அருண் ஜெட்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருண் ஜெட்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 ஜூலை, 2014

மக்களை ஏமாற்றும் மோடியின் பட்ஜெட்...!

                       ''வளர்ச்சி நாயகன்'' மோடி ஆட்சிக்கு வந்தால் கடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உயர்ந்துகொண்டே போன அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அடக்கி கட்டுப்படுத்திவிடுவார் என்று என்றெல்லாம் சொல்லி மக்களை நம்பவைத்து, அவர்களின் ஓட்டுக்களை வாங்கி ஆட்சியில் அமர்ந்த ''வளர்ச்சி நாயகன்'' நரேந்திர மோடி தன்  சுயரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாக காட்டுகிறார். பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ''அல்வா'' கொடுத்துகொண்டே இருக்கிறார். அந்த ''அல்வா'' வழங்குதலின் ''ஹைலைட்டாக'' அமைந்தது தான் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் என்பதை மக்கள் உணர்ந்துகொண்டார்கள். 
               ஏழை எளிய மக்களுக்கு சாதகமாக பட்ஜெட்டில் எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. விவசாயம், தொழிற்சாலைகளுக்கு பட்ஜெட்டில் இடமளிக்கவில்லை. அதனால் புதிய வேலைவாய்ப்புகளுக்கும் வாய்ப்பில்லை. மக்களின் வாழ்வாதாரம் உயர அவர்களின் வருமானத்தை உயர்த்தும் எண்ணம் பட்ஜெட்டில் துளியும் இல்லை. வருமானம் தான் உயரவில்லை. ஏறும் விலைவாசியையாவது குறைக்கும் யோசனை கொஞ்சம் கூட இல்லை என்பது வெட்கக்கேடானது. ஆனால் மாதச் சம்பளக்காரர்களுக்கு ஒருசில சில்லறைச் சலுகைகளை தந்து திருப்திப்படுத்திவிடலாமென்று நினைத்துவிட்டார் மோடி. 
            வருமான வரிச்சலுகை 2 இலட்சத்திலிருந்து 2.5 இலட்சமாக உயர்த்தியும்,  80-C - சேமிப்புக்கான வரிச்சலுகையாக ரூ.1 இலட்சமாக இருந்ததை 1.5 இலட்சமாக உயர்த்தியும் அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் மாதச்சம்பளக்காரர்களை தனது ஆதரவுக் கூட்டமாக மாற்றிவிடலாம் என்று பகல் கனவு கண்டிருக்கிறார் மோடி. ஆனால் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பே பாராளுமன்றத்தையே மதிக்காமல் பெட்ரோல், டீசல், சமையல் காஸ், சர்க்கரை ஆகியவற்றின் விலைகளையும், இரயில் கட்டணங்களையும் கடுமையாக உயர்த்திவிட்டு, பட்ஜெட்டில் வருமான வரி சம்பந்தமான சில்லரைச் சலுகைகளை தந்து மக்களை ஏமாற்றியிருக்கிறார் நரேந்திர மோடி என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 
             அத்தியாவசியப்பொருட்களின் விலையுயர்வை தடுப்பதற்கு - விலையேற்றத்திற்கு காரணமான ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்வதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காததன் மூலமாகவும், மேற்கண்ட அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை இவராக உயர்த்தியதன் மூலமாகவும் மக்களின் வாங்கும் சக்தியை குறைத்துவிட்டு சேமிப்பிற்கு 1.5 இலட்சமாக  உயர்த்தியது என்பது நகைப்பிற்குரியது.  இது யாரை ஏமாற்றுகிற வேலை. ஒரு பக்கம் உழைப்பாளி மக்களின் - ஊழியர்களின் வருமானம் உயரவில்லை. இன்னொரு பக்கம் அதற்கு நேரெதிராக விலைவாசி விண்ணை நோக்கி உயர்ந்துகொண்டே போகிறது. இந்த சூழ்நிலையில் இவர்களால் எப்படி சேமிக்கமுடியும்...? - இவர்கள் சேமிப்பிற்கு எங்கே போவார்கள்...? என்கிற பொதுபுத்தி கூட மத்திய நிதியமைச்சருக்கு இல்லாமல் போனது நம்முடைய துரதஷ்டம் தான். வாங்கற சம்பளம் காய்-கறி வாங்கறதுக்கும், மளிகை சாமான்கள் வாங்கறதுக்கும், வண்டிக்கு பெட்ரோல் போடறதுக்குமே சரியா இருக்கு. இதுல எங்கிருந்து சேமிக்கிறது. இந்த சலுகை சாதாரண நடுத்தர மக்களுக்கு எந்தவகையிலும் பயன்தராது. பாத்துகிட்டே இருங்கள்... கூடியவிரைவில் மோடியின் அடிவருடிகள் வழக்கம்போல் மோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் ''பொருளாதார மேதைகள்'' என்ற நாமத்தை சூட்டினாலும் சூட்டுவார்கள். நாம்ப பார்க்கத்தான் போறோம்.
              மொத்தத்தில் தனக்கு வாக்களித்த மக்களைப் பற்றிய அக்கறையில்லாமல், மாற்றம் விரும்பிய மக்களை ஏமாற்றம் அடையச்செய்த மோடியின் பட்ஜெட் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

நீதிபதி மார்கண்டேய கட்ஜு பதவி விலக பா.ஜ.க. - வினர் ஏன் துடிக்கிறார்கள்....?



              இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து தான் பிரஸ் கவுன்சில் என்றால் என்ன என்றே புரிந்தது. இவருக்கு முன்பு இப்பொறுப்பில் இருந்தவர்கள் இந்த பதவியை ஒரு அலங்கார பதவியாக அனுபவித்திருந்திருக்கிறார்கள். பத்திரிக்கை சுதந்திரம் - கருத்து சுதந்திரம் என்றெல்லாம் நம் நாட்டில் இருந்தாலும், பத்திரிக்கைகளையும், பத்திரிக்கையாளர்களையும் நெறிப்படுத்தும் வகையில் ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகத்தான் இந்த பிரஸ் கவுன்சில் என்பது 1966 - ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டிருக்கிறது. அன்றையிலிருந்து இன்றுவரை அந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றவர்கள் அவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தியது கிடையாது அல்லது பயன்படுத்த வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
          ஆனால் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பொறுப்பேற்ற நாளிலிருந்து ஒரு பொறுப்பான தலைவராக செயல்படுகிறார் என்பது நமக்கு கிடைத்த ஆறுதல். ''நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே'' என்று நேர்மையுடனும் உண்மையுடனும் செயல்படுகிறார் என்றால் அது மிகையாகாது. பத்திரிகை சுதந்திரத்தின்  - கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை பிடிக்கும் ஆட்சியாளராக இருந்தாலும் அல்லது அரசியல்வாதியாக இருந்தாலும், அல்லது பத்திரிகை சுதந்திரத்தை - கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் பத்திரிக்கையாக இருந்தாலும் அல்லது பத்திரக்கையாளராக இருந்தாலும் தயக்கமின்றி இடித்துரைத்து நேர்ப்படப் பேசுபவர் தான் நீதிபதி மார்கண்டேய கட்ஜு என்பதை நாடே அறியும்.
           குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை  வருகிற 2014 - ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு பாரதீய ஜனதா கட்சினர் மத்தியில் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நேற்று முன் தினம், நீதிபதி கட்ஜு அவர்கள் அவரது வலைப்பூவில் குஜராத் சம்பவங்கள் பற்றியும், மோடியைப் பற்றியும் எழுதிய கட்டுரையொன்றில், ''1933 - இல் ஜெர்மானியர்கள் செய்த தவறை 2014 - இல் நீங்கள் செய்துவிடாதீர்கள்'' என்று இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 1933 என்பது ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக பொறுப்பேற்ற ஆண்டு என்று சொன்னதன் மூலம், மோடி ஹிட்லருக்கு இணையானவர் என்று நீதிபதி கட்ஜு  சித்தரித்திருந்தார். ஒரு வாசகம் என்றாலும், திருவாசகம் மலர்ந்தார் இந்த மாணிக்கவாசகம் நீதிபதி கட்ஜு என்று நாடே பாராட்டுகிறது. ஆனால் பாரதீய ஜனதா கட்சியில் மட்டும் ஒரே கொந்தளிப்பு.
        மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டு எழுதியதற்காக நீதிபதி கட்ஜு பதவிவிலக வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று பா ஜ க - வின் தலைவர்களில் ஒருவரும், மாநிலங்கவையின் எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி கொக்கரித்தார். ஆனால் பாஜக - வின் இந்த கோரிக்கையை நாட்டு மக்கள் சட்டை செய்யவில்லை.