எல்.ஐ.சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எல்.ஐ.சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 மே, 2015

எதிர்பாராத பணிமாற்றமும் இடமாற்றமும்...!


            உங்களுக்கு எதிர்பாராத பணிமாற்றமும், இடமாற்றமும் உண்டாகும் என்று சோதிடத்தில் சொல்வது போல நான் சற்றும் எதிர்பாராத பணிமாற்றமும், இடமாற்றமும் என் விருப்பத்தைக் கேட்காமலேயே இன்று மிகுந்த அவசரத்துடன் என்னை நாடி வந்தது. மாறும் என்பதை தவிர அனைத்தும் மாறக்கூடியது தான் என்ற விதி எனக்கும் பொருத்தமானது தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. கடந்த 2003 -ஆம் ஆண்டில் நான் எல்.ஐ.சி திண்டிவனம் கிளையிலிருந்து மாற்றலாகி புதுச்சேரி முகவர் பயிற்சி மையத்திற்கு, மையத்தின் அலுவலகப் பணிகளுக்கும், கூடுதலாக பயிற்சி ஆசிரியர் பணிக்காகவும் புதுச்சேரி முகவர்கள் பயிற்சி மையத்தில் சேர்ந்ததிலிருந்து 12 ஆண்டுகள் இன்சூரன்ஸ் கல்விப்பணி நேற்றோடு முடிவுற்றது. எதிர்பாராமல் திடீரென்று நிர்வாகம் பயிற்சி மையத்திலிருந்து சாரம் கிளை அலுவலகத்திற்கு என் விருப்பமில்லாமல் மாற்றம் செய்துவிட்டது. வகுப்பை முடித்துவிட்டு மாலையில் தான் அதே கட்டிடத்தில் இருக்கும் கிளை அலுவலகத்தில் கனத்த மனத்துடன் சேர்ந்தேன்.
               எனது 28 ஆண்டுகால எல்.ஐ.சி பணியில் 12 ஆண்டுகால முகவர் பயிற்சி பணியென்பது மகத்தானது... நிறைவானது. இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் 15 நாட்கள், 8 நாட்கள் மற்றும் 4 நாட்கள் என மொத்தம் 378 பயிற்சி வகுப்புகளில்  சுமார் 4000க்கும் மேற்பட்டவர்களுக்கு தடையின்றி இன்சூரன்ஸ் பாடம் நடத்தியிருக்கிறேன். என் வகுப்பு என்பது வெறும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட வகுப்பாக மட்டுமில்லாமல், பள்ளிப் பாடங்களையும், கல்லூரிப் பாடங்களையும் மட்டுமே படித்துவிட்டு வருகின்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள், வேறு வேலையில் இருப்பவர்கள், வேலையிலிருந்து  ஓய்வுபெற்றவர்கள் என அனைவருக்கும் அவர்கள் விரும்பி ஏற்கும்படியான தேசபக்தி, சமூக அக்கறை, மனிதநேயம், விழிப்புணர்வு, எல்.ஐ.சி பாதுகாப்பு, நேர்மை, தனிமனித ஒழுக்கம்   இவைகளோடு அறிவியல், வரலாறு, பொருளாதாரம், அன்றாட நிகழ்வுகள் ஆகிய பாடங்களையும்  இன்சூரன்ஸ் பாடத்தோடு கலந்து நடத்தும் வகுப்பாகத்தான் இருக்கும். என்னுடைய பாடம் நடத்தும் இந்த பாணி வகுப்பிலுள்ள அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் இருக்கும். ஆனால் இந்த பாடம் என்பது  வெளியிலிருக்கும் பல பேருக்கு வயிற்றெரிச்சலையும் தந்திருக்கிறது. வெறும் இன்சூரன்ஸ் மட்டும் நடத்தவேண்டியது தானே ஏன் தேவையில்லாமல் இதையெல்லாம் நடத்துகிறார் என்று எனக்கு பின்னால் எதிர்த்தவர்கள் பலர் உண்டு. அதேப்போல் பல இடங்களில் உள்ளதை  போல் நான் அவர்களுக்கு தகுந்தாற்போல் நேர்மை தவறி   வளைந்து கொடுப்பதில்லை. இதெல்லாம் அவர்களுக்கு எரிச்சலை ஊட்டியது.  வகுப்பிற்கு வருகின்ற முகவர்களுக்கு பலவிதமான செய்திகளை கொடுத்து விழிப்புணர்வை உண்டாக்கினேன். இதுவும் பலபேருக்கு எரிச்சலை உண்டாக்கியது. ஊழியர் - முகவர் என்ற வித்தியாசம் பாராட்டாமல் அனைத்து முகவர்களோடு பழகுவேன். அதனால்  அனைத்து முகவர்களும் தோழமையோடு என்னோடு தோளோடு தோள் சேர்த்து நிற்கிறார்கள். அவர்களின் உரிமைக்கான போராட்டத்தில் அவர்களோடு வீதியில் நின்று போராடுவேன். இதுவும் பலபேருக்கு எரிச்சலையும், கோபத்தையும் உண்டாக்கியது. அதனால் அவர்கள் தங்கள் உரிமைகளுக்கு போராடினார்களோ இல்லையோ, என்னை அங்கிருந்து தூக்குவதற்கு கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக போராடி தோற்றுத்தான் போனார்கள் என்பது தான் உண்மை.
              ஆனால் அண்மையில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய இன்சூரன்ஸ் திருத்த மசோதாவின் மூலம் முகவர் பயிற்சி வகுப்பிற்கான தேவையும், அவசியமும் குறைக்கப்பட்டுவிட்டதால், பயிற்சி மையத்தில் என்னுடைய பணியும் குறைந்து போய்விட்டபடியால் எனக்கு இந்த கட்டாயப்பணி மாற்றம் என்பது பலபேருக்கு சாதகமாகிவிட்டது. புதிய சட்டம் வென்றுவிட்டது. என்றாலும் இடமாற்றமும், பணிமாற்றமும் எனக்கு எந்தவித மனமாற்றத்தையும் உண்டு பண்ணாது. எல்.ஐ.சி பணியோடு தொடர்ந்து முகவர் சேவையும், மக்களை பணியும் ஆற்றுவேன் என்ற நெஞ்சுறுதி  எனக்கு இருக்கிறது. இனி மக்கள் சேவை என்பதும், உழைப்பாளி மக்களுக்கான போராட்டம் என்பதும்  அலுவலகப்பணியாக  என்  இருக்கையிலிருந்து தொடங்கும். 

வெள்ளி, 27 டிசம்பர், 2013

தேசத்தைக் காக்கும் எல். ஐ. சி - யை பாதுகாப்போம்...!

           






             நாடு முழுதும் உள்ள எல்.ஐ.சி கிளைகளில் கடந்த ஒரு மாத காலமாகவே ஒரே பரபரப்பாக இருப்பதை காணலாம். முகவர்கள் எல்லோரும் தேனீக்களைப் போல சுறுசுறுப்பாய் - பம்பரமாய் சுழன்று வேலை செய்கிறார்கள். ஏனென்றால் எல்.ஐ.சி -யின் பிரபலமான 50 வகையான திட்டங்களை எல்லாம் வரும் டிசம்பர் மாதம் 31 - ஆம் தேதியன்று முடிவுக்குக் கொண்டுவருகிறார்கள். காலகாலமாக பல ஆண்டுகளாக மக்களுக்கு பல்வேறு வகையான பலன்களை அள்ளித்தந்துகொண்டிருந்த அத்தனை திட்டங்களையும் ஒழித்துக்கட்டிவிட்டு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை வாழவைப்பதற்காக மத்திய அரசு போடும் சதி திட்டமாகும். மத்திய அரசின் இந்த மோசடியான நடவடிக்கையை கண்டித்தும், 
                  இன்சூரன்ஸ் துறையில் தற்போது அனுமதிக்கப்படும் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும் மத்திய அரசின் செயலைக் கண்டித்தும், 
               எல்.ஐ.சி திருத்த மசோதா - 2009 என்ற திருத்த மசோதாவை கடந்த ஆண்டு நிறைவேற்றியதன் மூலம், ஆண்டு உபரித்தொகையில் 90 சதவீதமாக பாலிசிதாரர்களுக்கு போனசாக கொடுக்கப்பட்டதை 85 சதவீதமாக குறைத்ததை கண்டித்தும், 
            01.04.2012 முதல் பிரிமியம் என்பது காப்புத்தொகையில் 10 சதவீதம் மேல் இருத்தல் கூடாது என்றும், அப்படி அதிகமானால் அவர் வாங்கும் பலன்களுக்கு வருமான வரி வசூல் செய்யப்படுவதை கண்டித்து, 
             எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்வரும் 2014 ஜனவரி 1 - லிலிருந்து மக்கள் சேமிப்பான பிரிமியத்திற்கு சேவை வரி வசூலிப்பதை கண்டித்தும், 
             இன்று மாலை புதுச்சேரி அண்ணா சாலையில் LICAOI - எல்.ஐ.சி முகவர்கள் சங்கம்       சார்பில் ''எல்.ஐ.சி-யை பாதுகாப்போம்'' என்ற முழக்கத்துடன் சுமார் 750 மீட்டர் நீள ''மனித சங்கிலி போராட்டம்'' நடத்தப்பட்டது. 
           போராட்டத்தை  சாகத்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் - பெரியவர் திருமிகு.ம.இலெ.தங்கப்பா அவர்கள் தொடங்கிவைத்தார்.
          நாளை சேலத்தில் நடைபெற உள்ள இரண்டாவது தமிழ் மாநில மாநாட்டில் சேர்ப்பிக்கவிருக்கும் ''ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜோதியை'' புதுச்சேரியின் மூத்த தொழிற்சங்கத்தலைவர் தோழர்.சி.எச்.பாலமோகனன் எடுத்துக் கொடுத்தார். முடிவில் மெழுகுவத்தி ஏந்தி ''எல்.ஐ.சி-யை பாதுகாப்போம்'' என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.
              இந்தப் போராட்டத்தில் முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள், மத்திய - மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், சி.ஐ.டி யு. தோழர்கள், மருந்து விற்பனை பிரதிநிதிகள், மாதர் சங்க- வாலிபர் சங்க- மாணர்வர்கள் சங்க தோழர்கள், பாலிசிதாரர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோர் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

சனி, 3 மார்ச், 2012

பங்குச்சந்தை சூதாட்டத்தில் ஓ.என்.ஜி.சி - மக்கள் நிதியை இறக்கியது எல்.ஐ.சி.

               2011-12ம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாயைத் திரட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்திருந்தது. முதலாளித்துவக் கொள்கைகள் அதன் குரு பீடமான அமெரிக்காவில் உருவாக்கிய நெருக்கடியால் பங்குச் சந்தைகளின் தலைக்கு மேல் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியப் பங்குச்சந்தையும் இதற்கு விதிவிலக்கல்ல. 40 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கில் பிப்ரவரி 29 ஆம் தேதி வரையில் 1,145 கோடி ரூபாயை மட்டுமே திரட்ட முடிந்தது. .
                பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் பங்குகளை விற்றதன் மூலம் இந்த நிதி திரட்டப்பட்டது. ஆனால் வரும் மத்திய நிதிநிலை அறிக்கையின்போது பெரும் முதலாளிகளுக்கு ''சலுகைகள்'' வழங்குவதற்கு நிதியிருப்பை ''உத்தரவாதம்'' செய்து கொள்ளவும் அவசரகதியில் எவ்வளவு அள்ளினாலும் குறையாமல் லாபம் தரும் ஓ.என்.ஜி.சியின் (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கழகம்) பங்குகளை சூறையாட மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. அதன் படி 42.80 கோடி பங்குகளை ஒரு பங்குக்கு ரூ.290 என்ற விலைக்கு விற்பதாகவும் அறிவிப்பு செய்தனர். இதன்மூலம் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரும் என்று அவர்கள் திட்டம் தீட்டினர்.
               ஆனால் பங்குகள் விற்பனைக்கு வந்த மார்ச் 1 அன்று மந்த நிலை நிலவியதால் 29.22 கோடி பங்குகளுக்குத்தான் பதிவு செய்யப்பட்டது. அதன் காரணமாக குறுக்கு வழியில் துடிப்போடு இறங்கிய மத்திய அரசு, மிகவும் பாதுகாப்பான நிதி நிறுவனங்கள் என்று மக்களால் அழைக்கப்படும் எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகிய இரண்டையும் இறக்கிவிட் டது. எஞ்சியுள்ள பங்குகள் அனைத்தையும் வாங்கியாக வேண்டும் என்ற உத்தரவுகள் பறந்தன என்றும்  செய்திகள் வெளியாகியுள்ளன.
                  அதற்காக திரைமறைவில் பல வேலைகள் நடந்தன. 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தான் திரளும் என்ற நிலையில், எஞ்சியுள்ள பங்குகள் அனைத்தையும் எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை வாங்கியுள்ளன. எல்.ஐ.சி. மட்டும் 12 கோடி பங்குகளை வாங்கியிருக்கிறது. இதன்மூலம் பங்குச்சந்தைக்கு உயிர் கொடுக்கும் முயற்சியும் நடந்திருக்கிறது. அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்றாலும் ஓ.என்.ஜி.சி. பங்குகளை சூதாட்டத்தில் இறக்கியதோடு, மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ள இரண்டு பெரும் பொதுத்துறை நிறுவனங்களின் பணத்தையும் அதில் போட்டிருக்கிறார்கள்.
                 உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் சலுகைசார் முதலாளித்துவக் கொள்கையைத்தான் மறைமுகமாக இங்கு அரங்கேற்றுகிறார்கள். சட்ட ரீதியான சலுகைகள், அரசு நிதியுதவி மற்றும் சிறப்பு வரிச்சலுகைகள் போன்றவற்றையே சலுகைசார் முதலாளித்துவக் கொள்கையின் அம்சங்களாகச் சொல்கிறார்கள். பெரும் முதலாளிகளின் கொள்ளைக்கு பங்குச்சந்தை கேந்திரமானதாக இருந்து வருகிறது. அதில் நிலவும் மந்தத்தைப் போக்க கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களைப் பணயம் வைக்கிறார்கள். வந்தால் பெரும் முதலாளிகளுக்கு, போனால் மக்கள் தலையில் என்பதுதான் ஆட்சியாளர் களின் தாரக மந்திரமாக உள்ளது. இந்தத் தாரக மந்திரங்களுக்கு எதிராக வலுவான முழக்கங்கள் எழுந்து வருகின்றன. நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலை நிறுத்தம் என்று சொல்லுமளவுக்கு பிப்ரவரி 28 அன்று அனைத்துப்பகுதியினரும் இணைந்து போராடியிருக்கிறார்கள். ஓ.என்.ஜி.சி. பங்கு விற்பனை போன்ற ஏமாற்று வேலைகள் மக்களின் போராட்டக் குணத்திற்கு உரமிடும் வேலையையே செய்யும். போராட்ட அலைகள் தீவிரமாகும்.