டெல்லி அருகில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தை சேர்ந்த புள்ளிவிவர மையம் அண்மையில் ஒரு அதிரச்சிகரமான செய்தி ஒன்றை வெளியிட்டது. அந்த செய்தி சொல்வது என்னவென்றால், நடப்பு 2014-ஆம் ஆண்டு இறுதியில் நமது நாட்டில் மிக அதிக எம்.எல்.ஏ-க்கள்
கொண்ட கட்சியாக பாரதீய ஜனதாக்கட்சி உருவெடுத்துள்ளது. நாட்டிலேயே பா.ஜ.க 1.058 எம்.எல்.ஏ-க்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. எண்ணிக்கை அடிப்படையில் முதலிடம்
பெற்றது மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கையையே மிஞ்சியதும் இந்திய அரசியல் வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியோ இந்த ஆண்டு நாடு முழுவதும் 949 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
முடிந்து போன மக்களவை தேர்தல் முடிவுகளையும் சேர்த்து அலசினால், பா.ஜ.க இந்த ஆண்டு 282
எம்.பி-க்களுடன் முதலிடம் உள்ளது. மக்களவையில் 282 என்ற எண்ணிக்கையை அக்கட்சி
எட்டியிருப்பதும் இதுவே முதல்முறை. இதுபோல் இந்திய அரசியலில் 44 எம்.பி.-க்கள் என்ற
மிக்குறைந்த எண்ணிக்கையை காங்கிரஸ் கட்சிப் பெற்றிருப்பதும் இதுவே முதல்முறை என்பது போன்ற அதிர்ச்சிகரமான செய்திகளை அந்த புள்ளிவிவர மையம் வெளியிட்டுள்ளது.
இது போல் பிராந்திய அளவிலும், நாட்டில் பரவலாகவும் பாரதீய ஜனதாக்கட்சி இதுவரை இல்லாத அளவிற்கு எம்.எல்.ஏ-க்களையும் எம்.பி-க்களையும் பெற்றிருப்பது என்பது தேச நலனுக்கும், ஒற்றுமைக்கும் ஆபத்தானது என்பதை நாம் கண்டிப்பாக உணரவேண்டும். நாட்டின் மீது - மக்களின் மீது அக்கறையில்லாத பிற்போக்குத்தனமான பா.ஜ.க மாதிரியான கட்சியின் இராட்சச வளர்ச்சி என்பது தேச ஒற்றுமையை சீர்குலைத்துவிடும். ஆளும் கட்சியின் இந்த அசுர பலமும், எதிர்க்கட்சிகளின் பலமிழப்பும் ஆட்சியாளர்களை சர்வாதிகாரத்தை நோக்கியே அழைத்துச் செல்லும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
