பாராளுமன்ற முடக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாராளுமன்ற முடக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 பிப்ரவரி, 2014

முதலைக்கண்ணீர் வடிக்கும் மன்மோகன் சிங்...!

                           கடந்த 5-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆறு நாட்களாக மக்களவையும், மாநிலங்களவையும் நடத்த முடியாமல் முடக்கப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 10 ஆண்டுகளாகவே நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்றால் இப்படித் தான் நடக்கிறது. நாடாளுமன்றம் ஒரு நாள் முழுதும் முழுமையாக தன்னுடைய அலுவல்களை கவனித்ததாக சமீபக் காலமாக வரலாறு இல்லை. எதிர்கட்சியான பாரதீய ஜனதாக்கட்சிவும், ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி மறைமுகமாகவும், இந்த இரு கட்சிகளும் இரகசிய உடன்பாடு செய்துகொண்டு பாராளுமன்றத்தை முடக்கும் வெட்கக்கேடான வேலைகளை ''வெற்றிகரமாக'' செய்து வருவதை நாடு நன்கறியும்.
                 ஆனால் இந்த முறை நாடு சற்று வித்தியாசமாக நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நேரத்தில், கடைசி கூட்டத்தொடரான இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும்  நேரடியாக களத்தில் இறங்கி இரு அவைகளையும் நடக்கவிடாமல் முடக்குகிறார்கள் என்பதும் வெட்கக்கேடானது. ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிப்பதை எதிர்த்து - ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தை விரும்பக்கூடிய காங்கிரஸ் கட்சி எம்.பி-க்களே அரசின் செயலை எதிர்த்து அரசிற்கு எதிராக பாராளுமன்றத்திற்குள்ளேயே போராட்டம் நடத்தி கடந்த ஆறு நாட்களாக பாராளுமன்ற அலுவல்களை நடத்தவிடாமல் முடக்கிவருகிறார்கள். 
           அதேப்போல் இன்றும் பாராளுமன்றத்தில் இடைக்கால இரயில்வே பட்ஜெட்டை இரயில்வே அமைச்சர் தாக்கல் செய்து வாசிக்கும் போது அவரை வாசிக்க விடாமல் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் இடையூறு செய்திருக்கிறார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீதும், பாராளுமன்ற நடவடிக்கைகளின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கும் வண்ணம் பாரதீய ஜனதாக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கும் செயலில் ஈடுபடுவது என்பது இந்த நாட்டின் சாபக்கேடாகும்.
              இப்படியெல்லாம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாராளுமன்ற முடக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இது வரை அதைத் தடுப்பதற்கு எந்தவித முயற்சியையும் எடுக்காமல் வாய் மூடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங், இன்று தான் தனது வாயைத் திறந்திருக்கிறார். 
             நாடாளுமன்றத்தில் நடக்கும் காட்சிகளை பார்க்கும்போது தமது இதயத்தில் இருந்து ரத்தம் வழிந்தோடுவதாக பிரதமர் கூறியிருப்பதை பார்த்தால், இத்தனை ஆண்டுகளாக பிரதமர் ''கும்பகர்ணனைப்'' போல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாரோ என்ற சந்தேகம் வருகிறது. இன்று பிரதமரின் இதயத்திலிருந்து இரத்தம் வழிதொடுவது, இரயில்வே பட்ஜெட்டை இடையூறு செய்கிறார்கள் என்பதற்காக அல்ல. இன்னும் அமெரிக்காவின் ''ஆணைப்படி'' நிறைவேற்றப்படவேண்டிய நிலுவையில் உள்ள மசோதாக்களை பாராளுமன்ற முடக்கத்தினால் முடியாமல் போய்விடுமோ...? - தன் எஜமானின் நிராசையாக போய்விடுமோ...? என்ற ஏமாற்றத்தில் வந்த ''வேதனை குமுறல்'' தான் அது. மன்மோகன் சிங் விடுவது என்பது ''முதலைக் கண்ணீர்'' தான் என்பது நமக்கு தெரியாதா என்ன...?

சனி, 8 செப்டம்பர், 2012

பாராளுமன்றத்தை முடக்கினால் வெட்டுங்கள் - பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை....!

      பதினேழு  நாட்கள் நடைபெறவேண்டிய பாராளுமன்ற இரு அவைகளும் 24 மணிநேரங்களே தனது அலுவல்களை கவனித்து, பல்வேறு அமளிகளுக்கு நடுவே, அவசரகதியில் விவாதங்கள் எதுவும் நடைபெறாமலும் மக்களின் பிரச்சனைகள் பற்றி எதுவும் விவாதிக்காமலும்  நேற்றோடு முடிவுக்கு வந்தது என்பது வாக்களித்த இந்திய மக்கள் தலைகுனிய வேண்டிய நிகழ்வாகும். 
         2009 - லிருந்து பல்வேறு ஊழல்களை நிகழ்த்தி சாதனை படைத்து வரும் காங்கிரஸ்  கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தற்போதைய புதிய ஊழலான  நிலக்கரி சுரங்க ஊழலை  காரணம்  காட்டி, காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் மறைமுகக் கூட்டாக  இந்த மழைக்கால கூட்டத்தொடர் இயங்காமல் முடக்கி வைத்ததில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. பாராளுமன்ற முடக்கம் என்பது நமக்கு புதிதில்லை தான். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக பாராளுமன்ற முடக்கம் என்பது ஒரு நடைமுறை வழக்கமாகிப் போய்விட்டது. மக்களால் தங்கள் கட்சி ஆட்சிப் பொறுப்பிலிருந்து தூக்கியெறிந்த பின்னர் 2004 - ஆம் ஆண்டிலிருந்து பாரதீய ஜனதா கட்சி ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படாமல், நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை நடக்கவிடாமல் முடக்குவதையே தொழிலாக கொண்டு வருகிறது. இடதுசாரிகள் உள்ளிட்ட  எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளிலிருந்தும் அது சம்பந்தமான விவாதங்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ள காங்கிரஸ் கட்சிக்கும் இந்த சூழல்கள்  தான் தேவைப்படுகின்றன. 
             அதுவும் இந்த முறை இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே, ஒரு கூட்டத்தொடர் முழுமையாக  எந்தவித ஆக்கப்பணிகள் நடைபெறாமலும், விவாதங்கள் இல்லாமலும், கூச்சல் - குழப்பங்களோடு அனைத்து நாட்களும் முடக்கப்பட்டது என்பது இதுவே முதல் முறையாகும். இந்த செயல் என்பது இந்த நாட்டிற்கே அவமானம் என்பதும்,  வாக்களித்த மக்களுக்கு இவர்கள் காட்டும் அவமரியாதை என்பதும் யாராலும் மறுக்கமுடியாது. 
             இது போன்ற நடவடிக்கைகள், எதிர்காலத்தில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவார்கள் என்பதையும்,  எதிர்காலத்தில் பாராளுமன்ற நடவடிக்கை என்பது  ஒரு கேலிக்கூத்தாக மாறிவிடும் என்பதையும் இந்த இரு கட்சிகளும் முதலில் உணரவேண்டும். 
                இது போன்ற ஜனநாயக விரோத செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க அரசு உருப்படியாக ஏதாவது யோசித்தாகவேண்டும். இதற்காக அரசு, குறிப்பாக மக்களவைத்தலைவரும், மாநிலங்களவைத்தலைவரும் அனைத்துக்கட்சித்தலைவர்களுடன் கூடி கலந்தாலோசித்து, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் அல்லது கடுமையாக்க வேண்டும். அப்போது தான் இது போன்ற கூத்தெல்லாம் தடுத்து நிறுத்த முடியும். 
            பாராளுமன்றமோ அல்லது சட்டமன்றமோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நான்கு  விதமான உறுப்பினர்கள்  இருக்கின்றார்கள். அவர்கள்.... 
         (1) அவை நடவடிக்கைகளில் தவறாமல் கூட்டத்தொடர் முழுதும் அவைக்கு வந்திருந்து விவாதங்களில் பங்குகொள்ளும் உறுப்பினர்கள். நம் நாட்டில் இவர்கள் மிகச் சிலராகத் தான் இருப்பார்கள்.  பெரும்பாலும் இவர்கள் இடதுசாரிக்கட்சியை உறுப்பினர்களாக தான்  இருப்பார்கள். இவர்கள் தான் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளிலிருந்து, இறுதி நாள் வரையில் கண்டிப்பாக அவைக்கு வந்திருந்து அனைத்து விவாதங்களிலும் பங்குகொள்பவர்கள். அதனால் தான் எந்தவிதமான மக்கள் விரோத - தேச விரோத மசோதாக்கள் அமைச்சர்களால் கொண்டுவரப்பட்டால் உடனே எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் - வலுவான விவாதங்களில் பங்கு கொள்பவர்கள் இடதுசாரிகளாக தான் இருப்பார்கள்.
        (2) இந்த வகை உறுப்பினர்கள் கடமைக்கென்று அவைக்கு வருவார்கள். ஆனால்  அவை நடவடிக்கைகளில் எதிலும் நாட்டம் இல்லாமல் அவையிலேயே தூங்குபவர்கள்.
           (3) தங்களை எதற்காக மக்கள் தேர்ந்தேடுத்தார்கள்  என்ற சிந்தனையே இல்லாமல், அவைக்கே வராமலும், ஜனநாயகக் கடமைகளை ஆற்றாமலும் வெளியே  ''வேறு'' வேலைகளை பார்த்துக்கொண்டிருப்பவர்கள். தங்களுடைய பதவியை பாதுகாத்துக்கொள்ள தேவையான குறைந்த பட்ச ''கட்டாய வருகையின் தேவைக்காக'' எப்போதாவது மன்றத்திற்கு வந்து அவைக்கு வெளியே உள்ள வருகைப்பதிவேட்டில் கையோப்பம் இட்டு செல்பவர்கள். இவர்கள் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் இடுவார்களே தவிர அவையை எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். இவர்கள் மழைக்குக் கூட அவையின் பக்கம் ஒதுங்கமாட்டார்கள். ஆனால் உறுப்பினருக்கான ஊதியத்தையும், படிகளையும், சலுகைகளையும்  கூசாமல் அனுபவிக்கிறவர்கள். ஜனநாயகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள். இவர்கள் தேசத்தின் மீதும், மக்களின் மீதும் அக்கறையில்லாதவர்கள் - பொறுப்பில்லாதவர்கள்.
           (4) இந்த வகையை சேர்ந்தவர்கள் ஜனநாயகத்தில் மிகவும் ஆபத்தானவர்கள். பசுத்தோல் போர்த்திய புலிகள். இவர்கள் நாடாளுமன்றத்திற்கு தவறாமல் வருபவர்கள். ஆனால் வருகைப்பதிவேட்டில் கையொப்பம்  போட்டுவிட்டு அவைக்கும் வந்து விடுவார்கள். ஆனால் ஏதாவதொரு காரணத்தை எடுத்துக்கொண்டு அவையில் கூச்சல் - குழப்பத்தை ஏற்படுத்தி அவை நடவடிக்கைகளை முடக்கிவிடுவார்கள். இவர்கள்  செய்வது நாட்டிற்காக - மக்களுக்காக - நல்லதுக்காக செய்வது போலத்தான் தெரியும். ஆனால் அத்தனையும் திரைமறைவில் ஆட்சியாளர்களோடு உடன்பட்டு செய்யும் அயோக்கியத்தனம். ஜனநாயகத்தில் இது ஆபத்தான செயல். இதை தான் நாம் நேற்றுவரை நம் பாராளுமன்றத்தில் நாம் பார்த்தோம். 
               உண்மையிலேயே பாரதீய ஜனதா கட்சியினர் தேசத்தின் மீது அக்கறையுள்ளவர்களாக இருந்தால், ஊழலை எதிர்ப்பவர்களாக இருந்தால் அதை பற்றி விவாதிக்க பாராளுமன்றத்தை முடக்காமல் நடத்தவிட்டிருக்க வேண்டும். நாட்டில் இத்தனைப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. அதில் பிரதமர் சம்பந்தப்பட்டிருக்கிறார்  என்றால்  அதைப்பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் செய்யாமல் வேறு எங்கே பேசுவது...? அப்படி பாராளுமன்றத்தில் விவாதம் செய்யாமல் எப்படி உண்மைகள் வெளியே வரும்...? இந்த குறைந்தபட்ச அறிவுக்கூட பாரதீய ஜனதா கட்சியினற்கு இல்லாமல் போய்விட்டதா...? 
இவைகள்  எல்லாம் பாரதீய ஜனதா கட்சியினற்கு தெரியாமல் இல்லை. அனால் ஏன் பாராளுமன்றத்தை வெறித்தனமாக முடக்கவேண்டும். காரணம்....
       ஒன்று... நிலக்கரி ஊழல் பற்றி பாராளுமன்றத்தில் விவாதித்தால், காங்கிரஸ் கட்சியின் அவலச்சணங்கள்  மட்டுமல்ல, ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் - தூய்மையானவர்கள் என்று தங்களை வேஷம் போட்டுக் காட்டிக்கொள்ளும் பாரதீய ஜனதா கட்சியின் அவலச்சனங்களும் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் தான் பாரதீய ஜனதா கட்சியினர் இத்தனை வெறியோடு முடக்கினார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இந்த இரு கட்சியினரின்  அலமாரிகளில் இருந்தும் எலும்புக்கூடுகள் வெளியே வந்துவிடும் என்கிற அச்சம் பாரதீய ஜனதா கட்சியினரை பேயாய் பிடித்து ஆட்டியதால் தான் பாராளுமன்றத்தை பேயாய் பிடித்து முடக்கினார்கள் என்பதை நாடு நன்கு அறியும். 
             கடைசி இரண்டு வகை உறுப்பினர்களால் அரசுக்குத் தான் அனாவசிய செலவு. தேவையில்லாமல் மக்களின் வரிப்பணம் உருப்படியில்லாத இந்த ''இரு வகை'' உறுப்பினர்களுக்கு சேருகிறது. அதனால் அரசு இது போன்ற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற  உறுப்பினர்களை ''திரும்ப அழைக்கும் உரிமையை'' மக்களுக்கு தரவேண்டும். அல்லது இவர்கள் அவைக்கு வராமல் வெளியே இருக்கும் நாட்களிலும், அவைக்கு வந்து வருகைப்பதிவேட்டில் கையொப்பம் போட்டுவிட்டு வெளியேறும் நாட்களிலும், அவைக்கு வந்து கொயோப்பமும் இட்டு  அவையை நடத்தவிடாமல் ரகளையில் ஈடுபட்டு அவையை ஒத்திவைக்கும் நாட்களிலும் அல்லது  அவையை முடக்கும் நாட்களிலும் இந்த ''மாண்புமிகு'' உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தையும், கூட்டத்தொடர் படியையும், மற்ற சலுகைகளையும் கண்டிப்பாக  வெட்டவேண்டும். அவைக்கு வாராமலேயே - அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமலேயே  -  அவை நடவடிக்கைகளை முடக்கிவிட்டு ஊதியம் பெறுவதும், மற்ற சலுகைகளை அனுபவிப்பதும் எப்படி நியாயமாகும்...? எப்படி முறையாகும்...? அப்படி அனுபவிப்பதை இவர்களின் மனசாட்சி எப்படி இடமளிக்கிறது...?
            அனைத்து அரசுத்துறைகளிலும், அரசுத்துறை நிறுவனங்களிலும்  வேலை செய்யும் ஊழியர்களோ அல்லது தொழிலாளர்களோ வேலைநிறுத்தம் செய்தால், வேலைநிறுத்தம் செய்யும் அத்தனை நாட்களையும் ''வேலை செய்யா'' நாட்களாக அறிவித்து ''NO WORK - NO PAY'' என்ற விதிகளின் அடிப்படையில்  படிகள் உட்பட ஊதியத்தையும், அன்றைய மற்ற சலுகைகளையும் வெட்டுவது என்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. இதை அனைத்து இடதுசாரி தொழிற்சங்கங்களும் நியாயத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டுள்ளது.
             இதே விதிமுறைகளை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ''நடத்தை விதிமுறைகளில்'' புகுத்தினால்  தான்  நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்பது எதிர்காலத்தில் கூச்சல் - குழப்பமின்றி, முடக்குவாதமின்றி அமைதியாக நடைபெறும். தேசத்திற்கான - மக்களுக்கான ஆக்கப்பணிகளை அக்கறையோடும், கவனத்தோடும்   நாடாளுமன்றத்தில் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் செம்மையாக கடமையாற்றுவார்கள்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

கரியை காசாக்கிய காங்கிரஸ் கட்சியும், காசைக் கரியாக்கும் பாரதீய ஜனதா கட்சியும்...!

        கடந்த மூன்று நாட்களாகவே இந்திய பாராளுமன்றத்தில் அனல் பறக்கிறது. பாராளுமன்றத்தின் மக்களவை  மற்றும் மாநிலங்களவை ஆகிய   இரு அவைகளும் நடத்த முடியாமல்  பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளினால் முடக்கப்பட்டிருக்கின்றன. சென்ற வாரம் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் கிளப்பிவிட்ட புயல் ஓயவே இல்லை. திடிரென்று வந்த ''தானே'' புயல் மாதிரி, தலைமை கணக்கு தணிக்கையாளர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையே ஆட்டம் காண வைத்திருக்கிறது என்பது உண்மை தான்.  
              இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழல்.... 2 ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழலையே   மிஞ்சி விட்ட மெகா  ஊழல்... அரசின் கையிலிருந்த  நிலக்கரி சுரங்கங்களை தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு   திறந்துவிடப்பட்டதில் அரசுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய  வருமான இழப்பு என்பது 1.86 இலட்சம் கோடி என்ற தகவலை தலைமை கணக்கு தணிக்கையாளர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துயிருக்கிறார். இது ''திருவிளையாடல்'' எப்போது நடந்தது என்றால்...  நிலக்கரி சுரங்கம்  பிரதமரின் கட்டுப்பாட்டில் இருந்த காலக்கட்டத்தில்  தான் என்பது குறிப்பிடத்தக்கது.

             பாராளுமன்றத்தை முடக்குவதற்கு வாய்ப்புகளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த அறிக்கை என்பது மிகப்பெரிய அல்வா துண்டு போல கிடைத்துவிட விட்டேனா பார் என்று குழப்பத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கி கடந்த மூன்று நாட்களாக பிரதமர் பதவி  விலகவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்கி வருகின்றனர். ''விடாக்கண்டன்- கொடாக்கண்டனான'' நம்ம பிரதமர் மன்மோகன் சிங் வழக்கம் போல் இதுவரை வாயையே திறக்கவில்லை. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட ''தலை'' ஆடவில்லை... ஆனால்  ''வால் '' மட்டும் துடித்து ஆடியது. ஆம்... பிரதமரின் வாலாக ஒட்டிக்கொண்டிருக்கக்கூடிய மத்திய அமைச்சர் நாராயணசாமி தலைமை கணக்கு தணிக்கையாளரை  மிரட்டுவதுபோல் பேசினார். தலைமை கணக்கு தணிக்கையாளர் அரசை கலந்தாலோசிக்காமல் அறிக்கையை நேரடியாக தாக்கல் செய்தது என்பது தவறானது என்று கர்ஜித்தார். தலைமை கணக்கு தணிக்கையாளர் என்பவர் இந்திய அரசியல்சாசன சட்டப்படி பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டவர் என்பதையே இந்த  அமைச்சர் மறந்துவிட்டு பேசினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்கக்கூடிய திமுகஉள்லிட்ட கட்சிகளும் வாயை திறக்கவில்லை.
             ஆனால் ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளெல்லாம் பேசவே முடியாமல் ஆடிப்போயிருக்கின்றன. இன்னொரு பக்கம் இந்த ஊழலை காரணம் காட்டி வரும் 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி விட்டு  தாங்கள்    எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியினர் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.
         கர்நாடகா மாநிலத்தில் இதே போல் நிலக்கரி ஊழலில் சிக்கி நாறிக்கொண்டிருக்கிற பாரதீய ஜனதா கட்சி தங்களை உத்தமர்களைப் போல் காட்டிக்கொள்ள பாராளுமன்றத்தைப் பயன்படுத்துகின்றனர். தாங்கள் தான் ஊழலை ஒழிக்க வந்த பரமாத்மா போல் ஊழலுக்கு காரணமான மன்மோகன் சிங் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் என்று கூறி  இரு அவைகளையும் நடத்தவிடாமல் கடந்த மூன்று நாட்களாக பாராளுமன்றத்தையே முடக்கிவருகின்றனர். இது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான செயல் ஆகும்.பாராளுமன்ற ஜனநாயகத்தின் குரல்வளையையே நெரிக்கும் செயலாகும்.
            அது மட்டுமல்லாமல், குற்றம்  சாட்டப்பட்ட பிரதமர் தன்னுடைய கருத்துக்களை பாராளுமன்றத்தில் எடுத்துரைப்பதற்கும், இந்த ஊழல் சம்பந்தமாக மற்ற எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்தில்  தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்வதற்குமான  வாய்ப்பைகளை  தடுக்கின்ற  செயலாகும். பறிக்கின்ற செயலாகும். . இப்படி மற்றவர்களை பேசவிடாமல், பாராளுமன்றத்தில் அடாவடித்தனமாக தகராறு செய்வதன்  மூலம், தாங்கள் மட்டுமே ஊழலுக்கு எதிராக  குரல் கொடுப்பவர்கள் போலவும், பாரதீய ஜனதா கட்சி மட்டுமே ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று என்பது போலவும்  ஆன கருத்துக்களை மக்களிடம் உருவாக்கவே பாரதீய ஜனதா கட்சி  இந்த பாராளுமன்ற சீர்குலைவு வேலைகளை செய்து நாடகம் ஆடி வருகின்றனர்.  
                உண்மையிலேயே பாரதீய ஜனதா கட்சியினர் ஊழலுக்கு எதிராக போராடுகின்றார்கள் என்றால், நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும்...? இந்த ஊழல் சம்பந்தமாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அரசை வற்புறுத்தியிருக்க வேண்டும். இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட பிரதமரையும், கோடிக்கணக்கான அரசின் பணத்தை சுருட்டிய பெருமுதலாளிகளையும் விசாரணைக்குள்  உட்படுத்த வேண்டும் என்று போராடியிருக்க வேண்டும்.
             அதேப்போல், இந்திய பன்னாட்டு பெருமுதலாளிகள் கோடிகோடியாய் கொள்ளையடித்த மக்கள் பணத்தையும் அதனால் சேர்த்த சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்து  பாரதீய ஜனதா கட்சியினர் வலுவாக நாடாளுமன்றத்தில் போராடியிருக்கலாமே...? ஏன்  செய்யவில்லை...?
          ஏனென்றால், பாரதீய ஜனதா கட்சியினர் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக செயல் படுவார்களே தவிர எதிராக  செயல்பட மாட்டார்கள். இவர்களின் தேர்தல் செலவை கவனிப்பவர்கள் அவர்கள் தானே...? பாரதீய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியினை போலவே மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாதர்ககள். பெருமுதலாளிகளுக்கு ஆதரவானவர்கள்.