சீதாராம் யெச்சூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீதாராம் யெச்சூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

இடதுசாரி மாற்று அணியே ஆட்சி அமைக்கும்....!

   
            சென்னையில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பிறந்த சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் மட்டுமல்ல, அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் கூட. கல்லூரி நாள்களிலேயே மாணவர் இயக்கத்துடன் தொடர்பு கொண்ட சீதாராமின் அரசியல் பயணம் அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதுடன் தொடங்கியது. மிசாவில் கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர்களில் இவரும் ஒருவர். மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தின் வலதுகரம். இன்றைய தலைமுறை மார்க்சீய சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இடதுசாரி இயக்கங்களின் பிரபலமான ஊடகத் தொடர்பாளர்.
''தினமணி'' ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு சீதாராம் யெச்சூரி அளித்த சிறப்புப் பேட்டி:
         "பிளவுக்குப் பிறகு, 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு அரை நூற்றாண்டு காலமாகிறது. இந்த இயக்கத்துக்கான அவசியம் முடிந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா?''

          "தேர்தல் வெற்றி தோல்விகளும் அரசியல் பின்னடைவுகளும் ஒரு இயக்கத்தின் வளர்ச்சியையோ செயல்பாடுகளையோ பாதித்துவிடாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இடதுசாரி இயக்கங்களின் இன்றியமையாமை இப்போதுதான் உருவாகி இருக்கிறது. இன்று இந்தியா எதிர்கொள்ளும் எல்லாவிதப் பிரச்னைகளுக்கும், இடதுசாரி இயக்கங்கள் வலுவிழந்ததும், எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்ததும்தான் காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள்.''

"எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?''
 
        "எங்களது ஆதரவில் முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்ததுவரை, மன்மோகன் சிங் அரசில் மெகா ஊழல்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது உலகறிந்த ரகசியம்.

        "ஏதோ உங்களது ஆதரவில் இருந்ததுவரை மன்மோகன் சிங் அரசு சிறப்பாக செயல்பட்டது போலப் பேசுகிறீர்களே, எப்படிச் சொல்கிறீர்கள்?''

             கடந்த 60 ஆண்டுகளாக நமது அரசியல் சட்டம் மக்களுக்கு அளிப்பதாகச் சொன்ன எந்தவித உரிமைகளையும் எந்த அரசும் நிறைவேற்றாத நிலையில், 2004இல் இடதுசாரிகளின் ஆதரவுக்கு அடிப்படையான நாங்கள் வடிவமைத்த குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அம்சங்கள்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம், கல்விக்கான உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்பு மசோதா போன்ற எல்லாமே. இந்த அம்சங்களை ஒன்றன்பின் ஒன்றாக மன்மோகன் சிங் அரசு நிறைவேற்றியதற்குக் காரணம் எங்களது வற்புறுத்தல்தான். இந்தத் திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தவர்கள் நாங்கள். பெருமை தட்டிச் சொல்வது அவர்கள்.''

          "2004இல் மன்மோகன் சிங் அரசை ஆதரித்து, ஆட்சியில் அமர்த்தியதற்கு என்ன காரணம்?''

          அந்தத் தேர்தலில், மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களது 61 இடதுசாரி எம்.பி.க்களில் 57 பேர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு வென்றவர்கள். அப்படி இருந்தும் நாங்கள் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் ஆதரவளித்ததற்குக் காரணம், தேசத்தை எதிர்நோக்கியிருந்த மிகப்பெரிய பிரச்னையான மதவாதம். மத்திய அரசு 2004இல் மீண்டும் மதவாதக் கட்சிகளின் அதிகாரத்திற்கு உள்பட்டிருந்தால், இந்தியாவின் ஒற்றுமையே குலைந்திருக்கும். அதைத் தடுக்க வேண்டிய வரலாற்று நிர்பந்தம் இடதுசாரிகளுக்கு இருந்தது.''

                "நீங்கள் உறுதியாக இருந்திருந்தால் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்குமா?''

              "அந்தத் தவறை நாங்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்கிறோம். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியபோதே நாங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று திட்டவட்டமாகக் கூறியிருந்திருக்க வேண்டும். எங்களை நம்ப வைத்துக் கழுத்தறுத்துவிட்டது காங்கிரஸ். எங்கள் தயவில் மன்மோகன் சிங் அரசு ஆட்சியில் தொடர்வது தங்களுக்கு பாதகமாக இருக்கிறது என்பதால், கார்பரேட் நிறுவனங்களும் அவர்களது கைப்பாவைகளாக செயல்படும் ஊடகங்களும், எங்களை வெளியேற்றுவதில் குறியாக இருந்தன. கடைசியில் வெற்றியும் பெற்றன.''

         "நீங்கள் 2ஜி முறைகேடுகள் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் உறுப்பினராக இருந்தீர்கள். உங்களது கருத்துப்படி, 2ஜி முறைகேட்டில் மன்மோகன் சிங்கிற்கும், ப. சிதம்பரத்திற்கும் தொடர்பு உண்டு என்று கருதுகிறீர்களா?
 
             "தொடர்பு உண்டா இல்லையா என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், அவர்கள் இருவருக்கும் தெரிந்துதான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்திருக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூறமுடியும். மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் ஒப்புதல் வழங்காமல் நிச்சயமாக ஆ. ராசா 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அவர் கையாண்ட வழிமுறைகளைச் செய்திருக்க முடியாது. பிரதமர், நிதியமைச்சர், தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர், அதாவது, மன்மோகன் சிங், ப. சிதம்பரம், ஆ. ராசா ஆகிய மூவர் மட்டுமே கலந்து கொண்ட ஒரு மேல்மட்டக் கூட்டம் நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்துதான் ஆ. ராசா அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான வழிமுறையை அறிவிக்கிறார்.''

        "இதை நீங்கள் ஏன் வெளிப்படையாகத் தேர்தல் பிரசார மேடைகளில் கூறவில்லை?''


           "நாங்கள் எங்கள் பிரசாரத்தில் தொடர்ந்து கூறி வருகிறோம். நீங்கள்தான், அதாவது ஊடகங்கள்தான் அதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையில் நான் எனது எதிர்க்கருத்தை வன்மையாகவே பதிவு செய்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, பிரதமர் மன்மோகன் சிங்கையும், நிதியமைச்சர் ப. சிதம்பரத்தையும் ஜே.பி.சி. தலைவர் காப்பாற்ற முயற்சிக்கிறார் என்று தெளிவாகவே எனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.''

         "அப்படியானால் உறுப்பினரான நீங்கள் அவர்களை ஏன் விசாரணைக்கு அழைக்க வற்புறுத்தவில்லை? ஆ. ராசாவின் கோரிக்கையை ஏன் வழிமொழியவில்லை?''


             "நாங்கள் பிரதமரையும், நிதியமைச்சரையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அது மறுக்கப்பட்டது. அப்படியானால், நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எழுத்துமூலம் பிரதமரையும், நிதியமைச்சரையும் பதிலளிக்கச் சொல்லுங்கள் என்று கேட்டோம். அதையும் கூட்டுக் குழுவின் தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் ஒன்றுமே தெரியாத புனிதர்களல்ல. 2ஜி முறைகேட்டில் அவர்களது தொடர்பு மறைக்கப்படுகிறது.''

 "இடதுசாரி இயக்கம் நோக்கம் இழந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா?

             "நிச்சயமாக இல்லை. சில பலவீனங்களை நாங்கள் எதிர்கொள்கிறோம் என்பது வேண்டுமானால் உண்மை. அந்த பலவீனங்களை அகற்றினால் மட்டுமே இடதுசாரி இயக்கத்தையும், இந்தியாவையும் காப்பாற்ற முடியும் என்பது அதைவிட உண்மை. கடந்த 20 ஆண்டு கால புதிய பொருளாதாரக் கொள்கையின் பாதிப்பு இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தையும், பொருளாதாரத்தின் அடிப்படையையும் ஆட்டம்காண வைத்திருக்கிறது. எல்லோரும் மெகா ஊழல்களையும் முறைகேடுகளையும் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இந்த முறைகேடுகளுக்குக் காரணம், அரசின் பொருளாதாரக் கொள்கைதான் என்பதை மக்களை உணர வைக்கவும், இதற்கு மாற்றாக மக்கள் சார்ந்த கொள்கைகளை முன்வைக்கவும் இடதுசாரிகளால் மட்டுமே முடியும்.''
 
 ''பொருளாதாரக் கொள்கைகளுக்கும் ஊழலுக்கும் என்ன தொடர்பு?''

             "ஏன் இல்லை. தனியார்மயம் என்று வரும்போது, அதிலும் பல லட்சம் கோடி ரூபாய் பணம் புரளும் துறைகளைத் தனியாருக்குத் திறந்துவிடும்போது, நீ, நான் என்று கார்ப்ரேட் நிறுவனங்கள் மத்தியில் போட்டி உருவாகிறது. இதுதான் மெகா ஊழல்களின் ஊற்றுக்கண். நாங்கள் ஊற்றுக்கண்ணை அடைக்க விரும்புகிறோம். ஆம் ஆத்மி கட்சி போன்றவர்கள் ஊழலின் அடையாளங்களை எதிர்த்துப் போராடுகிறார்கள், இதுதான் வித்தியாசம்.''

"அவர்களது போராட்டத்திற்கு இருக்கும் வரவேற்பு உங்கள் போராட்டங்களுக்கு இல்லையே, அது ஏன்? இடதுசாரி இயக்கம் மக்கள் ஆதரவை இழந்துவிட்டதுதான் காரணமா?

           "அல்ல, ஊடகங்கள் எங்களை இருட்டடிப்பு செய்வதுதான் காரணம். விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தை இந்தியா முழுவதிலிருந்தும் உள்ள இரண்டு லட்சம் தொண்டர்களுடன் முற்றுகை இடுகிறோம். அது ஊடகங்களுக்குத் தெரிவதில்லை. தொலைக்காட்சிச் சேனல்கள் முன்னுரிமை அளிப்பதில்லை. ஜந்தர் மந்தரில் அண்ணா ஹசாரே தலைமையில் இருபதாயிரம் பேர் கூடியதை இரண்டு வாரங்கள் பெரிய புரட்சி நிகழ்ந்துவிட்டதாக விளம்பரப்படுத்தினார்கள். நீறுபூத்த நெருப்பாக இடதுசாரி இயக்கம் உயிர்ப்புடன்தான் இருக்கிறது.''

"மற்றவர்கள் அடையாளங்களை எதிர்த்துப் போராடுவதாகவும், நீங்கள் மட்டும்தான் கொள்கை ரீதியாகப் போராடுவதாகவும் எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?

           "புதிய பொருளாதாரக் கொள்கைகளை முன்வைக்கும் முதலாளித்துவவாதிகளுக்கு எதிரான வாதத்தை இடதுசாரிகள் மட்டுமே முன்வைக்கிறோம். விமர்சனங்கள் எதுவுமே ஏனையோரால் எழுப்பப்படுவதில்லை. பாரதிய ஜனதாவோ, ஆம் ஆத்மி கட்சியோ, தி.மு.க., அ.தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகளோ அவர்களுக்கு எந்தவித ஆபத்தையும் தரப்போவதில்லை.''

"இதுவரை கடந்த பல தேர்தல்களில் இடதுசாரிகள் தங்கள் அணியில் இருப்பது பெருமை என்று கருதியிருந்த மாநிலக் கட்சிகள் இந்தத் தேர்தலில் உங்களைத் தனிமைப்படுத்தி இருக்கின்றனவே, அது பலமா, பலவீனமா?

           "அவர்களறியாமல் எங்களுக்கு மிகப்பெரிய உதவியைச் செய்திருக்கிறார்கள். இனிமேல் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இடதுசாரிகள் யாரையும் சார்ந்திராமல், அந்த மாநிலக் கட்சிகள் செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்காமல் தன்னிச்சையாக செயல்படவும், மக்கள் சக்தியாக வளர்ச்சி அடையவும் வழிகோலி இருக்கிறார்கள். இது தாற்காலிக பலவீனமாகத் தெரியலாம். ஆனால், நிச்சயமாக மிகப்பெரிய பலம்.''

"இனியும் இடதுசாரி இயக்கங்கள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்தனி அமைப்புகளாக செயல்படுவது அவசியம்தானா? இணைப்பு சாத்தியமில்லையா?

            "இணைந்து செயல்படுகிறோம். இதுவே காலப்போக்கில் இணைப்பாக மாறக்கூடும். நாமாக முயற்சிப்பதைவிடத் தானாக நடைபெறுவதுதான் நிலையானதாக இருக்கும். இணைப்புக்கான அவசியம் இருக்கத்தான் செய்கிறது.''

 "அ.தி.மு.க. தனது அணியிலிருந்து இடதுசாரிகளைக் கழற்றி விட்டது பற்றி உங்களது கருத்து என்ன?

               "அது அவர்கள் தன்னிச்சையாக எடுத்த முடிவு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. எங்களது  சுயமரியாதையை இழந்து நாங்கள் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ஒதுக்கும் ஒன்றிரண்டு இடங்களுக்காகக் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. இடதுசாரிகள் இல்லாவிட்டால், எந்தவொரு மாநிலக் கட்சிக்கும் மக்கள் மன்றத்தில் மரியாதை இருக்காது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும். அது தமிழகமானாலும் சரி, ஆந்திரம், பிகார், உத்தரப்பிரேதசமானாலும் சரி!''

"எந்தவொரு அணிக்கும் பெரும்பான்மை வராமல் போனால் நீங்கள் காங்கிரஸ் ஆதரவுடனான மூன்றாவது அணி அரசு அமைய முயற்சிப்பீர்களா மாட்டீர்களா?

 "மதச் சார்பற்ற, அதே நேரத்தில் மாற்றுப் பொருளாதார சிந்தனையுடைய அரசு அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். மாற்றுப் பொருளாதாரம் என்று சொன்னால், மெகா ஊழல்களுக்கு வழிகோலும் மன்மோகன் சிங் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான பொருளாதாரம் என்று பொருள். இந்த விஷயத்தில் காங்கிரஸூக்கும், பா.ஜ.கவுக்கும் உள்ள வேறுபாடு சதவிகிதங்களில்தானே தவிர, மதச்சார்பு, பொருளாதாரக் கொள்கை இரண்டிலுமே இந்த இரண்டு கட்சிகளும் ஏறத்தாழ ஒத்த கருத்துடையவைதான் என்பது எங்கள் கருத்து.''

"அ.தி.மு.க. உங்களைக் கைவிட்ட நிலையில் தி.மு.க. தனது அணியில் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருந்ததே, நீங்கள் ஏன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை?
           
               "காங்கிரஸூம், பா.ஜ.க.வும்போல தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள், அவ்வளவே. மெகா ஊழலான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை வெளிக் கொணர்ந்ததும், முதன் முதலில் அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததும் இடதுசாரிகள்தான். நாங்கள் எப்படி தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முடியும்? ஏறத்தாழ 14 1/2 ஆண்டு காலம் தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகித்த ஒரே ஒரு மாநிலக் கட்சி தி.மு.க.தான். மதச்சார்பு பற்றியோ, மாற்றுப் பொருளாதாரம் பற்றியோ பேசும் அருகதை தி.மு.க.வுக்குக் கிடையாது!''

"மூன்றாவது அணி ஆட்சி அமைந்தால் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று முதலில் அறிவித்தீர்களே, இப்போதும் அதுதான் உங்கள் அபிப்பிராயமா?''

           "நாங்கள், அதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஜெயலலிதாவைப் பிரதமர் பதவி வேட்பாளர் என்று கருதவும் இல்லை, அறிவிக்கவும் இல்லை. யார் பிரதமர் என்பது தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு தீர்மானிக்க வேண்டிய பிரச்னை.''

"2014 தேர்தலில் இடதுசாரிகளின் குறிக்கோள் என்ன?

            "மதவாத சக்திகளின் பிடியில் இந்தியா சிக்கிவிடாமல் காப்பதும், மெகா ஊழல்களின் ஊற்றுக்கண்ணான புதிய பொருளாதாரக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து மாற்றுப் பொருளாதார சிந்தனைக்கு வழிகோலுவதும்தான் எங்கள் குறிக்கோள்.''

"உங்களுடைய முதல் எதிரி காங்கிரஸா, பா.ஜ.கவா?

 "இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று ஏற்கெனவே கூறிவிட்டேன்.''

"இன்னுமா இடதுசாரிகளின் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சி அமையும் என்று நம்புகிறீர்கள்?

          "போராளிகள் நம்பிக்கை இழப்பதில்லை. இந்தியாவைப் போன்ற பலதரப்பட்ட கலாசாரங்கள் உள்ள நாட்டில் கூட்டணி அரசுதான் சாத்தியம். நல்லது. தேவை. அதற்கான இடதுசாரிகளின் முயற்சி தொடரும்.''

நன்றி : தினமணி

சனி, 29 மார்ச், 2014

இடதுசாரிகளே நாட்டின் இன்றைய தேவை...!

          
       காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், கடந்த பத்தாண்டுகளில் தங்களின் சாதனைகளாக மக்கள் முன் வைத்திருப்பது உணவுக்கான உரிமை (Right to food), தகவலுக்கான உரிமை (Right to information) மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் (Land Acquisition Act) ஆகியவை தான். ஆனால் இவை மூன்றும் ஐ.மு.கூ-1 அரசின் முதல் நான்கு ஆணடுகளில் இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். 2004ம் ஆண்டில் ஐ.மு.கூ.-1 அரசிற்கு குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் தான் இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தால் தான் இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. இந்திய நாட்டில் வளங்களுக்கு எந்தவித குறைவுமில்லை. ஆனால் வளங்கள் அனைத்தும் பணக்காரர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களின் கஜானாவை நோக்கித் திருப்பப்படுகின்றன.
           கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரும்பணக்காரர்களுக்கும் அளிக்கப்பட்டு வரும் சலுகைகள், இடதுசாரிகள் முன்வைக்கும் ''மாற்றுப்பொருளாதாரக் கொள்கைகள்'' மூலம் நிறுத்தப்படும்; அவர்களிடம் சரியான முறையில் வரி வசூல் செய்யப்படும்; அதன் மூலம் கிடைக்கும் வருவாயை இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கு திருப்பிவிட வேண்டும்.
            அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியில் செய்யப்படும் முதலீடு அதிகரிக்க அதிகரிக்க நாட்டில் புதிது புதிதாக வேலைவாய்ப்புகள் பெருகும். அதன்மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இதற்கு மாறாக, காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொருளாதாரக் கொள்கைகளால், புதிது புதிதாக ஊழல்களும், முறைகேடுகளும் உருவாகிக்கொண்டிருப்பதை மக்கள் உணர வேண்டும்.
        வருகிற நாடாளுமன்றத் தேர்தல் இந்திய நாட்டின் ஏழை-எளிய நடுத்தர மக்களைப் பொறுத்தவரையில் மிக மிக முக்கியமான தேர்தல் ஆகும். இந்த தேர்தல் இந்திய நாடு வருங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானம் செய்யக்கூடிய தேர்தல் என்பதை மக்கள் உணரவேண்டும். இந்திய மக்கள் நான்கு சாலைகளின் சந்திப்பில் நின்று கொண்டு இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள். மாற்று பொருளாதாரக் கொள்கைகள் தான் சரியான பாதை, அதுவே மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என சரியான பாதையை இடதுசாரிக் கட்சிகள் கை காட்டிகளாக நின்று சொல்கின்றனர். அடுத்து அமையக்கூடிய நாடாளுமன்றத்தில் இத்தகைய மாற்று பொருளாதாரக் கொள்கைகளை கொண்டு செல்லவும், மக்கள் ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், இடதுசாரி எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது மிக மிக அவசியமானது. 
           நாட்டில் கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற வளங்களின் பயன்கள் அனைத்தும், கோடானுகோடி மக்களுக்கும் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் திருப்பிவிட வேண்டியது காலத்தின் காட்டாயம்!
           அசாம் மாநிலத்தில் பார்பேட்டா, தேஜ்பூர், சில்சார் ஆகிய 3 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். கவுகாத்தியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி ஆற்றிய உரையின் பகுதிகள் இவை. 
தொகுப்பு : வெ.ராகுல்ஜி

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

உள்ளத்தில் ‘இந்து ராஷ்ட்ரா’, உதடுகளில் வளர்ச்சி மந்திரம்...!

கட்டுரையாளர் : சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,             

           “இலக்கு ஒரு பக்கம், பார்வை எதிர்ப்பக்கம்”. இது எங்களது தலைமுறை இளமைக்காலத்தில் கேட்டு ரசித்த இந்தி திரைப்படப்பாடல். பி.ஜே.பி / ஆர்.எஸ்.எஸ்-ன் இன்றைய பிரச்சாரம் எனக்கு இந்தப் பாடலையே நினைவுபடுத்துகிறது. சகிப்புத்தன்மையற்ற, பாசிச இந்து ராஷ்ட்ரா என்ற இலக்கினை மத அடிப்படையிலான திரட்டல் மூலம் அடைவது ஆர்.எஸ்.எஸ்-ன் செயல் திட்டம். ஆழ்மனதில் உள்ள இந்த உண்மையான இலக்கினை மறைத்து, வளர்ச்சி, முன்னேற்றம் என்று பி.ஜே.பி மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது. எனினும், அதனுடைய இரட்டைத்தன்மை பல இடங்களில் தவிர்க்க இயலாத நிலையில் வெளிப்பட்டும் வருகிறது.

கூட்டாட்சித் தத்துவ முகமூடி!       

           நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில், வகுப்புவாத வன்முறை மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது பி.ஜே.பி அதைக் கடுமையாக எதிர்த்துத் தடுத்து நிறுத்தி விட்டது. கூட்டாட்சி நெறியினை அந்த மசோதா சிதைப்பதாகக் கூறியது. இடதுசாரிகள் எப்போதுமே வகுப்புவாதத்தை தடுப்பதற்கும், வகுப்புவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு மற்றும் நஷ்ட ஈடு விரைவில் கிடைப்பதற்கும், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உடனடியாக நீதி கிடைப்பதற்கும் வழிவகை செய்கின்ற இது போன்ற மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென்று தொடர்ந்து கோரி வந்திருக்கின்றனர். அதே நேரத்தில், மாநில அரசாங்கங்களின் உரிமைகளுக்கும், மத்தியில் கூட்டாட்சிக் கட்டமைப்புத் தன்மைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதிலும் இடதுசாரிகள் உறுதியாக உள்ளனர். பாரதீய ஜனதா கட்சி இந்த மசோதாவை எதிர்த்ததற்கு ஒரே காரணம் அதனுடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு எந்தவொரு பங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது தான். அது தான் பி.ஜே.பியின் உண்மையான கவலை. ஆனால், அதை மறைப்பதற்காக கூட்டாட்சி நெறிமுறைகளைக் காப்பாற்றும் காவலன் என்ற முகமூடியினை அது அணிந்து கொண்டது.

ஒற்றை அரசே இறுதி இலக்கு!             

         உண்மையில் கூட்டாட்சிக் கட்டமைப்பினைத் தகர்க்க வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ் / பி.ஜே.பியின் நோக்கம். எம்.எஸ். கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ் / பி.ஜே.பி கட்சியின் குருவாகக் கருதப்படுபவர். ‘இந்து ராஷ்ட்ரா’வினை உருவாக்குவதற்கான சித்தாந்தக் கட்டமைப்பினையும், ஸ்தாபனக் கட்டமைப்பினையும் உருவாக்கிக் கொடுத்தவர் இவர். 1939-ம் ஆண்டு இவர் எழுதிய ‘நாமும், நமது தேசமும் - ஒரு வரையறை’ என்ற நூலில் ”இந்து ராஷ்ட்ரா” கட்டுவது குறித்தும், சங் பரிவாரின் ஸ்தாபன அமைப்பு இந்து ராஷ்ட்ரா என்ற நோக்கத்தை எட்டும் வகையில் எவ்வாறு தகவமைக்கப்பட வேண்டும் என்றும் விவரித்துள்ளார்.
        அதில் அவர் இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் பேசும் கூட்டாட்சி நெறிமுறையினை குழி தோண்டிப் புதைத்துவிட வேண்டும் என்றும், அனைத்து “சுயேச்சையான” அல்லது “அரைகுறை சுயேச்சையான” மாநில அரசுகளை ஒழித்து விட்டு, நாடு முழுவ தற்குமான ஒற்றை அரசை உருவாக்கிட வேண்டும் என்றும் கூறுகிறார். அந்த ஒற்றை அரசின் பெயர் பாரதம் என்றும், ”ஒரே நாடு, ஒரே அரசு, ஒரே சட்டம், ஒரே தலைவர்” என்றுஅதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் நமது அரசியலமைப்புச் சட்டத்தினை மறுவரையறை செய்து, ஒற்றை அரசாங்கத்தின் கீழ் இந்த நாடு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். (1966ம் ஆண்டு எழுதிய ‘சிந்தனைக் கொத்து’ மூன்றாம் பதிப்பு, பக்கம் 227).

சந்தர்ப்பவாத சாகசங்கள்!               

         ஒரு பக்கம் பாரதீய ஜனதா கட்சி ஜார்க் கண்ட், சத்தீஸ்கர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் உருவானதற்கான பெருமை தன்னைச் சாரும் என்று கூறிக் கொள்கிறது. மறுபுறம், தெலுங்கானா விவகாரத்தில் இரட்டைநிலைப்பாட்டை எடுத்து வருகிறது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி, மொழிவாரி மாநிலங்களைபிரிக்கக்கூடாது என்று மிகத் தெளிவான நிலைபாட்டினைக் கொண்டுள்ளது. ஆர்.எஸ்எஸ்சும்பாரதீய ஜனதா கட்சி யும் தொடர்ந்து ”ஒரு நாடு,ஒரே மக்கள், ஒரே தேசம்” என்று ஒரு பக்கம்பேசிக் கொண்டே, மறுபுறத்தில், மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் சந்தர்ப்ப வாதத்தை அளவு மீறி கடைப்பிடித்து வருகின்றன.

குஜராத் ‘வளர்ச்சி’யின் லட்சணம்!                 

              அதே போலத்தான் “குஜராத் மாதிரி”யை முன்னிறுத்துவதும், வளர்ச்சி பற்றி பேசும் பிரச்சாரமும் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி கடைப்பிடிக்கும் தந்திரமேயாகும். மாநில அரசுகளின் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியிலும், அந்நிய நேரடி மூலதன வரவிலும், தொழிலில் பின்தங்கிய மாநிலங்களான ஒடிசாவிற்கும், சத்தீஸ்கருக்கும் கீழே தான் குஜராத் மாநிலம் உள்ளது என்று திட்டக்கமிஷன் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது. தனிநபர் வருமானம் என்ற அடிப்படையில் பார்த்தாலும், குஜராத் இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஆறாவது இடத்திலும், வறுமைக் குறியீட்டின் அடிப்படையில் ஐந்தாவது இடத்திலும், ஆயுட்காலத்தின் அடிப்படையில் எட்டாவது இடத்திலும் உள்ளது.
            மனிதவளக் குறியீட்டின் அடிப்படையில், இந்தியாவின் அனைத்து முக்கிய மாநிலங்களில், குஜராத் மாநிலம் பத்தாவது இடத்தில் உள்ளது. ஆரோக்கியத்திற்கான குறியீட்டின்படியும், கல்விக்கான குறியீட்டின் அடிப்படையில் பார்த்தாலும் குஜராத் ஆறாவது இடத்தில் தான் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளும், 55 சதவீத பெண்களும் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தான் ‘குஜராத் மாடல் வளர்ச்சி’. உண்மை இப்படி இருந்தும் கூட, “குஜராத்தின் வளர்ச்சி கதை” இந்திய கார்ப்பரேட் உலகினால் மிகவும் பாராட்டப்படுகிறது.

இந்து தீவிரவாதம்!                

           இந்துத்துவா தீவிரவாதக் குழுவின் முக்கியமான நபர்களில் ஒருவரான அசீமானந்தா பற்றிய ஒரு முகப்புக் கட்டுரையை ‘கேரவன்’ பத்திரிகை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. தற்போது சிறையில் உள்ள அவர் 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சம்ஜட்டா இரயில் குண்டு வெடிப்புச் சம்பவம், 2007ம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற மெக்கா மசூதி குண்டு வெடிப்புச் சம்பவம், அக்டோபர் 2007ல் நடைபெற்ற அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புச் சம்பவம் போன்றவற்றில் முக்கிய குற்றவாளி யாவார்.
மேலும் செப்டம்பர் 2006ல் மலேகா னிலும், 2008ல் மஹாராஷ்ட்ராவிலும் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டி ருப்பினும், இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்படவில்லை. இத்தகைய குற்றவாளி யைப் பற்றி பேசும்போது, ”அவருடைய இந்த தீவிரவாதத் தாக்குதல்கள் ஆர்எஸ்எஸ்சின் உயர்மட்டக் குழுவின் ஒப்புதலுடன் நடைபெற் றவை என்றும், தற்போது ஆர்எஸ்எஸ்சின் தலைவராக உள்ள மோகன் பகவத் அப்போது ஆர்எஸ்எஸ்சின் பொதுச் செயலாளராக இருந்தார்” என்றும் சுட்டிக் காட்டுகிறது.மேலும், “இதை கண்டிப்பாக நிறைவேற் றியே ஆக வேண்டும்.
ஆனால் இதையும் சங் பரிவாரையும் தொடர்புபடுத்திப் பார்க் கக்கூடாது” என்று மோகன் பகவத், அசீமானந்தாவிடம் கூறியுள்ளார். ‘கேரவன்’ ஏடு இன்னும் விரிவாகப் பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. அசீமானந்தாவிற்கு பக்க துணையாக உடந் தையாக இருந்தவர் ஆர்எஸ்எஸ்சின் சுனில் ஜோஷி. இவர் தான் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு சதிகளில் யார் யார் எங்கே கூடுவது, எங்கே குண்டு வைப்பது என்பது உட்பட அனைத்திற்கும் இணைப்புக் கயிறாக விளங்கியவர். இவர் டிசம்பர் 2007ல் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

குற்றமற்றவரா மோடி...?          

                   2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் நடைபெற்ற வகுப்புவாத படுகொலையின் போது, குஜராத் மாநில அரசின் முதலமைச்சராக இருந்த மோடிக்கும் இந்த மனிதப் படுகொலைகளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று சட்ட ரீதியாக ”குற்றமற்றவர்” என்று சான்றிதழ் பெறுவதற்காக இன்றைக்கு ஆர்எஸ்எஸ்சும், பாரதீய ஜனதா கட்சியும் கடுமையாக முயன்று வருகின்றன. பிப்ரவரி 2012ல் சிறப்பு புலன் விசாரணைக் குழு சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கையை தங்களுக்கு சாதகமான ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
                  ஆனால், அந்த அறிக்கை இவர்களுக்குச் சாதகமாக அப்படி எதையும் கூறி விடவில்லை. இந்த சிறப்பு புலன் விசாரணை குழு ஜாப்ரி வழக்கில், ஜூன் 2006ல் குல்பார்க் தாக்குதலில் ஏராளமான தடயங்கள் இருப்பதாகவும், அகம தாபாத் கலவரத்தின் போதும் இந்த தடயங்கள் எல்லாம் உண்மையானவை, சரியானவை என்றும் அபிப்பிராயம் கொண்டிருந்தது. ஆனால் இந்தத் தடயத்தை மட்டும் வைத்துக் கொண்டு சட்டப்படி குற்றம் சாட்டுவதற்கு வழியில்லை என்று மட்டும் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது இயலாமையினைத் தெரிவித்திருக்கிறது.
                 மேலும், உச்சநீதி மன்றத்திற்கு அமிக்கஸ் கியூரி (அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்புக்களுக்கு அப்பாற்பட்டு நீதி மன்றத்திற்கு உதவி செய்யும் நடுநிலையாளர்) அளித்த அறிக்கை நரேந்திர மோடிக்கு எதிராக உள்ளது. இந்திய குற்றப் பிரிவு 153ஏ, 153பி, மற்றும் 166 ஆகியவற்றின் அடிப்படையில் அவரை நீதிவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனஅந்த அறிக்கை கூறுகிறது. 2002ம் ஆண்டின்இறுதித் தீர்ப்பைப் பொறுத்தவரை 2002ம் ஆண்டு திட்டமிட்டு நடத்தப்பட்ட வகுப்புவாத மனிதப் படுகொலையைப் பொறுத்த வரையில் , உயர் நீதி மன்றங்களில் மறு பரிசீலனைக்கான மனுக்கள் பல இன்றைக்கும் நிலுவையில் உள்ளன. எனவே, ‘குற்றமற்றவர்’ என்ற சான்றிதழ் பெறுவதற்கான எந்த வாய்ப்பும் மோடிக்கு இல்லை.
மறந்து விட வேண்டுமாம்!
                  இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் 2002ஐப் பற்றி மறந்து விடும்படி மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் ஒரு வளமான எதிர்காலத்தை காண்பதற்காக 2002ம் ஆண்டை மறந்து விட வேண்டுமாம். ஆனால், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களில் இதே அளவுகோல் பொருந்தாதாம். மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசான நமது நாட்டில் ஆறாத சீழ் வடியும் புண் போல, 1984ம் ஆண்டு முதல் நமது மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருகிறது. நமது அண்மைக்கால நினைவில் இருக்கும் 2002ம் ஆண்டு மிகவும் மோசமா னது.
எப்போது நீதி வழங்கப்படுகிறதோ அப்போது தான் நமது குடியாட்சி சுத்தப் படுத்தப்பட்டு பலப்படுத்தப்படும். இந்த இரண்டு வழக்குகள் மட்டுமல்லாது வேறு பல வழக்குகளிலும் நீதி தொடர்ந்து தாமதப் படுத்தப்பட்டு வருகிறது. எனவே அது மறுக் கப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டில் நமது நாட்டிற்கு தேவைப்படுவது ஒரு மாற்று அரசியல் ஏற்பாடு. நீதி வழங்கப்படுவதற்கும், நமது குடியரசை பலப்படுத்துவதற்கும் அத்தகைய மாற்று அரசியல் ஏற்பாடு மிக மிக அவசியம்.
நன்றி : `ஹிந்துஸ்தான் டைம்ஸ், 10.02.2014
தமிழில் : ஆர். எஸ். செண்பகம்,திருநெல்வேலி     

திங்கள், 9 டிசம்பர், 2013

இதுவே எனது தாகம்...! - நெல்சன் மண்டேலா


  கட்டுரையாளர் : சீதாராம் யெச்சூரி,         
                                  தலைமைக்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.      
              நெல்சன் மண்டேலா மறைந்து விட்டார். நான் மாணவப் பருவத்தில் இருந்தபோது ஒரு பிரபலமான கீதம் இசைக்கப்பட்டது: “சாத்தியமில்லாத கனவை கனவு காணவீழ்த்த முடியாத எதிரியை வீழ்த்திடதாங்க முடியாத துயரத்தை தாங்கிடதைரியம் கூட செல்லத் துணியாத இடத்திற்கு ஓடிட திருத்த முடியாத தவறினை திருத்திட... அடையாத முடியாத நட்சத்திரத்தை அடைந்திட... இதுவே எனது தாகம்அந்த நட்சத்திரத்தை பின்தொடர்ந்திட... நம்பிக்கையின்மை என்பதே இல்லை எத்தனை தூரம் என்பதும் பிரச்சனையில்லை...” இத்தகைய லட்சியங்களுக்காக ஒரு மனிதன் வாழ்ந்தார் என்றால், அதைவிட இன்னும் முக்கியமானது தனது வாழ்நாளிலேயே இந்த மைல்கற்களையெல்லாம் எட்டினார் என்றால் அவர் `மடிபா’ என்று அன்போடு அழைக்கப்படுகிற நெல்சன் மண்டேலா மட்டுமே.
           அவரது அரசியல் வாழ்வும் பணியும் ஏற்கெனவே மிகச்சிறப்பான முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன; எனவே அவை பற்றி மீண்டும் இங்கே குறிப்பிடப்போவதில்லை. அவர் கடந்து வந்த காலங்களும், பங்களிப்புகளும் அவருடன் தோளோடு தோள் நின்ற அகமது கத்ரடா மற்றும் இதர தோழர்களால் இன்னும் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் எதிர்காலத்தில் இன்னும் செறிவூட்டப்படும் என்பது உறுதி. எனது தலைமுறையினர் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில், சுதந்திரத்திற்கும் விடுதலைக்குமான மனிதகுலத்தின் வீழ்த்த முடியாத உணர்ச்சிப்பிழம்பாக மண்டேலா திகழ்ந்தார். ஒரு இளம் மாணவராக அவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவை அணிதிரட்டினார்; அதைத்தொடர்ந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப்படை பிரிவான உம்கோந்த்தோ வி சிஸ்வே யின் முதல் தளபதியாக பொறுப்பேற்றார்; இந்தப் படைப்பிரிவே அந்த தேசத்தின் உந்துசக்தியாக திகழ்ந்தது.
              தென்னாப்பிரிக்க மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளை மறுத்த, ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட நிறவெறி ஆட்சிக்கு எதிராக உறுதிமிக்க போராளியாக மண்டேலா திகழ்ந்தார். அவர் கைது செய்யப்பட்டு, பிரபலமான ரிவோனியா வழக்கு என்ற அந்த குறிப்பிட்ட வழக்கு விசாரணையைத் தொடர்ந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். அந்த விசாரணையின்போது தனது தரப்பு வாதத்தை முன்வைத்து உரையாற்றிய மண்டேலா முடிவாகச் சொன்னார்: “எனது வாழ்நாளில் ஆப்பிரிக்க மக்களுக்காக இந்த மாபெரும் போராட்டத்தை அர்ப்பணிக்கிறேன். வெள்ளை இன ஆதிக்கத்திற்கு எதிராக நான் போராடினேன்; கறுப்பின ஆதிக்கத்திற்கும் எதிராகவும் நான் போராடினேன். நம் அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் ஒன்றாக வாழவும், சமமான வாய்ப்புகளோடு வாழவும் ஒரு ஜனநாயகமான, சுதந்திரமான சமூகம் உருவாக வேண்டும் என்ற சித்தாந்தத்தை முழுமையாக உள்வாங்கியிருக்கிறேன். அந்த மகத்தான இலக்கிற்காக தேவைப் பட்டால் என் உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன்“. (ஜூன் 11, 1964) ரோபென் தீவில் அமைந்துள்ள மிகக் கொடூரமான நிறவெறி அரசின் சிறையில் நீண்டகாலம் அடைக்கப்பட்டிருந்த மண்டேலாவுக்கு ஆறு தருணங்களில் நிபந்தனையின் பேரில் விடுதலை செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.
                  ஒவ்வொரு முறையும் அதை அவர் மறுத்தார்; கடைசியாக அளிக்கப்பட்ட வாய்ப்பை மறுத்த போது கூறினார் : மக்கள் அமைப்புகள் தடை செய்யப்பட்டிருப்பது தொடருமானால் எனக்கு மட்டும் விடுதலை கொடுத்து என்ன ஆகப்போகிறது? ஏற்கெனவே குற்றம்செய்துவிட்டதாக என்னை கைது செய்துவிட்டு எப்படிப்பட்ட விடுதலையை எனக்கு அளிக்கப் போகிறீர்கள்? பிராண்ட்போர்ட் நகரில் எனது ஆருயிர் மனைவி சிறை வைக்கப்பட்டிருப்பது தொடரும் போது எப்படிப்பட்ட குடும்ப வாழ்விற்காக எனக்கு விடுதலை அளிக்கப்போகிறீர்கள்? ஒரு நகர்ப்புறப் பகுதியில் வாழ்வதற்காக கட்டாயம் அனுமதி கேட்க வேண்டும் என்ற நிபந்தனையோடு எப்படிப்பட்ட சுதந்திரத்தை எனக்கு அளிக்கப்போகிறீர்கள். வேலை செய்வதற்குக் கூட எனது அடையாள அட்டையில் உங்களின் முத்திரையை பெற வேண்டிய தேவையோடு எப்படிப்பட்ட விடுதலையை எனக்கு அளிக்கப் போகிறீர்கள்? தென்னாப்பிரிக்க குடிமகன் என்ற எனது அடிப்படையான அடையாளம் மதிக்கப்படாத போது எப்படிப்பட்ட விடுதலையை எனக்கு அளிக்கப்போகிறீர்கள்? சுதந்திரமான மனிதர்களே பேச்சுவார்த்தை நடத்த முடியும்... நானும் எனது மக்களும் சுதந்திரமாக இல்லாத போது எந்தவொரு உத்தரவாதத்தையும் உங்களுக்கு தந்துவிட முடியாது”. இப்படிப்பட்ட, எவராலும் அசைக்க முடியாத உள்ள உறுதியை கொண்டவர் அவர்.
            அதன் மூலம் அனைவரையும் ஈர்த்தவர். அவரின் விடுதலை எப்போது நிகழ்ந்தது? நவீன உலகில் நிறவெறி ஆட்சி அமைப்பு ஒரு மோசமான எதேச்சதிகாரம், அராஜகவாதம் என்பதை இந்த உலகமே உணர்ந்தபோது, இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் அந்த ஒடுக்குமுறை ஆட்சியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்களே கூட இதை உணர்ந்தபோதுதான் அவரது விடுதலை நிகழ்ந்தது. பனிப்போர் முடிவுக்கு வந்திருந்த அந்தக் காலக்கட்டத்தில் இனியும் தொடரமுடியாது என்ற சூழல் முடிவைநோக்கி தள்ளிய நிலையில் - நாசகரமான அந்த நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்தது; தென்னாப்பிரிக்க மக்களுக்கு விடுதலை பிறந்தது. நமது தலைமுறையினருக்கு இதில் கற்றுக்கொள்ள பாடம் உண்டு - வரலாறு எப்போதுமே முரண்பட்ட திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. சோசலிச சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியால் உலகையே நெருக்கடி சூழ்ந்துகொண்டிருந்த காலகட்டமும், ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை ராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் எதிர்த்து நிற்கும் சூழல்கள் முடிவுக்கு வந்த காலகட்டமும் மண்டேலாவின் விடுதலையோடு கூடவே வந்தது; ஆப்பிரிக்க கண்டத்தின் ஒரு பெரும்பகுதி மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதும் அதே தருணத்தில் நிகழ்ந்தது.
             பழங்கால சீனத்தில் ஒரு முதுமொழி உண்டு: “ஒவ்வொரு நெருக்கடியும் ஒரு வாய்ப்பினை கூடவே கொண்டுவரும்“ என்ற அந்த முதுமொழி இங்கு உண்மையானது. நெல்சன் மண்டேலாவை மூன்று முறை சந்திப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் 48வது மாநாட்டின்போது முதல்முறையாக அவரைச் சந்தித்தேன். 1960ம் ஆண்டில் அக்கட்சி தடைசெய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் 1991ல் ஜூலை மாதம் டர்பன் மாநகரில் அந்த மாநாடு நடைபெற்றது. அந்தசூழல் எனது வாழ்நாளிலேயே மிக முக்கியமான அனுபவமாக இருந்தது. 30 ஆண்டுகாலத்திற்கும் மேலாக தனிமைச்சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்ட தோழர்கள் முதல்முறையாக ஒருவருக்கொருவர் இந்த மாநாட்டில் சந்தித்துக் கொண்டார்கள். இளமைப் பருவத்தில் பிரிந்த அவர்கள் ஒருவரையொருவர் முதுமைப் பருவத்தில் சந்தித்த போது ஒருவரையொருவர் அடையாளம்காண முடியாமல் தவித்தார்கள். டர்பன் மாநகரம் இன்றைக்கும் நிறவெறிப் பிரிவினரின் அடையாளங்களை தன்னில் வைத்திருக்கிறது; அதன் புகழ்மிக்க கடற்கரைகளில் “வெள்ளையினத்தவர் அல்லாதவர்கள் மற்றும் நாய்கள் - இங்கு வரக்கூடாது” என்று எழுதப்பட்ட பலகைகள் அந்தக் கொடுமையை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தன. நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்தபோது நாடெங்கும் மிகப்பெரும் உற்சாக வெள்ளம் ஏற்பட்டது; எனினும் மண்டேலா அந்த மாநாட்டில் பேசுகையில், ஓர் எச்சரிக்கை குறிப்பையும் சுட்டிக்காட்டினார்:
“ஆயுதப்போராட்டத்தை நாம் நிறுத்தி வைக்கிறோம்; ஆனால் அதே நேரத்தில் ஆயுதப்போராட்டத்தை நாம் கைவிட்டுவிடவில்லை. அது நாட்டின் உள்ளே இருந்தாலும் சரி; வெளியில் இருந்தாலும் சரி, உம்கோந்த்தோ வி சிஸ்வே படைக்கு எந்த தருணத்திலும் ஒரு ஜனநாயக சமூகத்தை படைப்பதற்கான அமைதிப்பாதையை எதிர்ப்புரட்சி சக்திகள் குறுக்கிடுவதாகத் தெரிந்தாலும் அதற்கு எதிராக செயல்பட தயாராக இருக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. நிறவெறி ஆட்சி அமைப்பு மீண்டும் எழுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதையும், தற்போதைக்கு அதற்கான சக்திகள் நமது போராட்டத்தால் பலவீனமடைந்துள்ளன என்பதையும் உணர்வது அவசியம். நமது மக்களின் போராட்டத்தால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடை நீக்கப் பட்டுள்ளது; இன்றைக்கு நமது சொந்த நாட்டிலேயே நாம் சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்பட்டமான கம்யூனிச எதிர்ப்பு சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆட்சி, நமது கூட்டாளியான தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடையையும் விலக்குவதற்கு மக்கள்போராட்டம் உதவியுள்ளது; கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்வதற்கு தடைவிதித்த சட்ட விதிகளும் நீக்கப்பட்டுள்ளன”.
              மண்டேலா கைது செய்யப்படுவதற்கு அவர் மீது சுமத்தப்பட்ட முக்கியக் குற்றச்சாட்டுகளில் ஒன்று, அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்பதாகும். உண்மையில் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக இருந்தார். பனிப்போர் முடிவடைந்த காலத்தில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஆட்சியின் கூட்டாளிகள், விடுதலையடைந்த மண்டேலா மீது மீண்டும் ஒருமுறை அதே குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்; மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் இதை வைத்து மண் டேலாவை எச்சரிக்கையும் செய்தன. அச்சமயத்தில்தான், அந்த மாபெரும் மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் தத்துவார்த்த தாக்குதலுக்கு எதிராக முழங்கினார் மண்டேலா : “உங்கள் கூட்டாளிகளோடு உங்கள் வேலையைப் பாருங்கள்; எங்கள் கூட்டாளிகளோடு எங்கள் வேலையைப் பார்க்கிறோம்“. நான் இரண்டாவது முறையாக மண்டேலாவை அதே ஆண்டில் டிசம்பரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் 8-வது மாநாட்டின்போது சந்தித்தேன். ஆயுதப்படையான உம் கோந்த்தோ வி சிஸ்வேயின் தலைவராக மண்டேலாவிற்கு அடுத்து பொறுப்பு வகித்த தோழர் கிறிஸ் ஹானி, தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டார். சிற்சில நாட்களில் தோழர் ஹானி, நிறவெறி - எதிர்ப்புரட்சி சக்திகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு பிறகு ஏற்கெனவே ஆப்பிரிக்க மக்கள், மனித இனம் தாங்க முடியாத அளவுக்கு துயரத்தை அனுபவித்துவிட்ட பின்னணியில், இப்போதைக்கு அமைதியே மிக முக்கிய இலக்கு என்ற நிலையில் மண்டேலா அந்தப் பாதையில் பயணித்தார். காலனியாதிக்க பிற்போக்கு சக்திகளின் வன்முறைகள் தொடர்ந்த நிலையில், ஆயுத மோதலும் தொடர்ந்த சூழலில், உண்மை மற்றும் மறுவாழ்வு ஆணையத்தை அமைக்க மண்டேலா முன்மொழிந்தார். அமைதி மற்றும் மறுவாழ்வுக்கான இந்த முக்கியமான ஏற்பாடு, பலரது பழிவாங்கும் உணர்வை தடுத்து நிதானிக்க வைத்தது.
             அதே நேரத்தில், தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியையும் அதன் கூட்டாளிகளையும், தென்னாப்பிரிக்க காங்கிரஸ் மற்றும் தென்னாப்பிரிக்க தொழிற்சங்கமான `கொஷாட்டு’வின் தோழர்களையும், எதிரிகளது ஆயுதத் தாக்குதலுக்கு எதிராக விழிப்போடு இருக்குமாறு எச்சரித்தார். எனவே, `அகிம்சை’ வடிவம் என்பது மண்டேலாவைப் பொறுத்தவரை ஒரு நடைமுறை உத்தியாக மட்டுமே இருந்தது. ஆனால் இது பலராலும் காந்திய வழி என்று தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. டர்பனில் அவரை சந்தித்தபோது முதல்முறையாக என்னிடம் கூறிய வார்த்தைகள், இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள், இந்தியா எங்களுக்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அனுப்பி வைத்தது; இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா மகாத்மாவை அனுப்பிவைத்தது. கடைசியாக நான் அவரை தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் 10-வது மாநாடு 1998 ஜூலையில் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற போது சந்தித்தேன். அப்போது மண்டேலா தானாகவே முன் வந்து ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்திருந்தார்; தபோ எம்பெகியிடம் ஜனாதிபதி பதவியை அளித்திருந்தார்; தென்னாப்பிரிக்க மக்கள் அதை துயரத்துடனே ஏற்றுக் கொண்டார்கள். இப்படி பதவியை விட்டுக்கொடுத்த ஒரேயொரு ஆப்பிரிக்கத் தலைவர் அநேகமாக மண்டேலா மட்டுமே. தானாகவே முன்வந்து பதவி விலகிக் கொண்ட மற்றொரு தலைவர், என்னைப் பொறுத்தவரை மேற்குவங்கத்தின் முதல்வராக இருந்த நமது அருமைத் தலைவர் ஜோதிபாசு மட்டுமே. ஜோதிபாசுவும் மண்டேலாவும் மிக நெருக்கமான, ஒற்றுமையான உறவினைக் கொண்டிருந்தார்கள்.
           மண்டேலா முதன்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்தபோது கல்கத்தாவுக்கு செல்ல வேண்டுமென்று அவர் மிகுந்த விருப்பம் தெரிவித்தார். அந்த மாநகரம் அவருக்கு கண்ணீர் பெருக்கோடு பெரும் வரவேற்பை அளித்தது. அந்த மாபெரும் கூட்டத்தில் அவர் பேசினார் : இந்த மாநகரின் வீதிகளில் இன்றைக்கு நீங்கள் அளித்துள்ள வரவேற்பு, எனது சொந்த இல்லத்திற்கு வந்ததைப் போல என்னை உணரவைக்கிறது. சக புரட்சியாளர்களோடு நான் இங்கே அமர்ந்திருக்கிறேன்... அன்றைய தினம் உங்களது கதாநாயகர்களாக இருந்தவர்கள் எங்களுக்கும் கதாநாயகர்களாக இருந்தார்கள்; இந்த உலகின் மாபெரும் மனிதர்களுக்கு மத்தியில் நாங்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸையும் பார்க்கிறோம்; கறுப்பின மாணவர்களாக இருந்த எங்களுக்கெல்லாம் உங்களது தலைவர்கள் ஆதர்ச சக்திகளாக திகழ்ந்தார்கள்... கல்கத்தாவிற்கு வந்த பிறகு இன்னும் அதிக சக்தி பெற்றிருக்கிறேன். மீண்டும் புத்தெழுச்சி பெற்ற மனிதனாக நான் உணர்கிறேன்“. (அக்டோபர் 1990) தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் 10-வது மாநாட்டில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அரசாங்கத்தால் பின்பற்றப்படும் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து சீரிய விவாதம் நடைபெற்றது; அந்த விவாதங்களில் மண்டேலா முழுமையாக பங்கேற்றார்;
      கம்யூனிஸ்ட்டுகளால் அந்த மாநாட்டில் செய்யப்பட்ட விமர்சனங்களையும், வழிகாட்டுதல்களையும் அவர் ஏற்றுக்கொண்டார். தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் புதிய தாராளமய உலக கட்டமைப்போடு மேலும் மேலும் இணையத் துவங்கியது; மக்களின் விடுதலைக்கான வாக்குறுதிகள் தொடர்ந்து தொலைதூரத்திலேயே இருக்கும் நிலை நீடித்தது. தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, தபோ எம்பெகி அரசை இதுகுறித்து எச்சரித்தது. ஆளும் மூன்று கட்சி கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்தது. பின்னர் அதிலிருந்து வெளியேறியது. அரசாங்கத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பணியை செய்தது. தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத்தின் மகத்தான பாரம்பரியத்தில், இன்னும் தீர்வுகாண முடியாத பிரச்சனைகளாக இந்த உண்மைகள் பிரதிபலிக்கின்றன. கறுப்பின மக்கள் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெறுவதற்கு அடிப்படையானது உடனடி நிலச்சீர்திருத்தம் என்றும், அதை தன் வாழ்நாளில் கண்டுவிட வேண்டும் என்றும் மண்டேலா மிகவும் விரும்பினார். ஆனால் கடைசி வரை அவரால் அதைப் பார்க்க முடியவில்லை. இந்த இலக்கு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் சுதந்திர சாசனத்தில் இன்னும் ஒரு முக்கிய அம்சமாக நீடிக்கிறது; தேசிய ஜனநாயக புரட்சியின் நிகழ்ச்சிநிரலாகவும் நீடிக்கிறது. தென்னாப்பிரிக்க பொருளாதார சக்தியின் அடிப்படை அம்சங்கள் அனைத்தும் இன்னும் அவர்களது முன்னாள் காலனிய ஆதிக்க சக்திகளின் கைகளிலேயே இருக்கிறது; ஒரு சிறிய பிரிவு கறுப்பின முதலாளிகள் தற்போது முன்னாள் காலனிய சக்திகளோடு கூட்டுச்சேர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
               இவையெல்லாம், மண்டேலா தனது வாழ்நாளில் தனது உண்மையான நிகழ்ச்சி நிரலை காண முடியாமல் செய்துவிட்டது. அந்நாட்டின் தற்போதைய தலைமுறையினர் எதிர்காலத்தில் செய்ய வேண்டியிருப்பது ஏராளம். தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் 10-வது மாநாடு, சோசலிசமே எதிர்காலம் என்று முழங்கியது; அதற்கான போராட்டத்தை அது தொடர்கிறது. எப்படியிருப்பினும் மேலும் மேலும் உச்சத்தை எட்ட வேண்டும் என்ற மனிதகுலத்தின் தீராத தாகத்திற்கு, மனிதகுல விடுதலை என்ற அந்த உன்னதமான லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்ற நெல்சன் மண்டேலா வழிகாட்டியாக திகழ்கிறார்; அந்த பாடல் மீண்டும் எதிரொலிக்கிறது... “கடைசித் துளி துணிச்சல் இருக்கும் வரை அடைய முடியாத அந்த நட்சத்திரத்தை அடைவதற்கு போராடுவேன்“.-
தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்
நன்றி :
 

வெள்ளி, 29 மார்ச், 2013

மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை அமல்படுத்தக் கூடிய அரசு தேவை : சீதாராம் யெச்சூரி

         
     ''மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை அமல்படுத்தக்கூடிய அரசுதான் இன்றைய தேவை'' என்று மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
      இது குறித்து சீதாராம் யெச்சூரி எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது :
        "தேர்தல் நெருங்கும் சமயத்தில் புதிய கூட்டணிகள் குறித்த பேச்சுகள் எழுவது வழக்கமானதே. ஆனால், 2014இல் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதே தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சுகள் தொடங்கியுள்ளதற்கு காரணம், மத்திய அரசு, சிறுபான்மையாக மாறிவிட்டதுதான். மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. அக்கூட்டணியிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் விலகியபோதே, அது ஒரு சிறுபான்மை அரசாக மாறிவிட்டது. இப்போது திமுக வெளியேறிவிட்ட நிலையில், காங்கிரஸ் கூட்டணி மேலும் பலவீனமடைந்துவிட்டது. வெளியிலிருந்து ஆதரவு தரும் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன்தான் ஆட்சியில் தொடர முடியும் என்ற நிலையில் காங்கிரஸ் கூட்டணி உள்ளது. இது போன்று வெளியிலிருந்து ஆதரவைப் பெறுவதற்கு சலுகைகள் அளிப்பதாகக் கூறியோ அல்லது மிரட்டியோதான் ஆட்சியில் நீடிக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. சமாஜவாதி கட்சி, மூன்றாவது அணி குறித்து பேசத் தொடங்கியுள்ளது. பொருளாதார மந்த நிலை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதிலிருந்து விடுபடும் வகையில் மாற்றம் வராதா என்று அவர்கள் தவிக்கின்றனர். அவர்கள் தரும் நெருக்கடி காரணமாகத்தான், சமாஜவாதி மூன்றாவது அணி குறித்த கருத்தை தெரிவித்து வருகிறது. மக்கள் விரும்பும் மாற்றம், காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அரசு வந்தால் மட்டும் ஏற்பட்டுவிடாது. மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்துவதன் மூலம்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இப்போதைய தேவை மாற்று அரசு மட்டுமல்ல, மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை அமல்படுத்தக் கூடிய அரசும்தான்'' என்றார் சீதாராம் யெச்சூரி.
 நன்றி :
NewsHunt