பாராளுமன்றத்தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாராளுமன்றத்தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 மார்ச், 2014

மாற்றம் சாத்தியமே - அதுவே இந்தியாவின் இன்றைய தேவை...!


அ. சவுந்தரராசன், எம்.எல்.ஏ., அவர்களின் உரை...!

             எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்று சொல்வார்கள். அது போல இப்போது நமது எல்லா சக்திகளும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி என்று எண்ணி நாம் செயல்பட வேண்டிய நேரம் இது. நாடாளுமன்ற தேர்தலில் யார் என்ன செய்தார்கள் என்று பார்ப்பதில் தான் நாம் தீர்க்கமான முடிவிற்கு வர முடியும். நம்மைப் பொறுத்த வரையில் நாம் இந்த நாட்டின் உழைப்பாளி மக்களின், நடுத்தர வர்க்க மக்களின், தொழிலாளிகளின், விவசாயிகளின், ஏழை எளிய மக்களின், மிகப் பெரும்பான்மை மக்களின் வாழ்கைக்கான தேவைகளை நிறை வேற்றுவதற்கான கொள்கைகளை பின் பற்றுபவர்களாக, பெரு முதலாளிகளுக்கு சாதகமாக இல்லை என்பதான கொள்கைகளை பின்பற்றுபவர்களாக இருக்கிறோம்.
           மாருதியில் ஒரு அதிகாரி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி தொழிற்சங்கத்தை முடக்குவதற்காக 147 பேரை சிறையில் அடைத்து வைத்துள்ள சம்பவத்தை எடுத்துக் கொண்டால், அவர்களை ஜாமீனில் விடும்படி கோரிநீதிபதியை அணுகினால், நீதிபதி சொல் லக் கூடிய காரணம் இன்றைய உலகமயச் சூழலில், இவர்களை வெளியேவிட்டால் வெளி நாடுகளில் இருந்து வர வேண்டிய மூலதனம் இந்தியாவிற்குள்ளே வராது என்பதாகும். நீதிமன்றமே பிரச்சாரத்தை நடத்துகிறது. தொழிலாளி தன்னை ஒன்றுபடுத்திக் கொள்வதை, ஒரு சக்தியாக்கிக் கொள்வதை, இன்றைய உலகமய சமூகம் ஏற்காது, இன்றைய சட்டம் ஏற்காது. நீதிகள் ஏற்காது. ஸ்ரீபெரும்புதூரிலே, சென் னையிலே எத்தனை தாக்குதல்களை சந்தித்துள்ளோம் என்று அறிவோம். ஆகவே, நம்முடைய பலத்தை நாம் நிலை நிறுத்திக் கொண்டால்தான் நமக்கென்று இருக்கின்ற உரிமைகளைக் கூட நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.எதைச் செய்தாலும், எந்த நடவடிக்கை எடுத்தாலும், அது முதலாளிகளுக்கு இறுதியில் நன்மையை அளிக்க வேண்டும் என்ற வகையில்தான் ஆட்சி யாளர்களால் கொள்கைகள் உருவாக்கப் பட்டு பின்பற்றப்படுகின்றன.
           அன்றைக்கு பொதுத்துறைகளை உண்டாக்கி யதும், இன்றைக்கு அவற்றை சிதைப் பதும் முதலாளிகளுக்காகத்தான். அன்றைய முதலாளிகள் சிறிது பலவீன மானவர்களாக இருந்தார்கள். ஆகவே பொதுத்துறை தேவைப்பட்டது. பொது மக்களின் பணம் தேவைப்பட்டது. அதன் மூலம் கட்டமைப்புகள் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் மின்சாரம், போக்குவரத்து போன்ற கேந்திரமான துறைகள் அரசு மட்டுமே நடத்தப்பட வேண்டிய துறைகள் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இப்போது முதலாளிகள் பலத்தைப் பெற்ற பிறகு அவற்றை அவர்கள் கையில் கொடுத்துவிடுவோம் என்ற கொள்கை நிலைப்பாடு. அதிகமான விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும், இன்று இரயில்வே உட்பட அனைத்துக் கேந்திரமான துறைகளிலும் தனியாரை அனுமதிப்பதும், அவுட் சோர்சிங், காண்டிராக்ட் என்றுதனியார்மயப்படுத்தும் முயற்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதே போல கனரகத் தொழிற் சாலைகளில் தீர்மானிக்கும் சக்தியாக அரசு இருக்க வேண்டும் என்ற நிலைமாறி தனியார் கைகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சி தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
               1968-69ம் ஆண்டுகளில் பெட்ரோலியத் துறை தனி யாருக்குப் போய்விடக் கூடாது என்பது முடிவாக இருந்தது. கேந்திரமான ஒன்று மக்களுக்கு அவசியம், நாட்டிற்கு அவசியம், பொருளாதாரத்திற்கு அவசியம், சமூக இயக்கத்திற்கு அவசியம் என்று இருக்கின்ற எந்த ஒரு பொருளையும் தனியாரின் ஆதிக்கத்திற்கு விடக்கூடாது என்றிருந்தது. எனவே, அது தனியார் கையில் செல்லக்கூடாது என்று சொல்லப்பட்டது. பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்றவை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பட்டன. ஆனால், இன்று நிலைமையே வேறு. இயற்கை எரிவாயுவில் ஓஎன்ஜிசியை விட ரிலையன்சிடம் அதிகமாக உள்ளது. ரிலையன்ஸ் உட்பட பலதனியார் நிறுவனங்கள் பல இலட்சக் கணக்கான கோடி ரூபாயை உபரியாக பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இரண் டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ரிலையன்சுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது. பிஜேபியை எடுத்துக் கொண்டால் பெரு முதலாளிகளுக்குச் சாதகமான இது போன்ற விஷயங்களில் ஒரு சிறு முணுமுணுப்புக் கூட கிடையாது என்பது தான். காரணம் இரண்டு கட்சி களுமே பெரு முதலாளிகளைப் பொறுத்த வரையில் ஒன்றுபோல் தான் உள்ளன. அதே போல கேந்திரமான துறைகளிலே தனியார்மயம் தேவை என்பதிலும் ஒரே நிலைப்பாட்டினையே கொண்டுள்ளன.இரும்பு, செம்பு போன்றவற்றில் எல்லாம் அரசின் கட்டுப்பாடுகள் இருந் தன.
மின்சாரத் துறையிலும் தனியார்மய முயற்சி. 60 முதல் 70 சதமானம் உற்பத்தி என்பது நம் கையில், அரசின் கையில் இருக்குமானால் முதலாளிகள் மிரட்டுகிறார்கள் என்று சொல்கின்ற நிலை இருக்காது. தமிழ்நாட்டில் 72 ஐடிஐ நிறுவனங் கள் அரசுக்குச் சொந்தமாக உள்ளன. கிட்டத்தட்ட 700 ஐடிஐ நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற் றில் பெரும்பாலானவற்றில் மாணவர் களே இல்லை. இன்றைக்குத் தமிழகஅரசாங்கம் என்ன செய்து கொண் டிருக்கிறதென்றால், இந்த தனியார் நிறுவனங்களில் படிக்கும் மாணவர் களுக்கான செலவினை அரசாங்கமே அவர்களுக்கு வேண்டிய கட்டணத்தை கொடுத்துவிடும். தனியாரிடம் படிப் பதற்கு அரசாங்கம் பணம் கொடுக்கும் என்பதை விட உயர்ந்த தரத்தோடு உயர்ந்தகட்டமைப்போடு வேண்டிய ஆசிரியர்களோடு வேண்டிய உபகரணங் களோடு அரசாங்கமே ஐடிஐ நிறுவனங்களை நடத்த முடியும். ஆனால்,அப்படி செய்வதில்லை. அதேபோல் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் இதேநிலைதான். எல்லா கல்வி நிறுவனங் களையும் நாட்டுடைமையாக்குகிறோம் என்று அறிவிக்கின்ற கொள்கையாவது அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும்.தாராளமயம் என்றால் என்ன? அரசு எந்தவிதமான பொறுப்பையும் எடுத்துக் கொள்ளாது என்பது தான் தாராளமயம். சந்தை எதை வேண்டுமானாலும் தீர் மானித்துக் கொள்ளும். அதில் அரசு தலையிடாது. அரசு மக்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம் போன்ற அடிப் படை வசதிகளை அளிப்பதில் தலை யிடாது என்பது தான் தாராளமயம். முத லாளிகளுக்கு தாராளம் - ஏழைகளுக்கு ஏமாற்றம் என்பதுதான் தாராளமயம். கட்டுப்பாடு என்பதே இருக்காது என்பது இருக்கக்கூடாது.
                 அப்படி இருந்தால் வசதிபடைத்தவர்கள் மேலும் வளர்வதும், ஏழை எளிய மக்கள் மேலும் நசிவதும் தடுக்கப்பட முடியாமல் போய்விடும்.யார் இந்த நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்? பல்வேறு ஏமாற்றுக் கோஷங்களை வைத்து ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் வலுப்பட வேண்டுமென்றால், தொழிலாளிகளின் எண்ணிக்கை விவசாயிகளின் எண்ணிக்கை வலுப் படுத்தப்பட வேண்டியுள்ளது. நாடாளு மன்றத்திலே நமக்கு சாதகமாக ஒரு சிறு மாற்றத்தை ஒரு சிறு திருப்பத்தை கொண்டு வர முடியும் என்றாலும் அதை யும் நாம் பயன்படுத்த வேண்டும் என்பது நமது நிலைப்பாடு. விளைவைப்பற்றி கவலைப்படாமல் தாராளமயக் கொள்கையை அமலாக்கி வரும் காங்கிரஸ் கட்சி. ஊழல் என்பதே தாராளமயத்தின் நேரடியான பலன், நேரடியான விளைவு. எந்த கட்டுப்பாடும் இன்றி வர்த்தகம் செய்யலாம், வியாபாரம் செய்யலாம் என்ற அரசாங்கக் கொள்கை. எதை வேண்டுமானாலும் பணத்தைக் கொண்டு சாதிக்கலாம் விலைக்கு வாங்க முடியும் என்ற கொள்கையின் விளைவு. அதை எதுவும் கட்டுப்படுத்தாது என்ற கொள்கை. அலைக்கற்றை ஊழல் -. 1,76,000 கோடி ஊழல்.
முதலாளிகள் எல்லோரும் கூட்டாக சேர்ந்து கொண்டு அரசாங்கத்துடன் கை கோர்த்து நடத்திய கொள்ளை. ஊழலைப் பொறுத்த வரையில் பாரதீய ஜனதா கட்சியை எடுத்துக் கொண்டால் அதற்கு கடுகளவும் மாற்றுக் கருத்து கிடையாது. இரண்டு கட்சிகளுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. நிலக்கரியை சூறையாடுவது, இந்தநாட்டின் கனிம வளங்களை, இயற் கை வளங்களை சூறையாடுவது என்றுஊழல் தொடர்கிறது. தமிழ்நாட்டின்கனிம வளங்களை இந்த நாட்டின் கனிம வளங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்குமானால், அரசாங்கத்திற்கு மக்களுக்குத் தேவை யானவற்றை நிறைவேற்ற தேவை யான ஆதாரங்கள் இருக்கும். வங்கிகள் உட்பட அனைத்தையும் தனியார்மயப்படுத்துவோம் என்பது அர சின் நிலைப்பாடு. வக்கீல்கள் கூடவெளி நாட்டிலிருந்து வந்து வாதாடி விட்டுப் போகலாம் என்று இன்று யோசிக் கிறார்கள். அவரவருக்கு வரும் போது மட்டும் அந்தந்த பகுதியினருக்கு கோபம் வருகிறது. இது மாற்றப்பட வேண்டும். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் அல்லாமல் ஒருவரை யொருவர் சார்ந்து பலர் சேர்ந்து நடைபெறக்கூடிய ஒரு ஆட்சி அமையு மானால்தான் ஏதாவது ஒரு கட்டுப் பாட்டினை கொண்டு வர முடியும். ஒரே யடியாக முதலாளிகளுக்கு சாதகமாக இல்லாமல் சிறிதளவாவது சாதாரண மக்களுக்கு சாதகமாக, வேலையில்லாத் திண்டாட்டம் உட்பட்ட அனைத்துப் பிரச் சனைகளிலும் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இரண்டும் அல்லாத இன்னொன்றை உருவாக்க வேண்டியுள்ளது.
               அதற்கு நாம் முயற்சி செய்கிறோம். ஆனால் என்ன பிரச்சாரம் செய்யப் படுகிறதென்றால் பலமான நிலையான ஆட்சி வேண்டும் என்று. அது யாருக்குத் தேவை சாதாரண மக்களுக்கா?முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது இடதுசாரிகளுடன் ஆதவுடன் இருந்தது என்பதால் நினைத்த தையெல்லாம் செய்துவிட முடிய வில்லை. ஆனால் இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் போய்விட்டது. கட்டுப்பாடு இருக்கும் போது நம்மால் ஏழை-எளிய மக்களுக்கு சாதகமான சில விஷயங்களை செய்ய முடியும் என்பதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் 1 சான்று. அமெரிக் காவிற்கே நாட்டை அடமானம் வைக்கும் நிலைக்கு வந்தபோது தான் நாம் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தோம். அப்படிப் பட்ட வலுவான சக்தியாக நாம் தற்போது உருவாக வேண்டும். அதேபோல அப் போது நமக்கு அமைச்சர் பதவிகள் உட் பட பல சலுகைகளை அளிக்க முன் வந்தபோது நாம் அதனை ஏற்கவில்லை. மக் களுக்கு சாதகமான சில விஷயங்களை அமலாக்க வேண்டும் என்பதில் தான்நாம் குறியாக இருந்தோம். இது தான்இடதுசாரிகளின் நேர்மை. ஆனால் இன்று திமுகவும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளது. இது கிண்ட லுக்கும் கேலிக்கும் உரியதாக மாறியிருக் கிறது. அனைத்து நாடுகளிலும் எப்போது தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வீதிக்கு வந்தார்களோ அப்போதுதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தேர்தல் என்பது இப்போது வருகிறது. நாம் நமது சொந்தபலத்துடன் இருக்க வேண்டும்.
             தொடர்ச்சியாக நாம் செய்ய வேண்டியது பொது வான பிரச்சனைகளின் மீது மக்களை அணி திரட்ட வேண்டும். பிஜேபி அல்லாத காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய வேண்டும்.வெண்மணி திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக தொழிலாளி மக்கள் திரண்டார்கள். சொந்தக்காலில் திரண்ட பெருங்கூட்டம் என்று பத்திரிகைகள் எழுதுமளவிற்கு தொழிலாளிகள் திரண்டனர். நம்முடைய வர்க்கத்தின் நன்மைக்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கான நிகழ்ச்சி என்ற அடிப்படையில் பெருந்திரளாக அணிதிரண் டனர். வர்க்கப் போரை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதற்கான சான்று. மாற்றம் முக்கியம்- மாற்றம் சாத்தியம்- மாற்றம் அவசியம் என்று சாதாரண மக்களை நம்மால் நெருங்க முடியும்.

புதன், 19 மார்ச், 2014

மு.க.ஸ்டாலின் விழுங்கிய சூடம்...!



கட்டுரையாளர் : க.சுவாமிநாதன்                             

              தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் “சில்லரை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டை என்றுமே தி.மு.க ஆதரித்ததில்லை” என்று ஓங்கி அடித்துள்ளார்.
                இவர் போகிற ஊரில் எல்லாம் இனிமேல் ஒரு சூடத்தை ஏற்றிவைத்து கையால் அடித்து சத்தியம் செய்வார் போலிருக்கிறது. ஒரு படத்தில் வடிவேல் வாய்க்குள் சூடத்தை ஒருவர் தட்டிவிட்டவுடன் வெந்துபோய் காதுகளில் எல்லாம் புகைவரும். அதுபோன்றுதான் ஸ்டாலினின் நகைச்சுவைக்கும் தூத்துக்குடி சில்லரை வியாபாரிகள் சிரித்திருப்பார்கள்.
சில்லரை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டிற்கு முதலில் பி.ஜே.பி யோடு கைகோர்த்து ரோடு போட்டவர்களே தி.மு.க காரர்கள்தான். முரசொலி மாறன் மத்திய வர்த்தக அமைச்சராக வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது மத்திய அமைச்சரவையில் சில்லரை வணிகத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கான குறிப்பை மாறன் முன்வைத்து அது ஏற்றுக் கொள்ளவும்பட்டது.
     ஆனால் இடதுசாரிகள் மற்றும் சிறுவணிகர்களின் கடும் எதிர்ப்பால் அமலாக்கப்படவில்லை. அப்போது பி.ஜே.பியின் மூத்த அமைச்சர் “ பெப்சி , கொக்க கோலா வந்தாலும் பெட்டிக்கடை சர்பத் காணாமலா போய்விட்டது? “என்று கேலி பேசினார். இப்படி பி.ஜே.பி வால்மார்டிற்கு வால்பிடித்தபோது சேர்ந்து ஒரு கை கொடுத்தது திமுக.
             மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்குத்தான் காங்கிரசுக்கு ஆதரவாக சில்லரை வணிகப் பிரச்சனையில் நாடாளுமன்றத்தில் கைதூக்கியதாக தூத்துக்குடியில் ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார். ஸ்டாலின் அவர்களே! நீங்கள் 1999-2004 காலத்தில் மதவாதத்திற்கு ஒரு கை.. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு இன்னொரு கை.. என்று தூக்கியதற்கு என்ன விளக்கம் தரப் போகிறீர்கள்?இடதுசாரிகள் ஆதரவோடு மத்திய ஆட்சி இருந்தபோது ஒரு தடவையாவது இடதுசாரிகள் அந்நிய முதலீடு, தனியார்மயம் போன்ற பிரச்சனைகளில் சமரசம் செய்ததுண்டா? சோதனை வந்த காலத்தில் யார் உறுதியாக அவர்கள் பக்கம் நின்றார்கள் என்பது சிறு வியாபாரிகளுக்கு தெரியும்.
                 மு.க.ஸ்டாலின் அவர்களே! ஊருக்கு ஏற்றாற்போல் எழுதிவைத்து பொய் சொல்லும் உங்களைப் பார்த்து சிறுவியாபாரிகள் சிரிக்கிறார்கள். தொண்டையில் உள்ள சூடத்தை வெளியே துப்பிவிடுங்கள். சுட்டுவிடப்போகிறது.
நன்றி :  


திங்கள், 17 மார்ச், 2014

இந்தியாவில் மாற்று அரசை அமைப்பதே நம்முன் உள்ள தலையாய கடமை...!

             
           ஆர்எஸ்எஸ்/பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்குத் தாங்களாகவே முன்வந்து தம்பட்டம் அடிக்கும் இந்திய கார்ப்பரேட்டுகளில் ஒரு பிரிவினர் அவரைத் துதிபாடுவதில் புதியதொரு உச்சிக்கே சென்றுள்ளனர். 1930-களில் ஜெர்மனியில் பாசிசமும் ஹிட்லரும் தலைதூக்குவதற்கு உலகளவில் முதலாளிகள் எப்படியெல்லாம் வெளிப்படையாகவே உதவினார்கள் என்பது தெரியும். உண்மையில் பாசிசம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள உலக முதலாளித்துவத்தின் பெரும்பகுதி (முதலாளிகளுடன் அரசின் ஒற்றுமை குறித்துப் பேசிய முசோலினியைப் போன்றே) ஹிட்லரின் தலைமையிலான பாசிசம் தங்களைக் காத்திடும் என்று கருதி அதனை வரவேற்றார்கள். 1939 மாபெரும் பொருளாதார மந்தம் காரணமாக சின்னாபின்னமாகிப் போயுள்ள உலகில் மீண்டும் தங்கள் கொள்ளை லாப வேட்டை தொடரஅவர் வழிவகுத்துக் கொடுப்பார் என்றுகருதினார்கள்.
          ஜெர்மன் யுத்த எந்திரத்தைக் கட்டி உருவாக்கியமை, அதனைத் தொடர்ந்து ராணுவத்தை இயக்குவதற்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகளின் தேவை, ராணுவ ரீதியிலான தொழில் வளாகம் மற்றும் அதனைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் ஆகியவை உலக முதலாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உலகின் செல்வ வளம் மிக மோசமான முறையில் அழிக்கப்பட்டது குறித்தோ, பல லட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியானது குறித்தோ அது சிறிதும் கவலைப்படவில்லை. கூடுதலாக, பாசிஸ்ட் அரசு மக்கள் மீது மிகவும் பயங்கரமான முறையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. இவற்றில் பெரும்பாலானவை வரலாற்றில் மிகவும் வேதனையுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஜனநாயக உரிமைகள் மற்றும் பிரஜா உரிமைகளை ரத்து செய்தல், குறிப்பாக ஸ்தாபன ரீதியாகச் செயல்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை ரத்து செய்தல் ஆகியவை இத்தகைய அடக்குமுறைகளில் அடங்கும். இவ்வாறு தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்பட்டதன் காரணமாக முதலாளிகளின் லாபம் என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்திற்குச் சென்றது.
          அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற பெரிய முதலாளித்துவ நாடுகள், தங்கள் நாடுகளின் சொந்த முதலாளித்துவ வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்காக, பாசிஸ்ட் ஜெர்மனியின் உலக ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக உருவான பாசிஸ்ட் எதிர்ப்புக் கூட்டணியில் இணைந்தன.
               குறிப்பாக சோவியத் செஞ்சேனை ஸ்டாலின்கிராடில் நடைபெற்ற முதல் தீர்மானகரமான வெற்றியின்போது தனியாகவே பாசிஸ்ட்டுகளின் வெறியாட்டத்தை வீரத்துடன் எதிர்த்து முறியடித்த போது, அதனுடன் இணைந்து கொண்டன. பாசிசத்தை முறியடித்ததில் சோவியத் யூனியன் தீர்மானகரமான முறையில் ஆற்றிய பங்களிப்பு உலக வரலாற்றின் ஒளிமிகுந்த அத்தியாயமாகும். அன்றைய தினம் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி போன்றே இன்றைய தினமும் உலக முதலாளித்துவத்திற்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், 2008-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தம் இன்றளவும் தொடரக்கூடிய நிலையில், இந்திய கார்ப்பரேட்டுகள் தங்கள் கொள்ளை லாபவேட்டையைத் தொடர்வதற்கு சிறந்ததொரு வாய்ப்பாக இந்தியாவில் உள்ள மதவெறி பாசிஸ்ட் எந்திரமான ஆர்எஸ்எஸ்/பாஜக-வைத்தான் பார்க்கின்றன. அவற்றிற்கு நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு குறித்தோ அதிலும் குறிப்பாக மக்கள் இடையே சமூக நல்லிணக்கம் இருந்திட வேண்டும் என்பதிலோ கொஞ்சமும் கவலையில்லை, எப்படியாவது தங்கள் கொள்ளை லாபவேட்டை தொடர வேண்டும் என்பதேயாகும்.
              இதன் காரணமாகவே தங்களுக்கு ஒரு `வலுவான தலைவர்’ தேவை என்கிற ரீதியில் அவை கூப்பாடு போடுகின்றன. இதன் சமீபத்திய எடுத்துக்காட்டுதான் இந்தியப் பங்குச் சந்தையின் சமீபத்திய ஏறுமுகமான காட்சியாகும். உலக அளவில் மிகவும் சோகமாக உள்ள பங்குச்சந்தை இந்தியாவில் மட்டும் தன்னுடைய 22 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்திற்கு சென்றிருக்கிறது. தேசிய அளவிலான பங்குச் சந்தையும் புதிய ரிக்கார்டை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியக் கார்ப்பரேட்டுகள் ஒரு முக்கியமான நிதி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் மூலமாக தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கின்றன. அவர், “நரேந்திர மோடி தலைமையிலான தேஜகூ அரசாங்கம் மக்களவைத் தேர்தலுக்குப்பின் ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள்’’ இருப்பதாகக் கூறியிருக்கிறார். (இந்துஸ்தான் டைம்ஸ், மார்ச் 8, 2014)தங்கள் கொள்ளை லாபவேட்டை எவ்விதமான தடங்கலுமின்றி தொடர்வதில் தங்களுக்குள்ள பேரவாவின் காரணமாகவே இந்திய கார்ப்பரேட்டுகள் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களை விளக்கிடுவதில் ஒரு விரைவான தீர்வினைக் கண்டறிய முனைந்துள்ளன.
       இதுபோன்று கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது. 1998-ல் பிரதமராகப் பதவியேற்பதற்காக வாஜ்பாய் காத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஜெயலலிதாவின் ஆதரவுக் கடிதம் வருவதில் தாமதம் ஏற்பட்டபோது இவ்வாறு பம்பாய் பங்குச் சந்தை தள்ளாடியது. உண்மையில் அந்த சமயத்தில் கிழக்கு ஆசிய பொருளாதாரமே நிலைகுலைந்திருந்தது. மீண்டும் 2004ல் பம்பாய் பங்குச்சந்தை தள்ளாடியது. அப்போதும் அதற்கு உண்மையான காரணமான சர்வதேச நிதி கொந்தளிப்பான சூழல்தான் காரணம். ஆயினும் அதனை மறைத்துவிட்டு அப்போது ஐமுகூ-1 அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் இடது சாரிக்கட்சிகள் வெளியிலிருந்து அளித்துவந்த ஆதரவுதான் காரணம் என்று பிரச்சாரம் செய்தனர். அப்போது இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் விடுத்த சில அறிக்கைகள் “சந்தைக்கு ஏற்புடையதாக இல்லை’’ என்று அவர்களால் குறை கூறப்பட்டது.
            வாஜ்பாய் தலைமையில் தேஜகூட்டணி ஆட்சிக்கு வருவதை இடதுசாரிக் கட்சிகள் தடுத்துவிட்டன என்று சில கார்ப்பரேட்டுகள் அறிவித்தன. அதேபோன்றுதான் இன்றும், சர்வதேச அளவில் சந்தைகள் மிகவும் மோசமான முறையில் தள்ளாடிக் கொண்டிருப்பதை இவை பார்க்க மறுத்து கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றன. வால் ஸ்ட்ரீட் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக ஆட்டங் கண்டுள்ளது. இருந்தபோதிலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் உலக அளவில் வேறு நாடுகளில் முதலீடுகளைச் செய்திட முன்வந்துள்ளார்கள். இதன் காரணமாக அவர்கள் இந்தியாவில் பெரிய அளவில் முதலீடுகளைச் செய்து வருகிறார்கள். ஆயினும், உக்ரைன் நெருக்கடியை அடுத்து ஐரோப்பா மற்றும் ஆசிய சந்தைகளிலிருந்து வரும் எதிர்மறையான செய்திகளாலும், சீனாவிலிருந்து வரும் உள்நாட்டு பொருளாதார விவரங்கள் ஆர்வத்தைக்குலைக்கக் கூடிய விதத்தில் இருப்பதாலும் இவ்வாறு அமெரிக்க முதலீட்டால் ஏற்பட்ட மகிழ்ச்சி நீடித்திருக்க முடியவில்லை.
             அவற்றின் தாக்கம் ஏற்கனவே உலக அளவில் பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டது. விரைவில் இந்தியச் சந்தைகளையும் பிரதிபலித்திடும். மேலும் பங்குச்சந்தை விவரங்கள் உள்நாட்டுப் பொருளாதார அடிப்படைகளுக்கும் விடையளித்தாக வேண்டும். நிதி அமைச்சரின் கூற்றின்படி 18 மாதங்களுக்குப் பின்னர் இப்போதுதான் ரூபாய், டாலருக்கு எதிராக வலுப்பட்ட நிலையில் இருக்கிறது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றிற்கு இடையேயான இடைவெளி) யிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆடம்பரப் பொருள்கள் இறக்குமதியில் தடைகள் விதித்திருப்பதன் மூலம் இது சாத்திய மாகி இருக்கிறது. இதைத்தான் இடது சாரிக் கட்சிகள் வெகுகாலமாக சொல்லி வந்தன. இப்போதாவது இதனை அரசாங்கம் செய்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்வோம். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களும், அவை குறைந்த அளவில் இருந்தாலும் கூட, நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கடும் விளைவுகளை ஏற்படுத்திடும். உலக அளவில் கார்ப்பரேட்டுகளுக்குக் கடும் பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் கூட அந்தப் பாதிப்புகள் இந்தியக் கார்ப்பரேட்டுகள் மீது பாயாதவாறு ஐமுகூ-2 அரசாங்கம் அவர்களைப் பார்த்துக் கொண்டது.
          உலக அளவில்பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த போதிலும் இந்திய கார்ப்பரேட்டுகளின் வருமானத்தில் எந்த ஆண்டிலும் வீழ்ச்சி ஏற்படவில்லை என்று ஒரு முன்னணி முதலீட்டு வங்கியின் மேலாண் இயக்குநர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 5.72 சதவீதம் லாபம் ஈட்டியிருக்கிறது. அதேபோன்று டெல்கோ, பார்தி ஏர்டெல், 5.5 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 6 சதவீதமும் லாபம் ஈட்டியிருக்கின்றன. இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு இந்திய அரசாங்கம் சலுகைகளை வாரி வழங்கியிருக்காவிட்டால் இந்நிறுவனங்களுக்கு இவை சாத்தியமாகி இருக்காது. இத்தகைய சலுகைகளை மேலும் அபரிமிதமான முறையில் தங்களுக்கு அளிக்கக்கூடிய ஒரு `மீட்பரைத்தான்’ இந்திய கார்ப்பரேட்டுகள் எதிர்பார்க்கின்றன.
             இவர்களில் கணிசமானவர்கள் ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் மோடியால் சலுகைகள் அளிக்கப்பட்டவர்களாவார்கள். தகவலறியும் சட்டத்தின் கீழ் வெளிக்கொணரப்பட்ட பல உண்மைகளை ஹார்ட்நியூஸ் 2012 ஜூலை வெளியான செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. அதன்படி சூரத் அருகே ஹசிரா தொழிற்சாலை மண்டலத்தில் நிலக்குழு நிலத்தின் மதிப்பு சதுர மீட்டர் 950 ரூபாய் என்று நிர்ணயம் செய்திருக்கும் நிலத்தினை மோடி அரசு சதுர மீட்டர் ஒரு ரூபாய் என்ற முறையில் 8 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை எல் அண்ட் டி நிறுவனத்திற்கு வாரி வழங்கியிருக்கிறது. அதேபோன்று டாட்டா நானோ கார் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தின் சந்தை மதிப்பு சதுர மீட்டர் 10 ஆயிரம் ரூபாய் அளவிலானது. அதனை வெறுமனே சதுர மீட்டர் 900 ரூபாய்க்கு விற்றது. இவ்வாறு 1100 ஏக்கர் நிலம் விற்கப்பட்டது. அந்நிறுவனம் வங்கியிடமிருந்து 9570 கோடி ரூபாய் வெறும் 0.10 சதவீத வட்டி விகிதத்தில் அதனையும் 20 ஆண்டு காலம் கழித்துவழங்கக்கூடிய விதத்தில் பெற்றிருக்கிறது. எந்தவொரு நிதி நிறுவனமும் தான் மேற்கொள்ளவிருக்கும் திட்டத்தின் மொத்த செலவினத்தில் 100 சதவீதத்திற்கு மேல் கடன் கொடுக்காது.
              நானோ திட்டத்தின் மொத்த செலவின மதிப்பு 2200 கோடி ரூபாய்தான். ஆனால் அது 9570 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறது. இவைதவிர மானிய கட்டணத்தில் மின்சாரம், தண்ணீர் ஆகியவையும் மற்றும் பல வசதிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் விளைவாக குஜராத் அரசாங்கத்திற்கு 33 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நானோ கார் உற்பத்திக்கும் குஜராத் அரசாங்கம் வழங்கியிருக்கும் சலுகை என்பது 60 ஆயிரம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதேபோன்று தான் மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதான் `வீரியம் மிகுந்த குஜராத்’’ உண்மை நிலையாகும். அதே சமயத்தில் நாட்டிலேயே மக்களின் வறுமை விகிதம் மிக அதிகமாக இருக்கும் மாநிலம் குஜராத் மாநிலம் தான். சுமார் 4 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடையாது. மோடி அரசாங்கத்தின் கீழ் 9829 தொழிலாளர்கள், 5447 விவசாயிகள், 919 கூலிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
            மாநில அரசின் கடனும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 2008-09ம் ஆண்டில் 87,010 கோடி ரூபாயாக இருந்த கடன், 2009-10ம் ஆண்டில் 98,528 கோடி ரூபாயாகவும், 2010-11ல் 1 லட்சத்து 12 ஆயிரத்து 462 கோடி ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது. எனவேதான் கார்ப்பரேட்டுகள் மோடியை தங்கள் `இதயக்கனி’யாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். மக்களின் வாழ்க்கைத்தரம் கடுமையாக சீரழிந்துள்ளதைப்பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. இந்தியக் கார்ப்பரேட்டுகளின் எதிர் பார்ப்புகள் ஒருவேளை ஈடேறுமானால் என்னாகும்? நாட்டில் மதவெறி வன்முறை நடவடிக்கைகளும் சலுகைசார் முதலாளித்துவமும் இணைந்து மெகா ஊழல்கள் உருவாகும். இதன் விளைவு மிகவும் கொடூரமாக இருக்கும். மனித உரிமைகள், பிரஜா உரிமைகள் நசுக்கப்படும். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சமூக நல்லிணக்க மாண்பே கடும்பாதிப்புக்கு உள்ளாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைத் தரம் கடும் வீழ்ச்சிக்கு உள்ளாகும்.
         எனவே நாட்டிற்குத் தேவை காங்கிரஸ் மற்றும் பாஜக பின்பற்றி வந்த கொள்கைகளிலிருந்து மாறுபட்ட, மாற்றுக் கொள்கைத் திசைவழிதான். அதன்மூலமாக மட்டுமே பொருளாதார வளர்ச்சியும் அதனுடன் அனைத்துப் பகுதி மக்களின் பொருளாதார வளமும் அதிகரித்திடும். ஒருசிலரை மட்டும் ஒளிரச்செய்திடும் கேடுகெட்ட கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திட முடியும். இத்தகைய மாற்றுக் கொள்கை சாத்தியமானது மட்டுமல்ல, நடைமுறைப்படுத்தக்கூடியதுமாகும். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்த லின்போது இதனை அடையும் விதத்தில் மாற்று அரசாங்கத்தை அமைப்பதே நம்முன் உள்ள கடமையாகும்.
தமிழில் : ச.வீரமணி
நன்றி :      
 
People's Democracy

சனி, 1 மார்ச், 2014

கண்டம் விட்டு கண்டம் பாயும் மோடியின் சித்து வேலைகள்...!

                              
                அமெரிக்க பத்திரிகை ஒன்றுதான் முதன்முதலாக இந்தியப் பிரதமராக தகுதியானவர் மோடியா, ராகுலா என்ற ''ஆரோக்கியமற்ற, ஜனநாயக விரோத'' விவாதத்தை கிளப்பிவிட்டது. இந்தப் பின்னணியில்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு அத்வானி வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துமாறு பாஜகவுக்கு உத்தரவிட்டது.
          அன்று துவங்கி மோடி தான் பிரதமர் என்கிற பிரச்சார சுனாமியை பாஜக மட்டுமல்ல, கார்ப்பரேட் ஊடகங்களும், வாடகைக்கு அமர்த்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களும் காது ஜவ்வை கிழிக்கும் வகையில் செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் கூட வைகோ, தமிழருவி போன்றவர்கள் மோடி அலை நாடு முழுவதும் வீசுகிறது என்று புல்லரித்து புளகாங்கிதம் அடைந்தார்கள். பல்வேறு தளங்களில் இந்த மோசடிப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
            நாட்டில் எங்கும் மோடி அலை வீசவில்லை. மாறாக கோடை காலத்தின் துவக்கமாக வெப்பஅலை தான் வீசத்துவங்கியுள்ளது. இந்நிலையில் வியாழனன்று வெளிவந்த நாளேடுகளில் ''பாஜகவுக்கு 63 சதவீத இந்தியர்கள் ஆதரவு - அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்'' என்ற செய்தி பிரதானமாக இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘பெவ்’ என்ற நிறுவனம் தான் இந்த ஆய்வை நடத்தியதாம். அவர்கள் நடத்திய ஆய்வில் பத்தில் ஆறு பேர் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றும் பத்தில் இரண்டு பேர் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் இந்த நிறுவனத்திடம் கூறினார்களாம்.
             விரிந்து பரந்த இந்தியாவின் வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது 81.4 கோடியாக உள்ளது. இது பல நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட பல மடங்கு உயர்வு. இவ்வளவு பெரிய வாக்காளர் எண்ணிக்கை கொண்ட இந்தியாவில் அமெரிக்க நிறுவனம் 2464 பேரிடம் ஆய்வு நடத்திதாம். அவர்களில் 63 சதவீதம் பேர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார்களாம்.
            மூளை வேலை செய்கிற யாரும் இத்தகைய முட்டாள்தனமான ஆய்வுகளை ஏற்றுக் கொள்வார்களா? இந்த செய்தியை மிகப்பெரிய செய்தியாக வெளியிட்டு இந்திய பத்திரிகைகளும் தங்கள் மோடிவிசுவாசத்தையும், அமெரிக்க விசுவாசத்தையும் ஒரு சேர காட்டிக்கொள்கின்றன. திறந்த வீட்டில் ஆளாளுக்கு நுழைந்து அகப்பட்டதை சுருட்டுவது போல யார் வேண்டுமானாலும் இந்த நாட்டில் நுழைந்து ஆய்வு நடத்தலாம். முடிவைத் தெரிவிக்கலாம். மக்களை திசை திருப்பலாம்.
             இதேபோன்று இந்திய நிறுவனம் ஒன்று அமெரிக்காவில் ஆய்வு நடத்தி அந்த நாட்டில் உப்புமாவுக்கு இருக்கும் மரியாதை கூட ஒபாமாவுக்கு இல்லை என்று செய்தி வெளியிட்டால் அந்த நாடு சும்மா இருக்குமா? இந்தியா என்றால் இளக்காரமா? இன்னொரு செய்தியும் பத்திரிகைகளில் வெளியானது. அது என்னவென்றால் ''மோடி பிரதமரானால் பொருளாதாரம் வளரும்'' என்று ''மூடிஸ்'' தரச்சான்று நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளதாம்.
          சைபால் களிம்பு அரிப்பு, சொறியை நன்றாக குணமாக்கும் என்று தரச்சான்று வழங்குவது போல மோடிக்கு சான்று வழங்கியுள்ளது அந்த நிறுவனம். இதுவும் பிரபலமான நிறுவனம் தானாம். தொழில்துறையினருக்கு மோடி மிகுந்த நண்பனாகத் திகழ்வதால் பொருளாதாரம் வளரும் என்று மூடிஸ் என்கிற அந்த நிறுவனம் தனது ஆய்வை திறந்து காட்டியுள்ளது. இத்தகைய நிறுவனங்கள் பெருமுதலாளிகளால் நடத்தப்படுவதுதான்.
              டாடா எனும் பெருமுதலாளிக்கு நானோ கார் தொழிற்சாலை அமைக்க அடிமாட்டு விலைக்கு நிலம் கொடுத்த மோடி பதவிக்கு வரவேண்டும் என்றே முதலாளிகள் விரும்புகின்றனர். அம்பானிக்கு எதிராக தான் எடுத்த நடவடிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன? என்று தில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கேட்டதற்கு மோடி இன்று வரை வாய்திறக்கவில்லை. ஆனால் ஊர்ஊராகச் சென்று தசாவதாரம் கமலஹாசன் போல பல்வேறு கெட் -அப்புகளில் தோன்றி முழக்கம் செய்துகொண்டிருக்கிறார்.
           கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் பல்வேறு தருணங்களில் நிகழ்த்தப்பட்ட கருத்துத் திணிப்புகளை தகர்த்தெறிந்து இந்திய வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மோடி குறித்த மோசடியான பிரச்சாரப் புயலை இந்திய வாக்காளர்கள் புறந்தள்ளுவார்கள் என்பது உறுதி.
        அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் சரி, அனகோண்டா நிறுவனமாக இருந்தாலும் சரி அப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள் என்று அறிய இப்போதே ஆவலாக இருக்கிறது. 
-மதுரை சொக்கன்           
நன்றி :

புதன், 26 பிப்ரவரி, 2014

ஊழல் காங்கிரசை தூக்கி எறிவோம் - மதவெறி பாஜகவை தடுப்போம்...!

இந்திய குடியரசின் திசைவழியை தீர்மானிக்கும் தேர்தல்...!
ஊழல், மதவெறியை ஒழிப்போம்...! 
உண்மையான கூட்டாட்சியை அமைப்போம்...! 11 கட்சிகள் கூட்டாக பிரகடனம்

            வரவிருக்கும் 16வது மக்களவைத் தேர்தலையொட்டி நாட்டில் உள்ள 11 பெரிய கட்சிகள் இணைந்து தலைநகர் தில்லியில் கூட்டாகப் பிரகடனம் வெளியிட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
               நாடு 16வது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்காக மீண்டும் தேர்தலுக்கு செல்ல இருக்கிறது. இந்தியக் குடியரசின் எதிர்காலம் எந்தத் திசைவழியில் செல்ல வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பதற்கான தருணம் இது. கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி -2 அரசாங்கம் அனைத்துவிதமான பிரச்சனைகளையும், நாட்டு மக்களுக்கு கடும் துன்பங்களையும் இதுவரையில் கொடுத்து வந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை அடைந்தது மட்டுமல்ல, அது பணக்காரர்களுக்குச் சார்பாகவும் திருப்பி விடப்பட்டது.
              முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்துப் பொருட்களின் விலைவாசி உயர்வு மக்களின் வாழ்வைச் சூறையாடிவிட்டது. நாட்டில் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இளைஞர்கள் வேலையின்மையாலும் வேலையிழப்பாலும் மிகவும் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்குமா என்பதற்கான சூழலே இல்லை. பல லட்சக்கணக்கான பழங்குடியினர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். பெண்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, பாதுகாப்பற்ற சூழலில் வன்முறைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் என்பது நிர்வாகத்தில் புரையோடிப்போய்விட்டது.
           இதுவே மாற்றத்திற்கும், காங்கிரஸ் கட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவதற்குமான தருணமாகும். காங்கிரசுக்கு தானே மாற்று என்று கூறிக்கொண்டிருக்கும் பாரதீய ஜனதாக் கட்சியும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளிலிருந்து எந்தவிதத்திலும் மாற்றுக்கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை. இன்றைக்கு  பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் புரிந்துள்ள ஊழல்களும், பின்பற்றுகின்ற பொருளாதாரக் கொள்கைகளும் அக்கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதத்திலும் மாற்றுக்கட்சி என்று கூறமுடியாத வகையில்தான் இருக்கிறது. இரு கட்சிகளுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவைதான்.
            மேலும், பாஜக பின்பற்றும் தத்துவம் நாட்டைப் பிளவுபடுத்தக்கூடியதும், மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தக்கூடியதும், மதநல்லிணக்கத்திற்கு விரோதமானதும் ஒட்டுமொத்தத்தில் நம் மதச்சார்பற்ற ஜனநாயக வலைப்பின்னலையே ஆபத்திற்குள்ளாக்கக்கூடியதுமாகும். பாரதீய ஜனதாக் கட்சியும் மதவெறி சக்திகளும் தோற்கடிக்கப்படவேண்டும்; ஆட்சிக்கு வர முடியாத விதத்தில் தடுக்கப்பட்டாக வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதாக் கட்சிகும் மாற்றாக ஓர் அணி சேர்க்கையை உருவாக்கிடவேண்டும்.
            அது ஜனநாயகப்பூர்வமான மதச்சார்பற்ற, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கக்கூடிய விதத்தில் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மக்கள் ஆதரவு வளர்ச்சிக் கொள்கையைப் பின்பற்றக்கூடியதாக அமைந்திடவேண்டும்.
            இங்கே கூடியிருக்கிற 11 கட்சிகளைச் சேர்ந்த நாங்கள், ஆட்சியாளர்களால் ஏற்றப்பட்டுள்ள சொல்லொண்ணாத் துன்ப துயரங்களிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் ஒன்றிணைந்து பணியாற்றத் தீர்மானித்திருக்கிறோம். அதற்காக,
(1) அரசாங்கத்தில் ஊழலை ஒழித்திடவும், வெளிப்படைத்தன்மையை உத்தரவாதப்படுத்தவும் கூடிய விதத்தில் ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்திடவும்,
(2) நம் சமூகத்தின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, ஓர் உறுதியான மதச்சார்பற்ற மாண்பை நிலைநிறுத்திடவும்,
(3) தற்போது சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை ஒழித்துக்கட்டக்கூடிய விதத்திலும், சமூக நீதி, விவசாயிகளின் நலன்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய விதத்திலும் மக்கள் சார்ந்த வளர்ச்சிப்பாதையை மேற்கொள்ளவும்,
(4) அதிகாரத்தை மத்தியில் குவித்து வைத்திருக்கும் தற்போதைய நிலையை மாற்றி, அனைத்து மாநிலங்களுக்கும் உரிமைகளை உத்தரவாதப்படுத்தக்கூடிய வகையிலும், மிகவும் பின்தங்கியிருக்கும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கூடிய விதத்திலும் ஓர் உண்மையான கூட்டாட்சித்தத்துவத்தை உருவாக்கிடவும் தீர்மானித்திருக்கிறோம்.
               எங்களின் இத்தகைய முயற்சியுடன் நாட்டில் உள்ள இதர மதச்சார்பற்ற-ஜனநாயகக் கட்சிகளும், சக்திகளும் இணைந்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். நாட்டில் உள்ள அனைத்துப் பகுதி குடிமக்களும், எங்கள் கட்சிகளுக்கும், நாங்கள் முன்வைத்துள்ள கொள்கைகளுக்கும் தங்கள் ஆதரவினை நல்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். 
இவ்வாறு 11 கட்சிகளின் கூட்டுப் பிரகடனத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இதில், அஇஅதிமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, பிஜூ ஜனதா தளம், அசாம் கணபரிசத், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். 
          ஊழல் காங்கிரசை தூக்கி எறிவோம்...!             
          மதவெறி பாஜகவை தடுப்போம்...!                    
       மக்கள் நல மாற்று அரசை அமைப்போம்...!        

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

உள்ளத்தில் ‘இந்து ராஷ்ட்ரா’, உதடுகளில் வளர்ச்சி மந்திரம்...!

கட்டுரையாளர் : சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,             

           “இலக்கு ஒரு பக்கம், பார்வை எதிர்ப்பக்கம்”. இது எங்களது தலைமுறை இளமைக்காலத்தில் கேட்டு ரசித்த இந்தி திரைப்படப்பாடல். பி.ஜே.பி / ஆர்.எஸ்.எஸ்-ன் இன்றைய பிரச்சாரம் எனக்கு இந்தப் பாடலையே நினைவுபடுத்துகிறது. சகிப்புத்தன்மையற்ற, பாசிச இந்து ராஷ்ட்ரா என்ற இலக்கினை மத அடிப்படையிலான திரட்டல் மூலம் அடைவது ஆர்.எஸ்.எஸ்-ன் செயல் திட்டம். ஆழ்மனதில் உள்ள இந்த உண்மையான இலக்கினை மறைத்து, வளர்ச்சி, முன்னேற்றம் என்று பி.ஜே.பி மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது. எனினும், அதனுடைய இரட்டைத்தன்மை பல இடங்களில் தவிர்க்க இயலாத நிலையில் வெளிப்பட்டும் வருகிறது.

கூட்டாட்சித் தத்துவ முகமூடி!       

           நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில், வகுப்புவாத வன்முறை மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது பி.ஜே.பி அதைக் கடுமையாக எதிர்த்துத் தடுத்து நிறுத்தி விட்டது. கூட்டாட்சி நெறியினை அந்த மசோதா சிதைப்பதாகக் கூறியது. இடதுசாரிகள் எப்போதுமே வகுப்புவாதத்தை தடுப்பதற்கும், வகுப்புவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு மற்றும் நஷ்ட ஈடு விரைவில் கிடைப்பதற்கும், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உடனடியாக நீதி கிடைப்பதற்கும் வழிவகை செய்கின்ற இது போன்ற மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென்று தொடர்ந்து கோரி வந்திருக்கின்றனர். அதே நேரத்தில், மாநில அரசாங்கங்களின் உரிமைகளுக்கும், மத்தியில் கூட்டாட்சிக் கட்டமைப்புத் தன்மைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதிலும் இடதுசாரிகள் உறுதியாக உள்ளனர். பாரதீய ஜனதா கட்சி இந்த மசோதாவை எதிர்த்ததற்கு ஒரே காரணம் அதனுடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு எந்தவொரு பங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது தான். அது தான் பி.ஜே.பியின் உண்மையான கவலை. ஆனால், அதை மறைப்பதற்காக கூட்டாட்சி நெறிமுறைகளைக் காப்பாற்றும் காவலன் என்ற முகமூடியினை அது அணிந்து கொண்டது.

ஒற்றை அரசே இறுதி இலக்கு!             

         உண்மையில் கூட்டாட்சிக் கட்டமைப்பினைத் தகர்க்க வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ் / பி.ஜே.பியின் நோக்கம். எம்.எஸ். கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ் / பி.ஜே.பி கட்சியின் குருவாகக் கருதப்படுபவர். ‘இந்து ராஷ்ட்ரா’வினை உருவாக்குவதற்கான சித்தாந்தக் கட்டமைப்பினையும், ஸ்தாபனக் கட்டமைப்பினையும் உருவாக்கிக் கொடுத்தவர் இவர். 1939-ம் ஆண்டு இவர் எழுதிய ‘நாமும், நமது தேசமும் - ஒரு வரையறை’ என்ற நூலில் ”இந்து ராஷ்ட்ரா” கட்டுவது குறித்தும், சங் பரிவாரின் ஸ்தாபன அமைப்பு இந்து ராஷ்ட்ரா என்ற நோக்கத்தை எட்டும் வகையில் எவ்வாறு தகவமைக்கப்பட வேண்டும் என்றும் விவரித்துள்ளார்.
        அதில் அவர் இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் பேசும் கூட்டாட்சி நெறிமுறையினை குழி தோண்டிப் புதைத்துவிட வேண்டும் என்றும், அனைத்து “சுயேச்சையான” அல்லது “அரைகுறை சுயேச்சையான” மாநில அரசுகளை ஒழித்து விட்டு, நாடு முழுவ தற்குமான ஒற்றை அரசை உருவாக்கிட வேண்டும் என்றும் கூறுகிறார். அந்த ஒற்றை அரசின் பெயர் பாரதம் என்றும், ”ஒரே நாடு, ஒரே அரசு, ஒரே சட்டம், ஒரே தலைவர்” என்றுஅதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் நமது அரசியலமைப்புச் சட்டத்தினை மறுவரையறை செய்து, ஒற்றை அரசாங்கத்தின் கீழ் இந்த நாடு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். (1966ம் ஆண்டு எழுதிய ‘சிந்தனைக் கொத்து’ மூன்றாம் பதிப்பு, பக்கம் 227).

சந்தர்ப்பவாத சாகசங்கள்!               

         ஒரு பக்கம் பாரதீய ஜனதா கட்சி ஜார்க் கண்ட், சத்தீஸ்கர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் உருவானதற்கான பெருமை தன்னைச் சாரும் என்று கூறிக் கொள்கிறது. மறுபுறம், தெலுங்கானா விவகாரத்தில் இரட்டைநிலைப்பாட்டை எடுத்து வருகிறது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி, மொழிவாரி மாநிலங்களைபிரிக்கக்கூடாது என்று மிகத் தெளிவான நிலைபாட்டினைக் கொண்டுள்ளது. ஆர்.எஸ்எஸ்சும்பாரதீய ஜனதா கட்சி யும் தொடர்ந்து ”ஒரு நாடு,ஒரே மக்கள், ஒரே தேசம்” என்று ஒரு பக்கம்பேசிக் கொண்டே, மறுபுறத்தில், மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் சந்தர்ப்ப வாதத்தை அளவு மீறி கடைப்பிடித்து வருகின்றன.

குஜராத் ‘வளர்ச்சி’யின் லட்சணம்!                 

              அதே போலத்தான் “குஜராத் மாதிரி”யை முன்னிறுத்துவதும், வளர்ச்சி பற்றி பேசும் பிரச்சாரமும் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி கடைப்பிடிக்கும் தந்திரமேயாகும். மாநில அரசுகளின் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியிலும், அந்நிய நேரடி மூலதன வரவிலும், தொழிலில் பின்தங்கிய மாநிலங்களான ஒடிசாவிற்கும், சத்தீஸ்கருக்கும் கீழே தான் குஜராத் மாநிலம் உள்ளது என்று திட்டக்கமிஷன் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது. தனிநபர் வருமானம் என்ற அடிப்படையில் பார்த்தாலும், குஜராத் இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஆறாவது இடத்திலும், வறுமைக் குறியீட்டின் அடிப்படையில் ஐந்தாவது இடத்திலும், ஆயுட்காலத்தின் அடிப்படையில் எட்டாவது இடத்திலும் உள்ளது.
            மனிதவளக் குறியீட்டின் அடிப்படையில், இந்தியாவின் அனைத்து முக்கிய மாநிலங்களில், குஜராத் மாநிலம் பத்தாவது இடத்தில் உள்ளது. ஆரோக்கியத்திற்கான குறியீட்டின்படியும், கல்விக்கான குறியீட்டின் அடிப்படையில் பார்த்தாலும் குஜராத் ஆறாவது இடத்தில் தான் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளும், 55 சதவீத பெண்களும் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தான் ‘குஜராத் மாடல் வளர்ச்சி’. உண்மை இப்படி இருந்தும் கூட, “குஜராத்தின் வளர்ச்சி கதை” இந்திய கார்ப்பரேட் உலகினால் மிகவும் பாராட்டப்படுகிறது.

இந்து தீவிரவாதம்!                

           இந்துத்துவா தீவிரவாதக் குழுவின் முக்கியமான நபர்களில் ஒருவரான அசீமானந்தா பற்றிய ஒரு முகப்புக் கட்டுரையை ‘கேரவன்’ பத்திரிகை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. தற்போது சிறையில் உள்ள அவர் 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சம்ஜட்டா இரயில் குண்டு வெடிப்புச் சம்பவம், 2007ம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற மெக்கா மசூதி குண்டு வெடிப்புச் சம்பவம், அக்டோபர் 2007ல் நடைபெற்ற அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புச் சம்பவம் போன்றவற்றில் முக்கிய குற்றவாளி யாவார்.
மேலும் செப்டம்பர் 2006ல் மலேகா னிலும், 2008ல் மஹாராஷ்ட்ராவிலும் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டி ருப்பினும், இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்படவில்லை. இத்தகைய குற்றவாளி யைப் பற்றி பேசும்போது, ”அவருடைய இந்த தீவிரவாதத் தாக்குதல்கள் ஆர்எஸ்எஸ்சின் உயர்மட்டக் குழுவின் ஒப்புதலுடன் நடைபெற் றவை என்றும், தற்போது ஆர்எஸ்எஸ்சின் தலைவராக உள்ள மோகன் பகவத் அப்போது ஆர்எஸ்எஸ்சின் பொதுச் செயலாளராக இருந்தார்” என்றும் சுட்டிக் காட்டுகிறது.மேலும், “இதை கண்டிப்பாக நிறைவேற் றியே ஆக வேண்டும்.
ஆனால் இதையும் சங் பரிவாரையும் தொடர்புபடுத்திப் பார்க் கக்கூடாது” என்று மோகன் பகவத், அசீமானந்தாவிடம் கூறியுள்ளார். ‘கேரவன்’ ஏடு இன்னும் விரிவாகப் பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. அசீமானந்தாவிற்கு பக்க துணையாக உடந் தையாக இருந்தவர் ஆர்எஸ்எஸ்சின் சுனில் ஜோஷி. இவர் தான் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு சதிகளில் யார் யார் எங்கே கூடுவது, எங்கே குண்டு வைப்பது என்பது உட்பட அனைத்திற்கும் இணைப்புக் கயிறாக விளங்கியவர். இவர் டிசம்பர் 2007ல் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

குற்றமற்றவரா மோடி...?          

                   2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் நடைபெற்ற வகுப்புவாத படுகொலையின் போது, குஜராத் மாநில அரசின் முதலமைச்சராக இருந்த மோடிக்கும் இந்த மனிதப் படுகொலைகளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று சட்ட ரீதியாக ”குற்றமற்றவர்” என்று சான்றிதழ் பெறுவதற்காக இன்றைக்கு ஆர்எஸ்எஸ்சும், பாரதீய ஜனதா கட்சியும் கடுமையாக முயன்று வருகின்றன. பிப்ரவரி 2012ல் சிறப்பு புலன் விசாரணைக் குழு சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கையை தங்களுக்கு சாதகமான ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
                  ஆனால், அந்த அறிக்கை இவர்களுக்குச் சாதகமாக அப்படி எதையும் கூறி விடவில்லை. இந்த சிறப்பு புலன் விசாரணை குழு ஜாப்ரி வழக்கில், ஜூன் 2006ல் குல்பார்க் தாக்குதலில் ஏராளமான தடயங்கள் இருப்பதாகவும், அகம தாபாத் கலவரத்தின் போதும் இந்த தடயங்கள் எல்லாம் உண்மையானவை, சரியானவை என்றும் அபிப்பிராயம் கொண்டிருந்தது. ஆனால் இந்தத் தடயத்தை மட்டும் வைத்துக் கொண்டு சட்டப்படி குற்றம் சாட்டுவதற்கு வழியில்லை என்று மட்டும் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது இயலாமையினைத் தெரிவித்திருக்கிறது.
                 மேலும், உச்சநீதி மன்றத்திற்கு அமிக்கஸ் கியூரி (அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்புக்களுக்கு அப்பாற்பட்டு நீதி மன்றத்திற்கு உதவி செய்யும் நடுநிலையாளர்) அளித்த அறிக்கை நரேந்திர மோடிக்கு எதிராக உள்ளது. இந்திய குற்றப் பிரிவு 153ஏ, 153பி, மற்றும் 166 ஆகியவற்றின் அடிப்படையில் அவரை நீதிவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனஅந்த அறிக்கை கூறுகிறது. 2002ம் ஆண்டின்இறுதித் தீர்ப்பைப் பொறுத்தவரை 2002ம் ஆண்டு திட்டமிட்டு நடத்தப்பட்ட வகுப்புவாத மனிதப் படுகொலையைப் பொறுத்த வரையில் , உயர் நீதி மன்றங்களில் மறு பரிசீலனைக்கான மனுக்கள் பல இன்றைக்கும் நிலுவையில் உள்ளன. எனவே, ‘குற்றமற்றவர்’ என்ற சான்றிதழ் பெறுவதற்கான எந்த வாய்ப்பும் மோடிக்கு இல்லை.
மறந்து விட வேண்டுமாம்!
                  இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் 2002ஐப் பற்றி மறந்து விடும்படி மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் ஒரு வளமான எதிர்காலத்தை காண்பதற்காக 2002ம் ஆண்டை மறந்து விட வேண்டுமாம். ஆனால், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களில் இதே அளவுகோல் பொருந்தாதாம். மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசான நமது நாட்டில் ஆறாத சீழ் வடியும் புண் போல, 1984ம் ஆண்டு முதல் நமது மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருகிறது. நமது அண்மைக்கால நினைவில் இருக்கும் 2002ம் ஆண்டு மிகவும் மோசமா னது.
எப்போது நீதி வழங்கப்படுகிறதோ அப்போது தான் நமது குடியாட்சி சுத்தப் படுத்தப்பட்டு பலப்படுத்தப்படும். இந்த இரண்டு வழக்குகள் மட்டுமல்லாது வேறு பல வழக்குகளிலும் நீதி தொடர்ந்து தாமதப் படுத்தப்பட்டு வருகிறது. எனவே அது மறுக் கப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டில் நமது நாட்டிற்கு தேவைப்படுவது ஒரு மாற்று அரசியல் ஏற்பாடு. நீதி வழங்கப்படுவதற்கும், நமது குடியரசை பலப்படுத்துவதற்கும் அத்தகைய மாற்று அரசியல் ஏற்பாடு மிக மிக அவசியம்.
நன்றி : `ஹிந்துஸ்தான் டைம்ஸ், 10.02.2014
தமிழில் : ஆர். எஸ். செண்பகம்,திருநெல்வேலி