பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உலகத்தில் உள்ள பலநாடுகளை காலனி
ஆதிக்கம் புரிந்து கோலோச்சியிருந்த காலத்தில் அவர்கள் ஆட்சி செய்த
நாடுகளின் கூட்டமைப்பே காமன்வெல்த் அமைப்பாக கருதப்பட்டது. சோவியத்
யூனியன் பின்னடைவிற்குப் பிறகு உலக நாடுகளை தன் கைக்குள் கொண்டுவர துடித்த
அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைத்தூக்க ஆரம்பித்தவுடன் அமெரிக்காவின்
சுரண்டலுக்கு ஒத்துப்போகிற நாடுகள் ஒரு குழுவாகவும், அதே சமயத்தில்
சுரண்டலுக்கு எதிரான நாடுகள் ஒரு குழுவாகவும் என வளர்ந்த நாடுகளின்
கூட்டமைப்பு ஜி -5, வளரும் நாடுகளின் கூட்டமைப்பு ஜி-20, தெற்காசிய
நாடுகளின் அமைப்பு SAARC., எண்ணெய் வள நாடுகளின் அமைப்பு OPEC.,
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பு ASEAN போன்ற பல புதிய புதிய அமைப்புகள்
நாடுகளுக்கிடையேயான ராஜ்ஜிய உறவுகளை மேம்படுத்துதல் என்ற பெயரில் மற்ற
நாடுகளின் வளங்களையும், வளமான பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்கும்,
பாதுகாப்பு ஒத்துழைப்பு என்ற பெயரில் ஆயுதங்களை விற்பதற்கும்,
அமெரிக்காவின் ஏற்றுமதியை பலப்படுத்துவதற்கும் தோற்றுவிக்கப்பட்டவுடன்
''காமன்வெல்த்'' போன்ற பழைய அமைப்புகள் செயலற்றுப்போய் காலாவதியாகிவிட்டன.
இருந்தாலும் ''பழைய நெனப்புடா பேராண்டி'' என்று உலக வரைபடத்தில்
விழுந்துவிட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சுவடுகள் மறைந்துவிடாமல்
இருப்பதற்காகவும், உலகத்திற்கு அவ்வப்போது நினைவுப்படுத்துவதற்காகவும் அந்த
அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அப்படி ஒரு ''சம்பிரதாயமான'' மாநாடாக தான் அடுத்த மாதம் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த மாநாடு ஒன்றும் உருப்படியாக எதையும் சாதிக்கப்போவதில்லை என்பது தான் உண்மை. பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கூடிக் கலையும் சம்பிரதாயமான மாநாடாகத் தான் இருக்கப்போகிறது. இப்படிப்பட்ட இந்த மாநாடு என்பது இந்த முறை இலங்கையில் நடக்கப்போகிறது என்பதால் தமிழக அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக அதை கடந்த பல மாதங்களாக அரசியலாக்கி வருகிறார்கள். இவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இலங்கையை வைத்து பிழைப்பு நடத்துவார்கள் என்று தெரியவில்லை.
இந்த முறை இந்த மாநாடு என்பது இலங்கையில் நடப்பது என்பது
இந்தியாவிற்கு சாதகமானதாகவே நாம் கருத வேண்டும். ஏனென்றால் கடந்த
காலங்களில் நம் சொந்தங்களான தமிழர்களை கொடூரமான முறையில் கொன்று குவித்த
இலங்கை அரசின் செயல்பாடுகளை நேரில் இடித்துரைத்து கண்டிப்பதற்கும்,
மிச்சமிருக்கக்கூடிய தமிழர்களின் வாழ்வாதரங்களை மீட்பதற்கும், அவர்களின்
எதிர்காலத்தை ஒளிமயமாக மாற்றுவதற்கும் நல்லதொரு வழிகாட்டுதல்களையும்,
திட்டங்களையும் உறுதி செய்வதற்கும் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு நம்
பிரதமர் கலந்து கொள்வது தான் சிறந்த பொறுப்புள்ள செயலாக இருக்கமுடியும்.
இலங்கைத் தமிழர்களைப் பொருத்தவரையில் அவர்கள் இழந்த உரிமைகளையும்,
வாழ்வாதாரத்தையும் மீண்டும் பெறும் வரை இந்திய அரசின் தலையீடு என்பது
மிகவும் அவசியமாகிறது. ஏற்கனவே அங்கு தமிழர்கள் வாழும் பகுதியில் இரயில்
பாதை அமைப்பது, சாலை போடுவது, வீடுகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுவது
போன்ற வளர்ச்சிக்கான கட்டுமானப்பணிகளை செய்துவருகிறது. ராஜ்ய ரீதியாக
தலையிட்டு கண்காணித்து வருகிறது. அரசு முறையாக அவ்வப்போது இரண்டு நாட்டுத்
தலைவர்களும் நான்கு சுவருக்குள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த
மாநாட்டில் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனைகளை பற்றியும், நடந்து வரும்
பணிகள் பற்றியும் நான்கு பேருக்கு மத்தியில் பேசுவது என்பது தான்
பொருத்தமானதாகவும், பொறுப்புள்ளதாகவும் இருக்கும். அதைவிடுத்து
கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது என்பது பொறுப்பை தட்டிக்கழிப்பது போன்றதாகவும்,
இந்திய அரசின் அக்கறையின்மையை காட்டுவதாகவும் அமைந்துவிடும்.
அப்படியாகத்தான் அதில் கலந்துகொள்ளும் மற்றைய நாடுகளும் புரிந்துகொள்ளும்
வாய்ப்பாக அமைந்துவிடும். அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட பொறுப்பற்ற செயலினால், இந்தியா அல்லது இந்திய அரசு தனிமைப்படுத்தப்பட்டுவிடும் ஆபத்தும், இலங்கை தமிழர் பிரச்சனையில் மூன்றாம் நாடுகளின் தலையீடு என்பது பலம்பெற்றுவிடும் ஆபத்தும் உள்ளன என்பதையும் இங்குள்ள அரசியல் கட்சிகள் உணரவேண்டும். மேலும், தமிழக கட்சிகளின் விருப்பப்படி இந்திய அரசு தலையீடு இல்லாமல் ஒதுங்கிக்கொண்டால், தமிழர்கள் ஆட்சி செய்யும் மாகாண சபைக்கான அதிகாரம் மற்றும் நிதி பகிர்வு, தமிழர்கள் வாழும் குடியிருப்புப்பகுதிகளில் இலங்கை இராணுவ ரோந்து, 13-ஆவது அரசியல் அமைப்பு தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு போன்ற தான்தோன்றித்தனமான வேலைகளை இலங்கை அரசு தைரியமாக செய்வதற்கு வழிவகுத்துவிடும். எளிய வாய்ப்பாக அமைந்துவிடும்.
அதைவிட்டுவிட்டு, இலங்கையில் தமிழர் பகுதியில்
அமைந்திருக்கும் தமிழர்களால் ஒருமித்து தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஸ்வரன்
தலைமையிலான அரசிற்கும், அங்குள்ள தமிழ் மக்களுக்கும் தர்மசங்கடம்
உண்டுபண்ணும் வகையில் இங்குள்ள சிறுசிறு கட்சிகளும், செல்வி. ஜெயலலிதா
தலைமையிலான தமிழக அரசும் மற்றும் கருணாநிதி, வைகோ, நெடுமாறன் போன்ற
தலைவர்களும் அரசியல் ஆதாயத்திற்காக பொறுப்பில்லாமல் செயல்படுவது என்பது
சிறப்புடையதாக அமையாது. அதுமட்டுமல்லாது இவர்களின் இந்தப் போக்கு என்பது
இலங்கை அரசுக்கு கோபமூட்டும் செயலாக மாறிவிடும். அதனால் அமைதியை விரும்பும்
அங்குள்ள தமிழர்களுக்கு தான் சங்கடமாக அமைந்துவிடும் என்பதை இவர்கள்
உணரவேண்டும். இவர்கள் தமிழகத்தில் செய்யும் அரசியல் ''வேலைகளால்'' அங்குள்ள
தமிழர்களுக்கு நியாயமாகவும் காலத்தோடும் கிடைக்கவேண்டிய உரிமைகளும்,
வாழ்வாதாரங்களும் அவர்களை சென்றடைவதற்கு காலதாமதமாகும் என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு இங்குள்ள தமிழகக் கட்சிகள் புரிந்து செயல்படவேண்டும்.
அதுமட்டுமல்ல ''இங்கே எங்களுக்கான மாகாண அரசை விக்னேஸ்வரன் தலைமையில் நாங்கள் முறையாக தேர்ந்தெடுத்திருக்கிறோம். அந்த மாகாண அரசு என்பது இலங்கை அரசின் ஒத்துழைப்போடு தான் ஆட்சி நடத்தி, எங்களுக்கான வளர்ச்சிப்பணிகளையும், திட்டங்களையும் நிறைவேற்றிடவேண்டும். இன்னும் ''பழங்கதைகளைப்'' பேசி எங்கள் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் வீணாக்கிவிடாதீர்கள். நாங்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழவிடுங்கள்'' என்று இலங்கைத் தமிழர்கள் குரல் கொடுப்பது இங்குள்ள கட்சிகளுக்கு கேட்கவில்லையா...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக