மரணதண்டனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரணதண்டனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 அக்டோபர், 2014

அம்மா, எனக்காக ஒரு வரம் கேள்....!

               மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது.                                         
                அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டேன் என்பதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டாய்? இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. இது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?
          இந்த உலகம் என்னை எந்தக் கவலையுமின்றி 19 ஆண்டுகள் வாழ அனுமதித்தது. கொடூரம் நிறைந்த அந்த இரவில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய உயிரற்ற உடல் நகரின் ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டிருக்கும். சில நாட்களுக்குப் பிறகு, போலீஸார் வந்து என்னுடைய சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக உன்னை அழைத்துச் சென்றிருப்பார்கள். என்னைப் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துக் கொன்றார்கள் என்பதும் உனக்கு அப்போது தெரிந்திருக்கும். கொலைகாரன் யாரென்று யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். காரணம், நாம் அவர்களைப் போல பணமோ, செல்வாக்கோ படைத்தவர்கள் அல்லவே? அதன் பிறகு, உன்னுடைய வாழ்க்கை அவமானமும் துயரமும் நிறைந்ததாக மாறியிருக்கும். இந்த வேதனைகளைத் தாங்காமல் நீயும் சில ஆண்டுகளில் இறந்திருப்பாய், அதுதான் நம்முடைய தலையெழுத்தாக இருக்கும். 

சாவும் கடைசி அல்ல
 
            ஆனால், சபிக்கப்பட்ட அந்த அடி கதையையே மாற்றிவிட்டது. என்னுடைய உடல் வீதியில் தூக்கி வீசப்படவில்லை; எவின் சிறைச்சாலையின் தனிமைக் கொட்டடியில் அடைக்கப்பட்டது, இப்போது கல்லறை போன்ற ஷார்-இ-ராய் சிறையின் அறையில் புதைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் தலைவிதி என்பதால், நான் அதை ஆட்சேபிக்கவில்லை. சாவு ஒன்றே வாழ்க்கை யின் கடைசி அல்ல என்பதை நீயும் அறிவாய்.
           நாம் எல்லோருமே ஒரு அனுபவத்தைப் பெறவும், பாடங்களைப் படிக்கவும் இந்த உலகத்தில் பிறக்கிறோம் என்று ஒருமுறை சொன்னாய்; ஒவ்வொரு பிறவியிலும் நம்மீது புதிய பொறுப்பு சுமத்தப்படுகிறது. சில வேளைகளில் தீமைகளை எதிர்த்துப் போராடியே தீர வேண்டும் என்று நான் கற்றிருக்கிறேன். என்னைச் சவுக்கால் அடித்தவன் தன்னுடைய தலையிலும் முகத்திலும்தான் கடைசியாக அறைந்துகொண்டான். நல்லதொரு நெறிக்காக ஒருவர் தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது பாடுபட வேண்டும் என்று சொல்லி யிருக்கிறாய். அதைத்தானே செய்தேன்.
          பள்ளிக்குச் செல்லும்போது அடுத்தவர்களுடைய புகார்களுக்குக் காரணமாக இருந்துவிடக்கூடாது என்று அறிவுரை சொன்னாய். ஒரு காமுகன் என்னைப் பலாத்காரப்படுத்த முற்பட்டபோது, இந்த அறிவுரையெல்லாம் பயன்படவேயில்லை அம்மா. நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் என்னை நிறுத்தி, காலமெல்லாம் கொலை செய்வதற்காகவே சதி செய்தவளைப் போலவும், இரக்கமில்லா கொலைகாரி என்றும் என் மீது குற்றம் சுமத்தினார்கள். நான் கண்ணீர் விடவில்லை, எனக்கு இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவில்லை. சட்டம் பாரபட்சமில்லாமல் செயல்படும் என்ற நம்பிக்கையில் நான் அழவேயில்லை அம்மா. 

வசை கிடைத்தது
 
         கடுமையாகக் குற்றம்சாட்டியும் துளியும் வருத்தம் இல்லாமல் இருக்கிறாள் பார் என்ற வசைதான் எனக்குக் கிடைத்தது. வீட்டில் நான் கொசுவைக்கூட அடித்துக் கொன்றதில்லை. எனக்குத்தான் இந்த சதிகாரி பட்டம், கொலைகாரி என்ற குற்றச்சாட்டு. பிராணிகளை நான் நடத்திய விதத்தைக் கொண்டு என்னை ஆண் சுபாவம் மிக்கவள் என்று முடிவுகட்டினார்கள். நீ என்னை மிகவும் நேசிக்கச் சொன்ன இந்த தேசம்கூட நான் உயிரோடு இருப்பதை விரும்பவில்லை அம்மா; போலீஸ் விசாரணை என்ற பெயரில் சொல்ல முடியாத - காது கூசும்படியான - கேள்விகளைக் கேட்டுக்கொண்டே அடுத்தடுத்து இடிபோல என்னை அடித்துத் துவைத்தபோது, எனக்கு ஆதரவாக அங்கே யாருமே இல்லை அம்மா. ஒரு பெண்ணின் அழகுக்கு அழகு சேர்க்கும் என் கரிய கூந்தலை நானே மழித்துக்கொண்டதற்குப் பரிசாக என்னை 11 நாட்கள் தனிமைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினார்கள்.
           போலீஸ் காவலில் முதல் நாள் இருந்தபோது அங்குவந்த வயதான போலீஸ் அதிகாரி ஒருவர், “உனக்கெல்லாம் என்னடி நீள நகம் வேண்டியிருக்கிறது?” என்று கேட்டு சரமாரியாக அடித்தார். இந்தக் கால கட்டத்தில் இங்கு எதுவுமே அழகாக இருந்துவிடக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன். தோற்றப் பொலிவு, சிந்தனையில் அழகு, ஆசையில் அழகு, கையெழுத்தில் அழகு, கண்ணில் அழகு, பார்வையில் அழகு, இனிமையான குரல் அழகு என்று எதுவுமே விரும்பப்படுவதில்லை. 

இறுதி விருப்பம்
 
          உனக்குத் தெரியாமலோ, நீ இல்லாமலோ என்னைத் தூக்கில் போட்டுவிடுவார்கள். அதனால், நான் சொல்ல விரும்புவதையெல்லாம் ஒலிவடிவில் பதிவுசெய்திருக்கிறேன், இது இன்னொருவர் மூலம் உன் கைக்குக் கிடைக்கும். என் நினைவாக, நான் கைப்பட எழுதிய பல பக்கங்களை வீட்டில் உனக்காக வைத்திருக்கிறேன்.
       இறப்பதற்கு முன்னால் உன்னிடம் ஒன்று யாசிக்கிறேன். உன்னுடைய சக்தியையெல்லாம் திரட்டி இதை நீ செய்தே தீர வேண்டும். இந்த உலகத்திடமிருந்தும் இந்த நாட்டிடமிருந்தும் - ஏன் உன்னிடமிருந்தும் நான் எதிர்பார்ப்பது இந்த ஒன்றைத்தான். அம்மா ப்ளீஸ், அழாதே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீதிமன்றத்துக்குச் சென்று என்னுடைய இறுதி விருப்பம் இது என்று அவர்களிடம் தெரிவி. எனக்காக நீ யாரிடமும் சென்று பிச்சை கேட்காதே என்று கூறிய நானே சொல்கிறேன், நீ எனக்காக நீதிமான்களிடம் பிச்சை கேட்டாலும் தவறில்லை.
         அம்மா, நான் வெறும் கழிவாக இந்தப் பூமியிலே விழ விரும்பவில்லை. என்னுடைய அழகிய கண்களும் தூய இதயமும் இந்த மண்ணோடு மண்ணாக வீணாகப் போய்விடக் கூடாது. என்னைத் தூக்கில் போட்டதும் என்னுடைய கண்கள், இதயம், சிறு நீரகம், எலும்புகள் இன்னும் என்னவெல்லாம் என் உடலிலிருந்து எடுத்து மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியுமோ அதையெல்லாம் தேவைப்படுபவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். நான்தான் கொடுத்தேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாம். அம்மா, எனக்காக ஒரு பூச்செண்டை வாங்கு, எனக்காக இறைவனிடம் வேண்டு. என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல் கிறேன், என்னை அடக்கம் செய்து எனக்காக ஒரு சமாதியை ஏற்படுத்தாதே அம்மா; வாழும்போதுதான் நான் உனக்குத் துயரங்களையே கொடுத்தேன். நான் இறந்த பிறகும் என்னுடைய சமாதிக்கு வந்து நீ அழ வேண்டாம் அம்மா. எனக்காகக் கருப்புத் துணியை நீ போட வேண்டாம். என்னையும் துயரகரமான என்னுடைய நாட்களையும் மறக்க முயற்சி செய்; என்னுடைய எந்த எச்சமும் உன் எதிரிலோ நினைவிலோ இருக்கக் கூடாது. 

கடவுளிடம் பதில் 
 
           இந்த உலகம் நான் வாழ்வதை விரும்பவில்லை. நான் மரணத்தைத் தழுவுகிறேன். கடவுளின் ராஜ்ஜியத்தில் நான் அந்த இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குத் தொடுப்பேன். இன்ஸ்பெக்டர் ஷாம்லு, அந்த நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் பதில் சொல்லியாக வேண்டும். டாக்டர் ஃபர்வான்டி, காசிம் ஷபானி எல்லோர் மீதும் கடவுளின் நியாய ஸ்தலத்தில் நான் வழக்குத் தொடுப்பேன். குற்றம் இழைத்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், நியாயத்தின்பால் நிற்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் என்று எல்லோருமே கடவுளிடத்திலே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
          இளகிய மனம் படைத்த என்னுடைய தாயே, கடவுளின் ராஜ்ஜியத்திலே நீயும் நானும் வாதிகளாக இருப்போம், நம்மீது குற்றம்சாட்டியவர்கள் எல்லாம் பதில் சொல்லக் கடமைப்பட்ட பிரதிவாதிகளாக இருப்பார்கள். கடவுள் எதை விரும்புகிறார் என்று பார்ப்போம். என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு உலகமே நீதான் அம்மா! – உன் பிரிய ரெஹானா. 

(தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலேயே கிடைத்திருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.)   
- தமிழில்: சாரி
நன்றி : தி இந்து - தமிழ்  

வியாழன், 20 பிப்ரவரி, 2014

நீதியரசரும், முதலமைச்சரும் உயர்ந்து நிற்கிறார்கள்...!

            


             முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலையாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டு நீண்ட ஆண்டுகளாக தங்களுக்கு யாரிடமிருந்தும் கருணைக் கிடைக்காமல் மரணதண்டனையை எதிர் நோக்கி காத்திருந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் போன்றோருக்கும், மரணதண்டனையை எதிர்க்கும் மனிதநேயம்  கொண்டோருக்கும் நீதியரசர் சதாசிவம் அவர்கள் தலைமையிலான உச்சநீதிமன்ற பென்ச் நேற்று முன் தினம் அளித்த தீர்ப்பு என்பது நிம்மதி பெருமூச்சை அளித்திருக்கிறது. கருணைமனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் 23 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அந்த மூன்று பேர்களின் மரணதண்டனையை ஆயுள்தண்டனையாய் குறைத்து நீதியரசர் தீர்ப்பு வழங்கினார்.
              மனிதம் வாழ - மானுடம் தழைக்க நீதியரசர் சதாசிவம் அவர்கள் அளித்த தீர்ப்பின் மூலம் சட்டத்தின் நுணுக்கங்களைப் பயன்படுத்தி நீதிதேவதையின் கண்களை மீண்டும் திறந்திருக்கிறார். அதற்காக மீண்டுமொருமுறை நெஞ்சார பாராட்டவேண்டும். அதுமட்டுமல்ல நீதியரசர் குற்றவாளிகளின் தண்டனையை குறைத்ததோடு தீர்ப்பை சுருக்கிக்கொள்ளாமல், அவர்கள் விடுதலைப் பெறுவதற்கான வாய்ப்பையும் கோடிட்டுக்காட்டி, அதை மாநில அரசால் தான் செய்யமுடியும் என்ற ஆலோசனையையும் வழங்கியதன் மூலம் தன்னை ஒரு திறமையான நீதியரசராக மட்டுமல்லாமல் முற்போக்கான மனிதராக உலகத்திற்கு காட்டியிருக்கிறார். அதற்காகவும் அவரை கண்டிப்பாக பாராட்டியாகவேண்டும்.
                  நீதியரசர் சதாசிவம் அவர்கள் உச்சநீதி மன்றத்தில் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய 24மணி நேரத்திற்குள், தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் புதியதொரு வரலாற்றை உருவாக்கினார். கடந்த 2000-ஆம் ஆண்டில் கருணாநிதி தலைமையிலான திமுக  அரசு எந்த சட்டமன்றத்தில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் மரணதண்டனையை உறுதி செய்து அப்போதைய மாநில ஆளுநருக்கு  பரிந்துரை செய்ததோ, அதே சட்டமன்றத்தில் நீதியரசர் கொடுத்த துருப்புச்சீட்டைப் பயன்படுத்தி, காலம் தாழ்த்தாமல் தீர்ப்புக்கு மறுநாளே அந்த மூன்று பேருடன் ஆயுள் தண்டனையை அனுபவிக்கும் நளினி உட்பட மற்ற நான்கு பேரையும் சேர்த்து ஏழு பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவை  உறுதியாக அறிவித்த  தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களையும் நெஞ்சார  பாராட்டவேண்டும். அதுமட்டுமல்லாமல், மூன்று நாட்களுக்குள் அந்த ஏழு பேரின் விடுதலைக்கு அனுமதி வழங்காவிட்டால், தமிழக அரசே சட்டப்படி விடுதலை செய்யும் என்று உறுதியாக - அழுத்தமாக பேசியதை பார்த்து உலகமே வியந்து பார்க்கிறது.
               இதன் மூலம், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் இரட்டிப்பு சந்தோசம் தான். தங்களுக்கு கிடைத்த மரணதண்டனை நீக்கப்பட்டது மட்டுமல்லாமல், விடுதலையும் கிடைத்ததில் நிச்சயமாக அவர்களை பொருத்தவரையில் இரட்டிப்பு சந்தோஷமாகத்தான் இருக்கும்.
             அந்த மூவருக்கும் கொடுக்கப்பட்ட மரணதண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கியதால் நீதியரசர் சதாசிவம் அவர்களும், ஆயுள் தண்டனைக் கைதிகள் ஏழு பேரையும் விடுதலை செய்து சட்டமன்றத்தில் அறிவித்ததால் முதல்வர் ஜெயலலிதா அவர்களும் உயர்ந்து நிற்கிறார்கள். 

வியாழன், 23 ஜனவரி, 2014

நீதி தேவதையின் கண்களைத் திறந்துவிட்ட நீதியரசர் சதாசிவம்...!

           
            ''இந்தியாவில் மரணதண்டனைக்கு ஒரு மரணம் வாராதா...?'' என்று பல ஆண்டுகளாக மனிதநேயமிக்கவர்களும், சமூக சிந்தனையாளர்களும் வருந்தி ஏங்கி கொண்டிருக்கும் நேரத்தில், இரண்டு நாட்களுக்கு முன்னர், சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளாகக் கருதப்படும் நான்கு பேர் உள்ளிட்ட 15 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் அளித்துள்ள தீர்ப்பு என்பது சற்று ஆறுதலைத் தருகிறது. அதுவும் இன்றைய சூழ்நிலையில் இந்த தீர்ப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும்,  வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் கருதப்படுகிறது.  இந்த தீர்ப்பின் மூலம் குடியரசுத்தலைவர் தவறவிட்ட ''மனிதத்தை'' நீதியரசர் சில சட்ட நுணுக்கங்கள் மூலம் காப்பாற்றிவிட்டார். அவரை நெஞ்சார பாராட்டவேண்டும்.  
                நீதிமன்றத்தில் இருக்கும் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டு. கையில் தராசுக் கொடுக்கப்பட்டு நிற்க வைக்கப்பட்டிருக்கும். நீதியின் முன்  நிற்பவர் தன்  குடும்பத்தை சார்ந்தவரா, உறவினரா, வேண்டியவரா, வேண்டாதவரா, பணக்காரரா, ஏழையா, கருப்பா, சிவப்பா, பெரிய மனிதரா, பதவியில் உள்ளவரா, சாதாரண மனிதரா என்றெல்லாம் பாராமலும், பாரபட்சமில்லாமலும் தராசு முள்போல் நடுநிலையோடு நீதி வழங்கவேண்டும் என்ற பொருளில் தான் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட நீதி தேவதைக்கு இதுவரையில் நீதியின் முன் நிற்பவர் ஒரு உயிருள்ள மனிதன் என்பதும் கூட தனது கட்டப்பட்ட கண்களுக்கு புலப்படாமல் போய்விட்டதே  என்பது தான் வேதனையளிக்கக்கூடிய விஷயமாக இருந்தது. 
               ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது. கொலையாளியாக இருந்தாலும் ஒருவரின் போக்குவது என்பது நீதிமன்றத்திற்கோ  அல்லது அரசுக்கோ எந்தவிதமான உரிமையும் கிடையாது. மரணதண்டனை என்பது மனித குலத்திற்கு எதிரானது என்றெல்லாம் நீதியரசர் வி. ஆர். கிருஷ்ணய்யர் உட்பட பல்வேறு சமூக சிந்தனையாளர்கள் இன்று வரையில் போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் நீதியரசர் சதாசிவம் அவர்கள் வழங்கிய இந்த தீர்ப்பு என்பது மரணதண்டனைக்கு மரணதண்டனை அளிக்கும் தீர்ப்பை நோக்கி இந்திய நீதிமன்றம் செல்கிறது என்ற எதிர்ப்பார்ப்பை  ஏற்படுத்துகின்றது. அந்த இனிய நாளுக்காக மனிதநேயமிக்க இந்த சமூகம் ஆவலாய் காத்துக்கொண்டிருக்கிறது.

புதன், 17 ஆகஸ்ட், 2011

அரசால் செய்யப்படும் உயிர் கொலையே மரண தண்டனை..!


                     சென்ற ஒரு வாரமாக இப்போது வரை  தமிழகத்தில் ஒரே பரபரப்பு... கடந்த 1991 - ஆம் ஆண்டு  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு, சாட்சிகள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில்  சிறப்பு நீதிமன்றத்தால் மரணதண்டனை அளிக்கப்பட்டு, பிறகு உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்து, உச்சநீதிமன்றமும் மரணதண்டனையை உறுதி செய்து பின் மத்திய அரசுக்கு கருணை மனு அளிக்கப்பட்டு அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், இறுதியாக தங்கள் கருணை மனுவை தாயுள்ளத்துடன் கவனித்து, தங்கள் மீது இறக்கம் காட்டி மரணதண்டனையை ரத்து செய்வார்கள் என்று நம்பிக்கையோடு எதிர் பார்த்திருந்த சூழ்நிலையில் இந்திய குடியரசுத் தலைவர் அம்மா பிரதீபா பாட்டில் அவர்களும் அந்த கருணை மனுவை நிராகரித்து மரணதண்டனையை உறுதி செய்தது என்பது குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேருக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல் மனித நேயம் கொண்டோர்க்கும், மனித உரிமைகள்  மீது அக்கறை உள்ளவர்களுக்கும் அது ஒரு பேரதிர்ச்சியாக தான் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
.     பொதுவாகவே, இன்றைக்கு மரணதண்டனையை எதிர்த்தும்  மரணதண்டனையை ரத்து செய்யக்கோரியும்  நாட்டின் பல பகுதியில் உள்ள மனிதநேயமிக்கவர்கள் - மனித உரிமை ஆர்வலர்கள் என பலர்   உரத்த குரல் எழுப்பி வருகிறார்கள். பல ஆண்டுகளாகவே இந்த கோரிக்கை என்பது எழுப்பப் பட்டு தான் வருகிறது. இன்று ராஜீவ் கொலையாளிகள் என்று சொல்லப்படுகிற மேலே சொன்ன மூன்று பேரையும் தூக்குக்கயிறு நெருங்கி வருவதால்,  தங்களை தமிழினத் தலைவர்களாக பிரகடனப்படுத்திக்கொள்பவர்கள் எல்லாம் அவர்கள் மூவரையும் காப்பாற்றுவதற்கு போராடி வருகிறார்கள்.  
                   கடந்த பல ஆண்டு காலமாகவே மரணதண்டனைக்கு எதிரான பிரச்சாரங்களை செய்து வரும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர். வி. ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், '' மரணதண்டனை என்பது அரசின் கோழைத்தனத்தை குறிப்பதாகும். அது  எந்த பலனையும்  கொடுக்காது. மரணதண்டனை விதிப்பது என்பது முட்டாள்தனமானது. நீதித்துறையில் உள்ள தூக்குதண்டனை என்கிற இந்தக் கறையை நீக்கவேண்டும்'' என்று மரணதண்டனையைப் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
                   தண்டனை என்பது குற்றவாளிகளை திருத்துவதற்கு தானே அன்றி சாகடிப்பதற்கு அல்ல. கொன்றுவிடுவதால் அவன் திருந்துவதற்கு வாய்ப்பில்லையே. இதுவரை கொலைக் குற்றவாளிகளுக்கு நீதி மன்றத்தினால் தூக்கு தண்டனை கொடுத்ததில் நாட்டில் கொலைக்குற்றங்கள்
குறைந்தாதா என்றால், அப்படியொன்றும் இல்லையே..! மாறாக, ஆண்டாண்டு அதிகரித்துக்கொண்டு  தானே இருக்கிறது. அது மட்டுமல்ல ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது. கொலை  செய்வதவனை  தூக்கிலிடுவது  என்பது ஒரு  கொலைக்கு சமமானது. இது அரசே  செய்கிற  கொலை ஆகும்.  இது மனிதத்தன்மையற்றது. காட்டுமிராண்டித்தனமானது. உயிர் வாழும் உரிமை என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும்.  அரசும் சமூகமும்  மதிப்பு மிக்க மனித உயிர்களை மதித்திடவேண்டும்.
                      நீதியரசர். வி. ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அப்பாவி இளைஞர்களை தூக்கிலிடுவதை நான் பார்த்திருக்கிறேன்'' என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார். அன்றும் இன்றும் தூக்குதண்டனை என்பது ஆட்சியாளர்களின் கொடிய முகமாகவே இருக்கிறது.
               முன்பு ஒருமுறை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான கமிஷன் மரணதண்டனையை தடை செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்திய போது, அந்த ஓட்டெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாதது வெட்கக்கேடானது. உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தூக்குதண்டனையை - மரணதண்டனையை ரத்து செய்திருக்கின்றன. ஆனால்  இந்தியா உட்பட வெறும் 58 நாடுகளில் மட்டுமே மரணதண்டனை என்பது நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
                   மரணதண்டனையை ஒழிப்பதற்கு ஒரு மக்கள் இயக்கம் தேவைப்படுகிறது. அதற்கு நீதியரசர் வி. ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள் தலைமையில் அணி திரள்வோம்.

           ராஜீவ் கொலை குற்றவாளிகளை கருணை அடிப்படையில் காக்க வேண்டி ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற  நீதிபதி நீதியரசர் வி. ஆர். கிருஷ்ண அய்யர் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


 ------------------------------------------------------------------------------------------------------

                                                                                                                                 ஆகத்து 14, 2011 

மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,

                 இந்தியாவின் தலைமை நீதிமன்றத்தால் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று இளைஞர்களும் தூக்கிலிடப்படப் போவதை அறிந்து மிகவும் மன வருத்தம்  அடைந்தேன். அநியாயமாகக் கொல்லப்பட்ட திரு.இராசிவ்காந்தி அவர்களின் மனைவி சோனியா அவர்களும் இவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உடன்படுவதாகக் கூறினார். இவர்களின் உயிரைக் காக்க நான் மேற்கொண்ட அனைத்து முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டன.

                 அன்புள்ளம் கொண்ட அம்மையார் அவர்களே, இவர்களின் உயிரைக் காக்க தண்டனைக் குறைப்பு நடவடிக்கை எடுக்கத் தங்களை வேண்டுகிறேன். தங்களின் பரந்த மனத்தோடு, மனிதநேய அடிப்படையிலும் கருணை அடிப்படையிலும் இம்மூவர் உயிர் காக்க வேண்டுகிறேன். இந்த மனிதநேயச் செயலுக்கு வையம் முழுதும் பரவிக்கிடக்கும் தமிழர்கள் அனைவரும் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பர்.  தங்களின் நல்லாட்சி சிறக்கவும் தங்களின் புகழ் பரவவும் அந்தக் கடவுள் உங்களுக்கு அருள்வாராக !

வாழ்த்துகளுடன்

தங்கள் உண்மையுள்ள,


(வி.ஆர். கிருஷ்ண அய்யர்)

பெறுநர்
மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா
முதல் அமைச்சர், தமிழ்நாடு
போயஸ் தோட்டம்
சென்னை
தமிழ்நாடு