தோழர் ஜோதிபாசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோழர் ஜோதிபாசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 மார்ச், 2014

இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள்...!


கட்டுரையாளர் : அ . அன்வர் உசேன்              

           விஜயசிம்ஹா எனும் வலைதள எழுத்தாளர் SIFY.COM எனும் வலை தளத்தில் சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள் குறித்த ஒரு பட்டியல் வடிவமைத்துள்ளார். சுதந்திர இந்தியாவில் இதுவரை 344 முதல்வர்கள் இருந்துள்ளனர் என்கிறார் விஜயசிம்ஹா. அப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தவர் தோழர் ஜோதிபாசு ஆவார். தலைசிறந்த முதல்வர்கள் முதல் பத்து பேர் பட்டியலில் தோழர் ஜோதிபாசுவுடன் தோழர்கள் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டும் மாணிக்சர்க்காரும் இடம் பிடித்துள்ளனர்.
                   அந்த பட்டியல்  : 1. ஜோதிபாசு / மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (மேற்கு வங்கம்)      2. கிருஷ்ண சின்கா /  காங்கிரஸ்  (பீகார்) 3. இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் / மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (கேரளா)   4. ஷேக் அப்துல்லா  / தேசிய மாநாடு (காஷ்மீர்)        5. பி.சி.ராய் / காங்கிரஸ். (மேற்கு வங்கம்)   6. சி.என்.அண்ணாதுரை /தி.மு.க (தமிழகம்)  7. லால்டெங்கா / மிசோ தேசிய முன்னணி (மிசோராம்) 8. கே.என். கட்ஜூ / காங்கிரஸ் (மத்திய பிரதேசம்) 9. மாணிக் சர்க்கார் / மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (திரிபுரா) 10. என்.ரெங்கசாமி / என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி). இந்த பட்டியல் உருவாக்கியதில் உள்ளடங்கிய அடிப்படை அம்சங்கள் என்ன? விஜய சிம்ஹா குறிப்பிடுகிறார் :
# தன்னைவிட மக்கள் மற்றும் தேசம் உயர்ந்தது என எண்ணியதும் செயல்பட்டதும்.
# மதம்/சாதி/பிரதேசம்/வசதி அல்லது ஆண்/பெண் எனும் வேறுபாடுகளை தவிர்த்தது.
# எல்லா மதங்களையும் சமமாக பாவித்தது மட்டுமின்றி அரசியல் கொள்கைகளில் மதத்தை ஈடுபடுத்தாமல் இருந்தது.
# எளிய மக்களை முதலில் அணுகுவது; முன்னேற்றத்தில் அனைவரையும் அரவணைத்துக் கொண்டது.
மாநில முதல்வராக இருந்தாலும் தேசிய உணர்வை பெற்றிருந்தது.
#  நல்லது செய்தோரை ஊக்கப்படுத்தியது- தீயது செய்தோரை தண்டித்தது.
# விமர்சனங்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டது.
# அரசு இயந்திரத்தை செம்மைப்படுத்தியது.
தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டது
# அரசு இயந்திரம் மக்களுக்கு இன்னல்களை தராமல் சேவை மட்டுமே தருவதை உத்தரவாதப்படுத்தியது
ஆட்சி நிர்வாகத்தில் சாதனை படைத்தது.
# வாழ்க்கையில் மிகவும் பாதகமான, சிறிதும் நியாயமற்ற அநீதி நிகழ்ந்த பொழுதும் அதனைப் பொருட்படுத்தாமல் மக்களுக்காக செயல்பட்டது.
இதன் அடிப்படையில் தோழர் ஜோதிபாசுவிடம் காணப்பட்ட குணங்கள் என்ன...?
 
# வசதி படைத்த குடும்பத்தில் பிறந்து இலண்டனில் உயர்ந்த கல்வி பெற்றிருந்தாலும், உழைப்போருக்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்டார்.
#  அரசாங்க நிர்வாகத்தில் நியாயமாகவும் பாரபட்சமின்றியும் செயல்பட்டார்.
# இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது தேசத்தின் பல பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்ற பொழுது, மேற்கு வங்கத்தில் ஒரு கலவரம் கூட நடக்காமல் உத்தரவாதப்படுத்தினார்.
# மேற்குவங்கத்தில் சுமார் 20 சதவீதம் பேர் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்தபொழுதும் பாபர்மசூதி இடிப்பிற்கு பின்னர் ஒரு கலவரம் கூட நடக்காமல் இருப்பதை உத்தர வாதப்படுத்தினார்.
# அவருடைய 23 ஆண்டுகால ஆட்சியினால், கொல்கத்தா நகரில் உலகிலேயே குறைந்த விலையில் உணவும், போக்குவரத்து வசதியும் உருவானது.
# மேற்குவங்கத்திலும் சரி, கொல்கத்தா நகரிலும் சரி எவர் ஒருவரும் வந்து வாழலாம்! எவரும் சாதி அல்லது மதம் அல்லது மொழியின் பெயரால் ஒதுக்கப்படுவது இல்லை.
# தனது குடும்ப சொத்தின் பெரும் பகுதியை கட்சிக்கு கொடுத்துவிட்டார்.8தனது உடலையும் தானமாக கொடுத்தார்.
# அவரது கட்சி பிரதமர் ஆகும் வாய்ப்பை அவருக்கு மறுத்த பொழுதும் அதற்கு எதிராக தனது அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை.
        இந்த காரணங்களால் தான்  ஜோதிபாசு தலைசிறந்த முதல்வராக முதல் இடத்தை பிடிக்கிறார்.

தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் மூன்றாம் இடத்தைப் பிடிக்க காரணங்கள்  :

#  காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் அமைப்பாளர்.
#  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவர்.
#  இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவர்.
# இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வர்.
# உலகிலேயே தேர்தல் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் முதல்வர்.
# நிலச்சீர்திருத்தத்தை முதலில் அமல் படுத்தியவர். இதனால் தான் கேரளா ஒரு முன்மாதிரியாக இன்றும் உள்ளது.
# கல்வியையும் மருத்துவத்தையும் கேரளாவின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சென்றார். இதனால்தான் கேரளா சமூக முன்னேற்றத்தில் இன்றும் முதல் இடத்தில் உள்ளது.
# சட்டம் - ஒழுங்கை கண்காணிப்பதுதான் காவல்துறையின் பணி. நிலப்பிரபுக்களுக்கும் விவசாயிகளுக்கும் அல்லது முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளில் காவல்துறை தலையிடக்கூடாது எனும் கொள்கையை முதலில் உருவாக்கினார்.
# தம் சொத்து முழுவதையும் கட்சிக்கு அளித்தார்.
# தமது தேவைகளை (துணி துவைப்பது உட்பட) தானே கவனித்துக்கொண்டார்.
# அவர் எழுதி குவித்த அளவுக்கு வேறு எந்த முதல்வரும் எழுதவில்லை.
# நேருவுக்கும் அவருக்கும் நடந்த கருத்து மோதல்கள் இந்திய அரசியலின் புகழ் பெற்ற அரசியல் பாடங்கள். எனவே தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் மூன்றாம் இடத்தைப் பிடிக்கிறார்.
தோழர் மாணிக் சர்க்கார் ஒன்பதாவது இடத்தைப் பிடிக்க காரணங்கள் :
 
#இந்தியாவின் மிகவும் ஏழ்மையான முதல்வர். அவரது வங்கி கணக்கில் உள்ள பணம் ரூ.1080 மட்டும்தான். 
#அவருக்கு சொந்தமாக ஒரு வாகனம் கூட கிடையாது.
# அவரிடம் அலைபேசி கிடையாது.
#முதல்வராக அவர் பெறும் ஊதியத்தை கட்சியிடம் கொடுத்துவிட்டு கட்சி தரும் ரூ.5000/- மட்டுமே பெறுகிறார்.
#மாணிக் சர்க்காரின் திறமை மற்றும் பொறுமை காரணமாக ஒரு எல்லை மாநிலத்தில் பூரண அமைதி நிலவுகிறது.
# காலம் காலமாக ஆதிவாசி மக்களும் ஆதிவாசி அல்லாதோரும் ஒற்றுமையுடன் திரிபுராவில் வாழ்கின்றனர்.
# திரிபுராவைப் பற்றி எவரும் கவலைப்படத் தேவையே எழவில்லை.
இதுவே மாணிக் சர்க்காரின் மிகப்பெரிய சாதனை.

# 1950களில் ஒருவர் நாணயமான அரசியல் வாதியாக இருந்ததைவிட இன்று அவ்வாறு இருப்பது மிகவும் கடினம். அக்கடினமான தேர்வில் மாணிக் சர்க்கார் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார். எனவே தோழர் மாணிக்சர்க்கார் ஒன்பதாவது இடத்தை பிடிக்கிறார். இவ்வாறு தனது ஆய்வை விவரிக்கிறார் விஜய்சிம்ஹா.
             தான் தனது பட்டியலை 10 என்பதற்கு பதிலாக 20 என உருவாக்கினால் கீழ்கண்ட 10 பேர் மேலும் இணைவர் என்கிறார் விஜய்சிம்ஹா.  அந்த அடுத்த 10 பேர் : 11. ஹரேகிருஷ்னா மெஹெதாப் 12. காமராஜர் 13. கோபிநத் போர்டொலொய் 14. ஜி.பி.பந்த் 15. ஒய்.பி.சவாண் 16. இராமகிருஷ்ண ஹெக்டே 17. பிரதாப்சிங்க் கைரோன் 18. பிஜூ பட்நாயக்
19. என்.டி..ராமராவ் 20. மோடி. குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு பின்னர் மோடிக்கு இதைவிட வேறு ஒரு இடம் தகுதியில்லை என்கிறார் விஜய்சிம்ஹா .ஒரு நியாயமான அடிப்படை வகுத்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர்கள் சிறந்த இடத்தை பிடிப்பர் என்பதை இது மீண்டும் ஒருமுறை தெளிவாக்குகிறது. இது அந்த பதவி வகித்த தோழர்களின் சாதனை மட்டுமல்ல. அவர்களை உருவாக்கிய கட்சியின் சாதனையும் கூட! ஒவ்வொரு தோழரும் பொதுவாழ்வில் இத்தகைய சாதனைகளை படைத்திட வேண்டும் என்பதே கட்சியின் நோக்கமாக உள்ளது. கட்சியின் செயல்முறையும் தோழர்கள் பெறும் பயிற்சியும் அதை நோக்கியே உள்ளது எனில் மிகை அல்ல.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

இந்திய நாட்டின் மாபெரும் தலைவர் தோழர். ஜோதிபாசு நினைவைப்போற்றுவோம்....!

        
 
  சுதந்திரப்போராட்ட வீரர், உழைப்பாளி மக்களின் தோழன், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல்கொடுத்த போராளி,  உலகிலேயே அதிக ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றிய மக்கள் ஊழியன், இந்த தேசத்தின் சரியான அரசியல் பாதைக்கு வழிகாட்டிய கலங்கரைவிளக்கம், இந்திய நாட்டின் மாபெரும் தலைவன் 
  தோழர் ஜோதிபாசு 
      நினைவைப் போற்றுவோம்....
‘கடுமையான  பணி காத்திருக்கிறது’  
 
            அனைத்துக் கட்சிகளையும் ஒப்பிடும் போது மார்க்சிஸ்ட் கட்சிதான் மிகுந்த ஜனநாயக உணர்வு கொண்ட கட்சி என்று நான் எப்போதுமே கூறி வந்துள்ளேன். கட்சி மட்டத்தில் நாங்கள் எல்லாவற்றையும் பற்றி விவாதிப்போம். இதன் மீது எடுக்கப்படும் எந்தவொரு முடிவையும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு, அனைவராலும் நிறைவேற்றப்படவும் வேண்டும். இதுதான் ஸ்தாபன கட்டுப்பாடு குறித்த எங்களது கருத்தாகும்.
          ஏகாதிபத்தியவாதிகள் அதிகமான அளவில் மூன்றாவது உலக வளரும் நாடுகளை இலக்காகக் கொண்டு வருகிறார்கள். ஆசியாவின் புலிகள் என்று கூறப்பட்ட நாடுகள் சரிந்து விழுந்துள்ளன. முதலாளித்துவ வெற்றிப்பாதையின் முன் உதாரணங்கள் என்று இந்த நாடுகளை சுட்டிக்காட்டிய வாதம் மிக மோசமான வகையில் தவறாகப் போனது. முதலாளித்துவப் பாதையின் மூலமாகத்தான் முன்னேற முடியும் என்று மூன்றாவது உலக வளரும் நாடுகளுக்கு முன் வைக்கப்பட்ட வாதம் பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
             “எங்களின் அனுபவங்களே எங்கள் பணிகளை எளிமையாக்கியது என்பது மிகையல்ல. அடிப்படையான மார்க்சிய - லெனினிய கோட்பாடுகளை மனதில் நிறுத்தி நாங்கள் செயல்பட்ட போதெல்லாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இது தான் இதுவரை நமது அனுபவம். இதன் பொருள் சமரசமாக நடந்து கொள்வது என்பது அல்ல. வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி நமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் இதன் உட்பொருளாகும்”.
        மூன்றாவது அணி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறி வருகிறது. நீடித்த இயக்கங்கள், மக்களின் ஈடுபாடு ஆகியவற்றின் மூலமாகத்தான் இதை உருவாக்க முடியும். முன்னெப்போதையும் விட இடதுசாரிகளின் பொறுப்பு என்பது மேலும் முக்கியமானதாக மாறியுள்ளது. நமக்கு முன்னே மிகவும் கடினமானதொரு போராட்டம் காத்திருக்கிறது. அதே நேரத்தில் இது அவசியமானதும் முக்கியமானதும் ஆகும். வரலாறு மிகப்பெரியதொரு பொறுப்பை நம் மீது சுமத்தியுள்ளது. இதுபோன்ற கடுமையான சோதனைகளின் மூலம் தான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி உருவாக முடியும். அத்தகைய அமிலச் சோதனைதான் நமக்கு முன்னே காத்திருக்கிறது.

-தனது சுய சரிதையில் தோழர் ஜோதிபாசு