''வளர்ச்சி நாயகன்'' மோடி ஆட்சிக்கு வந்தால் கடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உயர்ந்துகொண்டே போன அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அடக்கி கட்டுப்படுத்திவிடுவார் என்று என்றெல்லாம் சொல்லி மக்களை நம்பவைத்து, அவர்களின் ஓட்டுக்களை வாங்கி ஆட்சியில் அமர்ந்த ''வளர்ச்சி நாயகன்'' நரேந்திர மோடி தன் சுயரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாக காட்டுகிறார். பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ''அல்வா'' கொடுத்துகொண்டே இருக்கிறார். அந்த ''அல்வா'' வழங்குதலின் ''ஹைலைட்டாக'' அமைந்தது தான் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் என்பதை மக்கள் உணர்ந்துகொண்டார்கள்.
ஏழை எளிய மக்களுக்கு சாதகமாக பட்ஜெட்டில் எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. விவசாயம், தொழிற்சாலைகளுக்கு பட்ஜெட்டில் இடமளிக்கவில்லை. அதனால் புதிய வேலைவாய்ப்புகளுக்கும் வாய்ப்பில்லை. மக்களின் வாழ்வாதாரம் உயர அவர்களின் வருமானத்தை உயர்த்தும் எண்ணம் பட்ஜெட்டில் துளியும் இல்லை. வருமானம் தான் உயரவில்லை. ஏறும் விலைவாசியையாவது குறைக்கும் யோசனை கொஞ்சம் கூட இல்லை என்பது வெட்கக்கேடானது. ஆனால் மாதச் சம்பளக்காரர்களுக்கு ஒருசில சில்லறைச் சலுகைகளை தந்து திருப்திப்படுத்திவிடலாமென்று நினைத்துவிட்டார் மோடி.
வருமான வரிச்சலுகை 2 இலட்சத்திலிருந்து 2.5 இலட்சமாக உயர்த்தியும், 80-C - சேமிப்புக்கான வரிச்சலுகையாக ரூ.1 இலட்சமாக இருந்ததை 1.5 இலட்சமாக உயர்த்தியும் அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் மாதச்சம்பளக்காரர்களை தனது ஆதரவுக் கூட்டமாக மாற்றிவிடலாம் என்று பகல் கனவு கண்டிருக்கிறார் மோடி. ஆனால் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பே பாராளுமன்றத்தையே மதிக்காமல் பெட்ரோல், டீசல், சமையல் காஸ், சர்க்கரை ஆகியவற்றின் விலைகளையும், இரயில் கட்டணங்களையும் கடுமையாக உயர்த்திவிட்டு, பட்ஜெட்டில் வருமான வரி சம்பந்தமான சில்லரைச் சலுகைகளை தந்து மக்களை ஏமாற்றியிருக்கிறார் நரேந்திர மோடி என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
அத்தியாவசியப்பொருட்களின் விலையுயர்வை தடுப்பதற்கு - விலையேற்றத்திற்கு காரணமான ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்வதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காததன் மூலமாகவும், மேற்கண்ட அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை இவராக உயர்த்தியதன் மூலமாகவும் மக்களின் வாங்கும் சக்தியை குறைத்துவிட்டு சேமிப்பிற்கு 1.5 இலட்சமாக உயர்த்தியது என்பது நகைப்பிற்குரியது. இது யாரை ஏமாற்றுகிற வேலை. ஒரு பக்கம் உழைப்பாளி மக்களின் - ஊழியர்களின் வருமானம் உயரவில்லை. இன்னொரு பக்கம் அதற்கு நேரெதிராக விலைவாசி விண்ணை நோக்கி உயர்ந்துகொண்டே போகிறது. இந்த சூழ்நிலையில் இவர்களால் எப்படி சேமிக்கமுடியும்...? - இவர்கள் சேமிப்பிற்கு எங்கே போவார்கள்...? என்கிற பொதுபுத்தி கூட மத்திய நிதியமைச்சருக்கு இல்லாமல் போனது நம்முடைய துரதஷ்டம் தான். வாங்கற சம்பளம் காய்-கறி வாங்கறதுக்கும், மளிகை சாமான்கள் வாங்கறதுக்கும், வண்டிக்கு பெட்ரோல் போடறதுக்குமே சரியா இருக்கு. இதுல எங்கிருந்து சேமிக்கிறது. இந்த சலுகை சாதாரண நடுத்தர மக்களுக்கு எந்தவகையிலும் பயன்தராது. பாத்துகிட்டே இருங்கள்... கூடியவிரைவில் மோடியின் அடிவருடிகள் வழக்கம்போல் மோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் ''பொருளாதார மேதைகள்'' என்ற நாமத்தை சூட்டினாலும் சூட்டுவார்கள். நாம்ப பார்க்கத்தான் போறோம்.
மொத்தத்தில் தனக்கு வாக்களித்த மக்களைப் பற்றிய அக்கறையில்லாமல், மாற்றம் விரும்பிய மக்களை ஏமாற்றம் அடையச்செய்த மோடியின் பட்ஜெட் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக