ஐ.ஐ.டி நிர்வாகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐ.ஐ.டி நிர்வாகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 மே, 2015

மநுதர்ம சூழ்ச்சியும் பார்ப்பனிய தந்திரமும் இணைந்த சென்னை ஐ.ஐ.டி .,..!


                 ஒரு காலத்தில் பார்ப்பனிய கோட்டையாய் திகழ்ந்த மத்திய அரசு நிறுவனங்களெல்லாம் தகர்ந்துவிட்ட நிலையில், உயர்சாதியை சேர்ந்தவர்களும், வசதிப்படைத்தவ்ர்களும் மட்டுமே படிக்கக்கூடிய சென்னை ஐ.ஐ.டி-யில் குறிப்பிட்ட சில மாணவர்களால் நடத்தப்பட்டு வந்த ''அம்பேத்கர் -பெரியார் வாசிப்பு வட்டம்'' என்ற அமைப்பை மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் ஐ.ஐ.டி நிர்வாகம் தடை செய்திருக்கிறது.  அந்த வாசிப்பு வட்டத்திலும், அவர்களது முகநூலிலும் மோடியைப் பற்றியும், அவரது ஆட்சியைப் பற்றியும் விமர்சனம் செய்கிறார்களாம். அதை தாங்கிக்கொள்ள முடியாத ஆட்சியாளர்களும், நிர்வாகமும் கூட்டு சேர்ந்து ஜனநாயகத்தின் குரல்வலையை நெரித்திருக்கிறது. விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு எதற்கு ஆட்சியையும், பதவியும்...? தூக்கியெறிந்து விட்டு ஓடவேண்டியது தானே...! ஆட்சியாளர்களின் அவலங்களை பார்த்து முணுமுணுத்தல் கூட ஆகாதென்றால் அரசியல் அமைப்பு சட்டம் அளித்துள்ள கருத்து சுதந்திரத்தை  குப்பைத்தொட்டியில் தூக்கிப் போடவேண்டியது தானா...?   இதற்கு பேர் தான் மோடியின் தூய்மை இந்தியா திட்டமா...?
              ஐ.ஐ.டி நிர்வாகத்தின் இந்த செயல் என்பது, மநுதர்ம சூழ்ச்சியும், பார்ப்பனிய தந்திரமும் இணைந்த பாசிச குணத்தின் வெளிப்பாடு என்பதையும், சுதந்திரமான கல்விச் சூழலை தடை செய்யும் சர்வாதிகார போக்கு என்பதையுமே காட்டுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும், பொருளாதார மேதைகளும், வரலாற்று ஆய்வாளர்களும் மாணவர்களோடு சேர்ந்து நாட்டிலுள்ள சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைகளை ஆய்வு செய்யும் களமாக இருந்துவரும் அம்பேத்கர் -பெரியார் வாசிப்பு வட்டத்தையும் அதனுடைய முகநூல் செயல்பாட்டையும் தடை செய்வதென்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
                மாணவர்களின் கருத்து சுதந்திரம் என்பது அறிவை விசாலமாக்கி அகண்டமாய் சுடர்விடும் பாரதியின் அக்னி குஞ்சு... அது அவலநிலையில் இருக்கும் சமூகத்திற்கு நல்வழிகாட்டும் கலங்கரைவிளக்கம்... அதன் செயல்பாடுகளை தடை செய்வதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. மத்திய அரசும், நிர்வாகமும் தன்னுடைய போக்கை கைவிடவேண்டும். இல்லையேல்... அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே... உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை... அச்சமில்லை அச்சமென்பதில்லையே... என்ற பாரதி கற்றுத்தந்த பாடத்தை மறவாதவர்கள் எங்கள் வீட்டுப்பிள்ளைகள் என்பதை இவர்களுக்கு  நினைவூட்ட விரும்புகிறோம்.