல்லனும்னு சொன்னா... இந்த தேசத்தை பங்குப்போட்டு விற்கும் ''தரகு'' வேலையை மட்டும் தான் செய்வார். 
             அது மட்டுமா... செய்வாரு... தன் மகன் கார்த்திக் சிதம்பரம் கோடிகோடியாய் சம்பாதிப்பதற்கு பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகம் போன்ற  வழிமுறைகளை ''ஏற்பாடு'' செய்து  கொடுப்பார். அதுவும் நிதி அமைச்சர்ன்னா இந்த ''வேலைக்கெல்லாம்'' ரொம்ப வசதியா போச்சி. உலகத்திலேயே ''சிறந்த அப்பா'' டாப் -10 வரிசையிலே  கருணாநிதிக்கு அடுத்து இவர் தான் ''சிறந்த  அப்பா'' என்று சொன்னால் தப்பில்லைங்க.
                இப்படிப்பட்டவரைத் தான் 2008 - ஆம் ஆண்டில இந்தியாவில் தீவிரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளின்  அச்சுறுத்தல் அதிகமானதாலேயும், நாட்டில் அமை குலைந்ததனாலேயும்  உள்துறை அமைச்சராக ஆக்கினாங்க. அங்கேயும் தனது பணிகளை  கச்சிதமாக தான் செய்தார். 2009 - ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் அமெரிக்க உளவுத்துறையான  சி. ஐ. ஏ - வின் தலைவரை இந்தியாவிற்கு வரவழைத்தாருங்க. தேர்தல் பற்றிய பேச்சுகளை அமெரிக்க உளவுத்துறையோடு நடத்தினார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வேலைகளை செய்வதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும்  அமெரிக்க உளவுத்துறையையும், இந்தியாவில் பணியிலிருந்த அமெரிக்க தூதரையும், துணைத் தூதரையும் துணைக்கு வைத்துக்கொண்டார். சிதம்பரம்  சிவகங்கை தொகுதியில் வெற்றி பெறுவதற்கே இவர்கள் உதவி தேவைப்பட்டது.
           இப்படிப்பட்டவர் தான் 2009 - பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னரும், மீண்டும் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால்,சிதம்பரத்தைப் பொறுத்தவரை உள்துறை அமைச்சகப் பொறுப்பில்  இருந்த இன்றுவரை, சர்ச்சைகளை மட்டும்   தான் அதிகம் சந்தித்திருக்கிறார். மத்திய அரசு எதிர்ப்பார்த்தது போல் அமைதி  கிடைக்கவில்லை  மாறாக நாட்டில் அமைதி குலைந்தது தான் மிச்சம். இந்த காலங்களில்  . வடமாநிலங்களில் மாவோயிஸ்டுகள் வளர்ச்சியடைந்தனர். மாவோயிஸ்ட்டுகளால்  வடமாநிலங்களில்  ஆள் கடத்தல் - கொலை போன்ற  தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு மக்கள் ஆளானார்கள்.   அதனால் மக்களால் அமைதியான வாழ்க்கை நடத்தமுடியவில்லை. அதேப்போல் இந்த காலக்கட்டத்தில்  வடகிழக்கு மாநிலங்களிலும் மாவோயிஸ்டுகள் வேரூன்றத் தொடங்கினார்கள்.
           அதேப்போல், தீவிரவாதிகளையும் மாவோயிஸ்ட்டுகளையும் அடக்கப்போவதாகச் சொல்லி   தேசிய அளவிலான ''பயங்கரவாத தடுப்பு மையம்'' அமைக்க துடித்துக்கொண்டிருந்தார். ஆனால் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களின் எதிர்ப்பால் அது முடியாமல் போனது, அசாம் இன மோதலை ஆரம்பத்திலேயே  தடுக்க முயற்சிச் செய்யாமல் அதை வளர விட்டது. இவ்வாறு ஒரு உள்துறை அமைச்சராக பல ''சாதனைகளை'' படைத்தவர் தான் இந்த ப - பங்குச்சந்தை சிதம்பரம்.
           அதுமட்டுமல்ல, ஏற்கனவே நிதி அமைச்சராக இருந்த போது  ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஆ. ராசாவுடன் சேர்ந்து இவரும் முறைகேடுகளில்  ஈடுபட்டதற்கான  குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் இருக்கின்ற இப்படிப்பட்ட  சூழ்நிலையில் தான் இந்த ப. சிதம்பரம் நிதி அமைச்சராக ஆக்கப்பட்டிருக்கிறார் என்பதும்,
             முன்பு இவர் நிதி அமைச்சராக இருந்த போதும் நாட்டின் பொருளாதாரத்தையும் தூக்கி நிறுத்தல... தற்போது உள்துறை அமைச்சராக இருந்த போதும் உள்நாட்டு பாதுகாப்பையும் தூக்கி நிறுத்தல... இப்படிப்பட்டவரைத் தான் நாட்டின் பொருளாதர நிலை மோசமாக இருக்கும் தற்போதைய  சூழ்நிலையில் தான் ப. சிதம்பரம் மீண்டும் நிதியமைச்சராக ஆக்கப்பட்டிருக்கிறார் என்பது மக்களுக்கு ஆச்சரியமோ ஆச்சரியமாக இருக்கிறது.

சனி, 4 பிப்ரவரி, 2012

சிதம்பரம் ரொம்ப நல்லவராம் - சி. பி. ஐ. சிதம்பரம் கையில் இருக்கும் போது தீர்ப்பு மட்டும் எப்படி இருக்கும்...?

                      இன்று தலைநகர் புதுடெல்லி ஒரே பரபரப்பாய் இருந்தது. ' 2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை பாட்டியாலா  சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று மதியம் தள்ளுபடி செய்தது தான் அந்த பரபரப்புக்கு காரணம். 
              '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், ராஜாவோடு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில்  மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி ஆஜராகி சாட்சியம் அளிக்கும் போது, தன் கோரிக்கைக்கு ஆதாரமாக பல முக்கிய ஆவணங்களையும் சி. பி. ஐ.,  நீதிபதி ஷைனி முன் சமர்ப்பித்திருந்தார்.
இந்த வழக்கில் சிதம்பரத்திற்கு எதிராக நிச்சயம் தீர்ப்பு வரும் என்று நாடே எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தது. 
              நாடே பெரும் பரபரப்புடன் எதிர்பார்த்த இந்த வழக்கில், நீதிபதி ஓ.பி.சைனி, இன்று மதியம் இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கும் போது, சிதம்பரம் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்று அறிவித்தது என்பது நாம் எதிர்ப்பார்த்த  ஒன்று தான். சி. பி. ஐ. சிதம்பரம் கையில் இருக்கும் போது,  தீர்ப்பு மட்டும் எப்படி அவருக்கு எதிராக இருக்கும்...? என்றாலும் இது சிதம்பரத்திற்கு ஒரு தற்காலிக சந்தோசம் தான். ஏனென்றால் தில்லி உயர்நீதிமன்றம் செல்கிறார் சுப்பிரமணிய சாமி. 

சனி, 1 அக்டோபர், 2011

சமாதானம் ஆகிட்டா சிதம்பரம் குற்றமற்றவரா..? நிச்சயம் சிதம்பரம் குற்றவாளியே..!

                   2 ஜி ஸ்பெக்ட்ரம்  ஊழலில் தான் குற்றவாளி என்றால் அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும், பிரதமர் மன மோகன் சிங்கும் குற்றவாளிகளே என திஹார் சிறையிலிருக்கும் ஆ.ராசா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் சூழ்நிலையில்,  இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு, பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய நிதிஅமைச்சகம் அனுப்பிய முக்கிய கடிதம் ஒன்றில், 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் அளிக்கப்பட்ட போது அப்போதைய நிதியமைச்சர்   ப.சிதம்பரம் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை 2001ம் ஆண்டு கட்டண விகிதத்திலேயே அளிப்பதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருந்திருந்தாலும்,  அதற்குப் பதிலாக ஏல முறையிலேயே உரிமம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தாலும்  இந்த ஊழலே நடந்திருக்காது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக்கடிதம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து உலகமே பார்த்தது. இந்தக் கடிதம்,  ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்திற்கு உள்ள தொடர்பை அப்பட்டமாக அம்பலப்படுத்தியது. 
                    இந்த சூழ்நிலையில் சிதம்பரத்தை பாதுகாக்க  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் முயற்சிகள் மேற்கொண்டனர். அதனால் இந்தக் கடிதம் வெளிவர மூலக்காரணமாக இருந்த இப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும், ப. சிதம்பரத்தையும் சமாதானப்படுத்தி சமரசம் செய்துவைத்தனர்.  அதனால்,  ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் அளிக்கும் விவகாரத்தில் எதேச்சதிகாரமான முறையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கடிதம் தொடர்பாக ஏற்கெனவே விளக்கமளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி -  இந்தக்கருத்தானது, பல்வேறு அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டே பிர தமருக்கு அனுப்பப்பட்டது என்பதை ஒப்புக்கொண்ட பிரணாப் முகர்ஜி இறுதியில் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி தலையீட்டினால் சிதம்பரத்தொடு சமாதானம் ஆனார். இருவரும் ஜோடியாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது என்பது ஒரு கேலிக்கூத்தாகும். 
             சிதம்பரத்திற்கு உள்ள தொடர்பு குறித்து மேற்படி கடிதத்தில் இடம்பெற்றிருந்த விபரங்களுக்கு நிதியமைச்சர் என்ற முறையில் தான் ஒப்புதல் அளிக்கவில்லை என்று புது விளக்கம் ஒன்றையும் சென்ற வியாழனன்று அளித்தார். தனது அமைச்சரவை சகாவான சிதம்பரத்தை பாதுகாக்கும் நோக்கில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புதிய விளக்கம் ஒன்றை அளித்தார். இது  பிரணாப் முகர்ஜியின் பரிதாப நிலையை தான் காட்டியது. 
              பிரணாப் முகர்ஜி விளக்கமளித்ததைத் தொடர்ந்து இந்தப் பிரச்சனை முடிந்துவிட்டது என்று  உடனே சிதம்பரம்  பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்தார்.  ஆனால் பிரச்சனை இன்னும் முடிந்துவிடவில்லை... 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக்கீடு செய்வதில் அரசுக்கு பேரிழப்பு ஏற்படுத்திய ஒரு நடை முறையை செயல்படுத்தியதில் அவருக்கு நேரடியாக தொடர்பும் பங்கும் இருக்கிறது என்பதை உறுதி செய்யும் ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமென்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

புதன், 7 செப்டம்பர், 2011

அடிக்கடி குண்டு வெடிப்பு - மத்திய உள்துறை அமைச்சரும் உளவுத்துறையும் தான் பொறுப்பேற்கவேண்டும்..!

                   இன்று காலை புதுடெல்லி உயர்நீதி மன்றம் அருகில் சக்கிவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 65 பேர் பலத்தக் காயங்களுடன் புதுடெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்பாவி மக்கள் தான் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு மாதங்களில் இங்கு இரண்டாவது முறையாக இது போன்ற குண்டு வெடிப்பு  நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் உள்துறை அமைச்சரும், உளவுத்துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தான்   தெரியவில்லை. 
                   உள்துறை  அமைச்சரைப் பொறுத்தவரையில் ஒரு ''மங்குனி'' உள்துறை  அமைச்சர் என்றும் சொல்லிவிட முடியாது. ரொம்ப ''விபரமா''னவர். உள்துறையைத் தவிர ''மற்ற'' எல்லா விஷயங்களிலும் ''கை'' தேர்ந்தவர். உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கும், அமெரிக்க பெருமுதலாளிகளுக்கும் பொதுத் துறையையும், அதன் பங்குகளையும் விற்பதும் கொடுப்பதுமான புரோக்கர் வேலைகளை மட்டும் சிறப்பாக செய்வார். ஆனால்  உள்நாட்டு  பாதுகாப்பை மட்டும் கோட்டை விட்டுவிடுவார். தேசத்தைப் பற்றியோ, மக்களை பற்றியோ அக்கறை இல்லாதவர் இந்த நாட்டின் உள்துறை அமைச்சர்.  நாட்டின் பாதுகாப்பு என்பது ஒரு கேலிக் கூத்தாக போய்விட்டது. 
   இந்த குண்டுவெடிப்பில் தன் குடும்ப உறுப்பினர்களையும், உறவினர்களையும் இழந்து தவிக்கும் அப்பாவி  மக்களுக்கு  உள்துறை அமைச்சர் என்ன  சொல்லப்போகிறார்...? எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஆறுதல் கூறுவார்...? இப்படி கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் ஒரு உள்துறை அமைச்சர்  எதற்கு..?
                 மத்திய உள்துறை  அமைச்சர் மாற்றப்படவில்லையென்றாலும், அல்லது  ப.சிதம்பரம் திருந்தவில்லையென்றாலும்  ...  இதுபோன்ற குண்டு வெடிப்புகளையும், நாச வேலைகளையும் தடுக்க முடியாது.

வியாழன், 14 ஜூலை, 2011

துப்பு கெட்ட சிதம்பரம் பொறுப்பு ஏற்பாரா ? அமைச்சர் பதவி விலகுவாரா ?

               மும்பையில் இன்று - ஜூலை 13 இரவு ஏழு மணிக்கு மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 21 பேர் கொல்லப்பட்டனர் எனவும், 141   பேர்  பலத்த காயங்களுடன்  மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர் எனவும் மும்பையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பு என்பது பயங்கரவாதிகளின் தாக்குதலாகும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கிறது.
              2008 - க்கு பிறகு மும்பையில் நடைபெறும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு இது.  இன்று 2008 குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட காசாப் - இன் பிறந்தநாள் அன்று நடந்திருக்கும் சம்பவம் இது. 
              இதைப்பற்றி முன்கூட்டியே உளவுத்துறைக்கோ அல்லது உள்துறை அமைச்சகத்திற்கோ எப்படி தெரியாமல் போனது என்பது தான் நம் சந்தேகமே. இந்த இரண்டு பேரின் அலட்சிய போக்கே இத்தனை பேரை பலி கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. காசாப் -இன் பிறந்தநாளை பற்றி ஊடகங்கள் முன்னமே செய்தியாக வெளியிடுகின்றன. இதைப்பற்றி அறிந்திருக்கும் மத்திய அரசு விழிப்போடு இருந்திருக்க வேண்டாமா என்பது தான் நமது கேள்வி. இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம் கோட்டைவிட்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
              பயங்கரவாத செயல் என்பதும் குண்டுவெடிப்பு சம்பவம் என்பதும் இந்தியாவிற்கு புதிதான அனுபவம் கிடையாது. உலக வரைபடத்தையும் கடந்தகால வரலாற்றையும் உற்றுப்பாருங்கள். அமெரிக்காவுடன் உறவாடும் நாடுகளிலெல்லாம் பயங்கரவாதமும், குண்டுவெடிப்பும் சர்வசாதாரணமாக நடக்கும். பயங்கரவாதத்துக்கு எதிரானவர்களைப்போல் நடித்துக்கொண்டே பயங்கரவாதத்துக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து நாட்டின் அமைதியை குலைப்பது தான் ஏகாதிபத்தியத்தின் வழக்கமான கலாச்சாரம்.   என்றைக்கு இந்திய ஆட்சியாளர்கள் அமெரிக்காவோடு ஒட்டி உறவாட ஆரம்பித்தார்களோ அன்றைக்கு ஆரம்பம் ஆனது தான் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதமும் குண்டுவெடிப்பும். தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த சம்பவங்களுக்கு ஆட்சியாளர்களே  பொறுப்பேற்க வேண்டும்.
                 நாட்டில் தினமும் பல இடங்களில் அமைதி குலைந்துகொண்டே வருகின்றது. காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதிகளின்  பிரச்சனை, மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் என்ற பெயரில் தீவிரவாதிகள் பிரச்சனை, தெற்கே தனி தெலுங்கானா  பிரிவினைவாதிகளின் பிரச்சனை... இப்படியான பல்வேறு பிரச்சனைகளுக்கும் நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தான் பொறுப்பேற்கவேண்டும். பொறுப்பேற்று பதவி விலகவேண்டும். இதைத்தான் நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.