தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து ஒரு கால் நூற்றாண்டு காலம் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
எம். ஜி. ஆர் சுமார் 135 படங்களில் நடித்திருக்கிறார். அத்தனைப் படங்களிலும் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் இரக்கமனம் படைத்த நல்ல மனிதனாகவே நடித்தது என்பது அவரது ரசிகர்களை அதே வழியில் செல்ல அவர்களது சிந்தனையை தூண்டியது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. அவர் திரைப்படத்தில் ஏழை மக்களுக்கு உதவுவார். உழைப்பாளி மக்களின் உரிமைகளை கேட்கும் தோழனாக இருப்பார். இவரை அடிக்கும் வில்லன்களிடம் கூட இரக்கம் காட்டுவார். இவரை தாக்கும் வில்லன்களை உடனே தாக்கமாட்டார். பிறகு அடிவாங்கிய அதே வில்லனுக்கு அறியுரை வழங்கி உதவிசெய்வார். இவரது சண்டைக்காட்சிகளில் வன்முறை இருக்காது. ஒரு முறை அன்றைய சோவியத் யூனியனில் நடைபெற்ற திரைப்படவிழாவில் எம். ஜி. ஆர் நடித்த திரைப்படம் ஒன்றையும் திரையிட்டிருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், எம்ஜிஆர் கத்தி சண்டைப் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரஷிய மக்கள் ''எம்ஜிஆர் அழகா டான்ஸ் ஆடுறாரு'' என்று சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளாக இருக்கும். எம்ஜிஆர் கதாநாயகியிடம் கூட சண்டைப்போட்டுட்டு வருகிறேன்னு சொல்ல மாட்டார். ''விளையாடிவிட்டு வருகிறேன் வேடிக்கைப்பார்'' என்று சொல்லி சண்டைக்காட்சிகளை கூட விளையாட்டாய் செய்வார்.
கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொண்டால், சாகசங்களை எல்லாம் செய்து காப்பாற்றுவார். காதல் காட்சிகள் விரசமில்லாது இருக்கும். எல்லை மீறாத காதலாக இருக்கும். காதல் பாடல்கள் இலக்கியமாக இருக்கும். எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை பாடல் காட்சிகளில் கூட கதாநாயகியை தொடாமல் நடித்து வந்திருக்கிறார். அதேப்போல, எம்ஜிஆர் திரைப்படத்தில் கதைக்காக கூட மது அருந்துவது போலவோ, சிகரெட் குடிப்பது போலவோ நடித்ததில்லை. பெண்களை கேலிசெய்வது போன்றெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு மதிப்பளிப்பதும், அம்மாவை உயர்த்திக்காட்டுவதும், உயர்த்தி பாடுவதும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறியுரை வழங்குவதும், அறியுரை வழங்கி பாடுவதும் எம்ஜிஆர் படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.
இப்படியெல்லாம் எம்ஜிஆர் நடித்ததால், அவரை நியாங்களை கேட்கும் ஒரு நல்ல வீரனாகவும், காதல் ததும்பும் கதாநாயகனாகவும், உதவிகள் செய்யும் நல்ல மனிதனாகவும், நன்னடத்தை கொண்ட நல்ல பண்பாளராகவும் மக்கள் பார்வையில் உயர்வான மனிதராக காட்சியளித்தார். பிற்காலத்தில், இப்படியாக அவர் நடித்த திரைப்படங்களும், அவரைப்பற்றிய மக்களின் பார்வையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையுமே அவரை தமிழக அரசியலில் ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்றது.
இன்றைக்கு அவரது காலத்திற்கு பிறகு, அவரை பின்பற்றி நடிப்பவர்களும், தனக்கென தனி முத்திரையோடு நடிப்பவர்களும் எம்ஜிஆரைப் போன்று மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை என்பது உண்மை.
அதுவும் இன்றைக்கு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை பார்க்கும் போது, இளைஞர்களைப் பற்றி - குழந்தைகளைப் பற்றி - சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமல் வெறும் இலாப நோக்கத்தில் நடிக்கும் கதாநாயகர்களைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய ஹீரோக்கள் என்றால், மது அருந்துவார், புகைப்பிடிப்பார், பெண்களை கேலி செய்வார், அம்மா - அப்பாவை மதிக்கமாட்டார், அப்பா சட்டைப்பையிலிருந்து காசு திருடுவார், சண்டைக்காட்சிகளில் வில்லன்களை விட மோசமாக வன்முறையோடு சண்டைப்போடுவார், எதிரிகளின் மண்டை உடையும் - எலும்புகள் முறியும் - ரத்தம் சொட்டும் - கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தூக்கி எறியப்பட்டு உயிர் போகும் - வரம்பு மீறி காதலிப்பார் - இப்படியாக நல்லப் பண்புகளே இல்லாத கதாநாயகர்களையே நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்தக்காலத்தில் வில்லன்கள் செய்ததை எல்லாம் இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்.
அதனால் தான் இவர்கள் எம்ஜிஆரைப் போல் மக்களின் மனதில் நிற்பதில்லை. அதனால் தான் இன்றைய ஹீரோக்களைப் பார்க்கும் போது மக்களின் மனதில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக