மம்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மம்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 மே, 2012

மாணவர்களின் கேள்விக்கணைகளை தாக்குப்பிடிக்க முடியாமல் மம்தா வெறிபிடித்து ஓட்டம்...!

        தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேனல் CNN-IBN நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு விவாத நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. மம்தா மேற்கு வங்க முதல்வராக  பொறுப்பேற்று, ஓர்  ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி இந்த விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டிருந்தார். விவாதத்தில் பங்குபெற  ஜாதவ்பூர் மற்றும் பிரெசிடென்சி பல்கலைக்கழகங்களில்   பயிலும்  மாணவ - மாணவியர்களும் வந்திருந்தனர்.
            இந்த நிகழ்ச்சியின் போது, நிகழ்ச்சி தொகுப்பாளரும், மாணவ - மாணவியர்களும் கேட்ட கேள்விகளுக்கு கடுகடுப்பாக இருந்தாலும் மம்தா  துவக்கத்தில் பொறுமையாகவே  பதிலளித்து வந்தார். நேரம் போகப்போக சூடேறிப் போனார். ஒரு கட்டத்தில்,  மம்தா குறித்து கார்ட்டூன் வரைந்த ஜாதவ்பூர் பல்கலைக்கழக  பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா கைது செய்யப்பட்டது குறித்தும், மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்தும்  மாணவ - மாணவியர்  சரமாரியாக கேள்வி கேட்டதும் பொறுத்துக்கொள்ள முடியாமல்  மம்தா கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டார். வெறிப்பிடித்தவர் போல் கத்தினார். மாணவர்களைப் பார்த்து ''நீயெல்லாம் மார்க்சிஸ்ட்... மாவோயிஸ்ட்....எஸ்.எப்.ஐ... மார்க்சிஸ்ட் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது'' என்று ஒருமையில் அழைத்து உரத்தக் குரலில் கத்தினார். ''ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களை மட்டும் அழைத்ததற்கான காரணம் என்ன..? வேறு மாணவர்களை ஏன் அழைக்கவில்லை?'' என்று கூச்சல் போட்டு கொண்டே நிகழ்ச்சியின் இடையிலேயே வெளியேறினார். பாதியிலேயே நிகழ்ச்சி பரப்பரப்பானது. தொலைக்காட்சியின் துணை ஆசிரியர்  சாகரிகா கோஷ்  எவ்வளவோ சமாதானம் படுத்தியும் மம்தா சமாதானம் ஆகவில்லை.  வெறி பிடித்தவர் போல் மம்தா கத்திக்கொண்டே வெளியேறினார்.    
            இந்நிகழ்ச்சியை பார்த்து நாடே பரப்பரப்பானது. 
               சட்டமன்றமும், மக்கள் கூடும் இடங்களும் தங்களின் புகழ் பாடும் பஜனை 
மடங்களாக  இருக்கவேண்டும் என்று தான் மம்தா மற்றும் ஜெயலலிதா போன்ற முதலமைச்சர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதும், தங்களுக்கு எதிரான  விமர்சனங்களை ஆக்கப்பூர்வமானதாக எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதும் தான் உண்மை.  இப்படி சகிப்புத் தன்மையே இல்லாதவர்கள் ஓராண்டு என்ன... எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருந்தமாட்டார்கள்.

செவ்வாய், 8 மே, 2012

இந்தியாவை வட்டமிடுகிறது அமெரிக்க கழுகு....!

இந்திய உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு....  
   
           அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பல்வேறு திட்டங்களை 
எடுத்துக்கொண்டு இந்தியாவிற்கு பறந்து வந்திருக்கிறார். அதுவும் வந்தவர் நேரிடையாக தலைநகரில் இறங்கவில்லை. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 
கட்சியின் தலைமையிலான இடதுசாரி அரசை சகித்துக்கொள்ள முடியாத அமெரிக்க 
''பிணந்திண்ணி கழுகு'',  தாங்கள் செய்த பல்வேறு  மகாசதிவேலைகளால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை நேரில் காண ஹிலாரி கிளிண்டன் 
நேரிடையாக கொல்கத்தாவிற்கு வந்து  இறங்கினார். அதுமட்டுமல்ல மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவை பாராட்டிப் பாராட்டி புளகாங்கிதம் அடைந்தார்.
                  மம்தாவோ வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கிறார். எசமானியம்மா மம்தாவை தூக்கி வைத்து அம்புட்டு பாராட்டிட்டாங்கலாம். அம்மணியை பிடிக்கவே முடியலைங்க. மம்தா அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை எல்லாம் கேட்டு ஹிலாரி கிளிண்டன் மம்தாவை பாராட்டிப் பூரித்துப் போய்ட்டாங்களாம். மேற்கு வங்க நூலகங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிகைகள் வாங்க தடை, பள்ளிப் பாடப் புத்தகங்களில் காரல் மார்க்ஸ் - எங்கெல்ஸ் சம்பந்தப்பட்ட பாடங்கள் நீக்கம், கேலிச்சித்திரம் வெளியிட்ட கல்லூரிப் பேராசிரியருக்கு சிறை தண்டனை, இடதுமுன்னணி அரசு வழங்கிய நிலங்கள் ஏழைகளிடமிருந்து பறிப்பு போன்ற மம்தா ஆட்சியின் சாதனைகளை பார்த்து பூரிப்படைந்து ஹிலாரி கிளிண்டன் மம்தாவின் மீது பாராட்டு மழையாக  பொழிந்திருக்கிறார். அதற்கு பரிசாக ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க முதலீடுகளை வாரி வழங்கியிருக்கிறார். 
                 இது ஒரு பக்கம் நடந்தாலும், இன்னொரு பக்கம் இப்படி மம்தாவை பாராட்டுவதன்  மூலம் அவரை வசியம் பண்ணும் வேலையும் நடந்தது. மம்தா தான் அரசியல் பிழைப்பை நடத்த அவ்வப்போது ''இடதுசாரி'' முகமூடியை போட்டுக்கொண்டு நாடகமாட வேண்டியிருக்கிறது. அதன் காரணமாகத்தான்,  சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை நுழைக்க மத்திய அரசு முயற்சிக்கும் போதெல்லாம் அதற்கு எதிர்ப்பு காட்டிவந்தார். அதனால் ஹிலாரி கிளிண்டன் மம்தா அக்காவிடம் இதற்கு எதிர்ப்பு காட்ட வேண்டாம் என்று
தாஜா பண்ணியிருக்கிறார். 
                மம்தாவின் மேற்கு வங்க  அரசு ஹிலாரி கிளிண்டனை பாசத்தோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்கும் பொருட்டு,  ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலக 
கட்டடங்கள் அனைத்தும் அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன என்பதையும் நாம் பார்க்கவேண்டியிருக்கிறது.
           அதுமட்டுமல்ல, இந்தியா - வங்கதேசம் சம்பந்தப்பட்ட தீஸ்டா நதிநீர்ப் பிரச்சனை பற்றியும் ஹிலாரி கிளிண்டன் மம்தாவிடம் பேசியிருக்கிறார் என்பதும் இங்கே 
குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்காவின் ''பெரியண்ணன்'' தனத்தை தான்  காட்டுகிறது. இது போன்ற உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்ததால், ஹிலாரி கிளிண்டன் அப்படி எதையும் பேசவில்லை என்று பம்மியிருக்கிறார். 
              பிறகு தலைநகருக்கு பரந்த அமெரிக்க கழுகு ஹிலாரி கிளிண்டன், அங்கே காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உட்பட பிரதமர் மன்மோகன் சிங் 
மற்றும் மத்திய அமைச்சர்களை  சந்தித்திருக்கிறார். ஈரான் நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் நிர்பந்தம் செய்திருக்கிறார். ஏற்கெனவே அமெரிக்காவின் இதுபோன்ற  நிர்ப்பந்தம் காரணமாகவே  ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்துக் கொண்டுள்ளது என்பதையும்,   ஈரானுடனான குழாய் வழி எரிவாயு திட்டத்தையும் நிறுத்தி வைத்துள்ளது என்பதையும் யாரும் மறந்துவிடமுடியாது. 
                 இந்திய நாட்டின் பொருளாதார ரீதியான பாதிப்புகளை உருவாக்கும் அமெரிக்காவின்  இது போன்ற தலையீடுகளையும், நிரபந்தங்களையும் இந்திய குடிமக்கள் அனைவரும் வன்மையாக கண்டிக்கவேண்டும். அமெரிக்காவின் இதுபோன்ற நிர்பந்தங்களுக்கு  எஜமான விசுவாசத்தோடு ஆட்சியாளர்கள் அடிபணிந்தால் எதிர்காலத்தில் இந்திய மக்களின் வாழ்வாதாரம் என்பது 
கேள்விக்குறியாகிவிடும்.

புதன், 28 மார்ச், 2012

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் மம்தாவின் அராஜகச்செயல்...!

பேயாட்சி நடந்தால்...?          

     மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அரசு நூலகங்களில் அரசியல் கட்சி சார்பு பெற்ற மற்றும் அனைத்து ஆங்கில ‌பத்திரிகைகள் வைக்க தடை விதித்து ''பேயாட்சி'' நடத்தும்   முதல்வர் மம்தா உத்தரவிட்டுள்ளார். அதே சமயத்தில், அரசு ஆதரவு பெற்ற தனது கட்சி மற்றும் சில வங்க‌மொழி பத்திரிகைகளுக்கு மட்டும் தாராளமாக  அனுமதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நூலகங்களில் பத்திரிக்கைகளை தடை செய்வது என்பது பொதுமக்களின் பத்திரிக்கைகளை படிக்கும் உரிமையை பறிப்பதாகும். இது ஜனநாயகத்தின் குரல்வளையையே நெரிக்கும் செயலாகும். தனது ஆட்சியின் இலட்சணங்களை - விமர்சனங்களை மக்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்காகவே மம்தா  அரசியல்  முதிர்ச்சி இல்லாமல் செய்த செயல்.   
            என்ன தான் பத்திரிக்கைகளை மேற்கு வங்க மக்களிடமிருந்து விலக்கி வைத்தாலும், மம்தாவின் ''அவல'' ஆட்சியின் ''பெருமைகள்'' மக்களுக்கு தெரியாமலா போய்விடும்...
              மம்தாவின் இந்த அராஜகச் செயலை மேற்கு வங்க மாநில மக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவரும் கண்டிக்கவேண்டும்.
                 மேற்கு வங்கத்தில் தற்போது அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் நூலகங்கள் என மொத்தம் 2842 நூலகங்கள் மாநிலம் முழுவதும் உள்ளன. இந்த நூலகங்கள் எல்லாம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான  இடதுசாரிகள் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. அத்தனை நூலகங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ''கண சக்தி'' பத்திரிகை உட்பட அனைத்து எதிர்க்கட்சியினரின் பத்திரிக்கைகளும் இந்த நூலகங்களில் நுழைவதை  மம்தா தடை செய்திருக்கிறார்.  நல்ல வேலை சி. பி. எம் - னால்  ஆரம்பிக்கப்பட்ட  நூலகங்கள் என்பதால் அத்தனையையும்   மூடிவிடாமல் விட்டு விட்டார்களே...! மமதையில் எதையும் செய்வார் மம்தா..!
நன்றி : The Hindu / 31.03.2012

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

மம்தா - மாவோயிஸ்ட் மோதல் : வளர்த்த கடா மார்பில் பாயுதோ..?

மாவோயிஸ்ட்கள் என்னை கொலை செய்ய முயற்சி : மம்தா அலறல் 
                 மாவோயிஸ்டுகள் என்னையும், மத்திய அமைச்சர் முகுல் ராய் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை கொலை செய்ய  முயற்சி செய்கின்றனர் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென அலறியுள்ளார். சமீபத்தில்  மூன்று திரினாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்டதை தொடர்ந்து மாவோயிஸ்டுகள் மீது மம்தா கொபமடைந்திருக்கிறார்.
                 கொலையும் பேச்சுவார்த்தையும் ஒரே சமயத்தில் நடத்த முடியாது.  இரண்டில் எது  வேண்டும் என்பதை மாவோயிஸ்டுகளே முடிவு செய்யட்டும் என்றும், அரசு செய்யும் வளர்ச்சிப் பணிகளில் மாவோயிஸ்ட்கள் தலையிடக்கூடாது என்றும் மாவோயிஸ்ட்கள் மீது சீறிப் பாய்ந்திருக்கிறார்.
                  தன்னுடைய கட்சித் தொண்டர்களை கொன்றதன் மூலம் மனித உரிமையைப் பற்றி பேசுவதற்கு மாவோயிஸ்ட்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் மாவோயிஸ்ட்களை கடித்து கொதறியிருக்கிறார்.
                 மாவோயிஸ்ட்களுக்கு வெளிநாட்டிலிருந்தும், உள்நாட்டிலுள்ள அரசு சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் நிதியுதவி செய்யப்படுகிறது என்பதை இப்போது தான் ஒப்புக்கொண்டு புலம்புகிறார்.
                 மேற்கு வங்கத்தில் கடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அரசுக்கு எதிராக வளர்க்கப்பட்ட மாவோயிஸ்டுகள் இன்று தனக்கு எதிராக திரும்புவார்கள் என்று மம்தா எதிர்பார்க்கவில்லை. வளர்த்த கடா மார்பில் பாய்வதால் இன்று பதறுகிறார்.