வியாழன், 9 ஜூன், 2011

புதுச்சேரி : குழப்பத்தின் உச்சத்தில் முதலமைச்சர் ரங்கசாமி

                அண்மையில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று. தேர்தல் முடிவு என்பது ரங்கசாமி தலைமையிலான என். ஆர். காங்கிரஸ் - அதிமுக கூட்டணிக்கு சாதகமாகவே அமைந்தது. என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களிலும் அதிமுக 5 இடங்களிலும் என கூட்டணி மொத்தம் 20 இடங்களில் வெற்றிபெற்றது. அந்த வெற்றிக்கான  நான்கு முக்கிய காரணங்கள் : # கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவிதமான செயல்பாடுகளும் இல்லாத - மக்களைப்பற்றியே சிந்தனையில்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த வைத்தியலிங்கம் தலையிலான  காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள். # தமிழ்நாட்டைப் போலவே  ஊழல் பெருச்சாளி  திமுக எதிர்ப்பு அலை இங்கும் இருந்தது. # அரசின் நிதிநிலையைப் பற்றிக் கவலைப் படாமல் மக்களுக்கு இலவசங்களாகவே அள்ளி வீசியவர் என்ற அபிப்பிராயமும் ரங்கசாமிக்கு சாதகமாய் இருந்தது. # அதிமுக கூட்டணியும் அதன் தலைவர் செல்வி. ஜெயலலிதா புதுவையில் செய்த பிரச்சாரம். காங்கிரஸ் கட்சியே இவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க தயங்கிய சூழ்நிலையில், ரங்கசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற அறிவித்து செல்வி. ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.இவைகள் அத்தனையும் தான் ரங்கசாமியை முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவைத்திருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
                 ஆனால் கடந்த 2008 - ஆம் ஆண்டு   காங்கிரஸ் தலைமையினாலேயே முதலமைச்சர் பொறுப்பிலிருந்து இறக்கப்பட்ட காலத்திலிருந்தே ரங்கசாமி ஒரு குழப்பவாதியாகவே இருந்துவருகிறார். அன்றையிலிருந்து இன்று வரை இவர் முடிவுகள் எடுப்பதில் மிக மிக காலதாமதம் செய்கிறார். இவரைச் சுற்றி இருப்பவர்களும் மக்களும் பொறுமையையே இழந்துவிடுவார்கள். அப்படியொரு ஆமை வேகம். ரங்கசாமி எந்த முடிவெடுப்பதானாலும் எப்படி எல்லாம் குழம்பிபோகிறார் என்பதை பாப்போம்.  
              # 2008-இல் தன்னை முதல்வர் பொறுப்பிலிருந்து இறக்கிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதற்கே யோசித்தார்... யோசித்தார்... மூன்று ஆண்டுகள் யோசித்தார்.  அந்த மூன்று ஆண்டுகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் இல்லை.
             #  தேர்தல் அறிவித்த பிறகு தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
அப்படி விலகினவர் தனிக் கட்சி தொடங்குவார்  என்கிற   எதிர்பார்ப்பை மக்களிடம் உருவாக்கினார். அனால் தேர்தல் நாளுக்கு ஒரு மாதம் முன்னர் தான்  தன்னுடைய தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் என்கிற கட்சியை தொடங்குவதாக அறிவிக்கிறார்.
              # வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் இவர் அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணிப் பற்றி பேசாமல் காலம் கடத்தினார். கூட்டணி முடிவாகாமலேயே அனைத்து தொகுதிக்கும் தன கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். பிறகு கூட்டணி முடிவாகி கூட்டணிக்கட்சி தொகுதிகளில் தன கட்சி வேட்பாளர்களை திரும்பப் பெறுகிறார்.
              # இவர் கதிர்காமம் மற்றும் இந்திரா நகர் ஆகியத் தொகுதியில் போட்டியிட்டதன் மூலம்,   தன் மீதான  - தன் வெற்றியின் மீதான  - ஏன்.. மக்களின் மீதான நம்பிக்கையிலேயே குழம்பிப் போயிருக்கிறார் என்று தான் பொருள்.
              # தன் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன்  வெற்றிபெற்றதும் கூட்டணி கட்சியோடு ஆலோசிக்கவில்லை. மாறாக  சேலத்தில் சமாதியாகி இருக்கும் அப்பாசாமி பைத்தியம் என்ற சாமியாரிடம் ஆசிபெற சென்றுவிட்டார். அந்த அப்பாசாமி பைத்தியம் சாமியார் மீது இவருக்கு பைத்தியமாம். இங்கே மக்களெல்லாம் கூட்டணி மந்திரி சபை அமையுமா என்றெல்லாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 
              # ஆனால் திடிரென்று ஆளுனரை சந்தித்தார்.  தன் கட்சியை சேர்ந்த வெற்றிபெற்ற எம் எல் ஏ - க்கள் 14 பேரை  ( இவரையும் சேர்த்து ) மட்டுமல்லாமல் காரைக்காலில் வெற்றிபெற்ற வி. எம்.சி. சிவகுமார் என்ற சுயேச்சை எம்.எல்.ஏ.-வையும் அழைத்துச் சென்று தான் ஆட்சியமைக்க தனக்கு 16 சட்டமன்ற   உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக காட்டி  உரிமைகோரிய போது தான் கூட்டணிக்கட்சியான அதிமுக-வை தூக்கி எறிந்துவிட்டு தனியே ஆட்சிச் செய்ய நினைக்கும் இவரது தில்லா லங்காடித்தனம் புதுவை மக்களுக்கு புரிந்தது.
              #  பிறகு பதவி ஏற்பு எப்போது என்றே தெரியாமல் மக்கள் குழம்பிக்கொண்டிருந்த சூழ்நிலையில் திடிரென ஒரு நாள் மாலை தான் மட்டுமே முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொள்கிறார். மற்ற அமைச்சர்களைப் பற்றி வழக்கம் போல் குழப்பம். பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பிதழெல்லாம் அடித்து யாரும் அழைக்கப்படவில்லை. தொலைபேசி மூலம் பழைய காங்கிரஸ் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். கூட்டணிக்கட்சிகளைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. இப்படியாக ஒரு குழப்பமாகவே முதலமைச்சர் பதவி ஏற்பு நடைபெற்றது.
                #  மற்ற அமைச்சர்களை தேர்ந்தெடுப்பதில் குழப்பம். இவருக்கு யார் மீதும் நம்பிக்கையும் இல்லை. இவரது எம். எல். ஏ -க்களில் பெரும்பாலானோர் "மக்கள் சேவகர்" அன்று தாங்களே பட்டம் சூட்டிக்கொண்டு மக்களுக்காக "உழைத்து" தேர்தலில் வெற்றிபெற்றவர்கள். இவர்கள் அதனைப் பேரும் மந்திரியாக வேண்டும் என்று துடித்து ரங்கசாமியை நச்சரித்தார்கள். சுயேச்சையாக வெற்றிபெற்றவர்க்கும் மந்திரியாக வேண்டுமென்ற ஆசை வேறு ரங்கசாமியை நெருக்கியது. வழக்கம் போல் ரங்கசாமி ரொம்பவே குழம்பிப் போய் சேலம் ஓடினார். அப்பா சாமி பைத்தியத்தை போய்  பார்த்தார். திருச்செந்தூர் சென்றார். முருகன் சந்நிதியில் சீட்டுக் குலுக்கிப்போட்டு பார்த்தார். எல்லா எம்.எல். ஏ - க்களின் ஜாதகத்தையும்  வாங்கி, யார் தனக்கு சாதகமாய் இருப்பார்கள்  என்று பார்த்தார். குழப்பம் தீரவில்லை. பைத்தியமாய் அலைந்தார். 
               # ஒரு வழியாக பதினைந்து நாட்கள் கழித்து,  ஜூன் 8 - ஆம் தேதி புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள் என்று அறிவித்தார். இம்முறை அழைப்பிதழும் அச்சிடப்பட்டுவிட்டது. ஆனால் பதவி ஏற்கப்போகும் அமைச்சர்கள் பெயர் இடம்பெறவில்லை. அதுவரைக்கூட அறிவிக்கப்படவில்லை. முதல் நாள் இரவு வரைக்கூட முடிவாகவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளேயே குழப்பம். பத்திரிக்கையாளர்களும் வழக்கம் போல் குழம்பிப்போனார்கள்.
              # பதவி ஏற்பு நாளன்று காலை கூட அமைச்சர்கள் யார் என்று தெரியவில்லை. முடிவாகவும் வில்லை. பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் - மேடை அலங்காரங்கள்  செய்து முடிக்கப்பட்டுவிட்டன. ஆளுநர் கூட மாட்டிய ஆடை அலங்காரங்களை கலைக்கமுடியாமல் ஆளுநர் மாளிகை வாசலிலேயே காத்துக்கொண்டிருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஆனால், அதுவரையில்   "மாப்பிள்ளைகள்" தயாராகவில்லை. ஒரே குழப்பம். பதவி ஏற்பு நேரமோ  ஒரு ஒரு மணி நேரமாக ஒத்திபோடப்பட்டது.
              # பிறகு திடிரென்று ஒருவழியாக அன்று மாலை ஐந்து அமைச்சர்கள் பதவி ஏற்புக்குப் பதிலாக நான்கு பேர்கள் மட்டுமே பதவி ஏற்றார்கள். மற்ற ஒருவரைப் பற்றிய குழப்பம் இன்னும் நீடிக்கிறது. 
             # அதுமட்டுமல்ல, இன்று வரை  பதவி ஏற்ற அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்குவதிலும் குழப்பம் நிலவி வருகிறது. 
             # ஆக மொத்தம், ஆரம்பத்திலிருந்தே ரங்கசாமி குழம்பிக் குழம்பியே எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். இப்படியாகத்தான் வரும் ஐந்து ஆண்டுகளையும் தானும் குழம்பி மக்களையும் குழப்பி ஆட்சி செய்வார் என்பது நமக்கு குழப்பம் இல்லாமல் தெரிகிறது. இப்படியே போனால் ரங்கசாமி அப்பாசாமி பைத்தியத்தை சேலம்  சென்று தான் பார்க்கவேண்டிய அவசியமில்லை. புதுவையிலே பார்த்துக்கொள்ளலாம். எதிர்காலத்தில் புதுவையில் நிறைய அப்பாசாமி பைத்தியங்களையும், அம்மாசாமி பைத்தியங்களையும் உருவாக்கிவிடுவார் என்பதிலும் நமக்கு குழப்பமில்லை.

1 கருத்து:

JaY Reborn @ Jaes சொன்னது…

பாவம்......... கடும் குழப்பத்தில் இருக்கிறார்...... புத்தி தெளியட்டும் !!!