காமன்வெல்த் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமன்வெல்த் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 நவம்பர், 2013

இந்திய வெளியுறவு கொள்கையில் தலையிடும் மாநிலக்கட்சிகளின் அதிகப்பிரசங்கிதனம்....!

        
         உள்நாட்டு பிரிவினைப்போர் முடிவு பெற்று, (மயான)அமைதியான சூழலில் 53 நாடுகளின் தலைவர்களை அழைத்து காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பின் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்துவரும் இலங்கை அரசு, மாநாட்டின் தனி சிறப்பு மற்றும் வெற்றியின் மூலம் உலக நாடுகளின் பாராட்டுகளைப் பெற்று உலக அரங்கில் இலங்கையை நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு முயற்சிகள்  செய்து வரும் இந்த சூழ்நிலையில், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு  மட்டும் அமைதி குலைந்து ஒரே பரபரப்பாக காணப்படுகிறது.
            இலங்கையில் ''காமன்வெல்த் மாநாடு'' என்று எப்போது அறிவித்தார்களோ, அப்போதிலிருந்து நவக்கிரகங்களாக - திசைக்கு ஒன்றாக பிரிந்துகிடக்கும் தமிழக திராவிடக்கட்சிகள் ''ஒற்றுமையுடன்'' ஒரேக்குரலாக ''கோஷ்டிகானம்'' பாட ஆரம்பித்தார்கள். ''தமிழர்களை கொன்று குவித்த இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது'' என்று ஒரு கட்சியும், ''ராஜபட்சே நடத்தும் மாநாட்டை இந்தியா கலந்துகொள்ளாது புறக்கணிக்கவேண்டும்'' என்று வேறொரு கட்சியும், ''இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஒரு துரும்பும் நகரக்கூடாது'' என்று மற்றொரு கட்சியும், இன்னுமொரு படி மேலேபோய் ''மாநாட்டை இலங்கையில் நடத்தாது தடை செய்யவேண்டும்'' என்று இன்னொரு கட்சியும் என இலங்கையை தனிமைப்படுத்த வேண்டும் என்று ஒரே நோக்கத்தில் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தின. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அதிமுக அரசு' இலங்கை மாநாட்டில் மத்திய அரசு கலந்துகொள்ளக்கூடாது என்பதையே மிரட்டலான தொணியில்  தமிழக சட்டமன்றத்தில் இரண்டு முறை  தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. இந்த விஷயத்தில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், அனைத்து திராவிடக்கட்சிகளும் கட்சி வேறுபாடு இல்லாமல் ''என்றுமில்லாத'' ஒற்றுமையை காட்டுகின்றன என்பது தான்.
        ஆனால்  இலங்கை அரசுக்கு எதிரான இந்த கோஷ்டிகானமும், ஒற்றுமையும், போராட்டங்களும், தீர்மானங்களும்  எதற்காக என்பது தமிழக மக்களுக்கு தெரியாமல் இல்லை. இது தங்கள்  கையில் உள்ள வாக்குச்சீட்டை குறிவைத்து நடத்தப்படும் ''மாயாஜாலம்'' தான் என்பதை தமிழக மக்கள் புரிந்து தான் வைத்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் மீது பாசத்தைப் பொழிவதில் தமிழக திராவிடக்கட்சிகளுக்குத் தான் எத்தனைப் போட்டி. இதைப்பார்க்கும் போது, ''அவ என்ன சொல்றது... நான் சொல்லுறேன்... சாப்பாடு எதுவும் இல்லை... வேற வீட்டைப்பாரு'', என்ற மாமியார், மருமகள், பிச்சைக்காரன் கதை தான் நினைவிற்கு வருகிறது.
          இது ஒரு புறமிருக்க. இன்னொரு பக்கம், இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்பது இலங்கை என்ற ஒரு தனி நாடு மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. அந்த கூட்டமைப்பில் உள்ள 53 நாடுகளும் சம்பந்தப்பட்டது. அத்தனை நாடுகளும் கலந்துகொள்ளும் மாநாட்டை இந்தியா புறக்கணிக்குமானால், உலக அரங்கில் இந்தியா தனிமைப்பட்டுவிடும். மற்றைய நாடுகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக திகழும் நமது நாட்டின் ''வெளியுறவுக் கொள்கை'' என்பது கேள்விக்குறியாகி விடும். பாதிப்புக்குள்ளாகும்.
இந்திய நாட்டின் வெளியுறவுக்கொள்கை என்பது பிரதமரோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. முறையான வெளியுறவுக்கொள்கையை வகுத்த இந்திய அரசியல் சாசனம் மற்றும்  பாராளுமன்றம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டது. உள்ளூர் அரசியலுக்காக தமிழக திராவிடக்கட்சிகளும், தமிழக அரசும் நடத்தும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் போராட்டங்களும், நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் ஒட்டுமொத்த இந்திய வெளியுறவுக்கொள்கைகளுக்கும், அரசியல் சாசனத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் எதிரானது மட்டுமல்ல ஒரு போதும் ஏற்கத்தக்கதுமல்ல.
          பக்கத்து நாடுகளுடனான உறவை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை வைப்பதும் சிறுபிள்ளைத்தனமாகும். நம் நாட்டு மக்கள் அமைதியாக நிம்மதியாக வாழவேண்டும் என்றால் பக்கத்து நாடுகளுடானான உறவையும், நட்பையும் பேணவேண்டும். வளர்க்க வேண்டும். மேம்படுத்தவேண்டும். அது தான் தலைசிறந்த வெளியுறவுக்கொள்கையாக இருக்க முடியும். அதுமட்டுமல்ல அது தான் உண்மையான இராஜதந்திரம் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
           இனிமேலாவது சொந்த இலாபத்திற்காக - ஓட்டு அரசியலுக்காக இது போன்ற ''கோரிக்கைகளை'' வைத்து முழங்குவதை இங்குள்ள திராவிடக்கட்சிகள் கைவிடவேண்டும். அது தான் ஒட்டுமொத்த தேச அமைதிக்கு நல்லது.

வெள்ளி, 25 அக்டோபர், 2013

தமிழக அரசியல்வாதிகளே....! ஓட்டுக்காக இலங்கை தமிழர்களின் அமைதியை மீண்டும் கெடுத்துவிடாதீர்கள்....!

           
           பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உலகத்தில் உள்ள பலநாடுகளை காலனி ஆதிக்கம் புரிந்து கோலோச்சியிருந்த காலத்தில் அவர்கள்  ஆட்சி செய்த நாடுகளின் கூட்டமைப்பே காமன்வெல்த் அமைப்பாக கருதப்பட்டது.  சோவியத் யூனியன் பின்னடைவிற்குப் பிறகு உலக நாடுகளை தன் கைக்குள் கொண்டுவர துடித்த அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைத்தூக்க ஆரம்பித்தவுடன் அமெரிக்காவின் சுரண்டலுக்கு ஒத்துப்போகிற நாடுகள் ஒரு குழுவாகவும், அதே சமயத்தில் சுரண்டலுக்கு எதிரான நாடுகள் ஒரு குழுவாகவும் என வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பு ஜி -5, வளரும் நாடுகளின் கூட்டமைப்பு ஜி-20, தெற்காசிய நாடுகளின் அமைப்பு SAARC., எண்ணெய் வள நாடுகளின் அமைப்பு OPEC., தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பு ASEAN போன்ற பல புதிய புதிய அமைப்புகள் நாடுகளுக்கிடையேயான ராஜ்ஜிய உறவுகளை மேம்படுத்துதல் என்ற பெயரில் மற்ற நாடுகளின் வளங்களையும், வளமான பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்கும், பாதுகாப்பு ஒத்துழைப்பு என்ற பெயரில் ஆயுதங்களை விற்பதற்கும்,  அமெரிக்காவின் ஏற்றுமதியை பலப்படுத்துவதற்கும் தோற்றுவிக்கப்பட்டவுடன் ''காமன்வெல்த்'' போன்ற பழைய அமைப்புகள் செயலற்றுப்போய் காலாவதியாகிவிட்டன. இருந்தாலும் ''பழைய நெனப்புடா பேராண்டி'' என்று உலக வரைபடத்தில் விழுந்துவிட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சுவடுகள் மறைந்துவிடாமல் இருப்பதற்காகவும், உலகத்திற்கு அவ்வப்போது நினைவுப்படுத்துவதற்காகவும் அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அப்படி ஒரு ''சம்பிரதாயமான'' மாநாடாக தான் அடுத்த மாதம் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த மாநாடு ஒன்றும் உருப்படியாக எதையும் சாதிக்கப்போவதில்லை என்பது தான் உண்மை. பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கூடிக் கலையும் சம்பிரதாயமான மாநாடாகத் தான் இருக்கப்போகிறது. இப்படிப்பட்ட இந்த மாநாடு என்பது இந்த முறை இலங்கையில் நடக்கப்போகிறது என்பதால் தமிழக அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக அதை கடந்த பல மாதங்களாக அரசியலாக்கி வருகிறார்கள். இவர்கள்   இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இலங்கையை வைத்து பிழைப்பு நடத்துவார்கள் என்று தெரியவில்லை.
          இந்த முறை இந்த மாநாடு என்பது இலங்கையில் நடப்பது என்பது இந்தியாவிற்கு சாதகமானதாகவே நாம் கருத வேண்டும். ஏனென்றால் கடந்த காலங்களில் நம் சொந்தங்களான தமிழர்களை கொடூரமான முறையில் கொன்று குவித்த இலங்கை அரசின் செயல்பாடுகளை நேரில் இடித்துரைத்து கண்டிப்பதற்கும், மிச்சமிருக்கக்கூடிய தமிழர்களின் வாழ்வாதரங்களை மீட்பதற்கும், அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக மாற்றுவதற்கும்   நல்லதொரு வழிகாட்டுதல்களையும், திட்டங்களையும் உறுதி செய்வதற்கும் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு நம் பிரதமர் கலந்து கொள்வது தான் சிறந்த பொறுப்புள்ள செயலாக இருக்கமுடியும். இலங்கைத் தமிழர்களைப் பொருத்தவரையில் அவர்கள் இழந்த உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் மீண்டும் பெறும் வரை இந்திய அரசின் தலையீடு என்பது மிகவும் அவசியமாகிறது. ஏற்கனவே அங்கு தமிழர்கள் வாழும் பகுதியில் இரயில் பாதை அமைப்பது, சாலை போடுவது, வீடுகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுவது போன்ற வளர்ச்சிக்கான கட்டுமானப்பணிகளை செய்துவருகிறது. ராஜ்ய ரீதியாக தலையிட்டு கண்காணித்து வருகிறது. அரசு முறையாக அவ்வப்போது இரண்டு நாட்டுத் தலைவர்களும் நான்கு சுவருக்குள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனைகளை பற்றியும், நடந்து வரும் பணிகள் பற்றியும் நான்கு பேருக்கு மத்தியில் பேசுவது என்பது தான் பொருத்தமானதாகவும், பொறுப்புள்ளதாகவும் இருக்கும். அதைவிடுத்து கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது என்பது பொறுப்பை தட்டிக்கழிப்பது போன்றதாகவும், இந்திய அரசின் அக்கறையின்மையை காட்டுவதாகவும் அமைந்துவிடும். அப்படியாகத்தான் அதில் கலந்துகொள்ளும் மற்றைய நாடுகளும் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்துவிடும். அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட பொறுப்பற்ற செயலினால், இந்தியா அல்லது இந்திய அரசு தனிமைப்படுத்தப்பட்டுவிடும் ஆபத்தும், இலங்கை தமிழர் பிரச்சனையில் மூன்றாம் நாடுகளின் தலையீடு என்பது பலம்பெற்றுவிடும் ஆபத்தும் உள்ளன  என்பதையும் இங்குள்ள அரசியல் கட்சிகள் உணரவேண்டும். மேலும், தமிழக கட்சிகளின் விருப்பப்படி இந்திய அரசு  தலையீடு இல்லாமல் ஒதுங்கிக்கொண்டால், தமிழர்கள் ஆட்சி செய்யும் மாகாண சபைக்கான அதிகாரம் மற்றும் நிதி பகிர்வு, தமிழர்கள் வாழும் குடியிருப்புப்பகுதிகளில் இலங்கை இராணுவ ரோந்து, 13-ஆவது அரசியல் அமைப்பு தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு போன்ற தான்தோன்றித்தனமான வேலைகளை இலங்கை அரசு தைரியமாக செய்வதற்கு வழிவகுத்துவிடும். எளிய வாய்ப்பாக அமைந்துவிடும். 
          இலங்கை நாடு என்பது நமக்கு அருகிலேயே இருக்கின்ற ஒரு சிறிய நாடு. இலக்கியங்களிலும், அரசியலிலும், கலாச்சாரம் - பண்பாடுகளிலும், பொருளாதாரத்திலும், ராஜ்ஜிய உறவுகளிலும் இலங்கை நாடு என்பது நம்மோடு கலந்துவிட்ட ஒரு நாடு. இன்னும் இங்குள்ள கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காகவும், ஓட்டுக்காகவும் முடிந்துபோன விஷயங்களையே பேசிக்கொண்டிராமல், இப்போது இலங்கையில் இத்தனை ஆண்டுகளாக வாழ்வாதாரத்தையும்,  நிம்மதியையும், அமைதியையும் இழந்துவிட்ட மிச்சமுள்ள  தமிழர்களின் எதிர்காலம் செழிப்பதற்கும், எப்போதும் போல் கல்வி, சுகாதாரம் எல்லோருக்கும் கிடைப்பதற்கும்,  மற்ற மக்களைப்போல் அவர்களும் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்க்கை நடத்துவதற்கும் வழிகாட்டுவதும், நிதியுதவி செய்வதும், அதை நேரில் கண்காணிப்பதுமான நம்முடைய பொறுப்புள்ள பணிகளே இலங்கைத் தமிழர்களின் இன்றைய தேவையும் அவசியமுமாகும். உண்மையிலேயே  இதைத்தான் அங்குள்ள தமிழர்கள் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார்கள்.
           அதைவிட்டுவிட்டு, இலங்கையில் தமிழர் பகுதியில் அமைந்திருக்கும் தமிழர்களால் ஒருமித்து தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஸ்வரன் தலைமையிலான அரசிற்கும், அங்குள்ள தமிழ்  மக்களுக்கும் தர்மசங்கடம் உண்டுபண்ணும் வகையில் இங்குள்ள சிறுசிறு கட்சிகளும், செல்வி. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசும் மற்றும் கருணாநிதி, வைகோ, நெடுமாறன் போன்ற தலைவர்களும் அரசியல் ஆதாயத்திற்காக பொறுப்பில்லாமல் செயல்படுவது என்பது சிறப்புடையதாக அமையாது. அதுமட்டுமல்லாது இவர்களின் இந்தப் போக்கு என்பது இலங்கை அரசுக்கு கோபமூட்டும் செயலாக மாறிவிடும். அதனால் அமைதியை விரும்பும் அங்குள்ள தமிழர்களுக்கு தான் சங்கடமாக அமைந்துவிடும் என்பதை இவர்கள் உணரவேண்டும். இவர்கள் தமிழகத்தில் செய்யும் அரசியல் ''வேலைகளால்'' அங்குள்ள தமிழர்களுக்கு நியாயமாகவும் காலத்தோடும் கிடைக்கவேண்டிய உரிமைகளும், வாழ்வாதாரங்களும் அவர்களை சென்றடைவதற்கு காலதாமதமாகும் என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு இங்குள்ள தமிழகக் கட்சிகள் புரிந்து செயல்படவேண்டும்.
           அதுமட்டுமல்ல ''இங்கே எங்களுக்கான மாகாண அரசை விக்னேஸ்வரன் தலைமையில் நாங்கள் முறையாக தேர்ந்தெடுத்திருக்கிறோம்.  அந்த மாகாண அரசு என்பது இலங்கை அரசின் ஒத்துழைப்போடு தான் ஆட்சி நடத்தி, எங்களுக்கான வளர்ச்சிப்பணிகளையும், திட்டங்களையும் நிறைவேற்றிடவேண்டும். இன்னும் ''பழங்கதைகளைப்'' பேசி எங்கள் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் வீணாக்கிவிடாதீர்கள். நாங்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழவிடுங்கள்''  என்று இலங்கைத் தமிழர்கள் குரல் கொடுப்பது இங்குள்ள கட்சிகளுக்கு கேட்கவில்லையா...?