முதலாளித்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதலாளித்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஜூலை, 2015

முதலாளித்துவத்தை சாடும் போப்பாண்டவர்...!


 சாத்தானின் எச்சமே முதலாளித்துவம்...!                                                                                                                                        ~ போப் பிரான்சிஸ்                                                                                                                                                                                                                      
    
          முதலாளித்துவத்தை இப்படியொரு கடினமான வார்த்தைகளால் பொதுவுடைமைவாதிகள் மற்றும் இடதுசாரிகள் கூட வர்ணித்ததில்லை. ஆனால், போப் பிரான்சிஸ் இப்படிக் கூறியிருக்கிறார்.பொலிவியாவில் நடைபெற்ற உலக மாநாட்டு அரங்கத்தில் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் நிற்கவில்லை. உலக பொருளாதார ஒழுங்கினை மாற்றி அமைக்க முன்வருமாறு அடித்தட்டு மக்களுக்கு அறைகூவலும் விடுத்துள்ளார். அடித்தட்டு மக்களுக்கு வேலை, குடியிருக்க இடம், நிலம் ஆகிய புனிதமான உரிமைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
        ''மாற்றங்கள், உண்மையான மாற்றங்கள், கட்டமைப்பு மாற்றங்கள் வேண்டும் என்று கேட்பதற்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை'' என்றும் அவர் தன் உரையில் உற்சாகம் அளித்தார். போப் பதவியை ஏற்ற பின் ஆற்றியுள்ள மிக நீண்ட, உணர்வுப்பூர்வமான, ஆவேசமான உரை அது. அமெரிக்க வெற்றி என்று பீற்றிக் கொள்ளப்படும் வன்முறை நடவடிக்கைகளின் போது அமெரிக்காவின் பூர்வீகக்குடிகள் மீது ரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் நடத்தப்பட்ட பாவச்செயல்களுக்கு பல்லாயிரக்கணக்கான பொலிவிய மக்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் போப் பிரான்சிஸ். சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்கள், ஏழைகள், வேலையில்லாதோர், நிலங்களை இழந்தோர் ஆகியோருக்காக செயல்படும் பிரபல இயக்கங்களின் இரண்டாவது உலக மாநாட்டின் பிரதிநிதிகள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது அந்த உரை. முதலாவது மாநாடு வாடிகன் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொரேல்சும் கலந்து கொண்டார்.
         அப்போது பேசிய போப் பிரான்சிஸ், ''கூச்சநாச்சமின்றி லாபம் தேடும் முதலாளித்துவப் போக்கினை சாத்தானின் எச்சம்'' என்று விமர்சித்தார். இந்த விமர்சனத்தை நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இடதுசாரி கருத்துடைய பிஷப் ஒருவர் கூறியிருந்தார். அதனால் அன்றைய பொலிவிய சர்வாதிகாரிகளால் அவர் கொல்லப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது. போப் பிரான்சிஸ் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் சாந்தா குரூஸ் செல்லும் வழியில் அந்த பிஷப் கொல்லப்பட்ட இடத்தில் பிரார்த்தனை செய்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இடதுசாரி சார்புடைய மதகுருக்கள் ஓரங்கட்டப்படுவதாக ஒரு கருத்தோட்டம் நிலவி வருவதை சமனப்படுத்தும் முயற்சியாக இவ்வாறு பிரார்த்தனை செய்தார் என்றும் மேற்கத்திய ஊடகங்கள் எழுதின.வளரும் நாடுகளுக்கு மலிவான விலையில் உழைப்பையும், மூலப்பொருட்களையும் வழங்கும் நாடுகளாக ஏழை நாடுகளை மாற்றக்கூடாது என்றும் அவர் தன் உரையில் சுட்டிக்காட்டினார். சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதன் மூலம் புதிய காலனியாதிக்க நடைமுறையைத் திணிக்க முதலாளித்துவ முகாம்கள் (ஐரோப்பிய ஒன்றியம், ஐ.எம்.எப்., டபிள்யு.டி.ஓ. போன்ற அமைப்புகள்) முயன்று வருவதை அவர் கண்டனம் செய்தார். முதலாளித்துவத்தின் உடும்புப்பிடியில் இருந்து பூமித்தாயைப் பாதுகாக்கும் பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்றும் அதற்கான கால அவகாசம் குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொறுத்துக் கொள்ள முடியாதுதற்போதைய முதலாளித்துவ அமைப்பை நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. விவசாயிகள், தொழிலாளிகள், பல்வேறு சமுதாயங்கள் இந்த அமைப்பை பொறுத்துக் கொள்ள மறுத்து வருகின்றனர். நாம் தாயாகக் கருதும் பூமியும் இந்த அமைப்பை பொறுத்துக் கொள்ள மறுக்கிறது என்ற போப், சர்வதேச நிதி அமைப்புகளையும் விட்டு வைக்கவில்லை. சர்வதேச நிதியம் மற்றும் சில வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி உதவி கொள்கைகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.மக்களின் ஆளுமையை அவர்களுடைய கையில் இருந்து பறிப்பதற்கு எந்தவொரு சக்திக்கும் உரிமை கிடையாது. அவை அந்த உரிமையைத் தங்களதாக்கிக் கொள்ளும் போதெல்லாம் காலனியாதிக்கத்தின் புதிய வடிவம் தோன்றுவதை நாம் காண்கிறோம். இவை சமாதானமும், நேர்மையும் உருவாகும் வாய்ப்புக்கு குந்தகம் விளைவிக்கின்றன என்றும் அவர் கூறினார். புதிய காலனி அமைப்பு கார்ப்பரேட் நிறுவனங்களும், கடன் அமைப்புகளும், பல்வேறு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களும், உழைக்கும் மக்கள், ஏழை மக்களின்அடி வயிற்றை இறுக்கிக் கட்டும்பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் திணிப்பு ஆகிய வடிவங்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். தொழிற்சங்கங்களை அவர் நியாயப்படுத்தினார். அத்துடன் வேலைகளை உருவாக்கும் கூட்டுறவு சொசைட்டிகளை அமைக்கும் ஏழை மக்களையும் அவர் பாராட்டினார். 
          ''மூலதனம் ஒரு தெய்வமாக மாறினால், மக்களின் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறினால், பணத்தின் மீதான பேராசை ஒட்டு மொத்த சமூகப்பொருளாதார அமைப்பின் தலைமைக்கு வந்தால், சமுதாயம் அழிக்கப்படும். இது மனிதர்களை தண்டிப்பதுடன், அவர்களை அடிமைகளாக மாற்றி விடும். மனித சகோதரத்துவத்தை ஒழித்து விடும். மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்திவிடும். நம்முடைய பொது வீடான பூமியையும் அது அபாயத்தில் ஆழ்த்தி விடும்'' என்று அவர் எச்சரித்தார்.

கட்டுரை : தாஸ் 

நன்றி : தீக்கதிர் 

செவ்வாய், 21 அக்டோபர், 2014

பொலிவியாவைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் மோடி...!


கட்டுரையாளர் : வே. வசந்திதேவி, கல்வியாளர்,      
                   முன்னாள் துணைவேந்தர்,                        
                   மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்             

முதலாளித்துவத்துக்கு எதிரான போரில் பொலிவியாவைப் பின்பற்றுமா உலகம்?          

           லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் சென்ற வாரம் நடந்த அதிபர் தேர்தலில் ஈவோ மொராலிஸ் 60% வாக்குகள் பெற்று மூன்றாம் முறையாக அமோக வெற்றி பெற்றிருக்கிறார். ஈவோ மொராலிஸ் பொலிவியாவின் பெரும்பான்மையான, ஆனால் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களிலிருந்து தோன்றிய முதல் அதிபர். பல காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியமும், பெருநிறுவன அசுரர்களும் பொலிவியாவைக் கொடிய சுரண்டலுக்கு உள்ளாக்கி, தங்கள் கைப்பாவை அரசுகள் மூலம் நாட்டை ஆண்டுகொண்டிருந்தனர். அந்த சகாப்தத்தை 2005-ல் முடிவுக்குக் கொண்டுவந்து, பெரும் மக்கள் ஆதரவுடன் மொராலிஸும், அவர் தலைமையிலான சோஷலிஸத்தை நோக்கிய இயக்கமும் வெற்றி கண்டன.
         முந்தைய இருண்ட சகாப்தத்தில் பொலிவிய மக்கள் கொடும் இழப்புகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் உள்ளானார்கள். அனைத்து வளங்களும் பெரும் முதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டன. நவதாராளமயம் (நியோலிபரலிஸம்) தலைவிரித் தாடியது. சந்தையின் மகிமை தாரக மந்திரமாக ஓதப்பட்டது. தண்ணீர் முதற்கொண்டு அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டன. ஏழ்மையும் கொள்ளையும் எல்லை மீறியபோது, மக்கள் இயக்கங்கள் வெடித்துக் கிளம்பின. தண்ணீருக்கான போராட்டம், எரிவாயுவைக் காப்பதற்கான போராட்டம் என்று நாடு கொதித்தது. அந்தக் கொந்தளிப்பின் குழந்தையாக, அதன் தலைவராக மொராலிஸ் எழுந்தார்
         
2009-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் பிரகடனப் படுத்தப்பட்டது. அதில் இந்தியாவையும், மற்ற பல நாடுகளையும் ஆட்டிப்படைக்கும் சித்தாந்தமான நவதாராளமயம் கடுமையாக எதிர்க்கப்பட்டு, பொருளா தார நிர்வாகத்தில் அரசுக்குத் தலைமை ஸ்தானம் அளிக்கப்பட்டது. சமூக, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வலியுறுத்தப்பட்டன. ஏழ்மை ஒழிப்புக்கான திட்டங்கள் முன்னுரிமை பெற்றன.
              
மக்களுக்காகத்தான் நாடு

                 கடும் ஏழ்மையிலும், எழுத்தறிவின்மையிலும் ஆழ்ந்து கிடந்த நாடு பொலிவியா. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஏழ்மை ஒழிப்பை முன்னிறுத்தி, வியத்தகு வளர்ச்சியையும், அனைத்து மக்களும் நலனடையும் வகையிலான ஜனநாயகத்தையும் நிறுவி அந்த நாடு வெற்றி கண்டிருக்கிறது. சோஷலிஸத்தை நோக்கித் திரும்பிய புதிய எழுச்சிப் பாதையினால்தான் இந்த வரலாற்றுச் சாதனை சாத்தியமாயிற்று. மொராலிஸின் ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2006-ல் இருந்ததைவிட, 2012-ல் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. அதனினும் மகத்தானது ஏழ்மை ஒழிப்பில் அதன் சாதனை. ஏற்றத்தாழ்வுகளும் குறைந்து வருகின்றன. சமுதாய ஏணியின் உச்சியில் இருந்த 20 சதவீதத்தினரின் கையில் இருந்த தேச வருமானம் குறைந்து, கீழ்த்தட்டில் உள்ள 20 சதவீதத்தினரின் பங்கு அதிகரித்திருக்கிறது. மிகுந்த ஏழ்மையில் வாடிய மக்களுக்கு நாட்டின் செல்வத்தின் கணிசமான பகுதியை மாற்றி அளிப்பதில் பொலிவியா வெற்றி கண்டிருக்கிறது என்று ஐநா சபையின் வளர்ச்சி அமைப்பு (யூ.என்.டி.பி.) பாராட்டுகிறது. பணவீக்கம் பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, லத்தீன் அமெரிக்காவிலேயே குறைந்த பணவீக்கம் உடைய நாடாக பொலிவியா மாறியிருக்கிறது.
          இந்தப் பொருளாதார வளர்ச்சியின் முதல் ஆயுத மாக அமைந்தது அரசுடமையாக்கும் கொள்கை. பொலிவியாவின் பெரும் வளமான இயற்கை எரிவாயு அதற்கு முன் அமெரிக்க, உள்ளூர் பெருமுதலாளிகளின் வசம் இருந்தது. அது 2006-லிருந்து படிப்படியாக அரசுடமையாக்கப்பட்டது. விளைவு: உற்பத்தி இரு மடங்குக்கும் அதிகமாயிற்று. தொடர்ந்து, இத்தாலிய முதலாளிகளின் கையிலிருந்த தொலைத்தொடர்பு சாதனத் தொழில், தகரம், துத்தநாகம் போன்றவற்றின் உற்பத்தி அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன.
           
ஏற்றம் பெறும் வாழ்க்கை

                அத்துடன், அடித்தட்டு மக்கள் அனைவரும் பயனடையும் பிரம்மாண்டமான நலத்திட்டங்கள் நிறை வேற்றப்பட்டன. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவ வசதிக்கும், பிரசவத்துக்குப் பின் தாய்-சேய் இருவர் நலனுக்குமான பண உதவி வழங்கியது; கல்விக்கான பெரும் நிதி ஒதுக்கீடு செய்தது; தோழமை நாடுகளான கியூபா, வெனிசுலாவின் உதவி யுடன், அனைத்துக் குழந்தைகளும் தரமான கல்வி பெறும் திட்டங்கள் உருவாக்கியது; 60 வயதுக்கு மேற்பட்டோருக்குக் கண்ணியமான ஓய்வூதியம் வழங்கியது ஆகியவை பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத முன்னேற்றத்தைக் கொண்டுவந்தன. சிறு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட நிலப் பட்டாக்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்தது. அதேபோல் பெண்களுக்கு பொலிவியாவில் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் பாராட்டியாக வேண்டும். நாடாளுமன்றத்தில் 28% பெண்கள்; செனட்டில் 47% பெண்கள்; அமைச்சரவையில் பாதி (10 பேர்) பெண்கள்; அதில் மூவர் பழங்குடியினர்.
 
முழு வேலையுடைமை

                 கல்விக்காக மொராலிஸ் மேற்கொண்ட இயக்கம் பெரும் வெற்றி கண்டிருக்கிறது. பொலிவியா எழுத்தறிவின்மையை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது என்று யுனெஸ்கோ அறிவித்திருக்கிறது. அரசு பிரம்மாண்டமான கட்டமைப்புத் திட்டங்களைப் பொதுத்துறையின் வழியாக மேற்கொண்டதன்மூலம் பொலிவியா அநேகமாக முழு வேலையுடைமையை அடைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. இது மக்கள் நலனுக்காகப் பெருமளவு செலவு செய்யும் அரசு, நமக்கெல்லாம் உபதேசம் செய்வதைப் போல் சிக்கனம் பிடிக்கும் அரசு அல்ல. இத்தனைக்குப் பின்னும், இன்று உலகிலேயே அதிக சதவீதம் நிதி சேமிப்பு கொண்ட நாடு என்று பன்னாட்டுச் செலா வணி நிதியம் (ஐ.எம்.எஃப்) பொலிவியாவுக்குச் சான்றிதழையும் பாராட்டுதலையும் வழங்கியிருக்கிறது. ஆனால், பொலிவிய அரசு அந்த அமைப்பைச் சந்தேகத்துடன் பார்த்து, இன்னும் அதிகமாகச் செலவழிக்கலாமோ என்று யோசித்துவருகிறது. இவை அனைத்துமாகச் சேர்ந்து, அரசு மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கிறது.

முதலாளித்துவ இந்தியா

                 இந்தியா இன்று கடைப்பிடிக்கும் பாதை இதற்கு எதிர்மறையானது என்பது சொல்லத் தேவையில்லை: கடைந்தெடுத்த நவதாராளமயம், அனைத்தும் தனியார் மயம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்றல், அந்நிய, உள்நாட்டுப் பெரும் முதலாளிகளின் தேவைக்கேற்ற கொள்கைகள், வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி, உலகிலேயே அதிக அளவில் தனியார்மயமாக்கப்பட்ட கல்வி, சுகாதார அமைப்புகள், அரசின் முதலீட்டையும், செலவையும் குறைக்கும் சிக்கனம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
            லத்தீன் அமெரிக்கா முழுவதையும் தன் உடும்புப் பிடியில் வைத்திருந்த அமெரிக்காவின் பெரும் எதிர்ப்புகளுக்கு இடையில்தான் பொலிவியாவின் சாதனைகள் சாத்தியமாகியிருக்கின்றன. சமீபத்தில் நடந்த தேர்தலிலும் மொராலிஸை எதிர்த்த வேட்பாளர், அமெரிக்காவின், பெரும் முதலாளிகளின் பிரதிநிதியாகத்தான் போட்டி யிட்டார். நாட்டின் பல வளங்களும் நிறுவனங்களும் இன்னும் பெரும் முதலாளிகளின் கையில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நாட்டின் ஊடகங்கள் இன்னும் வலதுசாரி சக்திகளான பெரும் முதலாளிகளின் கையில் தான் இருக்கிறது. அவையெல்லாம், மொராலிஸுக்கு எதிரான பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபடுகின்றன. ஆனால், பெருநிறுவன ஊடகங்கள் செய்யும் பொய்ப் பிரச்சாரத்துக்கு மக்கள் வீழ்ந்துவிடுவதில்லை.

கொடிய எதிரி

                    வட அமெரிக்க சாம்ராஜ்யத்தின் கொடும் கொலைப் பிடியிலிருந்தும், பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் பொருளாதார ஆதிக்கத்திலிருந்தும் தப்பியதால்தான், தன் நாட்டை உயர்த்த முடிந்தது என்று மொராலிஸ் கூறுகிறார். “முதலாளித்துவம் மனித சமுதாயத்தின், சுற்றுச்சூழலின், இந்த பூமியின் கொடிய எதிரி என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை” என்று மொராலிஸ் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும்.
          அத்துடன், பொலிவியாவின் மிகப் பெரும் பலம் லத்தீன் அமெரிக்க நாடுகள் சிலவற்றிடையே தோன்றி யிருக்கும் அற்புதமான ஒருமைப்பாடும் தோழமையும். இன்று கியூபா, வெனிசுலா, பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே, சிலி உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் இடதுசாரி புரட்சிப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றன. தங்களுக்குள்ளாக வலிமைமிக்கக் கூட்டு அமைப்பையும் அந்த நாடுகள் உருவாக்கியுள்ளன. அதன் ஒரு அத்தியாயம்தான் பொலிவியாவின் எழுச்சியும், மக்கள் ஆதரவு அரசியலும். மொராலிஸ் வணங்கும் முன்னோடிகள் கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவும் சே குவேராவும், சமீபத்தில் மறைந்த வெனிசுலாவின் சாவேஸும்.

புகழ் பெற்ற அரசியல் சிந்தனையாளரும், உலக ஆன்மாவின் குரல் என்று போற்றப்படுபவருமான நோம் சாம்ஸ்கி சொல்கிறார், “பொலிவியா தனது சிறந்த முன்னுதாரணத்தினால், உலக முதலாளித்துவத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகியிருக்கிறது.” உலக முதலாளித் துவத்துக்கு அச்சுறுத்தல்; நம்மைப் போன்ற நாடுகளின் மக்களுக்கு வழிகாட்டி..

நன்றி : தி இந்து - தமிழ் 

செவ்வாய், 6 மே, 2014

மார்க்ஸ் என்றும் தேவைப்படுகிறார்...!

கட்டுரையாளர் : - த. நீதிராஜன்                                                                    

              டார்வின் கருத்துகள் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிபற்றி விவாதித்ததைப் போல மார்க்ஸியக் கருத்துகள் மனிதச் சமூகத்தின் வளர்ச்சிப்போக்கு பற்றிய விதிகளை நம்மிடம் முன்மொழிந்துள்ளன. 

மார்க்ஸிய போதனை                      
 
              மார்க்ஸிய போதனை 49 தொகுதிகளாக விரிந்திருக்கிறது. (மூலதனம் நூலின் நான்காம் தொகுதியையும் சேர்த்தால் 50 தொகுதிகள்). கடிதங்கள் மட்டுமே 12 தொகுதிகள். அவற்றில் மூன்று தொகுதிகள் எங்கல்ஸ் மட்டுமே எழுதியவை; ஒன்பது தொகுதிகள் மார்க்ஸும், எங்கல்ஸும் சேர்ந்து எழுதிய கடிதங்கள். மார்க்ஸும் எங்கல்ஸும் இணைந்து எழுதிய நூல்களும் கட்டுரைகளும் கொண்ட தொகுதிகள் 21, அதில் மார்க்ஸ் மட்டுமே தனித்து எழுதிய நூல்களின் தொகுதிகள் 12. எங்கல்ஸ் மட்டுமே தனித்து எழுதிய தொகுதிகள் நான்கு.
           மார்க்ஸியத்தின் மிக முக்கியமான பகுதி ‘மூலதனம்'. அதன் அரசியல் பொருளாதாரக் கருத்துகள் முதலாளித்துவ உற்பத்தி முறையின் இதயத்தைக் கிழித்துள்ளன. மனித இனம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு எது வேர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. இதுதான் மார்க்ஸிய போதனையின் பிரம்மாண்டம். 

தீர்க்கதரிசனம்                     
 
             இன்று பொருளாதார மந்தம் என்று நம்மால் அழைக்கப்படுவதை மார்க்ஸ் அன்று நெருக்கடி என்று அழைத்தார். சமீபத்தில் 2007-2008-ல் தொடங்கிய மந்தநிலையைக் கூட எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தீவிரத்தையும், அது நீடிக்கும் கால அளவையும், உலக அளவில் அது ஏற்படுத்திய பாதிப்பையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் மந்தநிலை என்ற பெயரை விட மார்க்ஸ் அழைத்த நெருக்கடி என்ற பெயர்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். பொருளாதார நெருக்கடிகள் திரும்பத் திரும்ப நிகழ்வது பற்றி ‘மூலதனம்' புத்தகத்தில் மார்க்ஸ் நிறைய விளக்கங்களை அளிக்கிறார். அவர் ‘நியூயார்க் டிரிப்யூன்' பத்திரிகையின் பொருளாதாரச் செய்தியாளராக 1850-களில் இருந்தபோது தந்த விளக்கம் மிகவும் ஆச்சரியமானது.
         உலகின் முதல் பொருளாதார நெருக்கடியாகக் கருதப்படுகிற 1857- பொருளாதார நெருக்கடியைப் பற்றி அவர் விவாதிக்கிறார். ‘கிரெடிட் மொபைலைர்' என்ற வங்கிதான் உலகின் முதல் ‘முதலீட்டு வங்கி'. அந்த வங்கியை மையப்படுத்தியே மார்க்ஸ் விவாதிக்கிறார். அந்த வங்கி தனது முதலீட்டை விட 10 மடங்கு கடன்பெறுவதற்கு அந்த வங்கியின் சட்டதிட்டங்கள் அனுமதித்ததைக் கண்டு மார்க்ஸ் அதிர்ந்துபோகிறார். அந்த வங்கி தனது நிதியாதாரத்தையெல்லாம் பங்குகள் வாங்குவதற்கும் பிரான்சின் ரயில் பாதைத் திட்டங்கள், பெரும் தொழிற்சாலைகள் போன்ற பெரும் திட்டங்களுக்கு நிதியுதவி செய்து உற்பத்தியைப் பெருக்குவதற்கும் பயன்படுத்தியது. கடைசியில் மிதமிஞ்சிய உற்பத்தி கிடைத்தது. ஆனால், அந்த உற்பத்தியைக் கொள்வாரில்லை. விளைவு அந்த வங்கியின் பங்குகள் அதலபாதாளத்துக்கு வீழ்ந்தன. கடனையும் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு அந்த வங்கி ஆளானது. அந்த வங்கியை அப்படியே தற்போதைய பொருளாதார நெருக்கடியில் முதலில் பலியான ‘லேமன் பிரதர்ஸ்’ உள்ளிட்ட வங்கிகளுடன் பொருத்திப் பாருங்கள். மார்க்ஸ் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பது புரியும்.
 
மார்க்ஸியத்தின் தனித்தன்மை                     
 
            முதலாளித்துவ உற்பத்தி முறையை இயக்கும் விதிகளை இத்தகைய அசாதாரண ஆற்றலோடு மார்க்ஸ் அம்பலப்படுத்தினார். அதோடு மனித இனத்தின் வளர்ச்சிப் போக்கையும் தெளிவாக்கினார். மனிதச் சமூகம் எங்கிருந்து துவங்கி, எங்கே போய்க்கொண்டிருக்கிறது எனும் விவாதத்தை மார்க்ஸ் மனித இனத்தின் முன் வைத்தார். இதனால் மனிதச் சமூக வளர்ச்சியின் எந்தக் கட்டத்தில் நிற்கிறோம் என்பதை அந்தந்த தேசங்களின் உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் பிறந்தன.
         முதலாளித்துவ உற்பத்தி முறை வளராத நாடுகளின் மக்களையும்கூட மார்க்ஸின் விஞ்ஞான சோஷலிஸம் மற்றும் அரசியல் பொருளாதாரக் கருத்துகள் கவர்ந்தன. மார்க்ஸியம் எனும் விமானம் கிடைத்த பிறகு, பிற தத்துவங்கள் எனும் மாட்டு வண்டிகளில் பயணம் செய்ய நிலபிரபுத்துவ சமூக மக்களும் மறுத்தனர். தனியொரு நாட்டில் சோஷலிஸப் புரட்சி வராது என்றும், முதலாளித்துவம் பழுத்துக் கனிந்த இங்கிலாந்து போன்ற நாடுகளில்தான் சோஷலிஸம் ஏற்படும் என்றும் இருந்த தர்க்கரீதியான எதிர்பார்ப்புகளையெல்லாம் மக்கள் தகர்த்தெறிந்தனர். குருவுக்கு மிஞ்சிய சிஷ்யர்களாக ரஷ்ய மக்கள் மாறினார்கள். உலக சாதனை புரிந்த விளையாட்டு வீரன் தன் சாதனையைத் தானே முறியடித்துக்கொள்வதுபோல மார்க்ஸியம் தன்னைத் தானே முறியடித்துக்கொண்டு முன்னேறியது.
          மார்க்ஸியத்தைக் கைக்கொண்டு வேகமாக முன்னேறுவதற்கான மக்களின் முன்முயற்சிகளும், அவற்றைத் தடுப்பதற்கான ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்புகளுமாக உலகம் மார்க்ஸுக்குப் பிறகு பரபரப்பாக மாறியது. மனித இனத்தைப் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறும்படி உந்தித்தள்ளியதுதான் மார்க்ஸியத்தின் மாபெரும் தனித்தன்மையாக இருக்கிறது.
            மூலதனம் தவிர்த்த மார்க்ஸியத்தின் மற்ற படைப்புகள் பழங்காலத் தத்துவங்களை விமர்சிக்கின்றன. அவர்கள் வாழ்ந்த காலத்தின் உழைக்கும் மக்களின் வாழ்நிலை பற்றிய அக்கறையுடன் கூடிய ஆய்வுகள், கம்யூனிஸ விஞ்ஞானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள், மனிதத் துன்பங்களுக்கெல்லாம் நிரந்தரமான தீர்வை உருவாக்குவதற்கான கோட்பாடுகள், பெண்ணுரிமை கருத்துகள், இயற்கையின் இயங்கியல் தன்மையை நிலைநாட்டல், பல நாடுகளில் நடந்த மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு ஆகியவையும் உள்ளன.
             மார்க்ஸியத்தின் ஆற்றல் மிக்க தலையீடு மனித குலம் இனி செல்ல வேண்டிய திசையைத் தீர்மானித்துள்ளது. எங்கல்ஸ் ஒருமுறை இப்படிச் சொன்னார்: “மார்க்ஸ் பிறக்காவிட்டால்கூட மார்க்ஸ் வெளிப்படுத்திய கருத்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். ஆனால் நீண்ட காலம் ஆகியிருக்கும். கடின உழைப்பால் தனது கருத்தை முழுமைத் தன்மையோடு கட்டி எழுப்பும் தகுதி மார்க்ஸுக்குத்தான் இருந்தது.” 

மறுபிறவி முத்தம்                      
 
             மார்க்ஸ் தனது மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்களில், ஜென்னியை முத்தமிடும்போது தான் மறுபடி மறுபடி பிறப்பெடுத்து பிராமணர்களின் மறுபிறவிக் கொள்கையை உணர்வதாகக் கூறுகிறார். இதைத் தவிர இந்தியச் சமூகத்தின் சாதியத் தனித்தன்மையைக் கூர்ந்து உற்றுநோக்கக் காலம் அவருக்கு உரிய நேரம் அளிக்கவில்லை. சாதியும் வர்க்கமும் இணைந்த இந்தியச் சமூக அமைப்பு பலவிதமான மார்க்ஸிய முன்முயற்சிகளுக்கான ஆய்வகமாக இருக்கிறது. சாதியத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் வர்க்க உணர்வுக்குள் வழுக்கிக்கொண்டு போய்விடலாம் என்ற முயற்சிகளுக்கு அது இடம்தர மறுக்கிறது. நிலபிரபுத்துவச் சமூகத்தை அழித்து அதன் சாம்பலில் முதலாளித்துவச் சமூகம் உருவாகும் என்ற பொதுவான மார்க்ஸிய தீர்க்கதரிசனத்தை இந்தியச் சமூகம் பொய்யாக்கியுள்ளது.
          ஆப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகமான பழங்குடிகள் வாழும் இந்தியாவில், தலித் மக்களும் நாடோடி மக்களும் கோடிக் கணக்கில் வாழும் இந்தியாவில், அவர்களின் இதயங்களுக்கு உள்ளே இன்னமும் போதுமான அளவு மார்க்சியம் போகவில்லை என்பது இந்திய மக்களின் ஒட்டுமொத்த விடுதலையைத் தள்ளிப்போடுகிறது.
              மார்க்ஸியம் என்றால் மக்கள் மீதான நிபந்தனையற்ற நேசம். துன்பங்களிலிருந்து கடைசி மனிதனையும் விடுவிப்பதற்கான உயர்ந்தபட்ச வீரம். மக்களுக்காக அனைத்தையும் இழக்கும் தியாகம். இவை ஏற்கெனவே பெருமளவில் மார்க்ஸியத்தின் பெயரால் செய்யப் பட்டிருந்தாலும் மக்களின் தேவையோ எங்கோ இருக்கிறது. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள், அடிமைத்தனம், பிற்போக்குத் தன்மைகள் போன்றவை இருக்கும்வரை மார்க்ஸ் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். 
நன்றி :
Return to frontpage