செவ்வாய், 22 ஜூலை, 2014

சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படும் இந்திய இரயில் நிலையங்கள்...!

             
 
                 நாங்கள்  பல ஆண்டு  இடைவெளிக்குப் பிறகு  சென்ற மே மாதம் எங்கள் குடும்பத்துடன் வடநாடு சுற்றுப்பயணம் சென்றோம். பத்து நாள் பயணம் அனைத்தும் இரயில் பயணம். என் குழந்தைகளுக்கு இவ்வளவு நீண்ட இரயில் பயணம் என்பது இது தான் முதல் முறை. தமிழகத்தின் தலைநகரிலிருந்து இந்திய தலைநகரம் வரை பயணம் செய்தோம். சென்னையில் இரயில் ஏறி வழியில் ஆக்ரா, அமிர்தசரஸ், ஜெய்ப்பூர் போன்ற பேரு நகரங்களுக்கு சென்று சுற்றிவிட்டு கடைசியாக புதுடெல்லி சென்று விட்டு நேராக சென்னை திரும்பினோம். 
           மேலே சொன்ன  சென்னை, ஆக்ரா, அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், புதுடெல்லி ஆகிய பெருநகர இரயில் நிலையங்களில் நுழையும்  போதெல்லாம் அந்த ரயில் நிலையங்கள் மனதிற்கு ஏதோ அந்நியமாகப்பட்டது. நம் நாட்டில் தான் நாம் இருக்கிறோம் என்ற உணர்வை என் மனதிற்குள் நானாகவே வரவழைத்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது. இந்திய இரயில் நிலையத்திற்கே உரித்தான எந்தவிதமான அடையாளங்களும் இல்லாமல் போனதே அதற்கு காரணம். விமானநிலையத்திற்குள் நுழைந்துவிட்டோமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. படோடமான கண்ணைப்பறிக்கும் அமர்க்களமான விளக்குகள் கொண்ட பல்வேறு கடைகள் கண்களில் பட்டன. 
         ஆனால் இரயில் நிலைய நடைமேடையில் இட்லி, தோசை, உப்புமா, வடை, பட்ஜி, வாழைப்பழம் போன்றவற்றை சுமந்து நிற்கும் தள்ளுவண்டிகளை பார்க்கமுடியவில்லை. டீ  - காப்பி தூக்குகளை தூக்கிக்கொண்டு டீ...டீ...டீ... என்று கூவிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்துகொண்டிருப்பவர்களையும், கூடையில் கடலை பயிரை சுமந்துகொண்டு விற்பவர்களையும் காணமுடியவில்லை. அதுமட்டுமல்ல நடைமேடையின் ஓரமாக ஐ.ஆர்.சி.டி.சி என்ற பொதுத்துறை நிறுவனம் நடத்தும் உணவகத்தை தேடினேன்.... தேடினேன்.... இரயில் நிலைய எல்லைக்கே போய் தேடினேன். அதுவும் என் கண்களில் தென்படவில்லை. ஆக்ரா இரயில் நிலையத்தில் முன்பெல்லாம் பாரம்பரியமாக மண் பாண்டத்தில் டீ விற்பார்கள். இன்று அந்த பாரம்பரியம் கூட மறைந்தே போய்விட்டது.
    அவைகளெல்லாம் எங்கே போனது....? இன்று அதற்கு பதிலாக வேறென்ன வந்திருக்கிறது...?
             அவைகளெல்லாம் உலகமய - தனியார் மய சூறைக்காற்றில் அடித்து சென்றுவிட்டன என்பது சிறிது நேரம் கழித்து தான் எனக்கு புலப்பட்டது.
          இன்றைக்கு அழகழகான சிறுசிறு கடைகள். அந்தக் கடைகளில் லேஸ் சிப்ஸ், குர்குரே, பெப்சி, கொக்கோகோலா, மிரிண்டா, ஸ்லைஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் ''குப்பை'' உணவுகள் தான் கிடைக்கிறது. மெக்டோனால்ட்ஸ், புட்கோர்ட் என பன்னாட்டு உணவகங்கள் கண்ணைப்பறிக்கும் வகையில் நம்மை சாப்பிட வரவேற்கின்றன. அங்கே எல்லாமே பீசா, பர்கர், நூடுல்ஸ், சிக்கன் வகைகள், ஐஸ் கிரீம் என விலை உயர்ந்த உணவுப்பொருட்கள் தான் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஒரு காப்பி 80 ரூபாய், ஒரு டீ  20 ரூபாய் என கண்டபடி விற்றால் அதை குடிக்கும் ஆசை எப்படி வரும்...? நமக்கு ஒத்து வராத உணவுவகைகள் என்பதால் குழந்தைகள் உட்பட நாங்கள் உணவுக்காக தவித்துப்போனோம். இதை தான் இனி நீ சாப்பிடவேண்டும் என்பதை உலகமயம் நமக்கு சொல்கிறது என்பதை இந்திய இரயில் நிலையங்கள் மூலம் புரிந்துகொண்டேன்.
                 நமக்கே இப்படி என்றால், படிப்பறிவு இல்லாதவர்கள், வசதியில்லாத மக்கள் உணவுக்கு என்ன செய்வார்கள் என்று  தான் புரியவில்லை. அப்படிப்பட்ட மக்களையே இந்த இடங்களில் காணமுடியவில்லை. இன்றைக்கு இந்திய இரயில் நிலையங்களெல்லாம் சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது என்பது தான் உண்மை. 

கருத்துகள் இல்லை: