செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

இப்படியே திமுக-வும் அதிமுக-வும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தால்... மின்சாரம் இல்லாமல் தமிழகம் இருண்டு போகும்...!

                 “ஏடெடுத்தேன் கவிதைஒன்றுவரைய...” என்று துவங்கும் பாவேந்தரின் புகழ்பெற்ற பாடல் ஒன்று உண்டு. கவிதையின் பாடுபொருளாக எதை எடுப்பது என்று மலைப்பதாக எழுதியிருப்பார். ஆனால் தலையங்கம் எழுத என்னப் பொருளை எடுத்துக் கொள்வது என்று அன் றாடம் விவாதிக்கும் போதெல்லாம் தமிழகத்தை இருள்மயமாக்கியிருக்கிற மின்வெட்டு என்னை எழுது என்று எப்போதும் முன்நிற்கிறது.
              கடந்த திமுக ஆட்சியிலேயே மின்வெட்டின் திருவிளையாடல் துவங்கிவிட்டது. மின்வெட்டை சரிசெய்ய எந்தவித உருப்படியான நடவடிக்கையும் எடுக்காத திமுக, தேர்தல் பிரச்சாரத்தில் அடுத்து மீண்டும்  ஆட்சிக்கு வந்தால், ''போதும் போதும்'' என்று கதறும் அளவுக்கு மின்சாரம் அள்ளித் தருவதாக அள்ளிவிட்டது.
               மறுபுறத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமது தேர்தல் பிரச்சாரத்தில், தனது தலைமையில் அதிமுக  ஆட்சிக்கு வந்தால் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்குத் தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று முழங்கினார்.
                  ஆனால், அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இப்போது என்ன லட்சணம். மின்வெட்டு நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு, தற்போதைய நிலவரப்படி 8 மணிநேரத்தை தொட்டுள்ளது. மின்வெட்டின் கோர விளைவுகள் ஒருபுறம் என்றால், மின்வெட்டு நேரத்தை அதிகரிப்பதற்கான நிர்ப்பந்தம் என்ன? என்பதை கூட விளக்க மறுக்கும் மாநில ஆட்சியாளர்களின் அலட்சியமும், அகம்பாவமும் சகிக்கக்கூடியதாக இல்லை.    இந்த லட்சணத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து மாநிலம் முழுவதும் மக்களிடம் ஆலோசனை கேட்கும் அலங்கோலமும் நடந்துவருகிறது.
             மின்வெட்டை எதிர்த்து வீதிக்கு வந்து போராடும் தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிமுக அரசு இந்த மக்கள் எழுச்சியை ஒடுக்கிவிட முயல்கிறது.
               சட்டமன்றத்தில் கைநீட்டி பேசியதற்காக எதிர்க்கட்சி தலைவர் மீது உரிமைமீறல் பிரச்சனை கொண்டுவரப்பட்டு, உடனடியாக தீர்ப்பு எழுதப்பட்டு 10 நாள் சஸ்பெண்ட் செய் யப்பட்டார்.
                   மின்வெட்டினால் பாசன வசதியை இழந்த விவசாயிகளும், தொழிலை இழந்த தொழிலதிபர்களும், வேலையிழந்த தொழிலாளர்களும், தறி இயக்கம் இழந்த நெசவாளர்களும், வெப்பத்தில் புழுங்கித் தவிக்கும் பொதுமக்களும், கொசுவின் கோரத்தாக்குதலுக்கு ஆளாகும் குழந்தைகளும், மூச்சுத் திணறும் முதியோர்களும் யார் மீது உரிமைமீறல் கொண்டுவருவது என்று தெரியவில்லை.
               ஆனால் பெட்டிக்கடையில் இருக்கும் ஜெராக்ஸ் முதல் துவங்கி, மிகப்பெரும் ஆலைகளின் எந்திரங்கள் வரை மின்சாரம் இன்றி இங்கு எதுவும் இயங்காது என்பது கண்முன்னால் தெரிகிற நிதர்சனம். கண்கட்டும் மின்வெட்டால் தமிழகத்தில் அன்றாட இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து நிற்கிறது.
           உடனடியாக மின்சாரம் தரும் மந்திரக்கோல் எதுவும் அரசிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மின்வெட்டை தவிர்க்க அரசு செய்யும் தற்காலிக ஏற்பாடுகள் என்ன? நீண்டகால தொலைநோக்குத் திட்டங்கள் என்ன? என வாக்களித்த மக்களுக்கு விளக்கவேண்டியது ஒரு ஜனநாயகப்பூர்வ அரசின் கடமையாகும் என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா உணரவேண்டும்.

கருத்துகள் இல்லை: