பாகிஸ்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாகிஸ்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 டிசம்பர், 2014

பாகிஸ்தானில் குழந்தைகளின் உயிரை குடித்த தீவிரவாதம்...!

        நம் சகோதர நாடான  பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த ஏதுமறியா 130 அப்பாவி  இளம் பிஞ்சுகளை தாலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பலிவாங்கியது என்பது அமைதியையும் சகோதரத்துவத்தையும் விரும்புகிற அனைவரும் கண்டிக்கத்தக்கது.
               அறிவையும், அன்பையும் அழித்துவிட்டு தீவிரவாதத்தாலோ அல்லது  பயங்கரவாதத்தாலோ அல்லது கட்டாய திணிப்புகளாலோ மதங்களை வளர்த்து விட முடியாது. மதங்கள் வளர்க்கும் தீவிரவாதங்களும்,  தீவிரவாதங்கள் தூக்கிப்பிடிக்கும் மதங்ககளும் மானுடம் விரும்பாதவைகளே.  அறிவையும், அன்பையும் அறியாதவைகளே. அறிவும் அன்பும் மழுங்கிப்போனாதால் தான் தீவிரவாதிகளின், பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளும், வெடிகுண்டுகளும் அப்பாவி மக்களை நோக்கியே... ஏதுமறியா குழந்தைகளை நோக்கியே பாய்கின்றன. 
                அன்று ஏகாதிபத்திய  பயங்கரவாதத்தால் இராக்கில் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டது என்பதற்கும், இஸ்ரேலின் அரசு தீவிரவாதமாக மாறி பாலஸ்தீனத்தில் குழந்தைகளையும், கொல்லப்பட்டனர் என்பதற்கும், அரசு பயங்கரவாதத்தால் குஜராத் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்  என்பதற்கும், இன்று மத தீவிரவாதத்தால் பாகிஸ்தானில் படிக்கும் தன் சொந்த குழந்தைகளை பலி வாங்கியது என்பதற்கும் அடிப்படை என்பது அறிவையும், அன்பையும் அழித்து வளரும் மதங்களே என்பது தான் உண்மை. அறிவை இழந்து மனிதத்தை அழிப்பதன் மூலம் மதங்களை வளர்க்கமுடியாது. மதங்கள் ஒழிந்துவிட்டால் மானுடம் தழைத்தோங்கும். 

செவ்வாய், 16 டிசம்பர், 2014

நோபல் மங்கை மலாலா..!


நான் ஷாஜியா... நான் கைனட் ரியாஸ்... நான் கைனட் சோம்ரோ... 
நான் மேஸான்... நான் அமினா...!        
         இந்த விருது எனக்குரியது மட்டுமல்ல. இது கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கானது. அமைதியை வேண்டி அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிற குழந்தைகளுக்கானது. இது மாற்றத்தை விரும்பும், குரலற்ற குழந்தைகளுக்கானது. நான் இங்கே அவர்களுடைய உரிமைக்குரலாக ஒலிக்கிறேன். இது அவர்களுக்கு பரிவு காட்டுவதல்ல; கல்வி மறுக்கப்பட்ட ஒரு குழந்தையை நாம் பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என உறுதியேற்கும் தருணம்.
             கல்வி, வாழ்வின் அதிஅற்புதமான ஒன்று. இதுவே எனது 17 ஆண்டுகால வாழ்வின் அனுபவம். வடக்கு பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் தான் என்னுடைய வீடு இருக்கிறது. நான் எப்போதும் பள்ளிக்குச் செல்வதிலும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் ஆர்வமாயிருந்தேன். பண்டிகைக் காலங்களில் நானும், எனது நண்பிகளும் எங்களது கைகளில் மருதாணி வைத்துக்கொள்வோம். எங்கள் கைகளில் பூக்களையும், கோலங்களையும் வரையவில்லை;
         மாறாக கணித வாய்ப்பாடுகளையும், சமன்பாடுகளையும் நாங்கள் வரைந்தோம்.கல்வியின் மீது தீராத் தாகம் கொண்டிருந்தோம். ஏனெனில் வகுப்பறைதான் எங்கள் வருங்காலத்தை மாற்றப்போகிறது. நாங்கள் ஒன்றாக அமர்ந்து இணைந்து படித்து வந்தோம். நாங்கள் எண்ணிலடங்கா கனவுகளோடு, சுத்தமான சீருடைகளை அணிய மிகவும் விரும்பினோம். ஆண்களால் மட்டுமே முடியும் என சிலர் எண்ணிவந்தவற்றை உடைத்து நாங்கள்அறிவிலும், படிப்பிலும் சிறந்தவர்களாக எங்களுடைய பெற்றோர்கள் பெருமையடையும் விதம் நடந்துகொள்ள ஆசைப்பட்டோம்.ஆனால் அந்தக் கனவு அப்படியே நிலைத்திருக்கவில்லை.
          சரியாக எனக்கு 10 வயது. அழகும் பொலிவும் நிறைந்த ஸ்வாட் பள்ளத்தாக்கு திடீரென தீவிரவாதத்தின் தலமாக மாற்றப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் அடையாளமின்றி அழிக்கப்பட்டன. பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது நிறுத்தப்பட்டது. பெண்கள் சாட்டையால் அடிபட்டார்கள். அப்பாவிமக்கள் கொல்லப்பட்டார்கள். நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டோம். எங்களின் கனவுகளை இருள் கவ்வத் துவங்கியது. கல்வி பெறுவது, உரிமை என்பதற்கு மாறாக குற்றம் என ஆக்கப்பட்டது.என்னுடைய உலகமும், என்னுடைய தேவைகளும் தடம் மாறின. எனக்கு முன் இரண்டு வழிகள் இருந்தன.
            முதலாவது, அமைதியாக இருந்துவிட்டு, சில காலம் காத்திருந்து பின் கொல்லப்படுவது; இரண்டாவது, உரத்துப் பேசி உடனே கொல்லப்படுவது. இதில் நான் தேர்ந்தெடுத்தது இரண்டாவது வழியை. நான் உரத்துப் பேச முடிவு செய்தேன். அக்டோபர் 9, 2012. தீவிரவாதிகள் எங்களை தடுத்து நிறுத்தி தாக்கினர். ஆனால் அந்த துப்பாக்கிக் குண்டுகளால் எங்களை வெல்ல முடியவில்லை. இது என் கதைமட்டுமல்ல... ஏராளமான பெண் குழந்தைகளின் கதை.நான் இங்கு என்னுடன் நைஜீரியா, சிரியா என் பாகிஸ்தான் சகோதரிகளை அழைத்து வந்துள்ளேன்.
           நான் சுடப்பட்ட நாளில் என்னுடன் இருந்த துணிவுமிக்க சகோதரிகள் ஷாஜியா மற்றும் கைனட் ரியாஸ் ஆகியோரை என்னுடன் அழைத்து வந்துள்ளேன். அவர்களும் அந்த துயரமிக்க அதிர்ச்சியை கடந்து வந்தவர்களே. பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கும் இன்னொரு சகோதரி கைனட் சோம்ரோ, எல்லைமீறிய துன்புறுத்தலுக்கும், வன்புணர்ச்சிக்கும் ஆளாகி, தனது சகோதரனையும் இழந்தவள். ஆனாலும் அவர்களிடம் அடங்கிவிடாமல் துணிந்து எதிர்த்தவள். இன்னும் நான் சந்தித்த ஏராளமான சகோதரிகளைச் சொல்வேன். சிரியா நாட்டைச் சேர்ந்த 16 வயதான மேஸான் - தற்போது அகதிகள் முகாம்களில் இருக்கும் ஆண் - பெண் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறாள்.
              போகோ ஹாராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட - கல்விக்காக ஏங்கும் சிறுமிகளில் ஒருத்தியான வடக்கு நைஜீரியாவின் அமினா... இன்னும் ஏராளமான சிறுமிகள் இருக்கிறார்கள். உங்கள் முன்னால் நிற்கும் இந்த மலாலா, ஒரு நபர் அல்ல... எனது குரல், ஒரு நபருடையதல்ல... நான் ஷாஜியா. நான் கைனட் ரியாஸ். நான் கைனட் சோம்ரோ. நான் மேஸான். நான் அமினா. நான், பள்ளிகளில் இருந்து துரத்தப்பட்ட 660 லட்சம் பெண் குழந்தைகளின் குரல். உலகெங்கிலும் நவீனமயத்தையும், வளர்ச்சியையும் பார்க்கிறோம். இருந்த போதிலும் அந்த நாடுகள் முழுவதும் இன்றும் மிகப்பழமையான பிரச்சனைகளான பசி, வறுமை, அநியாயம் மற்றும் மோதல்கள் ஏராளமாய் நிறைந்துள்ளது.
         முதலாம் உலகப்போர் நிறைவடைந்து நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் இன்னும் அந்தப்போரின் பல லட்சக்கணக்கான உயிர்ப்பலியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாத நிலையே தொடர்கிறது. இங்கே இன்னும் ஏராளமான போர்களில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. சிரியாவிலும், காஸாவிலும், இராக்கிலும் ஏராளமான குடும்பங்கள் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளன. வடக்கு நைஜீரியாவில் பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் அப்பாவி மக்கள் குண்டுவெடிப்புகளில் பலியாவதை கண் முன்னே பார்க்கிறோம்.
            ஆப்பிரிக்காவில் ஏராளமான குழந்தைகள் வறுமையின் காரணமாக பள்ளிகளின் படிகளைக் கூட மிதிக்க முடியவில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் சமூக ஒடுக்குமுறைகளால் கல்விகற்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் அல்லது குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணங்களினால் பாதிக்கப்படுகின்றனர். என்னுடைய வயதுடைய மிகுந்த நம்பிக்கையும், திறமையும் வாய்ந்த என் தோழி டாக்டராக வேண்டும் என கனவு கண்டு கொண்டிருந்தாள். ஆனால் அவள் கனவு கனவாகவே மாறிப்போனது. 12 வயதில் அவளுக்கு கட்டாய திருமணம். 14வயதுள்ள குழந்தை 1 வயதுக் குழந்தைக்கு தாயாகிப் போனாள். எனக்குத் தெரியும் அவள் நிச்சயம் டாக்டராகி இருப்பாள். ஆனால் அவளால் இப்போது முடியாது.           ஏனென்றால் அவள் ஒரு பெண்.
           நீங்கள் அளித்துள்ள நோபல் விருதுத் தொகை என் இதயத்தில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தானில் பள்ளிகளை கட்டுவதற்கு உதவிடப் போகிறது. முக்கியமாக எனது தாயகமான ஸ்வாட் பள்ளத்தாக்கு எனது கிராமமான சங்லாவில். என்னுடைய ஊரில், பெண் குழந்தைகளுக்கான மேல்நிலைப்பள்ளி ஒன்று கூட இல்லை. எனவே என் நண்பர்கள் தங்களின் கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கும், அவர்கள் கல்வியைப் பெறுவதற்கும் ஒரு வாய்ப்பாய் நான் ஒரு பள்ளியை உருவாக்கப்போகிறேன். நம்முடைய அரசியல் தலைவர்களுக்கு கல்வியின் அவசியத்தைப் பற்றிக் கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அது அவர்களுக்குத் தெரியும். எனவேதான் அவர்களது குழந்தைகளை நல்ல பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். நாங்கள் உலகத் தலைவர்களிடம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்துகிறோம். வலிமையான நாடுகள் என்று சொல்லிக் கொண்டு போரை உருவாக்குவதில் முனைப்பாக இருப்பது போன்று ஏன் அமைதியை உருவாக்குவதில் முனைப்பு இல்லை? ஏன் துப்பாக்கிகளைக் கொடுப்பது எளிதாகவும், புத்தகங்களைத் தருவது கடினமாகவும் உள்ளது உங்களுக்கு..? ஏன் பீரங்கிகளை உருவாக்குவதை மிக எளிமையாகவும், பள்ளிக்கு கட்டடங்களை கட்டுவதை மிகுந்த சிரமமாகவும் உணருகிறீர்கள்?நாம் நிலவை அடைய முடிகிறது; ஏன் செவ்வாய்க்கிரகத்திலேயே விரைவில் வாழ முடியும் என்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் கல்வி தர முடியாதா? எனவே நாம் அனைவருக்குமான சமத்துவத்தையும், நீதியையும் மற்றும் அமைதியையும் பெற்றிட குழந்தைகளை இந்த உலகம் முழுவதும் போராட அழைக்கிறேன். இதுவே ஆண், பெண் குழந்தைகள் தாங்கள் பால்யங்களை தொழிற்சாலைகளில் தொலைத்தது கடைசியாய் இருக்கட்டும். இதுவே பெண் குழந்தைகள் கட்டாயப்படுத்தப்பட்டு குழந்தைத் திருமணங்கள் செய்தது கடைசியாய் இருக்கட்டும். இதுவே ஏதுமறியா அப்பாவிக் குழந்தைகள் போரில் இறந்தது கடைசியாய் இருக்கட்டும். இதுவே வகுப்பறைகள் யாருமின்றி தனித்துக் கிடந்தது கடைசியாய் இருக்கட்டும். இதுவே பெண்கல்வி பெறுவது உரிமையல்ல என்று கூறுவது கடைசியாய் இருக்கட்டும். இதுவே பள்ளிக்கு வெளியே குழந்தைகள் ஏக்கத்தோடு காத்திருப்பது கடைசியாய் இருக்கட்டும்.

(அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமியும் பெண் கல்வி உரிமைப் போராளியுமான மலாலா யூசுப் ஜாய், நோபல் விருது விழாவில் ஆற்றிய உரையிலிருந்து)
தமிழாக்கம்  : எஸ். கார்த்திக், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர், 
                              இந்திய மாணவர் சங்கம்
நன்றி : தீக்கதிர்

சனி, 12 ஏப்ரல், 2014

COMMUNIST PARTY'S INTERNATIONALE ANTHEM - LAAL BAND


உலகத்திற்கே வழிகாட்டும் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசிய கீதம்...!

பாகிஸ்தானின் இடதுசாரிகள் பாடும் சர்வதேசிய கீதம்...!
பிரதானப் பாடகர் : Dr.தைமூர் ரஹ்மான்.
50 ஆண்டுகளுக்கும் மேலான சர்வாதிகாரத்தாலும், ஏகாதிபத்தியத்தாலும்,

மதவெறியாலும் ஒழிக்க முடியாத - அடக்க இயலாத பாடல் இது.


பட்டினிக் கொடுஞ் சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்
பாரில் கடையரே எழுங்கள் வீருகொண்டு தோழர்காள்

....................................................................................................
கொட்டு முரசு சங்கென முழக்கமெங்கும் குமுறிட.....!


நன்றி : தோழர். P.k. Rajan
 

திங்கள், 13 மே, 2013

பாகிஸ்தான் புதிய பிரதமரின் வரவேற்கத்தக்க மாற்றம்....!

          
         சென்ற சனிக்கிழமையன்று நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு அடுத்த நாளே ஓட்டுக்கள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டதில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மூன்றாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து நம் நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங் பிரதமாராக பதவியேற்கவுள்ள நவாஸ் ஷரிப்க்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
        இதனை அடுத்து தனது பதவியேற்பு நிகழ்ச்ச்சியில் பங்கேற்கும்படி மன்மோகன்சிங்கிற்கு நவாஸ் ஷரிப் அழைப்பு விடுத்திருக்கிறார்.  அதுமட்டுமல்லாமல், மன்மோகன்சிங் பங்கேற்றால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்  என்று நவாஸ் ஷரிப் கூறியிருப்பது என்பது வரவேற்கத்தக்க மாற்றமாகும்.
         இப்படியாக இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் நட்புப் பாராட்டியிருப்பது பாராட்டத்தக்க - வரவேற்கத்தக்க நிகழ்வுகளாகும். இந்த நட்பு எந்தவிதமான பாதகமில்லாமலும், விரிசல்களில்லாமலும் மேலும் மேலும் வளரவேண்டும் - உயர வேண்டும்.

சனி, 5 ஜனவரி, 2013

மரணத்தை வென்ற பாகிஸ்தான் பெண் கல்வி வீராங்கனை மலாலா...!




        














          பெண் கல்வி உரிமையை பாகிஸ்தான் மண்ணில் விதைத்ததற்காக, பிற்போக்கு மதவெறிக் கூட்டமான தாலிபான்களால் சுடப்பட்ட பெண் கல்வி உரிமை வீராங்கனை மலாலா லண்டனில்  மருத்துவமனை ஒன்றில்  சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.  இவரது அஞ்சாத நெஞ்சமும், உறுதியான மனமும் தான் இவரை மரணத்திலிருந்து காப்பாற்றியது.
            குணமடைந்த மலாலா மரணத்திலிருந்து மீண்டதும் ஒரு மூலையில் ஒடுங்கிவிடாமல், ''பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் பெண் கல்வியை உயர்த்திப் பிடிப்பேன்'' என்று சொன்னது என்பது எவருக்கும் அஞ்சாத  இவரது துணிச்சலை தான் காட்டுகிறது.
             பெண் கல்வியை சத்தமில்லாமல் பரப்பிவரும் இந்த வீர சிறுமியை பாராட்டி, பாகிஸ்தான் அரசு மலாலா பெயரில் பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது பாகிஸ்தான் ஸ்வாட் பள்ளத்தாக்கில் இயங்கிவரும் ஒரு மகளிர் கல்லூரிக்கு மலாலாவின் பெயரை பாகிஸ்தான் அரசு சூட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
                      

புதன், 3 அக்டோபர், 2012

பாகிஸ்தான் நாட்டிற்கு நன்றிகளும் பாராட்டுகளும்....!


                இது வரையில் ''ஷாத்மான் சவுக்'' என்று அழைக்கப்பட்ட பகுதி, மாவீரன் பகத்சிங்கின் 105 - ஆவது பிறந்த நாளான சென்ற செப்டம்பர் 28 - ஆம் நாள் அன்றையிலிருந்து ''பகத்சிங் சவுக்'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி இந்தியாவில் அடைந்த நிகழ்ச்சி என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறான நினைப்பாகத் தான் இருக்கும். ஏனென்றால் அந்த நிகழ்வு நடந்த இடம் நமது சகோதர நாடான பாகிஸ்தான் தான் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா...? இந்தியாவில் ஒரு சின்னத் தெருவுக்கு கூட பகத்சிங் பெயரை சூட்டுவதற்கு யோசிக்கிற, தயங்குகிற அல்லது தடை செய்யுகிற நம் நாட்டு மத்திய - மாநில அரசுகள்  பாகிஸ்தானின் இந்த செயலைப்பார்த்து  நிச்சயமாக  வெட்கித் தலைகுனிய வேண்டும். அப்படியொரு மரியாதையை மாவீரன் பகத்சிங்கிற்கு பாகிஸ்தான் செய்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. 
            அகிம்சை முறையில் இந்த தேசத்தின் சுதந்திரத்தை யாசித்து பெறமுடியாது. போராட்டத்தின் மூலம் தான் பெறமுடியும் என்று வீரம்செறிந்த போராட்டங்களை நடத்திய மாவீரன் பகத்சிங், பிரிட்டிஷ் வெறிநாய்களால் கைது செய்யப்பட்டு, சுதந்திரம் பெறுவதற்கு முன்பு அன்றைக்கு ஒன்றுபட்ட இந்தியாவில்   இருந்த - இன்றைக்கு பாகிஸ்தான் நாட்டிலிருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாகூர் சிறையில்  அடைக்கப்பட்டு, 1931 - ஆம்  ஆண்டு மார்ச் மாதம் 23 - ஆம் தேதியன்று அதே லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். இந்த கருப்பு தினத்தை, இந்த நாட்டின் விடுதலைக்காக பகத்சிங் செய்த உயிர் தியாகத்தை  அத்தோடு இந்த தேசம் மறந்துவிட்டது. அதன் பிறகு பல ஆண்டுகள் உருண்டோடிப் போய்விட்டன.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் பகத்சிங்கின் நூற்றாண்டு விழாவின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வற்புறுத்தலின் காரணமாக இந்திய பாராளுமன்றத்தில் மத்திய அரசு வேறு வழியில்லாமலும், மனமில்லாமலும் பகத்சிங்கின் சிலையை திறந்து வைத்தது.
             ஆனால் பாகிஸ்தானிலோ அந்த நாட்டு மக்களும், அந்த நாட்டிலுள்ள பல்வேறு அமைப்புகளும், பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் தொடர்ந்து பல ஆண்டுகளாக எழுப்பிய கோரிக்கைகளின் காரணமாக கடந்த செப்டம்பர் 28 - ஆம் தேதியன்று  பகத்சிங்கின் 105 - ஆவது பிறந்த நாளின் போது, லாகூரில் 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 - ஆம் நாளன்று பகத்சிங்  தூக்கிடப்பட்டு கொல்லப்பட்ட     அதே இடத்தில் ஏற்கனவே இருந்த பெயரை மாற்றி பகத் சிங்கின்  பெயர் சூட்டப்பட்டிருப்பது என்பது பாராட்டுதற்கு உரியது. 
லாகூர் சிறையில் பகத்சிங் 

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் தூக்கிலிடப்பட்ட தூக்கு மேடை 

பாகிஸ்தான் மக்கள் கொண்டாடும் பகத்சிங் பிறந்தநாள் விழா...!



































தலைவர்களின் தியாகங்களை மதிக்க பாகிஸ்தானிடமிருந்து 

நாமும் கற்றுக்கொள்வோம் ...!

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

பாகிஸ்தான் நம் சகோதர நாடு - அங்கு ஜனநாயகம் வீழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்...!

               பாகிஸ்தானில் பல சமயங்களில் ஜனநாயகம் பலமிழந்து ராணுவத்தின் கை ஓங்கிவிடும். அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை வீழ்த்திவிட்டு ராணுவ ஆட்சிக்கு வழிவகுத்துவிடும். வழக்கம் போல் குழம்பியக்குட்டையில் மீன் பிடிக்க அமெரிக்கா தன் மூக்கை நுழைக்கும். கடந்த இது பாகிஸ்தானில் ஒரு வழக்கமான ஒன்றாகி விட்டது. ஆனால் இந்தியாவில் இந்த நிகழ்வுகளை ஒரு பொருட்டாக யாரும் பார்ப்பதில்லை. நம் நாட்டில் சிறுவயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான மனங்களில், பாகிஸ்தான் ஒரு எதிரி நாடு என்று சொல்லப்பட்டு வளர்க்கப்படுவதால், பாகிஸ்தான் என்பது நம் சகோதர நாடு என்ற எண்ணம் கூட நம் மக்களுக்கு தோன்றுவதில்லை. அதுமட்டுமல்ல,   நம் அண்டை நாட்டில் ஒரு  பிரச்சனை என்றால் அது நம்மையும் பாதிக்கும் என்ற குறைந்தபட்ச எண்ணம் கூட இல்லாமல் எந்தவித பதற்றமும் இல்லாமல் நம் மக்களும் நடந்துகொள்வார்கள் என்பது தான் உண்மை. 
             இப்போது அப்படியான பிரச்சனை பாகிஸ்தானில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிரதமருக்கு எதிராக  ராணுவமும், சுப்ரீம் கோர்ட்டும் ஒரு அணியாகவும், பிரதமரும் , ஜனாதிபதியும்  வேறொரு அணியாகவும் செயல்படுகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு தான் மக்களால் தேர்ந்தெடுக்குப்பட்ட ஜனநாயக அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இதனால் இராணுவ புரட்சி ஏற்படுமோ என்கிற அச்சம் கூட இருந்தது.  அடுத்து இப்போது உச்ச்நீதிமன்றத்தொடு மோதல் ஏற்பட்டிருக்கிறது.
.              இராணுவமும், உச்சநீதிமன்றமும்  அரசுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில் மீண்டும் ராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான சூழ்நிலை பாகிஸ்தானில் ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம் தாலிபான்களுக்கு எதிராக ராணுவம் தொடர்ந்து போர் செய்து கொண்டிருப்பதால் ஆட்சியை பிடிக்கும் ஆசை ராணுவத்துக்கு இருக்காது என்ற கருத்தும் கூறப்படுகிறது.
                இதற்கிடையே உச்சநீதிமன்றம் பிரதமர் கிலானிக்கு எதிரான வேலைகளை  நேற்று எடுத்திருக்கிறது. கடந்த 1990 - ல் அப்போதைய பிரதமர் பெனாசீர் மற்றும் இவரது கணவர் சர்தாரி ( தற்போதைய அதிபர்  )  சில கம்பெனிகளிடம் 12 மில்லியன் டாலர் லஞ்சமாக பெற்று அதனை சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்திருந்தனர் என்பது குற்றச்சாட்டு எழுந்து,  இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதி மன்றம்   உத்தரவிட்டிருந்தது. ஆனால்  பிரதமர்  கிலானியோ கடந்த காலங்களில் இது தொடர்பான விசாரணை நடத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அதில் நாட்டமும் கொள்ளவில்லை. 
அதிபர் சர்தாரி மீதான ஊழலை விசாரிக்க பிரதமர் எந்தவிதமான உரிய நடவடிக்கைகளையும் எடுக்க முயற்ச்சி செய்யாமல் காலம் தாழ்த்தியதை கண்டு உச்சநீதிமன்றம் பிரதமர் மீது கடும் கோபம் கொண்டது மட்டுமல்ல வெளிப்படியாகவே கண்டனமும் தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவின்படி பிரதமர் கிலானி 2 ஆண்டுகளாக வழக்கை துரிதப்படுத்தாமல் காலம் தாழ்த்தியுள்ளார் என்றும் இதன் மூலம் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார் என்றும் பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நேற்று குற்றப்பத்திரிக்கையும் அவர் கையில் வழங்கப்பட்டிருக்கிறது. 
                   இதன் மூலம், பிரதமர் கிலானி தண்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும், அப்படி அவர் தண்டிக்கப்பட்டால் 6 மாத சிறைத்தண்டனை வழங்க நேரிடலாம் என்றும் சொல்லப்படுகிறது.  இதனால் அவர் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும் என்றும்,
அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த அரசு பதவியும் வகிக்க முடியாத நிலை வரும் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 
         இருப்பினும், கிலானி தண்டிக்கப்பட்டாலும் அதிபருக்கு மன்னிப்பு வழங்க அதிகாரம் உள்ளது என்றும்  சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
              இதற்கிடையில், பிரதமர் கிலானி தண்டிக்கப்பட்டு, பதவி இழக்கும் சூழலில் அடுத்த பிரதமர் யார் என்கிற வாய்ப்பாளர்கள்  பட்டியலை மக்கள் தயாரித்து விட்டனர். 
          எது எப்படி இருந்தாலும், இந்த நிகழ்வுகளெல்லாம் பாகிஸ்தான் நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனைகள்.  அதை அவர்கள் ஜனநாயக ரீதியாக தீர்த்துக்கொள்ளவேண்டும். எந்த நேரத்திலும் ஜனநாயகம் வீழாமல் ராணுவத்தின் கை ஓங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.