புதன், 30 ஏப்ரல், 2014

வளர்ச்சி யாருக்கு....? - பெருநிறுவனங்களுக்கா... மக்களுக்கா...?


  கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன், 
                                  மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி             
              16-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 7-ல் துவங்கி மே 12-ம் தேதியுடன் முடிவடைகிறது. தனி விமானத்திலும் ஹெலிகாப்டரிலும் காங்கிரஸ் தலைவர்களும், பா.ஜ.க. தலைவர்களும் நாடு முழுவதும் பறந்து பறந்து பிரச்சாரம் செய்தார்கள், செய்கிறார்கள்.
            அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் தேர்தல் பிரச்சாரங்களைச் செய்திகளாகவும் காட்சிகளாகவும் வெளியிட்டன, வெளியிட்டுவருகின்றன. தேர்தல் முடிவுபற்றிய கருத்துக்கணிப்புகளும் வருகின்றன. ஆனாலும், தேர்தலில் விவாதப்பொருளாக இடம்பெற வேண்டிய முக்கியமான பிரச்சினைகள் வாக்காளர்களின் கவனத்துக்கு வராமலேயே போய்விட்டன. 

கேள்விக்கென்ன பதில்?                        
 
            விவசாயம் ஏன் நலிந்துவருகிறது? சிறு குறுதொழில்கள் ஏன் நெருக்கடியில் உள்ளன? வேலையின்மை ஏன் அதிகரித்துவருகிறது? நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின் அடிப்படை வசதிகள் ஏன் தீர்க்கப்படாமல் உள்ளன? பெரும்பான்மையான மக்கள் ஏழ்மையில் உழல்கின்றபோது, விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டும் டாலர் பில்லியனர்களாகக் கொழுத்துள்ளார்களே, எப்படி? இது போன்ற கேள்விகளை எழுப்பாமல், நாங்கள் வந்தால் ‘வானத்தை வில்லாக வளைப்போம்; மணலைக் கயிறாகத் திரிப்போம்!’ என்றரீதியில் வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு விடைகாண கடந்த 23 ஆண்டுகாலமாக அமலாக்கப்பட்ட, தற்போது அமலில் உள்ள நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையைப் பின்நோக்கிப் பரிசீலிக்க வேண்டும். 

சுரண்டல் வரலாறு                    
 
           இந்தியா, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் காலனியாக அடிமைப்பட்டுக் கிடந்தபோது, சராசரியாக இந்திய உற்பத்தியில் 10% ஆண்டுதோறும் ஆங்கிலேயர்கள் இங்கிலாந்துக்கு எடுத்துச்சென்றனர். இந்த உபரி அந்த நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. சொல்லப்போனால், வரலாற்றில் ஒரு கட்டத்தில், குறிப்பாக 18-ம் நூற்றாண்டின் இறுதியில் (1795) இங்கிலாந்தின் மொத்த உற்பத்தியைவிட (157.44 மில்லியன் பவுண்டுகள்) இந்தியாவின், குறிப்பாக வங்கம், பிஹார் ஆகிய பகுதிகளின் மொத்த உற்பத்தி மதிப்பு அதிக அளவில் (214 மில்லியன் பவுண்டுகள்) இருந்தது எனத் தனது ஆய்வு நூலில் வல்லுநர் அமியகுமார் பக்ஷி கூறுகிறார்.
              இந்தியாவைவிட மிகவும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருந்த இங்கிலாந்து, காலனி நாடுகளைக் கொள்ளையடித்து, பொருள் உற்பத்தியில் உலகத்தின் முதன்மையான நாடாக (முதல் உலகப் போர் வரையில்) தன்னை வளர்த்துக்கொண்டது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, நேரடியான காலனி ஆதிக்கம் சாத்தியமில்லாமல் போயிற்று.
           ஆனால், நவீனத் தாராளமயக் கொள்கை மூலமாக மேலைநாடுகள் கொள்ளையை (காலனி ஆதிக்கத்தின் போது இருந்ததை விடப் பல மடங்கு) புது வடிவத்தில் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. 

வளர்ச்சி யாருக்கு?                     
 
            கடந்த 23 ஆண்டு காலமாக (6 1/2 ஆண்டுகள் பா.ஜ.க., 16 ஆண்டுகள் காங்கிரஸ்) காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் ஆட்சியில் இருந்தன. இக்காலத்தில் இரண்டு கட்சிகளின் தலைமையிலான அரசுகள் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கையால், ஆண்டுக்குச் சராசரி யாக 6% வளர்ச்சி ஏற்பட்டது. இந்த வளர்ச்சியின் பலன் யாருக்குச் சென்றது?
           சுமார் 120 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில், 70 பணக்காரர்கள் டாலர் பில்லியனர்களாக வளர்ந்தனர். இந்த டாலர் கோடீஸ்வரர்கள் 70 பேரின் மொத்தச் சொத்து மதிப்பு, நாட்டின் மொத்த உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு என்பது நம்மை மலைக்க வைக்கிறது. மறுபுறம், கிராமப்புறங்களில் 80% மக்களும் நகர்ப்புறங்களில் சரிபாதியினரும் நாள் ஒன்றுக்கு ரூ. 50 கூடச் செலவுசெய்ய முடியாத ஏழ்மையில் உள்ளனர்.
          ஏற்பட்ட வளர்ச்சியும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவில்லை. உருவாகியுள்ள தொழில்களிலும் முறைசாராத் தொழில்களிலும் கூலி மிகவும் குறைவு. சமூகப் பாதுகாப்பு எதுவும் இல்லை. வேளாண்மை நெருக்கடிக்கு உள்ளாகிக் கடந்த 15 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 லட்சம் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர்.
               அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையினால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கேந்திரத் தொழில்களில் பலமாகக் காலூன்றியுள்ளன. அவர்களும் இந்தியப் பெருமுதலாளிகளும் தங்கள் லாபத்தைத் தங்குதடையின்றி வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்கின்றனர்.
             சலுகைசார் பொருளாதாரக் கொள்கையினால் வளர்ந்துள்ள பல இந்தியப் பெருநிறுவனங்கள், இந்தியாவில் மூலதனம் செய்து தொழில் தொடங்காமல் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் தொடங்குகின்றனர். கடந்த 2013 ஏப்ரல் முதல் 2014 பிப்ரவரி வரை மட்டுமே சுமார் 29 பில்லியன் ( ஒரு பில்லியன் என்பது 100 கோடி) அமெரிக்க டாலர் அளவுக்கு மூலதனத்தை வெளியே கொண்டுசென்றுள்ளனர்.
            இங்குள்ள உழைப்பாளிகளைச் சுரண்டியும் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் அடிமாட்டு விலைக்குப் பெற்றும் சேர்க்கப்படுகின்ற மூலதனத்தை இங்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவாமல், வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்கிறார்கள். காலனி ஆதிக்க நாட்டில் நடந்ததைப் போல் தற்போது பல வடிவங்களில் சுரண்டல் நடைபெறுகிறது. 

மெகா ஊழல்களின் காலம்                     
 
           மேலும், நவீனத் தாராளமயக் கொள்கை அமலாக்கம் தொடங்கிய பிறகுதான் மெகா ஊழல்கள் நடந்துள்ளன. இதற்கு முன்பு ஊழல் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், ஆளும் அரசியல்வாதிகள், முதலாளிகள், அதிகாரிகள் போன்றோரின் கூட்டுக்கொள்ளை (2ஜி, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு போன்றவை) இன்றைய பொருளாதாரக் கொள்கையுடன் ஒட்டிப்பிறந்த ஒன்று. இயற்கை வளங்களைப் பெருநிறுவனங்கள் கொள்ளை யடிக்க அனுமதிப்பதோடு, அரசின் நிதிவருவாயைப் பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளாக வழங்குவதும் இன்றைய பொருளாதாரக் கொள்கையின் முக்கிய அம்சம்.
            இதுதான் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் பொருளாதாரக் கொள்கை. நாட்டில் ஏற்பட்டுள்ள மக்களின் அனைத்து வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கெல்லாம் மேற்கண்ட பொருளாதாரக் கொள்கையே அடிப்படைக் காரணம்.
          மாநிலங்களில் அதிகாரத்துக்கு வரும் மாநிலக் கட்சிகளும் இதே கொள்கைகளைத்தான் அமலாக்கிவருகின்றன. உதாரணமாக, 2003-ம் ஆண்டு பா.ஜ.க. கொண்டுவந்த மின்சாரச் சட்டத்தை தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் ஆதரித்தன. இடதுசாரிக் கட்சிகள் நீங்கலாக, அனைத்து மாநிலக் கட்சிகளும் தாராளமயக் கொள்கைகளின் தீமைகளைப் பற்றிப் பேசுவது கிடையாது.
          இடதுசாரிக் கட்சிகளின் பிரச்சாரங்களைத் தவிர, வேறு எந்தக் கட்சிகளின் பிரச்சாரங்களிலும் தேர்தல் அறிக்கைகளிலும் இந்தப் பிரச்சினைகள் இடம்பெறாமல் போய்விட்டது அவலமே. பெருநிறுவனங்களின் பிரதிநிதிகளே நாடாளுமன்றத்துக்குச் செல்லவிருக்கிறார்கள் என்பதன் அறிகுறியன்றி வேறென்ன இதெல்லாம்?

மே தின புரட்சிப் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடிப்போம்....!

கட்டுரையாளர் : தோழர். ஏ.கே.பத்மநாபன்                
                                 அகில இந்திய தலைவர், இந்திய தொழிற்சங்க மையம்.             

            மே தினக்கொண்டாட்டங்கள் உலகம் முழுதும் தொழிலாளர் வர்க்கத்தினிடையே போராட்ட உணர்விலும், ஒருமைப்பாட்டிலும் புத்தெழுச்சியை ஏற்படுத்திடும். இந்த ஆண்டு, உலகம் முழுதும் மே தினத்தைக் கொண்டாடுகையில், இந்தியத் தொழிலாளி வர்க்கம் மிகவும் முக்கியமானதொரு அரசியல் போராட்டத்தினை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தின் 16-ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல்களில் பாதி ஏற்கனவே முடிந்துவிட்டது. இவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தல் களத்திலும், இந்தியத் தொழிலாளி வர்க்கம், உலகின் பல பகுதிகளிலும் உழைக்கும் மக்களில் பெரும் பகுதியினரின் முக்கிய கோரிக்கைகளாகவுள்ள பல அம்சங்களை உயர்த்திப் பிடித்திருக்கின்றன.
           ஊதியங்கள், வேலைப் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூகப்பாதுகாப்பு போன்ற கொள்கைகளுடன், உழைக்கும் மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமை ஆகிய அனைத்தும் இன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் முக்கிய கோரிக்கைகளாக அமைந்துள்ளன. இவற்றிலிருந்து இந்தியத் தொழிலாளி வர்க்கமும் வேறுபடவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே நம் நாட்டில் கடந்த 23 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்தவைகளாகும்.
           தங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளுடன் நேரடியாகவும், நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களின் எதிர்காலத்துடனும் சம்பந்தப்பட்ட இப்பிரச்சனைகள் மீது உழைக்கும் மக்கள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தியத் தொழிலாளி வர்க்கம் மேற்கொண்டுள்ள போராட்டம் என்பது கடந்த ஐந்தாண்டுகளாக அது நடத்திவரும் பிரம்மாண்டமான ஒன்றுபட்ட போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். வரலாறு படைத்திட்ட நாடு தழுவிய பொது வேலைநிறுத்தங்கள் உட்பட ஒன்றுபட்ட இயக்கம் மற்றும் பல்வேறு துறையினர் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் என்பவை அரசாங்கம் பின்பற்றி வரும் கொள்கைகளை மாற்றுவதற்கான அவசியத்தின்மீது கவனம் செலுத்தும் வகையில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். அந்தவிதத்தில் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் பிரம்மாண்டமான போராட்டங்களுடன் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் நடத்திய போராட்டங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவைகளேயாகும்.

நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் முதலாளித்துவ உலகம்                 

          கடந்த சில ஆண்டுகளாக முதலாளித்துவ உலகம் கடும் நெருக்கடிக்குள் சிக்கி வெளிவரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதன் பாதிப்புகள் உலகம் முழுதும் உள்ள சாமானிய மக்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளன. ஐரோப்பாவில் நடைபெறும் போராட்டங்களும் மற்றும் உலகின் பல கண்டங்களிலும் நடைபெறும் போராட்டங்களும் இந்நெருக்கடியின் ஆழமான பாதிப்புகளுக்கு எதிரானவை களேயாகும்.
         ஐரோப்பாவில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. வேலையின்மை கிரிஸில் 27.4 சதவீதம், ஸ்பெயினில் 26.7 சதவீதம், போர்த்துக்கல்லில் 15.5 சதவீதம், பல்கேரியாவில் 12.9சதவீதம், இத்தாலியில் 12.7 சதவீதம்என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலைமை இன்னும் மோசம். உலகம் முழுதும் உள்ள நாடுகளில் வேலையில்லாதோர் பட்டாளத்தில் இவர்கள்தான் பெரும் பகுதியினராவார்கள். இவ்வாறு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதானது, வேலையிலிருப்போரின் ஊதியங்களிலும் மற்றும் அவர்களின் சமூகப்பாதுகாப்புப் பயன்களிலும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
           இவ்வாறு நிகழும் என்றுதான் வரலாறும் நமக்குச் சொல்லித்தந்திருக்கிறது. ‘சிக்கன நடவடிக்கைகள்’ என்ற பெயரில் ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உண்மையில் நெருக்கடியை மேலும் உக்கிரப்படுத்தி, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மேலும் கடுமையான முறையில் தாக்குதல்களைத் தொடுத்துள்ளன. இதுநாள்வரையில் நவீன தாராளமயக் கொள்கைகளுக்குத் தத்துவார்த்தரீதியில் ஆதரவாக இருந்தவர்கள்கூட தற்போது ஆளும் வர்க்கத்தினரும், சர்வதேச நிதியம் மற்றும் ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி போன்றவற்றின் கட்டளைகளை ஏற்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ஏப்ரல் 4 அன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஐரோப்பா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.
          “மாற்று ஐரோப்பா சாத்தியமே’’, என்றும், “சிக்கன நடவடிக்கைகள் ஒழிக’’ என்றும் முழக்கமிட்டவண்ணம் அவர்கள் பேரணியாகச் சென்றுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றிய ஆட்சியாளர்கள் வேலையின்மை, வறுமை மற்றும் சமத்துவமின்மையை ஒழித்திட முன்வரவேண்டும் என்று பேரணியில் வந்தோர் முழக்கமிட்டுள்ளார்கள்.துரதிர்ஷ்டவசமாக, உலகின் பல பகுதிகளில் அநீதிக்கு எதிராகவும், அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் நடத்திடும் இத்தகைய பிரம்மாண்டமான இயக்கங்கள், “வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத்தில்’’ நடந்ததைப் போலவே, அரசியல் திசை தெரியாமல், தொழிலாளர்கள் தங்கள் கோபத்தைக் காட்டுவதோடு அப்படியே அமிழ்ந்து போய்விடுகின்றன.

தொழிலாளி வர்க்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்                   

             மே தினம் இப்பிரச்சனைகள் அனைத்தையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறது. முதலாளித்துவம் உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டிக் கொழுப்பதன் மூலமே நீடித்திருக்க முடியும். இப்போது நாம் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான நெருக்கடிகளும் இந்த முதலாளித்துவ அமைப்பு உருவாக்கியவைகளேயாகும். எனவே இந்த அமைப்புமுறையையே எதிர்த்திட வேண்டும். தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் பிரிவினர் அனைவரும் அன்றாடம் அவர்கள் மேற்கொள்ளும் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களுடன் நன்கு இணைக்கப்பட வேண்டும்.
          ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளுக்குப் பின்னே இருக்கின்ற அரசியலையும் தோலுரித்துக் காட்டிடவேண்டும். இவை அனைத்தும் நம்முன் உள்ள மிக முக்கிய அம்சங்களாகும். முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று மே தின எழுச்சி கோருகிறது. இன்றைய உலகில் அல்லது இது தொடர்பாக நம் நாட்டிலும் நம் நடவடிக்கைகள் ஆட்சியாளர்களின் பொருளாதார, அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கொள்கைகளுக்கு எதிராக உக்கிரப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்குதல் நம் சமுதாயத்தின் சமூக வலைப்பின்னலையே அரித்து அழித்துக் கொண்டிருப்பதை ஆழமாக ஆய்வு செய்து அதற்கு எதிராகச் செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். நாட்டில் 45 கோடிக்கும் மேலான உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் மிகவும் குறைந்த அளவிலானவர்களே வெகுஜன ஸ்தாபனங்களில் அணிதிரட்டப்பட்டிருக்கிறார்கள்.
          எனவே நம்முன் உள்ள பிரதான கடமை, நம் நாட்டில் தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்த வேண்டியதாகும். மேலும் தொழிற்சங்க இயக்கம் நாட்டுப்புற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகளையும் தங்கள் பிரச்சனைகளாகக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் நாட்டின் உழைப்பாளர் பட்டாளத்தில் அவர்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்களாகும். அவர்கள் மிகவும் கருணையற்ற முறையில் சூறையாடப் பட்டுவருகிறார்கள். அதன் விளைவாக நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள அவலநிலை தொடர்கிறது. உழைக்கும் மக்கள் மத்தியிலே இன்றளவும் நீடிக்கும் நிலப்பிரபுத்துவ மற்றும் சீர்திருத்த சிந்தனைகள் நம்முன் உள்ள மற்றுமொரு மாபெரும் சவாலாகும். இது நம் பணியை மிகவும் சிக்கலானதாக ஆக்கியிருக்கிறது. தொழிற்சங்கங்களை வர்க்கக் கண்ணோட்டத்தில் வலுப்படுத்த வேண்டியதும், உழைக்கும் மக்கள் மத்தியில் விஞ்ஞான சோசலிசப் புரிந்துணர்வைப் பரப்புவதும் மிகவும் அவசியமாகும்.இவற்றுடன், நம் நாட்டிற்கென்று பிரத்யேகமான சில பிரச்சனைகள் இருக்கின்றன.
           இவற்றையும் நம் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களின் போது கையில் எடுப்பதுடன், இவற்றின்மீது ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களையும் அதன் தலையீடுகளையும் கவனத்தில் கொள்வதும் மிகவும் முக்கியமாகும். இந்த ஆண்டு முதல் உலகப்போர் ஆரம்பித்த நூறாவது ஆண்டாகும். உலகில் 20-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் உலகம் மற்றொரு உலக யுத்தத்தை எதிர்கொண்டு அதன் விளைவாக எண்ணற்றவர்கள் பலியானதும், அவர்களின் உடைமைகளுக்கு அபரிமிதமான இழப்பு ஏற்பட்டபோதிலும், யுத்த முஸ்தீபு மேற்கொள்ளப்படுவதற்கு இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வில்லை. ஏகாதிபத்திய நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நாடுகளைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. சிரியா, வெனிசுலா, பாலஸ்தீனம், கியூபா போன்ற நாடுகளில் ஏகாதிபத்திய சக்திகளின் சதிகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மேற்கொண்டுவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நாமும் நம் எதிர்ப்புக் குரலினை எழுப்பிட வேண்டும்.
           ஏகாதிபத்தியவாதிகளின் தாக்குதல்களால் லிபியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானம் பலியாகி இருப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். மே தினம் என்பது நம்முன் உள்ள பணிகளை நினைவுகூர்வதற்கான வாய்ப்பாகும். சிஐடியு-வின் நிறுவனத் தலைவரான தோழர்.பி.டி. ரணதிவே, மே தினத்தின் புரட்சிப் பாரம்பரியங்களை நினைவுகூர்ந்து நமக்குக் கூறியிருப்பதாவது:  “மே தினத்தின் புரட்சிப் பாரம்பரியம் என்பது எப்போதும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கே முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும், தொழிலாளி வர்க்கம் அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்'' என்றும் சபதம் ஏற்பதுடன் ''நம் பகுதி கோரிக்கைகள் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டுடன் இணைக்க வேண்டும்'' என்பதாகும்.
           இந்த மாபெரும் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடித்து, இந்தியாவில் இன்றைய தினம் தொழிலாளி வர்க்கம் சமூக விடுதலை மற்றும் சோசலிசத்திற்கான குறிக்கோளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துடன் பகுதி கோரிக்கைகளுக்கான போராட்டத்தையும் இணைத்திடக்கூடிய வகையில் சபதம் ஏற்போம்.     
            வர்க்கப் போராட்டத்தின் வீரர்கள் மற்றும் எண்ணற்ற தியாகிகளின் மாபெரும் தியாகம் ஆகியவற்றை நெஞ்சில் ஏந்தி, போராட்டப் பதாகையை உயர்த்திப்பிடித்து, முன்னேறுவோம்.
           வாழ்க மேதினம்...! தொழிலாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக...! புரட்சி ஓங்குக....!

தமிழில் : ச.வீரமணி

சனி, 26 ஏப்ரல், 2014

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி : புரட்சிகரப் பாதையில் 50 ஆண்டுகள் ....!

கட்டுரையாளர் : தோழர். பிரகாஷ் காரத்        
                                பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி         
         தேர்தல் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு இடையிலேயே, முதலாளித்துவ ஊடகங்களில் சில, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது சேற்றை வாரிவீசுவதற்கும் தவறவில்லை. ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இதே ஏப்ரல் மாதத்தில் தான் அன்றைக்கு இருந்த ஒன்று பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்திலிருந்து 32 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து, அதன் பின்னர் சில நாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தார்கள்.
          1964 ஏப்ரல் 11 அன்று இது நடந்தது. அதன் ஐம்பதாம் ஆண்டின் தொடக்கத்தைக் கொண்டாட இருக்கும் நிலையில், முதலாளித்துவ ஊடகங்கள் நம் கட்சி துவங்கிய 50ஆம் ஆண்டு தினத்தினை நினைவு கூர்வதுபோல் நினைவுகூர்ந்து நம்மீது தாக்குதல் தொடுக்க தயங்கவில்லை. ஒரு முன்னணி மலையாள நாளிதழ், இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறது. “கொள்கைகளும் தோல்விகளும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 50 ஆண்டுகளை வீணடித்துவிட்டது.’’ (2014 ஏப்ரல் 12) என்று தலைப்பிட்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மிகவும் விரிவான முறையில் கதை புனைந்திருக்கிறது. “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்து பல் வேறு கதைகளை அது அளந்துவிட்டு, கடைசியாக அது “மார்க்சிஸ்ட் கட்சி வர்க்கங் களின் இயற்கை குணம் மாற்றங்கள் அடைந்திருப்பதை கணக்கில் கொள்ளாததால் அதனால் முன்னேறிச்செல்ல முடியாமல் இருக்கிறது,’’ என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்தியாவில் வெளியாகும் `இளஞ்சிவப்பு’ முன்னணி செய்தித்தாள்களில் ஒன்று தன்னுடைய தலையங்கத்தில், “வரலாற்றை எதிர் கொள்ளல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 50ஆம் ஆண்டு விழாவைத் தொடங்குகையில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்வது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
             உண்மையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதைத்தான் துல்லியமாகக் கோருகிறது. புதிய சவால்களை அடையாளம் கண்டு அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழைவு. ஆயினும் அந்நாளேடு தன் தலையங்கத்தில் மேலும் அடிக்கோடிட்டுக் கூறியிருப்பது என்ன தெரியுமா? “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனுடைய வரலாற்றில் மாபெரும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறது. அதாவது, இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமற்ற ஒன்று என்கிற அச்சுறுத்தலை அது எதிர்கொண்டிருக்கிறது.’’ ஏன்?...“ஏனெனில், அதன் தலைமை இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பம் மற்றும் தொழி லாளி வர்க்கத்தின் குணாம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அது கண்டுகொள்ளவில்லை.’’இவ்வாறு நம்மீது விமர்சனம் செய்துள்ளவர்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகளின் சாராம்சத்தை எடுத்துக் கொள்வதற்கு முன்பு, ஒன்றை அடிக்கோடிட்டுச் சொல்வது அவசியமாகும்.
           மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது எப்போதுமே காலந்தோறும் மாறி வரும் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்ற விதத்தில் தன் கொள்கைகளை கோட்பாடுகளை அமைத்து, அதன் அடிப்படையில் தான் கொள்கைகளை நடைமுறையில் பின்பற்றி வந்திருக்கிறது. மார்க்சிய - லெனினியத்தின் உயிரோட்டமான சாராம்சம் என்பதே துல்லியமான நிலைமைகளின் துல்லியமான ஆய்வுதான். அதன் அடிப்படையில்தான் அது செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கிறது. நிலைமைகள் தொடர்ச்சியாக மாறுவதால், அதற்கேற்ற விதத்தில் மார்க்சிய நுண்ணாய்வையும் மாற்ற வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறுமேயானால், உண்மையில், நாம் மார்க்சியத்தையே - அதன் புரட்சிகர உள்ளடக்கத்தையும், அதனுடைய விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுக் கோட்பாட்டையுமே - மறுதலித்தவர்களாகிறோம். மார்க்சியம் மிகவும் விஞ்ஞானப்பூர்வமானது என்பதையும், எனவே, ஓர் ஆக்கப்பூர்வமான விஞ்ஞானம் எப்போதுமே வறட்டுத்தனமின்றி இயல்பானதாகவும், இயற்கையானதாகவும், மெய்யானதாகவும் இருந்திடும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் உயர்த்திப்பிடித்தே வந்திருக்கிறது.
           ஆம். இந்த அடிப்படையில்,நம்முடைய சமூகக் கட்டமைப்பில் பல்வேறு வர்க்கங் களின் இயக்கத்தில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, முதலாளித்துவத்தின் வளர்ச்சியானது, முழுமையாக முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் இன்னமும் மாறாத பல்வேறு சமூக அடுக்கு களைக் கொண்ட நம்முடைய அமைப்பின்மீது - அதாவது சாதிய அடுக்குகளும் மற்றும் அதன் தொடர்ச்சியாக எழும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்குமுறையை ஏவி, அதீதமான அளவில் ஆதிக்கம் செலுத்த முன்வருகையில், இது மிகவும் அவசியமாகிறது. ஆனால் இந்த விமர்சகர்கள் முன்வைக்கும் விஷயம் அப்படியானதல்ல. அவர்கள் கூறும் விமர்சனங்கள் வேறானவைகளாகும்.
            நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் ’மேதைகள்’ இப்போது சொல்வது என்ன? காரல் மார்க்ஸ் காலத்தில் இருந்த முதலாளித்துவத்தின் கீழ் இருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணாம்சம் இன்றுள்ள தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடையாதாம். அன்றைக்கு இருந்ததுபோல் கரத்தால் உழைக்கும் தொழிலாளர்கள் அளவிலும் மற்றும் பல்வேறு வகையினர் கலந்து பணியாற்றுவதிலும் இன்றைக்குக் குறைந்து விட்டார்களாம். எனவே, காரல் மார்க்சும் ஏங்கெல்சும் உலகை மாற்றிட, முதலாளித்துவத்தை புரட்சிகரமான முறையில் தூக்கி எறிய, தங்களு டைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முன்வைத்த, “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை, உங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர,’’ என்கிற முழக்கம் இனிப் பொருந்தாதாம். ஏனெனில் தொழிலாளர் வர்க்கத்தில் பெரும்பகுதியினர் முதலாளித்துவ அமைப்பின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டார்களாம், முதலாளித்துவச் சுரண்டலின் அடிமைத்தளையிலிருந்து வெளியேறி அவர்கள் செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறதாம்.
          சுருக்கமாகச் சொல்வதென்றால், இவ்வாறு விமர்சிப்பவர்கள் கூறவரும் கருத்து இதுதான்: “மார்க்ஸ் காலத்திலிருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணம் இன்றையதினம் மாறி விட்டதால், நவீன தாராளமய உலகமயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும் இன்றைய சூழ்நிலைக்கு மார்க்சியம் பொருந்தாது. இந்த ’எதார்த்தத்தை’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க மறுப்பதால், அக்கட்சியும் இன்றைய கால கட்டத்திற்கு பொருந்தாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. இதுதான் அக்கட்சி இன்றைய தினம் எதிர்கொள்ளும் மாபெரும் சவாலாகும்.’’ ஆனால் உண்மை நிலைமை என்ன? உலக முதலாளித்துவம் கடந்த ஆறு ஆண்டுகாலமாக தொடர்ந்து நெருக்கடிக்குள் சிக்கி வெளிவர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மார்க்சியம் இன்றைக்கும் பொருத்த முடையதே என்று உரத்தகுரலில் பிரகடனம் செய்கிறது. உலகப் பொருளாதாரத்தையே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் தற்போதைய நெருக்கடியைப் புரிந்து கொள்ளவும் ஆய்வு செய்யவும் காரல் மார்க்சின் மூலதனத்தின் பிரதிகள் வேண்டும் என்று வாடிகனிலிருந்து தகைசான்ற போப் ஆணை பிறப்பித்தாரே, அது ஒன்றும் தற்செயலாக ஏற்பட்ட விபத்தல்ல.
          ஆயினும், இன்றைய நெருக்கடிக்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டுமானால் மார்க்சியத்தை நன்கு கற்ற ஒருவராலேயே அதனைச் செய்திட முடியும். தொடர்ந்து இருந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியும், உண்மையில் அத்தகைய நெருக்கடிக்கான ஆணி வேர் எது என்பதையும், சர்வதேச நிதி மூலதனத்தின் உயர்வையும், இன்றைய உலக நாடுகள் பலவற்றிலும் நவீன தாராளமயப் பொருளாதார ஒழுங்கை நிலைநிறுத்துவதில் அது மேற்கொள்ளும் மேலாதிக்கப் பங்களிப்பினையும் மார்க்சியத்தால் மட்டுமே புரிந்துகொள்ளப்பட்டு விளக்கப்பட முடியும். அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற “வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்’’ இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று அல்ல. எனினும் தன்னெழுச்சியாக நடைபெற்ற இந்த இயக்கத்தின் இறுதியில் சுயேச்சையாக எடுக் கப்பட்ட முடிவு என்ன?  “இந்தக் கிளர்ச்சிகள் `அமைப்புக்குள் உள்ள கோளாறு’க்கு எதிராக அல்ல, மாறாக இந்த “அமைப்பே கோளாறானது’’ அதாவது “முதலாளித்துவ அமைப்பே கோளாறானது’’ என்றும் அதற்கு எதிராகவே இது நடைபெற்றுள்ளது என்றும் முடிவுக்கு வந்தது. இதே மாதிரி புரட்சிகரமான முடிவுக்குத்தான் மார்க்சியமும் வருகிறது.
          இந்தக் கோளாறான அமைப்புமுறை தூக்கி எறியப்படும்போது மட்டுமே மனித சமூகம் ஒட்டுமொத்தமாக விடுதலை அடைய முடியும். ஆனால் நவீன தாராளமயக் கொள்கை யைப் பூஜிப்போருக்கு இது வெறும் தெய்வநிந்தனையாகவே தோன்றும். எனவேதான் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இன்றையதினம் `பொருந்தாத’, `பொருத்தமற்றதான’ கட்சியாக இகழ்ந்துரைக் கிறார்கள்.மேலும், தொழிலாளர் வர்க்கத்தின் சேர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், கரத்தால் உழைப்பவர்கள் எண் ணிக்கை குறைந்து, அந்த இடத்தை கருத்தால் உழைப்பவர்கள் நிரப்பியிருந்த போதிலும், (மனிதகுல நாகரிகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுகையில் இது சாத்தியமே) முதலாளித்துவத்தின் இயல்பான குணம் - அதாவது மனிதனை மனிதன் சுரண்டும் குணம் - அதன் முதுகெலும்பாகத் தொடர்ந்து இருந்து வருவது இன்றைக்கும் மாறாததோர் உண்மை அல்லவா? ஏனெனில், சுரண்டல் என்பது முதலாளித்துவ உற்பத்தியுடன் இணைபிரியா ஒன்றல்லவா?இது ஏன்? ஏனெனில், முதலாளித்துவ உற்பத்தி நடைமுறையின் அடிப்படையே சுரண்டல்தான்.
          உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பில், அந்தப் பொருளை உற்பத்தி செய்த தொழிலாளியின் பங்களிப்பு எப்போதுமே அவருக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தின் மதிப்பைவிட அதிகமாகத்தான் இருக்கும். இந்த வித்தியாசம்தான் முத லாளித்துவ உற்பத்தி முறையில், தொடர்ந்து உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறது. இந்தஉபரிமதிப்பைத்தான் முதலாளிகள் லாபம்என்ற பெயரில் தமதாக்கிக் கொள்கிறார்கள். எனவே, தொழிலாளி, கருத்தால் உழைப் பவரா அல்லது கரத்தால் உழைப்பவரா என்பதே இங்கே பிரச்சனை இல்லை. எவரா யிருந்தாலும் அவரைச் சுரண்டுவது என்பதே முதலாளித்துவத்தின் குணம். எனவே, இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை முற்றிலுமாகத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, இத்தகைய சுரண்டலிலிருந்து, மனிதகுலத் திற்கு விடுதலையைக் கொண்டு வர முடி யும். இத்தகைய அறிவியல்பூர்வமான உண்மை யை நவீன தாராளமயத்திற்கு வக்காலத்து வாங்கும் `மேதை’கள் ஒப்புக் கொள்ள மனம் வராது, வெறுப்பார்கள். எனவேதான் அதனை மறைப்பதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்றைய தினம் பொருத்தமற்றதாக மாறிவிட்டது என்று நம்மீது பாய்கிறார்கள்.இத்தகைய விமர்சகர்களின் மற்றொரு வகையான செயல்பாடு என்பது, முதலாளித்துவ சுரண்டல் அமைப்பின் அடித்தளங் களைப் பாதிக்காத விதத்தில் பல்வேறு அரசுசாரா அமைப்புகள் நடத்தக்கூடிய இயக்கங்களை ஊக்குவிப்பதும் மற்றும் ஆதரிப்பது மாகும். அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் அல்லது ஆம் ஆத்மி கட்சிக்கு கார்ப்பரேட் ஊடகங்கள் அளித்த அளவுக்கு மீறிய விளம்பரம், ஆகியவற்றிலிருந்தே இதனை நாம் தெரிந்துகொள்ள முடியும்.
          அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் நடைபெற்ற அதே சமயத்தில்தான் இடதுசாரிக் கட்சிகள் அவர் முன்வைத்த அதே கோரிக்கைகளுக்காக பிரம்மாண்டமான முறையில் மக்கள் இயக்கங்களை நடத்தின. ஆனால் அவை குறித்து அநேகமாக எதையுமே அவை கூறவில்லை. அல்லது பெயரளவில் ஒருசில நொடிகள் கூறும். காரணம் என்ன? ஏனெனில், இடதுசாரிக் கட்சிகளைப்போல அல்லாமல், முதலாளித்துவ அமைப்பின் அடித்தளங்களான சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறை ஆகியவற்றின் மீது அவை கைவைப்பதில்லை. முதலாளித்துவத்திற்கு, அதனுடைய அடித்தளத்தின் மீது கைவைக்காமல் இயங்கும் அனைவருமே உன்னதமானவர்கள் தான், அவர்களை தூக்கி வைத்து அது கொண்டாடும். எனவேதான், அது, ‘ஊழலை ஒழிப்போம்’, ‘நேர்மையான அரசியல்’ போன்று இயக்கம் நடத்தும் அனைத்து அமைப்புகளையுமே அவை வரவேற்கும். ஆனால், அதே சமயத்தில், இடதுசாரிகளைத் தனிமைப்படுத்திட வேண்டும் என்பதில் அவை குறியாக இருக்கும். ஏனெனில், இடதுசாரிகள் இந்த அமைப்பையே கேள்விக்குறியாக்குவது தொடர்வதும், இந்த அமைப்புக்கு மாற்று ஏதும் இல்லை என்று கூறுவதை இடதுசாரிகள் ஏற்க மறுப்பதும்தான் காரணங்களாகும்.
            மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, இந்த முதலாளித்துவ அமைப்புக்கு மாற்று உண்டு என்றும், சோசலிச அமைப்பே அதற்கு மாற்று என்றும் பிரகடனம் செய்கிறது.நம் வளர்ச்சியில் அக்கறையுடன் நம் கொள்கைகளையும் நம் செயல்பாடுகளையும் நடுநிலையுடன் விமர்சிப்பவர்களை நாம் வரவேற்கிறோம். ஆனால் அதே சமயத்தில், “குழந்தை அழுக்காகிவிட்டதே என்று தண்ணீர் தொட்டிக்குள்ளே தூக்கி எறிவது’’ போன்று விமர்சிப்பவர்களுக்கு நாம் கூறும் பதில், அத்தகைய விமர்சனங்களை ஏற்க முடியாது என்பதும் அவற்றிற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்பதுமேயாகும். அதனால்தான், நாட்டில் தற்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில், நாட்டு மக்களின் பிரச்சனைகளையும் அவற்றிற்குத் தீர்வு மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதுமேயாகும் என்றும் அதன் அடிப்படையில்தான் நாட்டின் பெரும் பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த முடியும் என்றும் இடதுசாரிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கார்ப்பரேட் ஊடகங்களோ இத்தேர்தல் களத்தை ’தனிநபர்’களைத் தேர்வு செய்வது என்ற அளவிற்கு சுருக்கிக் கொண்டுள்ளன. கோடிக்கணக்காக வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் நாட்டு மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய வகையில் மாற்றுக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டிய அரசாங்கம் அமைய வேண்டும் என்பது குறித்து அவற்றிற்கு அக்கறை ஏதும் இல்லை.
           மாறாக, `தலைவர்கள்’ பிரச்சாரத்தின் போது ஒருவர்கொருவர் தனிப்பட்டமுறையில் கூறும் கருத்துக்களைத்தான் அவை உயர்த்திப்பிடிக்கின்றன. மக்களைப் பாதிக்கும் உண்மையான பிரச்சனைகள் குறித்து அவை கொஞ்சமும் கவலைப்படவில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அவற்றை அவை மிகவும் அருவருப்பாகவே கருதுகின்றன. நம் ஜனநாயக அமைப்பில் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் ஊடகத்துறை, நவீன தாராளமயக் கொள்கைகள் மனிதாபிமானமற்ற முறையில் மக்களைச்சுரண்டிக் கொண்டிருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவர மறுப்பதோடு மட்டுமல்லாமல், மிகப்பெரிய அளவில் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளாக மாறிக் கொண்டிருப்பது மிகப் பெரிய அவலமாகும்.அதிர்ஷ்டவசமாக, நாட்டு மக்கள் இவற்றை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கக்கூடிய விதத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் நலம் பயக்கக்கூடிய விதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டிடும் மாற்றுத் திசைவழி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  
தமிழில்: ச.வீரமணி
நன்றி :
 

புதன், 23 ஏப்ரல், 2014

மோடி - குஜராத் - வளர்ச்சி : கதவுகளில் கசியும் உண்மை...!

      
          இந்தச் சுற்றுப்பயணத்தில் நாடு முழுவதும் நான் மக்களிடம் அதிகம் கேட்ட மூன்று வார்த்தைகளுக்கு இந்த அத்தியாயத்தை ஒதுக்கலாம் என்று நினைக்கிறேன் : 
மோடி - வளர்ச்சி - குஜராத்    
 
வரலாற்றில் வித்தியாசமான தேர்தல்               
 
          இந்திய வரலாறு மிக வித்தியாசமான ஒரு தேர்தலை எதிர்கொள்கிறது. இதுவரையிலான 15 மக்களவைத் தேர்தல்களும், இந்திய மக்கள் முன் எத்தனையோ பேசுபொருள்களை முன்னிறுத்தியிருக்கின்றன. சாதனைகளும் வாக்குறுதிகளும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், மரணங்களும் தியாகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், தனிக்கட்சி ஆட்சியும் நிலையான அரசும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், கூட்டாட்சியும் அனைவருக்குமான வளர்ச்சியும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள்... எல்லாத் தேர்தல்களிலுமே குறைந்தபட்சம் மக்கள் முன் இரு தேர்வுகள் முன்னிறுத்தப்பட்டது உண்டு: இந்தக் கட்சியா, அந்தக் கட்சியா அல்லது இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா? 

         முதல்முறையாக மக்களவைத் தேர்தலை அதிபர் தேர்தல் போல எதிர்கொள்கிறது இந்தியா. பிரச்சாரத்தில் கட்சிகளின் பெயர்கள் அடிவாங்கிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், ஒரேயொரு மனிதரும் அவர் முன்னிறுத்தும் முழக்கமும்தான் இன்றைய இந்தியாவின், இந்தத் தேர்தலின் பேசுபொருள் : மோடி - குஜராத் - வளர்ச்சி.

       நாட்டின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் மோடிக்குப் பதில் அளிப்பதை மட்டுமே தேர்தல் பணியாகக் கொண்டிருக்க… ஏனைய கட்சிகளோ, மோடியை நோக்கிக் கேள்வி எழுப்புவதையே தேர்தல் பணியாகக் கொண்டிருக்கின்றன. ஆக, வாக்காளர்கள் முன் ஒரேயொரு கேள்விதான் எங்கும் தொக்கிநிற்கிறது : மோடி - குஜராத் - வளர்ச்சி வேண்டுமா; வேண்டாமா?
         மக்களிடம் இப்படி ஒரு கேள்வி தொக்கிநிற்கிறது என்றால், நாடு முழுவதும் உள்ள ஊடகங்களிலும் இப்போது இதுதான் முக்கியமான விவாதம் - குஜராத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா? அது உண்மையாகவே ஒரு நல்ல முன்மாதிரிதானா, இல்லையா? மக்கள் உண்மையாகவே எப்படி இருக்கிறார்கள்? எது குஜராத்தில் மீண்டும் மீண்டும் மோடியைப் பதவியில் அமர்த்துகிறது?
 
மோடி செய்ததும் செய்யாததும்                   

              இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்த மாபெரும் கேள்விக்கும் விவாதத்துக்கும் நானும் பதில் தேடினேன். குஜராத் அரசுத் தரப்பினர் சாதனைகளாகச் சொன்ன - அவர்கள் நிறைவேற்றியிருக்கும் பல்வேறு திட்டங்களைப் பார்க்க அலைந்தேன். அந்தத் திட்டங்கள் நன்மை - தீமைகளை அளவிட ஏகப்பட்ட குறிப்புகள், புள்ளிவிவரங்களைச் சேகரித்தேன். ஏராளமான மக்களிடம் கருத்துகள் கேட்டேன். சரி, உண்மை நிலவரம் என்ன?
          குஜராத்தில் மோடி முன்னோடியான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறாரா? நிச்சயமாகக் கொண்டு வந்திருக்கிறார் - எப்படி கேரளத்திலும் தமிழகத்திலும் பிஹாரிலும் சில முன்னோடியான திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றனவோ அப்படியே குஜராத்திலும் முன்னோடியான சில திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், குஜராத்துக்கு வெளியே அவை ஊதிப் பெருக்கப்படுகின்றன. பல விஷயங்களில் துளியும் உண்மை இல்லாமல் மோடி கொண்டாடப்படுகிறார். ஒரு உதாரணம்: குஜராத் மதுவிலக்கு மாநிலமாக இருப்பதற்கு மோடி கொண்டாடப்படுவது. உண்மை என்னவென்றால், குஜராத் தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட 1960 முதலே அது மதுவிலக்கு மாநிலம் தான். இதைச் செய்தது காங்கிரஸ் அரசாங்கம். உண்மையில் மோடி ஆட்சியில் மது கள்ளச்சந்தையில் நிறையவே கிடைக்கிறது. இரட்டை விலையில் விற்கிறார்கள். சமீபத்திய உதாரணம், நாட்டில் அதிக அளவில் ரூ.12.57 கோடி மதிப்புடைய மது, தேர்தல் ஆணையத்தால் குஜராத்தில் தான் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி நிறைய அடுக்கலாம். ஆனால், வெற்றிகரமாக அந்த மாயையை நிறுவியிருக்கிறார்கள்.
              சரி, இது மாயை என்றால், உள்ளூரில் எடுபடாதே? பின் எப்படி குஜராத்தில் மோடி தொடர்ந்து வெல்கிறார்? குஜராத்திலிருந்து புறப்படும்போது எடுத்த ஒரு புகைப்படம் அந்த உண்மையை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன். 

உண்மையின் கதவுகள்                        

              ஊரெல்லாம் சுற்றிவிட்டு, அகமதாபாத் திரும்பியபோதுதான் அதைக் கவனித்தேன். சில வீதிகளின் நுழைவாயில்களில் பெரிய பெரிய இரும்புக் கதவுகளை அமைத்திருந்தார்கள். அந்த வீதிகளின் புழுதி மண் சாலைகள் நாம் வெளியில் கேட்கும் குஜராத்தின் வளர்ச்சி கோஷங்களோடு எந்த வகையிலும் பொருந்தாதவை. மனதில் வித்தியாசமாகப் படவும், ஓரிடத்தில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். அகமதாபாதின் மையத்தை ஒட்டியிருக்கும் அந்தப் பகுதியின் பெயர் சோனி கே சால். மோடியின் தொகுதியான மணி நகருக்கு மிக அருகில் இருக்கும் பகுதி. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி. “வீதியின் நுழைவாயிலில் ஏன் இரும்புக் கதவுகளை அமைத்திருக்கிறார்கள்?” என்று அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, கிடைத்த அதிரவைக்கும் பதில் இது: “பழங்கால முறைதான். கலவரம் ஏற்பட்டால் கதவைப் பூட்டிவிட்டுப் பதுங்க.”
          அருகருகே இருந்த வீதிகளில் நுழைந்து சென்றபோது ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. பெரும்பாலான வீடுகளில் நிலை, கதவுகள், ஜன்னல்கள் யாவும் இரும்பாலேயே அமைக்கப்பட்டிருந்தன. “ஏன் மரங்களைப் பயன்படுத்துவது இல்லையா?” என்ற என் அடுத்த கேள்விக்குக் கிடைத்த பதில் நிலைகுலையச் செய்தது. “கலவரத்தின்போது தீயை இது கொஞ்சமாவது தாக்குப்பிடிக்கும் இல்லையா? இங்கே கலவரங்களின்போது தீப்பந்தங்கள்தான் வீட்டுக்குள் முதலில் வரும். அப்புறம் என்ன வெட்டினாலும் கூறுபோட்டாலும் சரி… எரித்தால்தான் அவர்களுக்கு வெறி அடங்கும்.”
          எனக்கு கோத்ராவும் நரோடா பாட்டியாவும் மாறி மாறி நினைவுக்கு வந்தன. கோத்ராவில் ரயில் பயணிகளைத் துடிக்கத் துடிக்கத் தீ வைத்துதான் அழித்தார்கள். நரோடா பாட்டியாவில் ஒன்பது மாதக் கர்ப்பிணியான கௌஸர் பானுவின் வயிற்றை வாளால் கிழித்து அந்தச் சிசுவை வெளியே எடுத்தவர்கள் தரையில் போட்டு அதை மிதித்தார்கள்; அப்போதும் ஆத்திரம் அடங்காமல், அதன் மீது எண்ணெயை ஊற்றி எரித்தார்கள்.
            அங்கிருந்து வெளியே வந்தேன். கார் ஓட்டுநர் ஒரு இந்து. “சார்… இந்துக்களுக்கும் பயம் உண்டு சார். முஸ்லிம்கள் சுற்றி அதிகமாக வாழும் இடங்களில் இந்துக்களும் இப்படிப் பாதுகாப்புக்கு வீதி நுழைவாயிலில் இரும்புக் கதவுகள் போட்டுக்கொள்வது உண்டு” என்று சொல்லி ஓர் இடத்தைக் காட்டினார். பின்னர் சொன்னார்: “இந்த பயம்தான் சார் உண்மையில் குஜராத்தை ஆட்சி செய்கிறது. இரு தரப்பையும் வெவ்வேறு வகைகளில்.”
             கார் அகலமான ஒரு சாலையில் பாய்ந்து செல்ல ஆரம்பித்தபோது, எனக்கு நடிகை நந்திதா தாஸ் ஒரு பேட்டியில் ''மோடி - வளர்ச்சி - குஜராத்'' தொடர்பான கேள்விக்கு அளித்திருந்த பதில் ஞாபகத்துக்கு வந்தது. அந்தப் பேட்டியில் நந்திதா தாஸ் இப்படிக் கூறியிருப்பார்: “ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் ஹிட்லர் ஆட்சியில் அமைக்கப்பட்டவை. ஜெர்மனியின் மிகச்சிறந்த மருத்துவமனைகளும் அப்போதுதான் கட்டப்பட்டன. ஆனால், ஹிட்லரை நாம் யாரும் வளர்ச்சிக்காக நினைவு கூர்வதில்லை!”
கட்டுரையாளர் : சமஸ் 
தொடர்புக்கு : samas@kslmedia.in 
ரொம்ப நன்றி

மாற்று அரசியல் இடதுசாரிகளால் தான் சாத்தியம்...!


       மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர்.பிரகாஷ்காரத் அவர்களுடன் நேர்காணல்.                    

           இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரை நூற்றாண்டுக்கு முன் பிரிந்ததற்கான நியாயம் இன்னும் நீடிக்கிறதா? ஏன் இந்தியாவில் உள்ள எல்லா இடதுசாரி அமைப்புகளும் ஒன்றுசேரக் கூடாது?

                இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1964ல் பிளவு ஏற்பட சித்தாந்த, அரசியல் கார ணங்கள் அடிப்படையாக இருந்தன. அதற்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இரு கட்சிகளாகச் செயல்படுகின்றன. இந்த இருகட்சிகளிடையே ஒற்றுமையையும் வலிமையையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே இடதுசாரி இயக்கத்தின் இருப்பை வலுவாக வெளிப்படுத்தலாம் என்று நான் நினைக்கிறேன்.

         உலகெங்கும் கம்யூனிஸ்ட்டுகள் அவரவர் நாட்டுக்கேற்ப கட்சியைக் கட்டியிருக்கிறார்கள். சீனா ஒரு துருவம் என்றால், கியூபா ஒரு துருவம். இந்தியாவுக்கேற்ப கட்சியைக் கட்டமைக்க கம்யூனிஸ்ட்டுகள் தவறிவிட்டீர்களா?

           இந்தியச் சூழலுக்கு ஏற்ப மார்க்சிஸத்தைப் பயன்படுத்தத் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. உலகின் பிற கம்யூ னிஸ்ட் கட்சிகளைவிட நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் பணிபுரிவதில் எங் களுக்குத்தான் அனுபவம் அதிகம் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

        சுதந்திரத்துக்குப் பின் கொஞ்சம் கொஞ்ச மாக காங்கிரஸ் மக்கள் ஆதரவை இழந்தே வந்திருக்கிறது. ஆனால், ஒருகாலத்தில் நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த இடதுசாரிகள் இதன் பலனை அறுவடை செய்து கொள்ளும் நிலை இல்லை. இதற்கான காரணம் என்ன?

               இடதுசாரிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று நீங்கள் சொல்ல முடியாது. உதாரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக்கொண்டால், கட்சி 1964-ல் நிறுவப்பட்டது. காங்கிரஸூக்கு எதிராக 1967லிலும் நெருக்கடி நிலைப் பிர கடனத்துக்குப் பிறகு 1977லிலும் பெரிய அலை வீசியது. 1967-ல், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் காரணமாக நாங்கள் செல்வாக்கு பெற முடிந்தது. கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுசாரிகளின் கூட் டணி அரசுகள் பதவிக்கு வந்தன. 1990களில் முழுக்க நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி. நாடாளுமன்றத்தின் 75 தொகுதிகள் முதல் 85 தொகுதிகள் வரையில்தான் நாங் கள் போட்டியிடுகிறோம் என்றாலும், 5சதவீதம் முதல் 6சதவீதம் வரையிலான வாக்குகளைப் பெற்றுவருகிறோம். இக்கால கட்டத்தில் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகியமாநிலங்களில் ஆட்சியிலும் இருந்திருக்கிறோம்.

மோடியின் ‘குஜராத் மாதிரி வளர்ச்சி’ யை எப்படிப் பார்க்கிறீர்கள்?

        மோடியின் குஜராத் மாதிரியையும் பாஜகவின் வளர்ச்சிக் கோட்பாட்டையும் நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். அது பெருநிறுவனங்களுக்குச் சாதகமானது, செல்வம் சிலரிடம் மட்டுமே குவியவும் மக்களிடையே ஏற்றத்தாழ்வு மேலும் அதிகமாகவும் மட்டுமே அது வழிவகுக்கும்.

          சரி, நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகள் சரியில்லை. மோடி உச்சரிக்கும் வளர்ச்சியும் எல்லோருக்குமான உண்மையான வளர்ச்சியாகத் தெரியவில்லை. அப்படியென்றால், உங்களைப் பொறுத்த அளவில் வளர்ச்சிக்கான வரையறைதான் என்ன? அதற்கான செயல்திட்டம் என்ன?

         நாங்கள் வளர்ச்சிக்கு மாற்றுப் பாதையை வகுத்திருக்கிறோம். விவசாயத்தை நம்பியுள்ள நம்முடைய உற்பத்தி முறையை ஜனநாயக வழியில் மாற்றி அமைக்கும்போது, அதனால் ஏழைகளும் கிராமப்புற மக்களும் பலன் அடைவார்கள். பொது முதலீட்டை அதிகரிப்பது, உள்ளூரில் தேவைகளை ஏற்படுத்துவது, அதன் மூலம் தொழில்துறை வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவது போன்றவை எல்லோருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்கும் எங்கள் மாற்றுப்பாதையின் முக்கிய அம்சங்கள்.

        கம்யூனிஸ்ட்டுகளின் பலம் எப்போதுமே தொழிலாளர் வர்க்கம்தான். ஆனால், இன்றைக்குப் பத்து ரூபாய்க்கு மூட்டை தூக்குபவரும் தொழிலாளி; மாதம் லட்ச ரூபாய் வாங்கும் கணிப்பொறியாளரும் தொழிலாளிகள் தான். இந்த இரு வேறுபட்ட தொழிலாளிகளையும் ஒன்றிணைக்கும் - கட்சியை நோக்கி இழுக்கும் செயல்திட்டம் கட்சியிடம் இருக்கிறதா? வெளியிலிருந்து பார்க்க அப்படித் தெரியவில்லை?

        உழைக்கும் வர்க்கத்தில் மாற்றங்கள் ஏற் பட்டுவருகின்றன. உழைக்கும் வர்க்கத்தில் பெரும்பான்மையோர் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாததுதான் இப்போதைய பிரச் சனையே. இந்த விஷயத்தில் இப்போது கட்சி நிறைய கவனம் செலுத்துகிறது.

பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

        இந்தியா போன்ற நாட்டில் மாநிலக் கட்சிகளுக்குத் தேவை இருக்கிறது. வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள் இணைந்து வாழும் சமஷ்டி அமைப்பு நமக்கு முக்கியம்.

       பிரச்சனைகளை அணுகும்போது தேசியக்கட்சியாக அணுகுவதா, மாநிலக் கட்சியாக அணுகுவதா என்பதில் கட்சிக்குக் குழப்பம் இருக்கிறதா?

இல்லை. நாட்டுக்கு எது தேவையோ அதையே சொல்கிறோம்; செய்கிறோம்.

        மேற்கு வங்கத்தில் வன்முறை அரசியலை இடதுசாரிகள் கையாண்டீர்கள் என்ற கடுமையான குற்றச்சாட்டு உங்கள் மீது உண்டு. இன்று அதையே திரிணமுல்காங்கிரஸிடமிருந்து நீங்களும் எதிர்கொள்கிறீர்கள். இந்த அரசியல் வேட்டையை முடிவுக்குக் கொண்டுவர ஏதேனும் நட வடிக்கை எடுத்திருக்கிறீர்களா?

          எப்போதுமே ஏழைகளுக்காகவும் ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராடும் கட்சி இது. மக்களைச் சுரண்டிப் பிழைப்பவர்கள் எங்களுக்கு எதிராக வன்முறைகளைக் கையாண்டனர் என்பதே வரலாறு. 1970 களில் எங்கள் கட்சிக்கு எதிராக வன் செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இப்போது திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியிலும் அதே போன்ற சூழலைப் பார்க்கிறோம். இதை மறைக்கத்தான் நாங்கள் ஆட்சி யிலிருந்தபோது வன்செயல்களில் ஈடு பட்டதாகத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்யப் படுகிறது. நாங்கள் எப்போதும் வன்முறைக்கு எதிராகவே இருக்கிறோம்.

உங்களை நெருக்கமாகப் பார்க்கும் பலரும், “கட்சி கொஞ்ச காலத்துக்கேனும் - ஓரிரு தேர்தல்களுக்கேனும் - தேர்தல் அரசியலைப் புறக்கணித்துவிட்டு, மக்கள் மத்தியில் செயலாற்றச் செல்ல வேண்டும்; அமைப்பை வலுவாக்கிவிட்டு, பின்னர் மீண்டும் தேர்தல் அரசியலுக்குத் திரும்ப வேண்டும்” என்கிறார்கள். ஏன் செய்யக் கூடாது?

         நீங்கள் மாற்றிக் கூறுகிறீர்கள். உண்மையில், எங்கள் மீதான குற்றச்சாட்டே நாங்கள் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை என்பதுதான். எங்களுடைய முக்கியமான வேலையே மக்களிடையே களப்பணி செய்வதுதான். எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், இளைஞர்கள், மாணவர், மகளிர் இயக்கங்களில் பணிபுரிகின்றனர். இந்த அமைப்புகள் மூலம்தான் எங்களுடைய அரசியல் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறோம். அப்போதுதான் அது தேர்தல் வெற்றியில் எதிரொலிக்கும்.

          இந்தத் தேர்தல் அரசியல் மூலம் நீங்கள் வாக்காளர்களுக்குக் கொடுக்கும் வாய்ப்பு என்ன? அதாவது, எத்தனையோ கட்சிகள் இருக்கும்போது ஏன் மக்கள் இடதுசாரிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

          ஒரு வாக்காளர் ஊழலற்ற ஆட்சியை விரும்புகிறார் என்றால், எல்லோருக்குமான வளர்ச்சியை விரும்புகிறார் என்றால், அது இடதுசாரிகளிடம்தான் சாத்தியம். ஏனென்றால், சுத்தமான கைகள் இடதுசாரி களுடையவை. மாற்று அரசியல், பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டவர்கள் இடதுசாரிகள். பெருநிறுவனங்கள், பணமூட்டைகள் அரசியலை ஆக்கிரமிக்கக் கூடாது என்று நினைத்தால், இடதுசாரிகளைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.

நேர்காணல் : சமஸ்
நன்றி : தி இந்து (தமிழ்) ஏப். 22-4-2014

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

இடதுசாரி மாற்று அணியே ஆட்சி அமைக்கும்....!

   
            சென்னையில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பிறந்த சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் மட்டுமல்ல, அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் கூட. கல்லூரி நாள்களிலேயே மாணவர் இயக்கத்துடன் தொடர்பு கொண்ட சீதாராமின் அரசியல் பயணம் அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதுடன் தொடங்கியது. மிசாவில் கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர்களில் இவரும் ஒருவர். மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தின் வலதுகரம். இன்றைய தலைமுறை மார்க்சீய சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இடதுசாரி இயக்கங்களின் பிரபலமான ஊடகத் தொடர்பாளர்.
''தினமணி'' ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு சீதாராம் யெச்சூரி அளித்த சிறப்புப் பேட்டி:
         "பிளவுக்குப் பிறகு, 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு அரை நூற்றாண்டு காலமாகிறது. இந்த இயக்கத்துக்கான அவசியம் முடிந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா?''

          "தேர்தல் வெற்றி தோல்விகளும் அரசியல் பின்னடைவுகளும் ஒரு இயக்கத்தின் வளர்ச்சியையோ செயல்பாடுகளையோ பாதித்துவிடாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இடதுசாரி இயக்கங்களின் இன்றியமையாமை இப்போதுதான் உருவாகி இருக்கிறது. இன்று இந்தியா எதிர்கொள்ளும் எல்லாவிதப் பிரச்னைகளுக்கும், இடதுசாரி இயக்கங்கள் வலுவிழந்ததும், எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்ததும்தான் காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள்.''

"எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?''
 
        "எங்களது ஆதரவில் முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்ததுவரை, மன்மோகன் சிங் அரசில் மெகா ஊழல்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது உலகறிந்த ரகசியம்.

        "ஏதோ உங்களது ஆதரவில் இருந்ததுவரை மன்மோகன் சிங் அரசு சிறப்பாக செயல்பட்டது போலப் பேசுகிறீர்களே, எப்படிச் சொல்கிறீர்கள்?''

             கடந்த 60 ஆண்டுகளாக நமது அரசியல் சட்டம் மக்களுக்கு அளிப்பதாகச் சொன்ன எந்தவித உரிமைகளையும் எந்த அரசும் நிறைவேற்றாத நிலையில், 2004இல் இடதுசாரிகளின் ஆதரவுக்கு அடிப்படையான நாங்கள் வடிவமைத்த குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அம்சங்கள்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம், கல்விக்கான உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்பு மசோதா போன்ற எல்லாமே. இந்த அம்சங்களை ஒன்றன்பின் ஒன்றாக மன்மோகன் சிங் அரசு நிறைவேற்றியதற்குக் காரணம் எங்களது வற்புறுத்தல்தான். இந்தத் திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தவர்கள் நாங்கள். பெருமை தட்டிச் சொல்வது அவர்கள்.''

          "2004இல் மன்மோகன் சிங் அரசை ஆதரித்து, ஆட்சியில் அமர்த்தியதற்கு என்ன காரணம்?''

          அந்தத் தேர்தலில், மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களது 61 இடதுசாரி எம்.பி.க்களில் 57 பேர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு வென்றவர்கள். அப்படி இருந்தும் நாங்கள் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் ஆதரவளித்ததற்குக் காரணம், தேசத்தை எதிர்நோக்கியிருந்த மிகப்பெரிய பிரச்னையான மதவாதம். மத்திய அரசு 2004இல் மீண்டும் மதவாதக் கட்சிகளின் அதிகாரத்திற்கு உள்பட்டிருந்தால், இந்தியாவின் ஒற்றுமையே குலைந்திருக்கும். அதைத் தடுக்க வேண்டிய வரலாற்று நிர்பந்தம் இடதுசாரிகளுக்கு இருந்தது.''

                "நீங்கள் உறுதியாக இருந்திருந்தால் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்குமா?''

              "அந்தத் தவறை நாங்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்கிறோம். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியபோதே நாங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று திட்டவட்டமாகக் கூறியிருந்திருக்க வேண்டும். எங்களை நம்ப வைத்துக் கழுத்தறுத்துவிட்டது காங்கிரஸ். எங்கள் தயவில் மன்மோகன் சிங் அரசு ஆட்சியில் தொடர்வது தங்களுக்கு பாதகமாக இருக்கிறது என்பதால், கார்பரேட் நிறுவனங்களும் அவர்களது கைப்பாவைகளாக செயல்படும் ஊடகங்களும், எங்களை வெளியேற்றுவதில் குறியாக இருந்தன. கடைசியில் வெற்றியும் பெற்றன.''

         "நீங்கள் 2ஜி முறைகேடுகள் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் உறுப்பினராக இருந்தீர்கள். உங்களது கருத்துப்படி, 2ஜி முறைகேட்டில் மன்மோகன் சிங்கிற்கும், ப. சிதம்பரத்திற்கும் தொடர்பு உண்டு என்று கருதுகிறீர்களா?
 
             "தொடர்பு உண்டா இல்லையா என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், அவர்கள் இருவருக்கும் தெரிந்துதான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்திருக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூறமுடியும். மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் ஒப்புதல் வழங்காமல் நிச்சயமாக ஆ. ராசா 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அவர் கையாண்ட வழிமுறைகளைச் செய்திருக்க முடியாது. பிரதமர், நிதியமைச்சர், தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர், அதாவது, மன்மோகன் சிங், ப. சிதம்பரம், ஆ. ராசா ஆகிய மூவர் மட்டுமே கலந்து கொண்ட ஒரு மேல்மட்டக் கூட்டம் நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்துதான் ஆ. ராசா அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான வழிமுறையை அறிவிக்கிறார்.''

        "இதை நீங்கள் ஏன் வெளிப்படையாகத் தேர்தல் பிரசார மேடைகளில் கூறவில்லை?''


           "நாங்கள் எங்கள் பிரசாரத்தில் தொடர்ந்து கூறி வருகிறோம். நீங்கள்தான், அதாவது ஊடகங்கள்தான் அதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையில் நான் எனது எதிர்க்கருத்தை வன்மையாகவே பதிவு செய்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, பிரதமர் மன்மோகன் சிங்கையும், நிதியமைச்சர் ப. சிதம்பரத்தையும் ஜே.பி.சி. தலைவர் காப்பாற்ற முயற்சிக்கிறார் என்று தெளிவாகவே எனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.''

         "அப்படியானால் உறுப்பினரான நீங்கள் அவர்களை ஏன் விசாரணைக்கு அழைக்க வற்புறுத்தவில்லை? ஆ. ராசாவின் கோரிக்கையை ஏன் வழிமொழியவில்லை?''


             "நாங்கள் பிரதமரையும், நிதியமைச்சரையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அது மறுக்கப்பட்டது. அப்படியானால், நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எழுத்துமூலம் பிரதமரையும், நிதியமைச்சரையும் பதிலளிக்கச் சொல்லுங்கள் என்று கேட்டோம். அதையும் கூட்டுக் குழுவின் தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் ஒன்றுமே தெரியாத புனிதர்களல்ல. 2ஜி முறைகேட்டில் அவர்களது தொடர்பு மறைக்கப்படுகிறது.''

 "இடதுசாரி இயக்கம் நோக்கம் இழந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா?

             "நிச்சயமாக இல்லை. சில பலவீனங்களை நாங்கள் எதிர்கொள்கிறோம் என்பது வேண்டுமானால் உண்மை. அந்த பலவீனங்களை அகற்றினால் மட்டுமே இடதுசாரி இயக்கத்தையும், இந்தியாவையும் காப்பாற்ற முடியும் என்பது அதைவிட உண்மை. கடந்த 20 ஆண்டு கால புதிய பொருளாதாரக் கொள்கையின் பாதிப்பு இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தையும், பொருளாதாரத்தின் அடிப்படையையும் ஆட்டம்காண வைத்திருக்கிறது. எல்லோரும் மெகா ஊழல்களையும் முறைகேடுகளையும் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இந்த முறைகேடுகளுக்குக் காரணம், அரசின் பொருளாதாரக் கொள்கைதான் என்பதை மக்களை உணர வைக்கவும், இதற்கு மாற்றாக மக்கள் சார்ந்த கொள்கைகளை முன்வைக்கவும் இடதுசாரிகளால் மட்டுமே முடியும்.''
 
 ''பொருளாதாரக் கொள்கைகளுக்கும் ஊழலுக்கும் என்ன தொடர்பு?''

             "ஏன் இல்லை. தனியார்மயம் என்று வரும்போது, அதிலும் பல லட்சம் கோடி ரூபாய் பணம் புரளும் துறைகளைத் தனியாருக்குத் திறந்துவிடும்போது, நீ, நான் என்று கார்ப்ரேட் நிறுவனங்கள் மத்தியில் போட்டி உருவாகிறது. இதுதான் மெகா ஊழல்களின் ஊற்றுக்கண். நாங்கள் ஊற்றுக்கண்ணை அடைக்க விரும்புகிறோம். ஆம் ஆத்மி கட்சி போன்றவர்கள் ஊழலின் அடையாளங்களை எதிர்த்துப் போராடுகிறார்கள், இதுதான் வித்தியாசம்.''

"அவர்களது போராட்டத்திற்கு இருக்கும் வரவேற்பு உங்கள் போராட்டங்களுக்கு இல்லையே, அது ஏன்? இடதுசாரி இயக்கம் மக்கள் ஆதரவை இழந்துவிட்டதுதான் காரணமா?

           "அல்ல, ஊடகங்கள் எங்களை இருட்டடிப்பு செய்வதுதான் காரணம். விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தை இந்தியா முழுவதிலிருந்தும் உள்ள இரண்டு லட்சம் தொண்டர்களுடன் முற்றுகை இடுகிறோம். அது ஊடகங்களுக்குத் தெரிவதில்லை. தொலைக்காட்சிச் சேனல்கள் முன்னுரிமை அளிப்பதில்லை. ஜந்தர் மந்தரில் அண்ணா ஹசாரே தலைமையில் இருபதாயிரம் பேர் கூடியதை இரண்டு வாரங்கள் பெரிய புரட்சி நிகழ்ந்துவிட்டதாக விளம்பரப்படுத்தினார்கள். நீறுபூத்த நெருப்பாக இடதுசாரி இயக்கம் உயிர்ப்புடன்தான் இருக்கிறது.''

"மற்றவர்கள் அடையாளங்களை எதிர்த்துப் போராடுவதாகவும், நீங்கள் மட்டும்தான் கொள்கை ரீதியாகப் போராடுவதாகவும் எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?

           "புதிய பொருளாதாரக் கொள்கைகளை முன்வைக்கும் முதலாளித்துவவாதிகளுக்கு எதிரான வாதத்தை இடதுசாரிகள் மட்டுமே முன்வைக்கிறோம். விமர்சனங்கள் எதுவுமே ஏனையோரால் எழுப்பப்படுவதில்லை. பாரதிய ஜனதாவோ, ஆம் ஆத்மி கட்சியோ, தி.மு.க., அ.தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகளோ அவர்களுக்கு எந்தவித ஆபத்தையும் தரப்போவதில்லை.''

"இதுவரை கடந்த பல தேர்தல்களில் இடதுசாரிகள் தங்கள் அணியில் இருப்பது பெருமை என்று கருதியிருந்த மாநிலக் கட்சிகள் இந்தத் தேர்தலில் உங்களைத் தனிமைப்படுத்தி இருக்கின்றனவே, அது பலமா, பலவீனமா?

           "அவர்களறியாமல் எங்களுக்கு மிகப்பெரிய உதவியைச் செய்திருக்கிறார்கள். இனிமேல் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இடதுசாரிகள் யாரையும் சார்ந்திராமல், அந்த மாநிலக் கட்சிகள் செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்காமல் தன்னிச்சையாக செயல்படவும், மக்கள் சக்தியாக வளர்ச்சி அடையவும் வழிகோலி இருக்கிறார்கள். இது தாற்காலிக பலவீனமாகத் தெரியலாம். ஆனால், நிச்சயமாக மிகப்பெரிய பலம்.''

"இனியும் இடதுசாரி இயக்கங்கள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்தனி அமைப்புகளாக செயல்படுவது அவசியம்தானா? இணைப்பு சாத்தியமில்லையா?

            "இணைந்து செயல்படுகிறோம். இதுவே காலப்போக்கில் இணைப்பாக மாறக்கூடும். நாமாக முயற்சிப்பதைவிடத் தானாக நடைபெறுவதுதான் நிலையானதாக இருக்கும். இணைப்புக்கான அவசியம் இருக்கத்தான் செய்கிறது.''

 "அ.தி.மு.க. தனது அணியிலிருந்து இடதுசாரிகளைக் கழற்றி விட்டது பற்றி உங்களது கருத்து என்ன?

               "அது அவர்கள் தன்னிச்சையாக எடுத்த முடிவு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. எங்களது  சுயமரியாதையை இழந்து நாங்கள் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ஒதுக்கும் ஒன்றிரண்டு இடங்களுக்காகக் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. இடதுசாரிகள் இல்லாவிட்டால், எந்தவொரு மாநிலக் கட்சிக்கும் மக்கள் மன்றத்தில் மரியாதை இருக்காது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும். அது தமிழகமானாலும் சரி, ஆந்திரம், பிகார், உத்தரப்பிரேதசமானாலும் சரி!''

"எந்தவொரு அணிக்கும் பெரும்பான்மை வராமல் போனால் நீங்கள் காங்கிரஸ் ஆதரவுடனான மூன்றாவது அணி அரசு அமைய முயற்சிப்பீர்களா மாட்டீர்களா?

 "மதச் சார்பற்ற, அதே நேரத்தில் மாற்றுப் பொருளாதார சிந்தனையுடைய அரசு அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். மாற்றுப் பொருளாதாரம் என்று சொன்னால், மெகா ஊழல்களுக்கு வழிகோலும் மன்மோகன் சிங் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான பொருளாதாரம் என்று பொருள். இந்த விஷயத்தில் காங்கிரஸூக்கும், பா.ஜ.கவுக்கும் உள்ள வேறுபாடு சதவிகிதங்களில்தானே தவிர, மதச்சார்பு, பொருளாதாரக் கொள்கை இரண்டிலுமே இந்த இரண்டு கட்சிகளும் ஏறத்தாழ ஒத்த கருத்துடையவைதான் என்பது எங்கள் கருத்து.''

"அ.தி.மு.க. உங்களைக் கைவிட்ட நிலையில் தி.மு.க. தனது அணியில் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருந்ததே, நீங்கள் ஏன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை?
           
               "காங்கிரஸூம், பா.ஜ.க.வும்போல தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள், அவ்வளவே. மெகா ஊழலான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை வெளிக் கொணர்ந்ததும், முதன் முதலில் அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததும் இடதுசாரிகள்தான். நாங்கள் எப்படி தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முடியும்? ஏறத்தாழ 14 1/2 ஆண்டு காலம் தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகித்த ஒரே ஒரு மாநிலக் கட்சி தி.மு.க.தான். மதச்சார்பு பற்றியோ, மாற்றுப் பொருளாதாரம் பற்றியோ பேசும் அருகதை தி.மு.க.வுக்குக் கிடையாது!''

"மூன்றாவது அணி ஆட்சி அமைந்தால் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று முதலில் அறிவித்தீர்களே, இப்போதும் அதுதான் உங்கள் அபிப்பிராயமா?''

           "நாங்கள், அதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஜெயலலிதாவைப் பிரதமர் பதவி வேட்பாளர் என்று கருதவும் இல்லை, அறிவிக்கவும் இல்லை. யார் பிரதமர் என்பது தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு தீர்மானிக்க வேண்டிய பிரச்னை.''

"2014 தேர்தலில் இடதுசாரிகளின் குறிக்கோள் என்ன?

            "மதவாத சக்திகளின் பிடியில் இந்தியா சிக்கிவிடாமல் காப்பதும், மெகா ஊழல்களின் ஊற்றுக்கண்ணான புதிய பொருளாதாரக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து மாற்றுப் பொருளாதார சிந்தனைக்கு வழிகோலுவதும்தான் எங்கள் குறிக்கோள்.''

"உங்களுடைய முதல் எதிரி காங்கிரஸா, பா.ஜ.கவா?

 "இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று ஏற்கெனவே கூறிவிட்டேன்.''

"இன்னுமா இடதுசாரிகளின் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சி அமையும் என்று நம்புகிறீர்கள்?

          "போராளிகள் நம்பிக்கை இழப்பதில்லை. இந்தியாவைப் போன்ற பலதரப்பட்ட கலாசாரங்கள் உள்ள நாட்டில் கூட்டணி அரசுதான் சாத்தியம். நல்லது. தேவை. அதற்கான இடதுசாரிகளின் முயற்சி தொடரும்.''

நன்றி : தினமணி

சனி, 19 ஏப்ரல், 2014

தில்லி கோட்டைக்குச் சென்று திமுகவும், அதிமுகவும் இதுவரை செய்தது தான் என்ன?  கட்டுரையாளர் : தோழர். டி. கே. ரங்கராஜன், எம்.பி                
           தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் நடத்தும் தேர்தல் பிரச்சாரத்தைக் கவனித்தால், நடப்பது நாடாளுமன்றத்தேர்தலா அல்லது சட்டமன்றத்தேர்தலா....? என்ற சந்தேகம் தான் வருகிறது. இரண்டு கட்சிகளும், பரஸ்பரம் சொத்துப்பட்டியலையும், ஊழல் பட்டியலையும் மக்கள் முன்னால் வைத்து, திகில் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. திமுகவைப் பொறுத்தவரை, காங்கிரஸ், பாஜகவை விட- வேறெந்த மாநிலக் கட்சியையும் விட, கூடுதலான காலம் மத்திய அமைச்சரவையில் இருந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மூன்று தவணைகளாக 6 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இரண்டு தவணையாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. இதில், இரண்டு கூட்டணியிலும் மாறி, மாறி திமுக மட்டும் 14 ஆண்டுகாலம் மத்திய அமைச்சரவையில், ''வலுவான- வளமான'' இலாகாக்களைப் பெற்று, ஆட்சியில் இருந்துள்ளது.
          அதிமுக, பாஜக கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டவுடன், “அண்ணன் எப்போது சாவான்; திண்ணை எப்போது காலியாகும்?” என்று காத்திருந்த திமுக, ஓடோடிச் சென்று, அந்த ஆட்சியில் ஒட்டிக் கொண்டது. திமுக இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று மறைந்த காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியம் சொன்னதாக கலைஞர் தன்னுடைய நிலையை நியாயப்படுத்தினார். இக்கட்டான நிலை வரும்போதெல்லாம், இறந்துபோன தலைவர்களை மேற்கோள் காட்டுவது, கலைஞருக்கு வாடிக்கை. “இந்தியா ஒளிர்கிறது” என்று கூறிய பாஜக கூட்டணி ஆட்சி மங்கிப்போனது. உடனே அணி மாறிய திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசில் சேர்ந்தது. காங்கிரசின் “பி” டீமாகவே, திமுக இருந்தது. எல்லா பருவநிலைகளுக்கும் ஒத்துப்போகும் ஒரு கட்சி, இந்தியாவில் உண்டென்றால், அது திமுகதான். எங்கு சேர்ந்தாலும், அதற்கான வியாக்யானங்களை, விளக்கங்களைத் தருவதில் அவர்களை மிஞ்ச முடியாது. பதினான்கு ஆண்டுகாலம் மத்திய ஆட்சிப் பொறுப்பில் தொடர்ந்து பதவி வகித்த திமுக, தமிழகத்திற்கு செய்தது என்ன...? “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்று ஒரு காலத்தில் குரல் கொடுத்தவர்கள், டாடா, பிர்லா, அம்பானிகளின் சேவகர்களாக மாறிப் போனார்கள்.
             “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்“ என்றார் அண்ணா. இவர்களோ, அம்பானியின் சிரிப்பில் அண்ணாவையே கண்டார்கள். இவர்கள் அண்ணா கண்ட கனவை நிறைவேற்றவில்லை. மாறாக, அதிகாரத் தரகர் நீரா ராடியா கண்ட கனவையே நிறைவேற்றினார்கள். மத்திய ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததைப் பயன்படுத்தி, தமிழை மத்திய ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஆக்கினார்களா? நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழைக் கொண்டுவந்தார்களா? மாநிலத்தில் சுயாட்சி,மத்தியில் கூட்டாட்சி என்று முழக்கமிட்ட வர்கள்; மாநில சுயாட்சிக்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டார்களா? ராஜமன்னார் குழு பரிந்துரைகளை நிறை வேற்றப் பாடுபட்டார்களா? எதுவுமில்லை. மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்து, இவர்கள் சாதித்தது, அலைவரிசைக் கற்றை ஊழல் மட்டுமே.டி.ஆர்.பாலு, கப்பல்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சேது சமுத்திரத் திட்டத் துவக்க விழா நடைபெற்றது. இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு அந்த அரசு செயல்பட்டதால்தான், அது சாத்தியமானது. ஆனால், அந்த திட்டத்தை எதிர்த்து, சுப்பிரமணியசாமியால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்ட நிலையில், திட்டம் முடக்கப்பட்டது.
         பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த அதிமுக, அதற்குச் சொன்ன காரணங்களில் ஒன்று, ‘சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வாஜ்பாய் அரசு மறுக்கிறது’ என்பதாகும். ஆனால், அதே அதிமுக அரசு இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று மனு போட்டிருப்பது விசித்திரமானதாகும். சேதுசமுத்திரத் திட்டம் முடக்கப்பட்டதை எதிர்த்து, திமுகவும் அங்கம் வகித்த மத்திய அரசு, நீதிமன்றத்தில் முறையாக வாதாடியதா? வாய்தா வாங்கி, அந்த வழக்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதற்கும், திட்டம் முடக்கப்பட்டதற்கும், திமுகவுக்கும் பொறுப்பு உண்டு. இந்த திட்டம் முடங்கியதில், அதிமுகவுக்கு மட்டுமல்ல, திமுக வுக்கும் பங்கு உண்டு. 1983-ல் ‘தமிழ் ஈழத்தை ஏற்காதவர்கள் தமிழர்களே அல்ல’; என்று கலைஞர் பேசினார். ஆனால், திமுக அங்கம் வகித்த மத்திய ஆட்சி நடந்தபோதுதான், இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
        அதைத் தடுத்து நிறுத்த, தனது அதிகாரத்தை, அரசியல் செல்வாக்கை திமுக பயன்படுத்தவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். அதன்பிறகு டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, இலங்கைக்குச் சென்று ராஜபக்சேவுடன் அளவளாவிவிட்டு வந்தது. இது என்ன தமிழர் பாசம்? என்று தமிழக மக்களுக்குப் புரியவில்லை. மத்திய அரசில் நீண்டகாலம் இருந்து விட்டு, “எங்கள் சாதனை இது” என்று எதனையும் உருப்படியாக சொல்ல முடியாத தால்தான், தேர்தல் களத்தில் அதிமுக-வை மட்டும் திமுக விமர்சிக்கிறது. கலைஞர் மட்டுமல்ல, அவருடைய மகன் - சகோதரர் மு.க.ஸ்டாலினும் இதைத்தான் செய்து வருகிறார். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.

நாளை நமதே; நாற்பதும் நமதே

          நாளை நமதே; நாற்பதும் நமதே என்று அதிமுகவினர் தேர்தலுக்கு முன்பிருந்தே உற்சாகமாக கூறி வந்தனர். நாடாளுமன்றத்தை வரைந்து, அதன் முன்பு, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிற்பது போல, டிஜிட்டல் பேனர்களை வைத்து அகமகிழ்ந்தனர். இடதுசாரிக் கட்சிகளுடன் தான் எங்களது கூட்டணி என்று கூறிய அதிமுக, கடைசியில் சந்தோஷமாக பிரியலாம் என்று சென்றது. இந்த தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள், சந்தோஷமாக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றன.
        ஆனால், அதிமுகவின் சந்தோஷம்தான் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் பறந்து பறந்து சென்று சாமானிய மக்களைச் சந்திக்கிறார். ஒவ்வொரு கூட்டத்திலும், திமுகவையும், காங்கிரசையும் கடுமையாக விமர்சிக்கிறார். மோடியையும், பாஜகவின் மதவெறியையும் விமர்சிக்க மறுப்பது ஏன்..? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பியது. மோடி வேறு மாநில முதல்வர்; அவரை ஏன் விமர்சிக்க வேண்டும்? என்று அவர்களது ஏடான ‘நமது எம்ஜிஆர்’ பெட்டிச் செய்தியில் கெட்டிக்காரத்தனம் என நினைத்துக் கொண்டு பதில் எழுதியது. இந்த நிலையில் கரூர் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந்த போது, நடிகர் ரஜினிகாந்த்தை மோடி சந்திக்க இருப்பதாக தகவல் வந்தது.
           உடனே பூமியில் காய்ந்து கிடந்த, காவிரி, அமராவதி நதிகளும், காவிரி பிரச்சனையில் பாஜக செய்த துரோகமும், முதல்வருக்கு நினைவுக்கு வந்துள்ளது. காவிரிப் பிரச்சனையில் காங்கிரசும், பாஜகவும் துரோகம் இழைத்ததாகப் பேசினார் முதல்வர். அடுத்து நடிகர் விஜய்யை, மோடி சந்தித்தவுடன், குஜராத்தை விட தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது என்று பட்டியலிடுகிறார் முதல்வர். இப்போது கூட, குஜராத்தில் இஸ்லாமிய மக்களை மோடி நரவேட்டை ஆடியது குறித்தோ, பாஜக தேர்தல் அறிக்கையில் காணப்படும் மதவெறி குறித்தோ எதுவும் கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய கட்சியின் தேர்தல் அறிக்கையில், கூறியுள்ள விஷயங்களைக் கூட அதிமுகவினரால் எடுத்துச் சொல்ல முடியவில்லை.

இருவரும் பொறுப்பு

           தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள்தான் மாறி மாறிஆட்சி செய்து வருகின்றன. ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனாலும் வேலைவாய்ப்பு பெருகவில்லை. இந்த ஆண்டு ஜனவரி மாத கணக்குப்படி தமிழ்நாட்டில் 90லட்சம் பேர் வேலையின்றி காத்திருக்கின்றனர்.  இவர்களில் 45லட்சம் பேர் பெண்கள். இதில் தான் பாலின சமத்துவம் ஏற்பட்டுள்ளது. 3லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். வளாகத் தேர்வில் தேர்வு பெறும் பொறியியல் பட்டதாரிகள் தவிர மற்றவர்களுக்கு நல்ல வேலைகிடைப்பதில்லை. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். சிறு, குறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயத்துறை நாளுக்கு நாள் நலிந்துவருகிறது.
        மின்வெட்டு தமிழகத்தை மிரட்டுகிறது. திமுக -அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டுகின்றன. ஆனால் இரண்டு கட்சிகளுமே இந்த நிலைமைக்கு காரணம். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இரு கட்சிகளுக்கும் உண்டு. ஆனால் இந்த கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு, என்ன செய்யும்? என்று யாரும் இப்போது கூற முடியாது. அனைத்து வாய்ப்புக் களுக்குமான வாசல்களை இவர்கள் திறந்தே வைத்துள்ளனர்.
        ஆனால், அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு இடம் தராமல், மத்தியில் அமைகிற அரசு மதச்சார்பற்ற- மாற்று அரசாக அமைய வேண்டும் என்று கம்பீரமாக களத்தில் நிற்பவர்கள் இடதுசாரி வேட்பாளர்களே... அவர்களை ஆதரிப்பதன் மூலம்தான் தேச நலனை மட்டுமல்ல; தமிழக நலனையும் பாதுகாக்க முடியும்.
 

திங்கள், 14 ஏப்ரல், 2014

தஞ்சையில் தோழர்.மாணிக் சர்க்காரின் எழுச்சியுரை (வீடியோ )

நேற்று 14.04.2014 திங்களன்று மாலை தஞ்சாவூர் மக்களவைத்தொகுதி 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர்.எஸ்.தமிழ்ச்செல்வி
அவர்களை ஆதரித்து இந்தியாவிலேயே எளிமையான, ஏழ்மையான,
நேர்மையான, மிகச் சிறந்த முதல்வராக திரிபுரா மாநிலத்தை ஆட்சி 
செய்யும் தோழர்.மாணிக் சர்க்கார் அவர்கள் தஞ்சையில் ஆற்றிய உரை.


ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

எச்சரிக்கை : மதவெறியை முன்மொழியும் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை...!


 கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்,          
                                 மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)          

           அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, போன்ற அம்சங்களில் மட்டுமல்ல, வேறு பல கோணங்களிலும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலையே மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
          வெளிநாடுகளில் வாழும் “இந்துக்கள் துன்புறுத்தப்பட்டால் அவர்களுக்கு இந்தியா அடைக்கலம் தரும்” என பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கூறுகிறது. இந்தியர்கள் பல கோடிப் பேர் சிங்கப்பூர், மலேசியா, அரேபிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு பணிகளில் உள்ளனர். ஒரு பகுதியினர் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களாகவும் ஆகி விட்டனர்.
          இவர்களில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என இந்தியாவின் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்துக்கள் பாதிக்கப்பட்டால் மட்டும்தான் இந்திய அரசு அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் என்றால் இது ஒரு வகுப்புவாத அணுகுமுறை என்பதைத் தவிர வேறென்ன? சொந்த நாட்டு மக்களையே மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கும் இந்தப் பார்வை மிகவும் ஆபத்தானது அல்லவா? தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் நிறவெறி கொடுமைக்கு ஆளானபோது, காந்திஜி அவர்கள் அனைவருக்காகவும் போராடினார். பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எந்த மதத்தை, எந்த சாதியைச் சார்ந்தவர்கள் என்று காந்திஜி வேறுபடுத்தி பார்க்கவில்லை.           
          தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவான சேதுக்கால்வாய் திட்டத்தையும் பாஜக தடுப்போம் என கொக்கரிப்பது வகுப்புவாத கண்ணோட்டத்தோடுதான். புராணங்களின் அடிப்படையில் வளர்ச்சியை தடுப்பது முறையா?பாஜக தேர்தல் அறிக்கை வகுப்புவாத அணுகுமுறையை கொண்டதாக மட்டுமல்ல, தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு முற்றிலும் விரோதமானதாக உள்ளது.
             நலிந்த பிரிவினருக்கு சமூக நீதி, அதிகாரம் அளித்தல் என்று துவங்கும் பாஜகவின் தேர்தல் அறிக்கை “கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றில் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கக்கூடிய ஒரு பொருளாதார நிலைமையை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுப்போம்” எனக் கூறுகிறது. தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தற்பொழுது அமலாகி வரும் இடஒதுக்கீடு பற்றி பாஜக அறிக்கையில் எதுவும் இல்லை. அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற வார்த்தை ஜாலத்தை வைத்து நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை ஒழித்திட பாஜக சதிவலை பின்னுகிறது.
            பல ஆயிரம் ஆண்டுகள் நீடித்த அநீதியான சாதிய முறையினால்தான் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால்தான் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அது தொடர்வதும் அவசியமாகிறது. “அரசியல் தளத்தில் ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற ஜனநாயகம் உள்ளது. ஆனால் பொருளியல் வாழ்க்கையில் இந்த ஜனநாயகம் அல்லது சமமான வாய்ப்பு இல்லை” என டாக்டர் அம்பேத்கார் கூறினார். ஒரு சிலர் டாலர் பில்லியனராக கொழுப்பதும், பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாடுவதும் நீடிக்கும் தேசத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது ஏமாற்று வித்தையே.
             மேலும், சமூக ரீதியிலும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை யினத்தைச் சார்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது முக்கியமான அம்சம். இதையும் பாஜக வகுப்புவாதக் கண்ணோட்டத்துடன் நிராகரிக்கிறது.சிறுபான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் வறுமையில் வாடுவதாக கூறும் பாஜக, அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உருப்படியான எந்தத் திட்டத்தையும் தனது தேர்தல் அறிக்கையில் முன்வைக்கவில்லை.
              நவீன இந்தியாவில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற சொல்லாடலை பாஜக பயன்படுத்துகிறது. ஆனால், இஸ்லாமிய சிறுபான்மை மக்களுடைய கல்வி, வேலைவாய்ப்பு , வாழ்வாதாரம் போன்ற பிரச்சனைகளைப் பற்றி ஆய்வு செய்த நீதிபதி சச்சார் குழு அறிக்கை பற்றியோ, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரை பற்றியோ ஏதும் கூறவில்லை. இந்த பரிந்துரைகளை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்த கட்சிதான் பாஜக என்பதை மறந்துவிடமுடியாது. பொருளாதாரக் கொள்கையில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு இல்லை என்பது மட்டுமல்ல, பாஜக ஒரு வகுப்புவாத கட்சி என்பதை அது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையே மேலும் அம்பலப்படுத்துகிறது.
         இத்தகைய வகுப்புவாதக் கட்சியோடு மதிமுக, பாமக, தேமுதிக உடன்பாடு வைத்திருப்பதும், இதுவரையில் பாஜக தேர்தல் அறிக்கை பற்றி அதிமுக தலைமை வாய் திறக்காததும் ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அந்த கட்சிகளுக்கு உண்டு.
          எனவே, வகுப்புவாதத்திற்கு எதிராக, மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக, உறுதியாக போராடி வரும் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமென வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்து வாக்களியுங்கள்..! - தோழர்.பிரகாஷ் காரத் எழுச்சியுரை.


வடசென்னை மக்களவை தொகுதி CPI(M)  வேட்பாளர் 
தோழர்.உ.வாசுகி அவர்களை ஆதரித்து நடைபெற்ற 
பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்
தோழர்.பிரகாஷ் காரத் அவர்களின் எழுச்சியுரை...!தமிழக வாக்காளப் பெருமக்களே... இடதுசாரிகளுக்கு வாக்களிப்பீர்...! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்


 தமிழக வாக்காளப்பெருமக்களுக்கு, வணக்கம்....
         
         மத்தியில் ஒரு புதிய அரசை தேர்வு செய்வதற்கு 16-ஆவது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசத்தை பாதுகாத்திடவும், இதுகாறும் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் மக்கள் விரோத, தேச விரோத பொருளாதாரக் கொள்கைகளுக்கு முடிவுகட்டவும் - பல மதங்கள், மொழிகள், இனங்களைக் கொண்ட இந்தியத் திருநாட்டில் எந்த வெறிக்கும் இடம் தராமல் மக்கள் ஒற்றுமையை லட்சியமாக கொண்ட ஒரு மாற்றுப்பாதைக்கான அரசினை மத்தியில் அமைப்பதற்கான நல்ல வாய்ப்பே இந்த தேர்தல்.        
        மத்தியில் மேற்கண்டவாறு ஒரு அரசை அமைத்திட ஏதுவாக 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாடு, புதுவை மாநிலங்களில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும், கடமையும் வாக்காளர்கள் முன் உள்ளது. நமது வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்று உறுதியுடன் குரல் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், நமது வாக்கு, ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி முறையைப் பாதுகாக்கக் கூடியதாகவும், உயர்மட்ட ஊழல் பேர்வழிகளை புறந்தள்ளக் கூடியதாகவும், இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், மக்கள் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதாகவும் அமைய வேண்டும்.
             தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் திராவிடக் கட்சிகள் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் உலகமய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன. மேலும் இக்கட்சிகளின் கொள்கைகளால் தமிழ்நாட்டில் தொழில், விவசாயம் உள்ளிட்ட வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டவில்லை. தமிழக பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளது என்பதை தமிழக அரசின் 2014-2015 நிதிநிலை அறிக்கையே கூறுகிறது. மின்வெட்டால் சிறு தொழில்கள் மற்றும் பெரும் தொழிற்சாலைகள் கடும் பாதிப்படைந்து வருகின்றன. என்ஜினியரிங், விசைத்தறி உள்ளிட்ட பல பத்தாயிரம் சிறு தொழில் நிறுவனங்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியும், மூடப்பட்டும் உள்ளன. இதில் பணிபுரியும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் திமுக, அதிமுக அரசுகள் மின் உற்பத்திக்கு போதிய திட்டங்களை நிறைவேற்ற தவறியதன் விளைவாக தமிழகம் இருண்டு கிடக்கிறது. தாராளமய, தனியார்மய கொள்கைகளின் அறுவடையே தமிழக மின்பற்றாக்குறையும் தொழில் நெருக்கடியும்.பன்னாட்டு மூலதனத்தை ஈர்ப்பது என்ற பெயரால் அவைகளுக்கு தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விதிகளுக்கு முரணாக விளை நிலங்கள் விவசாயிகள் ஒப்புதலின்றி கையகப்படுத்தப்படுகின்றன. தொழிற்சாலைகளுக்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கும் சட்டத் திருத்தத்தை அதிமுக அரசு கடந்த சட்டமன்றத்தில் எங்களது கட்சியின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றியுள்ளது.
             இதனால் வரைமுறையின்றி விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் ஆபத்து அதிகரித்துள்ளது. இதற்கென ஒரு நிலவங்கி உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்றைக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரமாக திகழும் விவசாயம் தேக்கமடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாய உற்பத்தி தொடர்ந்து தேக்கமாக உள்ளது. இடுபொருள் விலைகள் கிடுகிடுவென ஏறிவரும் நிலையில், வேளாண் விளை பொருள் விலைகள் உயரவில்லை. அரசு கொள்முதல் ஏற்பாடுகளும் மிகக்குறைவே.இரண்டாண்டுகளாக நீடித்து வரும் வறட்சி பெரும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. விவசாயிகளின் கடும் போராட்டத்தால் கடந்தாண்டு அதிமுக அரசு ஓரளவு வறட்சி நிவாரணம் வழங்கியது. அதுவும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. மாநில அரசு கோரியதில் 30ல் ஒரு பங்கு கூட மத்திய அரசு நிவாரணத் தொகை வழங்க மறுத்து விட்டது. தொடர்ந்து வரும் விவசாய நெருக்கடிகளால் சுமார் 9 லட்சம் விவசாயிகள் நிலங்களை இழந்து நிலமற்றவர்கள் பட்டாளத்தில் சேர்ந்துள்ளதை மக்கள் தொகை கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வாழ்விழந்த கிராமப்புற மக்கள் வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. நகர்ப்புற, கிராமப்புற வேலையின்மை அதிகரித்துள்ளது. சுமார் 91 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை கோரி பதிவு செய்துள்ளார்கள். தனியார் நிறுவனங்களில் நிரந்தர வேலைமுறை ஒழிக்கப்பட்டு ஒப்பந்த மற்றும் தற்காலிக முறையின் கீழ் வேலைகள் வழங்கப்படுகின்றன.
            இவர்களுக்கு சட்டப்படியான ஊதியம் மற்றும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்கும் அனுமதி மறுக்கப்பட்டு கொத்தடிமைகளாக நீடிக்கும் நிலைமை உள்ளது.வெளிமாநிலங்களிலிருந்து வரவழைக்கப்படும் தொழிலாளர்கள் மிருகத்தனமாக சுரண்டப்படுகின்றனர். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் தகர கொட்டைகளில் தங்க வைக்கப்பட்டு குறைந்தபட்ச ஊதியம் ஏதுமின்றி கொத்தடிமைகளை விட மோசமான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். விபத்துகளில் சிக்கும் தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு கூட உரிய நிவாரணம் வழங்கப்படுவதில்லை. அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள், மருத்துவமனைகள் அனைத்து துறைகளிலும் ஒப்பந்தம் அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்துவதே அரசின் சாதனையாக தம்பட்டம் அடிக்கப்படுகிறது. காவல்துறையிலும் இளைஞர்படை என்ற பெயரில் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக ஆட்சியின் போது ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 13000 மக்கள் நலப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு நடுத் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
            பணியமர்த்தப்படும் தொகுப்பூதிய பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.ஊழல் முறைகேடுகள் அரசின் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. உயர்மட்ட ஊழல் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்குகளே சான்றாக அமைந்துள்ளன.கனிமவளக் கொள்ளை, கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பு ஏற்படுகின்றன. அரசின் உயர்மட்டத்தில் உள்ளவர்களின் ஆதரவின்றி இக்கொள்ளைகள் நடைபெற முடியாது என்பது அறிந்ததே. தேசத்தை நாசமாக்கும் காங்கிரஸ் - பாரதிய ஜனதா கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து ஆட்சியில் பங்கேற்றிட திமுக - அதிமுக கட்சிகள் தயங்கிடவில்லை.இந்தப் பின்னணியில், தமிழக மக்களின் நல்வாழ்வை மையமான நோக்கமாகக் கொண்டு, கீழ்வரும் கோரிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி மக்களவையில் வலுவாகக் குரல் கொடுக்கும். மாநில அளவிலும், மக்களைத் திரட்டிப் போராடும்.
                        
மேலும்....

           # இலங்கை மண்ணில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் சொல்லிமாளாது. உள்நாட்டு யுத்தம் முடிந்து 4 ஆண்டுகளுக்குப் பின்னரும் ராஜபக்சே அரசு தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாத்திட தவறி வருகிறது. இன்று இம்மக்களின் மறுவாழ்வு, மீள்குடியமர்த்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இராணுவம் வாபஸ் பெறப்படவில்லை. மேலும், காலம் கடத்தாமல் தமிழ் மக்கள் மறுவாழ்வு, மீள்குடியமர்த்தல், இப்பகுதிகளிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றல், அதிக அதிகாரங்களைக் கொண்ட வடக்கு-கிழக்கு பகுதிகளை இணைத்து தமிழ் மாநிலம் அமைத்தல், நிலம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கிட வேண்டும். இங்கு நடைபெற்ற ராணுவ அத்துமீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய சுதந்திரமான, நேர்மையான விசாரணை நடத்திட வேண்டும். இவ்விசாரணை மூலம் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கிட வேண்டும். இதற்கு இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
        # தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையா தேவையாக உள்ள சேது சமுத்திரத் திட்டத்தை துரிதமாக நிறைவேற்ற வேண்டும். இத்திட்டத்திற்கு மதச்சாயம் பூசி இதை கிடப்பிலேயே போடும் முயற்சியை எதிர்த்து வலுவான குரல் எழுப்பிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் முன் உள்ள வழக்கினை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாதாடி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முனைந்திட வேண்டும்.
      # தமிழகத்தில் சென்னை - குமரி, சென்னை - திருச்சி (மெயின் லைன்) உள்ளிட்ட அனைத்து இருப்பு பாதைகளையும் இருவழிப் பாதைகளாக மாற்றிட வேண்டும். மேலும், இப்பாதைகளை மின்மயப்படுத்தும் நடவடிக்கைக்கு கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும்.4சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையினை துவக்கிட வேண்டும்.
          # சென்னை - மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழை நீதிமன்ற மொழியாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.4 தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை மத்திய அரசின் நிர்வாக மொழியாக அங்கீகரிக்க வேண்டும்.
        # காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேம்பாட்டு ஆணையத்தையும் காவிரி நதி நீர் கண்காணிப்புக் குழுவையும் தாமதமின்றி மத்திய அரசு அமைத்திட வேண்டும். இறுதித் தீர்ப்பின் படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதை மேற்கண்ட ஆணையம் முறையாக கண்காணித்து நிறைவேற்ற வேண்டும்.
        # முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு நிறைவேற்ற வேண்டும். இதனை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும். மேலும், இப்பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு முன் உள்ள வழக்கினை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
       # கிருஷ்ணா - கோதாவரி, பாலாறு - வைகை நதியினை இணைக்கும் திட்டத் திற்கு ஆய்வுப் பணியினை மேற்கொள்ள வேண்டும். காவிரியின் உபரி நீரை திருப்பி புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களை வளப்படுத்துவதற்கான காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை கூடுதல் நிதி ஒதுக்கி விரைவாக நிறைவேற்றிட வேண்டும். மேலும், உள்நாட்டிலுள்ள நதிகளை இணைத்து காவிரி பாசன மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற உரிய ஆய்வுகளை உடனடியாக மேற்கொள்ள மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும்.    
         # தமிழகத்தில் வேகமாக குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி நீர்வளத்தை பாதுகாத்திட சிறப்பு நீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வெள்ள காலங்களில் அதிகமான நீர் கடலில் கலந்து வீணாவதை தடுத்திட புதிய நீர்த்தேக்கங்களையும், காவிரியிலும், கொள்ளிடத்திலும் புதிய கதவணைகளையும் அமைத்திட வேண்டும்.
      # தமிழகத்தில் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்கும் நோக்கோடு அமையவுள்ள மீத்தேன் எரிவாயு திட்டத்தினை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். இதற்கென மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
   # மேற்கு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடி நிலங்களையும், விவசாயிகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தினை விவசாய நிலங்கள் வழியாக அமைத்திடும் நடவடிக்கையினை நிரந்தரமாக நிறுத்திட வேண்டும். இத்திட்டத்தினை விவசாயத்துக்கு துளியும் பாதிப்பில்லாத வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக அமைத்திடலாம்.
        # மதுரை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மற்றும் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கட்டாயப்படுத்தி கையகப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை கைவிட வேண்டும்.
          # மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு என்ற பெயரில் தானடித்த மூப்பாக மத்திய அரசு செயல்படுத்த முயன்றுள்ள கஸ்தூரி ரங்கன் அறிக்கையை நிராகரிக்க வேண்டும். இது தொடர்பாக நிபுணர்கள், விவசாய பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகளை கொண்ட உயர்மட்டக்குழு அமைத்து மக்கள் நலன் பாதிக்காத வகையில் ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.
    # மத்திய அரசின் மேம்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலான காப்பீட்டுத் திட்டத்தினை உருவாக்கிடவேண்டும்.
        # மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துவது மற்றும் நியாயமான நிவாரணம், மறுவாழ்வு, குடியமர்த்தல் சட்டத்திற்கான தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
      # மாநில சுயாட்சி, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் போன்ற கோரிக்கை வலுவாக எழுகிற போது மத்திய அரசு படிப்படியாக மாநில அதிகாரங்களை தட்டிப்பறித்துக் கொண்டுள்ளது. பொதுப் பட்டியலிலிருந்த பல அம்சங்களை மத்திய அரசு கையகப்படுத்தி வருகிறது. விவசாயம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் மத்திய அரசின் முடிவே இறுதி முடிவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 13 ஆவது நிதிக்குழு சிபாரிசின் படி வழங்க வேண்டிய நிதிப்பங்கினை அளிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. அதிகாரங்களை மத்திய அரசிடம் குவிப்பதை எதிர்த்து, மாநிலங்கள் கூடுதல் அதிகாரம் பெறவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) போராடும். மத்தியில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மாற்று அரசு அமைவதும் இதற்கு உதவும்.
     # அதேபோல் உள்ளாட்சி அமைப்புகள் உரிய அதிகாரத்துடனும், ஜனநாயகப் பூர்வமாகவும் செயல்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) போராடும்.
          # நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் சட்டத்தை மேலும் வலுப்படுத்த திருத்தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழியும். இதேபோன்ற சட்டத்தை தமிழகத்திலும் நிறைவேற்றிட போராடும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு 
''சுத்தியல்-அரிவாள்-நட்சத்திரம்'' சின்னத்திலும்....
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர்களுக்கு 
''கதிர் அரிவாள்'' சின்னத்திலும் ....
வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்....!