மறைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஏப்ரல், 2015

ஆளுமையும், தோழமையும் நிறைந்த ஜே.கே. என்ற ஜெயகாந்தன்

               
           படைப்பிலக்கியத்தில் இமயம் போல் உயர்ந்து நின்ற தோழர்.ஜே.கே என்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் நேற்றிரவு மறைந்தார். 
                தமிழிலக்கியத்தில் பாரதி, புதுமைப்பித்தன், பாரதிதாசன், ஜீவா போன்ற போற்றத்தக்க ஆளுமை வரிசையில் நம் காலத்தில் வாழ்ந்து மறைந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் நாம் அவரை பார்த்து - படித்து வாழ்ந்தோம் என்ற பெருமையை நமக்கு அளித்தவர். தோழர்.ஜீவா மற்றும் தோழர்.கே.முத்தையா போன்ற தலைவர்களிடம் பொதுவுடைமை சித்தாந்தங்களை பாடமாக  கற்றவர். அப்படியே வாழ்ந்தும் காட்டியவர். அதனால் தான் அவரது எழுத்துகளில் பொதுவுடைமை சிந்தனைகளும், முற்போக்கு கருத்துகளும் சேர்ந்தே காணப்பட்டன. பொதுவாக இவர்  மேட்டுக்குடி மக்களைப் பற்றியும்  எழுதமாட்டார். அவர்களுக்காகவும் எழுதமாட்டார். இவரது படைப்புகளில் தெருவோரவாசியான  சாதாரண தொழிலாளிகளையும், அவர்களது வாழ்க்கை கஷ்டங்களையும் பற்றி மட்டுமே படம்பிடித்து காட்டியிருக்கிறார். 
            பல ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி கம்பன் கழகம் ஏற்பாடு செய்திருந்த கம்பன் விழாவிற்கு இவரை அழைத்திருந்தார்கள். அந்த விழாவில் பேசும் போது, கம்பன் ''ஏர் எழுபது'' என்ற பாடலை எழுதியிருக்கிறான். விவசாயத்தைப் பற்றி பாடல்களாக வடித்தவன் கம்பன் ஒருவன் மட்டுமே. நான் அதை படித்த பிறகு தான் அவன் எழுதிய இராமாயணத்தை படித்தேன்'' என்று அவர் சொன்னதை கேட்டபிறகு தான் அங்கிருந்த பல பேருக்கு கம்பன் ''ஏர் எழுபது'' என்ற விவசாயப் பாடலை பாடியிருக்கிறான் என்ற செய்தியே தெரிந்தது.
           ஜெயகாந்தன் பாரதியை போன்றே எல்லா இடங்களிலும், எல்லா சமயங்களிலும் எதற்கும் தலைவணங்காமல் கம்பீரம், கர்வம், துணிச்சல், நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்நடை, வீரமிக்க பேச்சு என அனைத்தும் கலந்த ஆளுமையை காட்டியவர். அனால் அதே சமயத்தில் தொழிலாளர்கள் என்றால் அவர்கள் தோளில் கை போட்டு தோழமையை காட்டுவார். அந்த காலத்தில் ஒரு முறை புதுச்சேரி நேரு வீதியில் ரிக்சா தொழிலாளியை அவரது வண்டியிலேயே உட்கார வைத்துக்கொண்டு தோழர்.ஜெயகாந்தன் ரிக்சா வண்டியை தானே ஓட்டிச் சென்றிருக்கிறார் என்பதே அவரது தோழமைக்கு மிகச்சிறந்த உதாரணம்.
              இவர் பள்ளியில் படித்ததோ ஐந்தாம் வகுப்பு வரையில் தான். ஆனால் இவரது இலக்கிய படைப்புகளை ஆய்வு செய்து நிறைய மாணவர்கள் ''முனைவர் பட்டம்'' பெற்றிருக்கிறார்கள். அந்த அளவிற்கு பாரதி சொன்னது போல் சுடர்மிகு அறிவுடன் வாழ்ந்தவர் தான் நம் ஜே.கே. அந்த சுடர் இன்று அணைந்துவிட்டது. ஆனாலும் அந்த சுடர் இலக்கிய உலகிற்கு வெளிச்சம் காட்டும். ஏனென்றால் தோழர். ஜெயகாந்தனுக்கு என்றும் மரணமில்லை.              

செவ்வாய், 23 டிசம்பர், 2014

திரையுலக சிகரம் சாய்ந்தது - அஞ்சலி

       திரையுலகில் தனக்கு நிகரில்லாமல் இயக்குனர் சிகரமாக அசைக்கமுடியாத அபூர்வ மனிதராய் உயர்ந்து வாழ்ந்த கே. பாலச்சந்தர் மறைந்தார். எம்.ஜி.ஆர் - சிவாஜி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துக்கொண்டிருந்த  காலத்திலேயே தனக்கென தனி பாணியை வைத்துக்கொண்டு, ஜெமினிகணேசன், சிவகுமார்,  முத்துராமன், நாகேஷ் போன்றவர்களை கதாநாயகர்களாக நடிக்கவைத்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதேப்போன்று அவர்கள் காலத்திலேயே கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் போன்றவர்களை அவர்களுக்கு இணையான கதாநாயகர்களாக  மிக தைரியமாக திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார் என்றால் அது மிகையாகாது. பழமைகளை வலியுறுத்தும் அந்தக்காலத்திலேயே சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் உடைத்தெறியும் முற்போக்கான கருத்துகளை கொண்ட பலவகையான  திரைப்படங்களை தந்திருக்கிறார்.  அதற்காக பழமைவாதிகளின் எதிர்ப்புகளுக்கும் அவர் அஞ்சியதும்  இல்லை. அதேப்போல் மத்திய - மாநில அரசுகளை இடித்துரைத்தும், கிண்டலடித்தும் திரைப்படங்களை யாருக்காகவும் பயப்படாமல் இயக்கியது மட்டுமல்ல, காட்சிகளுக்கு தகுந்தாற்போல் ஆங்காங்கே கம்யூனிச சித்தாந்தங்களையும், உழைப்பாளி மக்களையும் தயங்காமல் உயர்த்திக்காட்டி  வறுமையின் நிறம் சிவப்பென்று  வரைந்து காட்டிய ஓவியர் கே.பி. பெரும்பாலான பாரதியின் கவிதைகளை தன்னுடைய திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.
                 அப்படிப்பட்ட ஒரு சிறந்த இயக்குனரின் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாதது. மறைந்த இயக்குனர் சிகரம் கே.பி., அவர்களுக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி.

வியாழன், 13 பிப்ரவரி, 2014

இன்றைய தலைமுறைக் கலைஞர்களின் ஆசான் பாலுமகேந்திரா...!

                           எம்ஜிஆர் - சிவாஜி காலத்திற்கு பிறகு திரைப்படத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி, தமிழ்த் திரைப்படத்தின் திசைவழியையே மாற்றியவர் மறைந்த திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சமூக அக்கறை எதுவுமில்லாமல், இலாபத்தை மட்டுமே குறிவைத்து காசுக்காக ஆபாசத்தையும், வன்முறையையும் கலந்து திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் பாலுமகேந்திரா உயர்ந்து நிற்கிறார். சமூக அக்கறை கலந்த திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல், தனது படத்தின் மூலம் மக்களை சிந்திக்கவும் செய்தார். இயக்குனாராக விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பு, இயற்கை எழில்களை தன் கேமிராக்குள் சிறைபிடிக்கும் ஒரு திறமைசாலியான காமிரா கலைஞனாக மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னுடைய காமிராவை திருப்பி மற்றக் கலைஞர்களுக்கும் ஒரு ஆசானாக திகழ்ந்தார். காமிராவைத் தூக்கிக்கொண்டு மக்கள் வாழும் பகுதிகளுக்கு செல்லவேண்டும் என்று இன்றைய இளையத்தலைமுறைக் கலைஞர்களுக்கு தமிழ் திரைப்படம் செல்லவேண்டிய திசைவழியை காட்டினார். அதற்கு எடுத்துக்காட்டாக ''வீடு'' மற்றும் ''தலைமுறைகள்'' போன்றவைகள் அவர் தீட்டிய படங்கள் அல்ல... பாடங்கள்...!
              காமிரா கலைஞனாக - முற்போக்கு இயக்குனராக - திறமையான நடிகராக பல்வேறு பரிமாணங்களில் ஒளி வீசிய பாலுமகேந்திரா இன்று மறைந்துவிட்டார். இன்று காமிரா தனக்கு தோள் கொடுத்த தோழனை இழந்துவிட்டது. என்றாலும் அவர் நடத்திய திரைப்படப் பாடங்கள், இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் திரையுலகில் நுழையும் இளையத்தலைமுறையினருக்கு நல்ல வழி காட்டும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. எதிர்காலத்தில் திரைப்படக் கலைஞர்களுக்கு நல்லாசானாய் திகழ்வார் இயக்குனர் பாலுமகேந்திரா என்பது நிச்சயம்.

திங்கள், 17 ஜூன், 2013

துணிச்சல்மிக்க மக்கள் கலைஞன் மணிவண்ணன்...!

            
எம்.ஜி.ஆர் - சிவாஜி காலங்களில் குணச்சித்திர நடிகராக, சிரிப்பு நடிகராக, வில்லன் நடிகராக பல்வேறு பரிமாணங்களில் பிரகாசித்தவர்  மறைந்த திரைப்பட நடிகர் எம்.ஆர். இராதா அவர்கள் தான். அவர் அதிகாரவர்க்கத்தை கிண்டலடித்து விமர்சிப்பதிலும், பகுத்தறிவு கருத்துக்களை பரப்புவதிலும் தனக்கென ஒரு பாணியை எப்படி வைத்திருந்தாரோ அதேப்போல் மணிவண்ணனும் தனக்கென்று ஒரு தனி பாணியை கடைபிடித்தவர். தான் இயக்கம் படங்களில் நிகழ்கால அரசியலை ஒரு பிடி பிடிப்பார். அது ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், இந்நாள் முதல்வர் என்றாலும், முன்னாள் முதல்வர் என்றாலும் தன்னுடையப் திரைப்படங்களில் மிகக் கூர்மையான வசனங்களால் மிகக் கடுமையாக கிண்டலடிப்பார். அது ஒரு சாட்டையடியாக தான் இருக்கும். ஆரம்பத்தில் அவர் ஒரு பொதுவுடைமைவாதியாக இருந்திருக்கிறார். இடதுசாரிக்கட்சிகளின் மேடைகளில் அவரைப் பார்க்கலாம். வருமானத்திற்காக திரைப்படத்தை சுவாசிப்பவர் என்றாலும், வாசிப்பை நேசிப்பவர். நிறையப் புத்தகங்களை படிக்கக்கூடியவர். அவர் மாரடைப்பால் இறக்கும்போது அவரது படுக்கையில் புத்தகங்கள் அவரோடு இருந்திருக்கின்றன.
           அவரது மறைவு என்பது திரையுலகத்திற்கு மட்டுமல்ல. மாற்று சிந்தனையாளர்கள் மத்தியிலும் ஒரு பேரிழப்பு தான்.