செவ்வாய், 29 ஜூலை, 2014

மருத்துவக்கல்லூரியையே ஆக்கிரமித்த ''குப்பை உணவுகள்''

                       நேற்று எங்கள் செல்ல மூத்த மகள் ஹரிணி பாண்டிச்சேரி மருத்துவக்கல்லூரியில் முதலாண்டு மருத்துவப்படிப்பில் சேர்த்துவிட்டு, அப்படியே கல்லூரியின் சுற்றுச்சூழல்களையும், மகளோடு கூடப் படிக்கும் மற்ற பிள்ளைகளையும் பார்க்கலாமென்று நானும், என் மனைவியும் எங்கள் மகளோடு கல்லூரிக்கு சென்றோம். எங்கள் மகளை முதலாண்டு வகுப்பறையில் விட்டுவிட்டு நாங்கள் இருவரும் அந்தக் கல்லூரியின் வளாகத்தை சுற்றிவந்தோம். அப்பப்பா... ஏகப்பட்ட மரங்கள் அந்தப் பகுதியே குளிர்ச்சியாக தான் இருந்தது. வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நாங்களும் காரில் தான் சென்றோம். ஆனால் கார் எங்களுடையது இல்லை. எங்கள் வீட்டில் குடியிருக்கும் இஸ்லாமியக் குடும்பத்தை சேர்ந்தது. வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் இரு சக்கரவாகனத்தில் செல்லவேண்டாம், எங்கள் காரை தருகிறோம், மூவரும் காரில் சென்று வாருங்கள் என்று எங்களை அனுப்பிவைத்தார். நாங்களும் பெருமையாக காரில் சென்று இறங்கினோம். இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி சொல்லணும். 
              அப்படியாக சுற்றிப்பார்க்கும் போது ''காண்டீன்'' என்று எழுதப்பட்ட இரண்டு உணவகங்களும், பலவகையான உணவுப்பொருட்களின் பாக்கெட்டுகளை தோரணமாக தொங்கவிடப்பட்ட பெட்டிக்கடையும், ப்ரு காபி கடையும் என பன்னாட்டு உணவுப்பொருட்கள் மட்டுமே கொண்ட உணவகங்கள் தான் அங்கு இருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது  ஆச்சரியமாகவும் இருந்தது. அதை விட அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்த ''குப்பை உணவுகள்''  ஒரு மருத்துவக்கல்லூரிக்குள் நுழைந்தது எப்படி...? அல்லது  அனுமதிக்கப்பட்டது எப்படி...? என்று தான் புரியவில்லை. அந்த  குர்குரே, சார்லி, லேஸ், பெப்சி, கோகா கோலா, பிஸ்கட் வகைகள், சாக்லேட் வகைகள், கேக் வகைகள், ஐஸ் க்ரீம் என அனைத்துவகையான ''குப்பை உணவுகள்'' தான் ஆக்கிரமித்திருக்கின்றன. இன்றைக்கு கல்லூரி மாணவர்களின் நாகரீகமே இது மாதிரியான ''குப்பை உணவுகளை'' சாப்பிடுவது தான். அந்த நாகரீகத்தை தான் அங்கிருக்கின்ற உணவகங்கள் காப்பாற்றுகின்றன...! காசாக்குகின்றன...! அங்குள்ள மாணவர்கள் கோக் பாட்டிலோடு அலைவதைப் பார்க்கும் போது, யார் வீட்டு புள்ளைங்களோ இப்படி குடிச்சிக்கிட்டு அலையுதேன்னு நமக்கு கோபம் தான் வருகிறது.
               ஆனால் இவைகளையெல்லாம் பார்க்கும் போது இன்னொரு பாகம் ஆச்சரியத்தை தான் வரவழைத்தது. ''குப்பை உணவுகளை'' சாப்பிடாதீர்கள் என்று அறிவுறுத்துகின்ற மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவக்கல்லூரியில் இதுபோன்ற பொருட்களின் விற்பனை எப்படி அனுமதிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட உணவுப்பொருட்களை சாப்பிடுவதால் உண்டாகும்  நோய்களை பற்றி அறிவுப்பூர்வமாகவும், அறிவியல்பூர்வகாவும்  சொல்லித்தரப்போகும் மருத்துவக்கல்லூரியிலேயே மாணவர்களிடமே   அந்த உணவை விற்பனை செய்வது என்பது முறையாகும் என்று தான் தெரியவில்லை.
            அத்தகைய ''குப்பை உணவுகளை'' சாப்பிடுவதால், உடல் பருமன் நோய், மன அழற்சி நோய், இதய நோய், சர்க்கரை நோய், வயிற்றுப்புண் போன்ற நோய்கள் அவர்கள் அழைக்காமலேயே வந்துவிடும். நோய்கள் வராமல் தடுப்பது பற்றியும், வந்த நோய்க்கு மருத்துவம் பார்ப்பது பற்றியும் படிக்கிற மாணவர்களுக்கே நோய்களை உண்டுபண்ணுகிற ''குப்பை உணவுகளை'' விற்பனை செய்வது என்பது சரியாகுமா...? முறையாகுமா...?

ஸ்காட்லாந்தில் ஒளிரும் புரட்சி மண்ணின் தங்க மகன்...!

                  தற்போது ஸ்காட்லாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் ஆடவருக்கான பளுத்தூக்கும் போட்டியில், இந்திய சுதந்திரப்போராட்டத்திற்கு வித்திட்ட சிப்பாய் புரட்சியை நடத்திய வீரபூமியாம் வேலூரை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் என்ற இளைஞர் முதல் இடத்தில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார். இந்த காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என பரிசுகளை குவிக்கும் இளைஞர்களில் இவரும் ஒருவர். இவர் இந்தியாவிற்காக தங்கம் பெறும் ஆறாவது வீரர்.
            இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக பணிபுரியும் சிவலிங்கம் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நம் பக்கத்திலேயே சாதனைப்படைத்த ஒரு தொழிலாளியின் மகன். காலமெல்லாம் முயன்று போட்டியில் தங்கம் வென்று சாதனைப்படைத்த இளைஞர் சதீஷுக்கும், அவருக்கு ஊக்கமளித்து திறமைகளை வளர்த்த அவரது பெற்றோர்களுக்கும் நெஞ்சார்ந்தப் பாராட்டுகள்....! வாழ்த்துகள்.....! இந்த இளைஞர் ஆசிய விளையாட்டுப்போட்டிகளிலும் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளிலும் வெற்றிபெற்று சாதனைப்படைக்க மத்திய - மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இவரை ஊக்கப்படுத்தவேண்டும் என்பதே நமது எதிர்ப்பார்ப்பு.

ஞாயிறு, 27 ஜூலை, 2014

''நோக்கியா'' தரும் பாடம் என்ன?

 கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்,                           
                                 மாநிலச்செயலாளர்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                   
            மத்திய அரசு 2005-ல் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தை உருவாக்கியது. உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதும், தொழில்கள் தொடங்குவதும், உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்வதும், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதும், பொருளாதார மண்டலங்களின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. இதன் அடிப்படையில் நூற்றுக்கணக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இதற்காக, பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
            2009-ல் மத்திய அரசு மின்னணு தொழில்துறையின் வளர்ச்சிக்கு ஆலோசனை அளித்திட அமைத்த பணிப்பிரிவு பல ஆலோசனைகளை வழங்கியது. இந்த ஆலோசனைகளையெல்லாம் தமிழகத்தில் அதிமுக அரசு அதற்கு முன்னதாகவே 2005-ம் ஆண்டிலிருந்தே அட்சரம் பிசகாமல் அமலாக்கியிருந்தது. அதனால் தான் மேற்கண்ட பணிப்பிரிவு நாடு முழுவதும் ‘ஸ்ரீபெரும்புதூர்களை உருவாக்கிட வேண்டும்’ என்று கூறியது. 2005-ல் ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நோக்கியா நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. ஏக்கருக்கு ரூ. 8 லட்சம் என்று நிலத்தை வாங்கி ஏக்கருக்கு ரூ. 4.5 லட்சம் என்று 210 ஏக்கர் நிலத்தை நோக்கியாவுக்கு மாநில அரசு வழங்கியது. பத்திரப் பதிவுக்கட்டணம் முழுமையாகத் தள்ளுபடிசெய்யப்பட்டது. தடையில்லா மின்சாரம், முதல் 5 ஆண்டுகளுக்கு வருமான வரிவிலக்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50% வரிவிலக்கு, மத்திய விற்பனை வரி மற்றும் சேவை வரி, வேலை ஒப்பந்த வரி, குத்தகை வரி, நுழைவு வரி போன்ற வரிகளிலிருந்தும் விலக்குகள் வாரி வழங்கப்பட்டன. மேலும், நோக்கியா நிறுவனத்தைப் பொதுப் பயன்பாட்டு நிறுவனம் என்றும் அரசு அறிவித்தது.
          நோக்கியாவில் சுமார் 8,000 பேர் நேரடித் தொழிலாளர்களாகப் பணிபுரிந்தனர். தொழிலாளர்களில் 60% பேர் பெண்கள். நோக்கியாவுக்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து தருவதற்கு ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி., சால்காம், லைட் ஆன் மொபைல், ஆர்.ஆர். டொனாலி போன்ற நிறுவனங்கள் உருவாயின. இந்த நிறுவனங்களின் தொழிலாளர்கள் உட்பட நோக்கியா வளாகத்தில் சுமார் 22,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் சேர்ந்தனர். நோக்கியாவில் உற்பத்தி வேகமாக நடந்தது. கைபேசி உலகச் சந்தையில், 32 சதவீதத்தையும், இந்திய கைபேசி சந்தையில் 52 சதவீதத்தையும் நோக்கியா கைப்பற்றியது. கோடிகோடியாய் விற்பனை, கோடிகோடியாய் லாபம். 

ரூ. 21,000 கோடி என்னவாயிற்று....?                      
 
                கைபேசிக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த மென்பொருளுக்கு மத்திய அரசுக்குக் கட்ட வேண்டிய வரி ரூ.21,000 கோடியைக் கட்டாமல் ஏய்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதைப் போலவே உள்நாட்டில் விற்பனை செய்த கைபேசிகளையும் ஏற்றுமதி செய்வதாக இணைத்துக் கணக்குக் காட்டி மாநில அரசுக்குக் கட்ட வேண்டிய சுமார் ரூ.2,430 கோடியை நோக்கியா ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. எனவே, மாநில வருவாய்த் துறையும் மத்திய வருமானத் துறையும் நோக்கியா நிறுவனம் மீது வழக்கு தொடுத்தன. வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், நோக்கியா நிறுவனம் வரியைக் கட்டியாக வேண்டுமென்று உத்தரவிட்டதோடு நோக்கியாவின் சொத்துக்களையும் முடக்கியது. இதற்கிடையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு உலகம் முழுவதுமுள்ள தனது கைபேசி உற்பத்தித் தொழிற்சாலைகளை நோக்கியா விற்றுவிட்டது. ஸ்ரீபெரும்புதூரிலுள்ள நோக்கியா தொழிற்சாலை மீது வரி பாக்கி வழக்கு இருப்பதால் இதை மட்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கவில்லை. வரி பாக்கிக்காக நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது நோக்கியா நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் தொடர்ந்து கைபேசி உற்பத்தி நடக்கும் என்றும், தொழிலாளர்களின் வேலைக்கு ஆபத்து இல்லையென்றும் நீதிமன்றத்துக்கு உறுதியளித்தது. நடைமுறையில் தொழிலாளர்களை விருப்ப ஓய்வுத்திட்டத்தில் செல்ல நிர்ப்பந்தித்தது.
             தொழிலாளர்களின் வேலையைப் பாதுகாக்கத் தொழிற்சங்கத்தலைமை பல முயற்சிகளை மேற்கொண்டது. மாநில தொழிலாளர் துறை, தொழில் துறை, முதல்வர் போன்றோரிடம் முறையிட்டு, தொழிற்சாலையையும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலையையும் பாதுகாக்க வேண்டுமென்று வலியுறுத்தியது. 31.3.2014-ல் 2000-க்கும் மேற்பட்ட நோக்கியா தொழிலாளர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கோட்டை முன்பு நடைபெற்றது. தொழிலாளர் துறையும், அரசும் இதில் தலையிடவே விரும்பவில்லை. 

திமுக-அதிமுக வேறுபாடு இல்லை....?             
 
              இந்த மாதிரி விஷயங்களில் மத்திய ஆட்சியில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் எப்படி வேறுபாடு இல்லையோ, அதே மாதிரி தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதிமுக அரசு போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, அடுத்து வந்த திமுக அரசு அட்சரம் பிசகாமல் அமலாக்கியது. நோக்கியா நிறுவனம் தொடக்கத்தில் மூலதனமிட்ட ரூ.650 கோடிக்கும் மேலாக மதிப்புக்கூட்டு வரியாக சுமார் ரூ.850 கோடியை மாநில அரசு நோக்கியாவுக்குத் திருப்பி அளித்துள்ளது.
           9 ஆண்டுகளில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா நிறுவனத்தின் உற்பத்தியின் மதிப்பு ரூ.1,50,000 கோடி என்பதை நிறுவனமே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. குறைந்த மூலதனம், கொள்ளை லாபம் இதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்கை. ஆனால், தொழிலாளர்களின் நலன்....? 

22 ஆயிரம் தொழிலாளர்களின் கதி....?                
 
            தங்களுடைய எதிர்காலம் ஒளிமயமாக அமையும் என்ற நம்பிக்கையில் பணியில் சேர்ந்த 5,000 தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வுத் திட்டத்தின் மூலம் நோக்கியா நிர்வாகம் வெளியேற்றிவிட்டது. நிர்வாகம் தன்னிச்சையாக அறிவித்த நஷ்ட ஈட்டை வாங்கவில்லையென்றால் வெறுங்கையோடு வெளியேற வேண்டியிருக்கும் என்ற பீதியில் தொழிலாளர்கள், நிர்வாகம் கொடுத்ததை விரக்தி யோடு வாங்கிக்கொண்டார்கள். சுமார் 850 தொழிலாளர்கள் மட்டுமே வேலையில் உள்ளனர். நோக்கியா மட்டுமல்ல; இந்த நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரித்துக் கொடுத்து வரும் மற்ற சிறு நிறுவனங்களும் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்துவருகின்றன. ஸ்ரீபெரும்புதூர் பகுதி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நோக்கியா தொழிலாளர்கள் உட்பட 22,000 தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
            சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் நோக்கமாகச் சொல்லப்பட்ட தொழில் வளர்ச்சி, நோக்கியா எல்லா சலுகைகளையும் பெற்றுக்கொண்ட 9 ஆண்டுகளோடு முடிந்துபோனது. வேலைவாய்ப்பும் குறுகிய காலத்துக்கே அளிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மாற்று வேலைகளுக்கான வாய்ப்புகளின்றி நிர்க்கதியாய் விரட்டப்பட்டுள்ளனர்.                 
          ஆனால், நோக்கியா தமிழக அரசிடமிருந்து குறைந்த விலையில் நிலம், பத்திரப்பதிவு சலுகை, வரியை திரும்பப் பெற்றதில் ரூ.850 கோடி, பல்லாயிரக் கணக்கான கோடிகள் வரிச்சலுகை இத்தனையும் பெற்றுக்கொண்ட பிறகு மத்திய அரசுக்கு ரூ.21,000 கோடி வரிஏய்ப்பு, மாநில அரசுக்கு ரூ.2,430 கோடி வரி ஏய்ப்பு என்று நம் நாட்டுச் செல்வங்களை எல்லாம் ஏப்பம் விட்டுவிட்டுக் கூடாரத்தைக் காலிசெய்துவிட்டது. என்ன செய்யப்போகிறோம் நாம்? வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோமா?                      
நன்றி :

சனி, 26 ஜூலை, 2014

மணல் கொள்ளையர்களை கண்டித்தால் ஜெயலலிதாவிற்கு ஏன் கோபம் வருகிறது....?

                    சென்ற வாரம் வேலூர் மாவட்டத்தில் ஆற்று மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற தலைமைக்காவலர் கனகராஜ் என்பவர்  மணல் கொள்ளையர்களால் டிராக்டர் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டில்     இதுபோன்ற சம்பவம் இது முதல் தடவையல்ல. பல முறை நடந்திருக்கிறது. மணல் கொள்ளையை தடுக்கச்சென்ற உதவி கலெக்டர், தாசில்தார், துணை தாசில்தார், போலீஸ் காவலர் என பல அரசு உயர் அதிகாரிகளை மணல் கொள்ளையர்கள் மணல் லாரி அல்லது டிராக்டர் போன்றவைகளை ஏற்றி படுகொலை செய்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக நடைபெறும் இதுபோன்ற படுகொலையை கண்டித்தும், ஆட்சியாளர்களுக்கும் மணல் மாபியாக்களுக்கும் உள்ள தொடர்பை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர். ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அறிக்கையை படித்த அம்மையாருக்கு கோபம் வந்துவிட அரசு வழக்கறிஞரை விட்டு தோழர். ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
            தோழர் வெளியிட்ட அறிக்கையில் உள்ள கருத்துகள் உள்நோக்கம் கொண்டவையாகவும், அதில் சொல்லப்பட்ட  ஒரு கருத்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் எந்த இடத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரைப் பற்றி தனிப்பட்ட முறையில் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவதூறாக சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் ஜெயலலிதா அம்மையார் பெங்களூரு நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் போதும், குற்றவாளி கூண்டில் நின்றுகொண்டு நீதிபதியின் கேள்விகளுக்கு கைகட்டி பதில் சொல்லும் போதும், நீதிமன்ற விசாரனைகளிலிருந்து தப்பிப்பதற்கு அடிக்கடி ''வாய்தா'' வாங்கும் போதும் தன்னுடைய ''நற்பெயருக்கும், புகழுக்கும்'' ஏற்படாத களங்கம் இந்த அறிக்கையின் மூலமா ஏற்பட்டுவிடப்போகிறது என்பது தான் புரியவில்லை.
            ஆனால் உண்மை என்ன...? மணல் கொள்ளையை நிரந்திரமாக தடுக்கவேண்டிய ஆட்சியாளர்கள் திராவிடக்கட்சிகள் இருவருமே கொலைசெய்யப்பட்ட அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ''நிவாரண நிதியை'' மட்டும் அளித்துவிட்டு தன்னுடைய இயலாமையை அல்லது மணல் கொள்ளையர்களுடனான தன்னுடைய ''உறவை'' மூடி மறைத்துவிடுகின்றனர்.
              இந்த மணல் கொள்ளைகளில்  நேர்மையான அதிகாரிகளின் உயிரிழப்பு மட்டும் சம்பந்தப்படவில்லை. அரசாங்கத்திற்கு வரவேண்டிய வருமான இழப்பும் அடங்கியிருக்கிறது. மணல் மாபியாக்களுக்கு கோடிக்கோடியாய் அள்ளித்தரும் இந்தத் ''தொழிலுக்கு'' பின்னால் ஆட்சியாளர்களின் ஆதரவும், அடிக்கிற கொள்ளையில் ஆட்சியாளர்களுக்கு பங்கும் இருக்கிறது உண்மை இந்த அறிக்கையின் மூலம் அம்பலப்படவே தான் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தோழர். ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் மீது இவ்வளவு கோபம் வந்திருக்கிறது.
             இது என்ன பெரிய வழக்கு. எங்கள் தலைவர்களுக்கு இது சுண்டைக்காய் போன்றது. இந்த தேசத்திற்காகவும், மக்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் சுதந்திரப்போராட்டக் காலத்திலிருந்தே ஏராளமான அடக்குமுறைகளையும், வழக்குகளையும் சந்தித்தவர்கள். இதற்கெல்லாம் பயந்துவிடவும் மாட்டார்கள். ''வாய்தா'' வாங்கவும் மாட்டார்கள்.

வெள்ளி, 25 ஜூலை, 2014

திமுகவுக்கு இதெல்லாம் கைவந்த கலை...!

                      அண்மையில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாம் தலைமை நீதிபதியாக பணியாற்றிய காலத்தில், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் வீற்றிருந்த திமுகவும்,  அக்கட்சி தலைவர் கருணாநிதியும் நீதித்துறையில் தலையீடு செய்து அன்றைய பிரதமரை மிரட்டி தனக்கு வேண்டிய ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிலமர்த்தியதாகவும், பின்னர் அதே நீதிபதிக்கு பணி நீட்டிப்பை பெற்றதாகவும், அப்படிப்பட்ட பலனை அனுபவித்த அந்த நீதிபதி ஓர் ஊழல்வாதி என்றும் ப்ளாகில் வெளிப்படையாக எழுதி உண்மையை போட்டுடைத்தார். அந்த செய்தி எல்லா ஊடகங்களும் பரபரப்புச் செய்தியாக வெளியிட்திருந்தது.
            நீதியரசர் வெளியிட இந்த செய்தி கருணாநிதியின் கோபத்தை கிளறிவிட்டது. நெற்றிக்கண்ணை திறந்தார். திமுகவினர் அக்னிப்பிழம்பாய் கொதித்துப்போனார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து மார்கண்டேய கட்ஜு இப்போது ஏன் சொல்லவேண்டும் என்றெல்லாம் கேள்வி கேட்டு நடந்த உண்மையை மழுப்பப் பார்த்தார்கள். ஆனால் காலம் கடந்து சொல்லப்பட்டாலும் உண்மை உண்மை தானே...? நீதியரசர் கட்ஜு கூறியது உண்மை இல்லையென்றால் திருவாளர் கருணாநிதி அவர்கள் அதை மறுத்திருக்கலாமே...! அப்படி மறுப்பு சொல்லாமல் தன்னைப்பற்றி எழுதிவிட்டார் என்பதற்காக நீதியரசர் மீதே சேற்றை வாரி இறைப்பதன் மூலம் நீதியரசர் வெளியிட்ட சம்பவம் உண்மை என்று உறுதியாகிறது.
            தனக்கு வேண்டியவர்களை - தனக்கு விசுவாசம் காட்டியவர்களை விருது கொடுத்து கவுரவிப்பதும், உயர் பதவிகளை  கொடுத்து உயர்த்துவதும் திமுகவிற்கோ அதன் தலைவர் கருணாநிதிக்கோ ஒன்றும் புதிதல்லவே. இதெல்லாம் இவர்களுக்கு கைவந்த கலை என்பது மக்களுக்கு தெரியாதா என்ன...?
                இது போன்று நீதித்துறையில் நடைபெறும் தலையீடுகளை தடுப்பதற்கும், நீதித்துறையில் பரவியுள்ள ஊழல்களை ஒழித்துக்கட்டவும், நேர்மையான முறையிலான நீதிபதிகள் தேர்வை உறுதிசெய்யவும்,   ஊழல் நீதிபதிகளை நீக்கவும், நேர்மையான நீதிபதிகளின் பணிநீட்டிப்பை வழங்கவும் ''நீதித்துறை ஆணையத்தை'' அமைக்கவேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள், சமூக சிந்தனையாளர்கள், நீதியரசர் மார்கண்டேய கட்ஜு போன்ற ஓய்வுபெற்ற தலைமைநீதிபதிகள் போன்ற நேர்மையான நீதிமன்ற நடவடிக்கைகளை விரும்பும் பெரியோர்களின் நீண்ட நாளைய கோரிக்கையான ''நீதித்துறை ஆணையத்தை'' விரைவில் மத்திய அரசு அமைத்திடல் வேண்டும்.

செவ்வாய், 22 ஜூலை, 2014

சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படும் இந்திய இரயில் நிலையங்கள்...!

             
 
                 நாங்கள்  பல ஆண்டு  இடைவெளிக்குப் பிறகு  சென்ற மே மாதம் எங்கள் குடும்பத்துடன் வடநாடு சுற்றுப்பயணம் சென்றோம். பத்து நாள் பயணம் அனைத்தும் இரயில் பயணம். என் குழந்தைகளுக்கு இவ்வளவு நீண்ட இரயில் பயணம் என்பது இது தான் முதல் முறை. தமிழகத்தின் தலைநகரிலிருந்து இந்திய தலைநகரம் வரை பயணம் செய்தோம். சென்னையில் இரயில் ஏறி வழியில் ஆக்ரா, அமிர்தசரஸ், ஜெய்ப்பூர் போன்ற பேரு நகரங்களுக்கு சென்று சுற்றிவிட்டு கடைசியாக புதுடெல்லி சென்று விட்டு நேராக சென்னை திரும்பினோம். 
           மேலே சொன்ன  சென்னை, ஆக்ரா, அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், புதுடெல்லி ஆகிய பெருநகர இரயில் நிலையங்களில் நுழையும்  போதெல்லாம் அந்த ரயில் நிலையங்கள் மனதிற்கு ஏதோ அந்நியமாகப்பட்டது. நம் நாட்டில் தான் நாம் இருக்கிறோம் என்ற உணர்வை என் மனதிற்குள் நானாகவே வரவழைத்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது. இந்திய இரயில் நிலையத்திற்கே உரித்தான எந்தவிதமான அடையாளங்களும் இல்லாமல் போனதே அதற்கு காரணம். விமானநிலையத்திற்குள் நுழைந்துவிட்டோமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. படோடமான கண்ணைப்பறிக்கும் அமர்க்களமான விளக்குகள் கொண்ட பல்வேறு கடைகள் கண்களில் பட்டன. 
         ஆனால் இரயில் நிலைய நடைமேடையில் இட்லி, தோசை, உப்புமா, வடை, பட்ஜி, வாழைப்பழம் போன்றவற்றை சுமந்து நிற்கும் தள்ளுவண்டிகளை பார்க்கமுடியவில்லை. டீ  - காப்பி தூக்குகளை தூக்கிக்கொண்டு டீ...டீ...டீ... என்று கூவிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்துகொண்டிருப்பவர்களையும், கூடையில் கடலை பயிரை சுமந்துகொண்டு விற்பவர்களையும் காணமுடியவில்லை. அதுமட்டுமல்ல நடைமேடையின் ஓரமாக ஐ.ஆர்.சி.டி.சி என்ற பொதுத்துறை நிறுவனம் நடத்தும் உணவகத்தை தேடினேன்.... தேடினேன்.... இரயில் நிலைய எல்லைக்கே போய் தேடினேன். அதுவும் என் கண்களில் தென்படவில்லை. ஆக்ரா இரயில் நிலையத்தில் முன்பெல்லாம் பாரம்பரியமாக மண் பாண்டத்தில் டீ விற்பார்கள். இன்று அந்த பாரம்பரியம் கூட மறைந்தே போய்விட்டது.
    அவைகளெல்லாம் எங்கே போனது....? இன்று அதற்கு பதிலாக வேறென்ன வந்திருக்கிறது...?
             அவைகளெல்லாம் உலகமய - தனியார் மய சூறைக்காற்றில் அடித்து சென்றுவிட்டன என்பது சிறிது நேரம் கழித்து தான் எனக்கு புலப்பட்டது.
          இன்றைக்கு அழகழகான சிறுசிறு கடைகள். அந்தக் கடைகளில் லேஸ் சிப்ஸ், குர்குரே, பெப்சி, கொக்கோகோலா, மிரிண்டா, ஸ்லைஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் ''குப்பை'' உணவுகள் தான் கிடைக்கிறது. மெக்டோனால்ட்ஸ், புட்கோர்ட் என பன்னாட்டு உணவகங்கள் கண்ணைப்பறிக்கும் வகையில் நம்மை சாப்பிட வரவேற்கின்றன. அங்கே எல்லாமே பீசா, பர்கர், நூடுல்ஸ், சிக்கன் வகைகள், ஐஸ் கிரீம் என விலை உயர்ந்த உணவுப்பொருட்கள் தான் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஒரு காப்பி 80 ரூபாய், ஒரு டீ  20 ரூபாய் என கண்டபடி விற்றால் அதை குடிக்கும் ஆசை எப்படி வரும்...? நமக்கு ஒத்து வராத உணவுவகைகள் என்பதால் குழந்தைகள் உட்பட நாங்கள் உணவுக்காக தவித்துப்போனோம். இதை தான் இனி நீ சாப்பிடவேண்டும் என்பதை உலகமயம் நமக்கு சொல்கிறது என்பதை இந்திய இரயில் நிலையங்கள் மூலம் புரிந்துகொண்டேன்.
                 நமக்கே இப்படி என்றால், படிப்பறிவு இல்லாதவர்கள், வசதியில்லாத மக்கள் உணவுக்கு என்ன செய்வார்கள் என்று  தான் புரியவில்லை. அப்படிப்பட்ட மக்களையே இந்த இடங்களில் காணமுடியவில்லை. இன்றைக்கு இந்திய இரயில் நிலையங்களெல்லாம் சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது என்பது தான் உண்மை. 

திங்கள், 21 ஜூலை, 2014

வேலையில்லா பட்டதாரி - ஒழுக்ககேடுகள் நிறைந்த படம்

                

            படித்து பட்டம் பெற்று   வேலை தேடும் இரு பால் இளைஞர்களை ''வேலையில்லா பட்டதாரி'' என்று அழைப்பதே தவறு. அவர்களை ''வேலை தேடும் பட்டதாரி'' என்று அழைப்பதே சிறந்ததாக இருக்கும். படித்துவிட்டு வேலை தேடும் இன்றைய இளைஞர்களையும், கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களையும் ஈர்ப்பதற்காகவே வைக்கப்பட்ட தலைப்பு. அதற்கேற்றார் போன்ற கதை. திரையரங்கில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
              ஆனால் வழக்கம் போல் நடிகர் தனுஷ் ''பார்முலா''வுடன் கூடிய ஒழுக்கக்கேடான திரைப்படம். அப்பா - அம்மாவிற்கு அடங்காத பிள்ளையாக அவர்களையே எதிர்த்து பேசுவது, பெரியவர்களுக்கு தெரியாமல் வீட்டினுள்ளேயே ''தம்'' அடிக்கிறது, நண்பர்களுடன் கூடி ''தண்ணி'' அடிப்பது, சீனுக்கு சீன் விதவிதமான ஸ்டைலில் சிகரெட் பிடிப்பது, நாலு பேரை அடித்து ரவுடித்தனம் செய்வது போன்ற வழக்கமான தனுஷ் ''பார்முலா'' நிரம்பி வழியும் படம். ஆனால் இத்தனை ஒழுக்கக்கேடுகள் அனைத்தும் கொண்ட இளைஞனுக்கு  பேரு  தான் ''வேலையில்லா பட்டதாரி...!''   ஒரு கதாநாயகன் என்றால் ''தனிமனித ஒழூக்கமில்லாமல்'' இப்படி தான் இருக்கவேண்டுமா என்ன...? இதைத்தான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்களா...?
                ஏற்கனவே ''டாஸ்மாக்கில்'' இளைஞர்களின் கூட்டம் குவிகிறது. இதுல இப்படியெல்லாம் திரைப்படங்களை எடுத்தால் இனி இளைஞர்களை ''டாஸ்மாக்கில்'' தான் பார்க்கவேண்டும். இதனால் படித்துவிட்டு வேலைதேடும் இளைஞர்களின் போராட்டக்குணம் பலமிழந்து மங்கிப்போய்விடும். எனவே, போராட்டக்குணங்களை மழுங்கடிக்கச் செய்யும் அத்துணை ஒழுக்ககேடுகளையும் நீக்கிவிட்டு, ''வேலை'' என்பது இளைஞர்களின் ''உரிமை'' என்பதை எடுத்துச்சொல்லும் விதமாக திரைப்படம் எடுத்திருந்தாலோ... அல்லது அந்த வேலை உரிமைக்காக போராடுகிற போராளியாக கதாநாயகனை காட்டிருந்தாலோ அத்திரைப்படத்தை நெஞ்சாரப் பாராட்டியிருக்கலாம்.
                 இனிமேலாவது இன்றைய இளைஞர்களுக்கு தனிமனித ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கிற கதையம்சம் கொண்ட திரைப்படங்களை எடுங்கள். அதற்கேற்ற கதாநாயகர்களை தேர்ந்தெடுத்து தயார்படுத்துங்கள். அதுதான் இன்றைய இளைய சமூகத்திற்கு அவசியமான தேவையாகும்.

ஞாயிறு, 20 ஜூலை, 2014

இஸ்ரேலின் அடாவடித்தனத்தை மோடி கண்டிக்காததேன்...?

                           இன்னும் கொஞ்சகாலம் போனால்  உலக வரைபடத்தில் பாலஸ்தீனம் என்ற ஒரு நாட்டை தேடவேண்டியிருக்கும். அந்த அளவிற்கு இஸ்ரேல் கரையான் அரிப்பது போல பாலஸ்தீனம் என்ற ஒரு முழு நாட்டை சட்டவிரோதமாக கொஞ்சம்கொஞ்சமாக ஆக்கிரமித்து எஞ்சியிருக்கும் இடத்திலும் பாலஸ்தீன மக்களை நிம்மதியாக வாழவிடாமல் அடாவடித்தனம் பண்ணுகிறது. அமெரிக்காவின் ''நெருங்கிய கூட்டாளி'' என்ற ஒரு  தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு, உலக நாடுகள் எவருக்கும் பயம் கொள்ளாமலும், ஐக்கிய நாடுகள் சபைக்கு பதில் சொல்லவேண்டுமே என்ற அச்சம் இல்லாமலும், அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களை வைத்துக்கொண்டு கடந்த 115 ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து, அடாவடித்தனமாக ஆக்கிரமிப்புகளை செய்து அங்கு தங்களது குடியிருப்புகளை உருவாக்கி மனித குலத்திற்கு எதிராக இஸ்ரேல் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டு வருகிறது.
                அதன் ஒரு பகுதியாக, பாலஸ்தீனத்தில் எஞ்சியிருக்கும் சிறு பகுதியான காஸா என்ற  மக்கள் கூட்டமாக வாழும் பகுதியின் மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் மூர்க்கத்தனமாக குண்டுகளை வீசி 400-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்றுகுவித்திருக்கிறது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்து காயத்திற்கு மருந்தில்லாமல் தவிக்கிறார்கள். இது தவிர ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருக்கும் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. பாலஸ்தீன அப்பாவி மக்கள் மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதல் என்பது கடந்த ஐந்து ஆண்டுகளில் இது மூன்றாவது முறையாகும்.
               இவ்வளவு பெரிய நாசகர பயங்கரவாத செயலில் மனிதாபிமானமற்ற முறையில் இஸ்ரேல் ஈடுபடுகிறது. இதை எந்த சர்வதேச ஊடகங்களும் ஒரு செய்தியாகக்கூட இதுவரையில் வெளியிடவில்லை. பயங்கரவாதத்தை பற்றியும், மனித உரிமை பற்றியும் வாய் கிழிய பேசும் அமெரிக்காவும் இஸ்ரேலின் இந்த இரக்கமற்ற செயலைப்பார்த்து வாய்மூடி மவுனம் சாதிக்கிறது. உலக அமைதி - ஒற்றுமை பற்றியெல்லாம் கவலைப்படும் ஐக்கிய நாடுகள் சபையோ பாராமுகமாய் இருக்கிறது. ஆனால் உலகின் பல்வேறுப்பகுதிகளில் வாழும் மனிதாபிமானம் கொண்ட அமைப்பினரும், மக்களும் இஸ்ரேலின் அடாவடித்தனத்திற்கு எதிராக குரல் எழுப்பி ஆங்காங்கே பேரணிகளை நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதைப்பார்க்கும் போது  சற்று ஆறுதலாக இருக்கிறது.
                நம் நாட்டில்  கூட இடதுசாரிக்கட்சியினரும், மனித உரிமை அமைப்பினரும் இஸ்ரேலுக்கெதிராக ஆங்காங்கே கண்டனக்குரல் எழுப்பிவருகிறார்கள். இதே நேரத்தில் புதுடெல்லியில் பாராளுமன்றம் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நேரத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசு தானாகவே முன் வந்து,  நேர்மையற்ற இந்தப் போரை கண்டித்து விவாதித்து இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கலாம். பாராளுமன்றத்தில் இடதுசாரிகள் எடுத்து சொல்லியும், சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளும் நமக்கு நட்பு நாடுகள் என்பதால் கண்டிப்பதற்கில்லை என்று மோடி அரசு நழுவிவிட்டது. இஸ்ரேலை கண்டிப்பதன் மூலம் அதன் நெருங்கிய கூட்டாளியும் மோடி அரசின் ''பெரிய அண்ணனுமான'' அமெரிக்காவை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதும், இதன் மூலம் அமெரிக்கா உடனான உறவில் விரிசல் வந்துவிடக்கூடாது என்பது   தான் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு உள்ள நிர்பந்தங்கள்  என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இஸ்ரேலை கண்டிக்காததன் மூலம் மோடி தனது நீண்டநாளைய ''அமெரிக்க கனவு பயணத்தை'' நிறைவேற்றிக்கொள்ள துடிக்கிறார் என்பதும் யாருக்கும் தெரியாமல் இல்லை.

பிசாசு போய், பேய் வந்தது... டும்...டும்...டும்...!

                
                பத்து நாட்களுக்கு முன் புத்தம்புது பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி அரசின் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘இப்படியே போனால், மன்மோகன் சிங் கடந்த இருபது ஆண்டுகளில் சாதிக்க முடியாததை... இரண்டே ஆண்டில் நரேந்திர மோடி சாதித்து விடுவார் என்றே தோன்றுகிறது. அட, இந்தியாவை வெளிநாட்டுக்காரர்களிடம் மொத்தமாக விலை பேசுவதைத்தான் சொல்கிறேன்' என்று எழுதியிருந்தேன்.
            அந்நிய முதலீட்டு மோகத்தில் திளைத்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் அரசுகூட இத்தனை வேகமெடுக்கவில்லை. பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத் துறை, ரயில்வே துறை என்று அனைத்திலும் அதிரடியாக அந்நிய முதலீட்டை நோக்கி மோடி அரசு, அசுர வேகமெடுத்திருப்பதைத்தான் அதில் சுட்டிக்காட்டியிருந்தேன்.
‘தொழில்வளர்ச்சி' என்கிற பெயரில் விவசாயத்துக்கு ஒட்டுமொத்தமாக வேட்டு வைக்கும் வேலையை மன்மோகன் சிங் ஆரம்பித்து வைத்தார், தற்போது அதை படுவேகமாக முடித்து வைக்கும் வேலை மோடி சிரமேற்கொண்டுவிட்டார் என்பதைத்தான் அதில் சுட்டிக் காட்டியிருந்தேன்.
           இதற்கு பின்னூட்டம் போட்ட நண்பர்களில் சிலர், நான் என்னவோ மோடிக்கு எதிரி போலவும், 'வளர்ச்சி'க்கு எதிரி போலவும் சித்தரித்தார்கள். சிலரோ... மோடி இப்போதுதானே வந்திருக்கிறார் என்று வக்காலத்தும் வாங்கியிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம், 'வந்த வேகத்திலேயே பன்னாட்டு மற்றும் இந்நாட்டு முதலாளிகளின் உத்தரவுகளை நிறைவேற்றி முடித்துவிட வேண்டும்' என்று மோடி காட்டி வரும் வேகம் துளிகூட புரியவில்லையா... அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லையா என்று எனக்குப் புரியவில்லை.
                  நண்பர்களே... நான் எந்த சார்பும் இல்லாமல், இயற்கை சார்பு, உயிரின சார்பு ஆகிய நிலைகளை மட்டுமே எடுத்துக் கொண்டுதான் இதையெல்லாம் எழுதுகிறேன் என்பதை முதலில் தங்களுக்குத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.
         எனக்கு காவி, கதர், கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை என்று எந்தக் கலரும் இல்லை. நான்... பச்சை, மஞ்ச, ஒயிட், ரோஸ், சிவப்பு, பிங்க இப்படி எந்தத் தமிழனும் இல்லை. இந்த பூமியில் வசிக்கும் ஏதோ ஒரு ஜந்து என்பதோடு முடித்துக் கொள்ளுங்கள்.
          இதை எதற்காக வலிந்து சொல்கிறேன் என்றால், சொல்கிற விஷயத்தில் இருக்கும் உண்மையை மட்டுமே பாருங்கள். இவனுடைய பின்னணி என்ன... இவன் எதற்காக இதைச் சொல்கிறான்... இவன் இந்தக் கலர் ஆளாக இருப்பானோ... என்றெல்லாம் மூளையைத் திருப்பி சிந்திக்க ஆரம்பித்து, முக்கியமாக சிந்திக்க வேண்டிய விஷயத்தை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
            தன்னுடைய ஆட்சிக்காலத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக ஆயிரம் அநியாயங்களை செய்திருந்தாலும், நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்தம் என்கிற ஒன்றின் மூலமாக... ஓரளவுக்கு விவசாயிகளின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைப்பதை உறுதிப்படுத்தவே செய்தார் மன்மோகன் சிங்.
            'விவசாய நிலங்களை தொழிற்சாலைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக கையகப்படுத்தும்போது, கிராமப்புறங்களில் சந்தை விலையில் 4 மடங்கும்... நகர்ப்புறங்களில் 2 மடங்கும் விலையாகக் கொடுக்கப்பட வேண்டும்' என்பதுதான் அந்த உத்தரவு. 'இதை உடைத்தே தீருவது' என்று பன்னாட்டு மற்றும் இந்நாட்டு பெரும் தொழிலதிபர் கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு அப்போதே திரிந்தது. ஆனால், விவசாயிகளின் ஓட்டு வங்கி மீதான அன்பு காரணமாக, தொழிலதிபர்களின் நெருக்கடிக்கு பணியாமல் போக்குக் காட்டினார் மன்மோகன் சிங்.
             தற்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக வந்தமர்ந்திருக்கும் நிதின் கட்கரி, மூச்சுக்கு முந்நூறு தடவை இந்த சட்டத்தை திருத்துவோம்... என்றே பேசிக் கொண்டிருக்கிறார். அதாவது, இதில் விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கும் அம்சங்களை எல்லாம் நீக்கிவிட்டு, பன்னாட்டு... இந்நாட்டு முதலாளிகளுக்கு ஆதரவான திருத்தங்களைச் செய்வதுதான் அவருடைய ஒரே குறிக்கோள். இதற்கான வேலைகளில் படுமும்முரமாக இருக்கிறார் நிதின் கட்கரி.
          இதுவாவது, விவசாயிகளின் வாழ்க்கையைத்தான் அழிக்கும். ஆனால், இந்திய விவசாயத்தையே அழிக்கக் கூடிய வேலைக்கு இன்றைய தினம் அனுமதியை அள்ளி வழங்கிவிட்டது 'வளர்ச்சி நாயகன்' நரேந்திர மோடியின் அரசு.
             ஆம், பி.டி எனும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பரிசோதனைக்கு இத்தனை காலமாக நீடித்த தடைகளையெல்லாம் மீறி, தற்போது 15 விதமான உணவுப் பயிர்களில் இந்தப் பரிசோதனையைச் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
              உணவுப் பயிரில்லாத பருத்தியில் மட்டுமே இதுநாள் வரை இந்தியாவில் பி.டி.ரகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரகத்தை குஜராத் மாநிலத்தில்தான் அதிகம் விளைவிக்கிறார்கள். இந்த பருத்தியைப் போட்டால், பொன்னே விளையும் என்றெல்லாம் புளுகிப் புளுகித்தான் விவசாயிகளின் தலையில் கட்டிக் கொண்டிருக்கிறது அமெரிக்க நிறுவனமான மான்சான்டோ. இதற்கு அந்த மாநிலத்தை ஆண்ட மோடியும் ஏக சப்போர்ட். இதேபோலத்தான் இந்தியா முழுக்கவே பல்வேறு மாநில அரசுகளும் ஆதரவளித்துக் கொண்டுள்ளன. ஆனால், இந்த பி.டி பருத்தி பல் இளிக்க ஆரம்பித்துவிட்ட சங்கதி குஜராத்திலிருந்தே சில மாதங்களுக்கு முன் வெடித்து வெளிர ஆரம்பித்தது. பி.டி பயிருக்கு ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகளால்கூட இதை மறைக்க முடியவில்லை. மீடியாக்களில் இந்த விஷயம் வெளிச்சம் போடப்பட்டது.
            இந்நிலையில், அரிசி, கத்திரிக்காய், கடுகு உள்பட 18 விதமான உணவுப் பயிர்களுக்கு அனுமதியை வழங்கியிருக்கிறது மோடி அரசு. பருத்தியாவது, பஞ்சாக மாறி ஆடையாக வந்து தோலில்தான் அமரும். ஆனால், உணவுப் பயிர்கள்? இதுகாலம் வரை இங்கே உரம், பூச்சிக்கொல்லி என்று தெளிக்கப்பட்ட ரசாயனங்களில் விளைந்ததைத் தின்றதற்கே... புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் இந்த மனிதகுலம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில், உணவுப்பயிர்களின் விதைக்குள்ளேயே பூச்சிகளுக்கு எதிரான விஷ மரபணுவைப் புகுத்தும் தொழில்நுட்பத்தில் விளைந்த மரபணுமாற்று விதைகளில் விளையும் உணவுப் பயிர்கள் வந்தால்...  நாம் என்னென்ன கதிக்கு ஆளாகப் போகிறோமோ?!
              இந்த பயத்தால்தான் ஐரோப்பிய நாடுகள் பலவும் இந்த மரபணு மாற்று உணவுப் பயிர் உற்பத்திக்கு தங்கள் நாடுகளில் தடைவிதித்துள்ளன என்பதை மறந்துவிட் வேண்டாம்.
'கேட்டால்... கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசு போட்டு வைத்திருந்ததைத்தான் நாங்கள் அமல்படுத்தியிருக்கிறோம்' என்று ரயில் கட்டண உயர்வு, இந்தித் திணிப்பு போன்ற விவகாரங்களில் பல்டி அடித்தது போலவே இதிலும் மோடி பல்டி அடிப்பார். கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசுதான் மரபணு மாற்று உணவுப் பயிர்களுக்கு அடிபோட்டு வைத்தது உண்மைதான். ஆனால், சூழல் ஆதரவாளர்கள், இயற்கை விவசாயிகளின் எதிர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுகளை அடுத்து காங்கிரஸ் அரசு கொஞ்சம் அடங்கியே இருந்தது. 'இந்தியாவில் போதுமான பாதுகாப்புகளை உறுதிப்படுத்திக் கொண்டுதான் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் கறாராகக் கூறியிருக்கிறது.
             இதுமட்டுமா, கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விவசாயக் குழு கூட, 'இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்கள் தேவையே இல்லை. இதை பரிசோதிப்பதற்கு போதுமான ஆய்வகங்களோ... ஆய்வாளர்களோ இங்கில்லை' என்றே அறிக்கை கொடுத்திருக்கிறது.
           ஆகக்கூடி, ஒரு எமனை இழுத்து வருவதற்குத்தான் காங்கிரஸ் அரசு கடந்த காலத்தில் அத்தனை பிரயத்தனம் செய்தது. 'காங்கிரஸ் செய்த தவறுகளைச் செய்ய மாட்டோம். அதற்கு தீர்வுகளைக் காண்போம்' என்று சூளுரைத்த மோடி, பிறகு எதற்காக காங்கிஸ் அரசு செய்த அதே தில்லுமுல்லு திருகுதாளங்களைச் செய்ய வேண்டும்?
            உண்மையில் கதர் கால அநியாயங்களைத் துடைக்க வேண்டும் என நினைத்தால், ஓயாமல் இந்திய பாரம்பர்யம் பற்றி வாய்கிழிய பேசிக் கொண்டிருக்கும் பிஜேபியும், அதன் பிரதமர் மோடியும் என்ன செய்திருக்க வேண்டும். இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டியிருக்க வேண்டும். நம்முடைய பாரம்பரிய விதைகளின் மூலமே பன்னாட்டு வீரிய விதைகளை மிஞ்சிய மகசூலை அள்ளும் விவசாயிகள் இப்போது பெருகிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய நாட்டு மாடுகள் மூலமாகவே போதுமான இயற்கை உரத்தைப் பெற முடியும் என்பதை நிருபித்துக் கொண்டுள்ளனர். இந்த விவசாயிகளையெல்லாம் பார்த்து பாடம்படித்து, எங்களுக்கு அந்நிய தொழில்நுட்பமான மரபணு மாற்று விதைகள் தேவையில்லை என்று பாரம்பரிய விதைகளை உயர்த்திப் பிடித்திருக்க வேண்டும். பன்னாட்டு மாடுகள் தேவையில்லை, உள்நாட்டு மாடுகளே போதும் என்று அவற்றை பெருக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லையே!
            கேட்டால், '120 கோடி இந்தியர்களுக்கு உணவு புகட்ட, பாரம்பரிய விவசாயத்தால் முடியாது' என்று பசுமைப் புரட்சியின் அப்பாக்களும் அம்மாக்களும் முப்பது நாற்பது ஆண்டுகளாக எடுத்துக் கொண்டிருக்கும் அதே வாந்தியை மறுபடி மறுபடி எடுக்கிறார்கள், விஞ்ஞானிகள் என்கிற பெயரில் திரியும் அஞ்ஞானிகள் சிலர்.
           இங்கே திருமணங்களிலும், கேளிக்கை நிகழ்வுகளிலும், நட்சத்திர உணவு விடுதிகளிலும், லட்சக்கணக்கான உணவு விடுதிகளிலும் தினம் தினம் சமைக்கப்பட்டு, உண்ணாமல் வீணடிக்கப்படும் உணவைக் கணக்கிட்டால், இன்னும் ஒன்பது இந்தியாவுக்கு உணவிட முடியும். இப்படி வீணடிப்பதைக் கட்டுப்படுத்தினால், வெட்டிச் செலவுகளும் மட்டுப்படும். 
           இதையெல்லாம் விட்டுவிட்டு, இப்படி மன்மோகன் சிங் செய்து வந்த அதே விஷயங்களை கையில் எடுத்து, அமெரிக்காவின் உத்தரவுகளை சிரமேற்று நிறைவேற்றுவதற்கு எதற்காக மோடி பிரதமராகியிருக்க வேண்டும். இதைவிட தெரிந்த பிசாசே மேல் என்று இருந்திருக்கலாமோ!
         இப்படி மன்மோகன் சிங் செய்து வந்த அதே விஷயங்களை கையில் எடுத்து, அமெரிக்காவின் உத்தரவுகளை சிரமேற்று நிறைவேற்றுவதற்கு எதற்காக மோடி பிரதமராகியிருக்க வேண்டும். இதைவிட தெரிந்த பிசாசே மேல் என்று இருந்திருக்கலாமோ!
வாலு போய் கதி வந்தது...டும் டும் டும்...
பிசாசு போய், பேய் வந்தது... டும் டும் டும்!

பின்குறிப்பு:  
இன்னுமொரு இடியையும் இறக்கியிருக்கிறது மோடி அரசு.
          'அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கு இதுநாள் வரை ஊக்கத் தொகையை தந்து கொண்டிருந்த மாநில அரசுகள் இனி கொடுக்கக் கூடாது' என்பதுதான் அந்த உத்தரவு.
        அரிசி, கோதுமைக்கு... மத்திய அரசின் விலையுடன், மாநில அரசின் ஊக்கத்தொகை கொடுக்கப்படுவதற்குக் காரணமே... நாட்டுக்கே உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றத்தான். இதுவும்கூட சொற்பமே. இதையும்கூட கொடுக்கக் கூடாது என்று கிடுக்கிப்பிடி போட்டுவிட்டார் மோடி.
            'இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளை ஒரேயடியாக ஒழித்துவிட்டு, பன்னாட்டு மற்றும் இந்நாட்டு முதலாளிகளிடம் நிலங்களை மொத்தமாக அடகு வை' என்பது உலக வர்த்தக நிறுவனத்தின் மறைமுக உத்தரவு. இதை கடைசி வரை மன்மோகன் சிங் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், அறுதிப் பெரும்பான்மையுடன் இதைக் கையில் எடுத்துவிட்டார் மோடி.
-ஜூனியர் கோவணாண்டி         
நன்றி : ''பசுமை விகடன்''
                  தேர்தலுக்கு முன்பு மோடியை ஆதரித்த விகடன் உள்ளிட்ட பத்திரிகைகள் இப்போது தான் உண்மையை உணர்ந்து எழுதுகிறார்கள்.            

செவ்வாய், 15 ஜூலை, 2014

மகத்தான மாமனிதர் தோழர். என். சங்கரய்யா வாழ்க பல்லாண்டு...!


 கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்                           
                                 மாநிலச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                
               ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர் தோழர் என். சங்கரய்யா. அவருடைய தந்தை 1911-இல் பம்பாய் சென்று கொதிகலன் பொறியியல் படிப்பை முடித்து மதுரையில் அரசுத்துறை பொறியாளராகப் பணியாற்றியவர். 1922-இல் பிறந்த சங்கரய்யா வழக்குரைஞராக வர வேண்டுமென்பது தந்தையாரின் விருப்பம். அவரும், தாத்தாவும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
             விடுதலைப்போராட்டம் வீறு கொண்டு எழுந்த நகரங்களில் ஒன்று மதுரை. அந்தப் போராட்டத்தில் மற்ற பகுதி மக்களோடு மாணவர்களும் ஈடுபட்டார்கள். அப்போது அந்நியர் ஆட்சியை எதிர்த்து அமெரிக்கன் கல்லூரி மாணவரான சங்கரய்யா அக்கல்லூரியில் கண்டனக் கூட்டம் நடத்தியதோடு, மதுரை நகரில் மாணவர்களைத் திரட்டி பெரும் ஊர்வலத்தையும் நடத்தினார். நாட்டின் அரசியல் விடுதலையோடு சமுதாய விடுதலையும் லட்சியமாகக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். போராட்டத்தை ஒடுக்க முற்பட்ட அந்நியர் ஆட்சி நிர்வாகம் மாணவன் சங்கரய்யாவையும் கைது செய்தது. பட்டப்படிப்பின் இறுதியாண்டுத் தேர்வுக்கு 15 நாள்களே இருந்த நிலையில் கைது செய்யப்பட்ட சங்கரய்யா வேலூர் சிறையிலடைக்கப்பட்டார்.
           சிறையில் அவருக்கு அரசியல் படிப்பு தொடர்ந்தது. தோழர்கள் ப. ஜீவானந்தம், வ.சுப்பையா, பி. சீனிவாசராவ், எம்.ஆர். வெங்கட்ராமன், வி.பி. சிந்தன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுடன், காங்கிரஸ் தலைவர்களும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். வேலூர் சிறையில்தான் காமராஜரை முதன்முதலாக சங்கரய்யா சந்தித்தார்.
           18 மாதங்களுக்குப் பிறகு 1942 ஜூன் மாதம் தலைவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். விடுதலையான பிறகு முழுநேரமாக சங்கரய்யா இயக்கப் பணிகளில் ஈடுபட்டார். பட்டப்படிப்பு இறுதித்தேர்வுக்கு சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட சங்கரய்யா தனது எதிர்காலம் பற்றி முடிவெடுக்க வேண்டிய அந்த முக்கியமான தருணத்தில், தனிப்பட்ட முறையில் தன்னுடைய சொந்தத் தேவைகள் பற்றிக் கவலைப்படாமல், நாட்டுக்கு சேவை செய்வதையே இலக்காகக் கொண்டு சிறை சென்றார்.
         1942-இல் காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாளையங்கோட்டையில் மாபெரும் மாணவர் பேரணி நடைபெற்றது. அதில் தமிழ்நாடு மாணவர் சங்க பொதுச் செயலாளரான சங்கரய்யாவும் கலந்து கொண்டார். பேரணியைத் தடுத்த காவல்துறையினர் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் சங்கரய்யாவும் படுகாயம் அடைந்தார். நெல்லை மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து 1942 ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் சங்கரய்யா கைது செய்யப்பட்டு கேரளத்தில் உள்ள கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1944-இல் அண்ணல் காந்தி விடுதலையானபோதுதான் சங்கரய்யாவும் மற்ற கம்யூனிஸ்ட் தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள். மீண்டும் கட்சிப்பணியில் ஈடுபட்டபோது, கம்யூனிஸ்ட் கட்சியில் அன்றைய மதுரை மாவட்ட (மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்) செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
              1946-ஆம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய கடற்படை எழுச்சி பம்பாயில் தொடங்கி கல்கத்தா, சென்னை என்று அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது. கடற்படையிலிருந்த இந்திய வீரர்கள் அந்நிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். அந்தப் போராட்டத்தை முறியடிக்க ஆங்கிலேய அரசு கடுமையான ஒடுக்குமுறையை ஏவிவிட்டது. இந்திய கடற்படை வீரர்களின் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவளித்தது. கடற்படை வீரர்களின் போராட்டத்தை ஆதரித்து மதுரையில் ஒரு பேரணியை சங்கரய்யா தலைமை தாங்கி நடத்தினார். பேரணியைக் கைவிடுமாறு அவரை காவல்துறை அதிகாரி துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். அதற்கெல்லாம் சங்கரய்யா பணியவில்லை. மதுரையில் முன்னைக்காட்டிலும் சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. அதில் கம்யூனிஸ்ட்டுகள் பிரதானமான பாத்திரம் வகித்தனர்.
              இந்தப் பின்னணியில் தான் கம்யூனிஸ்ட்டுகள் மீது மதுரை சதி வழக்கு தொடுக்கப்பட்டது. தோழர்கள் பி. ராமமூர்த்தி, சங்கரய்யா, கே.டி.கே. தங்கமணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் 1946 டிசம்பரில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து, நாடு முழுவதும் மகிழ்ச்சியோடு சுதந்திரத்தை கொண்டாடத் தொடங்கிய 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவுதான் இந்தத் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
               அந்த வழக்கிலிருந்து விடுதலையான பிறகு செப்டம்பர் 18 அன்று கட்சி அலுவலகத்தில்  சங்கரய்யா ~ நவமணி திருமணம் பி. ராமமூர்த்தி தலைமையில் எளிமையாக நடைபெற்றது. இது சாதி மறுப்புத்திருமணம் மட்டுமல்ல, மத மறுப்புத் திருமணமும் கூட. ஆசிரியர் நவமணி பிராட்டஸ்டன்ட் கிறித்தவ குடும்பத்தைச் சார்ந்தவர். சங்கரய்யாவின் பெற்றோர்களுக்கு தொடக்கத்தில் இத்திருமணத்தை ஏற்பதில் தயக்கம் இருந்தாலும் அவருடைய உறுதியால் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டனர். சங்கரய்யா - நவமணி திருமணம் மட்டுமல்லாமல், அவர்களது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கூட பெரும்பாலும் சாதி மறுப்புத் திருமணம் தான். ஆம், சங்கரய்யா வீட்டில் ஒரு சமத்துவபுரமே இருக்கிறது!
          1948-ஆம் ஆண்டு கல்கத்தாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் 2-ஆவது அகில இந்திய மாநாடு நடந்தது. மாநாடு முடிந்தவுடன் நேரு அரசு கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதித்து ஆணையிட்டது. கல்கத்தாவிலேயே பல தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக சங்கரய்யா, பயணத்தின்போது ஒரிசாவில் இறங்கி அங்கிருந்து சில நாள்களில் தமிழகம் வந்து சேர்ந்தார். கட்சியின் கட்டளையை ஏற்று, கைதாகாமல்  தலைமறைவாகவே இயக்கப் பணியாற்றி வந்தார். தலைமறைவாக இருந்துகொண்டு கட்சி வேலை செய்வது கடினமானது, ஆபத்து மிக்கது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, காவல்துறையினர் சங்கரய்யாவை கைது செய்தனர். பின்னர் நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் விடுதலையானதைத் தொடர்ந்து, 6 மாத சிறைவாசத்திற்குப் பிறகுதான் சங்கரய்யாவும் விடுவிக்கப்பட்டார்.
           அடுத்து நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட சங்கரய்யா, மாநில மையத்திலிருந்து செயல்படுவதற்காக குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். இந்நிலையில், 1962ஆம் ஆண்டு தோழர் சங்கரய்யா மறுபடியும் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறைப்படுத்தப்பட்டார்.
            1964-ஆம் ஆண்டு கல்கத்தாவில் கட்சியினுடைய 7வது அகில இந்திய மாநாடு நடைபெற்று, அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. 1964 டிசம்பரில் கட்சியினுடைய மத்தியக்குழு கூட்டத்திற்குச் சென்றுவந்த  பி. ராமமூர்த்தி, சுர்ஜித், பசவபுன்னையா ஆகியோருடன், சங்கரய்யாவும் கைது செய்யப்பட்டார். 16 மாதங்களுக்குப் பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார்கள்.
           1967-இல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட சங்கரய்யா வெற்றிபெற்றார். 12 உறுப்பினர்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுவுக்கு சங்கரய்யாதான் தலைவர். சங்கரய்யா 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு செயலாற்றியிருக்கிறார்.
           தோழர் சங்கரய்யா சிறந்த பேச்சாளர். அவருடைய கணீர் என்ற பேச்சு எவரையும் சுண்டி இழுத்து உணர்வூட்டக்கூடியது. ஒருமுறை பொதுவாக பேச்சு வன்மையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர், உள்ளத்தில் உண்மை உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாகும் என்றார்.
             தன்னுடைய உடல்நலம் பாதித்ததால் மாநிலம் முழுவதும் சென்று சுறுசுறுப்பாக செயல்பட இயலாது என்று கூறி தன்னை மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று 2002ஆம் ஆண்டு அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகும், இன்று வரையில் தன்னால் இயன்ற இயக்கப் பணியை தோழர் சங்கரய்யா நிறைவேற்றி வருகிறார்.

இன்று என். சங்கரய்யாவின் 93ஆவது பிறந்த நாள்.                    
 நன்றி :          
 தினமணி               

திங்கள், 14 ஜூலை, 2014

சூதாட்டக் களமாகும் தேசம்...!


 கட்டுரையாளர் : வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார நிபுணர்                   
       
               ஊடகங்களின் அர்த்தமற்ற ஆரவாரங்களுடன் மோடி அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மோடி அரசின் பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தை இன்னும் வலுவாக பன்னாட்டு நிதி மூலதனத்தின் வலைக்குள் சிக்க வைக்கும் முயற்சியாகும். பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி மூலதனத்தின் பங்கின் வரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும்,  காப்பீட்டு துறையிலும் இந்த காரியத்தை செய்யும், இவ்விரு துறைகளும் நாட்டின் தற்சார்பிற்கு மிக கேந்திரமான துறைகள். இதில் பாதிப்பங்கு அன்னியமூலதனத்தின் கையில் தரப்படுவது என்பது நாட்டின் இறையாண்மையைக் காவு கொடுப்பதாகும். அது மட்டுமின்றி, இப்படிசெய்வதற்கு எந்தப் பொருளாதார காரணமும் கிடையாது.
          பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்தினால், பல ராணுவ தளவாடங்களை இந்தியாவிற்குள்ளேயே உற்பத்தி செய்ய பன்னாட்டு மூலதனம் வரும் என்ற பொய்யான வாதம் முன்வைக்கப்படுகிறது. அப்படி வரும் என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும் அப்படியே வந்தாலும், தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு அவை கொடுக்கும் என்றஉத்தரவாதமும் கிடையாது. இவ்விரண்டு நடவடிக்கைகளையும் தேசப்பற்று உள்ளஅனைவரும் எதிர்க்க முன்வரவேண்டும்.

வங்கிகள் நாசமாகும்                               

           மற்றொரு அபாயகரமான முன்மொழிவு ஒன்று பட்ஜெட்டில் உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மொத்த மூலதன அஸ்திவாரத்தை உயர்த்திட, அரசு இந்த வங்கிகளுக்குள் கூடுதல் மூலதனம் செலுத்தி இப்பணியை செய்ய தயாராக இல்லை. மாறாக, புதிய பங்குகள் சிறு முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும் என்றும் அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மூலதன அஸ்திவாரம் பலப்படுத்தப்படும் என்றும் பட்ஜெட் கூறுகிறது. முதலில், பன்னாட்டு நிதியம் முன்மொழியும் பாசில் நெறிமுறைகள் அடிப்படையில் பொதுத்துறை வங்கிகளின் மூலதன அடித்தளம் அமைய வேண்டுமா என்பதே சர்ச்சைக்கு உரிய பிரச்சனை. ஏனெனில், பொதுத்துறை வங்கிகளாக இருப்பதால் இவை வாடிக்கைதாரர்களின் முழு நம்பிக்கையை பெற்றுள்ளன.
            கடந்த காலங்களில், இந்தியன் வங்கி போன்ற வங்கி களைப்பற்றி தனியார் வங்கி ஆதரவாளர்களும் ஊடகங்களும் பெரும் பீதியைக் கிளப்பிவிட்ட போதும்மக்கள் தொடர்ந்து தங்கள் சேமிப்புகளை பொதுத்துறை வங்கிகளில் தான் கொண்டுசேர்த்தனர். கடனை திருப்பித்தராமல் மோசடி செய்யும் சில பெருமுதலாளிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் அரசு நிர்ப்பந்தத்தில் கடன் தரும் நடவடிக்கையால் சில வங்கிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது உண்மை என்றாலும் கூட, பொதுத்துறை வங்கிகள் இன்றும் பொதுமக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாகவே உள்ளன. அப்படியே இந்த வங்கிகளின் மூலதன அடித்தளத்தை உயர்த்த வேண்டும் என்று கருதினால் அதை அரசே மூலதனம் அளித்து செய்ய வேண்டும். சாதாரண மக்கள் பொதுத்துறை வங்கிகளின் பெயரில் விற்கப்பட உள்ள பங்குகளை வாங்கியதன் மூலம் அவர்கள் நேரடி பொதுத்துறை வங்கி உரிமையாளர்களாக ஆகிவிடுகிறார்கள் என்ற கவர்ச்சிகரமான ஆனால் தவறானவாதத்தை நிதி அமைச்சர் முன்வைத்துள்ளார்.
             உண்மையில் இவ்வாறு பொது மக்கள் வாங்கும் பங்குகள் அவர்கள் கையில்நிலைத்து நிற்காது. அவர்கள் விற்கும் பங்குகளை பெருமுதலாளிகள் வாங்கி காலப்போக்கில் பொதுத்துறை வங்கிகளில் அவர்களின் செல்வாக்கு ஓங்கும். பொதுத்துறை வங்கிகள் படிப்படியாக தனியார்மயமாக்கப்படும். இதுதான் அரசின் உண்மையான நோக்கமும் கூட. எனவே இதுவும் கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய அம்சம் ஆகும்.

வெற்று அறிவிப்புகள்                    

          நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையில் ஏராளமான அறிவிப்புகள் உள்ளன. இவைபட்ஜெட்டில் இடம் பெறாது. எடுத்துக்காட்டாக, வேளாண் துறைக்கு வங்கிகள் மூலம் எட்டு லட்சம் கோடி ரூபாய் கடன்அளிக்கப்படும் என்பது வெறும் அறிவிப்பு தான். இது அரசின் வரவு-செலவு-தொடர்பான விஷயம் அல்ல. மேலும் இப்படி கடன்கொடுத்தே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது. செலவு மேலாண்மை ஆணையம் ஒன்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடு பற்றி தெளிவு எதுவும் இல்லை. இப்படி ஏராளமான ஆனால் பட்ஜெட்டில் இடம்பெறாத பெரிதும் சிறிதுமான அறிவிப்புகளை பட்ஜெட் உரையில் அமைச்சர் அள்ளி வீசிஉள்ளார்.
          அவை அனைத்தையும் பற்றி இப்பொழுது சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இந்த அறிவிப்புகளை அமலாக்கும் பொழுதுதான் அவற்றின் விளைவுகள் புலப்படும். எனினும் அவற்றில் பல அபாயகரமானவை என்பதும் உண்மை. எடுத்துக்காட்டாக நம் நாட்டு பங்குச் சந்தைகளில் சூதாட பெரும் பன்னாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. வரிவிகிதங்கள் நிலையாக இருக்கும், மாற்றப்படமாட்டாது என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வரிவிதிப்புகள் முன்தேதியிட்டு மாற்றப்படாது என்ற வாக்குறுதி வோடபோன் போன்ற கம்பெனிகளை குஷிப்படுத்தும் விளைவை கொண்டது. (ஆனால் நாம் உள்நாட்டில் ரயில்பயணம் மேற்கொள்ளும்பொழுது மட்டும் டிக்கட் வாங்கிய தேதியில் ஒரு விலை, அது பின்னர் மாற்றப்பட்டு ரயிலில் நாம் ஏறியவுடன் கூடுதல் கட்டணம் தரும் நிலை என்பது தொடர்கிறது!) 

தேக்கம் தொடரும்                      

                  பட்ஜெட் முன்வைத்துள்ள வரவு- செலவு கணக்குகள் மற்றும் முன்மொழிவுகளுக்குள் செல்வோம். அவற்றை எடைபோட, முதலில் எத்தகைய பொருளாதாரச்சூழலை நாடு சந்திக்கிறது என்பதைக் காண வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதார வளர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதத்திற்கும் கீழே உள்ளது. அதிலும், தொழில்துறை தேக்க நிலையில் உள்ளது. வேளாண் துறை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது, ஆனால் மொத்தத்தில் அதன் வளர்ச்சி விகிதம் குறைவாகவே உள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. பன்னாட்டுப் பொருளாதாரம் நெருக்கடியில் தொடர்கிறது.
           இந்த சூழலில், பொருளாதார வளர்ச்சியை உயர்த்த கிராக்கியை அதிகப்படுத்தும் வகையில் அரசு கூடுதல் திட்ட ஒதுக்கீடு செய்வதும் உள்நாட்டு சந்தையை வேகமாக வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதும் தேவை. ஆனால் பட்ஜெட் அப்படி எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கடந்த 2013-14ஆம் ஆண்டில் மொத்த திட்ட ஒதுக்கீடு பட்ஜெட் கணக்குப்படி 5,55,322 கோடிரூபாயாக இருந்தது. 2014-15க்கு 575 ஆயிரம் கோடி என்ற அளவிற்குத்தான் உயர்ந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் பெருமளவு உயர்வு இல்லை. ஆனால் விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் இது உண்மை அளவில் சென்ற ஆண்டை விட குறைவு ஆகும். அரசின் மொத்த செலவும் பட்ஜெட் கணக்கில் ஒப்பிடுகையில் பதினாறு லட்சத்து 65 ஆயிரம் கோடியில் இருந்து பதினேழு ஆயிரத்து 95 கோடியாகத்தான் உயர்ந்துள்ளது. இதுவும் தேக்க நிலை தான்.
          எனவே வளர்ச்சியை அரசு மூலம் ஊக்குவிக்கும் முயற்சி பட்ஜெட்டில் இல்லை. துறைவாரியான திட்ட ஒதுக்கீடுகளும் இதையே காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, ஊரக வளர்ச்சி துறையில் திட்டஒதுக்கீடு கடந்த ஆண்டு பட்ஜெட் கணக்கின்படி 80,194கோடி ரூபாய்.இந்த ஆண்டு 83,793 கோடி. உண்மை அளவில் குறைந்துள்ளது. மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு 65,869கோடி. இந்த ஆண்டு 68,728கோடி. உண்மை அளவில் சரிவு. ஆரோக்கியம் மற்றும் குடும்பநலம் அமைச்சகம் சென்ற ஆண்டு 32745கோடி இந்த ஆண்டு 34225கோடி. எந்த முன்னேற்றமும் இல்லை, சரிவு தான். இந்த உதாரணங்கள் போதுமானவை. ஆக, முக்கிய துறைகளான, ஊரக வளர்ச்சி, மனித வள மேம்பாடு, ஆரோக்கியம் போன்றஅமைச்சக திட்ட ஒதுக்கீடுகள் உண்மை அளவில் குறைந்துள்ளன.

செல்வந்தவர்களுக்கு மகிழ்ச்சி                       

              அதே சமயம், இந்த பட்ஜெட்டில் வரி விதிப்பு நடவடிக்கைகள் குறைவு. செல்வந்தர்கள் மீது எந்த வரி விதிப்பும் புதிதாகஇல்லை என்பது மட்டுமல்ல. அவர்களிடம் வருமான வரித் துறை நெளிவுசுளிவாக நடந்துகொள்ளும் என்றும் ஆங்காங்கு பட்ஜெட் உரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. சம்பளம் பெரும் மத்தியதர பகுதியினருக்கு தரப்பட்டுள்ள வருமான வரி சலுகை என்பது இந்தப்பகுதியினர் மத்தியில் ஆளும் கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்தும் நடவடிக்கையே தவிர, இதனால் ஏற்படும் பணப்பயன் விலைவாசி உயர்வில் காணாமல் போய்விடும் என்பது தான் உண்மை. மேலும், இந்த பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ஏதும் செய்யாத நிலையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்பில்லை.
            மொத்தமாக 22 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி சலுகைகளால் அரசுக்கு இழப்பாக இருக்கும் இந்த நிதி ஆண்டில் என்று பட்ஜெட் உரையில் சொல்லப்பட்டுள்ளது. மறுபுறம் மறைமுக வரிகள் மூலம் 7 ஆயிரம் கோடி கூடுதல் வரி வருமானம் கிட்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஏறத்தாழ 19 லட்சம் வரவு செலவு செய்யும் பட்ஜெட்டில் இந்த வரி முன்மொழிவுகளின் தாக்கம் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். எனினும், ரயில் கட்டண உயர்வு, தொடர்ந்து எரிபொருள் விலைகள் உயர்த்தப்படுவது போன்றவை விலைவாசி உயர்வை ஊக்குவிக்கும் என்பதும் பட்ஜெட்டும் அதே பாதையில் பயணிக்கிறது என்பதும் உண்மையே.
            சென்ற ஆண்டு பட்ஜெட்டில் உரம், உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட மானியங்களுக்கு செலவிடப்பட்ட தொகை 2,55,516 கோடி. இந்த ஆண்டில் மானியங்களுக்கான ஒதுக்கீடு மிகவும் சொற்பமான அளவில் 5142 கோடி மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் நாம் கடுமையான விலை உயர்வை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தான். அதுவும் இராக் நிலைமைகளை கணக்கில் கொண்டால் எரிபொருள் விலைகள் பன்னாட்டு சந்தையில் உயரும் என்பது திண்ணம். மானிய ஒதுக்கீடு உண்மை அளவில் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தனிநபர் வருமான வரி விகித குறைப்பால் களித்திருப்போருக்கு கடும் அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது என்பது தான்.

‘சுதேசி’ முழக்கம் வெறும் வேஷம்                

              செல்வந்தர்கள் மீதும் இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகள் மீதும் வரி விதித்து வளம் திரட்ட மறுக்கும் மத்திய பா ஜ க அரசு, பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்று கூறுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. அதீதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று அரசு அனுமானிக்கிறது. இது யதார்த்தத்திற்குப் புறம்பானது. உண்மையில் நடக்கப்போவது என்னவென்றால் ஒதுக்கீடுகளை குறைப்பதன் மூலமும் மானியங்களை மேலும் வெட்டுவதன் மூலமும். செலவுகள் மேலும்வெட்டப்படும். மறுபுறம் பொதுத்துறை சொத்துக்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படும்.
            தேசிய ஜனநாயக கூட்டணிதான் முதலில் பொதுத்துறை சொத்துக்களை விற்பதற்கு ஒரு அமைச்சகத்தையே உருவாக்கி அதன் அமைச்சராக அருண் ஷோரியை நியமித்து அழகு பார்த்தது. மீண்டும், காங்கிரசை விஞ்சும் வகையில் பொதுத்துறை சொத்துக்களை பன்னாட்டு பெரும் கம்பனிகளுக்கு விற்று தனது ‘சுதேசி’ முழக்கம் வெறும் வேஷம் என்பதை பாஜக நிரூபிக்க முனைகிறது என்பது இந்த பட்ஜெட் சொல்லும் முக்கிய செய்தி. இந்த பட்ஜெட்டில் மட்டும் நாற்பத்தி மூவாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்பதுதான்.
           இது ஒரு துவக்கமே.நல்ல நாட்கள் வந்து விட்டன. யாருக்கு என்பதுதான் கேள்வி. ஏற்கெனவே காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நல்ல நாட்களை அனுபவித்த இந்நாட்டு, பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு இன்னும் கூட நல்ல நாட்கள் வரவுள்ளன, மோடி அரசு தனது முதல் பட்ஜெட் மூலம் தனது எஜமான விசுவாசத்தை காட்டுகிறது பாஜக அரசும் கட்சியும். அதில் உலாவரும் போலி சுதேசிகளும் தற்சமயம் தற்காலிகமாக தலைமறைவாக உள்ளனர் போலும்!
நன்றி : தீக்கதிர்                         

ஞாயிறு, 13 ஜூலை, 2014

மோடியின் முழு கட்டுப்பாட்டில் ஆட்சியையும், கட்சியும்....!

               
        பாராளுமன்றத்தேர்தல் நடைபெறுவதற்கு ஓராண்டிற்கு முன்னரே, ''வளர்ச்சியின் நாயகனாக'' தன்னை தானே அறிவித்துக்கொண்டு, பல ஆண்டுகளாக பிரதமர் கனவில் மிதந்த கட்சியின் மூத்தத் தலைவர் அத்வானியை ஓரங்கட்டிவிட்டு, தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கச் செய்து நாடு முழுதும் நாயா பேயா அலைந்து பிரச்சாரம் செய்து, வெற்றிபெற்று நினைத்தது போல் பிரதமர் பதவியில் உட்கார்ந்துவிட்ட மோடி அத்தோடு விட்டுவிடவில்லை. பெரும்பாலும் ஆளுங்கட்சியில் பிரதமர் பதவிக்கு ஒருவர், அக்கட்சியின் மற்றொரு மூத்தத் தலைவர் அக்கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமர்த்தப்படுவது தான் இதுவரை வழக்கமாக இருந்துவந்தது. அதேப்போல், ஆளுங்கட்சியான பாரதீய ஜனதாக்கட்சியிலும் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், பிரதமர் பதவியும் இல்லாமல், மந்திரிப் பதவியும் இல்லாமல் வெறுமனே எம்.பி-யாக மட்டுமே வெளங்காமல் நடமாடிக்கொண்டிருக்கும் மூத்தத் தலைவர் அத்வானிக்கு கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் பதவி கொடுக்கப்படும் என்று அக்கட்சியிலேயே எதிர்ப்பார்க்கப்பட்டுவந்த நிலையில் நேற்று நடைபெற்ற பாஜக-வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றக்குழுத் தலைவராக நரேந்திர மோடியே தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதிலிருந்து கட்சியிலும், ஆட்சியிலும் மோடியின் கை ஓங்கியிருக்கிறது என்று தான் பொருள்கொள்ளவேண்டும். 
               அதுமட்டுமல்ல, சென்ற வாரம் பாரதீய ஜனதாக் கட்சியின் புதிய அகில இந்திய தலைவராக மோடியின் ''நெருங்கிய கூட்டாளியான'' அமித்ஷா தேர்ந்தெடுக்கப்பட்ட போதே கட்சியில் மோடியின் கை ஓங்கிவருகிறது என்பது உறுதியாகத் தெரிந்தது. அதுவும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும் ஒரு நாட்டின் ஆளுங்கட்சியின் தலைவர் எப்படியிருக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச தகுதிகளைக் கூட ஆய்வு செய்யாமல் தன்  கட்சித்தலைவராக தன்னுடைய நெருங்கியக் கூட்டாளியை தேர்ந்தெடுக்கச் செய்ததன் மூலம் கட்சியில் மோடியின் கை எந்த அளவிற்கு ஓங்கியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும். கட்சித் தலைவராக அமித்ஷா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ''கட்சித்தலைவர் பதவிக்குக்கூட லாயக்கில்லாமல் போய்விட்டாரா அத்வானி'' என்று அக்கட்சியிலேயே தொண்டர்கள் பொருமித்தள்ளுகிறார்கள். 
              புதிய தலைவர் அமித்ஷா யார்...? 2010-ஆண்டு வரை குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர். முதலமைச்சர் நரேந்திர மோடியின் கண்ணசைவை பார்த்தே கச்சிதமாக காரியத்தை முடிக்கக்கூடியவர்.  முதலமைச்சரின் பார்வைப்பட்ட இளம்பெண்ணை அவ்வப்போது இரகசியமாக பின்தொடர்ந்து கண்காணித்து முதலமைச்சரை குஷிப்படுத்திய பெருமை இந்த அமித்ஷாவிற்கு உண்டு.
            இவர் உள்துறை அமைச்சராக இருந்த போது போலி என்கவுண்டரில் புகழ் பெற்றவர். முதலமைச்சரை குஷிப்படுத்த சோராபுதீன், துளசிராம் பிரஜாபதி போன்ற அப்பாவிகளை போலி என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய பெருமையும் இவருக்கு உண்டு. இந்த படுகொலையை விசாரணை செய்த மத்திய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு மூன்று மாத காலங்கள் சிறைச்சாலையில் இருந்தார். அதுமட்டுமல்ல நிபந்தனை ஜாமீனில்  சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த அமித்ஷாவை   இரண்டு ஆண்டுகளுக்கு  குஜராத் மாநிலத்திற்குள்ளேயே  நுழையக்கூடாது என்று நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்தக்காலக்கட்டத்தில் தான் அமித்ஷா மோடியின் பிரதிநிதியாக - பாஜக-வின் மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உத்திரபிரதேச மாநிலத்தில் குடியேறினார். 
              உத்திரபிரதேசத்திலும் அமித்ஷா சும்மா இறக்கவில்லை. அங்கேயும் குஜராத்தில் தூவிய மதவெறி விஷத்தை மிக கச்சிதமாக தூவினார். அங்கே காப் பஞ்சாயத்துகள் என்ற மதவெறி தர்பார், முசாபர் நகர் மதக்கலவரம் போன்ற மதமோதல்களுக்கு காரணமாக திகழ்ந்தவர் தான் இந்த அமித்ஷா. மக்களவைத்தேர்தலின் போது மதவெறியை தூண்டும் வகையில் பொதுக்கூட்டங்களில் பேசியமைக்காக உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்கு அமித்ஷாவிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தபோதும், தான் ஏற்கனவே தூவிவிட்ட மதவாத விஷத்தையே மூலதனமாக வைத்து தான் உத்திரபிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 72 இடங்களில் பாஜக-வை வெற்றிபெற மூலகாரணமாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். அந்த மாபெரும் வெற்றியையே மோடிக்கு காணிக்கையாக்கினார். மோடியும், பாஜக-வும் மிருகபலம் பெற்று - இராட்சசபலம் பெற்று யாரும் எதிர்பாராதவிதமாக தனிப்பெரும் கட்சியாக விஸ்வரூபம் எடுப்பதற்கு ''மாபெரும் உதவி'' செய்ததனால் தான் அமித்ஷா பாஜக-வின் தேசியத்தலைவராக முடிசூட்டப்பட்டார் என்பதும்  யாரும் அறியாதது அல்ல. 
             ஏற்கனவே ஏராளமான கொலை வழக்குகள் நிலுவையிலுள்ள ஒருவர் ஆளுங்கட்சியின் தேசியத்தலைவர் என்பது பாஜக-விற்கு பெருமையான விஷயமாக இருக்கலாம். இப்படிப்பட்ட ''புகழ்'' வாய்ந்த தன் கூட்டாளியை தேசியத்தலைவராக ஆக்கிய பெருமை ''வளர்ச்சி நாயகன்'' மோடியையே சாரும். அப்படியென்றால் அவரது கை எப்படி ஓங்கியிருக்கிறது என்பதை பாருங்கள்.  

இன்று உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனியை வெல்வது எப்படி...?


           நேற்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் மார்கண்டேய கட்ஜு அவர்கள் தன்னுடைய பிளாக்கில் இன்று நடைபெறவுள்ள உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி ஜெர்மன் அணியை எளிதாக வெற்றிகொள்வது எப்படி என்று நகைச்சுவையாக ஒரு யோசனையை தெரிவித்திருக்கிறார். அதை கீழே கொடுத்திருக்கிறேன். 

How to defeat the Germans!              

Many people are saying it is impossible to defeat the Germans in football. I can give a sure shot method of defeating the Germans, and I hope some reader of this post will convey this to the Argentine team.                  
The method is simple : whenever an Argentine player sees a German with the ball he should look straight into his eyed and shout " Stalingrad ". This will so rattle the German player that he wiil leave the football and run away ( just as the Germans dropped their guns and ran away at seeing a Russian soldier at Stalingrad ). Then the Argentinian can take the ball and score a goal !                  

               இது நகைச்சுவைக்காக சொல்லப்பட்டாலும், பழைய வீரம்செறிந்த வரலாற்றை குறிப்பிட்டதன் மூலம் இன்றைய இளைஞர்களை உலக வரலாற்றுப் புத்தகத்தை புரட்டிப்பார்க்க வைத்திருக்கிறார்.  அந்த வரலாற்றை படித்தவர்களுக்கு அந்த வரலாற்று நிகழ்வுகளை நினைவுப்படுத்தியிருக்கிறார். 1942-43 ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ''ஸ்டாலின்கிரேட் போரில்'' ஜெர்மனிய நாஜிப்படை வீரர்களை சோவியத் படைவீரர்கள் ஓட ஓட விரட்டியதையும், நாஜிப்படை வீரர்கள் தங்கள் ஆயுதங்களை போட்டுவிட்டு ஓடியதையும் இங்கே நீதியரசர் மார்கண்டேய கட்ஜு சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வெள்ளி, 11 ஜூலை, 2014

மக்களை ஏமாற்றும் மோடியின் பட்ஜெட்...!

                       ''வளர்ச்சி நாயகன்'' மோடி ஆட்சிக்கு வந்தால் கடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உயர்ந்துகொண்டே போன அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அடக்கி கட்டுப்படுத்திவிடுவார் என்று என்றெல்லாம் சொல்லி மக்களை நம்பவைத்து, அவர்களின் ஓட்டுக்களை வாங்கி ஆட்சியில் அமர்ந்த ''வளர்ச்சி நாயகன்'' நரேந்திர மோடி தன்  சுயரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாக காட்டுகிறார். பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ''அல்வா'' கொடுத்துகொண்டே இருக்கிறார். அந்த ''அல்வா'' வழங்குதலின் ''ஹைலைட்டாக'' அமைந்தது தான் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் என்பதை மக்கள் உணர்ந்துகொண்டார்கள். 
               ஏழை எளிய மக்களுக்கு சாதகமாக பட்ஜெட்டில் எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. விவசாயம், தொழிற்சாலைகளுக்கு பட்ஜெட்டில் இடமளிக்கவில்லை. அதனால் புதிய வேலைவாய்ப்புகளுக்கும் வாய்ப்பில்லை. மக்களின் வாழ்வாதாரம் உயர அவர்களின் வருமானத்தை உயர்த்தும் எண்ணம் பட்ஜெட்டில் துளியும் இல்லை. வருமானம் தான் உயரவில்லை. ஏறும் விலைவாசியையாவது குறைக்கும் யோசனை கொஞ்சம் கூட இல்லை என்பது வெட்கக்கேடானது. ஆனால் மாதச் சம்பளக்காரர்களுக்கு ஒருசில சில்லறைச் சலுகைகளை தந்து திருப்திப்படுத்திவிடலாமென்று நினைத்துவிட்டார் மோடி. 
            வருமான வரிச்சலுகை 2 இலட்சத்திலிருந்து 2.5 இலட்சமாக உயர்த்தியும்,  80-C - சேமிப்புக்கான வரிச்சலுகையாக ரூ.1 இலட்சமாக இருந்ததை 1.5 இலட்சமாக உயர்த்தியும் அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் மாதச்சம்பளக்காரர்களை தனது ஆதரவுக் கூட்டமாக மாற்றிவிடலாம் என்று பகல் கனவு கண்டிருக்கிறார் மோடி. ஆனால் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பே பாராளுமன்றத்தையே மதிக்காமல் பெட்ரோல், டீசல், சமையல் காஸ், சர்க்கரை ஆகியவற்றின் விலைகளையும், இரயில் கட்டணங்களையும் கடுமையாக உயர்த்திவிட்டு, பட்ஜெட்டில் வருமான வரி சம்பந்தமான சில்லரைச் சலுகைகளை தந்து மக்களை ஏமாற்றியிருக்கிறார் நரேந்திர மோடி என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 
             அத்தியாவசியப்பொருட்களின் விலையுயர்வை தடுப்பதற்கு - விலையேற்றத்திற்கு காரணமான ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்வதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காததன் மூலமாகவும், மேற்கண்ட அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை இவராக உயர்த்தியதன் மூலமாகவும் மக்களின் வாங்கும் சக்தியை குறைத்துவிட்டு சேமிப்பிற்கு 1.5 இலட்சமாக  உயர்த்தியது என்பது நகைப்பிற்குரியது.  இது யாரை ஏமாற்றுகிற வேலை. ஒரு பக்கம் உழைப்பாளி மக்களின் - ஊழியர்களின் வருமானம் உயரவில்லை. இன்னொரு பக்கம் அதற்கு நேரெதிராக விலைவாசி விண்ணை நோக்கி உயர்ந்துகொண்டே போகிறது. இந்த சூழ்நிலையில் இவர்களால் எப்படி சேமிக்கமுடியும்...? - இவர்கள் சேமிப்பிற்கு எங்கே போவார்கள்...? என்கிற பொதுபுத்தி கூட மத்திய நிதியமைச்சருக்கு இல்லாமல் போனது நம்முடைய துரதஷ்டம் தான். வாங்கற சம்பளம் காய்-கறி வாங்கறதுக்கும், மளிகை சாமான்கள் வாங்கறதுக்கும், வண்டிக்கு பெட்ரோல் போடறதுக்குமே சரியா இருக்கு. இதுல எங்கிருந்து சேமிக்கிறது. இந்த சலுகை சாதாரண நடுத்தர மக்களுக்கு எந்தவகையிலும் பயன்தராது. பாத்துகிட்டே இருங்கள்... கூடியவிரைவில் மோடியின் அடிவருடிகள் வழக்கம்போல் மோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் ''பொருளாதார மேதைகள்'' என்ற நாமத்தை சூட்டினாலும் சூட்டுவார்கள். நாம்ப பார்க்கத்தான் போறோம்.
              மொத்தத்தில் தனக்கு வாக்களித்த மக்களைப் பற்றிய அக்கறையில்லாமல், மாற்றம் விரும்பிய மக்களை ஏமாற்றம் அடையச்செய்த மோடியின் பட்ஜெட் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஞாயிறு, 6 ஜூலை, 2014

நிச்சயம் புத்துயிர் பெற்று எழுவோம்!

கட்டுரையாளர் :   தோழர். பிரகாஷ் காரத்,                                                                                                  பொதுச்செயலாளர்,  மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி                                
            மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல்களில் மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன. கட்சி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, போட்டியிட்ட 93 இடங்களில் 3.25 சதவீத அளவிற்கே வாக்குகளைப் பெற்றிருக்கிறது. கேரளாவில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இருவர் கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணி ஆதரவுடன் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், இடதுசாரிகளின் மொத்த எண்ணிக்கை 12 மட்டுமே. நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மோசமான பங்களிப்பு ஓர்ஆழமான பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்தி இருக்கிறது. விமர்சனப்பூர்வமான ஆய்வின் அடிப்படையில்தான் முறையான முடிவுகளுக்கு வர முடியும், அதன் அடிப்படையில் கட்சியின் அரசியல்தளம் மற்றும் ஸ்தாபனத்தை முழுமையாக பழுதுபார்த்திட வேண்டியிருக்கிறது.
            மத்தியக்குழு, ஜூன் 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தின் போது கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆழமாகப் பரிசீலித்தது. கட்சியின் சுயேச்சையான பலமும், வெகுஜன தளமும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ஆழமானப் பின்னடைவு மட்டும் காரணம் அல்ல, நாடு முழுவதும் கட்சியை முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்ட தோல்வியும் இதற்கு முக்கிய காரணமாகும். கட்சியையும் அதன் அரசியல் செல்வாக்கையும் முன்னெடுத்துச் செல்வதில் தோல்வி ஏற்பட்டிருப்பதற்கான பொறுப்பு கட்சியின் அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக்குழுவையே சாரும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக்கட்சிகளும் பாஜக தலைமையிலான அரசாங்கமாக இருந்தாலும் சரி அல்லது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமாக இருந்தாலும் மத்திய அரசாங்கங்கள் பின்பற்றி வந்த நவீன தாராளமயக் கொள்கைகளைத் தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வந்திருக்கின்றன. இத்தகைய கொள்கைகளின் கடுந்தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திடவும் தங்களுடைய உரிமைகளைப் பாதுகாத்திடவும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை அவை தொடர்ந்து மேற்கொண்டு வந்தன. நவீன தாராளமயக்கொள்கைகளுக்கு மாற்றாக, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் அரங்கங்களில் மாற்றுக் கொள்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் தொடர்ந்து இயக்கங்கள் மற்றும் பிரச்சாரங்கள் நடத்தி வந்தனர். வகுப்புவாதக் கொள்கைகளை எதிர்ப்பதுடன் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்காகவும், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் இடதுசாரிகள் தொடர்ந்து உறுதியுடன் போராடி வந்திருக்கிறார்கள்.
            இவ்வளவு நடவடிக்கைகளை இடதுசாரிகள் மேற்கொண்டிருந்தபோதிலும், மக்களின் ஆதரவினைப் பெறுவதில், அதிலும் குறிப்பாக இளைஞர்களின் ஆதரவினைப் பெறுவதில், தோல்வியடைந்துவிட்டதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. மத்தியக்குழு தன்னுடைய பரிசீலனை அறிக்கையில், குறைபாடுகளைக் களைந்திடவும், கட்சி மக்களிடமிருந்து அந்நியமாகியிருப்பதை உடனே சரி செய்யவும், சில முக்கிய முடிவுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசரம், அவசியம் என்று கருதுகிறது. இன்றைய நிலையை சரிசெய்து முன்னேறிடவும், கட்சி மற்றும் இடது மற்றும் ஜனநாயக சக்திகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அடிப்படையை அமைத்திடவும் நான்கு முக்கிய நடவடிக்கைகளை எடுத்திட தீர்மானித்திருக்கிறது.

நான்கு நடவடிக்கைகள்                         

                1. கட்சியின் சுயேச்சையான பலத்தை அதிகரித்திட வேண்டும் என்று தொடர்ந்து கட்சியின் அகில இந்திய மாநாடுகளில் நாம் நம்முடைய அரசியல்-நடைமுறை உத்திகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்த போதிலும், நாம் அதனை செய்ய இயலாதவர்களாகவே இருந்து வந்திருக்கிறோம். மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று வலுவான மாநிலங்களுக்கு அப்பால், இது தொடர்பாக முன்னேற்றம் எதுவும் இல்லை. கட்சியின் பலம் சுயேச்சையாக வளராமல், இடது - ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவது மற்றும் இடது - ஜனநாயக மாற்றை உருவாக்குவது என்கிற அரசியல் உத்தி வெற்றி பெறாது.
            நாம் மேற்கொள்ள வேண்டிய பெரிய அளவிலான முதல் நடவடிக்கை என்பது, இதுவரையிலும் கடைப்பிடித்து வந்த அரசியல் உத்தியைமறு ஆய்வுக்கு உட்படுத்துவது என்பதேயாகும். நாம் இதுநாள்வரை பின்பற்றி வந்த ஐக்கிய முன்னணி உத்தி என்கிற கட்சியின் அரசியல் நிலைப்பாட்டின் அனைத்து அம்சங்களும் விமர்சன ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம். இவ்வாறு நடவடிக்கைகளை மேற் கொள்வதன் மூலம் ஒரு சரியான, பொருத்தமான அரசியல்மேடை மற்றும் முழக்கங்களை உருவாக்குவதில் நமக்கிருந்த குறைபாடுகள் அல்லது பலவீனங் களை அடையாளம் கண்டறிய முடியும்.
கட்சி முழுமையும் விவாதிக்கும்
         ஒவ்வொரு அகில இந்திய மாநாட்டின்போதும், நாம் பின்பற்றி வரும் அரசியல்-நடைமுறை உத்திகளை அமல் படுத்தியது தொடர்பாக இயல்பாகவே கட்சி ஓர் ஆய்வினை மேற்கொள்ளும். ஆனால், இன்றைய சூழ் நிலையில் இதுமட்டும் போதுமானதல்ல. இதுவரை பின்பற்றி வந்த அரசியல் - நடைமுறை உத்திகளை ஓர் ஆழமான ஆய்வுக்கு இன்றைய தினம்உட்படுத்துவது அவசியம். இதற்காக, அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ள அகில இந்தியமாநாட்டுக்கு முன்பாக நாம் பின்பற்றி வந்த அரசியல் - நடைமுறை உத்திகள் குறித்து ஓர்மறு ஆய்வினை மேற்கொள்வது என மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது. இவ்வாறு மேற்கொள் ளப்படும் அரசியல் - நடைமுறை உத்திகள் தொடர்பான மறு ஆய்வின் முடிவுகள் அடங்கிய அறிக்கை, கட்சியின் நகல் அரசியல் தீர்மானத்துடன் கட்சி முழுமைக்கும் விவாதத்திற்காக முன்வைக் கப்படும். இதனை அடுத்து நடைபெறவிருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் புதிய அரசியல் - நடைமுறை உத்திகள் நிறைவேற்றப்படும். இவ்வாறாக, முழுமையான அளவில் ஓர் உள்கட்சி விவாதத்தை நடத்திட உள்ளோம்.

மாற்றங்களுக்கு ஏற்ற முழக்கங்கள்                   

            2. கடந்த இருபத்தைந்து ஆண்டு கால வரலாற்றில், ஏகாதிபத்திய உலகமயத்தின் தாக்கம் காரணமாகவும், நவீன தாராளமயக் கொள்கைகள் நாட்டில் பின்பற்றப்பட்டு வந்ததன் விளைவாகவும், சமூக-பொருளாதார நிலைமைகளில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வர்க்கங்களின் நிலைப்பாடுகளிலும், வர்க்கங் களுக்குள்ளேயும் இத்தகு மாற்றங்கள் நிகழ்ந் துள்ளன. தொழிலாளர் வர்க்கம், விவசாய வர்க்கம், விவசாயத் தொழிலாளர் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கங்களுக்குள்ளேயும் இத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே, இவ்வாறான மாற்றங்கள் இவர்களின் அரசியல் ஸ்தாபன நடவடிக்கைகளில் எப்படிப்பட்ட அளவிற்கு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் பார்த்து வருகிறோம். பெரு முதலாளிகள் மற்றும் முதலாளித்துவத்தின் மற்ற பிரிவினர் மத்தியிலும் கூட வலுவான முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
             நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவினர்களின் பிரச்சனைகளை எடுத்துக்கொள்ளும்போது, முழக்கங்களை உருவாக்குகையில், இவ்வாறு ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக ஒருவலுவான இயக்கத்தைக் கட்டி எழுப்பிட, அனைத்து வர்க்கப்பிரிவினர்களையும் அணுகக் கூடிய விதத்தில் நம்முடைய முழக்கங்களில் மாற் றங்களை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். இதற்கு, சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், அத்தகு சமயங்களில் பல்வேறு வர்க்கப் பிரிவுகளின் நிலைப்பாடுகள் மற்றும் பங்களிப்புகள் குறித்தும் ஒரு துல்லியமான ஆய்வினை மேற்கொள்வது அவசியமாகும்.
பல்வேறு துறைகளிலும் அத்தகைய துல்லியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அத்தகைய துல்லியமான ஆய்வுகளின் அடிப்படையில், கட்சியின் எதிர்கால லட்சியங்களை மனதில் கொண்டு, முழக்கங்களையும் கோரிக்கைகளையும் அமைத்திட முடியும். இத்தகைய துல்லியமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலவரையறையினை தீர்மானித்திட வேண்டும் என்றும் மத்தியக் குழு முடிவு செய்துள்ளது.

மக்களுடன் ஜீவனுள்ள தொடர்பு                    

               3. இவ்வாறு அரசியல் நிலைப்பாட்டை மேற்கொள்வதற்காக நாம் முயற்சிகளை மேற்கொள்வதுடன், நம் கட்சி ஸ்தாபனத்தின் நிலை குறித்தும், அதன் செயல்பாடுகளின் பாணி எப்படி இருந்தது, மக்கள் மத்தியில் அதன் வீச்சு எந்த அளவிற்கு இருந்தது என்பது குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டியதும் அவசியம். கட்சியின் கீழ் அமைந்துள்ள வெகுஜன அமைப்புகள் பல்வேறு வெகுஜனப் போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்தியுள்ள போதிலும், அத்தகு இயக்கங்களில் ஈடுபட்ட மக்களை அரசியலாக மாற்ற முடியாத நிலையிலேயே கட்சி ஸ்தாபனம் இருக்கிறது என்கிற பிரச்சனை இதில் ஒன்று.
              அடுத்து ஸ்தாபனம் பலவீனம் அடைந் திருக்கும் பிரச்சனையும் போராட்டங்கள் மற்றும் இயக்கங்களை வளர்த்தெடுக்க முடி யாத நிலைக்கு இட்டுச் சென்றுள்ளன. செயல் பாடுகளில் ஒரேவிதமான சலிப்பூட்டுகிற முறைகள் மற்றும் மக்களுடன் ஜீவனுள்ள தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாததும் பிரச்சனைகளாகும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நம்முடைய பிரச்சார முறைகளில் மாறுதல்களை மேற்கொள்ள வேண்டியதும் அவ்வகையில் மக்களிடம் விரைவில் தொடர்பு களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கின்றன. கட்சி ஸ்தாபனத்தை முழுமையாக பழுதுபார்த்து, தவறான போக்குகளை சரி செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வர்க்க - வெகுஜன அமைப்புகள்                        

               4. வெகுஜன அமைப்புகளின் வளர்ச்சி, அவற்றின் சுயேச்சையான செயல்பாடுகள் மற்றும் அவற்றின் கீழ் மக்களை விரிவான முறையில் அணிதிரட்டுதல் ஆகியவையும் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய அம்சங்களாகும். மாநிலக் குழுக்கள் நடத்தியுள்ள தேர்தல் ஆய்வுகள் காட்டுவது என்னவெனில், நம் கட்சியின் கீழ் அமைந்துள்ள வெகுஜன அமைப்புகளில் அணிதிரண்டுள்ள மக்களில் கணிசமானவர்கள் நம் கட்சிக்கோ அல்லது இடதுசாரி வேட்பாளர்களுக்கோ வாக்களிக்கவில்லை என்பதாகும். வர்க்க, வெகுஜன அமைப்புகள் மற்றும் நம் அரசியல் வேலைகளில், நம்முடைய சுயேச்சையான செயல்பாடுகளில் குறைகள் மலிந்துள்ளன. இவற்றை மிகவும் ஆழமான முறையில் சரி செய்திட வேண்டியது அவசியம்.மேற்கண்ட நான்கு பிரதான நடவடிக்கை களையும் ஒன்றிணைத்து முன்னெடுத்துச் செல்லவேண்டும். கட்சி எதிர்கொண்டுள்ள நிலைமைகளை கவலையுடன் பரிசீலித்திட வேண்டும் என்றுகட்சி முழுமைக்கும் மத்தியக்குழு அறைகூவல் விடுத்திருக்கிறது.

புதிய நிலைமை                  

            தேர்தலுக்குப்பின்னர் நரேந்திர மோடியின் கீழ் பாஜக தலைமையிலான அரசாங்கம் அமைந்தபின், ஒரு புதிய அரசியல் நிலைமை உருவாகி இருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகள் முன்னிலும் வெறித்தனமான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கிவிட்டன. பெரு முதலாளிகள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கை களை நிறைவேற்ற ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. இதன் எதிர்விளைவாக, மக்களின் வாழ்வைக் கசக்கிப் பிழியக்கூடிய வகையில் நடவடிக்கைகளும் துவங்கி விட்டன.
             பணவீக்கத்திற்கும் விலைவாசி உயர்வுக்கும் காரணமாக விளங்கும் கொள்கைகளை அமல்படுத்துவது தொடர்கின்றன. பாஜக/ஆர்எஸ்எஸ் கும்பல் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை உந்தித்தள்ளுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன. அரசின் கீழான பல்வேறு அமைப்புகளிலும் ஆர்எஸ்எஸ் ஊழியர்களை ஊடுருவச் செய்வதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்துத்துவ தீவிரவாத விஷமிகள் சிறுபான்மையினர் மற்றும் மதச்சார்பற்ற மாண்புகளின் மீது தாக்குதல்களைத் தொடுக்கத் துவங்கியிருக்கின்றனர். புனேயில் நடந்துள்ள நிகழ்வுகள் மற்றும் குஜராத், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடந்துள்ள வகுப்பு மோதல்களும் ஓர் எச்சரிக்கை மணியாகும்.

புத்துயிரோடு எழுவோம்!                             

                  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் வலதுசாரிகளின் தாக்குதல்களுக்கு எதிராக எதிர்ப்பினை முடுக்கிவிடவும், உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திடப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண் டியிருக்கிறது. வகுப்புவாத சித்தாந்தம் மற்றும் அரசியலுக்கு எதிராக உறுதியான போராட்டத்தை நடத்திக்கொண்டிருப்பது இடதுசாரிகள் மட்டுமே. பெரும்பான்மை மதவெறியின் நாசகர அச்சுறுத்தல்களுக்கு எதிராக களத்தில் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை இறக்கி விடுவதில் கேந்திரமான பங்கு வகிக்க வேண்டிய நிலையில் இடதுசாரிகள் இருக்கிறார்கள்.
           இப்பணிகளை வலுவாக செய்யக்கூடிய விதத்தில் இடதுசாரிகள் புத்துயிர் பெற்று எழுவதில் உடனடிக் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். அனைத்து இடதுசாரி சக்திகளுடனும் ஒன்றிணைந்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியோடு செயலாற்றும். அனைத்து இடது மனோபாவம் கொண்ட சக்திகள், குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகளையும் ஒரே குடையின்கீழ் திரட்டிட விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். ஒன்றுபட்ட மற்றும் புத்துயிர் பெற்ற இடதுசாரிகளால் மட்டுமே இந்திய அரசியலில் வலதுசாரிகளால் கட்டவிழ்த்துவிடப்படும் சவால்களை எதிர்கொள்ள முடியும்.

தமிழில்: ச.வீரமணி