தனது குடும்ப சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் ஜான் பென்னிகுயிக்கிற்கு, தேனீ மாவட்டம் முல்லைப் பெரியாறு அணை லோயர் கேம்ப் பகுதியில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார்.
யார் இந்த ஜான் பென்னிகுயிக்...?
இன்று தென் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றைக்கும் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் உதவிசெய்யும் முல்லை பெரியாறு அணையை கட்டிய பெருமைக்குரியவர் தான் இந்த ஆங்கிலேய பொறியாளர் ஜான் பென்னிகுயிக் என்பவர். சென்னை மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர் தான் கர்னல் ஜான் பென்னிகுயிக். அப்போது பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன், சென்னை மாகாணத்தில், வைகை வடிநிலப்பரப்பில் பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை கண்ட பென்னிகுயிக் மிகவும் வருத்தம் அடைந்தார். அப்போது தான் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் அனுமதியையும் பெற்றார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 - ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னிகுக் இங்கிலாந்திற்கு திரும்பிச் சென்று அங்குள்ள தன் குடும்பச்சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறதென்றால் அதற்கு பென்னிகுயிக் தான் காரணம் என்பதை நாம் நன்றி உணர்வோடு நினைவு கூறவேண்டும்.
இன்று பாலம் கட்டியே சொத்து சேர்ப்பவர்கள் மத்தியில் அன்று மக்களின் - பயிர்களின் தாகம் தீர்க்க தன் சொத்தையே விற்று பாலம் கட்டியிருப்பதை பார்க்கும் போது நமக்கெல்லாம் அதிசயத்தக்க விஷயமாக தெரிகிறது.
இவருக்கு தமிழக மக்களின் நன்றிக்கடனாக ஏற்கனவே, தமிழ்நாடு அரசால் முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் பென்னி குக்கின் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு மார்பளவு சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. மதுரையிலும், பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் இவருக்கு முழு உருவ சிலை ஒன்றினையும் வைத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் இருக்கும் பல விவசாயக் குடும்பங்களின் வீடுகளில் இன்றைக்கும் பூஜை அறையில் பரியவர்கள் படத்துடன் பென்னிகுக் படம் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேப்போல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் சில விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் குழந்தைகளுக்கு பென்னிகுக் என்று பெயர் வைக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.தேனி மாவட்டத்தில் பாலார்பட்டி, கூழையனூர் போன்ற ஊர்களில் பென்னிகுக் நினைவைப் போற்றிட ஆண்டு தோறும் கிராமத்துத் தெய்வங்களை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கமும் கூட இன்றும் உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசும், தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் 2500 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.1 கோடி செலவில் பென்னிகுவிக் சிலையுடனான மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக தமிழக முதமைச்சர் அறிவித்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக