வியாழன், 27 டிசம்பர், 2012

சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்கார் விருது...!

        "மேலே இருக்கும் படத்தில் வலது புறம் இருப்பது யாரு?" அப்படின்னு கேட்டா, "இதெல்லாம் ஒரு கேள்வியா, அவருதான் ஹிந்தி சூப்பர் ஸ்டார் என்று சின்னக் குழந்தையும் சொல்லுமே" என்பீர்கள்.   அவர் ஒரு தலை சிறந்த நடிகர் அப்படின்னு மட்டும்தான் நீங்க நினைச்சுகிட்டு இருந்திருப்பீங்க.  ஆனா, அது உண்மையில்லை!!  அவர் நடிக்கவும் செய்கிறார் என்பதென்னவோ உண்மைதான், ஆனால் அவர் நடிகர் இல்லை.  முதன்மையில் அவர் சேற்றில் விழுந்து பாடுபடும் ஒரு ஏழை விவசாயி!!  விவசாயம் தான் அவர் உயிர் மூச்சே. நடிப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். இதை வேற யாரும் சொல்லவில்லை, அவர் வாயாலே சாரி........  எழுத்தால சட்டத்துக்கு முன்னாடி தெரிவித்த தகவல்தான் இது!  "அய்யய்யோ, அப்ப இடதுபக்கம் குடை பிடிச்சுகிட்டு நிக்கிறவர் யாரு? தோட்டக்காரனா?"  அதைப் பத்தி தானே இந்தப் பதிவில் பார்க்கப் போறோம்!!  அதுசரி ரெண்டுபேரும் கையில என்னமோ வச்சிருக்காங்களே அது என்ன?  அது ஊட்டச் சத்து மிக்க பானம், இதைக் குடிச்சா எழும்பெல்லாம் ரொம்ப ஸ்ட்ராங்கா ஆயிடுமாம். அதை கிழவனும் குடிச்சிட்டு தெம்பா இருக்கலாம்னு விவசாயி சொல்றாரு, இன்னொருத்தர், இதில் பத்து பாட்டில் தினமும் உள்ளே தள்ளுவது  தான் "சீக்ரெட் ஆ ஃ ப்  மை எனர்ஜி"  அப்படிங்கிறார்.  [காசை வீசி எரிஞ்சா பொறுக்கிக்கிட்டு நாய் மூத்திரம் நல்லதுன்னு சொல்றதுக்கும் ஆளுங்க ரெடியா இருக்காங்க, அதப் பாத்திட்டு தண்ணீருக்குப் பதிலா  நாய் மூத்திரமே தான் வேணுமின்னு தேடித் தேடி காசு குடுத்து வாங்கி குடிக்க நாம் இருக்கோம்.]
             சரி அதெல்லாம் போகட்டும்.  விஷயத்துக்கு வருவோம்.   இப்போ நாம் பார்க்கப் போவது, 2001-02 மற்றும் 2004-05 நிதியாண்டுகளில் நடந்த ஒரு சங்கதி.  டெண்டுல்கர் அந்த வருடங்களில் ESPN Star Sports, PepsiCo மற்றும் Visa ஆகிய நிறுவனங்களில் இருந்து தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்ததற்காக அந்நிய செலாவானியாக [Foreign currency] Rs.5,92,31,211 [ரூபாய் ஐந்து கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்தி சொச்சம்] பெற்றிருக்கிறார்.  இந்த வருமானத்திற்காக அவருக்கு வருமான வரியாக ரூ.2,08,59,707 [ரூபாய் இரண்டு கோடியே  எட்டு லட்சத்தி சொச்சம்] செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறையினர் [(CIT-A)- Commissioner of Income Tax-Appeal] நோட்டிஸ் விட்டனர்.
                   இதை எதிர்த்து நம்ம பூஸ்ட் மட்டும் குடிக்கும் பாப்பா என்ன பண்ணுச்சு தெரியுமுங்களா?  ஐயா, இந்த  CIT-A எனக்கு கிரிக்கெட் ஆடுவது தான் முதல் தொழில்னு தப்பா நினைச்சுகிட்டு இருக்காருங்க.  அது நெசமில்லீங்க.  அடிப்படையில நான் ஒரு கலைஞனுங்க, நடிப்புதான் பிரதான தொழிலுங்க.  கிரிக்கெட்டெல்லாம் அப்புறம்தானுங்க.  அதனால என்னோட தொழில் மூலமா சம்பாரிச்ச பணத்துக்கு u/s 80RR of the Act படி வரிச்சலுகை குடுங்க அப்படின்னு கேட்டுச்சு.  இதை விசாரிச்ச ஆணையமும், "ஆமாங்க இவர் ஒரு நடிகர்தான், நடிப்பு எல்லாத்தலும் முடியாது, மூஞ்சியில பவுடரை பூசிகிட்டு, வெப்பத்தை உமிழும் மின் விளக்குகள் முன்னாடி நின்னு சொந்தக் கற்பனை, படைப்பாற்றல் எல்லாம் பயன்படுத்தி நடிச்சு தெறமையைக் காட்டி மக்களை கவர்வது லேசு இல்ல, இவரு நெசமாவே நல்ல நடிகன் தான்" அப்படின்னு சான்றிதழ் குடுத்து கேட்ட இரண்டு கோடி சொச்ச வரிச்சலுகையும் குடுத்துடுச்சு!!  அதனால, இன்னைக்கு TV விளம்பர நடிகரா தொழில் பண்ணும் இவர் நாளைக்கு ஹாலிவுட் படத்தில வாய்ப்பு வந்து நடிச்சு தெறமை காட்டி ஆஸ்கார் கூட வாங்கினாலும் ஆச்சரியப் பட என்ன இருக்கு?  ஒரு நாள் போட்டியில் ஓய்வு பெறுவதை அறிவித்த போது இவர் கண்ணீர் விட்டிருக்காரு.  அது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை நினைத்த வருத்தத்தாலா, சினிமாவில் வருவது மாதிரி நடிப்பா, இல்லை கிரிக்கெட் ஆடும் வாய்ப்பை  இழந்து விட்டோமே, இனிமே இந்த அளவுக்கு விளம்பரங்களில் நடிச்சு பணத்தை மேலும் சேர்ப்பது இயலாதேன்னு துக்கமாங்கிறது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
              இன்னொரு நிகழ்வையும் நாம் இங்க சொல்லணும்.  இது 2002-03 வாக்கில் நடந்தது.  அப்போது டெண்டுல்கர் ஆஸ்திரேலிய மாபெரும் கிரிகெட் வீரர் மறைந்த டான் பிராட்மன் அவர்களின் டெஸ்ட் சாதனையான 29 சதங்களை சமன் செய்தார்.  இதைப் பாராட்டி ஃபியட் நிறுவனம் அவருக்கு  '360 Modena Ferrari' என்ற 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை பரிசளிக்க விரும்பியது. காரை சும்மா குடுக்க அவன் என்ன இனா வானாவா?  டெண்டுல்கர் மைக்கேல் ஷூ மேக்கர் என்னும் கார் ரேஸ் வீரருடன்  இணைந்து அந்தக் காரின் விளம்பரத் தூதுவராகவும் இருப்பார்.  2002 ஆம் ஆண்டு இங்கிலாந்தில்,  சில்வர்ஸ்டோன்  என்னுமிடத்தில் இருவரும் சந்தித்த போது  ஷூ மேக்கர், ஃபியட் சார்பில் டெண்டுல்கருக்கு அந்தக் காரை பரிசளித்தார்.                 
           அதை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டுமே?  ஆடு அரைப்பணம், ......க்கு  முக்கால் பணம் என்னும் கிராமத்து பழமொழி இங்கே வேலை செய்ய ஆரம்பித்தது. அந்தக் கார் கிரிக்கெட் விளையாடி பரிசாகப் பெற்றது அல்ல.  எனவே அதை இந்தியாவுக்குள் கொண்டு வர அதன் விலையில் 120% வரியாகச் செலுத்த வேண்டும்.  அதாவது ஒரு கோடியே பதிமூணு இலட்சம் ரூபாய்கள்.  ஒன்னும் தெரியாத நம்ம பாப்பா குடுக்குமா?  வரிச்சலுகை கேட்டுச்சு.  நிதியமைச்சகமும் என்னென்னமோ பண்ணி 2003 ஆம் வருடம் சலுகை கொடுத்தது.
               நம்ம பாப்பா சில வருடங்கள் அந்தக் காரை வச்சிருந்து விட்டு அப்படியே சூரத்தில் இருக்கும் ஜெயெஷ் தேசாய் என்ற ஒரு வியாபாரிகிட்ட அதைத் தள்ளிட்டு காசாக்கிடுச்சு.  டேய் எவ்வளவுடா குடுத்தேன்னு அவனைக் கேட்டா, "இந்தாபா, காரைப் பத்தி என்ன வேணுமின்னாலும் கேளு, ஆனா எம்புட்டு குடுத்தே, அந்த பாசக்கார பூஸ்டு பேபிய உனக்கு எப்படி தெரியும், அது இதுன்னு கேட்கிறா மாதிரியா இருந்தா எடத்தை காலி பண்ணு" அப்படிங்கிறான்.  அவனுக்கு இதே காரை புதுசாவே வாங்க முடியுமாம்.  ஆனாலும், மைக்கேல் ஷூ மேக்கர்,  டெண்டுல்கர் அப்படின்னு ரெண்டு கர்.... கர்.... சம்பந்தப் பட்ட இதை நான் புர்.... புர்.... என்று ஓட்டினா அதுவே போதும், வாழ்வே வெற்றிங்கிறானாம்!!

கருத்துகள் இல்லை: