"பொருளாதாரத் தடை" என்கிற வார்த்தையை, சோவியெத் யூனியன் சிதறுண்டு போனபிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைத்தூக்க ஆரம்பித்த நாளிலிருந்து தான் நாம் கேள்விப்படுகிறோம்.
எந்த ஒரு நாடாவது தனக்கு அடங்கி நடக்கவில்லை என்றால், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்து அந்த நாட்டையே சின்னாபின்னமாக்கி சீரழித்துவிடும். இது தான் உலகின் கடந்தகால வரலாறு. பொருளாதாரத் தடை என்பதும் ஒருவகை பயங்கரவாதம் தான். மனித உயிர்களை பலி வாங்குகிற - பழி வாங்குகிற பயங்கரவாதம் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. பொருளாதாரத் தடை என்பது அமெரிக்காவிற்கே உரித்தான காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை என்பது தான் உண்மை. பொருளாதாரத் தடை விதித்தால் அந்த நாட்டில் என்னென்ன பாதிப்புகள் நடக்குமென்றால்... அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். அதனால் பசி - பட்டினி - வறுமை அதிகமாகும். குழந்தைகளுக்கு ரொட்டிப் பால் கூட கிடைக்காது. உயிர்காக்கும் மருந்துகள் கிடைக்காமல் போகும். வசதி இல்லாதவர்களுக்கு மருத்துவம் என்பது எட்டாக் கனியாக போய்விடும். வேலை இழப்பும், வேலை இன்மையும் அதிகருக்கும், அதனால் அந்த நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியாலும், நோயினாலும் வீழ்ந்து மடிவார்கள். இது தான் பொருளாதாரத் தடையால் அந்த நாட்டின் குடிமக்கள் சந்திக்கும் கொடுமைகள்.பொருளாதாரத் தடை என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு மறைமுகப் போர் என்பது தான் உண்மை.
சமீப காலங்களில் இது போன்ற பொருளாதாரத் தடையால் பாதிக்கப் பட்ட நாடுகள் பல உண்டு. அதே சமயத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை சவாலாக எதிர்கொண்டு வளர்ந்து வரும் கியூபா போன்ற நாடுகளும் உண்டு. அப்படி நாசமாய் போன நாடுகளில் மிக முக்கியமான நாடு இராக் என்பதை நாம் கண் கூடாகப் பார்த்தது என்பது இன்றைக்கும் நம் நெஞ்சைவிட்டு நீங்காதது.
இராக் நாட்டின் அதிபர் சதாம் ஹுசைன் தனக்கு அடங்கி நடக்கவில்லை என்ற காரணத்திற்காக, அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்தது. இதன் காரணமாக அந்த நாடு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கொடுமைகளை அனுபவித்தது. உணவு, குடி நீர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் கூட அங்குள்ள மக்களுக்கு கிடைக்காமல் தடை செய்யப்பட்டது. இதனால் கடந்த இருபது ஆண்டுகளில் லட்சக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் இறந்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மாண்டு பொய் இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய பயங்கரம். அதனால் தான் இன்றைக்கு இராக்கில் 20 - 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பதே இல்லாமல் போய்விட்டார்கள் என்பதும் மற்றுமொரு பயங்கரம்.
எப்போதுமே ஆட்சியாளர்களை பழித்தீர்ப்பதாக நினைத்துக்கொண்டு செய்யப்படும் பொருளாதாரத் தடை என்பது அந்த ஆட்சியாளர்களை தாக்குவதற்குப் பதிலாக அப்பாவி மக்களையும், குழந்தைகளையும் தான் தாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
போர் என்பது நேரடியான ஆயுதத் தாக்குதல் - பொருளாதாரத் தடை என்பது ஆயுதமில்லாத - மறைமுகமான தாக்குதல். இரண்டுமே மனிதகுலத்திற்கு எதிரானது. மனிதகுலத்தை அழிக்கக்கூடியது. மனித உரிமைக்கு எதிரானது. இதில் நாம் நம்பிக்கை வைக்கவேண்டாம்.
அதனால், இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க.. வாழ உரிமைகள் கிடைக்க.. நேரடியான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்த மத்திய அரசை நிர்பந்தம் செய்வோம். அதேப்போல், போர்குற்றங்கள் புரிந்த, தமிழ் மக்களை கொன்றுக் குவித்த இலங்கை அரசுக்கெதிரான விசாரணையை நடத்துவதற்கு ஐ. நா. சபையையும் நிர்பந்தம் செய்வோம். மாறாக, பொருளாதாரத் தடை விதித்தால் அப்பாவி தமிழ் மக்கள் தான் மீண்டும் பாதிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
3 கருத்துகள்:
வணக்கம்,ஆயுத எழத்து இதன் பதிவுகளை கடந்த சிலவாரங்களுக்கு முன் அறியமுடிந்தது.நன்றி.
சோசலிசம் ஒரு இயக்கத்தின் சொல்.
அதுமனித நேயத்தின் மறுபதிப்பு.
அதை பாசிச வர்க்கத்திடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?
முடிவுகள் என்றுமே பாசிச வர்க்கத்தை
வெல்வதுதான்.உங்கள் பணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.சேகர்.
வணக்கம்,ஆயுத எழுத்து இதன் பதிவுளை சில வாரங்களுக்கு முன் தான் அறிய முடிந்தது,நன்றி.
பொருளாதார தடை.
சோசலிசம் என்பது மனிதநேயத்தின்,
மறுவடிவம்,இது பாசிச வர்க்கத்துக்கு
புரியாத மொழி.பாசிசத்தை வெல்ல
இதுபோன்ற பதிவுகள் தரும் உங்களை மனமார வாழ்த்துகிறேன். சேகர்.
அப்பாவி சிங்களர்களே அங்கு இல்லையா? அவர்கள் பாதிக்கப்படமாட்டார்களா?
கருத்துரையிடுக