திங்கள், 21 அக்டோபர், 2013

வல்லரசுகளுக்கு இராணுவப்பாடம் கற்றுத்தந்த வியட்நாம் வீரத்தளபதி வோ கியென் கியாப்...!

 
 

''மாற்று'' - வலைதளத்தில் வெளியான என்னுடைய கட்டுரையின் மறுபதிவு இது...!     

        உலகத்திலேயே இராணுவப்பயிற்சி இல்லாமலேயே மாவீரன் நெப்போலியனுக்கு நிகராக படைத்தளபதியாக உயர்ந்தவர்கள் இருவர். ஒருவர் இந்திய தேசியப்படையை அமைத்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய மாவீரன் நேதாஜி. இன்னொருவர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த இராணுவத் தளபதி வோ கியேன் கியாப். நேதாஜியும்,  கியாபும் இராணுவப் பயிற்சி இல்லாமலேயே அன்றைய இரு பெரும் ஏகாதிபத்தியங்களை எதிர்த்து ஆயுதம் தாங்கி போர் செய்தவர்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நேதாஜியும், வியட்நாமில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரஞ்ச் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களை  கியாபும் விரட்டியடித்து நெப்போலியனுக்கு நிகராக உயர்ந்தவர்கள் என்றாலும் பெரும் வல்லரசுகளை எதிர்த்துப் போரிட்டவர்கள் என்பதால், நெப்போலியனைப் போல் இருவரும் சரித்திரத்தில் இடம் பெறாமல் மறைக்கப்பட்டனர் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.
            அப்படிப்பட்ட இரு மாவீரர்களில் வியட்நாம் வீரத்தளபதி வோ கியேன்  கியாப் அண்மையில் தனது 102 - ஆவது வயதில் வியட்நாமில் காலமானார். அவரது மறைவை உலக பத்திரிகைகள் பலவும் அவரை நினைவு கூர்ந்து அவருக்கு புரட்சிகரமான அஞ்சலியை செலுத்தியது. எதிரிகளை மிரளச்செய்யும் கியாப்பின் போர் முறைகளையும், இராணுவ உத்திகளையும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் படைத்தலைவர்களும், படை வீரர்களும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் மறக்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இந்த நாடுகளை சார்ந்த பத்திரிக்கைகளும் மறக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்.
        அமெரிக்கா இராணுவம் ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போன்ற மற்ற நாடுகளோடு போரில் ஈடுபடும் போதெல்லாம், அமெரிக்கப் படைத்தலைவர்கள் போருக்குச் செல்லும் படை  வீரர்களிடம், ''வியட்நாம் போரில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை மனதில் வைத்துக்கொண்டு போர் செய்யவேண்டும்.'' என்று ஒரு ''பாலர் பாடம்'' நடத்தி தான் அனுப்புவார்கள். அந்த போர்களில் அமெரிக்காவிற்கு பின்னடைவு ஏற்படும் போதெல்லாம் அமெரிக்க ஊடகங்களும் ''வியட்நாம் போரில் அமெரிக்கர்கள் கற்றுக்கொண்ட பாடம் மறந்து போனதா...?'' என்று அதே வாசகத்தை தான் பயன்படுத்துவார்கள்.
           பிரான்ஸ் நாட்டிலும் இதேக் கதை தான். அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கும் கியாப்பின் இராணுவப்பாடம் தான் கற்பிக்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டுப் படைகளின் பின்னடைவின் போதெல்லாம் கூட அந்நாட்டு ஊடகங்களும் ''வியட்நாம் கற்றுத்தந்த இராணுவப்பாடம் மறந்து போனதோ....?'' என்ற அதே வாசகத்தை தான் பயன்படுத்துவார்கள். அந்த அளவிற்கு இந்த இரு வல்லரசுகளுக்கும் இராணுவப்பாடத்தைக்
கற்றுக்கொடுத்த மாபெரும் பெருமை வியட்நாம் வீரத்தளபதி வோ கியென் கியாப்பிற்கு உண்டு.
          இவர் பன்முகத்தன்மை வாய்ந்த மனிதர். இவர் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், படித்து பட்டம் பெற்றது அரசியல், பொருளாதாரம், சட்டம். ஆனால் பணியில் சேர்ந்தது ஆசிரியர் பணி. வியட்நாம் நாடு அப்போது பிரஞ்சு காலனி நாடாக இருந்தது. தேசபக்தியும், சமூக அக்கறையும் இவரிடம் மேலோங்கி இருந்ததால், காலனி ஆதிக்க எதிர்ப்புணர்வு என்பதும் இவரிடம் தீவிரமாக காணப்பட்டது. அதன் காரணமாக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். நிறைய புத்தகங்களை சேகரித்து படித்தார். ''தீன் டாங்'' என்ற வியட்நாமிய பத்திரிக்கையில் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தன் நாட்டை பிரஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்ததால், வோ கியென் கியாப் பிரஞ்சு மொழியிலும் தேர்ச்சிப்பெற்றிருந்தார். பிரஞ்சு ஆதிக்கத்திலிருந்து வியட்நாம் விடுதலை பெற்றப்பிறகு வியட்நாம் மொழியிலும், பிரஞ்சு மொழியிலும் இரு வேறு பத்திரிக்கைகளை நடத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டார்.
         பிரஞ்சு ஆதிக்கக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டு, ஆதிக்கக்காரர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை வேட்டையாடினர். அப்போது வோ கியென் கியாப் சீன நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அங்கு தான் வியட்நாமின் மக்கள் தலைவர் ஹோ சி மின்னை சந்தித்து அவருடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பின்னர் 1944 - ஆம் ஆண்டு மீண்டும் வியட்நாமிற்கு திரும்பியதும் அவரது விடுதலைப் போராட்டப் பாதை என்பது அதிதீவிரமானதாக மாறுகிறது. தேசத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் தீரமிக்க மாவீரராக - போர் படைத்தளபதியாக வோ மாறினார். அதுவரையில் இராணுவப்பயிற்சி என்பதே இல்லாத மாவீரன் வோ கியென் கியாப், உலகிலேயே தீரமிக்க - உறுதிமிக்க சேனையை கட்டமைத்தார். அதற்கு மக்கள் சேனை என்றும் பெயர் சூட்டினார்.  பழைய வாகனங்களிலிருந்து கிடைத்த டயர்களில் இருந்து செருப்பு மற்றும் பூட்சுகளை செய்து, அதை வீரர்களுக்கு அணிவித்து, தீரமிக்க போர்ப்பயிற்சியும் கொடுத்து, தனது திறமையான இராணுவ உத்திகளைப் பயன்படுத்தி பிரஞ்சுக்காரர்களையும், பின்னர் அமெரிக்கர்களையும் தோற்று ஓடச்செய்தார் என்பது தான் வரலாறு.
           பிரான்சு நாட்டின் மாவீரன் நெப்போலியனுக்கு இணையான தோழர்.வோ கியென் கியாப் ஒரு கம்யூனிஸ்ட் நாட்டின் வீரத்தளபதி என்பதால் இத்தனை ஆண்டுகளாய் மூடி மறைத்து வைக்கப்பட்ட அவரது வரலாற்றுப் புத்தகம், இன்று அவர் மறைவிற்குப் பின்பு தான் திறந்து படிக்கப்படுகிறது. அதைப் படிக்கிறபோது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் எழுப்பிய வீர முழக்கங்கள் எழுச்சியோடு ஒலித்து நம்மை மெய்ச்சிலிர்க்கச்செய்கிறது. மறைந்த தோழர். வோ கியென் கியாப்பிற்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

கருத்துகள் இல்லை: