புத்தாண்டு வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தாண்டு வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஜனவரி, 2015

தேசம் காத்தல் செய்வோம்...! புதிய சபதமேற்போம்...!

                      இன்று புத்தாண்டு... இந்த புதிய ஆண்டில் என்ன தீர்மானத்தை நிறைவேற்றுவது...? புதிதாக என்ன சபதமேற்பது...? புகைப்பவர்களும், குடிப்பவர்களும் போடுகிற வெற்று சபதம் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாய் சபதமேற்போம்.         தேசம் காத்தல் செய்வோம்...!           
               தேசம் என்பது வெறும் மண்ணல்ல... தேசம்... நாடு என்று சொன்னால் நம் பார்வைக்கு அது ஒரு மண்ணாக மட்டும் தான் தெரியும்.  
ஆனால் 
தேசம் என்பது வெறும் மண்ணல்ல... உயிர்...
உயிரும் உணர்வும் கலந்த மனிதம்....    
வேற்றுமையிலும் ஒற்றுமை வளர்த்த மானுடம்....  
தாயாய் சகோதரியாய் துணைவியாய் 
மகளாய் அன்பை ஊட்டிய பெண்மணிகள்...
சேரியும் நகரமும் தந்த குழந்தை செல்வங்கள்...
வீரமும், மானமும், அறிவும், காதலும்...
மக்கள் பசியாற்றும்  உழவும், உழவனும்...
ஆடை, வீடு, பள்ளி, ஆலை, தொழில், சுகாதாரம்,
இயந்திரம், ஆயுதம் என அனைத்தும்
அவை அனைத்தும் தரும் உழைப்பாளியும்...
உழவும், தொழிலும், உழைப்பும், நிர்வாகமும்,
நீரும், நிலமும், காற்றும், வானும், மழையும், 
வயலும், பயிர்களும், ஆறும், ஏரி - குளமும், மணலும், 
கற்பாறையும், குன்றும், மலையும், பூமியும், காடும், 
மரமும்,கடலும், பறவைகளும், விலங்குகளும், 
மீன்களும் ஆன இயற்கையும்...
இயற்கை தரும் தீராத வளங்களும்...
கலை - இலக்கியமும், பண்பாடு - கலாச்சாரமும்,
அறிவியலும், அதனால் விளைந்த கண்டுபிடிப்புகளும்...
இரயிலும், பேருந்தும், வானூர்தியும், துறைமுகமும், காப்பீடும், 
வங்கியும், சுரங்கமும், தொலைத்தொடர்பும், குவியும் நிதியும்...
கல்வியும், பள்ளியும், கல்லூரியும், பல்கலைக்கழகமும்,
மருந்தும், மருத்துவமனையும், இராணுவமும்...
மக்கள் குறை தீர்க்கும் நாடாளுமன்றமும், நீதிமன்றமும்,
சுதந்திரமும், ஜனநாயகமும், குடியரசும், 
அரசியல் சாசனமும், நீதியும், சட்டங்களும் ...
ஆகிய இவை அனைத்தும் நம் தேசமே... 
அவை யாவும் நம் சொந்தமே... 
நாமிருக்கும் நம்  நாடு நமதென்பதை முதலில் நாம் அறிவோம்...
உணர்வோம்.... உணர்ந்து செயல்படுவோம்...
மேலே சொன்ன அத்தனை வளங்களையும் பெற்ற 
நம் தேசத்தை அந்நியர்க்கு அள்ளிகொடுத்தல் 
என்ன நீதி...?
தேச நலனுக்கு எதிராக மதத்தின் பேரால் - 
சாதியின் பேரால் தேசத்தையே கூறு போடவும்,
தேச வளங்களை அந்நியர்க்கு அள்ளிக்கொடுத்திடவும்
நாம் அனுமதித்தல் வேடிக்கைப் பார்த்தல் நீதியாகாது.
நம் பாட்டன் பாரதி கற்றுத்தந்த பாடத்தை மறந்திடலாமோ...?
எனவே இந்த புத்தாண்டில் சபதமேற்போம்....!
தேசம் காத்தல் செய்வோம்...! 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழமையே...!        

புதன், 1 ஜனவரி, 2014

ஏகாதிபத்திய எதிர்ப்பு மேலும் வலுப்படவேண்டும்...!

 கட்டுரையாளர் : தோழர். சீத்தாராம் யெச்சூரி     
                                தலைமைக் குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                   
        முதலாளித்துவப் பொருளாதாரம், 2008ல் உலகப் பொருளாதாரத்தைப் பீடித்த நெருக்கடியிலிருந்து மீண்டுவிட பகீரதப்பிரயத்தனம் செய்தபோதிலும், அது தன்னுடைய நெருக்கடியிலிருந்து மீளமுடியாமல் 2013லும் தொடர்ந்து தள்ளாடிக்கொண்டும், தடுமாறிக்கொண்டும் தான் இருந்தது. சோசலிச சீனத்தைத் தவிர, இந்தியா உட்பட பொருளாதார ரீதியாக வளர்ந்து வந்த மற்ற அனைத்து நாடுகளும் 2008-ல் நெருக்கடிக்குத் தாக்குப்பிடித்த போதிலும், பின்னர் தொடர்ந்து அதனைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தள்ளாடத் தொடங்கிவிட்டன. உலகப் பொருளாதார நெருக்கடி 2013-ல் ஐந்தாவது கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.
               இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அது மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் புதிய நெருக்கடிக்கான விதைகளையே விதைத்துள்ளது. எவ்விதக் கட்டுப்பாடுமில்லாது இருந்து வந்த ஏகாதிபத்திய உலக மயம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குஉலகில் சமத்துவமின்மையை உருவாக்கியதாலும், உலகில் பெரும்பான்மையான மக்களின் வாங்கும் சக்தியையும் வீழ்ச்சியுற வைத்ததாலும், பொருளாதார வளர்ச்சியில் நெருக்கடி யை ஏற்படுத்தியது. இதிலிருந்து எப்படியாவது மீள வேண்டும் என்பதற்காக அது “மலிவான’’ அல்லது “எளிய’’ தவணைகளில் கடன்களை அளித்தது. இது உலகில் உற்பத்தி வளர்ச்சிக்குப் பாய்ச்சலை ஏற்படுத்தும் என்றும், அதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த தேவைகளையும் தாங்கிப் பிடித்திடலாம் என்றும் முதலாளித்துவம் நம்பியது. ஆனால் கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டதால், 2008 பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்து பல பன்னாட்டு நிதிநிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்பட்டது. இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக முதலாளித்துவ நாடுகளில் ஆட்சி புரிந்த அரசுகள் முதலாளிகளுக்கு முழுமையான அளவில் நிதியை வாரி வழங்கின. அவ்வாறு செய்ததன் மூலம் கார்ப்பரேட்டுகளின் திவால் நிலைமைகள் அரசின் திவால் நிலைமைகளாக மாறின.
                 இதனை அடுத்து, அரசாங்கங்கள் தங்கள் திவால்தன்மையைச் சரிக்கட்டுவதற்காக, தாங்கள் சமூகநலத்திட்டங்களுக்காக ஒதுக்கி வைத்த தொகைகளையும், தொழிலாளர்களின் ஊதியங்களையும் வெட்டிக் குறைத்தன, புதிதாக எவரையும் வேலைக்கு எடுக்கவில்லை, ஊழியர்களின் வேலை நேரங்களையும் அதிகரித்தன. ஓய்வூதியம் மற்றும் இதர உதவித் திட்டங்களையும் தயவு தாட்சண்யமின்றி வெட்டியுள்ளன. இவ்வாறு இவை மேற்கொண்ட நடவடிக்கைகள் உலகப் பொருளாதார நெருக்கடியில் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது இவற்றின் விளைவாக மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறுகியதால், அது பொருளாதார நிலைமை மேலும் சுருங்குவதற்கு இட்டுச் சென்றுள்ளது. நாம் 2014-ல் அடி எடுத்து வைக்கக்கூடிய இன்றைய நிலையில், உலகப் பொருளாதாரம் இந்நெருக்கடி வலைக்குள் சுற்றி வளைக்கப்பட்டு மேலும் ஆழமாகச் சிக்கும் நிலைக்கு அநேகமாகத் தள்ளப்படலாம். முதலாளித்துவ அமைப்புக் குள்ளேயே மேற்கொள்ளப்படும் எந்தவித சீர்திருத்தமும் மக்களுக்கு நிவாரணத்தை வழங்கிட முடியாது என்பதை இது மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது. முதலாளித்துவத்திற்கு அரசியல் மாற்றாக விளங்கக் கூடியமாற்று சமூக - பொருளாதார அமைப்பு முறை தான் இந்நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்றி அவர்களுக்கு நிவாரணத்தை அளித்திட முடியும்.
                எனவே 2014ஆம் ஆண்டில் உலகின் பல நாடுகளில் மக்கள் தங்கள் சமூக மாற்றத்திற்கான போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்வார்கள் என்பது திண்ணம். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இவ்வாறு மக்கள் உலகம் முழுதும் சக்தி மிக்க போராட்டங்களை நடத்தினார்கள். குறிப்பாக, ஐரோப்பிய நாட்டு மக்கள், அதிலும் குறிப்பாக கிரீஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி நாட்டு மக்கள் வீரம் செறிந்த போராட்டங்கள் பலவற்றை நடத்தியதைப் பார்த்தோம். மக்கள் மத்தியில் இவ்வாறு கோபாவேசம் மிகவும் ஆக்ரோஷமாக வளர்ந்தோங்கி இருந்ததன் காரணமாக, அந்நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் அரசாங்கங்கள் பல மண்ணைக் கவ்வின. இவ்வாறு மக்கள் மத்தியில் கோபம் இருந்த போதிலும், உலகம் முழுதும் அரசியலில் வலதுசாரிப்பக்கம் சாய்மானம் நிகழ்ந்திருப்பதும் நடந்திருக்கிறது. எனினும், அதே சமயத்தில் ஜப்பான், போர்ச்சுக்கல், செக் குடியரசு, சிலி போன்ற நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதாயம் அடைந்துள்ளதையும் பார்க்க முடிகிறது.
                 ஏகாதிபத்தியம் தனக்கேற்பட்ட நெருக்கடியின் சுமைகளை மூன்றாம் உலக நாடுகளின் மீது ஏற்ற மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக அந்நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களைக் கூறிடலாம். இந்நாடுகளில் அமைந்துள்ள முற்போக்கான ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நவீன தாராளமய எதிர்ப்பு அரசாங்கங்கள், இந்தியா போன்ற நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களை எவ்விதக் கூச்ச நாச்சமுமின்றித் தழுவிக் கொண்ட மூன்றாம் உலக நாடுகளைப் போல் அல்லாமல், மக்களுக்கு நிவாரணம் அளித்திட மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியமானது, வெனிசுலாவில் சாவேஸ் மரணத்திற்குப் பின் அத்துணைக்கண்டத்திலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அணுகுமுறை கைவிடப்படலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக சாவேஸுக்குப் பின் பொறுப்புக்கு வந்த மதுரோ மார்ச்சில் நடைபெற்ற தேர்தலில் மிகக் குறுகிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் இதில் மிக நம்பிக்கையுடன் இருந்தது. ஆயினும், டிசம்பரில் நடைபெற்ற நகராட்சிகளுக்கான தேர்தல்களில் சாவேஸின் சோசலிஸ்ட் கட்சி மகத்தான வெற்றி பெற்று, மக்கள் தொடர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் மனோபாவத்துடனேயே இருப்பதை உறுதிப்படுத்தினார்கள். முதலாளித்துவத்திற்கு மாற்று நவீன தாராளமயம் அல்ல, மாறாக சோசலிசம்தான் என்பதை உலகுக்குப் பறைசாற்றும் வண்ணம், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்று வரும் முற்போக்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.
.               இவ்வாறு, நவீன தாராளமய ஏகாதிபத்தியம் விளைவித்துள்ள துன்ப துயரங்களுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும் மாமருந்தாக, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் முற்போக்கு நடவடிக்கைகளில் 2014-ஆம் ஆண்டு திகழும் என்பதும் திண்ணம். இத்தகைய சூழ்நிலைகளில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய உலகளாவிய மேலாதிக்கத்தை ஒருமுனைப்படுத்துவதற்காக, உலகைத் தன்னுடைய ஒரு துருவ உலகாக உருவாக்கிட மேற்கொண்டிடும் முயற்சிகள், அதற்கு அவ்வளவு எளிதானவைகளாக இல்லாமல் மிகவும் கடினமாகிவிட்டன. அது, இந்தத் தடவை சிரியாவிற்கு எதிராக மற்றொரு ஏகாதிபத்திய ராணுவ ஆக்கிரமிப்பைக் கட்டவிழ்த்துவிட முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், இதில் ஐ.நா.வை ஈடுபடுத்த அமெரிக்க மேற்கொண்ட முயற்சிகளை ரஷ்யாவும் சீனாவும் தங்கள் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாகத் தகர்த்துவிட்டன. இராக்கில் ராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டது போலவே ஈரானிலும் மேற்கொள்ள மெரிக்காவிற்கு நமைச்சல் எடுத்தபோதிலும், அதனால் அதில் வெற்றிபெற முடியவில்லை.
                  அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்பிராந்தியத்தில் பதற்றம் இல்லாதவாறு அமையக்கூடிய விதத்தில், ஈரானுடன் ஒருவிதமான ஒப்பந்தத்தை செய்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம், மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ள சுதந்திர நாடுகளின் உள்விவகாரங்களில் தன்னுடைய கிரிமினல்தனமான தலையீடுகளைத் தொடர்கிறது. ``அரபு வசந்தம்’’ போன்று மெய்யான ஜனநாயகங்களுக்காக இந்நாடுகளில் இயக்கங்கள் நடைபெற்றபோதிலும், இந்நாடுகள் பலநெருக்கடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. எகிப்தில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், முஸ்லீம் கட்சியின் செல்வாக்கின் கீழ் அடிப்படைவாதத்தை மேம்படுத்த முயன்றதால், அதற்கு எதிராக ராணுவம் தலையிட வேண்டியிருந்தது. அமெரிக்காவால் தூண்டப்பட்ட சிரியா மீதான உள்நாட்டு யுத்தம் லெபனான் போன்ற அண்டை நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது.
                       அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவாக, இராக்கில் பல்வேறு குழுக்கள் சண்டையிட்டுக் கொள்வதன்மூலம் பெரும்பான்மையான அப்பாவி மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று துனீசியா, லிபியா ஆகிய நாடுகளிலும் கிளர்ச்சிகள் நீடிக்கின்றன. சூடான் இரு நாடுகளாகப் பிரிந்திருக்கிறது. சோமாலியாவில் மிகவும் பயங்கரமானமுறையில் மோதல் தொடர்கிறது. இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்கத்தை விரிவாக்கிடுவதற்காக அனைத்து நாடுகளிலும் தலையிட்டுக் கொண்டிருப்பது தொடர்கிறது. அமெரிக்காவின் இத்தகைய மேலாதிக்க முயற்சிகளை புவிவெப்பமயமாதல் மற்றும் உலக வர்த்தக அமைப்பின்கீழ் விவசாயம் தொடர்பான ஒப்பந்தம் ஆகியவை குறித்த சர்வதேச பேச்சுவார்த்தைகளின்போதும் பார்க்க முடிகிறது. சமீபத்தில் முதலாவது நிகழ்ச்சிநிரல் தொடர்பாக வார்சாவிலும், இரண்டாவது நிகழ்ச்சிநிரல் தொடர்பாக பாலியிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, வளர்ந்த (முதலாளித்துவ) நாடுகள் பொருளாதாரத்தில் மீட்சி அடைவதற்கு சாதகமான நிலைமைகளை உருவாக்கக்கூடிய விதத்தில் வளர்முக நாடுகளை மிரட்டிப் பணியவைத்திடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைப் பார்த்தோம்.
                 துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய ஏகாதிபத்தியவாதிகளின் முயற்சிகளை எதிர்த்து நின்று வளர்முக நாடுகளின் பக்கம் அணிகோர்த்து நிற்பதற்குப் பதிலாக, அவர்களுடன் இணைந்து நின்று வளர்முக நாடுகளின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, இந்தியா ஏகாதிபத்தியத்தின் இத்தகைய நிர்ப்பந்தங்களுக்கு அடி பணிந்து போவது என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவால் இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் மிகவும் முரட்டுத்தனமாக நடத்தப்பட்டிருக்கும் நிகழ்ச்சியிலிருந்தாவது, இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாகக் குறைத்திருப்பவர்கள் தங்கள் கண்களைத் திறந்துகொள்ள முன்வர வேண்டும். ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக இந்தியாவை மாற்றியுள்ள இந்திய அரசாங்கத்தின் கொள்கையை மாற்றி அமைத்திட அரசாங்கத்தின் மீது வலுவான முறையில் நிர்ப்பந்தத்தை அளித்திட, 2014-ஆம்ஆண்டில், நாட்டு மக்கள் முன்வர வேண்டும்.
                 ஏகாதிபத்தியம் தன்னுடைய நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, நம் நாட்டைச் சுற்றிலும் உள்ள அண்டை நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில் இது மிகவும் முக்கியமாகும். சமீபத்திய தேர்தல்களுக்குப்பின் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்றதன்மை, வங்க தேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில் அடிப்படைவாத சக்திகள் உருவாக்கியுள்ள உள்நாட்டுப் பதற்ற நிலைமை, இந்தியாவிற்கு உண்மையான ஆபத்தாக இருக்கக்கூடிய விதத்தில் பாகிஸ்தானுக்குள் ஆப்கானிஸ்தானுடைய தலிபான் பயங்கரவாதம் பொங்கி வழிந்துகொண்டிருப்பது, மாலத்தீவில் உள்ள அரசியல் ஸ்திரமற்றதன்மை, இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே தொடரும் இனப் பதற்ற நிலைமை - இவை அனைத்துமே அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்க முயற்சிகளை பிரயோகிப்பதற்கு வளமான சூழ்நிலைகளாகும். இந்நிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையை உறுதியுடன் எடுக்கக்கூடிய விதத்தில் 2014-ஆம் ஆண்டில் இந்தியா வலுப்படுத்தப்பட வேண்டும்.
                  மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்திய அரசை இந்நிலைக்குப் பணிய வைக்க முடியும். எனவே, 2014-ஆம் ஆண்டு இந்திய மக்களைப் பொறுத்தவரை, நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திட வலுவான முறையில் மக்களைத் திரட்டுவதற்கான ஆண்டாகும். அதே சமயத்தில், சர்வதேச வளர்ச்சிப் போக்குகளின் எதிர்மறை அம்சங்கள் நம் நாட்டின் மீது விழாத விதத்தில், மிகவும் உறுதியான முறையில் நவீன தாராளமய எதிர்ப்பு/ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையினைப் பின்பற்றி, நாட்டைப் பாதுகாத்திடவும் வேண்டும். இதனை அடையக் கூடியவிதத்தில் வளர்முக நாடுகளுடன் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்திட வேண்டும். 2013-ஆம் ஆண்டு, உலகம் முழுதும் உள்ள மக்களின் விடுதலைக்காகவும், மனித குலத்தின் பொன்னான மார்க்கத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் மனிதரான நெல்சன் மாண்டேலாவின் மரணத்துடன் முடிந்திருக்கிறது.
                இன ஒடுக்கல் முறையிலிருந்து விடுதலை பெறுவதற்காகத் தென்ஆப்பிரிக்க மக்கள் நடத்திய போராட்டத்திற்குத் தலைமை தாங்கியபோது அவர் விடுத்த எழுச்சிமிகு அறைகூவல்: “உலகம் முழுதும் உள்ள மனிதகுலம் முழுமையாக அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறும் வரை - போராட்டம் தொடரும்.’’ முற்போக்கு உலகத்துடன் நாமும் இணைந்து நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தியபோது, அவர் விடுத்துச்சென்றுள்ள அறைகூவலை முன்னெடுத்துச் செல்வதற்கான நம் தீர்மானத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வோம், 2014ல் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்திடுவோம்.

தமிழில்: ச.வீரமணி  
நன்றி :
 

திங்கள், 2 ஜனவரி, 2012

ஒளிமயமான இந்தியாவை உருவாக்க போராடுவோம்....!

          
                   அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி கரமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
                          நம் வாழ்வாதாரங்களைத் தீர்மானிக்கக்கூடிய மூன்று முக்கியமான நிகழ்ச்சிப் போக்குகள் 2011இல் நடைபெற்று அவை 2012ஆம் ஆண்டிற்கும் தொடரவிருக்கின்றன.
                               முதலாவதாக, உயர்மட்ட அளவில் நிலவும் ஊழலை ஒழித்துக்கட்டுவதற்காக, அகில இந்திய அளவில் லோக்பால் சட்டமும், மாநிலங்கள் அளவில் லோக் அயுக்தா சட்டமும் கொண்டு வருவதற்கானதொரு சட்ட முன்வடிவு மக்களவையில் மட்டும் கடைசியில் நிறைவேறி இருக்கிறது. ஊழலை ஒழிப்பதற்காக இதுபோன்ற அமைப்புகள் கொண்டுவரப்படவேண்டும் என்பதற்காக ஒரு சட்ட முன்வடிவு முதன்முறையாக 1968 மே 9ஆம் நாள் நாடாளுமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்டது. ஆயினும், தேர்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே நான்காவது மக்களவை கலைக்கப்பட்டுவிட்டது. அதன்மூலம் அச்சட்டமுன்வடிவும் காலாவதியாகி விட்டது. அதேபோன்று 1971 ஆகஸ்ட் 11 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட முன்வடிவும் ஐந்தாவது மக்களவை கலைக்கப்பட்டதை அடுத்துக் காலாவதியானது. மறுபடியும் நாட்டிலிருந்த அவசரநிலைக்காலம் முடிவடைந்தபின் ஜனதா கட்சி அரசாங்கத்தின் காலத்தில், 1977 ஜூலை 28 அன்று கொண்டு வரப்பட்ட சட்டமுன்வடிவும், மற்றொரு தேர்வுக்குழு அதனைப் பரிசீலனை செய்து முடிப்பதற்கு முன்னமேயே ஆறாவது மக்களவை கலைக்கப்பட்டதால், காலாவதியாகிப்போனது.
                 மீண்டும் ஒருமுறை 1985 ஆகஸ்ட் 26 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட சட்டமுன் வடிவும் கூட்டுத் தேர்வுக்குழுவினரின் பரிந்துரைகளுடன் ஒத்துப்போக முடியாததால் வெளிச்சத்திற்கே வரவில்லை. போஃபர்ஸ் ஊழலை அடுத்து ராஜீவ் காந்தி அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஒரு லோக்பால் சட்டமுன்வடிவு 1989 டிசம்பர் 29 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும்கூட 1991 மார்ச்சில் ஒன்பதாவது மக்களவை கலைக்கப்பட்டதை அடுத்து காலாவதியானது. 1996இலிருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போது, மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்தின்பேரில் 1996 செப்டம்பர் 13 அன்று ஒரு சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மீது விரிவான ஆய்வினை மேற்கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு தன் அறிக்கையை 1997 மே மாதத்தில் சமர்ப்பித்தது. ஆயினும் மீண்டும் ஒருமுறை, இவற்றின் அடிப்படையில் ஒரு சட்டமுன்வடிவை இறுதிப்படுத்துவதற்கு முன்னமேயே பதினோராவது மக்களவை கலைக்கப்பட்டதால் இச்சட்டமுன்வடிவும் காலாவதியானது.
                    1996இல் 13 நாட்கள் மட்டும் ஆட்சி செய்துவிட்டு, ஆட்சியைவிட்டு அகன்ற பின், பின்னர் மறுபடியும் இரண்டாவது தடவையாக 13 மாதங்கள் ஆட்சி செய்த வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசாங்கம் 1998 ஆகஸ்ட்டில் ஒரு சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தியது. அதுவும் 1999இல் 12ஆவது மக்களவை கலைக்கப்பட்டதை அடுத்து காலாவதியானது. பின்னர் மூன்றாவது முறையாக அரசாங்கத்தை அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி , 2001 ஆகஸ்டில் அறிமுகப்படுத்திய ஒரு சட்டமுன்வடிவை பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைந்திருந்த நாடாளுமன்ற நிலைக்குழு மிகவும் ஆழமாகப் பரிசீலனை செய்து அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. ஆயினும் அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருந்த போதிலும் பாஜக அதனைச் சட்டமாக்கிட எந்தவிதமான முயற்சியும் எடுத்திடவில்லை. இப்போது ஒன்பதாவது முறையாக லோக்பால் சட்டமுன்வடிவும் லோக் அயுக்தா சட்ட முன்வடிவும் நாடாளுமன்றத்தின் முன் வந்திருக்கிறது. மக்களவையில் இது நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஒருவிதத்தில் இறுதியாக இதில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் கொள்ளவேண்டும்.
                  இரண்டாவதாக, இது நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு வந்திருப்பதால், அங்கே பரிசீலனைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்டத்தின்கீழ் அமைக்கப்படும் நிறுவனங்கள் வலுவானதாக அமைந்திட வேண்டும் என்பதற்காக, நான்கு முக்கிய பிரச்சனைகள் மீது திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அவற்றின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது.
                   இந்த அமைப்புகளுக்கு நியமிக்கப்படும் நபர்கள் மிகவும் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும், ஊழலுக்கு இடங்கொடாது, குற்றமிழைத்தோரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதை வெளிசக்திகள் தலையிட்டு தடுக்க முடியாத வகையில், சுயேச்சையாக இயங்கக்கூடிய வகையில் வலுவானதொரு புலனாய்வு எந்திரம் அளிக்கப்பட வேண்டும். இச்சட்டத்தின் அதிகார வரம்பெல்லைக்குள் கார்ப்பரேட்டுகள் மற்றும் அந்நிய நாடுகளிலிருந்து நிதி உதவி பெறும் அரசு சாரா அமைப்புகளையும் கொண்டுவர வேண்டும் . மாநிலங்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் பறிக்கப்படாது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி இந்தத் திருத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
                இவ்வாறு அளிக்கப்பட்ட திருத்தங்களில் ஒன்றோ அல்லது அதற்கும் மேலோ ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநிலங்களவையில் இச்சட்டமுன்வடிவு நிறைவேறும் பட்சத்தில், இச்சட்டமுன்வடிவு மக்களவைக்கு அவற்றை ஏற்பதற்காக மீளவும் அனுப்பப்பட வேண்டும். அரசாங்கம், லோக்பால் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் அமைப்புகள் மேலும் வலுவானதாக அமைந்திட ஏற்பட்டிருக்கக்கூடிய வித்தியாசங்களைச் சரிசெய்வதற்காகக் கூட்டு தேர்வுக் குழுவை  அமைத்திடலாம் அல்லது இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதன் மூலம் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முன்வரலாம்.
                 எது எப்படி இருந்தபோதிலும், உயர் மட்ட அளவில் நடைபெறும் ஊழலை ஒழித்துக்கட்டுவதற்காக, சரியான அமைப்புகளை உருவாக்குவதற்காக, கடந்த நாற்பதாண்டு காலமாக மேற்கொண்டுவந்த நீண்ட நெடிய போராட்டம் கடைசியாக 2012  - இல் அமைவதற்கான வாய்ப்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஆயினும், இதுவும் தாமாகவே ஏற்பட்டுவிடாது. இதற்கான நிர்ப்பந்தத்தை மக்களின் மகத்தான போராட்டங்கள் மூலமாக அரசுக்கு தொடர்ந்து இடைவிடாது அளித்துக் கொண்டிருக்கவேண்டும்.
                    மூன்றாவதாக, அன்னா ஹசாரே தன்னுடைய உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்டிருக்கிறார். தன் சிறை நிரப்பும் போராட்டத்தையும் நிறுத்தி வைத்திருக்கிறார். ஆயினும் அவர், நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் பிரச்சாரம் செய்யவிருப்பதாகப் பிரகடனம் செய்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கதே. ஒரு ஜனநாயக நாட்டில், அரசியல் இயக்கங்களின் உயிர்த்துடிப்புடன் மக்கள் எந்த அளவிற்கு அதிகமாக அரசியல் இயக்கங்களில் பங்குபெறுகிறார்களோ அதனை அடிப்படையாக வைத்துத்தான் அந்நாட்டின் ஜனநாயகத்தின் முதிர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் பார்த்தோமானால் அன்னா ஹசாரேயும் அவர் தம் குழுவினரும் அரசியல் இயக்கங்களில் பங்களிக்க முன்வந்திருப்பதும், தங்கள் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருப்பதும் அவர்களின் நிலைப்பாடு சரியா, இல்லையா என்பதை இனி மக்கள் தீர்மானித்துக்கொள்ள விட்டிருப்பதும் வரவேற்கத் தக்கதேயாகும்.
                    ஆயினும், உயர்மட்ட அளவில் நடை பெறும் ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் முழுமையாக வரவேற்கத்தக்கதே என்ற போதிலும், இவர்களது பிரச்சாரத்தில் ஒரு முக்கியமான அம்சம் அநேகமாகக் காணப்படவில்லை அல்லது கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது. அது என்ன வெனில், இன்று காணப்படும் மிகப்பெரிய அளவிலான ஊழல்கள் அனைத்தும் கடந்த இருபதாண்டுகளில் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த பொருளாதாரச் சீர்திருத்தங்களின் கீழேதான் நடந்துள்ளன. ஊழல் என்பது சான்றோர் பழிக்கும் வினையாகத்தான் நம் சமூகத்தில் காலங்காலமாய் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இன்றையதினம் நம்மைச் சுற்றியும் காணப்படும் ஊழல் என்பது மிகவும் வித்தியாசமானவைகளாகும். பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள்தான் மக்கள் மத்தியில் அறநெறியற்ற குணங்களையும், இழிவழிகளிலும் திடீர்ப் பணக்காரர்கள் ஆவதற்கான வாய்ப்பு வசதிகளையும் உருவாக்கித் தந்திருக்கின்றன. இன்றைய தினம் நாட்டில் உயர் மட்ட அளவில் நடைபெறும் ஊழலின் முக்கிய காரணிகளாக விளங்கும் கார்ப்பரேட்டுகளையும், தனியார்களையும் லோக்பால் சட்டத்தின் அதிகார வரம்பெல்லைக்குள் கொண்டுவர வேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் மட்டுமேயாகும். இவ்வாறாக ஊழலை ஒழிப்பதென்பது அறநெறி சார்ந்த ஒன்று மட்டுமல்ல, நம் மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை அளிப்பதனை மறுத்திடக்கூடிய வகையில் சமூக நலத் திட்டங்களுக்கு கிடைக்க வேண்டிய வள ஆதாரங்களை மிகப்பெரிய அளவில் திருப்பிவிடக்கூடிய நடவடிக்கைகளுக்கும் எதிரானதாகும்.
                   உயர்மட்ட அளவில் நிலவும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்துடன் சரியான முறையில் இணைத்திடாமல் வலுவான முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியாது. நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் உயர்மட்ட அளவில் ஊழல் புரிந்திட ஏற்படுத்திக்கொடுத்துள்ள ஓட்டைகளை அடைக்காமல், அவர்கள் புரிந்திடும் ஊழல்களை ஒழிக்க முடியாது. இதனை நன்கு கணக்கில் எடுத்துக் கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவற்றின் மீதான போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்ல உறுதி பூண்டுள்ளது.
                  ஆயினும் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டம், மன்மோகன் சிங் அரசாங்கமானது முன்னிலும் மோசமான முறையில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறது. இதன் பொருள், ஒரு பக்கத்தில் உலகப் பொருளாதார மந்தம் ஆழமாகியுள்ள பின்னணியில் நம் நாட்டு மக்களில் பெரும்பான்மையோர் வாழ் நிலைமை மேலும் மோசமாக வீழ்ச்சியுறும் அதே சமயத்தில், மறுபக்கத்தில் உயர் மட்ட அளவில் இயங்குபவர்களின் ஊழல் மூலமாகவும், அறநெறியற்ற நடவடிக்கைகளின் விளைவாகவும் நம் நாட்டின் செல்வாதாரங்கள் மேலும் கொள்ளையடிக்கப்படும். எனவேதான் புத்தாண்டில் நாட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைத் தக்க வைத்துக்கொண்டு முன்னேற்றப்பாதையில் சென்றிட, ஆட்சியாளர்களின் இத்தகைய சீர்திருத்தங்களுக்கு எதிராக வலுவான போராட் டங்களுக்குத் தயாராகிட வேண்டும்.
                அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கக்கூடிய பின்னணியில் மக்களின் வாழ்க்கைச் சுமைகள் தொடர்கின்றன. இவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் அரித்திடுவதற்கு இட் டுச்செல்லுமாகையால், சிறந்ததோர் வாழ்க்கை மற்றும் ஒளிமயமான எதிர் காலத்திற்கான போராட்டங்கள் தீவிரப் படுத்தப்பட வேண்டும்.
               சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்காகவும் நாட்டு மக்களுக்கு நல்லதோர் வாழ்க்கையை அளிப்பதற்காகவும் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்குத் தயாராக வேண்டும்.
                     நாட்டு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றிடவும், ஒளிமயமான இந்தியாவை உருவாக்கிடவும் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறோம்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

புதியதோர் உலகம் செய்வோம் - புதிய ஆண்டில் உலக அமைதி காப்போம்...!

                      இன்று புதிய ஆண்டு 2012 பிறந்துவிட்டது... அதுவும் குறிப்பாக புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் ''தானே'' கோரப்புயலின் தாக்குதல் காரணமாக, இந்த பகுதிகளில் 2012 - ஆம் ஆண்டு மிகவும் சிரமப்பட்டு பிரசவம் ஆனது. சென்ற ஆண்டு  2011 நம் நாட்டு மக்களைப் பொறுத்தவரை சிரமமான ஆண்டாகத் தான் சென்றது. 
                 சென்ற ஆண்டில் மக்களுக்கு தேவைக்கேற்ற வருமானம் இல்லை. விலைவாசியோ விண்ணைத்தாண்டி உயர்ந்துகொண்டே போனது...
                    போதாக்குறைக்கு ஆட்சியாளர்கள் வேறு... பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை தாறுமாறாக உயர்த்திவிட்டார்கள்.
                    இது போன்ற மக்களின் பிரச்சனைகளை விவாதிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சியும், பாரதீய  ஜனதா கட்சியும் கூட்டு சேர்ந்து முடக்கியது ஒரு புறம்...
               அப்பப்பா ஏகப்பட்ட ஊழல் அணிவகுப்புகள்... மக்களே திணறிப்போனார்கள். ஒரு பக்கம் ஏழ்மை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது... இன்னொருப்பக்கம் வளமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சென்ற ஆண்டும் ஏழ்மையான  இந்தியா - வளமையான இந்தியா என்ற இரண்டு வகையான இந்தியாவில் மாற்றமில்லை. மாறாக இந்த இரண்டு இந்தியாவிலும் வளர்ச்சி என்பது அதிகம். இது தான் ஆட்சியாளர்களின் சாதனையாக கூசாமல் எடுத்து சொல்கிறார்கள்.  
               உலகில் இந்தியாவைத் தவிர பல நாடுகளில் ஆட்சியாளர்களினால் - குறிப்பாக ஏகாதிபத்தியத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் விழித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது சென்ற ஆண்டின் நல்ல அம்சமாகும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளிலும் தன்னெழுச்சியாக எழுந்த மக்களின்  எழுச்சியை உலகம் பார்த்து அதிசயித்தது. ஏகாதிபத்தியம் மிரண்டு போனது.
            தென்னிந்தியாவில் சகோதரர்களுக்குள் அணைக்காக மோதிக்கொண்டார்கள். அமைதிப்படுத்தவேண்டிய ஆட்சியாளர்கள் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நாட்டிலுள்ள ஊழல், விலைவாசிப்பிரச்சனை போன்றவற்றை திசைத்திருப்புவதற்கு இந்த மோதல்கள் ஆட்சியாளர்களுக்கு தேவைப்பட்டது.
           இப்படியாக சென்ற ஆண்டு சோதனைகளும், சாதனைகளும் கலந்த ஆண்டாக சென்று விட்டது.
           மாவீரன் பகத்சிங் சொன்னது போல் ''பாலுக்கு அழும் குழத்தை... கல்விக்கு ஏங்கும் மாணவன்... வேலை தேடும் இளைஞன்... வறுமையில் வாடும் தாய்... இவர்கள் இல்லாத உண்மையான சுதந்திர இந்தியாவை'' இந்த புத்தாண்டில் நாம் காண வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்... இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்... அதற்காக போராட  இப்புத்தாண்டில் நாம் உறுதியேற்க வேண்டும்....
               போரில்லா உலகத்தை - அமைதியான உலகத்தைப் படைக்க போராட நாம் இப்புத்தாண்டில் உறுதியேற்க வேண்டும். 
                   புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டப் 
                          போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
            இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....