சச்சின் டெண்டுல்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சச்சின் டெண்டுல்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஆகஸ்ட், 2014

பாராளுமன்றத்தை அவமதிக்கும் சச்சின்...!

              
             இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஆரம்பக்காலத்திலிருந்தே ஒரு மரபு இருக்கிறது. மக்களால் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமல்லாது, ஆட்சியாளர்களுக்கு  வேண்டியவர்களையும்  மற்றும் மக்கள் மத்தியில் பேரோடும், புகழோடும் விளங்கக்கூடிய பிரபலங்களையும்  ''நியமன உறுப்பினர்கள்'' என்றப் பெயரில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இடமளிக்கப்படுகிறது. இவர்களும் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களைப் போல் அவை கூட்டங்களிலும், விவாதங்களிலும் கலந்துகொள்ளலாம். அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள அனைத்து சலுகைகளும் இவர்களுக்கும் உண்டு. ஆனால் இவர்கள் மத்திய அமைச்சராக முடியாது. பாராளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பிலோ அல்லது குடியரசு தேர்தலிலோ பங்கெடுக்கமுடியாது.
                  இப்படிப்பட்ட மரியாதைக்குரிய அதே சமயத்தில் பொறுப்புள்ள இந்த நியமன உறுப்பினர் பதவிக்கு மக்களவைக்கு இரண்டு பேர்களையும், மாநிலங்களவைக்கு இரண்டு பேர்களையும் ஆளுங்கட்சி நியமிக்கவேண்டும். நாடு விடுதலை அடைந்தபிறகு, இந்த நாட்டை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்களில் சிலரும், அவர்களின் வாரிசுகள் சிலபேரும் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். இந்திய மக்களோடும், குடும்பம், பண்பாடு, கலாச்சாரம் இவைகளோடும் கலந்துவிட்டனர். அவர்கள் ஆங்கிலோ-இந்தியர்கள் என்ற ஒரு தனி சமூகமாக இந்தியாவில் வாழ்ந்துவருகிறார்கள். இந்த தேசத்தை அடிமைப்படுத்தி ஆண்டவர்கள் என்கிற காரணத்திற்காக அவர்களை கவுரவப்படுத்தவேண்டி மரியாதை நிமித்தமாக ஆங்கிலோ - இந்தியர்கள் இரண்டு பேர்கள் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
              அதேப்போல் மாநிலங்களவைக்கு கலை, இலக்கியம், விளையாட்டு போன்றத்துறைகளில் உள்ள பிரபலங்களில் இரண்டு பேர்களை ஆளுங்கட்சியால் தேர்ந்தடுக்கப்பட்டு மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்களின் நியமனத்திற்கு பெரும்பாலும் திரைப்பட கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள் என நாட்டில் இரசிகர்களை ஏராளாமாக பெற்றிருக்கும் இவர்களுக்கு தான் ஆட்சியாளர்கள் முன்னுரிமை தருவார்கள். அவர்களின் பின்னால் நிற்கும் இரசிகர்களின் கையிலிருக்கும் ஒட்டுமொத்த ஓட்டுகளையும்  குறிவைக்கும் ஆட்சியாளர்களின் தந்திரம் தான் இது.
           அப்படியாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், திரைப்படக்கலைஞர் ரேகாவும் ஆவார்கள். ஆனால் அப்படியாக  பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள்  பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். அங்கு  மக்கள் பிரச்சனைகள் பற்றிய விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்ற பொதுபுத்தி கூட அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. குறைந்த பட்சம் பாராளுமன்றக் கூட்டத்தொடரிலாவது பங்கேற்கவேண்டும் என்ற எண்ணம் கூட இவர்களுக்கு தோன்றவில்லை. இவர்கள் இருவரும் நியமன உறுப்பினர்களாக பதவியேற்ற காலத்திலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் சச்சின் மூன்று நாட்களும், ரேகா அம்மையார் ஏழு நாட்களும் மட்டுமே அவைக்கு வந்திருக்கிறார்கள். இவர்களிருவரும் இப்பதவியை ஏதோ ''அலங்கார'' பதவியாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
             அவர்கள் அவைக்கு வருவதில்லையே என்று அவர்களை நியமித்த அரசும் கவலைப்படவில்லை. மிகக்குறைவான வருகைப்பதிவை கொண்ட அவர்களை மாநிலங்களவைத் தலைவரும் கண்டிக்கவும் இல்லை. அவைக்கு வராத இந்த இருவரின் செயல் என்பது பாராளுமன்றத்தையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் அவமதிக்கும் செயலாகும். இவர்கள் கூட்டத்தொடரின் போது அவைக்கு வருகைபுரியவேண்டும் என்று மத்திய அரசும், அவைத்தலைவரும் அறிவுறுத்தவேண்டும். அப்படி  அவர்களால் வரமுடியவில்லை என்றால் அப்பதவியிலிருந்து அவர்கள் நீக்கப்படவேண்டும். இவர்களெல்லோரும் விளையாட்டையும் நடிப்பையும் தங்களுடைய பேருக்கும், புகழுக்கும்,  கோடிகோடியாய் பணங்களை சேர்ப்பதற்கு பயன்படுத்தக்கூடியவர்கள். பாராளுமன்றத்திற்கு வருவதால் கோடிக் கோடியாய் வருமான இருக்கிறதென்றால் கூச்சப்படாமல் வருவார்கள். சில ஆயிரங்களே வருமானத்தை கொடுக்கக்கூடிய பாராளுமன்றத்திற்கு வந்து தங்களுடைய ''பொன்னான'' நேரத்தை இவர்கள் வீணடிக்கவிரும்பவில்லை என்பதை தான் இவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள். எதிர்காலத்திலாவது ஆட்சியாளர்கள் இவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது. மக்களைப் பற்றி - சமூகத்தைப் பற்றி - நாட்டைப் பற்றியெல்லாம் அக்கறையுள்ள நந்திதிதாதாஸ் போன்ற திரைக்கலைஞர்களை நியமித்தால் அரசுக்கும் நாட்டுக்கும் உபயோககரமானதாக இருக்கும். 

 மத்திய அரசுக்கு சில ஆலோசனை :                      

                (1) மக்களவை நியமன உறுப்பினர்களாக ஆங்கிலோ-இந்தியர்களை நியமனம் செய்வதை விட பிரச்சனைகளை தலையில் சுமந்துகொண்டு தீர்வுகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மக்கள் பாராளுமன்றத்தில் தங்கள் பிரச்சனைகளை பேசுவதற்கும் அதற்கேற்ற தீர்வுகளை பெறுவதற்கு போராடுவதற்கும் பிரதிநிதிகள் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வாய்ப்பில்லாதவர்களாக சில இலட்சம் திருநங்கையினரும், பல கோடி மாற்றுத்திறனாளியினரும்  பாவப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக பாராளுமன்றத்திற்கு வெளியில் வீதிகளில் போராடிவருகிறார்கள். இவர்கள் போராட்டக்குரல் ஆட்சியாளர்களின் காதுகளில் விழுவதே இல்லை. எனவே இவர்களுக்கு நியமன உறுப்பினர்களாக வாய்ப்புக்கொடுத்தால் கோடீஸ்வரர்கள் மட்டுமே கூடிப்பேசும் பாராளுமன்றத்தில் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களின் குரல் ஒலிக்கும்.
              (2) மாநிலங்களவையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு என்பதே இல்லை. இங்கே இடதுசாரிகட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மாநிலங்களவையில் பிரநிதித்துவமே தருவதில்லை. இடதுசாரிகட்சிகள் மட்டுமே நியாயமாக நேர்மையாக தலித் மக்களுக்கும் வாய்ப்புக்கொடுத்து தேர்ந்தெடுக்கிறார்கள். மற்றக் கட்சிகள் இடஒதுக்கீட்டை வசதியாக  மறந்துவிடுகின்றன. எனவே விளையாட்டு வீரர்களுக்கும், திரைப்படக் கலைஞர்களுக்கும் கொடுக்கப்படுகிற பிரதிநிதித்துவத்தை பழங்குடி இனமக்களுக்கும், தலித் இனமக்களுக்கும் அளிக்கப்படவேண்டும். அப்போது தான் சக்தியில்லாமல் அடங்கிக்கிடக்கும் இந்த மக்களின் குரல் மாநிலங்களவையிலும் ஒலிக்கும்.
                 ஒத்துவராத அல்லது மலட்டுத்தன்மையுள்ள நியமன பாரம்பரியத்தை தூக்கியெரிவதால் அரசுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானதும் அல்ல. வசதியும், பெரும்பான்மையும் கொண்டவர்கள் மட்டுமே பேசக்கூடிய பாராளுமன்றத்தில் சமூகத்தால் ஒடுக்கப்பட்டும், உரிமைகளும் வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டும், வாழ்க்கையே சீரழிக்கப்பட்டும் நிலைதடுமாறி வாழ்கின்ற மக்களின் குரலும் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்யவேண்டும். அனைத்துப்பகுதி மக்களும் பங்கேற்கும் களமாக பாராளுமன்றம் திகழவேண்டும். அப்போது தான் உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்கும். 

செவ்வாய், 17 டிசம்பர், 2013

சவுரவ் கங்குலிக்கு வலை வீசிய நரேந்திர மோடி...!

         தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் பண்ணுகிற கூத்துகளைப்  பார்க்க சகிக்கமுடியவில்லை. நான்கு மாநிலத்தேர்தல்களில் மண்ணைக் கவ்விய காங்கிரஸ் கட்சியோ அண்மையில் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கரை தன்னுடைய கட்சியின் ''பிரச்சார பீரங்கியாக'' பயன்படுத்தி சச்சின் இரசிகர்களின் ஓட்டுக்களை ஸ்வாகா பண்ணி ஜெயித்துவிடலாம் என்று கனவு கண்டு சச்சினுக்கு ''பாரத ரத்னா'' அறிவிப்பெல்லாம் செய்து அமர்க்களப்படுத்தியது.
         இதைப் பார்த்த பாஜக-வின்  ''பிரதமர் கனவு வேட்பாளர்''  மோடிக்கு அரிப்புத் தாங்கல. உடனே கொல்கத்தாவில் வாசம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணியின் இன்னொரு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு எதிர் வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புத் தருவதாகவும், தேர்தலில் வெற்றி பெற்ற பின் பாஜக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக ஆக்குவதாகவும் கூச்சமில்லாமல் ஆசை வார்த்தைகளை கூறி அழைப்புவிடுத்தார்.
         இதற்கெல்லாம் மயங்காத கங்குலி கொல்கத்தா செய்தியாளர்களிடம், இப்படியொரு அழைப்பை மோடி தனக்கு விடுத்துள்ளார் எனவும், அதை தான் நிராகரிப்பதாகவும் கூறி மோடியின் முகத்தில் கரியை பூசினார். போகிறப் போக்கைப்பார்த்தால், ''பிரதமர் கனவு வேட்பாளர்'' மோடி, பிரபலங்களுக்கு வலைவீசி அவர்கள் கேட்காமலேயே மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட்டும் கொடுத்து, மந்திரிப்பதவியையும் கொடுத்து, அமைச்சரவைப் பட்டியலையும் இப்போதே குடியரசுத் தலைவரிடமும் கொடுத்துவிடுவார் போலிருக்கிறதே. மோடியின் கோமாளித்தனத்தை தாங்கமுடியலடா சாமி...!

திங்கள், 18 நவம்பர், 2013

சச்சின் கிரிக்கெட்டில் ரத்தினம் தான், ஆனால்.....?

 கட்டுரையாளர் : அ. குமரேசன்,            
                                 பத்திரிக்கையாளர்                       
           இந்திய விளையாட்டுக் களத்தில், அதிலும் கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் டெண்டுல்கர் நிச்சயமாக ஒரு ஒளிவீசும் ரத்தினம்தான். தனது ஆட்டமுறைக்கு என உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றிருக்கிற, இந்தியாவில் கோடிக்கணக்கானவர்களை பக்தர்களாகவே பெற்றிருக்கிறவர் அவர்.
              ‘பாரத ரத்னா’ விருதினை அரசு அறிவிக்காமலே விட்டிருந்தாலும் அவருக்கு அந்த அன்பை விடவும் பெரிய விருது எதுவும் இருக்கப்போவதில்லை. இந்தியாவில் கிரிக்கெட் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருப்பதில், அவரது திறமையும் நுட்பமும் மிக்க பங்களிப்பு தலையாய ஒன்று. அதனால்தான், ஓய்வு பெறுவதற்கு முந்தைய தனது கடைசி ஆட்டத்தின் முடிவில், அவ்வளவு பெரும் மக்கள் திரள் முன்னிலையில் அவர் கண்ணீருடன் விடைபெற்றபோது, அதைத் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்த அனைவருமே உணர்ச்சிவசப்பட்டார்கள்.
              பொதுவாக இப்படிப்பட்ட விருதுகள் ஒருவர் ஓய்ந்து ஒதுங்கி மறக்கப்பட்ட பிறகுதான் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் சச்சின் புகழ் வெளிச்சத்தில் இருக்கிறபோதே, துடிப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறபோதே, இளமை வயதின் விளிம்பில் நிற்கிறபோதே இந்த விருது வழங்கப்படுகிறது. அதுவும், அவர் அவ்வாறு ஓய்வு பெற்ற நாளிலேயே பிரதமர் இதை அறிவிக்கிறார்.
            இது நம் நாட்டிற்கு ஒரு மாறுபட்ட அனுபவம்தான்.ஆயினும், நாட்டின் மிக உயர்ந்த விருது சச்சினுக்கு வழங்கப்படுவதில் உள்ள சில உறுத்தல்களைக் குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது.முதலில் சொல்ல வேண்டியது, இவரோடு சேர்த்து ‘பாரத ரத்னா’ அறிவிக்கப்பட்டுள்ள மூத்த அறிவியலாளர் சி.என்.ஆர். ராவ் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவரது முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருப்பது.
        திட வேதியல் துறை அறிவியலாளரான அவர் இங்கே அடிப்படை வேதியியல் கல்வியைக் கட்டிக்காப்பதில் முன்னின்றவர். அவரது ஆராய்ச்சி நூல்களும், பல ஆய்வு நிறுவனங்களை உருவாக்கிய முயற்சிகளும் நாட்டின் அறிவியல் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை.
            இந்தியாவின் சுயமான எதிர்கால முன்னேற்றத்தில் அறிவியலுக்கு உள்ள இடத்தைப் புரிந்துகொண்டவர்கள் அனைவரும் ராவ் இந்த விருதைப் பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள். இளம் அறிவியலாளர்கள் இதனால் ஊக்குவிக்கப்படுவார்கள், அது அறிவியல் வளர்ச்சிக்கு மேலும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அவருக்கு மட்டுமேயாக இப்போது இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தால், அதையொட்டி அவரைப் பற்றியும், அறிவியலைப் பற்றியும் நாடு முழுவதும் இப்போது பேசப்பட்டுக்கொண்டிருக்கும். ஆனால், சச்சின் கழுத்தில் போடப்படும் மாலைகளின் குவியலுக்கு அப்பால் அறிவியலாளரின் சிறப்பு ஓரங்கட்டப்படுவது ஆரோக்கியமானதுதானா?சச்சினுக்கு இந்த விருதை வழங்க வேண்டும் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே கோரிக்கைகள் எழுந்தன.
             அடுத்தடுத்து விரைவாக, விளையாட்டுத் துறையினருக்கும் வழங்கத்தக்க வகையில் பாரத ரத்னா விதிகள் திருத்தப்பட்டதிலும், அவர் ஓய்வுபெறுவதையொட்டி உருவான உணர்ச்சிமயமான சூழலுக்காகக் காத்திருந்து அறிவிக்கப்பட்டதிலும் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழவே செய்கிறது.
               அரசியல் உள்நோக்கம்தான் இருக்கிறது என்று நேரடியாகக் கூற முடியாவிட்டாலும், கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பைப் பெற்றவருக்கு இந்த விருதை அளித்ததன் மூலம் அந்தக் கோடிக்கணக்கானோரின் ஆதரவைத் தன் பக்கம் இழுக்க முடியாதா என்ற உள்நோக்கம் இல்லவே இல்லை என்றும் கூறிவிட முடியாது. இப்படிப்பட்ட உத்திகளில் காங்கிரசார் கரைகண்டவர்களாயிற்றே!ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான சேவைகள் என்ற அடிப்படையில் இல்லாமல், தனிப்பட்ட சாதனைகளுக்காக மட்டும் நாட்டின் உயர்ந்த விருதை வழங்குவது பற்றிய வினாக்களும் புறப்படத்தான் செய்கின்றன.
               நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சச்சின் அங்கே மக்கள் பிரச்சனைகள் பற்றிப் பேசியிருக்கிறாரா? விளையாட்டுத்துறையில் மலிந்திருக்கிற பிரச்சனைகள் பற்றியோ, நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகள் பற்றியோ கருத்துக் கூறியிருக்கிறாரா? நாடாளுமன்றத்திற்கு வெளியே, ஐபிஎல் தில்லுமுல்லுகள் உள்ளிட்ட விவகாரங்களிலும் இதர சமூக நிகழ்ச்சிப்போக்குகளிலும் எந்த அளவுக்குத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்? 1992ல் அயோத்தி அக்கிரமத்தைத் தொடர்ந்து மும்பையில் மதவெறிக் கும்பல் சூலாயுதங்களோடு தெருவில் இறங்கியபோது, சுனில் கவாஸ்கர் அவர்களைத் தடுத்து நிறுத்தி சிறுபான்மை மக்களுக்கு அரணாக நின்றது நினைவுக்கு வருகிறது.
   கார்ப்பரேட் நிறுவனங்களின் வர்த்தக விளம்பரச் சரக்காகவும் தன்னை உருவாக்கிக்கொண்டவர் சச்சின். விளையாட்டின் மூலமாகவும் விளம்பரங்களின் மூலமாகவும் கோடிக்கணக்கில் பணம் ஈட்டினார். அதெல்லாம் அவரது திறமைக்கும் புகழுக்கும் கிடைத்த அங்கீகாரங்கள் என்றே வைத்துக்கொண்டாலும், அவரை அனைத்து இளைஞர்களுக்குமான முன்னுதாரணமாகக் கொள்ள முடியுமா? தலையிடத் துடிக்கும் சமூக அக்கறையோ தட்டிக் கேட்கும் அரசியல் விழிப்புணர்வோ இல்லாத தலைமுறைகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே கார்ப்பரேட் பிரம்மாக்களின் திட்டம்.
           அதைக் கட்டமைக்கிற வேலைக்கு இந்த நட்சத்திரமும் பயன்படுகிறாரே என்ற ஆதங்கம், சமுதாயத்தை அரசியல்படுத்த விரும்புகிற எவருக்கும் ஏற்படவே செய்யும்.கிரிக்கெட் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு, நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளும் தேசிய விளையாட்டும் கூட கடைக்கோடிக்கு ஒதுக்கப்பட்டதிலும், ஒற்றை ரசனையில் சமுதாயத்தை வார்க்கிற உள்நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட் கனவான்களின் செயல்திட்டம் இருக்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ அதற்கும் சச்சின் போன்றோர் உதவுகிறார்கள்.இதைச் சொல்வதால், சச்சின் என்ற கிரிக்கெட் நட்சத்திரத்தின் தனித்துவமான அசத்தல் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. விளையாட்டுத் துறை சார்ந்த அந்தச் சாதனைகளுக்கான உயர்ந்த அங்கீகாரம், இப்படிப்பட்ட விருதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
       ஏன், விளையாட்டுத்துறையைப் பிடித்துள்ள பல்வேறு நோய்களிலிருந்து அதனை மீட்பதற்கான உயர் பொறுப்புகளை, அதற்கான வயது இருக்கிறபோதே வழங்கலாமே? அது அவரைப் பெருமைப்படுத்தியதாகவும் இருக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு நிறுவனம் (பிசிசிஐ) உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகளை மீட்கலாம் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துமே...அணியில் விளையாடிக்கொண்டிருந்தவர் என்ற முறையில் பல்வேறு பிரச்சனைகளில் அவரது மவுனம் புரிந்துகொள்ளத் தக்கதுதான்.
         இனியேனும் சமுதாயத்தைக் கண்கொண்டு பார்ப்பாரா....? மனம் திறந்து பேசுவாரா...? மாற்றமுயல்வோருக்குத் தோள் கொடுப்பாரா...? அப்படியெல்லாம் செய்வாரானால் ரத்தினம் பல மடங்கு ஒளி வீசும். பாரதம் பார்க்கத்தான் போகிறது.
நன்றி :

சனி, 16 நவம்பர், 2013

சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது - இது நியாயம் தானா....?

 
                                                                                                                                        
         
                                                                                                                                                                   
                                                                                                        
         
          சச்சின் டெண்டுல்கர் இன்று தான் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று மைதானத்தை வெளியேறுகிறார். இன்னும் அவர் தன் வீட்டிற்கு கூட போய் செர்ந்திருக்கமாட்டார். அதற்குள் பிரதமர் அலுவலகத்திலிருந்து சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது என்ற அறிவிப்பு வந்துவிட்டது. ''பாரத ரத்னா'' விருதென்ன விளையாட்டு சமாச்சாரமா சாதாரணமா எல்லாருக்கும் தூக்கிக்கொடுக்க...?
           சூதாடிகளுக்கும், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் இந்தியாவின் மிக உயரிய பரிசு ''பாரத ரத்னா''  விருது கொடுப்பது சரிதானா..? முறை தானா...? நியாயம் தானா....?                                                        
              சச்சின் ஒரு குறிப்பிட்ட விளையாட்டின் தனிப்பட்ட சாதனைப் படைத்த வீரர் தான் என்பதை யாரும் மறுக்கவில்லை. சச்சின் உலகம் முழுதும் அறியப்பட்டவர் என்று சொல்ல முடியாது. ஆனால்  கிரிக்கெட் விளையாட்டை பற்றி அறிந்த நாட்டிலுள்ள மக்களால் நன்கு அறியப்பட்டவர் தான். ஏனென்றால்  உலகம் முழுதும் அனைவராலும் விளையாடப்படும் விளையாட்டுமல்ல. உலகம் முழுதும் பரவிக்கிடக்கும் விளையாட்டுமல்ல. கிரிக்கெட் என்ற விளையாட்டே போய் சேராத நாடுகள் உள்ளன. கிரிக்கெட் பற்றியே அறியாத மக்களும் கோடிக்கணக்கில் உள்ளனர். ஏனென்றால் வெறும் பத்து நாடுகளில் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு தான் இந்த கிரிக்கெட் என்ற விளையாட்டு. அதனால் தான் ஒலிம்பிக் போட்டி போன்ற உலக அளவிலான போட்டிகளில் இதுவரை கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை என்பதற்கான மிக முக்கிய காரணம். கிரிக்கெட் விளையாட்டு என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய 10 காலனி நாடுகளில் மட்டுமே விடுதலைக்குப் பின் இன்றும் ஆடப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் அடிமைகளை கிரிக்கெட் விளையாடவிட்டு வேடிக்கைப்பார்த்து போழுதுபோக்கியிருக்கிறார்கள். 
                அப்படிப்பட்ட விளையாட்டில் சாதனை செய்தாரா சச்சின் என்றால் கேட்டால், நிச்சயமாக சாதனை செய்திருக்கிறார் என்று சந்தேகமில்லாமல் சொல்லலாம். நாமெல்லாம்  பெருமைப்படத்தக்க அளவில் சாதனை புரிந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அனால் அவை அத்தனையும் ஒரு  தனிமனித சாதனை தான் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 
 அவர் அப்படிப்பட்ட சாதனைகள் புரியவேண்டும் என்பதற்காகவே ஆட்சியாளர்களால் அவருக்கு வாய்ப்புகளும், நேரங்களும், விளம்பரங்களும், ஊக்கமும்  கொடுக்கப்பட்டு சச்சினால் செய்யப்பட்டிருக்கும் சாதனைகள் தான் அத்தனையும்  என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.   கிரிக்கெட் ஆடும் அத்தனை வீரர்களுக்கும் இதே போல் வாய்ப்புகளும், நேரங்களும், விளம்பரங்களும், ஊக்கமும்  கொடுக்கப்பட்டால் அவர்களும் தனிமனித சாதனைகளை நிச்சயம்  செய்துகாட்டுவார்கள்.
                 அதுமட்டுமல்ல, இன்றைக்கு உலகமய சூழலில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக கிரிக்கெட் மைதானம் என்பது ஒரு சூதாட்டக்களமாக மாறிவிட்ட சூழ்நிலையில் - கிரிக்கெட் என்பது பண மழை  கொட்டுகிற விளையாட்டாக மாறிவிட்ட இந்த சூழ்நிலையில்  கிரிக்கெட் என்பது சாதனை படைக்கும் களமாக இல்லாமல், பணம்  - சொத்து சேர்க்கும் கஜானாவாக மாறிவிட்டது. 
               அப்படி சம்பாதித்த பணத்திற்கு சச்சின் போன்ற பெரிய கிரிக்கெட் வீரர்கள் அரசுக்கு கட்டவேண்டிய வரியை சரியாக - முறையாக - நியாயமாக கட்டியிருப்பார்களா....? என்றால்... இல்லை... இல்லவே இல்லை என்பது தான் உண்மை. அதை வருமானவரித்துறையும் கண்டுகொள்வதே இல்லை என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சச்சினும் இதில் விதிவிலக்கல்ல. இவர் இப்படியாக கிரிக்கெட் ஆடியும், விளம்பரங்களில் நடித்தும் ''கொள்ளையாக'' சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கிறார். இவர் தேசியக்கொடியை பிடிப்பதற்கே அருகதையில்லாதவர். 
               இவர் ஒரு நேர்மையான இந்திய குடிமகன்  இல்லை என்பதுமட்டுமல்ல, ஓர் உண்மையான இந்திய குடிமகனாகவும் அவர் நடந்துகொள்ளவில்லை என்பதையும் இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். பெப்சி, பூஸ்ட், மெட் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இவர் தான் நிறுவனத் தூதராக இருந்து, அந்த கம்பெனிகளின் விளம்பரத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தவர் என்பதையும் இந்த நாடு அறியும். இப்படிப்பட்டவர் எப்படி ஓர் உண்மையான இந்தியக் குடிமகனாக இருக்கமுடியும் என்று சொல்லுங்கள்.
              இப்படிப்பட்டவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டால் அது எப்படி சரியாக இருக்கும் - நியாயமாக இருக்கும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
             இதுவரை கலை, இலக்கியம், அறிவியல்   மற்றும் பொதுச்சேவை துறைகளில்  பெருமைப்படத்தக்க சாதனைகள் படைத்தவர்கள் மட்டுமே ''பாரத ரத்னா'' விருது பெற முடியும் என்ற விதிமுறை  நடைமுறையில் இருந்து வருகிறது. பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருதை பெற முடியும் என்று விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டு சென்ற 2011 - ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி மத்திய அரசு அறிவிப்பு  வெளியிட்டது. அப்போதே இவருக்கு  இந்த உயரிய விருதினை தருவதற்காகவே, பாரத ரத்னா விருது பெறுவதற்கான விதிமுறையில் மத்திய அரசு திருத்தம் செய்கிறது என்ற விமர்சனம் வந்தது. விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கும் பாரத ரத்னா விருது  வழங்க தான் இந்த மாற்றம் என்று அரசு பொதுவாக சொல்லியிருந்தாலும் அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் டெண்டுல்கருக்காக தான் இந்த மாற்றம் என்று வெளிப்படையாகவே தெரிந்ததும் நாட்டின் அனைத்துப்பகுதிகளிலிருந்து எதிர்ப்புக் கிளம்பவே மத்திய அரசின் முயற்சி கைவிடப்பட்டது. 
              ஆனால் இன்று ஓய்வுபெறும் ஒரு உணர்ச்சிமிக்க சூழ்நிலையில் - யாரும் எதிர்ப்பார்க்காத இந்த சூழ்நிலையில் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு என்பது துரதஷ்டமானது. ''பாரத ரத்னா'' விருதின் மாண்பும், பெருமையும் காப்பாற்றப்படவேண்டுமானால், மத்திய அரசு சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது கொடுப்பதாக எடுத்திருக்கும் முடிவை திரும்பப்பெறவேண்டும். ''பாரத ரத்னா'' விருதை வழங்கி பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு சச்சினைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று காங்கிரஸ் கட்சி பகல் கனவு காண்கிறது.
                             சென்ற 1954-ம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. மக்களையும், தேசத்தையும் பற்றி தன்னலமில்லாமல்  சிந்தித்தவர்களும், நம் தேசத்தை பெருமைக்குள்ளாக்கியவர்களுமான சர் சி.வி.ராமன், சி.வி.ராஜகோபாலாச்சாரி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்  ஆகிய  இவர்களில் தொடங்கி, இதுவரை 41 பேருக்கு ''பாரத ரத்னா'' விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
             கடந்த காலங்களில் இந்த உயரிய விருதினை ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், அமார்த்தியா சென், ஜெயபிரகாஷ் நாராயண், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் அம்பேத்கர், எம். எஸ். சுப்புலட்சுமி, பண்டிட் ரவி சங்கர், உஸ்தாது பிஸ்மில்லாகான், மொரார்ஜி தேசாய், எம். ஜி. ராமச்சந்திரன், ராஜீவ் காந்தி,  லதா மன்கேஷ்கார், அன்னை தெரசா, கான் அப்துல் காபார் கான், நெல்சன் மண்டேலா.... போன்ற உலகின் - தேசத்தின் - சமூகத்தின் உயர்ந்த தலைவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட இந்த உயரிய விருதினை பெறுவதற்கு மேலே குறிப்பிடப்பட்டவர்களின் தகுதிகளில் ஏதாவது ஒரு தகுதியாவது ''கிரிக்கெட் சூதாடி'' சச்சின் டெண்டுல்கருக்கு உண்டா...? என்பதை அவரே தன்னை எடைபோட்டுப்பார்க்கவேண்டும்.  நீங்களும் யோசித்துப்பாருங்கள்.         

''கிரிக்கெட் கடவுள்'' சச்சினுக்காக வருத்தப்படும் வாலிபர்களே...!

      

 
       கடந்த ஒரு வாரகாலமாகவே நாட்டுல ஒரே பரபரப்பாகவே இருக்கிறது. கேஸ் விலை  ரூ.1000/-தை தாண்டியபோதும் மக்களிடம் இவ்வளவு பரபரப்பு இல்லை. வெங்காயம் விலை ரூ.100/-ஐ தொட்டபோதும் மக்களிடம் இவ்வளவு பரபரப்பு இல்லை. ஆனால் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாராம். என்ன ஆரவாரம்... என்ன பரபரப்பு... ஊரெல்லாம் சச்சின் பேச்சு தான். அதுவும் இன்றைய இளைஞர்கள்  சச்சின் ஓய்வு பெறுகிறாரே என்று வருத்தப்பட்டு நொந்து நூடுல்ஸ் ஆகிகொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
           அதிலும் இளைஞர்களெல்லாம் சும்மா இருந்தாலும் இங்கிருக்கக்கூடிய ஊடகங்கள் சும்மாயிருப்பதில்லை. இவர் ஏதோ தன்னலம் கருதாமல் மக்களுக்காக உழைத்தவர் போலவும், இவர் பணம் ஏதும் சம்பாதிக்காமல் கிரிக்கெட் விளையாட்டை காப்பாத்தி வைத்திருப்பது போலவும் இந்த ஊடகங்களெல்லாம் சேர்ந்து டெண்டுல்கரை ''கிரிக்கெட் கடவுள்'' ரேஞ்சுக்கு உயர்த்தி தங்கள் இலாபத்தை அதிகரிக்க சும்மாயிருக்கிற  இளைஞர்களையும்  உசுப்பெற்றிக்கொண்டுத் திரிகிறார்கள்.
           சச்சின் டெண்டுல்கர் யார்...? சுதந்திரப்போராட்டத் தியாகியா...? அல்லது கலை, இலக்கியம், அறிவியல், இராணுவம்  அல்லது பொதுச்சேவை போன்ற ஏதாவது ஒரு துறையில் சாதனை புரிந்தவரா...? அல்லது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மாபெரும் பணி செய்தவரா...? அல்லது சாதாரண மக்களின் உயர்வுக்காக பாடுபட்டவரா....? அல்லது இவர் தான் ஒரு கவுரவ எம்.பி-யா இருக்கிறாரே, பாராளுமன்றத்தில என்றைக்காவது பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடியிருப்பாரா...அல்லது பாராளுமன்றத்துல அவர்களுக்காக பேசியிருப்பாரா....? அப்படி எதுவும் இல்லையே...! ஒரு சாதாரண கிரிக்கெட் வீரர் தானே. அதுவும் தன்னுடைய நாட்டுக்காகவோ, தன்னுடைய டீமுக்காகவோ ஆடமாட்டார். தன்னுடைய சொந்த சாதனைகளை உயர்த்திக்கொள்வதற்காக மட்டுமே இதுவரை விளையாடியவர். இவர் மும்பை அரசியல்வாதிகளின் செல்லப்பிள்ளையாகவும் பெருமுதலாளிகளின் செல்லப்பிள்ளையாகவும் இருப்பதனால் தான்,  இவரைவிட சிறப்பாக விளையாடிய முன்னணி கிரிக்கெட் வீரர்களெல்லாம் ஓரங்கட்டப்பட்டு சச்சின் மட்டுமே இன்றுவரை முன்னிறுத்தப்படுகிறார். இப்போதும் கூட சச்சினுக்கோ... அவரது காட் பாதருக்கோ... ஆட்சியாளர்களுக்கோ இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதில் மனமில்லை... விருப்பமில்லை....! பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாடுகளிலிருந்தும் முன்னணி  விளையாட்டுவீரர்களிடமிருந்து விமர்சனங்கள் வரவே கட்டாயத்தின் பேரில்தான் ஓய்வு பெறுகிறார் என்பது தான் உண்மை. விட்டா சாதனை பண்ணுகிறேன் பேர்வழி என்று அறுபது வயது வரை ஆ...டி...கிட்டே இருந்திருப்பாரு.
 கிரிக்கெட்டைத் தவிர இவர் செய்த மற்ற சாதனைகளையும் பாருங்க.

     (1) இந்திய தேசியக்கொடியை தன் சட்டையில் பொறித்துக்கொண்டு, இந்திய  தேசியக்கொடியை கையில் பிடித்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடி சம்பாதித்த  பணத்தையும், பல்வேறு விளம்பரங்களின் மூலம் சம்பாதித்தப் பணத்தையும்  வெளிநாடுகளில் முதலீடு செய்து கொண்டிருக்கும் ஒரு நல்ல ''தேசபக்தர்'' தான் இன்றைக்கு ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கர்.

           (2) கடந்த 2003 - ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்தயக்கார் வீரர் மைக்கேல் ஷூமேக்கர் பெர்ராரி அன்றைக்கே  75 இலட்சம் மதிப்புள்ள   ''360 Modena Ferrari'' காரை அன்பளிப்பாக வழங்கினார். பிராட் மேன் சாதனையைச் சமன் செய்ததையொட்டி கார் வழங்கப்பட்டது. அன்று இவர் அந்த காரை இந்தியாவிற்கு கொண்டுவர அவர் 120% இறக்குமதி வரியாக ரூ.1.13 கோடி கட்டியிருக்கவேண்டும். ஆனால் அன்பளிப்பாக வந்த காருக்கு வரிவிலக்கு கேட்டு அன்றைய மத்திய அரசுக்கு விண்ணப்பித்தார். உடனே மத்திய அரசும்  அவருக்கு வரி விலக்கு அளித்தது. இப்படியாக  அரசிடம் வரிவிலக்கு பெற்று இந்தியாவிற்கு இறக்குமதி செய்த அந்த காரை சச்சின் பின்னர் சூரத்தைச் சேர்ந்த ஜெயேஷ் தேசாய்க்கு விற்று விட்டார்.      இதற்காக அன்றே சச்சின் அரசுக்கு மூலதன லாபவரி கட்டியிருக்கவேண்டும். ஆனால் அவர் அந்த வரியை கட்டவில்லை.

          (3) சச்சின் உலகிலேயே மிகப்பெரும் ''பணக்கார'' கிரிக்கெட் வீரர் என்பதை எல்லோரும் அறிந்ததே. அப்படிப்பட்டவர்தான்  தன்னுடைய சொந்த ஊழியர்களுக்கு தேநீர், சிற்றுண்டி வழங்கிய செலவுக்கான ரூ.57,969 - க்கு வருமான வரி விலக்கு கேட்டிருக்கிறார். தொலைபேசி, கேளிக்கைச் செலவுகள் ஆகியவற்றுக்கு ரூ.50ஆயிரமும், இவரிடம்  உள்ள 40 கார்களுக்கும் ஆன  செலவுகளுக்காக ரூ.1,42,824-ம் வரிவிலக்கு கேட்டுள்ளார். ஆனால் வருமானவரித்துறை இவற்றையெல்லாம்  நிராகரித்துவிட்டது.

        (4) சச்சின் டெண்டுகர் 2001-02 மற்றும் 2004-05 நிதியாண்டுகளில் ESPN - Star Sports, PepsiCo மற்றும் Visa நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்ததற்காக அந்நிய செலாவணியாக Rs.5,92,31,211/- பெற்றிருக்கிறார். இந்த வருமானத்திற்காக அவர்  வருமான வரியாக மட்டும் ரூ.2,08,59,707 செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறையினர் [(CIT-A)- Commissioner of Income Tax-Appeal] நோட்டிஸ் கொடுத்தனர்.
                  இதை எதிர்த்து நம்ம சச்சின் என்ன செய்தார் தெரியுமுங்களா...?  ''அய்யா...! எனக்கு கிரிக்கெட் ஆடுவது தான் முதல் தொழில்னு நீங்களெல்லாம் தப்பா நினைச்சுகிட்டு இருக்கீங்க.  அது நெசமில்லீங்க.  அடிப்படையில நான் ஒரு கலைஞனுங்க... நடிகனுங்க... நடிப்புதான் என் பிரதான தொழிலுங்க. இந்த  கிரிக்கெட்டெல்லாம் அப்புறம்தானுங்க. அதனால என்னோட  நடிப்புத் தொழில் மூலமா நான்  சம்பாரிச்ச பணத்துக்கு  under Section  80RR - Income Tax Act -ன்  படி வரிச்சலுகை குடுங்க அய்யா..."  அப்படின்னு கேட்டவர் தான் கிரிக்கெட் ஆட்டக்காரர் என்று நீங்க நினைத்துக்கொண்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர் கொடுத்த பதில் கடிதத்தை பெற்று அவரின் நடிப்புத்தொழிலைப் பற்றி ''தீர'' விசாரிச்ச வருமானவரித்துறையும்  "ஆமாங்க நெசமாவே இவர் ஒரு நடிகர்தானுங்க. நாங்க தான் தப்பாப் புரிஞ்சிகிட்டோம்'' என்று சான்றிதழ் கொடுத்து, வரியாக கேட்ட அந்த இரண்டு கோடி சொச்சத் தொகையையும் கட்டவேண்டாம் என்று சொல்லி வரிச்சலுகையும் கொடுத்துட்டாங்க.
        சச்சினுக்காக வருத்தப்படும் வாலிபர்களே... இப்படிப்பட்டவரைத் தான் ஊடகங்களெல்லாம் ''கிரிக்கெட் கடவுள்'' என்று சொல்லி உங்களை உசுப்பேத்தித் திரிகிறார்கள். நீங்களும் இப்படிப்பட்டவருக்காக  வருத்தப்படுகிறீர்கள்.
     அடுத்தவர்களுக்காக வருத்தப்படுங்கள்... வருத்தப்படவேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் அடுத்தவர்களுக்காக வருத்தப்பட்டால்தான் மனிதன். ஆனால் யாருக்காக வருத்தப்படவேண்டும் என்பது தான் என் கேள்வி...?

வியாழன், 27 டிசம்பர், 2012

சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்கார் விருது...!

        "மேலே இருக்கும் படத்தில் வலது புறம் இருப்பது யாரு?" அப்படின்னு கேட்டா, "இதெல்லாம் ஒரு கேள்வியா, அவருதான் ஹிந்தி சூப்பர் ஸ்டார் என்று சின்னக் குழந்தையும் சொல்லுமே" என்பீர்கள்.   அவர் ஒரு தலை சிறந்த நடிகர் அப்படின்னு மட்டும்தான் நீங்க நினைச்சுகிட்டு இருந்திருப்பீங்க.  ஆனா, அது உண்மையில்லை!!  அவர் நடிக்கவும் செய்கிறார் என்பதென்னவோ உண்மைதான், ஆனால் அவர் நடிகர் இல்லை.  முதன்மையில் அவர் சேற்றில் விழுந்து பாடுபடும் ஒரு ஏழை விவசாயி!!  விவசாயம் தான் அவர் உயிர் மூச்சே. நடிப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். இதை வேற யாரும் சொல்லவில்லை, அவர் வாயாலே சாரி........  எழுத்தால சட்டத்துக்கு முன்னாடி தெரிவித்த தகவல்தான் இது!  "அய்யய்யோ, அப்ப இடதுபக்கம் குடை பிடிச்சுகிட்டு நிக்கிறவர் யாரு? தோட்டக்காரனா?"  அதைப் பத்தி தானே இந்தப் பதிவில் பார்க்கப் போறோம்!!  அதுசரி ரெண்டுபேரும் கையில என்னமோ வச்சிருக்காங்களே அது என்ன?  அது ஊட்டச் சத்து மிக்க பானம், இதைக் குடிச்சா எழும்பெல்லாம் ரொம்ப ஸ்ட்ராங்கா ஆயிடுமாம். அதை கிழவனும் குடிச்சிட்டு தெம்பா இருக்கலாம்னு விவசாயி சொல்றாரு, இன்னொருத்தர், இதில் பத்து பாட்டில் தினமும் உள்ளே தள்ளுவது  தான் "சீக்ரெட் ஆ ஃ ப்  மை எனர்ஜி"  அப்படிங்கிறார்.  [காசை வீசி எரிஞ்சா பொறுக்கிக்கிட்டு நாய் மூத்திரம் நல்லதுன்னு சொல்றதுக்கும் ஆளுங்க ரெடியா இருக்காங்க, அதப் பாத்திட்டு தண்ணீருக்குப் பதிலா  நாய் மூத்திரமே தான் வேணுமின்னு தேடித் தேடி காசு குடுத்து வாங்கி குடிக்க நாம் இருக்கோம்.]
             சரி அதெல்லாம் போகட்டும்.  விஷயத்துக்கு வருவோம்.   இப்போ நாம் பார்க்கப் போவது, 2001-02 மற்றும் 2004-05 நிதியாண்டுகளில் நடந்த ஒரு சங்கதி.  டெண்டுல்கர் அந்த வருடங்களில் ESPN Star Sports, PepsiCo மற்றும் Visa ஆகிய நிறுவனங்களில் இருந்து தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்ததற்காக அந்நிய செலாவானியாக [Foreign currency] Rs.5,92,31,211 [ரூபாய் ஐந்து கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்தி சொச்சம்] பெற்றிருக்கிறார்.  இந்த வருமானத்திற்காக அவருக்கு வருமான வரியாக ரூ.2,08,59,707 [ரூபாய் இரண்டு கோடியே  எட்டு லட்சத்தி சொச்சம்] செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறையினர் [(CIT-A)- Commissioner of Income Tax-Appeal] நோட்டிஸ் விட்டனர்.
                   இதை எதிர்த்து நம்ம பூஸ்ட் மட்டும் குடிக்கும் பாப்பா என்ன பண்ணுச்சு தெரியுமுங்களா?  ஐயா, இந்த  CIT-A எனக்கு கிரிக்கெட் ஆடுவது தான் முதல் தொழில்னு தப்பா நினைச்சுகிட்டு இருக்காருங்க.  அது நெசமில்லீங்க.  அடிப்படையில நான் ஒரு கலைஞனுங்க, நடிப்புதான் பிரதான தொழிலுங்க.  கிரிக்கெட்டெல்லாம் அப்புறம்தானுங்க.  அதனால என்னோட தொழில் மூலமா சம்பாரிச்ச பணத்துக்கு u/s 80RR of the Act படி வரிச்சலுகை குடுங்க அப்படின்னு கேட்டுச்சு.  இதை விசாரிச்ச ஆணையமும், "ஆமாங்க இவர் ஒரு நடிகர்தான், நடிப்பு எல்லாத்தலும் முடியாது, மூஞ்சியில பவுடரை பூசிகிட்டு, வெப்பத்தை உமிழும் மின் விளக்குகள் முன்னாடி நின்னு சொந்தக் கற்பனை, படைப்பாற்றல் எல்லாம் பயன்படுத்தி நடிச்சு தெறமையைக் காட்டி மக்களை கவர்வது லேசு இல்ல, இவரு நெசமாவே நல்ல நடிகன் தான்" அப்படின்னு சான்றிதழ் குடுத்து கேட்ட இரண்டு கோடி சொச்ச வரிச்சலுகையும் குடுத்துடுச்சு!!  அதனால, இன்னைக்கு TV விளம்பர நடிகரா தொழில் பண்ணும் இவர் நாளைக்கு ஹாலிவுட் படத்தில வாய்ப்பு வந்து நடிச்சு தெறமை காட்டி ஆஸ்கார் கூட வாங்கினாலும் ஆச்சரியப் பட என்ன இருக்கு?  ஒரு நாள் போட்டியில் ஓய்வு பெறுவதை அறிவித்த போது இவர் கண்ணீர் விட்டிருக்காரு.  அது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை நினைத்த வருத்தத்தாலா, சினிமாவில் வருவது மாதிரி நடிப்பா, இல்லை கிரிக்கெட் ஆடும் வாய்ப்பை  இழந்து விட்டோமே, இனிமே இந்த அளவுக்கு விளம்பரங்களில் நடிச்சு பணத்தை மேலும் சேர்ப்பது இயலாதேன்னு துக்கமாங்கிறது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
              இன்னொரு நிகழ்வையும் நாம் இங்க சொல்லணும்.  இது 2002-03 வாக்கில் நடந்தது.  அப்போது டெண்டுல்கர் ஆஸ்திரேலிய மாபெரும் கிரிகெட் வீரர் மறைந்த டான் பிராட்மன் அவர்களின் டெஸ்ட் சாதனையான 29 சதங்களை சமன் செய்தார்.  இதைப் பாராட்டி ஃபியட் நிறுவனம் அவருக்கு  '360 Modena Ferrari' என்ற 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை பரிசளிக்க விரும்பியது. காரை சும்மா குடுக்க அவன் என்ன இனா வானாவா?  டெண்டுல்கர் மைக்கேல் ஷூ மேக்கர் என்னும் கார் ரேஸ் வீரருடன்  இணைந்து அந்தக் காரின் விளம்பரத் தூதுவராகவும் இருப்பார்.  2002 ஆம் ஆண்டு இங்கிலாந்தில்,  சில்வர்ஸ்டோன்  என்னுமிடத்தில் இருவரும் சந்தித்த போது  ஷூ மேக்கர், ஃபியட் சார்பில் டெண்டுல்கருக்கு அந்தக் காரை பரிசளித்தார்.                 
           அதை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டுமே?  ஆடு அரைப்பணம், ......க்கு  முக்கால் பணம் என்னும் கிராமத்து பழமொழி இங்கே வேலை செய்ய ஆரம்பித்தது. அந்தக் கார் கிரிக்கெட் விளையாடி பரிசாகப் பெற்றது அல்ல.  எனவே அதை இந்தியாவுக்குள் கொண்டு வர அதன் விலையில் 120% வரியாகச் செலுத்த வேண்டும்.  அதாவது ஒரு கோடியே பதிமூணு இலட்சம் ரூபாய்கள்.  ஒன்னும் தெரியாத நம்ம பாப்பா குடுக்குமா?  வரிச்சலுகை கேட்டுச்சு.  நிதியமைச்சகமும் என்னென்னமோ பண்ணி 2003 ஆம் வருடம் சலுகை கொடுத்தது.
               நம்ம பாப்பா சில வருடங்கள் அந்தக் காரை வச்சிருந்து விட்டு அப்படியே சூரத்தில் இருக்கும் ஜெயெஷ் தேசாய் என்ற ஒரு வியாபாரிகிட்ட அதைத் தள்ளிட்டு காசாக்கிடுச்சு.  டேய் எவ்வளவுடா குடுத்தேன்னு அவனைக் கேட்டா, "இந்தாபா, காரைப் பத்தி என்ன வேணுமின்னாலும் கேளு, ஆனா எம்புட்டு குடுத்தே, அந்த பாசக்கார பூஸ்டு பேபிய உனக்கு எப்படி தெரியும், அது இதுன்னு கேட்கிறா மாதிரியா இருந்தா எடத்தை காலி பண்ணு" அப்படிங்கிறான்.  அவனுக்கு இதே காரை புதுசாவே வாங்க முடியுமாம்.  ஆனாலும், மைக்கேல் ஷூ மேக்கர்,  டெண்டுல்கர் அப்படின்னு ரெண்டு கர்.... கர்.... சம்பந்தப் பட்ட இதை நான் புர்.... புர்.... என்று ஓட்டினா அதுவே போதும், வாழ்வே வெற்றிங்கிறானாம்!!

ஞாயிறு, 13 மே, 2012

சச்சின் மாநிலங்களவை உறுப்பினர் ஆக தகுதியானவரா...?

            இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள பெயர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப்பின் இவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.தற்போது பரிந்துரைக்கப்பட் டுள்ள சச்சின், ரேகா, அனு ஆகா ஆகிய மூவருமே மகாராஷ்டிரா மாநிலத்தவர் என்பதும் விரைவில் மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பதும் எதிர்பாராத இணைப்புச் சம்பவங்கள் அல்ல. அவை தெரிந்து தான் இணைக்கப்பட்டுள்ளன.
              சச்சின் ஒரு சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டுமா என்பதில் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. முரண்பட்ட கருத்துக்களில் அவருக்கு எதிரானவையே ஏராளம். எந்தவொரு நிகழ்வு குறித்தும் இதுவரை கருத்து கூறாத சச்சின் நாடாளுமன்ற உறுப்பினரான பின் மட்டும் கூறி விடப் போகிறாரா? சர்ச்சைகள்அவருடைய கிரிக்கெட் வாழ்வில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து அவர் மட்டுமே கவலைப்பட வேண்டும். சாதனைகளுக்காக மட்டும் ஆடும் நபர்கள் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். அதுபோல் சச்சினும் பல சர்ச்சைகளைத் தவிர்த்து வருகிறார். “மரம் சும்மா இருந்தாலும் காற்று அதனைச் சும்மா இருக்கவிடுவதில்லை” என்ற சொலவடைக்கு உயிர் கொடுப்பது போல் சச்சினும் சிலவற்றில் சிக்கியுள்ளார். 
ஷூமேக்கர் சச்சினுக்கு வழங்கிய பெர்ராரி கார்
             மதுரை உயர்நீதிமன்றத்தில் சச்சின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதை எதிர்த்து ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில் உள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சச்சினுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜமைக்காவில் நடந்த விருந்து ஒன்றில் மூவண்ணக் கொடி வரையப் பட்ட கேக் ஒன்றை சச்சின் வெட்டியதன் மூலம் தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்துவிட்டார். எனவே அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சச்சினை எம்.பி. ஆக நியமித்தது தவறு என்று மேலூரைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 2003ம் ஆண்டில் அவருக்கு பந்தயக்கார் வீரர் மைக்கேல் ஷூமேக்கர் பெர்ராரி 360 மாடனா ரக காரை அன்பளிப்பாக வழங்கினார். பிராட் மேன் சாதனையைச் சமன் செய்ததையொட்டி கார் வழங்கப்பட்டது. இதற்கு அவர் இறக்குமதி வரியாக ரூ.1.13 கோடி கட்டியிருக்க வேண்டும். ஆனால் அன்பளிப்பாக வந்த காருக்கு வரிவிலக்கு கேட்டு விண்ணப்பித்தார். அன்றைய காங்கிரஸ் அரசு அவருக்கு வரி விலக்கு அளித்தது. அரசிடம் வரிவிலக்கு பெற்ற காரை சச்சின் பின்னர் சூரத்தைச் சேர்ந்த ஜெயேஷ் தேசாய்க்கு விற்று விட்டார்.
           இதற்கு சச்சின் அரசுக்கு மூலதன லாப வரி கட்டவேண்டும். ஆனால் கட்டவில்லை. சச்சின், பந்த்ராவில் ரூ.80 கோடி மதிப்பில் ஒரு சொகுசு மாளிகையைக் கட்டியுள்ளார். 2011 ம் ஆண்டில் அவர் அந்த வீட்டுக்கு குடி ஏறினார். மும்பை மாநகராட்சி அவருக்கு தண்டம் விதித்து நோட்டீஸ் அனுப்பியது. மாநகராட்சியிடம் குடியிருப்பு தகுதிச் சான்றிதழ் பெறாமல் குடியேறியதற்கு ரூ.4.35 லட்சம் தண்டம் கட்டுமாறு மும்பை மாநகராட்சி கூறியது. அவருக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் அரசு மாநகராட்சி ஆணையரிடம் பரிந்துரை செய்தது. நோட்டீசைப் பெற்றுக்கொண்ட சச்சின் தண்டத்தொகையைக் கட்டிவிட்டார். பல விளம்பரங்களுக்கு மாடலாகச் செயல்பட்ட சச்சின், விளம்பரங்களில் தான் ஒரு நடிகர் மட்டுமே. கிரிக்கெட் ஆட்டக்காரர் இல்லை என்று வாதாடி ரூ.2 கோடி வரிவிலக்குப் பெற முயன்றார்.
           இவர் உலகிலேயே மிகப் பெரும் பணக்கார கிரிக்கெட் வீரர். அதுமட்டுமல்ல தன்னுடைய சொந்த ஊழியர்களுக்கு தேநீர், சிற்றுண்டி வழங்கிய செலவுக்கான ரூ.57,969 - க்கு வருமான வரி விலக்கு கேட்டுள்ளார். தொலைபேசி, கேளிக்கைச் செலவுகள் ஆகியவற்றுக்கு ரூ.50 ஆயிரமும், கார் செலவுகளுக்காக (இவரிடம் 40 கார்கள் உள்ளன) ரூ.1,42,824 - ம் வரிவிலக்கு கேட்டுள்ளார். வருமானவரித்துறை இவற்றை நிராகரித்து விட்டது. தற்போது இவர் எம்.பி.ஆக விரும்புவது எதற்காக என்பதை யூகிக்க முடிகிறது. காங்கிரஸ் சில அரசியல் காரணங்களுக்காக சச்சினுக்கு எம்.பி. பதவி அளிக்க முன் வந்துள்ளது. சச்சினும் தற்சார்பு நலன்களுக்காக அதை ஏற்றுக்கொள்ளத் துணிந்துவிட்டார் என்பது தான் உண்மை. 
நன்றி : தீக்கதிர் / 13.05.2012

சனி, 17 டிசம்பர், 2011

சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது - இது சரியோ...? இது முறையோ...?

                    சூதாடிகளுக்கும், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் இந்தியாவின் மிக உயரிய பரிசு ''பாரத ரத்னா''  விருது கொடுப்பது சரிதானா..? முறை தானா...?  
              சச்சின் ஒரு விளையாட்டு வீரர். அதுவும் உலகம் முழுதும் அனைவராலும் விளையாடப்படும் விளையாட்டுமல்ல... உலகம் முழுதும் பரவிக்கிடக்கும் விளையாட்டுமல்ல... வெறும் பத்து நாடுகளில் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு தான் இந்த கிரிக்கெட் விளையாட்டு. அதனால் தான் ஒலிம்பிக் போட்டி போன்ற உலக அளவிலான போட்டிகளில் இதுவரை கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை.
                அப்படிப்பட்ட விளையாட்டில் சாதனை செய்தாரா என்றால்... சாதனை செய்திருக்கிறார்... நாமெல்லாம்  பெருமைப்படத்தக்க அளவில் சாதனை புரிந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அனால் அவை அத்தனையும் ஒரு  தனிமனித சாதனை... 
             அவர் அப்படிப்பட்ட சாதனைகள் புரிவதற்காகவே, ஆட்சியாளர்களால் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு செய்திருக்கும் சாதனைகள் தான் அத்தனையும். இதே போல் வாய்ப்புகள்  கிரிக்கெட் ஆடும் அத்தனைப் பேருக்கும் கொடுக்கப்பட்டால் அவர்களும் தனிமனித சாதனைகளை அவர்களது ஆட்டத்தில் செய்துகாட்டுவார்கள்.
                 அதுமட்டுமல்ல, இன்றைக்கு உலகமய சூழலில் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக கிரிக்கெட் என்பது ஒரு சூதாட்டமாக மாறிவிட்டா சூழலில் - கிரிக்கெட் என்பது பணம் கொட்டுகிற விளையாட்டாக மாறிவிட்ட சூழ்நிலையில்  கிரிக்கெட் என்பது சாதனை படைக்கும் களமாக இல்லாமல், மனம் சேர்க்கும் - சொத்து சேர்க்கும் கஜானாவாக மாறிவிட்டது. 
               அப்படி சம்பாதித்த பணத்திற்கு சச்சின் போன்ற கிரிக்கெட் வீரர்கள் அரசுக்கு கட்டவேண்டிய வரியை சரியாக - முறையாக - நியாயமாக கட்டியிருப்பார்களா....? என்றால்... இல்லை... இல்லவெ இல்லையெ...! இவர்களுக்கு அரசாங்கமே இவர்களுக்கு கொடுக்கும்  வரிச்சலுகையை இவர்கள் அனுபவிப்பது மட்டுமல்லாது... தங்களுக்கு வரும் வருமானத்தை முறையாக அரசுக்கு காட்டுவதுமில்லை.... முறையாக கட்டவேண்டிய வரியையும் இதுவரை கட்டியதுமில்லை...
              இவர் ஒரு நேர்மையான இந்திய குடிமகன்  இல்லை என்பதுமட்டுமல்ல, ஓர் உண்மையான இந்திய குடிமகனாகவும் அவர் நடந்துகொள்ளவில்லை என்பதையும் இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். பெப்சி, பூஸ்ட், மெட் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இவர் தான் நிறுவனத் தூதராக இருந்து, அந்த கம்பெனிகளின் விளம்பரத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தவர் என்பதையும் இந்த நாடு அறியும். இப்படிப்பட்டவர் எப்படி ஓர் உண்மையான இந்தியக் குடிமகனாக இருக்கமுடியும் என்று சொல்லுங்கள்.
              இப்படிப்பட்டவருக்குத் தான் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டால் அது எப்படி சரியாக இருக்கும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
             இதுவரை கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொது சேவை துறையில் சாதித்தவர்கள் மட்டுமே பாரத ரத்னா விருது பெற முடியும் என்ற விதி நடைமுறையில் இருந்துவந்தது. பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருதை பெற முடியும் என்று விதியில் மாற்றம் செய்யப்பட்டு சென்ற நவம்பர் 16-ம் தேதி அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய  விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
            இப்படிப்பட்ட இவருக்கு தான், இந்த உயரிய விருதினை தருவதற்காகவே, பாரத ரத்னா விருது பெறுவதற்கான விதியில் மத்திய அரசு இப்போது புதிய திருத்தம் செய்துள்ளது. விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கும் பாரத ரத்னா பரிசு வழங்க தான் இந்த மாற்றம் என்று பொதுவாக சொல்லியிருந்தாலும் அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் டெண்டுல்கருக்காக தான் இந்த மாற்றம் என்றால் அதில் நியாயம் இல்லை.
                             சென்ற 1954-ம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. மக்களை பற்றி சிந்தித்தவர்களும், தேசத்தை பெருமைக்குல்லாக்கியவர்களுமான சர் சி.வி.ராமன், சி.வி.ராஜகோபாலாசாரி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்  ஆகிய  இவர்களில் தொடங்கி, இதுவரை 41 பேருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது.
             கடந்த காலங்களில் இந்த உயரிய விருதினை ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், அமார்த்தியா சென், ஜெயபிரகாஷ் நாராயண், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் அம்பேத்கர், எம். எஸ். சுப்புலட்சுமி, பண்டிட் ரவி சங்கர், உஸ்தாது பிஸ்மில்லாகான், மொரார்ஜி தேசாய், எம். ஜி. ராமச்சந்திரன், ராஜீவ் காந்தி,  லதா மன்கேஷ்கார், அன்னை தெரசா, கான் அப்துல் காபார் கான், நெல்சன் மண்டேலா.... போன்ற உலகின் - தேசத்தின் - சமூகத்தின் உயர்ந்த தலைவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட இந்த உயரிய விருதினை பெறுவதற்கு சச்சின் டெண்டுல்கருக்கு மேலே சொன்னவர்களில் ஏதாவது ஒரு தகுதியாவது உண்டா...? என்பதை அவரே தன்னை எடைபோட்டுப்பார்க்கவேண்டும்.