திங்கள், 30 செப்டம்பர், 2013

எனது இனிய தோழரின் பணி நிறைவு...!          எல்.ஐ.சி. - யில் கடந்த 39 ஆண்டுகளுக்கு முன் ஒரு தட்டெழுத்தராக சிதம்பரத்தில் பணியில் சேர்ந்து உயர்நிலை உதவியாளராக புதுச்சேரியில் இன்று பணி ஓய்வுபெற்ற என்னினிய நண்பரும், தோழமை குணம் கொண்ட அருமைத்தோழருமான ஆர்.சாய்ஜெயராமன் அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன்... வழியனுப்புகிறேன்...!
         முதல்நிலை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, அதிக வருவானம், அந்தஸ்து, அதிக ஓய்வூதியம் , இன்னும் பல பலன்கள் பெறுவதற்கு வாய்ப்பிருந்தும், தான் ஓய்வுபெறும் இறுதி நாள் வரை அதற்கெல்லாம் ஆசைப்படாமல், மூன்றாம் நிலை ஊழியராகவே பணி  ஓய்வு பெற்றது என்பது பாராட்டுதற்குரியது. இவரோடு பணியில் சேர்ந்தவர்கள் எல்லாம் பதவி உயர்வு பெற்று சென்ற போதும், அதில் துளி கூட ஆசைப்படாமல் மூன்றாம் நிலை ஊழியராகவே இருந்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு பலம் சேர்த்தவர். சங்கம் நடத்திய போராட்டங்களுக்கு வலிமை சேர்த்தவர். வேறு கொள்கை, வேறு சிந்தனை - இப்படியாக அவரது எண்ணங்கள் வேறுவேறாக இருந்தாலும், சங்கம் என்று வந்துவிட்டால் சங்கம் கிழித்தக் கோட்டை தாண்டமாட்டார். அதற்காகவே அவரை நெஞ்சார பாராட்டவேண்டும்.
         அதேப் போல், இத்தனை ஆண்டுகள் சங்கத்தில் உறுப்பினாராக இருந்திருக்கிறார். சங்கத்தின் பதவிக்கும் அவர் இதுவரை ஆசைப்பட்டவர் அல்லர். அவர் நினைத்திருந்தால் ஓய்வுபெறும் வரை ஏதாவது ஒரு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கலாம். அப்படியெல்லாம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு - அடுத்தவர்களின் உயர்வுக்கு வழிகாட்டியாக மட்டுமே இருந்திருக்கிறார். அடுத்தவர்களின் முன்னேற்றத்தை சகித்துக்கொள்ள முடியாமல், அவர்களை ஒழித்துக்கட்டும் வேலைகளில் ஈடுபடுவோர்கள் மத்தியில் இப்படியும் ஒரு அபூர்வமான மனிதர்.
           கடந்த காலங்களில் கொள்கை ரீதியாக - சிந்தனை ரீதியாக நாங்கள் அலுவலகத்தில் சண்டைப்போட்டுக்கொள்வோம். நான் அவரிடம் ஏதாவது வம்பிழுத்துக்கொண்டே இருப்பேன். ஒரு ஆரோக்கியமான விவாதமாகத் தான் இருக்கும். நாளை முதல் நான் என்ன செய்வேன். பணி  நிறைவு என்பது இயற்கையானது. கட்டாயமானது. அந்த வகையில் அவரை வாழ்த்தி வழியனுப்புகிறோம். தோழர். சாய்ஜெயராமன் அவர்கள் மீதிருந்த மரியாதை மற்றும் தோழமை காரணமாக புதுச்சேரி லிகாய் - முகவர் சங்கத்தின் சார்பில் முகவத் தோழர்கள் பொன்னாடை அணிவித்து வழியனுப்பி வைத்தார்கள்.  

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ஜனநாயகத்திற்கு திரும்பிய இலங்கைத் தமிழர்களை பாராட்டுவோம்....!

         
       இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி கடந்த 1988 - ஆம் ஆண்டு தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு நடைபெற்ற தேர்தலுக்குப் பின்,  வடக்கு மாகாணத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இலங்கையைப் பொருத்தவரை இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால் 25  ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் இது என்பது மட்டுமல்ல. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் விடுதலைப்புலிகளின் கை ஓங்கியிருந்த காலம் என்பதால், ''ஈழப்பிரிவினையை'' முன்வைத்தே தேர்தல் நடைபெறும். பிரிவினைக்கு ஒத்துவராத தமிழர் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதே கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கடந்த கால வரலாறாய் இருந்தது. ஆனால் இம்முறை ''ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு'' என்ற முழக்கத்துடன் என்றுமில்லாத அமைதியுடன் நடைபெற்றத் தேர்தல் என்பதால் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் என்று சொல்வது மிகையாகாது. அதற்காக ஜனநாயகத்திற்கு திரும்பிய இலங்கை வாழ் தமிழர்களுக்கு நெஞ்ஜார்ந்தப் பாராட்டுகள். 
           அதேப் போல் பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்து தேர்தலில் போட்டியிட்டு வடக்கு மாகாண தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பெருவாரியான இடங்களில் வெற்றிப்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், அதன் தலைவர்களுக்கும், வடக்கு மாகாணத்தில் அடங்கியுள்ள  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனினா ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 இடங்களில் வெற்றிவாகை சூடிய புதிய மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள். தேர்தலில் வெற்றிப்பெற்று வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் திருமிகு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வோம். 
             தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, ஆளும் ராஜபட்சே அரசும், இராணுவமும் தேர்தலை சீர்குலைக்க பல்வேறு இடையூறுகளை கட்டவிழ்த்து விடுவதாக செய்தித்தாள்களில் செய்திகள் வந்தாலும், அதையும் மீறி ''ஒன்றுபட்ட இலங்கையில் அரசியல் தீர்வுக்காகவும், அதிகாரப்பகிர்வுக்காகவும்'' அமைதியான முறையில் தேர்தலில் பங்கேற்று வாக்குகளை பதிவு செய்த வாயாரப் பாராட்டவேண்டும். ''எங்களுக்கான அரசு அமைந்து விட்டது. இனி ஒன்றுபட்ட இலங்கையில் எங்களுக்கான ஆட்சி, அதிகாரம், ஜனநாயகம், உரிமை இவற்றுக்காக எங்கள் அரசு போராடும். பார்த்துக்கொள்ளும். இனிமேலும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு ''டெசோ'' என்ற பெயரிலும், தமிழீழம் என்ற பெயரிலும்  ஓட்டுக்காக அரசியல் செய்துகொண்டு எங்கள் அமைதியை குலைக்கவேண்டாம்'' என்று சொல்லாமல், இங்குள்ள தமிழக ''தமிழினத் தலைவர்களுக்கு '' இலங்கைத் தமிழர்கள் சொல்லியிருக்கிறார்கள். 
             இனி இலங்கைத் தமிழர்கள், ஜனநாயகத்தின் மீதும், இறையாண்மையின் மீதும் நம்பிக்கை வைத்து, அனைத்து உரிமைகளையும், அதிகாரங்களையும், வாழ்வாதாரங்களையும் பெற்று, உலகில் தனி சிறப்புமிக்க மனிதர்களாக உயர்வார்கள் என்கிற நம்பிக்கை நமக்கிருக்கிறது. இலங்கை அரசும் தங்கள் நாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும்  தங்கள் நாட்டின் குடிமக்கள் என்ற அந்தஸ்தையும், நம்பிக்கையையும், ஆட்சி, அதிகாரத்தையும், வாழ்வாதாரத்தையும் அந்த மக்களுக்கு அரசியல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயங்காமல் அளிக்க முன் வரவேண்டும். அப்போது தான் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் இலங்கை அரசின் மீது நம்பிக்கையும், மதிப்பும் உயரும் என்பது மட்டுமல்ல, இலங்கை நாடும் உலக அரங்கில் எல்லா துறைகளிலும் உயர்ந்து நிற்கும்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

பிரதமர் வேட்பாளர் என்று ஒன்று உண்டா?


கட்டுரையாளர் : ஞாநி, மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர்
  
            குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று பாரதிய ஜனதா கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. பிரதமர் வேட்பாளரை 1998-லிருந்தே ஒவ்வொரு மக்களவைத் தேர்தலின்போதும் இப்படி அறிவித்துவருவதாக அந்தக் கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார்.
          இதற்கு முன்பு அறிவித்த எந்த அறிவிப்பும் இந்த முறை மோடியை அறிவிக்க அந்தக் கட்சி செய்த ஆயத்தங்களுக்கு நிகராகாது. ஏறத்தாழ ஓராண்டுக்கும் மேலாக மோடிதான் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று நிறுவுவதற்கு அக்கட்சியின் பல பிரமுகர்களும் ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகளும் விதவிதமான முயற்சிகள் செய்துவந்திருக்கின்றனர். மோடிக்கு எதிராக உங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று அறிவிக்க முடியுமா என்று காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து சீண்டியும் வந்துள்ளனர். காங்கிரஸ் இதுவரை அந்த வலைக்குள் சிக்கவில்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம்தான்.
         ஏனெனில், பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிப்பது என்பதே இந்திய பாராளுமன்ற ஜனநாயக முறைக்கும் இந்திய அரசியல் சட்டத்துக்கும் விரோதமானதாகும். பெரும் அனைத்திந்திய கட்சிகளில் ஒரு கட்சி அப்படிச் செய்வது என்பது ஆபத்தான போக்கு.
இந்திய அரசியல் சட்டப்படியும் நாடாளுமன்ற, சட்டமன்ற நடைமுறைகள், மரபுகள்படியும், பிரதமர் வேட்பாளர் என்றோ முதலமைச்சர் வேட்பாளர் என்றோ ஒருவர் மக்களிடம் நேரடியாக வாக்குக் கேட்க இடமே கிடையாது. மக்களிடம் வாக்குக் கேட்டுத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் மக்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள் மட்டும்தான். நான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று சொல்லித்தான் தேர்தலில் நின்று ஜெயித்து வந்திருக்கிறேன். என்னைப் பிரதமர் பதவி ஏற்கும்படி குடியரசுத் தலைவர் அழைக்க வேண்டும் என்று எந்த மக்களவை உறுப்பினரும் தனியே அவரிடம் கோர முடியாது. “நீங்கள் மக்களவை உறுப்பினர் பதவித் தேர்தலில் ஜெயித்திருக்கலாம். ஆனால், உங்கள் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. தனிப் பெரும் கட்சியாகவும் ஜெயிக்கவில்லை. அப்படியே தனிப் பெரும் கட்சியாகவோ, அறுதிப் பெரும்பான்மையோ பெற்றிருந்தாலும்கூட, இப்போது உங்கள் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உங்களைத் தங்கள் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்தால்தான் நான் உங்களைப் பிரதமர் பதவிக்குப் பரிசீலிக்க முடியும்” என்றே குடியரசுத் தலைவர் பதில் சொல்ல முடியும்.
              எனவே பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை ஒரு கட்சி அறிவித்து தேர்தலில் நிறுத்தச் சட்டத்தில் இடமே இல்லை. அப்படி அறிவித்து நிறுத்துவதன் பின்விளைவுகள் தேவையற்ற சிக்கல்களையும் ஏற்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, நரேந்திர மோடி ஜெயிக்கிறார், பா.ஜ.க-வுக்குத் தனிப் பெரும் கட்சி நிலைகூடக் கிட்டவில்லை என்று வைத்துக்கொள்வோம். மோடி பிரதமராக முடியாது. அவர் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி ஜெயித்திருந்தாலும் பிரதமராக முடியாது என்றால், என்ன அர்த்தம்? தனி நபர் வெற்றி அடிப்படையில் பிரதமர் பதவி தரப்பட மாட்டாது என்ற சட்டப்படியான நிலையை மறைத்துத் தேர்தலைச் சந்திப்பது எப்படி நியாயமாக முடியும்? அடுத்து, நாங்கள் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடங்களைப் பெற்றால் மோடியைப் பிரதமராக்குவோம் என்றுதான் சொல்கிறோம் என்று வாதாடலாம். இதுவும் தவறானது. தேர்வாகி வரும் சுமார் 252 பா.ஜ.க. உறுப்பினர்களில் பெரும்பாலோர் மோடி பிரதமராகக் கூடாது என்று, அத்வானியோ சுஷ்மாவோதான் ஆக வேண்டும் என்றும் அப்போதுகூட மாற்றி முடிவு செய்யலாம். அரசியலில் அப்படியெல்லாம் நடக்காது என்று எதையும் சொல்ல முடியாது.
            அப்படிச் செய்தால், மோடி பிரதமராவார் என்று சொல்லித்தானே என் ஓட்டை வாங்கினீர்கள், அத்வானி, சுஷ்மா என்றால் நான் உங்கள் கட்சிக்கு ஓட்டே போட்டிருக்க மாட்டேனே என்றுகூட வாக்காளர்கள் கருதலாம். இன்னொரு சாத்தியமாக, கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தாலும், மோடி மட்டும் மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போய்விட்டால், வேறொருவரைத்தான் பிரதமராக்க வேண்டியிருக்கும். ஆறு மாதத்துக்குள் வேறு தேர்தலில் நிற்கவைத்து அவரை ஜெயிக்க வைக்கலாம் என்று தோற்றவரைப் பிரதமராக்க முயற்சித்தால் அது தார்மிகமாகாது.
          இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை இப்போதுள்ள சட்டங்களின்படி தனிநபரை முன்னிறுத்துவதல்ல. கட்சியை முன்னிறுத்தியே விதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் கட்சிகளில் ஒரு கட்சியைப் பெரும்பான்மைக்குரியதாகத் தேர்வு செய்கிறார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தங்கள் தலைவரை அதன் பின் தேர்வு செய்யலாம் என்பதே இந்த நடைமுறை.
            இதை மாற்றித் தனிநபரை பா.ஜ.க. முன்னிறுத்த முயற்சிப்பது ஏன்? பெருவாரியான மாநிலக் கட்சிகளும் இப்படித் தனிநபரையே மாநில அளவில் முன்னிறுத்துகின்றன. அதையே மத்திய அரசுக்கும் விரிவுபடுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. கட்சியைவிட தனி நபரே கவர்ச்சியானவர் என்று காட்டுவதுதான் பாசிஸத்தின் ஆதார வேர். தவிர மாநில அளவில் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் இந்திய அளவில் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் வேறுபாடுகளும் உள்ளன.
          தனிநபரை முன்னிறுத்தும் போக்கு, இந்திய அளவில் அனைத்திந்திய கட்சிகளுக்கு மட்டுமே சாத்தியமானது. மாநிலக் கட்சிகள் தங்கள் தலைவர்களை இந்திய அளவிலான தலைவர்களாக முன்னிறுத்துவது கடினம். ஆனால் கட்சியின் கொள்கை அடிப்படையில் ஒரு மாநிலத்தில் என்னவெல்லாம் சாதித்தோம், மத்தியிலும் வாய்ப்பு வந்தால் என்ன செய்வோம் என்று கட்சியாக தன்னை முன்னிறுத்துவது சாத்தியமானது.
அது மட்டுமல்ல, பிரதமர் வேட்பாளர் என்று தனிநபர் சார்ந்த போக்கைச் சட்டவிரோதமாக மக்களவைத் தேர்தலின்போதே ஊக்குவிப்பது வேறு வகையிலும் ஆபத்தானது. இந்த அடிப்படையை எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டால், வி.பி.சிங், குஜ்ரால், தேவ கவுடா, சந்திரசேகர், நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகிய நபர்கள் ஒருபோதும் பிரதமராகியிருக்கவே முடியாது. பண பலம் உள்ள தனிநபர் வழிபாட்டை ஊக்குவிக்கும் சக்திகள் மட்டுமே வலிவடையும்.
               அமெரிக்க அதிபர் தேர்தல் முறையை இந்தியாவிலும் ஏற்படுத்த விரும்பும் கட்சிகளில் பா.ஜ.க-வும் ஒன்று. நாடாளுமன்றத்தில் போதுமான பலம் இல்லாவிட்டாலும்கூட, அதிபராகிவிட்டால், சில அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்பது அமெரிக்க அதிபர் அமைப்பின் விசித்திரங்களில் ஒன்று. அப்படிப்பட்ட தனிநபர் அதிகாரத்தை இப்போதுள்ள இந்திய முறைக்குள்ளேயே புகுத்தும் முயற்சியாகவே பிரதமர் வேட்பாளர் அறிவிப்பைக் கருத வேண்டும். இது நம் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல.
நன்றி :
Return to frontpage

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

அடப்பாவிகளா... பக்தி முத்திப்போச்சினா புத்தி வேலை செய்யாதோ....?

 
         சதுர்த்தியும், அயோத்தியும் பக்தி என்ற பெயரில் இந்துக்களின் புத்தியை சலவை செய்யும் பிற்போக்கு சக்திகளின் ஆயுதம். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் இந்த இரண்டு ஆயுதங்களும் கூர்த்தீட்டப்படும். வழக்கம் போல் இந்த முறையும் விநாயகசதுர்த்தி இந்து முன்னணியின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மதம், மொழி, இனம் இவைகளெல்லாம் இளைஞர்களையும் பெண்களையும் மிக சுலபமாக ஈர்க்கும் பொதை. தேர்தல் அருகில் வரவிருப்பதால், இந்த முறை பெண்கள் இளைஞர்களின் ஈடுபாடு மிக அதிகமாகவே தெரிந்தது. தேர்தல் வருவதையொட்டி இந்து முன்னணியும் பாரதீய ஜனதா கட்சியும் வினாயகசதுர்த்திக்காக இந்த முறை செய்த செலவுகளும் ஏராளம். ரொம்ப தாராளம்.
          வழக்கமாக சிறிய அளவில் களிமண்ணில் செய்து வீட்டுக்கு வீடு வழிபடத்தொடங்கி, காலப்போக்கில் மக்களுக்கு மதவெறியை ஊட்டி ஆட்சிக்கு வருவதற்கு சமீப காலமாக ரசாயனக் கலவைகளால் உயரமான பிள்ளையாரை உருவாக்கி முச்சந்திக்கு முச்சந்தி நிறுத்தி ''மதவாத அரசியல்'' கொண்டாட்டமாக மாற்றிவிட்டார்கள். விநாயகசதுர்த்தி கொண்டாட்டம் என்பது ஒரு வகையான போதையாகவே மாறிவிட்டது.
          இந்த ஆண்டு சதுர்த்தியோ முன்னெப்போதும் இல்லாத திருநாளாக மாற்றப்பட்டிருக்கிறது. இம்முறை பிள்ளையார் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். இந்த முறை பிள்ளையாரின் பரிணாம வளர்ச்சி மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு அடுத்த பரிமாணத்தை அடைந்திருக்கிறது. இன்றைக்கு ஆட்சியாளர்களின் தவறான கொள்கையினால் நாடு ரூபாயின் மதிப்பை இழந்து பொருளாதார வீழ்ச்சியில் கரை தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பிள்ளையாரின் வளர்ச்சி எதிர்மறையாய் இருக்கிறது. இதுவரையில் சில ஆயிரங்களை மட்டுமே செலவு செய்து பிள்ளையார் பொம்மையை செய்தவர்கள், இம்முறை பத்து இலட்சம் ரூபாயை செலவு செய்து 20 கிலோ வெள்ளியிலான பிள்ளையார் சிலையை வீதியில் நிறுத்தி அசத்தியிருக்கிறார்கள். அந்த பிள்ளையார் காவலுக்கு போலீஸ் பட்டாளமே இருந்தது.
          அப்படி செய்த பிள்ளையாரை ஏழு நாள் கழித்து என்ன செய்வது என்ற சர்ச்சை வேறு. பிள்ளையாரை படைத்தவர்கள் மூளையை கசக்கியிருக்கிறார்கள். இறுதியில் மண் பிள்ளையார் மற்றும் இரசாயன பிள்ளையார் இவைகளுடன் இந்த வெள்ளிப் பிள்ளையாரையும் கடலில் போடுவது என்று முடிவெடுத்து நேற்று வழக்கம் போல் பிள்ளையார் ஊர்வலத்தில் இந்த வெள்ளிப்பிள்ளையாரும் அணிவகுத்து  கடற்கரைக்கு  வந்தவுடன் படகில் ஏற்றப்பட்டு பத்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பிள்ளையார் ஆழமான நடுக்கடலில் இறக்கிவிடப்பட்டார் என்பது தான் சோகக்கதை. அந்த வெள்ளிப் பிள்ளையாருடன் ''பகுத்தறிவையும்'' சேர்த்துக்  கட்டிப்போட்டுவிட்டார்கள் என்பது தான் உண்மை.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

இக்கால கல்விமுறை என்னத்த கற்றுக்கொடுக்கிறது....?

       
        நான் சென்ற சனிக்கிழமை ஏழாம் தேதி  இரவு 8.15 மணிக்கு விழுப்புரத்திலிருந்து வள்ளியூருக்கு இரயிலில் சென்றேன். முன் பதிவு செய்யப்பட்டிருந்ததால்  விழுப்புரம் சந்திப்பில் வண்டி வந்து நின்றதும் பெட்டியினுள் எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து அருகில் சென்றேன். அதனுள் ஒரே இளைஞர்கள் கூட்டம். அவர்கள் கைகளில் ஐ பாடு, மொபைல் மற்றும் காதுகளில் வயர் தொங்கிகிட்டு இருந்தது. அவர்களை பார்த்ததும் கல்லூரி மாணவர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் சட்டென்று அப்போது தான் பசி வந்ததை போல் உடனே இரயிலை விட்டு இறங்கி பிளாட்பாரத்தில் டிபன் வாங்க ஓடினார்கள். அதற்குள் இரயில் கிளம்ப மீண்டும் ஓடிவந்து உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டார்கள். நானும்  அவர்களோடு இளைஞர்களோடு இளைஞனாக அமர்ந்து கொண்டேன்.  இரயில் ஓடிக்கொண்டிருந்த வேகத்தில் அவர்களுக்கு பசியும்  அதிகமாகிவிட்டது. திருச்சிக்கு போவதற்கே இரவு 11 ஆகிவிடுமே. அதுவரையில் எப்படித் தாங்கிக்கொள்வது என்று சோகத்தில் ஆழ்ந்தார்கள்.
          யார் வீட்டு பிள்ளைகளோ பசியில்  இப்படி அவஸ்தை அடைவதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. உடனே எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இன்னுமொரு இருபது நிமிடத்தில் விருத்தாசலம் ஸ்டேஷன் வந்துவிடும். விருத்தாசலத்தில் இருக்கும் எல்.ஐ.சி முகவரும், லிகாய் - முகவர் சங்க பொறுப்பாளருமான தோழர். கணேசன் அவர்களை அழைத்தேன். என்னருகே 6 இளைஞர்கள் பசியால் துடிக்கிறார்கள். திருச்சி வரையில் தாக்கு பிடிக்கமாட்டார்கள்.  எனவே 6 செட் டிபன் வாங்கி விருத்தாசலம் இரயில் நிலையத்தில் கொடுக்க முடியுமா..? என்று கேட்டது தான் தாமதம். நாம்ப இது கூட செய்யாம எப்படி தோழர்...?         நானிருக்கும் பெட்டி எண்ணை  மட்டும் கேட்டுக்கொண்டு, கவலைப்படாதீங்க
டிபனோடு வந்துவிடுகிறேன் என்று சொன்னதை கேட்டு நான் ஆச்சரியப்படவில்லை. எங்கள் தொழிற்சங்கமும், மார்க்சிஸ்ட் கட்சியும் கற்றுக்கொடுத்தப் பாடம் வீண்போகவில்லை என்பதை உணர்ந்தேன். மனித நேயம், மானுட பண்பு நம் தோழர்களிடம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
            இருபது நிமிடத்தில் விருத்தாசலம் ஸ்டேஷன் வந்தது. சொன்னது போல் தோழர். கணேசன் டிபன் பையோடு நின்றுந்தார். கேட்டது போல் டிபனும், நான் கேட்க மறந்த தண்ணீர் பாட்டிலையும் ஞாபகத்தோடு வாங்க வந்திருந்தார். நான் நெகிழ்ந்து போனேன். நான் நன்றி பாராட்டினேன். அடுத்த மணித்துளியில் இரயில் அங்கிருந்து புறப்பட்டது. பசியில் இருந்த அந்த இளைஞர்கள் அவசர அவசரமாக பொட்டலத்தைப் பிரித்து வேகவேகமாக சாப்பிட்டு பசியாரினார்கள். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே  ''நீங்கள் எல்லோரும் யாரு... எங்கிருந்து வருகிறீர்கள்...?''             என்றெல்லாம் விசாரித்தபோது தான் தெரிந்தது, அவர்கள் சென்னை செட்டிநாடு ஹெல்த் சிட்டியில் இரண்டாமாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் என்று. எப்படிப்பா தனியார் மெடிக்கல் காலேஜில சீட் வாங்குனீங்க...? என்று கேட்ட போது பகீர் என்றிருந்தது. அவர்கள் ஆளுக்கு 30 இலட்சம் கொடுத்து தான் மெடிக்கல் சீட்டே வாங்கினார்களாம். அது இல்லாமல் வருஷத்திற்கு 6 இலட்சம் செலவாம். என்னதான் காசுக்கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கினாலும், அதே காசைக் கொடுத்து சாப்பாட்டை வாங்கி பசி ஆற முடிந்ததா பார்த்தீர்களா....?
          நாம் ஆறு இளைஞர்களின் பசியை போக்கினோமே என்று என் மனதிற்குள் திரூப்திப்பட்டுக்கொண்டேன். சாப்பிட்டு முடித்தது தான் தாமதம், உடனே பெர்த் எல்லாம் தூக்கி மாட்டினார்கள். அவர்கள் அவர்கள் இடத்தில் ஏறிப்படுத்துக்கொண்டார்கள். டிபன் வாங்கிக்கொடுத்தற்கு நன்றி... இவ்வளவு அக்கறையா எங்களுக்கு டிபன் வாங்கிக்கொடுத்தீர்களே நீங்க யாரு... எங்கிருந்து வரீங்க...டிபன் எவ்வளவு ஆச்சி...? இப்படியெல்லாம் அவர்கள் கேட்பார்கள் என்று எதிர்ப்பார்த்திருந்தேன். ஒன்றுமே பேசவில்லை.  சாப்பிட்டார்கள். கை கழுவினார்கள். தண்ணீர் குடித்தார்கள். காதுக்கும் மொபைலுக்கும் கனெக்சன் கொடுத்தார்கள். ஏறிப்படுத்தார்கள். அவ்வளவு  தான். அதன் பிறகு அவர்களுக்கு எனக்கும் எந்த ஒரு தொடர்பும்  இல்லை. மனிதநேயத்துடன் நாம் உதவி செய்தோம். ஆனால் என்னை ஒரு மனிதனாகக் கூட அவர்கள் மதிக்கவில்லையே. உண்மையிலேயே எனக்கு ஏமாற்றமாக போய்விட்டது.  
           என்ன கற்றுக்கொடுக்கிறது இன்றைய கல்வி முறை. குடும்ப உறவுகளையும், மனித உறவுகளையும் அறுத்தெறிய சொல்கிறதா...? நான் எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டேன்.

இந்திய மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டும் திரிபுரா மாநிலம்...!

அறிவொளி பட்டியலில் திரிபுரா முதலிடத்தை பிடித்தது...!                              
        
              இந்திய அறிவொளி வளர்ச்சி பட்டியலில் திரிபுரா, கேரளாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனாலும் முழு கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலமாக அது மாறவில்லை. இன்றைய தினத்தில் திரிபுராவில் 94.65 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நூறு விழுக்காடு கல்வியறிவு என்பது எங்கள் இலக்கு. அதை விரைவில் நாங்கள் எட்டுவோம் என்று மிக நம்பிக்கையுடன் கூறுகிறார் திரிபுரா மாநிலத்தை வழிநடத்திச் செல்லும் இடது முன்னணியைச் சார்ந்த முதல்வர் மாணிக் சர்க்கார்.                                     
         உலக கல்வியறிவு தினத்தையொட்டி அகர்தலாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மாநில அறிவொளி இயக்கத்திற்கு அவர் நன்றி கூறியதுடன், மாநிலத்துக்கு பெருமை சேர்த்துத் தந்த இந்த பிரம்மாண்டமான இயக்கத்தில் தங்களது உடல் வருத்தங்களை பொருட்படுத்தாது பாடுபட்ட அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். மாநிலத்தின் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் கிடைத்த மதிப்பீடுகளின் அடிப்படையில் அவர் மாநிலத்தின் அறிவொளி வளர்ச்சி 94.65 விழுக்காட்டை எட்டியது என்ற அறிவிப்பை கூட்டத்தில் வெளியிட்டார்.
            இந்த அருமையான தருணத்தில் மாநிலத்தை முழுகல்வியறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் சில பிரிவு மக்களை, குறிப்பாக மூத்த குடிமக்களை எங்களால் எட்ட முடியவில்லை என்று அறிவொளி இயக்க அதிகாரி வருத்தப்பட்டார். எஞ்சியுள்ள 5.35 விழுக்காடு மக்களுக்கும் கல்வியறிவு அளிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன என்றும் அவர் கூறினார். சுமார் 38 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் முழுவெற்றி அடைவோம் என்றும் அவர் உறுதிபடக்கூறினார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் அதிகபட்ச கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் திரிபுரா நான்காவது இடத்தில் இருந்தது. 2011 புள்ளிவிவரப்படி திரிபுராவில் 87.75 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றிருந்தனர். பாதுகாப்பு படையினர் ஆயுதமேந்திய கலவரக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டு வந்த பின் அறிவொளி இயக்கத்தினரால் தொலைதூர மலைப்பகுதி மக்களை அடைய முடிந்தது. அதன் பலனாக அப்பகுதிகளில் அறிவொளி இயக்க வேலைகள் சிறப்பாக நடந்தன. மிசோரமில் கல்வியறிவு வளர்ச்சி 88.80 விழுக்காடு என்றும் கேரளாவில் இது 93.91 விழுக்காடு என்றும் திரிபுரா அரசு அதிகாரிகள் கூறினர்.
          2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திரிபுரா கல்வியறிவு வளர்ச்சியில் பன்னிரண்டாம் இடத்தில் இருந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது திரிபுரா நான்காவது இடத்துக்கு முன்னேறியது என்றும் அவர் கூட்டத்தில் கூறினார். 2011 கணக்கெடுப்பில் திரிபுரா 87.75 விழுக்காட்டை அடைந்த பின்பு, ஆகஸ்ட் 2012, அரசு எட்டு மாவட்ட ஆட்சியாளர்களைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தியது. 38 லட்சம் மக்கள் வாழும் மாநிலத்தில் ஐம்பது வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களும் அடங்கிய 1.31 லட்சம் மக்கள் மட்டுமே கல்வியறிவு பெறாதவர்கள் என்று தெரியவந்தது என்று மாணிக் சர்க்கார் கூறினார். ஆகஸ்ட் 10 முதல் 25 தேதிவரை கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்ட இந்திய புள்ளிவிவர நிறுவனத்தின் (ஐஎஸ்ஐ) தலைமையில் புதிதாக கல்வியறிவு பெற்றவர்கள் பற்றிய இறுதி மதிப்பீடு நடத்தப்பட்டது. ஐஎஸ்ஐ இடைக்கால அறிக்கையின்படி மாநிலத்தின் கல்வியறிவு 94.65 விழுக்காட்டை எட்டியுள்ளது தெரியவந்துள்ளது. ஐஎஸ்ஐ இறுதி அறிக்கை கிடைக்கும் போது மாநிலம் 96 விழுக்காட்டை எட்டியிருக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். கிராம பஞ்சாயத்து, கிராம சபைகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், உள்ளூர் மன்றங்கள் ஆகியவை முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான மாநில அறிவொளி இயக்கத்தின் மேற்பார்வையில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டதால் திரிபுரா இச்சாதனையை அடைய முடிந்தது. திரிபுராவில் ஆண்களை விட பெண்களின் கல்வியறிவு வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் திலிப் அச்சர்ஜீ கூறினார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பெண்களின் கல்வியறிவு 64.91 விழுக்காடாக இருந்தது.
                  2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது 83.15 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது 18.24 விழுக்காடு உயர்வாகும். ஆண்கள் மத்தியில் இந்த உயர்வு 11.18 விழுக்காடுதான். ஆண்கள் மத்தியில் 2001ல் 81 விழுக்காடாக இருந்த கல்வியறிவு 92.18 விழுக்காடாக உயர்ந்தது என்றும் அவர் கூறினார். இடது முன்னணி அரசின் திட்டங்களும் இதற்கு முன்னோடியாக இருந்தன. மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் படிக்கும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்குஆண்டுதோறும் ரூ.1718ம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1485ம் வழங்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு முறையே ரூ.856ம், ரூ.645ம் வழங்கப்படுகிறது. அதேபோல் கலைப்பிரிவு மாணவர்களுக்கு முறையே ரூ.855ம், ரூ.706ம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற முனைப்புகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்களில் லாபவெறிக்காக போர் தொடுப்பதா...? - அமெரிக்க மக்களின் எதிர்ப்பு முழக்கங்கள்...!

  சிரியா மீது அமெரிக்கா நடத்தும் ராணுவ தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒபாமாவின் போர் முடிவிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பட்டன.             சிரியா நாட்டில் ஆட்சி புரிந்து வரும் பஷார் அல் அசாத் அரசிற்கு எதிராக அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டாண்டுகளாக இவர்கள் நடத்தி வரும் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தும், அகதிகளாகவும் அருகிலுள்ள நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆயுதம் தாங்கிய போராட்டக்குழுவினருக்கு எதிரான தாக்குதலில் சிரியா ராணுவம் ரசாயன குண்டு தாக்குதலை நடத்தியது என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அந்நாட்டின் மீது போர் தொடுக்க ஒபாமா தலைமையிலான அமெரிக்கா அரசு முடிவு செய்துள்ளது.
             இதற்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், சிரியாவிற்கு ஆதராகவும், அமெரிக்காவின் போர் வெறிக்கு எதிராகவும் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சிரியா மீதான ராணுவத் தாக்குதல் குறித்த தனது முடிவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆதரவு திரட்டும் பணியில் ஒபாமா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆனால், ஒபாமாவின் இம்முடிவிற்கு பெரும்பான்மையான அமெரிக்கர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அந்நாட்டில் வாழும் அமெரிக்க மக்களிடம் நடத்தப்பட்ட பல்வேறு கருத்து கணிப்புகளிலும் சிரியா மீது போர் தொடுக்கும் முடிவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டில் போராட்டம் :
           இந்நிலையில், சிரியா மீது போர் தொடுப்பதற்கு எதிராகவும், உலக அமைதியை வலியுறுத்தியும் உலக புகழ்பெற்ற திரைப்பட நகரான ஹாலிவுட்டில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
          இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிரியா மீதான அமெரிக்காவின் ராணுவ தாக்குதலுக்கும், தலையீடுகளுக்கும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், அமெரிக்கா அரசின் போர் முடிவானது ஒட்டுமொத்த அமெரிக்க மக்களின் விருப்பதற்கு மாறானது என்றும், அமெரிக்கர்களின் எண்ணங்களை ஒபாமா அரசு அலட்சியம் செய்கிறது என்றும் வலியுறுத்தும் வாசகங்களை கைகளில் ஏந்தியிருந்தனர்.
            இதேபோல், சர்வதேச வர்த்தக நகரான நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தின் முன்பு திரண்டு நூற்றுக்கணக்கான மக்கள் சிரியாவை தாக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையின் முன்பு திரண்ட மக்கள் மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து அமெரிக்க நடத்தும் மற்றொரு போருக்கு எதிராக ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் “கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்கான மற்றொரு போரை அனுமதியோம்“ , “சிரியா மீது ராணுவ நடவடிக்கை என்ற தீர்மானத்தை நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.

சனி, 7 செப்டம்பர், 2013

Prosecute Narendra Modi - CPI(M)


The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:
 
               The letter written by the jailed police officer Vanzara about the actions taken by him and the other accused in the Gujarat encounter killings confirms in the most direct way what was known to most citizens of this country, that the killings were executed with the full knowledge and direction of those leading the Gujarat Government. In a chilling exposure the letter describes encounter killings as an intrinsic policy of the Gujarat Government against terrorism. Narendra Modi’s numerous statements at the time justifying the killings, fit in perfectly with Vanzara’s defence.
             The efforts of the BJP leadership including its MP and spokesperson Prakash Javedekar in trying to sabotage the processes of justice in case have been revealed in a CD which has been aired on several channels and widely reported in the press. His references to Narendra Modi make it doubly clear that the Chief Minister was in full knowledge and therefore in connivance with the efforts to manipulate the case in their favour.
             The CPI(M) demands that Narendra Modi should be prosecuted in the concerned cases and should forthwith step down from office. It calls for a Supreme Court supervised inquiry to uncover the full facts in the CD case so as to file criminal charges against those involved. In the meanwhile the bail of Amit Shah should be cancelled.
                     This episode once again highlights the utter contempt that the BJP and its leadership, including Narender Modi have for the Constitution of India and the law of the land.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

சிரியா மீது கை வைக்காதே - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...!

        
கட்டுரையாளர் : தோழர். பிரகாஷ் காரத்           
                                பொதுச்செயலாளர்,           
                               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி           
      சிரியா மீது தாக்குதலைத் தொடுக்க அமெரிக்க திட்டமிட்டு வருகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்த பின்னர், சிரியா மீதான ராணுவத் தாக்குதல்கள் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்திருக்கிறார். இவ்வாறு தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில், அமெரிக்க-நேட்டோ படைகள் சமீப ஆண்டுகளில் அரபு நாடு ஒன்றிற்கு எதிராக மேற்கொள்ளும் மூன்றாவது ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக இருந்திடும்.
          2003-ஆம் ஆண்டில், ஜார்ஜ் புஷ் இராக்கின் மீது படை யெடுத்தார். அப்போது, சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்ற தவறான முறையில் போலிக் காரணம் ஒன்றைக் கூறி இவ்வாறு படையெடுத்தார். அடுத்து, ஒபாமா 2011-ஆம் ஆண்டில் லிபியாவிற்கு எதிராக வான் வழியாக ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தார். அப்போது அவர் பெங்காசியில் ரத்த ஆறு ஓடுவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார். இப்போது சிரியா அமெரிக்காவின் குறியாகும். இதற்கு அவர்கள் கூறும் சால்ஜாப்பு: சிரியா ராணுவம், அங்கே கலகம் செய்திடும் படையினருக்கு எதிராக ‘சரின்’ எனப்படும் நரம்புகளைப் பாதிக்கும் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்துகிறதாம்.
         அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளான பிரிட்டனும், பிரான்சும் ‘ ‘சரின்’ வாயுவை ஐ.நா. ஆய்வாளர்கள் புலனாய்வுகளை மேற்கொள்வதற்காக சம்பவ இடங்களுக்குச் செல்வதற்கு முன்பேயே சிரியா அரசாங்கம் பயன்படுத்தியது’ என்று முடிவு செய்துள்ளன. ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று தாங்கள் கூறிய ‘எச்சரிக்கை’யை சிரியா அரசாங்கம் மீறி விட்டது என்பதே ஒபாமாவின் கூற்றாகும். அமெரிக்காவின் ‘அறநெறி’ வேடம் உண்மையிலேயே அதிசயமான ஒன்றாகும். வியட்நாமில் சண்டை நடைபெற்றபோது, அமெரிக்கப்படைகள் ‘ஏஜண்ட் ஆரஞ்சு’ என்னும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலைப் பேரழிவுக்கு உள்ளாக்கின. பிறக்கும் குழந்தைகளில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் ஊனத்துடன் பிறப்பதற்கும் காரணமாய் அமைந்தன.
             இராக்கில், சமீபத்தில்கூட, அமெரிக்கப் படையினர் செறிவு குறைந்த யுரேனியத்தையும், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளையும் பயன்படுத்தி மக்களுக்கு மிகவும் கொடூரமான காயங்களை ஏற்படுத்தினார்கள். இப்போது இதே ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் தான் சிரியா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும், எனவே அதனைத் தாக்கப்போகிறோம் என்றும் தங்களுடைய சட்டவிரோத ஆக்கிரமிப்புக்குக் காரணங்களாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். கற்பனையான ஒன்றை அல்லது அரைகுறை உண்மையைத் தங்கள் ஆக்கிரமிப்புக்கான காரணமாக, ஏகாதிபத்தியம் காலங்காலமாகக் கூறிவரும் உத்தியையே ஒபாமாவும் இப்போது கூறிக்கொண்டிருக்கிறார். கடந்த இரண்டரை ஆண்டு காலமாகவே சிரியா தங்களுக்கு எதிராக சீறியெழுகிற எதிர்ப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
           சிரியாவில் இயங்கும் பல்வகைக் கலகக் கும்பல்கள் தற்போதைய பஷார் அல்-அசாத் அரசாங்கத்திற்கு எதிராக சண்டை புரிந்து கொண்டிருக்கின்றன. சவுதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இக்கலகக் கும்பல்களுக்கு நிதி உதவி, ஆயுத உதவி மற்றும் அனைத்துவிதமான உதவிகளையும் செய்து வருகின்றன. ஜபாட் அல்-நஸ்ரா மற்றும் சலாஃபிஸ்ட்ஸ் போன்ற தீவிர இஸ்லாமியக் குழுக்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான குழுக்கள் பல இவற்றில் அடங்கும். இவ்வாறு கலகம் புரிபவர்களில் சிலருக்கு அமெரிக்க உளவு ஸ்தாபனமான சிஐஏ ஆயுதங்களை வழங்கி இருப்பதோடு பயிற்சியும் அளித்து வருகிறது.
             ஆப்கானிஸ்தான், லிபியா, துனிசியா, ஏமன் மற்றும் செசன்யா நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியக் குழுக்களும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளன. முப்பதாண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானத்தில் என்ன செய்ததோ அதைப் போன்றோ இப்போது சிரியாவிலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் படையினருக்கு அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அரபு உலகத்தில் இயங்கிடும் ஒரேயொரு மதச்சார்பற்ற அரசான சிரியாவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் ஒரே குறிக்கோளாகும். சிரியாவில் கலகம் செய்துவரும் கும்பல் விரைவில் தன்னுடைய லட்சியத்தை எய்திடும் என்றும், சிரியா ஆட்சி தூக்கி எறியப்படும் என்றும் அமெரிக்கா எதிர்பார்த்தது.
               ஆனால் அது நடைபெறவில்லை. தற்போது நடைபெற்று வரும் மோதல்களின் காரணமாக லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள், இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். சிரியா அரசாங்கமும், அதன் ஆயுதப் படைகளும் கலகக் கும்பல்களை விரட்டி அடித்து, அவற்றால் கைப்பற்றப்பட்டிருந்த நகரங்கள் மற்றும் பகுதிகளை சமீப மாதங்களில் மீளவும் கைப்பற்றியுள்ளனர். இத்தகு சூழ்நிலையில்தான் ரசாயன ஆயுதங்கள் பிரச்சனை முன்னுக்கு வந்திருக்கிறது. இந்த ஆண்டு, ஜூன் மாதத்தில், ‘சிரியா ராணுவம் சரின் வாயு பயன்படுத்துவதாகக் கூறி, அதனை எதிர்த்துப் போரிடுபவர்களுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கும்’ என்று அதிபர் ஒபாமா அறிவித்தார். அந்த சமயத்தில், அமெரிக்காவின் கூற்று தவறானது என்று தக்க ஆதாரத்துடன் மெய்ப்பித்துக் காட்டப்பட்டது.
             ஐ.நா. மன்றத்தின் ரஷ்யத் தூதர், சிரியாவில் அலெப்போ என்னுமிடத்தில் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள கலகக் கும்பல்கள்தான் சரின் வாயுவை உபயோகப்படுத்துகின்றன என்பதை தக்க ஆதாரத்துடன் நிரூபித்தார். கடைசியாக ஆகஸ்ட் 21 அன்று டமாஸ்கஸ் அருகில் கௌதா என்னுமிடத்தில் நடைபெற்ற மோதலில் சரின் வாயு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அன்றைய தினம்தான் ஐ.நா. ஆய்வாளர்கள் டமாஸ்கஸ் போய்ச் சேர்ந்திருந்தனர். சிரியா அரசாங்கம் மோதல்களில் வாயு பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள புகார்களை விசாரணை செய்வதற்காக ஐ.நா. ஆய்வாளர்களை சிரியா அரசாங்கம் அனுமதித்த பின்னர் இச்சம்பவம் நடந்துள்ளது.
             இத்தகைய குற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐ.நா. ஆய்வாளர்கள் வந்திருக்கும் நாளன்று சிரியா அரசாங்கம் இவ்வாறு ரசாயன ஆயுதங்ளைப் பயன்படுத்தும் என்பது நம்பமுடியாததாக உள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் உட்பட சிரியாவில் நடைபெற்று வரும் மோதல்களைக் கூர்ந்து கவனித்து வரும் நோக்கர்கள் பலர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். சிரியா அரசாங்கமும் அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. சரின் வாயுவை புகைபோக்கிக் குழல்களில் கலகக் கும்பல்கள்தான் வைத்திருக்கின்றன என்றும் கூறியிருக்கிறது.
             அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் என அனைத்து நாடுகளும் ‘சிரியா அரசாங்கம்தான் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகிறது’ என்று ஒரே குரலில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. மேலும் அமெரிக்கா, ஐ.நா. ஆய்வுக்குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதே மிகவும் காலங்கடந்தது என்று கூறியிருக்கிறது. ஐ.நா. ஆய்வுக்குழு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, அமெரிக்க அரசின் சார்பில் அமைச்சர் ஜான் கெர்ரி சிரியா அரசாங்கம் ரசாயன ஆயுதங்களை உபயோகப்படுத்துவது கண்டனத்திற்குரியது என்றும் இதற்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்றும் அறிவித்திருக்கிறார்.
           ஆயுதந்தாங்கிய ஐந்து அமெரிக்க கப்பல்கள் குருயீஸ் ஏவுகணைகளுடன் கிழக்கு மத்தியத்தரைக்கடல் நோக்கி நகரத் துவங்கியுள்ளன. ராணுவத்தாக்குதல்கள் நிச்சயம் நடைபெறவிருக்கிறது. ஐ.நா. ஆய்வாளர்கள் சிரியாவை விட்டுப் புறப்பட்டவுடனேயே இவை நடத்தப்பட இருக்கின்றன. அநேகமாக எந்த நிமிடமும் இது நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரான் மற்றும் பிரெஞ்சு அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே ராணுவத் தாக்குதல்களில் தங்கள் நாடுகளும் இணைந்து கொள்ளத் தயாராயிருப்பதாகப் பிரகடனம் செய்திருக்கிறார்கள்.
              இந்தச் சூழ்நிலையில் தான் ஒரு தடங்கல் எழுந்துள்ளது. சிரியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் பெறுவதற்காக நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் அறிவித்திருந்தார். நாடாளுமன்றம் ஆகஸ்ட் 29 அன்று கூடியது. பிரிட்டிஷ் பிரதமருக்கு மரண அடி கொடுக்கும் விதத்தில் நாடாளுமன்றம் தன்னுடைய பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் அரசாங்கம் கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்தது. யுத்தத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் உள்ள கடுமையான கருத்தை இது பிரதிபலிப்பதாக அமைந்தது. குறிப்பாக, டோனி பிளேயர் ஈராக்கின் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போது எடுத்த நெறிபிறழ்ந்த முடிவின் அனுபவத்திற்குப் பின்னர் இவ்வாறு அமைந்துள்ளது. இவ்வாறாக, அதிபர் ஒபாமா, தன்னுடைய உடனடி ராணுவத் தாக்குதல் திட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட் டிருக்கிறார்.
         அமெரிக்க காங்கிரசின் ஒப்புதல் கிடைத்தபின்னர் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று அவர் அறிவித்திருக்கிறார். அமெரிக்க காங்கிரஸ் வரும் செப்டம்பர் 9 அன்று மறுபடியும் கூட விருக்கிறது. ஒபாமா, அதிபர் என்ற முறையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆளும் வர்க்க நலன்களைப் பிரதி நிதித்துவப்படுத்துகிறார். அவர் மிகவும் அரக்கத்தனமாகவும், வலதுசாரி சிந்தனைப்போக்கும் உடைய ரிபப்ளிகன் கட்சியினரின்ஆதரவையே மிகவும் நம்பி இருக்கிறார். பிரான்ஸ், தன்னுடைய முன்னாள் காலனியாக இருந்த சிரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் இணைந்திட இன்னமும் அறிவிக்கவில்லை.
          அமெரிக்கா, அதன் மேற்கத்திய கூட்டாளிகள் மற்றும் இஸ்ரேல் சிரியாவை பலவீனப்படுத்த விரும்புகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் ஈரானைத் தனிமைப்படுத்த அவை விரும்புகின்றன. லிபியாவில் செய்ததைப்போல அல்லாமல், ராணுவத் தலையீட்டிற்கு ஐ.நா.வின் அனுமதியை இதற்கு அவர்கள் பெற்று விட முடியாது. ஏனெனில் ரஷ்யாவும் சீனாவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. எனவே, அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் ராணுவத் தலையீட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்று சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ரசாயன ஆயுதங்களின் தாக்குதலிலிருந்து அப்பாவி மக்களைப் பாதுகாக்க வேண்டுமாம்.
               ஆயினும், மேற்கு ஆசியாவை அதன் எண்ணெய் மற்றும் வாயு இருப்புகளுக்காகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும், தங்கள் ஆதிக்கத்தை அங்கே நிலைநிறுத்த வேண்டும் என்கிற ஏகாதிபத்தியத்தின் எண்ணத்தை அதனால் மூடி மறைக்க முடியவில்லை. இராக்கிலும், லிபியாவிலும் அமெரிக்காவும் மற்றும் மேற்கத்திய நாடுகளும் எண்ணெய் வளங்களைத் தற்போது தங்கள் கட்டுப்பாடுகளில் கொண்டுவந்துவிட்டன. இரு நாடுகளுமே அமெரிக்க - நேட்டோ தலையீடுகளுக்குப் பின்னால் ஏற்பட்ட விளைவுகளால் பிரிவினை சக்திகளின் மோதல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
              சிரியாவிலும் கூட, ஏகாதிபத்தியம் சன்னி - ஷியா பிரிவுகளுக்கு இடையே மோதல்களை உருவாக்கி முட்டி மோதவிட்டுள்ளது. அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தங்கள் மேலாதிக்கக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்நாடுகளின் தேசிய இறையாண்மையைக் காலில் போட்டு மிதிக்கவும், அங்கே இயங்கிடும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பிற்போக்கு சக்திகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றன. அமெரிக்கத் தலையீட்டுக்கு எதிராக ஐமுகூட்டணி அரசாங்கம் வலுவாகக் குரல் கொடுக்க முன்வரவேண்டும். அயல்துறை அமைச்சர், சல்மான் குர்ஷித், கூறியிருப்பது போல ஐ.நா. மன்றத்தின் கட்டளைக்கிணங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பது போதுமானதல்ல.
            ஐக்கிய நாடுகள் மன்றத்தின் முடிவுகளை மீறிட அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறது என்று தெளிவாகத் தெரிகையில், ராணுவத் தலையீட்டை இந்தியா வன்மையாகக் கண்டிக்க முன்வர வேண்டும். இடதுசாரிக் கட்சிகள் சிரியாவில் ராணுவத் தலையீட்டு அச்சுறுத்தலுக்கு எதிராக கிளர்ச்சிகள் நடத்திடத் தீர்மானித்திருக்கின்றன. ‘அமெரிக்காவே, சிரியா மீது கை வைக்காதே’ என்ற கோரிக்கையுடன் உலக அளவிலான இயக்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
- தமிழில்: ச.வீரமணி

வியாழன், 5 செப்டம்பர், 2013

யார் நல்லாசிரியர்....?

      
     
''மாற்று'' - வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட எனது கட்டுரை : 

              இன்று  ஆசிரியர்  தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 -ஆம் தேதி நாடு முழுதும் ”ஆசிரியர்கள் தினம்” சிறப்பாக கொண்டாடுப்படுகிறது.  மத்திய – மாநில அரசுகள் கடந்த காலங்களில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர் – ஆசிரியைகளை தேர்ந்தெடுத்து ”நல்லாசிரியர் விருது” அளித்து வருகிறது.
           ஆனால் நம் மனதில் எப்போதும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். விருது பெற்றவர்கள் மட்டுமே நல்லாசிரியர்களா..? இதில் அரசியல் தலையிடு இல்லையா? தேர்வு முறைகளில் நியாமான வகையில் இருக்கிறதா? இத்தகைய கேள்விகள் இருந்தாலும் விருதுபெறாத பெற விரும்பாத  மற்ற ஆசிரியர்களெல்லாம் நல்லாசிரியர்கள் இல்லையா..?  அப்படியென்றால், யார் நல்லாசிரியர்..? இப்படியெல்லாம் கேள்விகள் நமக்குள்ளே எழுந்து கொண்டே இருக்கும்.
          தூய்மையான குடிநீர் இல்லாமலும், ஊட்டச்சத்துள்ள  உணவு  இல்லாமலும், வாழ இருப்பிடமில்லாமலும், சுகாதாரமான கழிப்பிட வசதி இல்லாமலும்,  கல்வி பெரும் சூழல் இல்லாமலும், பாதுகாப்பும் பரிவும் இல்லாமலும் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான வசதியற்றக் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் மட்டும் அரசு ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு, தன் வீட்டுக் குழந்தைகளை மட்டும் தன்னலத்தோடு தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறார்களே…. அந்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..?
         மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் ஆசிரியர்கள், இந்த கல்விக்காக ஏங்கும் – கல்விக்காக தவிக்கும் மாணவ சமூகத்தின் ஒட்டுமொத்த நன்மைக்காக தனது வருமானத்தில் சிறு பகுதியையோ அல்லது மற்றவர்களை விட தங்களுக்கு அதிகமாக கிடைத்துள்ள ஓய்வு நேரத்தையோ செலவிடாமல்,  தன் வருமானத்தை மேலும் பெருக்கிக் கொள்ள காலையிலும் மாலையிலும் தனி வகுப்பு நடத்துகிறார்களே…. அந்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..?
         மனித மாண்புகளையும், மனித உரிமைகளையும், மனிதநேயத்தையும் கற்றுக் கொடுக்காமல், பன்னாட்டுக் கம்பெனிகளில்  அடிமை வேலைகள்  செய்ய கற்றுக் கொடுக்கும் இன்றைய கல்வி முறையின் குறைகளைப் பற்றி சற்றும் சிந்திக்கத் தெரியாமலேயே, தான் உண்டு  தன் வேலை உண்டு என்ற வாழ்வியல் சிறைக்குள்ளே பிள்ளைகளை  அடைத்து, எதிர்காலத்தில் தவறுகளை தட்டிக்கேட்கவும், அநீதிகளை எதிர்க்கவும் எண்ணமில்லாத  மனிதர்களாக, தோல்விகளை தாங்கிக்கொள்ள முடியாத கோழைகளாக மாணவர்களை உருவாக்குகிறார்களே…. அந்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..?
  • எந்த ஓர்  ஆசிரியர்,  தான்  பணி செய்யும் பள்ளிகளில்  வகுப்பறை சுதந்திரத்தையும் வகுப்பறை ஜனநாயகத்தையும் கடைப்பிடித்து மாணவர்களை சுதந்திரமாக பேசுவதற்கும், சிந்திப்பதற்கும் வாய்ப்பளிக்கின்றாரோ..
  • எந்த ஓர் ஆசிரியர், தன் ஓய்வு நேரத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பள்ளிக்கு வெளியே தனி வகுப்பு எடுப்பதை தவிர்த்து, கல்விக்காக ஏங்கும் மாணவர்களை கைகொடுத்து கரையேற்றத் துடிக்கின்றாரோ..
  • எந்த ஓர் ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவர்கள் ஒருவர் கூட வெளியில் தனிவகுப்புக்கு செல்லும் கட்டாயத்தை  உருவாக்காமல்  தன்னலமில்லாமல் நேர்மையாக கல்வி அளிக்கின்றாரோ…
  • எழுதப் படிக்க மட்டும் கற்றுக்கொடுப்பது ஓர் ஆசிரியரின் பணியல்ல.. வெறும் மனப்பாடத் திறமையில் தகவல் தொகுப்பாக மாணவர்களை தகுதியானவனாக மாற்றுவது ஓர் ஆசிரியரின் கடமையல்ல.. மாறாக ஒட்டு மொத்த சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் விருப்பு வெறுப்பின்றி விசாரணை செய்வதும், அதன் மூலம் சமூக அநீதிகளைக் களைவதும், ஒரு சிலர் மட்டும் அனுபவிக்கும் முறையற்ற செல்வப் பகிர்வை ஒழித்து உலகில் உள்ள அனைவருக்கும் பயனுடையதாக மாற்றுவதும் ஓர் ஆசிரியரின் நோக்கமாக இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட ஆசிரியர்களே மிக சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியும். அவர்களே இந்த தேசத்தின் நல்லாசிரியர்கள் என்பதை நாடு உணரவேண்டும். இத்தகைய நோக்கோடு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நாம் சொல்வோம் ஒரு வாழ்த்து ஆசிரியர் தின நல்வாழ்த்து.

இப்படியும் ஒரு பேராசிரியர்...! இவர் தான் நல்லாசிரியர்....!

 
இப்படியும் ஒரு பேராசிரியர்....!!!

இந்திய சுதந்திர வேள்வியில் மாணவர்கள் குதித்திருந்த நேரம் அது...! 
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் மாணவர்களின் யாகசாலையாக இருந்தது....!

சைமன் கமிஷனுக்கு எதிராக கங்கை ஆற்றினுள் நீந்திச்  சென்று பி.ராமமூர்த்தி தன் சகமாணவர்களொடு கறுப்புக் கோடி கட்டிய பல்கலைக்கழகம் அது தான் !

அப்போது  அங்கு அவர் பேராசிரியராக  இருந்தார் !

பிரிட்டிஷ் போலிஸ் மோப்பம் பிடித்துவிட்டது...! பல்கலைக்கழக  வளாகத்தைச் சுற்றி வளைத்து மாணவர்களை பிடிக்க விரும்பியது...!  அன்று அந்த பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் அந்த பேராசிரியர் தான்...! பல்கலைக்கழக  வளாகத்திற்குள் போலீசார் வரக்கூடாது என்று உத்திரவிட்டார்...!

அதுமட்டுமல்ல சுதந்திர வேட்கையில் திளைத்திருந்த மாணவர்களை பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கமாட்டேன் என்று அறிவித்தார்...!

அவரையும் மீறி போலிஸ் உள்ளே நுழைந்தால் என்ன செய்வது ...?

மாணவர்கள் துணைவேந்தரை சந்தித்தார்கள்...! நிலைமையை அவரும் பரிசீலித்தார்...! 

"நீங்கள் வளாகத்தில் இருக்கும் வரை உங்களுக்கு நான் பாதுகாப்பு...! என்னையும் மீறி போலிஸ் நுழைந்தால் .... கவலைபடாதீர்கள்...! இரவோடு இரவாக  கிராமப்புறங்களுக்கு ஓடிவிடுங்கள்...! அந்த கிராமத்து மக்கள் உங்களை போலீசிடமிருந்து காப்பாற்றுவார்கள்...!" என்று மாணவர்களுக்கு தைரியம் கொடுத்தார் அந்த துணைவேந்தர் !

மறுநாள் போலீஸ் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த போது அவர்கள் தேடிவந்த மாணவர்கள் அங்கு இல்லை...! 

அந்த துணைவேந்தர் வேறு யாருமில்லை... அவர் தான் பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்...!
 
இந்தியாவின் தூதுவராக மாஸ்கோ சென்று ஸ்டாலினை சந்தித்த ஒரே இந்தியர் !!!
 
தோழர் காஷ்யபன் அவர்கள் கட்டுரையிலிருந்து....!