இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெபி) -தமிழ்நாடு பொதுச் செயலாளர்
சி.பி.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒட்டுமொத்த தேசமே 16வது மக்களவைத்
தேர்தலில் ஈடுபட்டிருக்கும்போது இந்திய ரிசர்வ் வங்கியானது புதிய தனியார்
வங்கிகளைத் துவங்க கார்ப்பரேட்டுகளுக்கு அனுமதி வழங்க முற்பட்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு தேர்தல் கமிஷனும்
பச்சைக் கொடி காட்டிவிட்டதாக அறிகிறோம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி-2 அரசுக்கு, புதிதாக அமையவுள்ள அரசு இதைபரிசீலிக்கும்
அவகாசம் கொடுக்கவும் பொறுமை இல்லை. ரிலையன்ஸ் கம்பெனிக்கு எரிவாயு
விலையைத் தீர்மானிக்க அளித்த அவசர வேகத்தைப் போன்றுதான் இதிலும் ஆளும்
கட்சியின் வர்க்க பாசம் வெளிப்பட்டுள்ளது.
கட்டமைப்பு நிதிய
நிறுவனமான ஐ.டி.எப்.சி. மற்றும் நுண்கடன் நிறுவனமான பந்தன் நிதி நிறுவனம்
இரண்டுக்கும் ரிசர்வ் வங்கி ஏப்ரல் 2, 2014 அன்று அனுமதி வழங்கியுள்ளதாக
பத்திரிகை அறிக்கைகள் அறிவிக்கின்றன.இத்தகைய புதிய வங்கிகள் தொடங்குவதற்கு
அனுமதி அளிப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.1947 முதல் 1969 வரை
550க்கும் அதிகமான தனியார் வங்கிகள் திவால் ஆகின. மக்கள் வங்கிகளில்
சேமித்து வைத்த தொகையை இழந்தனர்.
1969-இல் 14 பெரிய இந்திய
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின்னரும் கூட, 25 தனியார் வங்கிகள்.
நொடித்துப் போயின. அதில் புதிய தலைமுறை வங்கியான குளோபல் ட்ரஸ்ட் வங்கியும்
ஓன்று. 1000 கோடிக்கும் மேல் பேரிழப்பை சந்தித்த ஜி.டி.பி.யின் நஷ்டம்
பொதுத்துறை வங்கியான ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மீது வலுக்கட்டாயமாக
சுமத்தப்பட்டது.
கடந்த மார்ச்சில் ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எப்.சி.வங்கி,
ஐசிஐசிஐ ஆகிய வங்கிகள் நமது நாட்டு வரிச்சட்டங்கள், பெமா பிஎம்எல்ஏ.
ரிசர்வ் வங்கி அவ்வப்போது தெரிவிக்கும் நியமங்கள், ஆணைகள், வழிகாட்டல்கள்,
கேஒய்சி விதிமுறைகள் ஆகியவற்றை மதிக்காமல் நிதி ஒழுங்கீனத்
தில்லுமுல்லுகளில் ஈடுபட்டு மணி -லாண்டரிங் செய்தவை அம்பலத்துக்கு
வந்தன.பொதுத்துறை வங்கிகள் கட்டமைப்புக்காக 15 விழுக்காட்டுக்கும் அதிகம்
செலவிடுவதாக நிதி அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
இவை இந்தசிந்த் வங்கியில் 1.87 விழுக்காடு; எச்டிஎப்சியில் 1.02
விழுக்காடு ; கோட்டக் மகேந்திரா வங்கியில் 0.57 விழுக்காடு.பொதுத்துறை
வங்கிகளின் சேவைத்தரமும் தனியார் வங்கிகளை விடக் உயர்வே. பொதுத்துறை
வங்கிகளில் புகார் எண்ணிக்கை 0.69 விழுக்காடு; தனியார் வங்கிகளில் இது 2.35
விழுக்காடு. வெளிநாட்டு வங்கிகளில் இது 22.34 விழுக்காடு. நிதி குறித்த
நாடாளுமன்ற நிலைக்குழுவும் ரிசர்வ் வங்கி லைசன்ஸ் வழிகாட்டல்கள் குறித்து
பரிசீலனை செய்ய அறிவுறுத்தியது.
ஜனவரி 3, 2013 அன்று மும்பை
மாநகரில் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்திருந்த சி.டி.தேஷ்முக் நினைவு
சொற்பொழிவில் நோபல் விருது பெற்ற பொருளியல் அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்
கார்ப்பரேட்டுகள்வங்கி துவங்க அனுமதிப்பது மோதலுக்கு வழி வகுக்கும்
என்றார்.கார்ப்பரேட் லைசன்ஸ் வழங்குவது என்பது ரிசர்வ் வங்கியின் நோக்கமான
பாமரனுக்கான சேவை அடிப்படையையே தகர்க்கும் என ரிசர்வ் வங்கி கூடக்
கருதுகிறது.
எனவே கார்ப்பரேட்டுகளுக்கு லைசன்ஸ் வழங்கப்படும் இந்த
முடிவு தர்க்கரீதியாகவும் நியாயமான அடிப்படையிலும் புறம்பானதாகவே
இருக்கும்.எனவே ஐ.மு.கூ.-2 அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து எடுத்துள்ள
இந்த முடிவை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெபி) கடுமையாக எதிர்க்கிறது.
பாமர நலனுக்கு எதிரான இந்த அரசின் முடிவை வங்கி ஊழியர்களும் ஜனநாயக எண்ணம்
கொண்ட மக்களும் எதிர்த்துப் போராட பெபி சங்கம் அறைகூவல்
விடுக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக