நூற்றாண்டு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூற்றாண்டு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 நவம்பர், 2014

நீதியின் நாயகன் வி.ஆர்.கிருஷ்ணய்யர் - 100


கட்டுரையாளர் : நீதியரசர் கே. சந்துரு,           
                                     உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு), சென்னை        

               தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து ஓய்வு பெற்ற ராஜாஜியை, மரியாதை நிமித்தம் சந்திக்க, கேரள சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் தனது மனைவி, இரு மகன்களுடன் செல்கிறார். அவர்களை வரவேற்றுப் பேசிய ராஜாஜி, அவ்விரு சிறுவர்களிடம் சொல்கிறார்: “உங்கள் அப்பனைப் பின்பற்றாதீர்கள், அவர் விஷமத்தனமானவர், ஆனால் அவரது விஷமத்தனமெல்லாம் நல்லவற்றுக்காகவே.” வைத்தியநாதபுரம் ராமய்யர் கிருஷ்ணய்யர் தான் அந்த சட்டப்பேரவை உறுப்பினர்.                                             
            1952-ல் கேரளாவின் குத்துப்பரம்பு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணய்யர், சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் இரண்டு வருட காலம் முதலமைச்சர் ராஜாஜிக்கு குடைச்சல் கொடுத்த உறுப்பினர். அதன் வெளிப்பாடு தான் அவரைச் சந்தித்த கிருஷ்ணய்யரின் மகன்களுக்கு கிடைத்த ஆலோசனையை மேலே பார்த்தோம். மாவட்ட மருத்துவ அதிகாரி ஒருவர் மீதுள்ள ஊழல் புகார்பற்றி பொது விசாரணை கோரி சட்டமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. முதலமைச்சர் ராஜாஜி தானும் ஒரு வழக்கறிஞர், அந்தப் புகாரைப் பரிசீலித்ததில் முதல் நோக்கில் குற்றமேதும் தென்படவில்லை என்று கூறவும் உடனடியாக கிருஷ்ணய்யர், தானும் மாவட்ட நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் நடத்தியதில் திறமை பெற்றவர் என்றும், மருத்துவ அதிகாரியின் மீதுள்ள குற்றம் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்திப் பேசவே, முதலமைச்சர் தனது கருத்தை மாற்றிக்கொண்டு விசாரணைக்கு உத்தரவிட நேர்ந்தது.
               மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பின்னர் நடந்த கேரளத் தேர்தலில், சுயேச்சையாக வெற்றிபெற்ற கிருஷ்ணய்யர், ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடின் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் உள்துறை அமைச்சரானார். 1958-ம் வருடம் ஒரு நாள் அவர் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருக்கும் போது தொலைபேசிச் செய்தி வருகிறது. அருகிலிருந்த காவல் நிலையத்தில் இளைஞன் ஒருவன் சித்திரவதைக்கு உள் ளாக்கப்படுவதாகத் தகவல். உடனடியாக காரைத் தானே ஓட்டிக்கொண்டு காவல்நிலையத்துக்குச் செல்கிறார். கேள்விப்பட்டபடியே இளைஞன் ஒருவன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, அவனை விடுவிக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தினமும் இரவில் திருவனந்தபுரம் மாவட்டக் கண்காணிப்பாளருடன் வீதிகளில் பயணம் செய்து காவலர்கள் தங்கள் பணிகளை ஒழுங்காகச் செய்கிறார்களா என்பதைச் சோதித்த உள்துறை அமைச்சரை இந்நாடு இதுவரை கண்டதில்லை.          

சிறைக் கைதிக்கு மனிதாபிமானம்                  
 
              தேர்தல் வெற்றிக்கு முன்னரே தடுப்புக் காவல்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட கிருஷ்ணய்யர், தனது 30 நாட்கள் சிறைவாசத்தில் சிறைக் கைதிகளின் நிலைமையை உணர்ந்ததுடன், இந்தியச் சிறைகள் கற் காலத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்டார். பின்னர், உச்ச நீதிமன்ற நீதிபதியானபோது, சிறைக் கைதி ஒருவர் அஞ்சல் அட்டையில் அனுப்பிய புகாரை வழக்காக எடுத்துக்கொண்டு, சிறைக் கைதிகளை மனிதாபிமானத் துடன் நடத்துவதற்கு உத்தரவிட்டதுடன், சுனில் பாத்ரா-2 என்ற வழக்கில் பரவலான சிறை சீர்திருத்தங்களுக்கு உத்தர விட்டதோடு மட்டுமின்றி, எதிர்காலத்தில் புகார்களை நீதிமன்றங்கள் தாமாகவே எடுத்துக்கொண்ட வழக்காகக் கருதி, அவ்வழக்குகளில் நிவாரணம் வழங்க உத்தர விட்டார். மேலும், மாவட்ட நீதிபதிகள் தொடர்ந்து சிறைச் சாலைகளுக்குச் சென்று, கைதிகளிடமிருந்து புகார்களைப் பெற்று நிவாரணம் வழங்கவும் அத்தீர்ப்பு உறுதிசெய்தது.
            சென்னையைச் சிங்காரச் சென்னையாக மாற்றுவதற்குப் பலரும் திட்டங்கள் வைத்திருந்தனர். எம்.ஜி.ஆர். ஆண்ட காலம். மெரினா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் கட்டுமரங்கள் அதன் அழகைக் குறைக்கின்றன என்று யாரோ ஒருவருக்குத் தோன்றியது. திடீரென்று கட்டுமரங்கள் ஒரு நாள் காணாமல் போயின. எதிர்த்து நின்ற மீனவர்கள் மீது காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சிலர் இறந்தனர். அதற்குப் பின்னும் காவல் துறையினரின் அத்துமீறிய தாக்குதலுக்குப் பயந்து பல மீனவர்கள் குப்பங்களை விட்டு இடம்பெயர்ந்தனர். ராணிமேரி கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள நடுக்குப்பம் 4.12.1985-ல் காவலர்களால் சூறையாடப்பட்டது. தனிமையில் விடப்பட்ட பெண்கள், குழந்தைகள், வயசாளிகள் யாரும் தாக்குதலுக்குத் தப்பவில்லை. உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், ஓய்வறியா அந்த உத்தமர் கிருஷ்ணய்யருக்கு இருப்புக்கொள்ளவில்லை. செய்தி கேட்டு நடுக்குப்பத்தின் சேறு சகதிகள் பாராமல் நேரில் சென்று அம்மக்களின் குறை கேட்டு, அறிக்கை ஒன்றைத் தயார் செய்தார். முதலமைச்சர் எம்.ஜி்.ஆருக்கு அந்த அறிக்கையுடன் அவர் எழுதிய கடிதத்தில், “மீனவர்கள் இம்மண்ணின் மூத்த குடிகள், அவர்களது வாழ்வாதாரத்தைப் பறிப்பதற்கு எவருக்கும் அதிகாரமில்லை” என்று குறிப்பிட்டதுடன், அம்மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தார்.
            மனித உரிமைக்கான வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினர், உள்துறை அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி, மத்திய சட்ட கமிஷன் உறுப்பினர், உச்ச நீதிமன்ற நீதிபதி என்று பன்முக ஆளுமை கொண்ட கிருஷ்ணய்யருக்கு அடிநாதமாக விளங்கியது விளிம்பு நிலை மனிதர்களின் விடுதலை தான். எண்ணம், எழுத்து, செயல் இவை அனைத்திலும் இருந்த சிந்தனைப்போக்குகளை அவர் கட்டுரைகள் வாயிலாக வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தனது சிறப்பான தீர்ப்புகளிலும் அதைப் பதிவுசெய்ய மறந்ததில்லை. அதிகாரம் கிடைக்கும்போதெல்லாம் அதை நலிவுற்ற மக்களுக்குப் பயன்படுத்தத் தயங்கியதும் இல்லை. அதே நேரத்தில், அதிகார மமதையில் சர்வாதிகாரப் பாதையில் சென்ற அரசியல்வாதிகளுக்குப் பாடம்புகட்டவும் மறந்ததில்லை. 

இலவச சட்ட உதவி                    
 
            மத்திய சட்டக் கமிஷன் உறுப்பினராக இருந்தபோது, அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்கும் வண்ணம் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு, பிரிவு 39-A அறிமுகப்படுத்தப்பட்டது. நீதிமன்றங்கள் அனைவருக்கும் பொது என்றாலும், வசதியும் வாய்ப்பும்மிக்க வக்கீல்களின் உதவியைப் பெற முடியாத நலிவுற்ற மக்களும் நீதிமன்றத்தை நாடும் வகையில் இப்பிரிவு கொண்டுவரப்பட்டதற்கான முழுப் பெருமையும் அவரையே சாரும்.
               1975-ம் வருடம் அலகாபாத் உயர் நீதிமன்றம், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டு வென்ற ரேபரேலி தொகுதியில் தேர்தல் முறைகேடாக நடத்தப்பட்டது என்று கூறி அவரது தேர்தல் வெற்றி ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்துப் போடப்பட்ட மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வருகிறது. அப்போது விடுமுறைக் கால நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் கிருஷ்ணய்யர். வழக்கு விசாரணைக்கு வருமுன்னே அவரைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள அன்றைய சட்ட அமைச்சர் கோகலே முயற்சிக்கிறார். அவரைச் சந்திக்க மறுத்த கிருஷ்ணய்யர், வழக்கை விசாரித்த பின், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு முழுத் தடை வழங்க மறுக்கிறார். ஆட்டம் கண்ட பிரதமர், நாடு முழுதும் நெருக்கடி நிலைமையைப் பிரகடனப்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்துகிறார். கிருஷ்ணய்யர் முழுத் தடை அளிக்க மறுத்ததன் காரணந்தான் நெருக்கடி நிலைமை ஏற்பட்டதென்று பலரும் கூறுவர். அவர் அளித்த உத்தரவை அவரது கருத்துக்களுடன் முழுதும் ஒத்துப்போகாத பிரபல சட்ட நிபுணர் எச்.எம். சீர்வை, கிருஷ்ணய்யர் முழுத் தடை விதிக்க மறுத்த தேதியன்றுதான் உச்ச நீதிமன்றம் அதனுடைய சிறப்பான நேரத்தைப் பெற்றது என்று தனது புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார். 

கிருஷ்ணய்யரின் தீரம்                   
 
         நெருக்கடி நிலையின்போது, இந்திரா காந்தியிடம் அவரது அதிகார மமதையைச் சுட்டிக்காட்டப் பயந்த நேரத்தில், கிருஷ்ணய்யர் பிரதமரிடம் அவரது அரசு நீதிமன்றத்தில் மக்களது அடிப்படை உரிமையைப் பறித்தது நியாயம் என்று வாதாடியது தவறென்று சுட்டிக்காட்டினார். அந்நேரத்தில், எவருமே இந்திரா காந்தியிடம் விமர்சனங்களை முன்வைக்க வராதபோது, கிருஷ்ணய்யர் நேரடியாகப் பிரதமரிடம் அவர் இழைத்த தவறை சுட்டிக்காட்டிய செயல் அவரது தீரத்தை வெளிப்படுத்தும்.
               இன்றைக்குப் பலரும் தமிழரின் உடைக் கலாச்சாரம் வேட்டிதான் என்று பேசுவார்கள். சமீபத்தில், நீதிபதி ஒருவரை அனுமதிக்க மறுத்த சென்னை கிரிக்கெட் கிளப் விவகாரத்தை ஒட்டி எழுந்த ஆவேசத்துக்குப் பிறகு, தமிழக சட்டமன்றமும் வேட்டி கட்டி வருபவருக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சிறைத் தண்டனை என்ற சட்டம்கூட இயற்றியுள்ளது. நீதிபதி கிருஷ்ணய்யரைப் பொறுத்தவரை அவர் ஓய்வுபெற்ற பிறகு, என்றுமே அவர் பாரம்பரிய உடையையே அணிந்துவந்தார். கிரிக்கெட் கிளப்பில் உறுப்பினராயிருந்த கிருஷ்ணய்யரின் நண்பர் ஒருவர், அவரை அங்கு இரவு உணவுக்கு அழைத்துச் சென்றார். கதர் சட்டையும் கதர் வேட்டியும் கட்டி ரப்பர் செருப்பு அணிந்து வந்த அவரை அங்கிருந்த வாயிற்காவலர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். கிளப் விதிகளின்படி மேல்நாட்டு உடைகளையே அணிந்து வர வேண்டும் என்பதால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிரச்சினையைப் பெரிதுபண்ண விரும்பாத கிருஷ்ணய்யர், அங்கிருந்த விருந்தினர் பதிவேட்டில் இவ்வாறு எழுதிக் கையெழுத்திட்ட பின் வெளியேறினார்:-
            “எனக்கு இரவு உணவு இங்கு மறுக்கப்பட்டது. ஆனாலும், கௌரவமான இந்தியனாக இங்கிருந்து நான் வெளியேறுகிறேன்.”
             1957-ம் வருடம் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, முதல்முறையாக இந்தியாவில் (ஏன் உலகத்திலேயே) தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று கம்யூனிஸ்ட் ஆட்சி அமைத்தது. பள்ளிக் கல்வியைச் சீரமைக்கவும், ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டம் இயற்றப்பட்டது. அது பொறுக்காத சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களும், சாதி அமைப்புகளும் கம்யூனிஸ்டுகள் கையிலிருந்து கேரளாவை விடுவிக்க விடுதலைப் போராட்டம் (விமோசன சமரம்) ஆரம்பித்தனர். சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதென்று அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி 1959-ல் அமலுக்கு வந்தது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதலில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி முதல் ஜனநாயகப் படுகொலைக்குப் பலியானது. அந்த முடிவைத் தவிர்ப்பதற்கு நல்லெண்ண முறையில் அன்றைய பிரதமர் பண்டித நேருவை கிருஷ்ணய்யர் சந்தித்து முயற்சி செய்தார். ஆனால், தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்றால் காங்கிரஸைக் கரைத்துவிடும் என்ற எண்ணத்தில் ஆட்சிக் கலைப்பு முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டதால் கிருஷ்ணய்யரின் முயற்சி தோல்வியுற்றது.
            உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணய்யர் ஆற்றிய பணியைப் பற்றி பலரும் எழுதியுள்ளனர். சட்ட நிபுணர்கள் ஒருமித்த குரலில் அவரது பணியைப் பாராட்டியுள்ளனர். இவை எல்லாவற்றையும்விட, கிருஷ்ணய்யரைப் பற்றியும் அவரது தீர்ப்புகளைப் பற்றியும் பல நாடுகளில் உள்ள சட்ட நிபுணர்களும் நீதிபதிகளும் பாராட்டியுள்ளனர். ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்ற நீதிபதி மைக்கேல் கிர்பி, கிருஷ்ணய்யரின் 80-வது பிறந்ததினத்துக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருந்து இன்றைக்கு அவர் நூற்றாண்டு காணும் சூழலிலும், என்றைக்கும் பொருத்தமானது.
       “கிருஷ்ணய்யர் பொதுச்சட்டத்தில் பேராற்றல் பெற்றவர். அவர் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானவரல்ல. உலகம் முழுதும் உள்ள வக்கீல்கள் மற்றும் சட்ட நிபுணர்களுக்குச் சொந்தமானவர். அவருடைய தீர்ப்புகள் ஆஸ்திரேலிய நீதிமன்றங்களில் மேற்கோள் காட்டப்படுவதுடன் நீதிபதிகள் அவற்றைப் பின்பற்றவும் முற்படுவர்!” 

நன்றி : தி இந்து (தமிழ்)  

புதன், 7 நவம்பர், 2012

நூற்றாண்டைக் காணும் தோழர். சமர் முகர்ஜிக்கு செவ்வணக்கம்...!

                   தேசத்தின் மிக மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் சமர்முகர்ஜி நவம்பர் 7 அன்று தமது நூறாவது வயதைத் தொடுகிறார். தேசம் போற்றுகிற தோழர் சமர் முகர்ஜியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரிவான அளவில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சமர் முகர்ஜி உயர்த்திப் பிடிக்கிற கொள்கைகளை வங்க மக்களிடையே பிரச்சாரம் செய்கிற விதத்தில் அவரது நூறாவது பிறந்தநாள் விழா அமைகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான காகா பாபு என்று தோழர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட முசாபர் அகமதுவின் பிறந்த நூற்றாண்டு விழாவும் சமர் முகர்ஜியின் நூறாவது பிறந்த நாள் விழாவுடன் இணைந்து நடத்தப்படுகிறது. 1930 அக்டோபர் காந்திஜி அறைகூவல் விடுத்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதால் சமரேந்திரலால் என்ற பள்ளி மாணவனையும் மச்சுனன்பரின் முகர்ஜியையும் பிரிட்டிஷ் போலீஸ் கைது செய்து கொல்கத்தா பிரெசிடென்சி ஜெயிலில் அடைத்தது. ஹெளரா மாவட்டத்தின் பிதாம்பர் பள்ளி மாணவர்களான இவர்களை, வகுப்பைப் புறக்கணித்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக பிரிட்டிஷ் போலீஸ் கைது செய்தது. காங்கிரஸ் ஊழியர்களான அரசியல் கைதிகளுடன் 17 வயது நிரம்பாத சமரேந்திரலாலுக்கும் பரினுக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் சமரேந்திரலாலின் ஆரம்ப நாட்கள்... மூன்றாம் வகுப்பு சிறைக் கைதிகளை ஒடுக்குவதற்காக நியமிக்கப்பட்ட கொடூரனாகிய ஹவில்தார் ஃபக்தே பகதூர்சிங்கின் மேற்பார்வையில் இந்த 17 வயது இளைஞன் இருந்தார். இந்த கொடூர சிறை அதிகாரி உள்பட மற்ற அதிகாரிகள் வரும்போது சிறைக் கைதிகள் “சலாம் சர்க்கார்’’ என்று மிகப் பணிவுடன் கூறவேண்டும் என்பது சட்டம்.
           அரசியல் கைதிகள் இந்தச் சட்டத்தின்படி நடந்து கொள்ள வேண்டியதில்லை என்று சமரேந்திரலாலும் பரினும் மறுத்தனர். இதைக் கேள்வியுற்ற மற்ற சிறைக்கைதிகளுக்கும் துணிவு பிறந்தது. சிறைச் சட்டங்களை மீறுவதற்கு துணிவு வந்த ஒரு அரசியல் கைதி. அந்த சிறை அதிகாரியான ஃபக்தே பகதூர் சிங்கை கீழே தள்ளிவிட்டார். ஆனால் இந்தச் சம்பவத்தால் மற்றொரு முறை அவர் சிறை அதிகாரியால் தாக்கப்பட்டார். இன்று கொல்கத்தாவில் தில்குஷ் தெருவின் 1 ஆம் நம்பர் வீட்டில் பிறரின் உதவியுடன் மட்டுமே நடமாடுகிற இந்த மா மனிதர்தான் அன்றைய சமரேந்திரலால். காங்கிரஸ் ஊழியராக இருந்த அந்த மாணவர்தான் இன்று நூறு வயதை எட்டியுள்ளார். இப்போது அவருடைய பெயர் பழைய சுரேந்திரலால் அல்ல. காங்கிரஸ் ஆடையை எப்போதோ களைந்து விட்டார். பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடிய அவர் இப்போது காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்துப் போராடுகிறார். அவரது போராட்ட வாழ்க்கை நூறிலும் தொடர்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட்டுகளும் ஒரு மூத்த வழிகாட்டித் தலைவராக அவரை கௌரவிக்கிறார்கள். 
         பிரிட்டிஷ் கம்பெனியின் ஊழியராக இருந்த சசீந்திரலால் முகர்ஜி-கொலாப் சுந்திரி தேவி ஆகியோரின் மகனாக 1913 நவம்பர் 7ல் பிறந்த சமரேந்திரலால் என்ற திருமணமாகாத இவரின் 85 ஆண்டுகால போராட்ட வாழ்க்கை மற்ற போராளிகளுக்கு ஒரு பாட நூலாகும். சிறை அனுபவங்கள் சமரேந்திரலாலை ஒரு புரட்சியாளனாக உருவாக்கியது. 1931ல் காந்தி-இர்வின் சந்திப்பின்படி சமரேந்திராவும் அவரைச் சேர்ந்தோரும் விடுதலை செய்யப்பட்டார்கள். என்றாலும் பள்ளிகளில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன்பிறகு கொல்கத்தா பௌ பஜார் பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்ந்து படித்தார். சொந்த ஊரான ஆம்தயில் உள்ள காங்கிரஸ் கமிட்டிச் செயலாளராக செயல்பட்ட போதுதான் மெட்ரிக்குலேசன் படிப்பில் அவர் தேர்ச்சி பெற்றார். பிறகு கொல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து அதிக மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1930களில் இந்திய அரசியலில் அலையடித்த சிவப்புக் காற்றில் வங்கமும் கலந்தது. அந்தச் செங்காற்று சமர் முகர்ஜியின் சிந்தையிலும் அலை வீசியது. அது காங்கிரஸ் நடவடிக்கைகளில் அவருக்கு அதிருப்தி ஏற்பட்ட காலமாகும். இயல்பாக அவர் கவனமெல்லாம் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் பக்கம் திரும்பியது. தொடர்ந்து அவர் படிப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி வந்துவிட்டார். அன்று கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியராக இருந்த பினாய்ராயுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு காரணமாக கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின்பால் அவர் ஈர்க்கப்பட்டார். 1936 முதல் ஹெளரா சணல் மில் தொழிலாளர்களையும் சணல் விவசாயிகளையும் ஒன்று திரட்டுவதில் அவர் கவனம் செலுத்தினார். 1938ல் அகில இந்திய மாணவர் சங்கத்தின் ஹெளரா மாவட்டத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியுடனான நெருக்கம் மேலும் மேலும் அதிகரித்தது. 1940ல் அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். சணல் மில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தலைமை வகித்ததற்காக கைது செய்யப்பட்டு 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1946ல் கொல்கத்தா நகரத்தில் நடந்த திட்டமிட்ட இந்து-முஸ்லீம் வகுப்புக் கலவரத்திலிருந்து சாமான்ய மனிதர்களை பாதுகாக்க சமர்முகர்ஜி நடத்திய தீரம் மிக்க பணிகள் வங்க வரலாற்றின் ஒரு பகுதியாகும். 1947ல் தேசம் விடுதலை பெற்றதைத் தொடர்ந்து கிழக்கு வங்கத்திலிருந்து வந்த அகதிகளுக்கு உதவுகிற பணிகளை அவர் சிறப்பாகச் செய்தார். 1948ல் கொல்கத்தாவில் நடந்த கட்சியின் இரண்டாவது மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.
             அக்காலத்தில் கட்சி தடை செய்யப்பட்டபோது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறைதண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். பின்னர் கட்சியின் மீது அடக்குமுறை ஏவப்பட்டதால் அவர் தலைமறைவாக இருந்து கட்சிப் பணியாற்றினார். 1957ல் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1962ல் இந்திய- சீனப் போரின்போது கம்யூனிஸ்ட்டுகள் அநியாயமாக வேட்டையாடப்பட்டனர். அப்போது அவர் மீண்டும் தலைமறைவானார். 1964ல் கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் 7வது அகில இந்திய மாநாட்டிற்கான தயாரிப்புப் பணிகளில் தீவிரமாய் இருந்தபோது அவர் கைது செய்யப்பட்டு மித்னாபூர் சிறையில் அடைக்கப்பட்டார். அகில மாநாட்டின் பிரதிநிதியாக இருந்தபோதும்கூட அவரால் மாநாட்டில் பங்கேற் இயலவில்லை. 1964ல் சமர் முகர்ஜி கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரானார். 1978ல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரானார். 1992-2002 காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டுக்குழு தலைவராகப் பணியாற்றினார். இப்போது மத்தியக் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளராக உள்ளார். 1957ல் அவர் சட்டமன்ற உறுப்பினரானார். 1971ல் ஹெளரா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏகேஜியுடனான தனது நாடாளுமன்ற அனுபவங்களை உணர்ச்சிப் பூர்வமாக சமர் முகர்ஜி இன்றும் நினைவு கூர்கிறார்.
தேசாபிமானியிலிருந்து தமிழில் தி.வ. - சங்கர்

திங்கள், 7 மே, 2012

நூற்றாண்டு விழா காணும் உழைப்பாளர் நாளிதழ் ‘பிராவ்தா - உண்மை’ - உலக தொழிலாளர்களை ஒன்றுபட அழைக்கிறது...!

            புரட்சியாளர் மாமேதை  லெனின் 1912 - ஆம் ஆண்டு மே மாதம்  5 - ஆம் தேதியன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் - இல்  தொடங்கி வைத்த ரஷ்ய உழைக்கும் மக்களின் நாளிதழான ‘பிராவ்தா’வின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் சத்தமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் மாஸ்கோவில் நடத்தப்பட்டன.
             ரஷ்யப்புரட்சிக்கு முன்பே தொடங்கப்பட்ட  'பிராவ்தா’  1917 - ரஷ்யப்புரட்சிக்கு மிகப்பெரிய பங்குவகித்தது. 'பிராவ்தா’-வின் பொருள் ''உண்மை''. இன்றும் ரஷ்ய உழைப்பாளி மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. ''உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்'' என்று மாமேதை லெனின் ஒலித்துவிட்டுச் சென்றக்குரலை இந்த நூறு வயதிலும் 'பிராவ்தா’ இன்றும் மாறாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
                1912 முதல் 1991 வரை சோவித் யூனியனில் சோவித் கம்யூனிஸ்ட் கட்சி - மத்தியக்குழுவின் அதிகாரபூர்வப் பத்திரிக்கையாக இருந்தது. 1991 - இல் சோவித் யூனியன் சிதறுண்டு போனப்பிறகு ரஷ்யாவின் அப்போதைய அதிபர் போரிஸ் எல்ட்சின் 'பிராவ்தா’ நாளிதழுக்கு தடைவிதித்ததால் மூடப்பட்டது. அதன் பிறகு 1997 -இல் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழாக உயிர்த்தெழுந்தது.
                  மாஸ்கோவிலுள்ள 'பிராவ்தா’ - வின் பத்திரிகை அலுவகத்தில் அன்று மாமேதை லெனினும், அவரது மனைவி நடேழ்ட  க்ருப்ஸ்கயா  ஆகியோர்  ''பத்திரிகை ஆசிரியர்'' பணி செய்த  அலுவலக அறையை  இன்றும் நினைவுச்சின்னமாக வைத்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மெய்சிலிர்க்கிறது.     
                 அது மட்டுமல்ல,  'பிராவ்தா’ நாளிதழின் தற்போதைய ஆசிரியர் போரிஸ்  கொமொத்ஸ்கி அவரது மாஸ்கோ அலுவலகத்தில் அவரது இருக்கைக்குப் பின்னால் சோவியத்தின் சிற்பி மாமேதை லெனின் 'பிராவ்தா’நாளிதழை வாசிப்பது போன்ற பெரிய அளவிலான படத்தை வைத்து மரியாதை செலுத்துகிறேன் என்று கூறுவது கேட்கும் போதும் மெய்சிலிர்க்கிறது.
                   
                
            இப்படிப்பட்ட மாபெரும் நாளிதழின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் 
மாஸ்கோவில் இரண்டு நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் நிகழ்ச்சி முகமறியா வீரர்களின் கல்லறையில் அஞ்சலியுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் உலகநாடுகளில் உள்ள  சகோதர கம்யூனிஸ்ட் பத்திரிகைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
            ரஷ்யக் கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜுகானோவ் தலைமையில் இளைஞர்களும் முதியவர்களுமான தொண்டர்கள் செங்கொடி ஏந்திய வண்ணம் வீரமுழக்கங்களுடன் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ரஷ்ய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். பெரும்புரட்சியின் ராணுவத் தளபதியாகக் கருதப்பட்ட நாயகன் மார்ஷல் ஜுகானோவின் நினைவுச்சின்னத்தின் முன்னே ஜுகானோவ் புகழஞ்சலி செலுத்தினார். அதையடுத்து சர்வதேச கம்யூனிஸ்ட் இதழ்களின் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர்.
              சோவியத் யூனியன் சிதறுண்டபோது உருவான பல்வேறு நாடுகளில் இயங்கும் கம்யூனிஸ்ட் இதழ்களின் ஆசிரியர்கள் மற்றும் சீனா, வியட்நாம், கியூபா, வடகொரியா, லாவோஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் பதிப்புகளின் பிரதிநிதிகள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு நடத்தும் பீப்பிள்ஸ் டெமாக்ரசி, லோக்லஹார் ஆகியவற்றின் சார்பில் லோக்லஹார் இணையாசிரியர் ராஜேந்திரகுமார் சர்மா விழாவில் கலந்து கொண்டார். சிபிஐ இதழ்களின் சார்பில் ஷமீம் பைய்ஸீ பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
                 இந்நிகழ்ச்சிகளை பார்க்கும் போது உண்மையான  மக்கள் புரட்சிக்கு, சமூக விடுதலைக்கு, விழிப்பான அரசியலுக்கு பள்ளிக்கூடாமாய், பாடமாய், ஆயுதமாய் விளங்கிய 'பிராவ்தா’ நாளிதழ்  இன்னும் பல நூறு ஆண்டுகள் அதே சிலிர்ப்புடன் வாழும்... ஏகாதிபத்தியத்தினாலோ அல்லது முதலாளித்துவத்தினாலோஅதற்கு என்றும் மரணமில்லை 
என்பது தான் ''உண்மை''.

செவ்வாய், 1 மே, 2012

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கிய நவரத்தினங்களில் முதல் ரத்தினம் தோழர். பி. சுந்தரய்யா நூற்றாண்டு விழா...!

  தோழர் - பி. சுந்தரய்யா நூற்றாண்டு விழா
               
             1964 - ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட ஏழாவது கட்சி மாநாட்டில், கட்சி தொடங்குவதற்கு முன்னோடிகளாக இருந்த - நவரத்தினங்களாக கருதப்பட்ட ஒன்பது தலைவர்களில் முதன்மையானவர் தோழர். பி. சுந்தரய்யா என்று சொன்னால் அது மிகையாகாது. கட்சியின் மாநாட்டில் தலைமைக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள் மொத்தம் ஒன்பது பேர். அவர்கள் தோழர். பி. சுந்தரய்யா, தோழர். பி. டி. ரணதிவே, தோழர். ப்ரோமோத் தாஸ்குப்தா, தோழர். இ.எம்.எஸ். நம்பூதிரிபாத், தோழர். எம். பசவபுன்னையா, தோழர். ஹர்கிஷன் சிங் சுர்ஜித், தோழர். பி. ராமமூர்த்தி, தோழர். ஏ. கே. கோபாலன் மற்றும் தோழர். ஜோதி பாசு போன்ற தோழர்கள் தான் கட்சியின் தலைமைக்குழுவில்  நவரத்தினமாக ஜொலித்தவர்கள். இவர்களில் முதன்மையானவராக கருதப்பட்டதால் தான் கட்சியின் ஆரம்ப கால பொதுச்செயலாளராக தொடர்ந்து மூன்று முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது தான் இவரின் தனி சிறப்பு. 1964  - ஆம் ஆண்டிலிருந்து 1978 - ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் பொதுச்செயலாளராக பணியாற்றி கட்சிக்கு பெருமை சேர்த்தார். 
                   தனது 17 - ஆவது வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரல் கொடுத்தார். ஆரம்பத்தில் காங்கிரஸ்காரராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினாலும், பின்னர் உறுதிமிக்க கம்யூனிஸ்டாகவே இறுதி வரை வாழ்ந்தார். அவருடைய சொந்த மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் மட்டுமல்லாது, நாடு முழுதும்  கட்சியைக் கட்டுவதற்கு அவர் அல்லும் பகலும் அயராது வேலை செய்தார் என்பதை கட்சித் தோழர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இவரது கடுமையான உழைப்பென்பது கட்சிக்குள்ளிருந்த இளைஞர்களையும், வெளியிலிருந்த இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்திழுத்தது.
              உழைப்பாளி மக்கள், ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போன்றவர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரங்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து போராடிய தன்னலமற்றத் தலைவர் - பி.எஸ்.என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட அருமைத் தோழர் - பி. சுந்தரய்யா பிறந்தநாள் நூற்றாண்டு 2012 மே 1 -  இன்று முதல் தொடங்குகிறது. ஒரு நிகரற்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தலைவரான தோழர். பி. சுந்தரய்யாவின் வாழ்வையும் பணியையும் நினைவுகூர்ந்து கொண்டாட  நமக்கு கிடைத்த ஓர் அறிய வாய்ப்பு இதுவாகும். அவரது நூற்றாண்டு விழாவில் அவரின் நினைவை போற்றுவோம்.