ஞாயிறு, 3 ஜனவரி, 2016

நாட்டிற்கே வழிகாட்டுகிறது திரிபுரா மாநில அரசு...!


ஒரு அரசாங்கம் எப்படிச் செயல்பட வேண்டும் 
என்று நாட்டிற்கே முன்னுதாரணமாக வழிகாட்டுகிறது 
தோழர். மாணிக் சர்க்கார்  தலைமையிலான் திரிபுரா மாநில அரசு...!

          அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன சிறப்பு மாநாட்டில் (பிளீனத்தில்) திரிபுரா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு :
           இடது முன்னணி அரசாங்கத்தின் கீழ், வடகிழக்கில் உள்ள ஒரு சிறிய மாநிலமான திரிபுரா, பல்வேறு முனைகளிலும் சக்திவாய்ந்த முறையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இடது முன்னணி அரசாங்கம் தன்னுடைய மக்கள் ஆதரவு கொள்கைகள் மூலமாக, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியிருப்பது மட்டுமல்லாமல், மிகவும் குறைவான வள ஆதாரங்களே இருந்தபோதிலும் அதில்கூட மக்களுக்கு ஆதரவாக எந்தவிதமான மாற்றுக் கொள்கைகளைப் பின்பற்ற முடியும் என்பதைக் காட்டியிருக்கிறது. திரிபுரா மாநிலம் 1978இலிருந்து இடது முன்னணி அரசாங்கத்தைப் பெற்றிருக்கிறது. இடது முன்னணி அரசாங்கத்தின் முதல் இரு ஆட்சிக்காலத்தில், மாபெரும் இரு சாதனைகளை அது நடத்தி இருக்கிறது. நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்தியதும், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பழங்குடியின மக்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆறாவது அட்டவணையின்கீழ் திரிபுரா பழங்குடியினப் பகுதிகள் சுயாட்சி மாவட்டக் கவுன்சில் அமைத்ததுமே மேற்படி இரு பெரும் சாதனைகளாகும்.
              1988-93 ஆண்டு காலத்தில் தேர்தலில் மோசடி நடத்தி, ஓர் அரைப்பாசிச பயங்கர ஆட்சி (காங்கிரஸ் ஆட்சி) நடத்தப்பட்ட காலத்திற்குப்பின், நடைபெற்ற தேர்தலில் இடது முன்னணி மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் இடது முன்னணி மீது மக்கள் அளவிடற்கரிய நம்பிக்கைகளை வெளிப்படுத்தினார்கள். கடந்த 22 ஆண்டுகள் மாநிலத்தின் வளர்ச்சியில் அபரிமிதமான முன்னேற்றத்தை இடதுமுன்னணி அரசு ஏற்படுத்தி இருக்கிறது. முன்மாதிரி மாநிலம் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து நின்று முறியடித்து முன்னேறிய முன்மாதிரியான மாநிலமாக திரிபுரா மாறி இருக்கிறது. ஒருகாலத்தில் ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகளால் நிதிஉதவி மற்றும் ஆதரவுடன் தீவிரவாதிகளின் வன்முறைச் சம்பவங்கள் மாநிலத்தையே சிதைத்து சின்னாபின்னமாக்கி இருந்தது.
         அவற்றையெல்லாம் மக்களின் ஒற்றுமையுடன் உறுதியுடன் எதிர்த்து நின்று அமைதியை நிலைநிறுத்திய ஒரு முன்மாதிரியான மாநிலமாக உருவாகியிருக்கிறது. இத்தகைய அமைதி நிலைமையை நிர்வாக உறுதியால் மட்டும் எய்தியதாகக் கொள்ள முடியாது. மாறாக, மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டியிருப்பதும் குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சி நடவடிக்கைகளை அமல்படுத்தி இருப்பதுமே காரணங்களாகும். சுயாட்சி மாவட்டக் கவுன்சிலுக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சிகள், பஞ்சாயத்துகள், கிராமக் குழுக்களிடையே அதிகாரங்களைப் பரவலாக்கியதன் மூலம் அரசியல் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றி இருப்பதும், வளர்ச்சி நடவடிக்கைகளில் மக்கள்ஆர்வத்துடன் பங்களிப்பினைச் செய்வதற்கு வழிவகுத்தது.

எழுத்தறிவில் சாதனை                  

         இடதுமுன்னணி அரசாங்கம் பல்வேறு முனைகளிலும் மகத்தான சாதனைகளைப் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக, மனிதவள வளர்ச்சியில் அது மிகவும் உன்னதமான முறையில் அமைந்திருக்கிறது. நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 97 சதவீதத்தை எட்டி, நாட்டில் உயர்ந்த அளவிற்கு கல்வியறிவு பெற்றோர் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பெண்களில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 95.71 சதவீதமாகும். இலவச பாடப் புத்தகங்களுடன் பள்ளிக் கல்வியை கல்லூரி வரைக்கும் இலவசமாக்கி இருப்பதன் மூலம் திரிபுரா அனைவருக்கும் இடைநிலைக் கல்விவரை உத்தரவாதப்படுத்தியிருக்கிறது. 

மனிதவள வளர்ச்சி                   

         மனிதவள வளர்ச்சி குறித்த இதர அட்டவணைகளும் மக்களின் தரமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. குழந்தைகள் இறப்பு விகிதம் (ஐகேயவே ஆடிசவயடவைல) அகில இந்திய அளவில் 40 ஆக இருக்கும் அதே சமயத்தில், திரிபுராவில் அது 26 மட்டும்தான். பிறப்பு விகிதம் அகில இந்திய அளவில் 21.4 சதவீதமாக இருக்கக்கூடிய அதே சமயத்தில் திரிபுராவில் அது 13.7 சதவீதம் மட்டுமேயாகும். அதேபோன்று இறப்பு விகிதம் அகில இந்திய அளவில் 7 சதவீதமாக இருக்கக்கூடிய அதே சமயத்தில் திரிபுராவில் அது 4.7 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தபோதிலும் மாநிலத்தின் பூகோள அமைப்பு மிகவும் சிக்கலானதாக அமைந்துள்ள போதிலும், திரிபுரா இத்தகு சாதனைகளை எய்தி இருக்கிறது.

அனைவருக்கும் பொது விநியோகம்                 

          திரிபுரா, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்துக் குடும்பங்களையும் கொண்டுவந்து உணவுப் பாதுகாப்பை எய்தி இருக்கிறது. மக்கள் தொகையில் பெரும்பகுதியினருக்கு கிலோ ஒன்றிற்கு 2 ரூபாய் விலையில் அரிசி வழங்கப்படும் அதே சமயத்தில், இதரர்களுக்கும் அரிசி, வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கான விலைவிகிதத்தில் அளிக்கப்படுகிறது.கிராமப்புற வேலைத்திட்டத்தில் சாதனை திரிபுரா அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின் மூலம் வேளாண்மை, காடு வளர்ப்பு, மீன்வளம், தோட்டக்கலை மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி முதலானவை அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. இத்துடன் திரிபுரா, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை அமல்படுத்துவதில் நாட்டிலேயே உயர்ந்தநிலையில் இருப்பதை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 2013-14ஆம் ஆண்டில், கிராமப்புற மக்களுக்கு வேலை அளித்த நாட்கள் அகில இந்திய அளவில் சராசரி 38 நாட்கள் மட்டுமே என்று இருக்கக்கூடிய அதே சமயத்தில், திரிபுராவில் அது 88 நாட்களாகும். நகர்ப்புற வேலைத்திட்டம் அறிமுகம் நாட்டிலேயே முதன்முதலாக நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கும் குறைந்தபட்சம் 75 நாட்களுக்கு ஊதியத்துடன் வேலை அளிக்கப்பட்டிருக்கிறது.
    வன உரிமைகள் சட்டத்தின்கீழ் மக்களுக்கு நில உரிமை அளிக்கப்பட்டிருப்பதிலும் திரிபுரா உயர்ந்த இடத்தில் இருக்கிறது. 1 லட்சத்து 24 ஆயிரத்து 541 நபர்களுக்கு நிலப் பட்டாக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் 99 சதவீதத்தினர் பழங்குடியினர். உள் கட்டமைப்பு விரிவாக்கம் கடும் சிரமங்கள் இருந்தபோதிலும், இடது முன்னணி அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கி இருக்கின்றது.
           மொத்தம் 8,313 மக்கள் வாழும் பகுதிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் மின்சாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. பாசனத்திற்குரிய நிலங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமான அளவு பாசனவசதிகளைப் பெற்றிருக்கின்றன. முன்னெப்போதும் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு சாலைப்போக்குவரத்து வசதிகள் உள்கிராமங்கள் வரை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
               ஏழைகளின் அரசு மக்களின் வாழ்வாதாரங்களின் மீது நவீன தாராளமயக் கொள்கைகள் கடும் தாக்குதல்களைத் தொடுத்துள்ள நிலையில், இடது முன்னணி அரசாங்கம் அணிதிரட்டப்படாத ஏழைத் தொழிலாளர்கள் பக்கம் நின்று அவர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை விரிவாக்கி இருக்கிறது. 27 விதமான ஓய்வூதியத் திட்டங்கள் திரிபுராவில் வீட்டுவேலைகள் செய்யும் பெண் தொழிலாளர்கள், ஊனமுற்றோர், விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், ரிக்ஷா இழுக்கும் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், மீனவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் நலம் பயக்கும் விதத்தில் 27 விதமான ஓய்வூதியத்திட்டங்கள் மாநில அரசால் அமல்படுத்தப் பட்டு வருகின்றன.
           அதுமட்டுமல்ல, திருநங்கையர் மற்றும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் ஓய்வூதியத் திட்டங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. தலித்துகள், இதர பிற்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

உள்ளாட்சிகளில் சரிபாதி பெண்கள்                 

          உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 57 சதவீதம் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. பொது வாழ்வின் அனைத்து முனைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதையே இது பிரதிபலிக்கிறது. மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறந்த வாய்ப்புகளை அளித்திட இடது முன்னணி அரசாங்கம் திட்டமிட்டமுறையில் விடாது முயற்சிகளை மேற்கொண்டு வருவது அவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்கள் நலனுக்கான மாற்றுக்கொள்கைகள்                 

       அகில இந்திய அளவில் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதன் காரணமாக ஏற்பட்டுள்ள வரையறைகளுக்கு உட்பட்டும், ஏற்றத்தாழ்வான கூட்டாட்சி அமைப்பிலும் மற்றும் நிதி நிலைமை மிகவும் சுருங்கியநிலையில் இருந்தபோதிலும்கூட, இடது முன்னணி அரசாங்கம் தன்னுடைய மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் இவற்றை அளித்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கக்கூடிய விதத்தில் முன்வைத்துள்ள மக்கள் நலன் காக்கும் மாற்றுக்கொள்கைகளை முன்னெடுத்துச் சென்றிட திரிபுரா மாநில இடதுமுன்னணி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் உத்வேகம் அளிக்கக்கூடியவைகளாக அமைந்துள்ளன. சதி செய்யும் பிற்போக்கு சக்திகள்இருப்பினும் சுயதிருப்தி மனப்பான்மைக்கு இடம் அளித்திடவில்லை. திரிபுரா மாநிலத்தில் இத்தகைய அளப்பரிய முன்னேற்றத்திற்கு அடிப்படைக்காரணமாக விளங்கும் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினரல்லாதவர் இடையே நிகழும் ஒற்றுமையைக் குலைத்திட திரிபுராவிற்கு உள்ளேயும் வெளியேயும் இயங்கும் பிற்போக்கு சக்திகள் சமயம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. 
             எனவே, இத்தகைய சதிவேலைகள் எதுவரினும் அதனை உடனடியாகத் தடுத்துநிறுத்தக்கூடிய விதத்தில் மக்களை அணி திரட்டுவதில் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழும் திரிபுரா மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும், இடது முன்னணி மீதும் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்கள் உட்பட தொடர்ந்து நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அளவிடற்கரிய நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பிரதிபலித்துள்ளனர்.
               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன சிறப்பு மாநாடு (பிளீனம்) திரிபுரா மக்கள் மற்றும் இடதுமுன்னணி அரசாங்கத்திற்குத் தன் மனமார்ந்த ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. நாட்டின் அனைத்துப்பகுதி மக்களுக்கும் இந்த சாதனைகளை கொண்டுசெல்லுமாறு நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிக் கிளைகளையும் கேட்டுக்கொள்கிறது. 
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நன்றி :
தீக்கதிர் 

வெள்ளி, 1 ஜனவரி, 2016

2016 ~ சோசலிச பொன்னுலம் செய்வோம்...!


          இல்லாதார் எல்லோருக்கும் வலியோரின் சுரண்டலினால் ஏற்பட்ட இல்லாமையை போக்கி, நாட்டின் வளங்களை கபளீகரம் செய்யும் தனியுடைமையை ஒழித்து, உலகின் அனைத்து  ஜெனங்களுக்கும் பொதுவுடைமை மலர்வதற்கு உளமாற உறுதியேற்போம். 
மக்கள் அனைவரும் எல்லாம் பெற்ற, வேற்றுமையில்லா   சமத்துவ சோசலிச பொன்னுலகிற்கான  பாதை வகுப்போம். 

சோசலிசமே நம் எதிர்காலம்...! 
சோசலிச பொன்னுலம் செய்வோம்...!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...! 

2016 ஆம் ஆண்டை இனிதாய் வரவேற்போம்...!