இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் திருமதி.பாத்திமா பாபு அவர்கள் முகநூலில் தன்னுடைய படங்களைப் போட்டு மிகுந்த வேதனைகளுடன் தன்னிலை விளக்கம் அளித்திருந்தார். உண்மையிலேயே அந்த விளக்கத்தைப் படிக்கும் போது கோபம் தெரியவில்லை. ஆனால் அவரது வேதனை தான் நமக்கு தெரிந்தது. ஆனால் யாரோ ''வக்கிர புத்தியுள்ள'' ஒருவனோ அல்லது குழுவோ மூளையை செலவழித்து உருவாக்கிய ''அந்த ஆபாசப்'' படத்தைப் பார்க்கும் போது நமக்கே மிகுந்த கோபம் கொப்பளித்து. திருமதி.பாத்திமா பாபு அவர்களின் புகைப்படத்திலுள்ள அவரது முகத்தை மட்டும் வெட்டி, தனது கணினி மூளையை பயன்படுத்தி ஆபாசமாக உடையணிந்த வேறொரு பெண்ணின் உடலில் பொருத்தி வலைத்தளத்தில் உலவவிட்டிருக்கிறார்கள். அதைப்பார்த்து அதிர்ந்து போன அம்மையார் அந்த புகைப்படத்தில் உள்ள முகம் மட்டுமே தன்னுடையது என்றும், அந்த முகத்தை வேறொரு புகைப்படத்திலிருந்து திருடியிருக்கிறார்கள் என்றும் தன்னிலைவிளக்கம் கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். முகநூலில் இதுபோன்ற வக்கிரபுத்தியுள்ள இளைஞர்களை பார்க்கும் போது மனதில் கோபம் கொப்பளிக்கும். யாரை குற்றம் சொல்வது....? அவர்களை பெற்று வளர்த்த பெற்றோர்களையா...? இல்லை சமூகத்தையா....? இன்றைய கல்வி முறையையா...? யாரை குற்றம் சொல்வது....?
இது ஒரு புறம் இருக்க....! இன்னொரு பக்கம்....!
எங்கள் அலுவலக தோழியர் திருமதி.பத்மாவதி கஜேந்திரன் ஒரு புதிய சி.டி.-யை
கொடுத்து, இது என் மகனும் அவனது நண்பர்களும் சேர்ந்து மகளிர் தினத்தை
முன்னிட்டு எடுத்த குறும்படம்... போட்டுப் பாருங்கள் என்று கொடுத்தார்.
அப்படி என்ன செய்திருக்கப்போகிறார்கள் என்று நினத்துக்கொண்டே
வாங்கிப்பார்த்தேன். அந்த சி.டி - யின் மேலே எழுதப்பட்டிருந்த
குறும்படத்தின் பெயரைப் பார்த்தவுடனேயே அதிர்ந்து போனேன். ''வீரம்
விதைத்திடு பெண்ணே.....!'' என்ன அருமையான தலைப்பு. கணினியில்
போட்டுப்பார்த்தேன். அப்பப்பா...! இப்பவும் அதிர்ந்து போனேன்.பாடலும்,
பாடலுக்கேற்ற காட்சிகளும் அருமை.... அற்புதம்....! பெண்ணிற்கு வீரம்
கொடுக்கும் பாடல். பாடலுக்கு இடையே வரும் வசனமே இல்லாத காட்சிகளை நம்மால்
சுலபமாக புரிந்துகொள்ள முடிகிறது. இவர்கள் புதுவை பொறியியல் கல்லூரியில்
முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள். இவர்களுக்கு மட்டும் எப்படி இப்படியொரு
சிந்தனை ஏற்பட்டது. இவர்களையும் அதே பெற்றோர்கள் தானே பெற்றார்கள். அதே
சமூகம் தானே வளர்த்தது. பெண்ணை உயர்வு செய்யும் அவர்களது சிந்தனைகளை நாம்
அவசியம் பாராட்டியாக வேண்டும். இப்படிப்பட்ட இளைஞர்களை பார்க்கும் போது பெருமையாக மட்டுமல்ல மனதில் நிம்மதியாகவும் இருக்கிறது.
ஒரே சமூகத்தில் இரு மாதிரியான சிந்தனைகள் - எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள்...... எப்படி சாத்தியமானது.
குறிப்பு : இந்த மூன்று இளைஞர்களில் ஒருவரின் பெயர் பிரசன்ன ஆதிசேஷா (இடது). உண்மையில் மிக சிறந்த கலைஞன். இவர் எங்கள் அலுவலக தோழியர் பத்மாவதி கஜேந்திரன் அவர்களின் மகன் - புதுச்சேரி பொறியியல் கல்லூரி முதலாண்டு மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. பாராட்டுகள் பிரசன்னா.....! மேலும் மேலும் முன்னேறு...!