சில்லறை வர்த்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சில்லறை வர்த்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 மார்ச், 2014

மாறுகிறது மோடியின் குரல்...!


ஆக்கம் :
தோழர். க.சுவாமிநாதன், பொருளியல் அரங்கம்,          
               நாற்காலியில் உட்கார்ந்த பிறகு குரல் மாறுவது அரசியல் வாடிக்கை. ஆனால் நாற்காலிக் கனவிலேயே மோடியின் குரல் மாறியுள்ளது. 
             புதுதில்லியில் அகில இந்திய வணிகர் கருத்தரங்கில் உரையாற்றிய போது, “வியாபாரத்தில் பன்னாட்டுச் சவால்கள் வருவது பற்றி நாம் அச்சப்பட வேண்டாம். அவற்றையெல்லாம் வாய்ப்புகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் 10 அடிகள் முன்னேறினால், நாம் 15 அடி போக வேண்டும். ஓடக்கூடாது... சந்திக்க வேண்டும்.” வணிகர்கள் மாநாட்டில் உட்கார்ந்து கொண்டு ''பன்னாட்டு மூலதனத்தை தவறாக நினைக்காதீர்கள்'' என்று தரப்படும் சிக்னல் இது. 
           ''இதைத்தானே இவ்வளவு நாளா நானும் சொன்னேன்'' என்று மன்மோகன் சிங் சொல்லலாம். மாறுகிறது மோடியின் குரல். வணிகர்கள் உஷார்....!  

நன்றி :
 

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

திருச்சி மாநாடு - திமுகவின் இரட்டை வேடம்....!

                                                                                                                                                         
          அண்மையில் திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற திமுகவின் 10-ஆவது மாநாட்டில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு தேர்தலுக்கு முன்னோட்டம் பார்க்கப்பட்டது. அந்த மாநாட்டில் பல தரப்பட்ட மக்களை திருப்திப்படுத்தும் பொருட்டு - அவர்களின் ஓட்டுக்கு குறிவைத்து வகை வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஒன்று சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி சம்பந்தப்பட்டது. இப்போது தான் சில்லறை வர்த்தகத்தைப்பற்றிய அறிவிப்பு வந்தது போலவும், அதனால் பாதிக்கப்படும் வணிகர்கள் மீது அக்கறை காட்டுவது போலவும்  ஒரு நாடகத்தை அரங்கேற்றியதை பார்த்து தமிழக வணிகர்களே எரிச்சலடைந்தார்கள். அப்படி என்ன சொல்கிறது அந்த தீர்மானம் என்றால், ''சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிக்கக்கூடாது'' என்கிறது. 
             திமுகழகம் சென்ற காலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருந்த போது, சில்லறை வர்த்தகத்தில் அன்னியநேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவெடுக்கும் போது மந்திரிசபைக் கூட்டத்தில் அதை எதிர்த்து கொஞ்சம் கூட வாயை திறக்காமல் தலையாட்டிவிட்டு, பிறகு பாராளுமன்ற இருஅவைகளிலும் அதைப்பற்றிய விவாதம் நடந்தபோது அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவாக வாக்களித்ததை கருணாநிதி வேண்டுமானால் தேர்தலுக்காக மறந்தது போல் நடிக்கலாம். ஆனால் மக்கள் மறக்கவில்லை. பாதிப்புக்குள்ளான வணிகர்கள் மறக்கவில்லை என்பது தான் உண்மை.
             ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலை. இறங்கியதும் ஓட்டுக்காக ஒரு நிலை. திமுகவின் இரட்டை வேடத்தை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். இனியும் ஏமாறமாட்டார்கள்.

புதன், 25 ஜூலை, 2012

இதை இந்தியர்கள் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டும்...!


சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு - ''இந்தியாவின்   துயரம்''  

          சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிப் பாடப்புத்தகங்களில் ''சீனாவின் துயரம்'' என்று ஒரு பாடம் படித்திருப்போம். அது என்னவென்றால், சீன நாட்டின் இரண்டாவது பெரிய நதி ''மஞ்சள் ஆறு'' என்பது 2500 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளம் சீறிப் பாய்ந்துவரும் நதி ஆகும். அதானால் அந்த நதி பாயும் பகுதிகளில் மக்கள்  வாழ்க்கை நடத்துவதற்கும்,   விவசாயம், வியாபாரம், கால்நடைகள் வளர்ப்பு போன்றவற்றிற்கும் மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரம் என்பதே சிரமத்திற்கு உள்ளாகியது. கேள்விக்குறியானது. இந்த இயற்கையின் சீற்றத்திற்கு எதிராக மக்கள் ஒரு வாழ்க்கைப் போராட்டத்தையே நடத்தினார்கள். அதனால் தான் இந்த மஞ்சள் ஆற்றினை ''அன்று'' சீன மக்களும், வரலாற்று ஆசிரியர்களும் ''சீனாவின் துயரம்'' என்று குறிப்பிட்டனர். 
              ஆனால் ''இன்று'' அதே மஞ்சள் ஆற்றினைப் பற்றியோ - சீனாவின் துயரம் என்பது பற்றியோ நாம் பாடப் புத்தகத்தில் பார்க்க முடிகிறதா...? ''துயரம்'' என்பதையே சீனர்கள்  அழித்துவிட்டார்கள். சீன சோஷலிச அரசு இயற்கையின் சீற்றத்தை தனது  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது தான் அதற்கு காரணம். சீன நாட்டின் ஆட்சியாளர்கள், அந்த இயற்கையின் சீற்றத்தை - பாய்ந்து வரும் வெள்ள நீரை திசை மாற்றிவிட்டார்கள். மஞ்சள் ஆற்றின் பாதையை மூன்றாகப் பிரித்து மற்றப் பகுதிகளில் ஓடும் சிறிய ஆறுகளோடு இணைத்துவிட்டனர். மேலும் அந்த வெள்ள  நீரை பெரிய பெரிய குழாய்கள் மூலமும், வாய்க்கால்கள் மூலமும்  தண்ணீர் பற்றாக்குறையுள்ள மற்ற பகுதிகளுக்கு திருப்பிவிட்டனர்.  ( ஆனால் வீராணம் குழாய்கள் போல் ஊழல்கள் நடக்கவில்லை ) அப்படியாக அனுப்பப்பட்ட தண்ணீர் வயல்களில் பாய்ந்தது. அதனால் அந்தப் பகுதிகளில் விவசாயம் செழித்து வருகிறது. அதனால் ''சீனாவின் துயரம்'' நீங்கி இன்று சீன மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். இது போன்ற நாடு சார்ந்த - மக்கள் சார்ந்த சாதனைகள் ஒரு சோசலிச நாட்டில் தான் நாம் பார்க்கமுடியும்.
            இதே நம்ப நாடாக இருந்தால் நம் ஆட்சியாளர்கள்  அந்த ஆற்றையே பெப்சி - கோகாகோலாவிற்கு இந்நேரம் விற்றிருப்பார்கள் 
                 உலகத்திலேயே இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியம்  கொள்ளையடிக்க ஏற்ற இரண்டாவது மிகப்பெரிய வளம் கொழிக்கும் சந்தை  எது என்று கேட்டால் அது இந்தியா தான். முதலாவது பெரிய சந்தை சீனா. ஆனால் சீனா ஒரு சோஷலிச நாடு என்பதால் அந்த நாட்டில் கடுமையான சட்டங்கள் இருப்பதால்  கொள்ளையடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அங்கே அரசு நிர்ணயிக்கிற விலையில் தான் பொருட்களை விற்றாக வேண்டும். இலாப நோக்கில் அதிக விலைக்கு விற்றால் சீன ஆட்சியாளர்களே  அந்த பலசரக்கு கடையை மூடி திருப்பியனுப்பி வைத்து விடுவார்கள். அங்கே எங்குமே மக்களை ஏமாற்றும் கொள்ளைகளுக்கு அனுமதி கிடையாது. அதேப்போல் அங்கே வேலை செய்யும் சீன தொழிலாளர்களுக்கு கடுமையான தொழிலாளர் சட்டம் பாதுகாப்பாக இருக்கிறது. அதனால் இந்தியாவைப் போல் அங்கே உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளத்தை கொடுத்து அவர்களை மணிக்கணக்காக வேலை வாங்கி  பிழிந்தெடுக்க முடியாது. அதுமட்டுமல்லாது, சீனாவில் அந்நிய நேரடி  முதலீட்டிலும் கடுமையான சட்டம் உள்ளது. அங்கே அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் கொஞ்சப் பணத்தை முதலீடாகப்  போட்டு, அதனால் வரும் இலாபத்தை உடனே தங்கள் நாட்டிற்கு அள்ளிக்கொண்டு சென்றுவிட  முடியாது. அந்நிய நேரடி முதலீட்டில் கிடைத்த இலாபத்தை மீண்டும் சீனாவிலேயே தான் முதலீடு செய்யவேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இப்படியாக தங்கள் தேசப் பொருளாதாரத்தின் மீது அக்கறை கொண்டுள்ள சீனா தொழிலாளர்கள் சட்டம், பொருட்கள் விலை நிர்ணயச் சட்டம், அந்நிய நேரடி முதலீட்டுச் சட்டம் போன்ற சட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால், அங்கே கொள்ளை இலாபத்திற்கு வாய்ப்பும், வழியும் இல்லாததால், அடுத்து அமெரிக்காவின் கண்ணை உறுத்துகிற நாடு இந்தியா தான்.
           இந்தியாவும் இதற்கு முன்பு, கடுமையான சட்டங்களை கொண்ட நாடாகத் தான் இருந்தது. ஆனால், இந்த தேசத்தின் பாதுகாப்பாக - பொருளாதாரத்தின் பாதுகாப்பாக - தொழிலாளர்களின் பாதுகாப்பாக  இருந்த இந்த சட்டங்களை எல்லாம், நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியும், பின்பு வந்த வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியும், தற்போது பொறுப்பிலிருக்கும் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியையும் நீர்க்கச் செய்துவிட்டன. சட்டங்களெல்லாம் வெறும் சட்டங்களாகவே இருக்கின்றன. ஆனால் அந்த சட்டங்கள் எல்லாம் இந்தியாவில் முதலீடு செய்யும் அந்நிய முதலாளிகளுக்கு மட்டும் பாதுகாப்பாகவே இருக்கின்றன.
              நம் நாட்டில் அப்படியாக வளம் கொழிக்கும் துறைகளில் ஒன்று தான் சில்லறை வர்த்தகத்துறை என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இது இந்திய பொருளாதாரத்தின் உறுதியான பொருளாதாரத் தூண்களில் ஒன்றாகவே விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% பங்களிப்புடனும், மொத்த தொழிலாளர்களில் 7% பேர்களையும் ஓங்கி வளர்ந்த மிகப்பரிய சந்தை இது தான். அதனால் தான் உலக அளவில் உள்ள  பிரம்மாண்டமான முப்பது சந்தைகளில் இரண்டாவது பெரிய ஈர்க்கத்தக்க சந்தை இந்தியா தான் என்று எ.டி.கர்னி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது
              இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 98% அமைப்புசாரா வடிவத்திலும்,   2%  அமைப்பு சார்ந்த வர்த்தகமாகவும் நடைபெறுகின்றன.  நம் நாட்டில் சில்லறை வர்த்தகம் என்பது  ஆண்டொன்றுக்கு 40% வேகத்தில் வளர்ச்சிபெற்று வருகிறது. இதில் உணவுப்பொருள் விற்பனை மட்டுமே 63% ஆகும். இப்போது 28 பில்லியன் டாலர்களில் இருக்கும் அதன் வணிகம் 2020ல் 260 பில்லியன் டாலர்களாக அதிரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த விஷயம் தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உறுத்தலாக இருக்கிறது.
          இந்தியாவில் அமைப்பு சார்ந்த வர்த்தகப் பிரிவில்  5,00,000 பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். அமைப்புசாராப் பிரிவில் 4 கோடிக்கும் அதிகமானோர்  வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். இந்தியாவில் 1.25 கோடிக்கு மேல்  சில்லறை விற்பனை கடைகள் உள்ளன, இவற்றில் 4% மட்டுமே 500 சதுர அடிக்கு மேல் உள்ளவையாகும். மற்றவை எல்லாம் சிறு சிறு விற்பனைக்கடைகளாகும். இந்த அமைப்புசாரா சில்லரைவணிகத்தில் மட்டுமே ஆண்டுக்கு ரூ.7,35,000 கோடிக்கு மேல் விற்பனையாகிறது என்பதைப் பார்க்கும் போது அமெரிக்க ஓநாய்க்கு நாக்கில் எச்சில் ஊருகிறது.
             இந்நிலைலையில், மத்திய அரசின் தாராளமயக் கொள்கையின் விளைவால், அந்நிய சில்லரை வர்த்தக  நிறுவனங்கள் இந்தியச் சில்லறை வர்த்தகத்தைக் கைப்பற்றும் நோக்குடன்
இந்தியாவுக்குள் நுழையத் துடிக்கின்றன. இந்திய ஆட்சியாளர்களும் இரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கின்றனர்.
               சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி  முதலீட்டால் நுகர்வோருக்கு 5-10% விலைகள் குறையும் என்றும்,  சில்லறை விற்பனை நிலையங்களிலும் பொருள் போக்குவரத்துத் துறையிலும் ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும்,  விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு 10-30% கூடுதல் விலை கிடைக்கும் என்றெல்லாம் ஆட்சியாளர்கள் அடுக்கடுக்காக கூறி நம் நாவில் தேனைத் தடவுகிறார்கள். 
                     ஆனால் காலகாலமாக - பரம்பரைப்பரம்பரையாக - குடும்பம் குடும்பமாக சில்லறை வர்த்தகம் செய்பவர்களும், இந்த வர்த்தகத்திற்கு பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வரும் இந்திய சிறு உற்பத்தியாளர்களும், இந்திய விவசாயப் பொருள் உற்பத்தியாளர்களும், இந்த சில்லறை வர்த்தகத்தை சுற்றி வியாபாரம் செய்கின்ற பெட்டிக்கடை வியாபாரிகளும், இந்த சிலரை  வர்த்தக நிறுவனங்களில் வேலைசெய்யும் ஆண்களும் - பெண்களும், சுமைத்தூக்கும் தொழிலாளர்களும் - கூலித்தொழிலாளர்களும் - தட்டு வண்டி முதல் லாரி வரை ஓட்டும் தொழிலாளர்களும், சிறு தொழிற்சாலைகளில்  வேலைசெய்யும் தொழிலாளர்களும், விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கக்கூடிய வியாசாயக்கூலித் தொழிலாளர்களும் - என இந்த தேசத்தை சார்ந்த பலகோடி மக்களின் வாழ்வாதாரம் என்பது இந்த சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி நுழைந்தால் கேள்விக்குறியாகிவிடும் என்பது தான் உண்மை. வருமானம் இல்லாமல் இவர்களும் இவர்கள் வீட்டுக் குழந்தைகளும் பட்டினிக் கிடந்து சாகவேண்டியது தான். இதை நிறைவேற்றத் தான்  தான் இலாப வெறிப்பிடித்து அலையும் ஏகாதிபத்தியமும், ஆட்சியாளர்களும், பெருமுதலாளிகளும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
            வால்மார்ட் மட்டுமல்லாமல்  ஸ்வீடனின் எச் & எம், ஐகியா, ஜப்பானின் உனிக்டோ, பிரிட்டனின் டாப்ஷாப், அமெரிக்காவின் ஆப்பிள், போலோ. அபெர்க்ரோம்பீ, பெஸ்ட் பை போன்றவை இந்தியாவில் நுழைந்து கொள்ளையடிக்கக்  காத்திருக்கும் சில்லறை வர்த்தக சங்கிலித் தொடர் நிறுவனங்களில் முக்கியமானவை. 

           இவ்வளவு நடந்துகொண்டிருக்கிறது இந்திய மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்...? என்பது தான் நமது கேள்வி.                                  

சனி, 26 நவம்பர், 2011

''WALMART SUPER MARKET '' வந்தா நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்து போயுடுமுங்க...!

நல்ல காலம் 
பொறக்கப்போவுது...                    
நல்ல காலம் 
பொறக்கப்போவுது... 

                  சில்லறை வர்த்தகத்துல அந்நிய நேரடி முதலீடு வந்தா நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்து போயுடும்னு பாராளுமன்றத்துல மந்திரிங்கல்லாம் சொல்லுறாங்க. 
               ஒரு மந்திரி சொல்லுறாரு... ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமாம். நல்ல விஷயம்தானுங்கள... 
                    அப்புறம் இன்னொரு மந்திரி சொல்லுறாரு... சில்லறை வர்த்தகத்துல அந்நிய நேரடி முதலீடு வந்தாக்கா... அந்த பணவீக்கம் குறைந்து போயுடுங்கலாம்... இதுவும் நல்ல விஷயம்தானுங்கள...
                    அப்புறம் இன்னொருத்தர் சொல்லுறாரு... ''வால் மார்ட்'' சூப்பர் மார்கெட் வந்துடுச்சினா... குறைவான விலைக்கு பொருட்களெல்லாம் கிடைக்குமாம்... அப்புறம் என்னங்க நமக்கு கஷ்டம்...  இதை ஏங்க நாம எதிர்க்கணும்...?
                மேலே பாத்தீங்களா எவ்வளவோ பெரிய சூப்பர் மார்கெட்... சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் மாதிரி இருக்குல்ல... சூப்பருங்க...
50,000 முதல் 75,000   சதுர மீட்டர் வரை பரப்பளவு உள்ள மெகா சுப்பர் மார்கெட்டுங்க இது.. இதுல கெடைக்காத பொருட்களே இல்லைங்கலாம்... அம்புட்டு பொருட்களும் கிடைக்குமாம். ஒரு லட்சம் நம் வீட்டுக்குத் தேவையான ஒரு லட்சம் பொருட்கள் இங்கே கிடைக்குமாம்.
 



























            
            இங்கே கிடைக்காத பொருட்களே இல்லைங்க... அன்றாட உணவு தயாரிப்புகளுக்கு தேவையான...சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் முதல் அனைத்து வகை மளிகை சாமான்கள்...  காய்கறி வகைகள்... பழ வகைகள்... ஆடு, மாடு, பன்றி, கோழி இறைச்சி வகைகள்... மீன் வகைகள்... கொறித்து சாப்பிடுவதற்கு தின்பண்டங்கள்... பாணி பூரி... பிசா வகைகள்...  டீ, காபி... குளிர் பானங்கள், ஐஸ் கிரீம்... இப்படி எல்லாம் ஒரே குடையின் கீழ் கிடைக்கும்.  
             எல்லா வகை மருந்துப்பொருட்களும் அங்கெ கிடைக்கும்... டாக்டர்களும் உள்ளே இருப்பார்கள்... மற்றும் திருமணம் ஆகி புதுக்குடித்தனம் நடத்த வீட்டுக்குத் தேவையான அத்துணை பொருட்களும்... பீரோ, கட்டில், கிரைண்டர், மிக்சி, வாஷிங் மிஷின், பிரிட்ஜி, மேசை, நாற்காலி, பாத்திரங்கள், செல்போன், டி.வி., அழகு சாதனப்பொருட்கள், பரிசுப் பொருட்கள்... என அப்பப்பா... இப்படி பல வகைகள் அங்கெ கொட்டிக்கிடக்குமுங்க ...
               பசி ஆறுவதற்கு டிபன் கடை கூட உள்ளே இருக்கும்... மயங்கி கிடப்பதற்கு மதுபானக்கடைகளும், பார்களும் அங்கே மிதந்து வரவேற்கும்.
            இவை எல்லாவற்றையும் வாங்கிவிட்டு பில் போடுவதற்கு ''அனாவசியமாக'' கியூவில் நிற்கவேண்டாம்.  ஏ.டி.எம். மிஷின் போல ஆங்காங்கே பில் போடுகிற மிஷின் வைக்கப்பட்டிருக்கும். நாமே பில் போட்டு பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வரவேண்டியது தான். இங்கே போயி பொருட்களை வாங்கினா... காசையும் மிச்சப்படுத்தலாமாம்... நேரத்தையும் மிச்சப்படுத்தலாமாம்... இது ரொம்ப நல்லா இருக்கு இல்ல...
              
                 நீங்களும்,  உங்க வீட்டு அம்மணியும்  காலையில எழுந்து பிரஷ் பண்ணிட்டு... உங்க காரை எடுத்துகிட்டு வால்மார்ட் போனிங்கன்னா... அங்க சர்வீஸ் ஸ்டேஷன் -இல் காரை விட்டுட்டு... அங்கேயே முடிவெட்டுற கடை இருக்கும்... அங்கே முடி வெட்டிகிட்டு... பக்கத்துலேயே ''மசாஜ்'' பண்ணி... ''பாத்'' பண்ணி விடுவாங்க.... அதெல்லாம் முடிச்சிகிட்டு... அங்கேயே ''ரெடிமேடு டிரஸ்'' எல்லாம் விற்பாங்க... அதை வாங்கி போட்டுக்கிட்டு...  
                 நல்லவேளையா அங்கேயே அம்மணிக்கு ''பியூட்டி பார்லர்'' இருக்கும்... அங்கே போய் அழகு படுத்திக்கொள்ளலாம்... பிறகு அங்கேயே டிபன் முடிச்சிட்டு ... அப்புறமா வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்கள், ஸ்நாக்ஸ், மட்டன், சிக்கன், பிஷ், குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள்... இப்படியாக எல்லாத்தையும் வாங்கிட்டு... இடையில டீ..காப்பி சாப்பிட்டிட்டு, இப்படியே ஷாப்பிங் பண்ணிட்டே இருந்தீங்கன்னா...''லஞ்ச் டைம்'' வந்துடும்... அதுக்கும் கவலைப்பட வேண்டாம்... அங்கேயே ''ஹோட்டல்...''  சாரி ''ரெஸ்டாரென்ட்'' இருக்கும்... அங்கே சாப்டுட்டு... மீண்டும் ''ஷாப்பிங்'' பண்ணிட்டு...    
                அதுக்குள்ளே மாலை நேரம் வந்துடும்... அப்போது சாப்பிடவேண்டிய ''ஸ்நாக்ஸ், டீ, காப்பி'' எல்லாம் சாப்பிடுட்டு... மீண்டும் ஷாப்பிங் செய்து டி.வி. விளம்பரத்தில் பார்த்த விடுபட்ட  பொருட்களையும் தேடி அலசி பார்த்து வாங்கிட்டு... நீங்க வாங்கினப் பொருட்களையெல்லாம் கையிலயோ.. தலையிலேயோ தூக்கிகிட்டு அலையவேண்டாம்.. அங்கேயே ''ட்ராலி'' நிறைய இருக்கும்... அம்புட்டு பொருளையும் அதுக்குள்ளேயே அடுக்கிக்கலாம்...
                    அதுக்குள்ளயே..  இரவும்  வந்துடும்... அப்படியே சுத்தி நோட்டம் விட்டீங்கன்னா... கவர்ச்சியா லைட்டெல்லாம் போட்டு ''பார்'' உங்களை வரவேற்கும்... அங்கே போகாம வீட்டுக்கு போயிட்டா நமக்கும் மரியாதை கிடையாது... அந்த ''பாருக்கும்'' மரியாதை கிடையாது... அரசாங்கம் நடத்துற  ஒயின் ஷாப்பை விட... பார் - ஐ விட இது சூப்பரா இருக்கும்... நைட்டு படுத்தா தூக்கம் வர்றதுக்கு இங்க போயி கொஞ்சம் ஊத்திகிட்டு... அங்கேயே ''டின்னர்'' - ஐயும்  முடிச்சிகிட்டு... நீங்க காலைல சர்வீஸ் ஸ்டேஷன் -ல உங்க காரை விட்டீங்கள ஞாபகம் இருக்கா... அது இப்போ சர்வீஸ் எல்லாம் முடிஞ்சி புதுப்பொலிவுடன்  ''கார் பார்கிங்''- ல உங்களுக்காக ''வெயிட்'' பண்ணும்...  
            நீங்க வீட்டுக்கு கிளம்பரத்துக்கு  முன்னாடி, காலையிலிருந்து இரவு வரை வாங்கின அத்துணை பொருட்களின் ''பில்''லையும் செட்டில் செய்யணும்... உங்க ''பர்ஸ்''-ல இருக்கிற ''கிரடிட் கார்டை''யோ... ''ஏ. டி. எம்  கார்டை''யோ கொடுத்தீங்கன்னா... நீங்க கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தையெல்லாம் உறிஞ்சி எடுத்துக்கொள்வார்கள்... அல்லது கையில பணத்தை வெச்சிருந்தீங்கன்னா... உங்க பர்சையும், பாக்கெட்டையும் காலிப் பண்ணிட்டு  தான் உங்கள வெளியே விடுவாங்க...   பிறகு நீங்க சந்தோஷமா உங்க காரை எடுத்துக்கொண்டு அங்கேயே பெட்ரோலும் போட்டுக்கிட்டு, பிறகு  உங்க வீட்டுக்குப் போயி படுத்து தூங்கிட வேண்டியது தான்...
             இது ரொம்ப நல்லா இருக்கு இல்ல...
             இப்போ நாம் இவ்வளவு பொருட்களையும் வாங்கணும்னா... நாலு நாட்கள் ஆகும்... மாளிகைக்கு ஒரு இடம் போகணும்... காய் - பழத்துக்கு ஒரு இடம் போகணும்... துணி - மணிங்க வாங்கணும்னா ஒரு இடத்துக்கு போகணும்... மீன் வாங்கணும்னா ஒரு இடத்துக்கு போகணும்... ஹோட்டலுக்கு ஒரு இடம் போகணும்... காரை ஒரு இடத்துல விட்டுட்டு காலு வலிக்க நடக்கணும்... இந்த கஷ்டமெல்லாம் இந்த ''வால்மார்ட்'' - ல  கிடையாதுங்க...  
            இங்கு விலைகளும், வெளியில நாம் வாங்குற விலையை விட இங்கு மிக குறைவுங்கலாம்... காசும் மிச்சம்... நேரமும் மிச்சமுங்க...
               அது மட்டுமில்லைங்க... அமெரிக்க வால்மார்ட் - ல  துப்பாக்கி, கைத்துப்பாக்கி, வெடிமருந்து போன்றவைகளும் விக்கிறாங்களாம்... ஹை... ஜாலி நம் வீட்டுக் குழந்தைங்களும் இனி துப்பாக்கி எல்லாம் வெச்சுகிட்டு விளையாடுவாங்க...
                      இந்தியாவுல இந்த வால் மார்ட் சூப்பர் மார்கெட்ட.. இந்திய பெருமுதலாளி மிட்டலுக்கு சொந்தமான பாரதி நிறுவனத்தோடு சேர்ந்து நடத்தப்போறாங்கலாம் ... அந்த சூப்பர் மார்கெட்டுக்கு இந்தியாவுல என்ன பேரு  வெச்சிருக்காங்க தெரியுமா...? ''பெஸ்ட் பிரைஸ் - BEST PRICE''.
     இந்த பெயரை திட்டமிட்டு தான் வெச்சிருக்காங்களாம்... ''பெஸ்ட் பிரைஸ்'' என்றால் வெளியில் உள்ள விலையை விட இங்கே விலை   குறைவாக இருக்கும் என்று அர்த்தமாம்... இந்த பெயரை ஏன் வெச்சாங்கன்னா... அதுக்குப் பின்னாடியும் ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கு...
              பாராளுமன்றத்திலேயும், வெளியிலேயும் இடதுசாரிகளும் மற்றவர்களும்... சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிப்பதை எதிர்த்தும், வால்மார்ட்டை எதிர்த்தும் போராட்டம் நடத்துகிறார்கள் அல்லவா...?  அப்படின்னா என்ன அர்த்தம்... வால்மார்ட் நடத்துற ''பெஸ்ட் பிரைஸ்'' கடையையும் எதிர்க்கிறார்கள்  என்று தானே அர்த்தம்.... இந்தியாவுல பெஸ்ட் பிரைஸ் கடைகளெல்லாம் மக்களுக்கு பொருட்களெல்லாம் விலை மலிவா கொடுக்குற கடைகள்... நமக்கெல்லாம் நல்லது செய்யற கடைகள்  என்கிற எண்ணத்தை மக்களுக்கு உண்டுபண்ணிவிடுவதால்... அந்த கடைகளெல்லாம் இந்தியாவிற்கு   வேண்டாம் என்று இடதுசாரிகள் சொன்னால் - போராடினால், இடதுசாரிகள் - கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க    தங்களுக்கு  வேண்டாதவர்களாக மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக - மக்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக திருப்புவதற்காகவே    பெருமுதலாளிகள் இந்த பெயரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அதன் சூழ்ச்சியை புரிந்துகொள்ளுங்கள்...                  அதுமட்டுமல்ல... இப்படி விலை குறைவாக இருக்கிறது என்ற காரணத்தால் நாமெல்லோரும் நிச்சயமாக அங்கே தான் பொருட்களை வாங்குவோம்... அப்படி வாங்கும் போது, பரம்பரை பரம்பரையாக - குடும்பம் குடும்பமாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுப்பட்டிருப்போரின் கடைகள் என்னவாகும்... மக்கள் வருகை இல்லாவிட்டால், பொருட்களின் வியாபாரம் நடக்காவிட்டால் அவர்கள் தங்கள் கடைகளை இழுத்து மூடவேண்டியது தான்.... அப்படி மூடினால் இந்தியாவில் சில்லறை வர்த்தகம் செய்யும் ஏழு கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும்... சில்லறை வர்த்தகம் என்றால் சிறு சிறு முதலாளிகள் மட்டுமல்ல... அதில் வேலை செய்பவர்கள், விற்பனையாளர்கள், மற்ற பணியாளர்கள், சுமை தூக்குபவர்கள், மாட்டு வண்டி - ரிக்சா - மூன்று சக்கர வண்டி - ஆட்டோ தொழிலாளர்கள் இப்படியாக பல கோடி பேர் வேலை இழப்பார்கள்... அதைப்பற்றி நமக்கென்னங்க கவலை... அப்படின்னு நாம் வழக்கம் போல் இருந்துவிடலாம்....
                ஆனால்... இந்த கடைகளெல்லாம் மூடப்பட்ட பின், இந்த ''பெஸ்ட் பிரைஸ்'' கடையில விக்கிற பொருட்களின் விலைகள் எல்லாம் நான்கு மடங்கு - ஐந்து மடங்காக தாறுமாறாக உயர்ந்துவிடும். அது எவ்வளவு விலையானாலும், நாம் உண்டு உயிர்வாழ்வதற்கு  அவ்வளவு விலைகளையும் கொடுத்து தான் வாங்கவேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என்பதை மறந்து விடாதீர்கள். 
             இந்திய மக்களே... தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்... ''வால்மார்ட்'' நமக்கு தேவையா...?  ''பெஸ்ட் பிரைஸ்'' நமக்கு தேவையா...? சில்லறை வியாபாரிகளும், தொழிலாளர்களும், பொதுமக்களும் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய ''அந்நிய நேரடி முதலீடு'' நமக்கு தேவையா..? சிந்தித்துப் பாருங்கள்...! செயல்படுங்கள்..!