சனி, 4 ஜூன், 2011

இந்திய ஏழை மக்கள் பட்டினியால் சாகிறார்கள் - அம்பானிக்கு ஆடம்பர வீடும் சொகுசு கப்பலும்.. !


       உலகிலேயே மிகப்பெரிய வீடு எங்கிருக்கிறது தெரியுமா? நமது இந்தியாவில்தான்! மும்பை, அல்ட்டா மவுன்ட் சாலையில் உள்ள இந்த வீட்டின் சொந்தக்காரர் முகேஷ் அம்பானி ஆவார். 2007-ல் ரூ.4,400 கோடி மதிப்பில் கட்டுமான வேலைகள் துவக்கப்பட்டு, 2010 இறுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஏசியன் கண்டெம்பொரரி எனும் அமெரிக்க நிறுவனம் இந்த வீட்டை கட்டித் தந்துள்ளது. இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.10,000 கோடியாகும். முகேஷ் அம்பானி 2011-ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் 9 வது இடத்தை பிடித்துள்ளார்.. இவரின் இன்றைய சொத்து மதிப்பு 27 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

மின் கட்டணம் மட்டும்  ரூ.70 இலட்சம் :

        முகேஷ் அம்பானி தனது வீட்டிற்கு குடியேறியவுடன், முதல் மாதம் மின்சாரக் கட்டணமாக ரூ. 70 இலட்சம் கட்டியுள்ளார். முதல் மாத மின்சார உபயோகக் கட்டணமாக ரூ.70 லட்சத்து 69 ஆயிரத்து 488 பில் வந்துள்ளது. இது  6 லட்சத்து 37 ஆயிரத்து 240 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தில் அதிகபட்சமாக பயன்படுத்தப்படும் சராசரி மின் அளவு 300 யூனிட் ஆகும். அம்பானியின் வீட்டு மின் பயன்பாட்டுடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவிற்கும் உள்ள இடைவெளியாகும். மின்சாரக் கட்டணத்தை சரியாக செலுத்திவிட்டதால் அம்பானிக்கு, ரூ.48 ஆயிரத்து 354 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாம். இதுபோகத்தான் அம்பானி ரூ.70 லட்சம் மின் கட்டணம் செலுத்தியுள்ளார். வருமான வரிச்சலுகை மட்டுமல்லாமல் மின் கட்டணத்தில் வேறு சலுகை. ஆனா நம்ப முனுசாமி அம்பது ரூபா மின்கட்டணம் கட்டமுடியலனா பியூச புடிங்கிடராங்கள.. என்னே ஜனநாயகம்..!

5 லட்சம் லிட்டர் தண்ணீர் :

            தினசரி இந்த வீட்டிற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் 5 இலட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. முகேஷ் அம்பானியும் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அவரது தாயார் உள்பட   6 பேர் மட்டும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சேவை செய்ய சுமார் 600 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். என்ன கொழுப்பு பாருங்க..!

           இந்த வீட்டிற்கு ‘ஆண்டிலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 4532 சதுர அடி தரை பரப்பளவும், 4,00,000 சதுர அடி மொத்த பரப்பளவும் கொண்ட இந்த வீட்டின் உயரம் 570 அடியாகும். 60 தளங்களை அமைப்பதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு, தற்போது 27 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
இக்கட்டிடத்தில் மூன்று ஹெலிகாப்டர் தளங்கள் உள்ளன. விலை உயர்ந்த, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 168 கார்கள் உள்ளன. இவைகளை நிற்க வைப்பதற்கு இந்த வீட்டில் 6 தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எட்டாவது மாடியில் பொழுதுபோக்கிற்காக ஒரு மினி சினிமா தியேட்டரும் உள்ளது. மூன்று தளங்களில் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4-ம் மாடியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நுழைந்தால் குளிர்காலத்தில் சூடாகவும், வெயில்காலத்தில் குளிராகவும் இருக்குமாம். 9-வது தளம் அவசர காலத்திற்கு பயன்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. 10, 11-வது தளங்கள் விளையாடுவதற்காகவும் உடற்பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நீச்சல் குளமும் உள்ளது. விருந்தினர்கள் தங்குவதற்காக இரண்டு தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலே உள்ள நான்கு தளங்களில் முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீத்தா மற்றும் மூன்று குழந்தைகளுடன் தாயார் கோகில பென் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த தளங்களிலிருந்து அரபிக்கடலின் அழகிய தோற்றமும், மும்பை நகரத்தின் எழிலையும் கண்டு களிக்கலாம். அதற்கு மேல் உள்ள இரண்டு தளங்கள் ஹெலிகாப்டர் இயக்கு வதற்கான கட்டுப்பாட்டு அறைகளை கொண்டுள்ளது. மும்பை மாநகராட்சி நிர்வாகம் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு இன்னும் அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

              முகேஷ் அம்பானியின் வீட்டின் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள பில் கேட்ஸ் வீட்டின் மதிப்பு 100 மில்லியன் டாலர். இந்திய நாட்டின் இன்னொரு பணக்காரரும் உலக  பணக்காரர் பட்டியலில் இடம் பெற்ற வருமான லட்சுமி மிட்டல், கடந்த ஆண்டு லண்டனில் 60 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு வீடு வாங்கியுள்ளார். முகேஷ் அம்பானி இவ்வளவு செலவு செய்து இப்படி ஒரு வீட்டை கட்டியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று இந்திய நாட்டின் பெரும் பணக்காரரான ரத்தன் டாடா கருத்து தெரி வித்துள்ளார். உலகம் முழுவதும் பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக இன்று அம்பானியின் ஆடம்பர வீடு அமைந்துள்ளது

ஆடம்பர சொகுசு கப்பல் : 
                                                      
             அண்மையில் இதே முகேஷ் அம்பானி 20 மில்லியன் யூரோ மதிப்புள்ள ஆடம்பர சொகுசு கப்பலை வாங்கியிருக்கிறார். இந்த கப்பல் பீச் கேன்டியில் நிறுத்தப்படவுள்ளது. அந்த கப்பலின் படம் தான் மேலே உள்ளது. இந்தக்  கப்பலில்  ஒரு பணக்கார வீட்டில் இருக்கும் அனைத்து வசதிகளும் கடலுக்கு மேலே கட்டப்பட்டுள்ளது. இது ஒரு மிதக்கும் ஆடம்பர வீடு.
                 

         இந்த அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்தான் இந்திய அரசு, பொருளாதார வீழ்ச்சி  என்ற காரணத்தைக் காட்டி சில ஆண்டுகளுக்கு முன்னர் கோடிக்கணக்கான ரூபாயை மீட்புத் தொகையாக வழங்கியுள்ளது. சென்ற ஆண்டு   வருமானவரிச் சலுகைகள் மற்றும் மானியமாக பல ஆயிரம் கோடிகள் இந்திய அரசாங்கம் அம்பானி சகோதரர்களுக்கு வழங்கி உள்ளது. இந்தியப் பெருமுதலாளிகள் அனைவருக்கும் சேர்த்து கொடுக்கப்பட்ட வருமானவரிச் சலுகைகள் மற்றும் மானியத்தின் மொத்த மதிப்பு ஐந்து லட்சம் கோடி ரூபாய் என்பது வயிற்றெறிச்சல் ஆனா விஷயமாகும்.
           அம்பானியின் இந்த பிரம்மாண்டமான வீடு என்பது,  85 கோடி மக்கள் ஒருவேளை சோற்றுக்கே அல்லல்படும்  இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. மாறாக இந்திய நாட்டில், வறுமைக் கோட்டிற்கு கீழ், மக்கள் தொகையில் சரி பாதிக்கும் மேல் உள்ள மக்களின் வறுமைக்கு காரணமாக விளங்குகிறது  என்பது தான் உண்மை.

தீக்கதிர் பத்திரிகையில் திரு. க. ராஜ்குமார் எழுதிய கட்டுரையின் விரிவாக்கம்.
"தீக்கதிர்" படியுங்கள்..

கருத்துகள் இல்லை: