ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

நாடு முழுவதும் `மோடி அலை’ எனில் இரண்டு தொகுதிகளில் போட்டி ஏன்?


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, எம்.பி கேள்வி

          “நாடு முழுவதிலும் மோடி அலை வீசுகிறது என்றால், வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதியை சல்லடை போட்டு சலித்தெடுத்தது ஏன்...? வெற்றிநிச்சயம் எனில் வாரணாசி தொகுதியிலிருந்து மட்டும் போட்டியிடாமல் இரண்டாவது தொகுதியை தேர்வு செய்தது ஏன்...?” 
என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எர்ணாகுளத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

         மக்களவை தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மாற்று அரசினை அமைத்திட இடதுசாரிக்கட்சிகள் பிராந்திய கட்சிகளுடன் செயல்பட்டு வருகின்றன என்ற யெச்சூரி, 2009 தேர்தல்களை விட கூடுதலான எண்ணிக்கையில் இடதுசாரிக் கட்சிகள் வெற்றிபெறும் என்றும் கூறினார். மேற்குவங்கத்தில், அடக்குமுறையும், அச்சுறுத்தலும் பெரிய அளவில் திரிணாமுல் காங்கிரசால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.
                 “மதவாத சக்திகள் ஏன் இன்றைக்கு இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளன? இதற்கு யார் பொறுப்பு” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், இன்றைய இத்தகையதொரு அபாயகரமான சூழலுக்கு காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளே காரணம் எனயெச்சூரி சாடினார். தாங்கள் மதவாத சக்திகளுக்கு எதிரானவர்கள் என்பதனை மக்கள் முன் காங்கிரஸ் கட்சி நிரூபித்திட வேண்டும் என்றார்.

கேரளம் வழிகாட்டும் :      
            மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: விலைவாசி உயர்வு, வேலையின்மை, பாதுகாப்பின்மை போன்ற நாடு சந்திக்கும் பிரச்சனைகளுக்கு காங்கிரஸ்-பாஜக அல்லாத அரசு அமைவதன் மூலம்தான் தீர்வுகாண முடியும்.
             இந்த சூழ்நிலையில், வாக்குச்சீட்டு மூலம் கம்யூனிஸ்ட் அரசை அதிகாரத்தில் அமர்த்தி வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிய கேரளம் தான் மத்தியில் மாற்று அரசு அமைவதற்கான பாதையை உருவாக்கி வழிகாட்டப்போகிறது. ஒரு சில பெரும் செல்வந்தர்களின் ஒளிரும் இந்தியா, மிகப் பெரும்பான்மையான சாமானிய மக்கள் துயரத்தில் வாழ்கின்ற அவதிப்படும் இந்தியா என இரண்டு இந்தியா இப்போது உள்ளது. நாட்டின் வளங்கள் அனைத்தையும் மக்களுக்காக பயன்படுத்தி அனைவருக்குமான ஒரே இந்தியாவை உருவாக்கு வதுதான் இடதுசாரி மாற்று அணியின் லட்சியமாகும்.
             ஊழல், மக்கள் விரோத கொள்கைகள் ஆகியவற்றை மக்கள் தலையில் திணிப்பதிலும் பாஜகவும் காங்கிரசும் இணைந்து செயல்படுகின்றன. அதனால் தான் 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் குறித்துவிசாரணை நடத்திய பி.சி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றக்குழுவிடம் குறிப்பிட்ட காலகட்டங்களை விசாரணையிலிருந்து தவிர்க்க வேண்டும் என்று இவர்கள் கோரினார்கள்.
                ஊழலில் மூழ்கிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண், பாஜக தலைவர் எடியூரப்பா ஆகியோர் மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஊழல் விஷயத்தில் இந்த இருகட்சிகளுக்கும் உள்ள அணுகுமுறையையே இது எடுத்துக் காட்டுகிறது.
               
யார் பிரதமர் : 
          மூன்றாவது அணிக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை என்ற வாதம் அர்த்தமற்றதாகும். 1977ல் அமைந்த ஜனதா அரசின் காலம் முதல் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட பிரதமர்கள் நாட்டில் இருந்ததில்லை.
              தன்னைத்தானே பிரதமர் வேட்பாளராக அறிவித்துக் கொண்ட இந்திரா காந்தி அன்று தோல்வியடைந்தார். பிற்காலத்தில் வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் போன்றவர்களும் முன் கூட்டி நிச்சயக்கப்பட்டு பிரதமர் ஆனவர்கள் அல்ல. 2004ல் மன்மோகன் சிங் பிரதமர் ஆவார் என்று யாராவது நினைத்திருப்பார்களா? காங்கிரசோ, பாஜகவோ அல்ல, பிரதேச கட்சிகள்தான் இப்போது அதிக பலத்துடன் உள்ளன. தேர்தலுக்கு பின் இவர்களிடையே ஒற்றுமை வலுப்பெறும். வகுப்புவாத சக்திகள் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக வளர்ந் திருப்பதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

               இதிலிருந்து ஏ.கே.அந்தோணி தப்பிக்க முடியாது. தேர்தல் கணிப்புகள் எல்லாம் பெரும் ஏமாற்றும் வித்தையாகும். “மாற்றி வாக்களித்து விட்டீர்களா? கவலைப்படாதீர்கள். கருத்துகணிப்பில் நான் சரி செய்து விடுகிறேன்” என்று கூறுகின்ற ஆ.கே.லட்சுமணின் கார்ட்டூன் கதாப்பாத்திரத்தைத்தான் இது நினைவூட்டுகிறது.இவ்வாறு யெச்சூரி கூறினார்.

கருத்துகள் இல்லை: