மாட்டிறைச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாட்டிறைச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

மாட்டிறைச்சி உண்பது கேவலமா....?

                 பொதுவாக பத்திரிக்கையின் விற்பனை குறைந்து போனாலோ அல்லது விற்பனையை உயர்த்த வேண்டுமென்றாலோ அந்த பத்திரிக்கை   விளம்பரத்துக்காகவும், விற்பனைக்காகவும் மக்களை ஈர்க்கக்கூடிய ஏதாவது பரபரப்பானத்  தகவல்களை பிரசுரிப்பது,  அதன் மூலம் தங்கள் விற்பனையை உயர்த்திக்கொள்வது  என்பது  பத்திரிக்கைகளின் வழக்கமான ஒன்றாகும். 
            தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப்பின் பெரும்பாலான வார இருமுறை இதழ்களுக்கு எழுதுவதற்கு பரபரப்பான தகவல்களே இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கு ஊழல் குற்றச்சாட்டுகளும், ஊழல் வழக்கு - விசாரணைகளும் புளித்துப்போய்விட்டது. இனிமேல் அதில் ஈர்ப்பு இருக்காது. சமீபத்தில் ஜெயலலிதா - சசிகலா பிரச்சனை ஒன்று பத்திரிக்கைகளுக்கு கிடைத்து. பத்திரிக்கைகளும் இந்த பிரச்சனை நீண்டுகொண்டே போகும் என்று தான் எதிர்ப்பார்த்தார்கள். அந்த பிரச்சனையில் எந்த விளைவுகளும் இல்லாமல் சப்பென்று போய்விட்டது. அண்மையில் வந்த ''தானே'' புயல். அதில் ஒன்றும் எதிர்ப்பார்த்தது போல் காசுபன்ன முடியவில்லை. பிரேமானந்தா, நித்தியானதா போன்று  சாமியார்களைப் பற்றியும் தகவல்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. சந்தன வீரப்பனும் இன்று உயிரோடு இல்லை. வீரப்பனின் சாகசங்களையும் எழுதுவதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.  
                 என்ன செய்வார்கள் பாவம்...?  அதனால் தான் நக்கீரன் பத்திரிக்கை ஆட்டைக்கடித்து... மாட்டைக் கடித்திருக்கிறது.
                தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மாட்டிறைச்சி சாப்பிடுகிறார் என்ற நாட்டிற்கு முக்கியமான செய்தியை வெளியிட்டிருக்கிறது. ஏதோ மாட்டிறைச்சி என்பது சாப்பிடக்கூட மாமிசம் போலவும் அல்லது மாட்டிறைச்சி சாப்பிடுவது என்பது காட்டுமிராண்டித்தனம் போலவும் அல்லது  இதுவரை மனிதர்களே சாப்பிடாத மாட்டிறைச்சியை அதிசயமாக தமிழக முதலமைச்சர் மட்டுமே சாப்பிடுவது போலவும் விஷமத்தனமாக நக்கீரன் பத்திரிக்கை குறிப்பிட்டிருப்பதை எதிர்த்து நேற்று ஆளும் கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள் நக்கீரன் அலுவலகத்தின் முன்பும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தினார்கள்.
                  நக்கீரன் ஆசிரியர்க்கும் அதிமுகவினர்க்கும் ஒரு கேள்வி... மாட்டிறைச்சி என்பது மனிதர்கள் சாப்பிடக்கூடாத மாமிசமா...? முன்பெல்லாம் உகாண்டா நாட்டின் அதிபர் இடி அமின் ''மனித மாமிசத்தை'' சாப்பிட்டதைப்  போல் இதை ஏன் பெரிதுபடுத்தவேண்டும்....?
       உலகளவில் மாட்டிறைச்சி என்பது ஒரு முக்கிய உணவு ஆகும். குறிப்பாக அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மாட்டிறைச்சி என்பது விரும்பி உண்ணப்படுகின்றது. இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் மக்கள் மாட்டிறைச்சியை உண்ணுகிறார்கள். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள், உழைப்பாளி மக்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் என பல்வேறு தரப்பு மக்களும் உண்ணப்படும் உணவு மாட்டிறைச்சி. இது இந்த நாட்டு மக்களின் பொருளாதாரம், பண்பாடு, கலாச்சாரம்   சம்பந்தப்பட்டது.  அப்படிப்பட்ட இவர்களெல்லாம் உண்ணக்கூடிய மாட்டிறைச்சியை உண்ணுவது கேவலமானது என்று நக்கீரன் பத்திரிக்கை நினைக்கிறதா...? அல்லது அப்படி சாப்பிடுவதாக எழுதியதால் முதல்வரின் கவுரவம் குறைந்துவிட்டதா...? 
                 முதலமைச்சரும் அதிமுகவினரும் பெருமைப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், இங்கிலாந்து மகாராணி வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையில் மாட்டிறைச்சி தான் சமைக்கப்படுகிறது. மகாராணியும், அவரது கணவரும் அதைத்தான் விரும்பி உண்ணுவார்களாம்.  அதனால் அதிமுகவினர் இதை பெரிது படுத்தியிருக்கவேண்டாம்.
                அதே சமயத்தில், நக்கீரன் பத்திரிக்கைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. பத்திரிக்கை சுதந்திரம் என்பது அடுத்தவரை விமர்சனம்செய்யும் போது அவரின் மூக்கு நுனி வரை தான் அந்த சுதந்திரம் என்பது நீளவேண்டும் என்பதை நக்கீரன் அடிக்கடி மறந்துவிடுவதுண்டு. தனிப்பட்டவரின் சொந்த விஷயங்களை விமர்சனம் செய்யும்  போது குறிப்பாக பெண்களைப்பற்றி விமர்சனம் செய்யும் போது  பத்திரிக்கை தர்மத்தையும், எல்லையையும் மீறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அப்படி தனிப்பட்டவர்களின் சொந்தவிஷயங்களை கிளறி எழுதும் போது  அது பத்திரிக்கைக்கு விளம்பரத்தை தேடித் தராது. அதிகமான விற்பனையையும் உயர்த்தித் தராது. மாறாக படிப்பவருக்கு அருவருப்பையே உண்டுபண்ணிவிடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.