செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

பாகிஸ்தான் நம் சகோதர நாடு - அங்கு ஜனநாயகம் வீழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்...!

               பாகிஸ்தானில் பல சமயங்களில் ஜனநாயகம் பலமிழந்து ராணுவத்தின் கை ஓங்கிவிடும். அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை வீழ்த்திவிட்டு ராணுவ ஆட்சிக்கு வழிவகுத்துவிடும். வழக்கம் போல் குழம்பியக்குட்டையில் மீன் பிடிக்க அமெரிக்கா தன் மூக்கை நுழைக்கும். கடந்த இது பாகிஸ்தானில் ஒரு வழக்கமான ஒன்றாகி விட்டது. ஆனால் இந்தியாவில் இந்த நிகழ்வுகளை ஒரு பொருட்டாக யாரும் பார்ப்பதில்லை. நம் நாட்டில் சிறுவயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான மனங்களில், பாகிஸ்தான் ஒரு எதிரி நாடு என்று சொல்லப்பட்டு வளர்க்கப்படுவதால், பாகிஸ்தான் என்பது நம் சகோதர நாடு என்ற எண்ணம் கூட நம் மக்களுக்கு தோன்றுவதில்லை. அதுமட்டுமல்ல,   நம் அண்டை நாட்டில் ஒரு  பிரச்சனை என்றால் அது நம்மையும் பாதிக்கும் என்ற குறைந்தபட்ச எண்ணம் கூட இல்லாமல் எந்தவித பதற்றமும் இல்லாமல் நம் மக்களும் நடந்துகொள்வார்கள் என்பது தான் உண்மை. 
             இப்போது அப்படியான பிரச்சனை பாகிஸ்தானில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிரதமருக்கு எதிராக  ராணுவமும், சுப்ரீம் கோர்ட்டும் ஒரு அணியாகவும், பிரதமரும் , ஜனாதிபதியும்  வேறொரு அணியாகவும் செயல்படுகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு தான் மக்களால் தேர்ந்தெடுக்குப்பட்ட ஜனநாயக அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இதனால் இராணுவ புரட்சி ஏற்படுமோ என்கிற அச்சம் கூட இருந்தது.  அடுத்து இப்போது உச்ச்நீதிமன்றத்தொடு மோதல் ஏற்பட்டிருக்கிறது.
.              இராணுவமும், உச்சநீதிமன்றமும்  அரசுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில் மீண்டும் ராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான சூழ்நிலை பாகிஸ்தானில் ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம் தாலிபான்களுக்கு எதிராக ராணுவம் தொடர்ந்து போர் செய்து கொண்டிருப்பதால் ஆட்சியை பிடிக்கும் ஆசை ராணுவத்துக்கு இருக்காது என்ற கருத்தும் கூறப்படுகிறது.
                இதற்கிடையே உச்சநீதிமன்றம் பிரதமர் கிலானிக்கு எதிரான வேலைகளை  நேற்று எடுத்திருக்கிறது. கடந்த 1990 - ல் அப்போதைய பிரதமர் பெனாசீர் மற்றும் இவரது கணவர் சர்தாரி ( தற்போதைய அதிபர்  )  சில கம்பெனிகளிடம் 12 மில்லியன் டாலர் லஞ்சமாக பெற்று அதனை சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்திருந்தனர் என்பது குற்றச்சாட்டு எழுந்து,  இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதி மன்றம்   உத்தரவிட்டிருந்தது. ஆனால்  பிரதமர்  கிலானியோ கடந்த காலங்களில் இது தொடர்பான விசாரணை நடத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அதில் நாட்டமும் கொள்ளவில்லை. 
அதிபர் சர்தாரி மீதான ஊழலை விசாரிக்க பிரதமர் எந்தவிதமான உரிய நடவடிக்கைகளையும் எடுக்க முயற்ச்சி செய்யாமல் காலம் தாழ்த்தியதை கண்டு உச்சநீதிமன்றம் பிரதமர் மீது கடும் கோபம் கொண்டது மட்டுமல்ல வெளிப்படியாகவே கண்டனமும் தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவின்படி பிரதமர் கிலானி 2 ஆண்டுகளாக வழக்கை துரிதப்படுத்தாமல் காலம் தாழ்த்தியுள்ளார் என்றும் இதன் மூலம் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார் என்றும் பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நேற்று குற்றப்பத்திரிக்கையும் அவர் கையில் வழங்கப்பட்டிருக்கிறது. 
                   இதன் மூலம், பிரதமர் கிலானி தண்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும், அப்படி அவர் தண்டிக்கப்பட்டால் 6 மாத சிறைத்தண்டனை வழங்க நேரிடலாம் என்றும் சொல்லப்படுகிறது.  இதனால் அவர் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும் என்றும்,
அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த அரசு பதவியும் வகிக்க முடியாத நிலை வரும் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 
         இருப்பினும், கிலானி தண்டிக்கப்பட்டாலும் அதிபருக்கு மன்னிப்பு வழங்க அதிகாரம் உள்ளது என்றும்  சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
              இதற்கிடையில், பிரதமர் கிலானி தண்டிக்கப்பட்டு, பதவி இழக்கும் சூழலில் அடுத்த பிரதமர் யார் என்கிற வாய்ப்பாளர்கள்  பட்டியலை மக்கள் தயாரித்து விட்டனர். 
          எது எப்படி இருந்தாலும், இந்த நிகழ்வுகளெல்லாம் பாகிஸ்தான் நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனைகள்.  அதை அவர்கள் ஜனநாயக ரீதியாக தீர்த்துக்கொள்ளவேண்டும். எந்த நேரத்திலும் ஜனநாயகம் வீழாமல் ராணுவத்தின் கை ஓங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை: