அண்மையில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாம் தலைமை நீதிபதியாக பணியாற்றிய காலத்தில், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் வீற்றிருந்த திமுகவும், அக்கட்சி தலைவர் கருணாநிதியும் நீதித்துறையில் தலையீடு செய்து அன்றைய பிரதமரை மிரட்டி தனக்கு வேண்டிய ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிலமர்த்தியதாகவும், பின்னர் அதே நீதிபதிக்கு பணி நீட்டிப்பை பெற்றதாகவும், அப்படிப்பட்ட பலனை அனுபவித்த அந்த நீதிபதி ஓர் ஊழல்வாதி என்றும் ப்ளாகில் வெளிப்படையாக எழுதி உண்மையை போட்டுடைத்தார். அந்த செய்தி எல்லா ஊடகங்களும் பரபரப்புச் செய்தியாக வெளியிட்திருந்தது.
நீதியரசர் வெளியிட இந்த செய்தி கருணாநிதியின் கோபத்தை கிளறிவிட்டது. நெற்றிக்கண்ணை திறந்தார். திமுகவினர் அக்னிப்பிழம்பாய் கொதித்துப்போனார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து மார்கண்டேய கட்ஜு இப்போது ஏன் சொல்லவேண்டும் என்றெல்லாம் கேள்வி கேட்டு நடந்த உண்மையை மழுப்பப் பார்த்தார்கள். ஆனால் காலம் கடந்து சொல்லப்பட்டாலும் உண்மை உண்மை தானே...? நீதியரசர் கட்ஜு கூறியது உண்மை இல்லையென்றால் திருவாளர் கருணாநிதி அவர்கள் அதை மறுத்திருக்கலாமே...! அப்படி மறுப்பு சொல்லாமல் தன்னைப்பற்றி எழுதிவிட்டார் என்பதற்காக நீதியரசர் மீதே சேற்றை வாரி இறைப்பதன் மூலம் நீதியரசர் வெளியிட்ட சம்பவம் உண்மை என்று உறுதியாகிறது.
தனக்கு வேண்டியவர்களை - தனக்கு விசுவாசம் காட்டியவர்களை விருது கொடுத்து கவுரவிப்பதும், உயர் பதவிகளை கொடுத்து உயர்த்துவதும் திமுகவிற்கோ அதன் தலைவர் கருணாநிதிக்கோ ஒன்றும் புதிதல்லவே. இதெல்லாம் இவர்களுக்கு கைவந்த கலை என்பது மக்களுக்கு தெரியாதா என்ன...?
இது போன்று நீதித்துறையில் நடைபெறும் தலையீடுகளை தடுப்பதற்கும், நீதித்துறையில் பரவியுள்ள ஊழல்களை ஒழித்துக்கட்டவும், நேர்மையான முறையிலான நீதிபதிகள் தேர்வை உறுதிசெய்யவும், ஊழல் நீதிபதிகளை நீக்கவும், நேர்மையான நீதிபதிகளின் பணிநீட்டிப்பை வழங்கவும் ''நீதித்துறை ஆணையத்தை'' அமைக்கவேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள், சமூக சிந்தனையாளர்கள், நீதியரசர் மார்கண்டேய கட்ஜு போன்ற ஓய்வுபெற்ற தலைமைநீதிபதிகள் போன்ற நேர்மையான நீதிமன்ற நடவடிக்கைகளை விரும்பும் பெரியோர்களின் நீண்ட நாளைய கோரிக்கையான ''நீதித்துறை ஆணையத்தை'' விரைவில் மத்திய அரசு அமைத்திடல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக