ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

எச்சரிக்கை : மதவெறியை முன்மொழியும் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை...!


 கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்,          
                                 மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)          

           அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, போன்ற அம்சங்களில் மட்டுமல்ல, வேறு பல கோணங்களிலும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலையே மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
          வெளிநாடுகளில் வாழும் “இந்துக்கள் துன்புறுத்தப்பட்டால் அவர்களுக்கு இந்தியா அடைக்கலம் தரும்” என பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கூறுகிறது. இந்தியர்கள் பல கோடிப் பேர் சிங்கப்பூர், மலேசியா, அரேபிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு பணிகளில் உள்ளனர். ஒரு பகுதியினர் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களாகவும் ஆகி விட்டனர்.
          இவர்களில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என இந்தியாவின் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்துக்கள் பாதிக்கப்பட்டால் மட்டும்தான் இந்திய அரசு அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் என்றால் இது ஒரு வகுப்புவாத அணுகுமுறை என்பதைத் தவிர வேறென்ன? சொந்த நாட்டு மக்களையே மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கும் இந்தப் பார்வை மிகவும் ஆபத்தானது அல்லவா? தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் நிறவெறி கொடுமைக்கு ஆளானபோது, காந்திஜி அவர்கள் அனைவருக்காகவும் போராடினார். பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எந்த மதத்தை, எந்த சாதியைச் சார்ந்தவர்கள் என்று காந்திஜி வேறுபடுத்தி பார்க்கவில்லை.           
          தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவான சேதுக்கால்வாய் திட்டத்தையும் பாஜக தடுப்போம் என கொக்கரிப்பது வகுப்புவாத கண்ணோட்டத்தோடுதான். புராணங்களின் அடிப்படையில் வளர்ச்சியை தடுப்பது முறையா?பாஜக தேர்தல் அறிக்கை வகுப்புவாத அணுகுமுறையை கொண்டதாக மட்டுமல்ல, தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு முற்றிலும் விரோதமானதாக உள்ளது.
             நலிந்த பிரிவினருக்கு சமூக நீதி, அதிகாரம் அளித்தல் என்று துவங்கும் பாஜகவின் தேர்தல் அறிக்கை “கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றில் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கக்கூடிய ஒரு பொருளாதார நிலைமையை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுப்போம்” எனக் கூறுகிறது. தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தற்பொழுது அமலாகி வரும் இடஒதுக்கீடு பற்றி பாஜக அறிக்கையில் எதுவும் இல்லை. அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற வார்த்தை ஜாலத்தை வைத்து நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை ஒழித்திட பாஜக சதிவலை பின்னுகிறது.
            பல ஆயிரம் ஆண்டுகள் நீடித்த அநீதியான சாதிய முறையினால்தான் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால்தான் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அது தொடர்வதும் அவசியமாகிறது. “அரசியல் தளத்தில் ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற ஜனநாயகம் உள்ளது. ஆனால் பொருளியல் வாழ்க்கையில் இந்த ஜனநாயகம் அல்லது சமமான வாய்ப்பு இல்லை” என டாக்டர் அம்பேத்கார் கூறினார். ஒரு சிலர் டாலர் பில்லியனராக கொழுப்பதும், பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாடுவதும் நீடிக்கும் தேசத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது ஏமாற்று வித்தையே.
             மேலும், சமூக ரீதியிலும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை யினத்தைச் சார்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது முக்கியமான அம்சம். இதையும் பாஜக வகுப்புவாதக் கண்ணோட்டத்துடன் நிராகரிக்கிறது.சிறுபான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் வறுமையில் வாடுவதாக கூறும் பாஜக, அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உருப்படியான எந்தத் திட்டத்தையும் தனது தேர்தல் அறிக்கையில் முன்வைக்கவில்லை.
              நவீன இந்தியாவில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற சொல்லாடலை பாஜக பயன்படுத்துகிறது. ஆனால், இஸ்லாமிய சிறுபான்மை மக்களுடைய கல்வி, வேலைவாய்ப்பு , வாழ்வாதாரம் போன்ற பிரச்சனைகளைப் பற்றி ஆய்வு செய்த நீதிபதி சச்சார் குழு அறிக்கை பற்றியோ, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரை பற்றியோ ஏதும் கூறவில்லை. இந்த பரிந்துரைகளை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்த கட்சிதான் பாஜக என்பதை மறந்துவிடமுடியாது. பொருளாதாரக் கொள்கையில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு இல்லை என்பது மட்டுமல்ல, பாஜக ஒரு வகுப்புவாத கட்சி என்பதை அது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையே மேலும் அம்பலப்படுத்துகிறது.
         இத்தகைய வகுப்புவாதக் கட்சியோடு மதிமுக, பாமக, தேமுதிக உடன்பாடு வைத்திருப்பதும், இதுவரையில் பாஜக தேர்தல் அறிக்கை பற்றி அதிமுக தலைமை வாய் திறக்காததும் ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அந்த கட்சிகளுக்கு உண்டு.
          எனவே, வகுப்புவாதத்திற்கு எதிராக, மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக, உறுதியாக போராடி வரும் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமென வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: