செவ்வாய், 15 அக்டோபர், 2013

அவர்கள் பட்டாம்பூச்சிகள்... சுதந்திரமாய் பறக்கவிடுங்கள்....!

                  நேற்று விஜயதசமி நாள். பிறந்து பதினெட்டே மாதங்களான குழந்தைகளுக்கு சோதனையான நாள். அதுமட்டுமல்ல இந்த நாளில் தான் புற்றீசல் போல ஏகப்பட்ட பாலர் பள்ளிகள் - Kids School என்ற பெயரில் வீதிக்கு வீதி தொடங்கப்படும். LPG - தாராளமயம், தனியார்மயம், உலகமயம் போன்ற இலாப வெறிப்பிடித்த இந்த மயங்களின்  கண்டுபிடிப்புகள் தான் இந்த Kids School என்பதெல்லாம். கல்வியை வணிகமயமாக்கி  ஆங்கில வழிக்கல்வி மூலம் மக்களிடம் கொள்ளையடிப்பது தான் இதன் நோக்கமேத் தவிர, கல்விப்பணி என்பதல்ல. இப்படிப்பட்ட இந்த ''உயரிய நோக்கத்திற்காக'' நாடு முழுதும் நேற்று வகைவகையான ''கிட்ஸ் ஸ்கூல்கள்'' மூலைக்கு மூலை தொடங்கப்பட்டிருக்கின்றன வேதனைக்குரிய விஷயமாகும்.
             பெற்றோர்களையும் நேற்று பார்க்கணுமே...  என்ன பரபரப்பு....? அவர்கள் குழந்தைகளை தூக்கிக்கிட்டு அங்கிட்டுக்கும், இங்கிட்டுக்கும் அலையும் போது குழந்தைகளுக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது. பலி ஆடு மாதிரி முழிக்கிறாங்க பாவம். பெரும்பாலான குழந்தைங்க ஒரே அழுகை தான். விளையாட வேண்டிய காலத்தில் இப்படி ஒரு  சித்திரவதையா என்ற ஏக்கம். நிச்சயமாக அந்த வயதுக் குழந்தைகளுக்கு படிப்புன்னா என்னான்னே தெரியாது. ஏன் படிக்கவேண்டும் என்று கூட அறியாத வயது. அப்படிப்பட்ட இந்தப் பருவத்தில போயி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது என்பது என்ன நியாயம்....?
            விளையாடுகிற நேரத்தையும், தூங்குகிற நேரத்தையும், பாடுகிற நேரத்தையும், கொண்டாடுகிற நேரத்தையும் தொலைத்துவிட்டு  இப்போதே இவர்கள் என்ன சாதித்து விடப்போகிறார்கள். ஆனால் ஒன்று நிச்சயம். இப்படி செய்வதன் மூலம் உளவியல் ரீதியாக குழந்தைகளின் மனநலம் பாதிக்கும் என்பது தான் உண்மை. இதை பெற்றோர்கள் உணரவேண்டும். விளையாடுகிற நேரத்தையும், தூங்குகிற நேரத்தையும் தொலைக்கவா இவர்கள் பூமியில் பிறந்தார்கள். அல்லவே. இவைகள் எல்லாவற்றையும் பெற்று அனுபவித்து சாதிக்க அல்லவா பிறந்தார்கள். பெற்றோர்களே... அவர்கள் பட்டாம்பூச்சிகள்... சுதந்திரமாய் பறக்க அனுமதியுங்கள்....!

கருத்துகள் இல்லை: