சென்ற சனிக்கிழமையன்று ''வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு'' வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவித்து நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.100கோடி அபராதம் வழங்கி தீர்ப்பளித்து அன்றைய தினமே சிறைக்குள் தள்ளியது. ஜெயலலிதா சிறைக்கு சென்றது எதற்காக என்று அவரது அமைச்சர்களும், கட்சிக்காரர்களும் யோசிக்கவே இல்லை. என்ன ஆர்ப்பாட்டம்...? தமிழ்நாட்டையே கதிகலங்க வெச்சிட்டாங்க. பொது சொத்தான பஸ்களை எரிக்கிறது. திறந்திருக்கும் கடைகளை அடித்து நொறுக்கிறது. தனியார் வாகனங்களை தீயிட்டு கொளுத்துவது. சேதப்படுத்துவது. ஜெயலலிதாவின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் என்னா.. அட்டகாசம் பண்றாங்க. பொது மக்கள் இவர்களுக்கு எதிராக திரும்பினால் என்னாகும். ஜெயலலிதா என்ன சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றாரா...? அல்லது மக்கள் பிரச்சனைகளுக்காக போராடி சிறைக்கு சென்றாரா...? இல்லையே அரசு பதவியை தவறாக பயன்படுத்தி பொதுமக்களின் சொத்துக்களை அல்லவா கொள்ளையடித்து சிறைக்கு சென்றுக்கிறார். இதில் ஏன் உடன்பிறப்புகள் ஆத்திரப்படவேண்டும்... கோபப்படவேண்டும்...? இந்த கோபத்திலும், ஆத்திரத்திலும் கொஞ்சம் கூட நியாயமில்லையே. இதன் மூலம் மக்களிடம் அனுதாபத்தை பெற்றுவிடலாமென்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களே ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு வாயசைத்திருக்கிறாரே. ''ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்'' - இந்தப்பாடல் கருணாநிதிக்கு மட்டுமல்ல. ஜெயலலிதாவிற்கு கூட பொருந்தும் தானே. ஒரு தவறை மறைப்பதற்கு இன்னொரு தவறு தீர்வாகாது என்பதை மறந்து விட்டு செய்கிறீர்கள்.
தீர்ப்பின் காரணமாக ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவி பறிபோனப் பிறகு, நேற்று அவரின் விசுவாசி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 30 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றது. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா இல்லாத மூன்றாவது அதிமுக அமைச்சரவை இது. இந்த பதவியேற்பு விழா முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வித்தியாசமாக நடைபெற்றது. கவர்னர் மாளிகையை ஒரு இழவு வீடாகவே மாற்றிவிட்டார்கள் அதிமுகவினர். தங்கள் தலைவி சிறையலடைக்கப்பட்டு செக்கிழுத்துக் கொண்டிருக்கும் வேளையில் நமக்கு அமைச்சர் பதவி ஒரு கேடா என்பது போல், பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் பொறுப்பேற்ற பன்னீர்செல்வம் முதல் எல்லோருமே பதவியேற்கும் போது ஒப்பாரி வெச்சி அழுதாங்க. இப்படி அழுவதன் மூலம் ஜெயலலிதாவிடம் தங்களின் விசுவாசத்தை காட்டுவதற்கும், தமிழக மக்களிடம் அனுதாப அலையை உயர்த்துவதற்கும் பெரும் முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது போல் அந்த நிகழ்ச்சி அனுதாபத்தை உயர்த்தவில்லை. மாறாக எரிச்சலை தான் உண்டுபண்ணியது. அதை தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று நினைத்துக்கொண்டார்கள். தொலைக்காட்சியில் அழுதால் தான் அதன் ''ரேட்டிங் பாய்ன்ட்'' உயரும். அதே மாதிரி இங்கும் அழுவதால் என்ன பயன்...? ஜெயலலிதாவிற்கு கிடைத்த தண்டனையிலிருந்து எதிர் காலத்தில் தவறு செய்யாமல் ஆட்சி செய்யவேண்டும் என்ற பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுங்கள். இது தான் இன்றைய தேவை என்பதை மனதில் வைத்து ஆட்சி செய்யுங்கள். மக்களும் அதை தான் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார்கள்.