முதலமைச்சர் ரங்கசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதலமைச்சர் ரங்கசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

"டிஜிடல் பேனர்" போதையில் கூச்சமில்லாமல் திரியும் முதலமைச்சர்..!

  குப்பைத்தொட்டி போல் அருவருக்கும் புதுச்சேரி..                            















            இன்று ஆகஸ்ட் 4 - ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமிக்கு பிறந்தநாள். இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.  புதுச்சேரியே அல்லல்லோபடுகிறது. குப்பைத்தொட்டி போல் நாறுகிறது.  சுமார் இரண்டு கோடிக்கும் மேல் செலவு செய்து, ஊர் முழுதும் 25,000 க்கும் மேற்பட்ட டிஜிடல் பேனர்கள். விதவித மான கெட்டப்பில் பல அவதாரங்களை எடுத்து ரங்கசாமி ஆங்காங்கே காட்சியளிக்கிறார். சிவாஜி கணேசனும், கமல்ஹாசனும் தோற்று போய்விடுவார்கள். பல தமிழ் - ஆங்கில திரைப்பட நடிகர்கள் வேஷம் கட்டி நடித்த ஸ்டில்களில் அவர்களின் தலையை எடுத்துவிட்டு இவரது தலையை ஒட்டிவைத்து, இந்த பேனர்கள் சாலையின் இருப்பக்கங்களிலும் நிறுத்த பட்டிருக்கும். அதைப்பார்ப்பவர்களுக்கு வாந்தியே வந்துவிடும். அவ்வளவு அருவருப்பு. அவ்வளவு கோமாளித்தனம். இதைப்பார்க்கும் பொது 23 - ஆம் புலிகேசி திரைப்படம் தான் ஞாபகத்திற்கு வரும். நாளைய தலைமுறையினர் இந்த பேனர்களின் புகைப்படங்களைப் பார்த்தால் புதுச்சேரி முதலமைச்சர் பொழுது போகாமல் இப்படியெல்லாம் அலங்காரம் செய்து கொண்டு திரிந்திருக்கிறார் என்று நினைக்கக்கூடும்.     இதில் இவருக்கு சின்ன காமராசர் என்ற பட்டபேரு. இப்படி பேனர் வைத்து அவரை போற்றுவதை அவர் விரும்புகிறார். ஆனால் மக்கள் வசைபாடுகிறார்கள் என்பதை அவர் உணரவில்லை. இவரே இரவில் தன் நண்பர்களோடு சேர்ந்து நகர்வலம் வந்து இந்த பேனர்களை ரசிக்கிறார்.
               டிஜிடல் பேனர்கள் சுற்றுசூழலை பாதிக்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத ஒரு மாநில முதலமைச்சருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் இல்லையே என்பது தான் வேதனையாக இருக்கிறது.

வெள்ளி, 1 ஜூலை, 2011

புதுவை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட ரங்கசாமி

                     புதுச்சேரியில் தேர்தல் முடிந்து, ரங்கசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்று  2 மாதங்கள் ஆகியும் அரசு நிர்வாகம் செயல்படாமல் ஸ்தம்பித்து போயிருப்பது என்பது புதுவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில்  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் 15 இடங்களிலும் அதிமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. மொத்தமுள்ள 30 இடங்களில் இந்த அணி 20 இடங்களில் வெற்றி பெற்றதால், தேர்தல் நேர ஒப்பந்தப்படி கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்று பத்திரிகைகளும் அரசியல் விமர்சகர்களும் மற்றும் மக்களும்  எதிர்பார்த்தனர். ஆனால் தேர்தல் முடிந்த கையோடு கூட்டணி கட்சியான அதிமுகவை ரங்கசாமி கழட்டிவிட திட்டமிட்டு, காரைக்காலில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் ஒருவரை தன்னோடு சேர்த்துக்கொண்டு, தான் இரண்டு தொகுதியில் வெற்றிபெற்றவர் என்பதையும் மறந்துவிட்டு,       30- இல் 16 உறுப்பினர்கள் என்கிற பலத்துடன் தனித்து  ஆட்சியமைத்தார். இது கூட்டணித் துரோகம் மட்டுமல்லாது,  கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் எதிரானது.
                   அது மட்டுமல்லாது, எதிர்காலத்தில் தாய்க்கட்சியோடு இணையலாம் என்கிற  திட்டத்தோடு ரங்கசாமி வெளிப்படையாகவே காய் நகர்த்துவது என்பது  மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.  கடந்த கால காங்கிரஸ்- திமுக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மக்கள் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக அவர் செயல்படுவது மக்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது. . இதனால் இன்று அந்த சின்னஞ்சிறிய மாநிலத்தில் மிகப்பெரிய அரசியல் குழப்பம் நீடிக்கிறது.
                    மேலும் ரங்கசாமி வெற்றிபெற்ற இரு தொகுதிகளில் ஒரு தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்ததும், அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பதினாறிலிருந்து பதினைந்தாக குறைந்ததும் ரங்கசாமிக்கே பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிட்டது. தற்சமயம் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு வலை வீசிப்பார்த்தார். நரிக்கு வடை கிடைக்கவில்லை.  தற்போதைக்கு யாரும் சிக்காததால் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதை தள்ளிப்போட்டுவருகிறார்.
                   தில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேசிப் பார்த்தார். தனக்கு ஆதரவு கோரினார்.  ஆனால் கட்சியை கலைத்துவிட்டு வந்தால் மட்டுமே ஆதரவு என்று அவரும் கைவிரித்து விட்டதால், அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். தூக்கத்தில் கூட ஏதாவது உளறிக்கொண்டே இருக்கிறார். 
                    இந்த சூழ்நிலையில், மாநிலத்தில் இவ்வளவு அலங்கோலங்கள்  அரங்கேறிய  போதிலும் மாநில துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் அரசியல் சாசனத்தை நிலைநாட்டாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ரங்கசாமியை  அவர் இதுவரை கேட்டுக்கொள்ளாமலேயே இருக்கிறார். . ஆளுநர் மட்டுமல்ல, புதுவை அரசை நேரடியாக கட்டுப்படுத்தக் கூடிய மத்திய உள்துறை 
அமைச்சகமும் வேடிக்கை தான்  பார்த்துக்கொண்டிருக்கிறது. தனது சொந்த அரசியல் லாபத்துக்காக  அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கருதுகிறது என்பது தான் உண்மை.

வியாழன், 9 ஜூன், 2011

புதுச்சேரி : குழப்பத்தின் உச்சத்தில் முதலமைச்சர் ரங்கசாமி

                அண்மையில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று. தேர்தல் முடிவு என்பது ரங்கசாமி தலைமையிலான என். ஆர். காங்கிரஸ் - அதிமுக கூட்டணிக்கு சாதகமாகவே அமைந்தது. என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களிலும் அதிமுக 5 இடங்களிலும் என கூட்டணி மொத்தம் 20 இடங்களில் வெற்றிபெற்றது. அந்த வெற்றிக்கான  நான்கு முக்கிய காரணங்கள் : # கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவிதமான செயல்பாடுகளும் இல்லாத - மக்களைப்பற்றியே சிந்தனையில்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த வைத்தியலிங்கம் தலையிலான  காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள். # தமிழ்நாட்டைப் போலவே  ஊழல் பெருச்சாளி  திமுக எதிர்ப்பு அலை இங்கும் இருந்தது. # அரசின் நிதிநிலையைப் பற்றிக் கவலைப் படாமல் மக்களுக்கு இலவசங்களாகவே அள்ளி வீசியவர் என்ற அபிப்பிராயமும் ரங்கசாமிக்கு சாதகமாய் இருந்தது. # அதிமுக கூட்டணியும் அதன் தலைவர் செல்வி. ஜெயலலிதா புதுவையில் செய்த பிரச்சாரம். காங்கிரஸ் கட்சியே இவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க தயங்கிய சூழ்நிலையில், ரங்கசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற அறிவித்து செல்வி. ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.இவைகள் அத்தனையும் தான் ரங்கசாமியை முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவைத்திருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
                 ஆனால் கடந்த 2008 - ஆம் ஆண்டு   காங்கிரஸ் தலைமையினாலேயே முதலமைச்சர் பொறுப்பிலிருந்து இறக்கப்பட்ட காலத்திலிருந்தே ரங்கசாமி ஒரு குழப்பவாதியாகவே இருந்துவருகிறார். அன்றையிலிருந்து இன்று வரை இவர் முடிவுகள் எடுப்பதில் மிக மிக காலதாமதம் செய்கிறார். இவரைச் சுற்றி இருப்பவர்களும் மக்களும் பொறுமையையே இழந்துவிடுவார்கள். அப்படியொரு ஆமை வேகம். ரங்கசாமி எந்த முடிவெடுப்பதானாலும் எப்படி எல்லாம் குழம்பிபோகிறார் என்பதை பாப்போம்.  
              # 2008-இல் தன்னை முதல்வர் பொறுப்பிலிருந்து இறக்கிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதற்கே யோசித்தார்... யோசித்தார்... மூன்று ஆண்டுகள் யோசித்தார்.  அந்த மூன்று ஆண்டுகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் இல்லை.
             #  தேர்தல் அறிவித்த பிறகு தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
அப்படி விலகினவர் தனிக் கட்சி தொடங்குவார்  என்கிற   எதிர்பார்ப்பை மக்களிடம் உருவாக்கினார். அனால் தேர்தல் நாளுக்கு ஒரு மாதம் முன்னர் தான்  தன்னுடைய தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் என்கிற கட்சியை தொடங்குவதாக அறிவிக்கிறார்.
              # வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் இவர் அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணிப் பற்றி பேசாமல் காலம் கடத்தினார். கூட்டணி முடிவாகாமலேயே அனைத்து தொகுதிக்கும் தன கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். பிறகு கூட்டணி முடிவாகி கூட்டணிக்கட்சி தொகுதிகளில் தன கட்சி வேட்பாளர்களை திரும்பப் பெறுகிறார்.
              # இவர் கதிர்காமம் மற்றும் இந்திரா நகர் ஆகியத் தொகுதியில் போட்டியிட்டதன் மூலம்,   தன் மீதான  - தன் வெற்றியின் மீதான  - ஏன்.. மக்களின் மீதான நம்பிக்கையிலேயே குழம்பிப் போயிருக்கிறார் என்று தான் பொருள்.
              # தன் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன்  வெற்றிபெற்றதும் கூட்டணி கட்சியோடு ஆலோசிக்கவில்லை. மாறாக  சேலத்தில் சமாதியாகி இருக்கும் அப்பாசாமி பைத்தியம் என்ற சாமியாரிடம் ஆசிபெற சென்றுவிட்டார். அந்த அப்பாசாமி பைத்தியம் சாமியார் மீது இவருக்கு பைத்தியமாம். இங்கே மக்களெல்லாம் கூட்டணி மந்திரி சபை அமையுமா என்றெல்லாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 
              # ஆனால் திடிரென்று ஆளுனரை சந்தித்தார்.  தன் கட்சியை சேர்ந்த வெற்றிபெற்ற எம் எல் ஏ - க்கள் 14 பேரை  ( இவரையும் சேர்த்து ) மட்டுமல்லாமல் காரைக்காலில் வெற்றிபெற்ற வி. எம்.சி. சிவகுமார் என்ற சுயேச்சை எம்.எல்.ஏ.-வையும் அழைத்துச் சென்று தான் ஆட்சியமைக்க தனக்கு 16 சட்டமன்ற   உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக காட்டி  உரிமைகோரிய போது தான் கூட்டணிக்கட்சியான அதிமுக-வை தூக்கி எறிந்துவிட்டு தனியே ஆட்சிச் செய்ய நினைக்கும் இவரது தில்லா லங்காடித்தனம் புதுவை மக்களுக்கு புரிந்தது.
              #  பிறகு பதவி ஏற்பு எப்போது என்றே தெரியாமல் மக்கள் குழம்பிக்கொண்டிருந்த சூழ்நிலையில் திடிரென ஒரு நாள் மாலை தான் மட்டுமே முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொள்கிறார். மற்ற அமைச்சர்களைப் பற்றி வழக்கம் போல் குழப்பம். பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பிதழெல்லாம் அடித்து யாரும் அழைக்கப்படவில்லை. தொலைபேசி மூலம் பழைய காங்கிரஸ் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். கூட்டணிக்கட்சிகளைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. இப்படியாக ஒரு குழப்பமாகவே முதலமைச்சர் பதவி ஏற்பு நடைபெற்றது.
                #  மற்ற அமைச்சர்களை தேர்ந்தெடுப்பதில் குழப்பம். இவருக்கு யார் மீதும் நம்பிக்கையும் இல்லை. இவரது எம். எல். ஏ -க்களில் பெரும்பாலானோர் "மக்கள் சேவகர்" அன்று தாங்களே பட்டம் சூட்டிக்கொண்டு மக்களுக்காக "உழைத்து" தேர்தலில் வெற்றிபெற்றவர்கள். இவர்கள் அதனைப் பேரும் மந்திரியாக வேண்டும் என்று துடித்து ரங்கசாமியை நச்சரித்தார்கள். சுயேச்சையாக வெற்றிபெற்றவர்க்கும் மந்திரியாக வேண்டுமென்ற ஆசை வேறு ரங்கசாமியை நெருக்கியது. வழக்கம் போல் ரங்கசாமி ரொம்பவே குழம்பிப் போய் சேலம் ஓடினார். அப்பா சாமி பைத்தியத்தை போய்  பார்த்தார். திருச்செந்தூர் சென்றார். முருகன் சந்நிதியில் சீட்டுக் குலுக்கிப்போட்டு பார்த்தார். எல்லா எம்.எல். ஏ - க்களின் ஜாதகத்தையும்  வாங்கி, யார் தனக்கு சாதகமாய் இருப்பார்கள்  என்று பார்த்தார். குழப்பம் தீரவில்லை. பைத்தியமாய் அலைந்தார். 
               # ஒரு வழியாக பதினைந்து நாட்கள் கழித்து,  ஜூன் 8 - ஆம் தேதி புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள் என்று அறிவித்தார். இம்முறை அழைப்பிதழும் அச்சிடப்பட்டுவிட்டது. ஆனால் பதவி ஏற்கப்போகும் அமைச்சர்கள் பெயர் இடம்பெறவில்லை. அதுவரைக்கூட அறிவிக்கப்படவில்லை. முதல் நாள் இரவு வரைக்கூட முடிவாகவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளேயே குழப்பம். பத்திரிக்கையாளர்களும் வழக்கம் போல் குழம்பிப்போனார்கள்.
              # பதவி ஏற்பு நாளன்று காலை கூட அமைச்சர்கள் யார் என்று தெரியவில்லை. முடிவாகவும் வில்லை. பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் - மேடை அலங்காரங்கள்  செய்து முடிக்கப்பட்டுவிட்டன. ஆளுநர் கூட மாட்டிய ஆடை அலங்காரங்களை கலைக்கமுடியாமல் ஆளுநர் மாளிகை வாசலிலேயே காத்துக்கொண்டிருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஆனால், அதுவரையில்   "மாப்பிள்ளைகள்" தயாராகவில்லை. ஒரே குழப்பம். பதவி ஏற்பு நேரமோ  ஒரு ஒரு மணி நேரமாக ஒத்திபோடப்பட்டது.
              # பிறகு திடிரென்று ஒருவழியாக அன்று மாலை ஐந்து அமைச்சர்கள் பதவி ஏற்புக்குப் பதிலாக நான்கு பேர்கள் மட்டுமே பதவி ஏற்றார்கள். மற்ற ஒருவரைப் பற்றிய குழப்பம் இன்னும் நீடிக்கிறது. 
             # அதுமட்டுமல்ல, இன்று வரை  பதவி ஏற்ற அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்குவதிலும் குழப்பம் நிலவி வருகிறது. 
             # ஆக மொத்தம், ஆரம்பத்திலிருந்தே ரங்கசாமி குழம்பிக் குழம்பியே எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். இப்படியாகத்தான் வரும் ஐந்து ஆண்டுகளையும் தானும் குழம்பி மக்களையும் குழப்பி ஆட்சி செய்வார் என்பது நமக்கு குழப்பம் இல்லாமல் தெரிகிறது. இப்படியே போனால் ரங்கசாமி அப்பாசாமி பைத்தியத்தை சேலம்  சென்று தான் பார்க்கவேண்டிய அவசியமில்லை. புதுவையிலே பார்த்துக்கொள்ளலாம். எதிர்காலத்தில் புதுவையில் நிறைய அப்பாசாமி பைத்தியங்களையும், அம்மாசாமி பைத்தியங்களையும் உருவாக்கிவிடுவார் என்பதிலும் நமக்கு குழப்பமில்லை.