ஞாயிறு, 13 ஜூலை, 2014

மோடியின் முழு கட்டுப்பாட்டில் ஆட்சியையும், கட்சியும்....!

               
        பாராளுமன்றத்தேர்தல் நடைபெறுவதற்கு ஓராண்டிற்கு முன்னரே, ''வளர்ச்சியின் நாயகனாக'' தன்னை தானே அறிவித்துக்கொண்டு, பல ஆண்டுகளாக பிரதமர் கனவில் மிதந்த கட்சியின் மூத்தத் தலைவர் அத்வானியை ஓரங்கட்டிவிட்டு, தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கச் செய்து நாடு முழுதும் நாயா பேயா அலைந்து பிரச்சாரம் செய்து, வெற்றிபெற்று நினைத்தது போல் பிரதமர் பதவியில் உட்கார்ந்துவிட்ட மோடி அத்தோடு விட்டுவிடவில்லை. பெரும்பாலும் ஆளுங்கட்சியில் பிரதமர் பதவிக்கு ஒருவர், அக்கட்சியின் மற்றொரு மூத்தத் தலைவர் அக்கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமர்த்தப்படுவது தான் இதுவரை வழக்கமாக இருந்துவந்தது. அதேப்போல், ஆளுங்கட்சியான பாரதீய ஜனதாக்கட்சியிலும் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், பிரதமர் பதவியும் இல்லாமல், மந்திரிப் பதவியும் இல்லாமல் வெறுமனே எம்.பி-யாக மட்டுமே வெளங்காமல் நடமாடிக்கொண்டிருக்கும் மூத்தத் தலைவர் அத்வானிக்கு கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் பதவி கொடுக்கப்படும் என்று அக்கட்சியிலேயே எதிர்ப்பார்க்கப்பட்டுவந்த நிலையில் நேற்று நடைபெற்ற பாஜக-வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றக்குழுத் தலைவராக நரேந்திர மோடியே தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதிலிருந்து கட்சியிலும், ஆட்சியிலும் மோடியின் கை ஓங்கியிருக்கிறது என்று தான் பொருள்கொள்ளவேண்டும். 
               அதுமட்டுமல்ல, சென்ற வாரம் பாரதீய ஜனதாக் கட்சியின் புதிய அகில இந்திய தலைவராக மோடியின் ''நெருங்கிய கூட்டாளியான'' அமித்ஷா தேர்ந்தெடுக்கப்பட்ட போதே கட்சியில் மோடியின் கை ஓங்கிவருகிறது என்பது உறுதியாகத் தெரிந்தது. அதுவும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும் ஒரு நாட்டின் ஆளுங்கட்சியின் தலைவர் எப்படியிருக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச தகுதிகளைக் கூட ஆய்வு செய்யாமல் தன்  கட்சித்தலைவராக தன்னுடைய நெருங்கியக் கூட்டாளியை தேர்ந்தெடுக்கச் செய்ததன் மூலம் கட்சியில் மோடியின் கை எந்த அளவிற்கு ஓங்கியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும். கட்சித் தலைவராக அமித்ஷா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ''கட்சித்தலைவர் பதவிக்குக்கூட லாயக்கில்லாமல் போய்விட்டாரா அத்வானி'' என்று அக்கட்சியிலேயே தொண்டர்கள் பொருமித்தள்ளுகிறார்கள். 
              புதிய தலைவர் அமித்ஷா யார்...? 2010-ஆண்டு வரை குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர். முதலமைச்சர் நரேந்திர மோடியின் கண்ணசைவை பார்த்தே கச்சிதமாக காரியத்தை முடிக்கக்கூடியவர்.  முதலமைச்சரின் பார்வைப்பட்ட இளம்பெண்ணை அவ்வப்போது இரகசியமாக பின்தொடர்ந்து கண்காணித்து முதலமைச்சரை குஷிப்படுத்திய பெருமை இந்த அமித்ஷாவிற்கு உண்டு.
            இவர் உள்துறை அமைச்சராக இருந்த போது போலி என்கவுண்டரில் புகழ் பெற்றவர். முதலமைச்சரை குஷிப்படுத்த சோராபுதீன், துளசிராம் பிரஜாபதி போன்ற அப்பாவிகளை போலி என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய பெருமையும் இவருக்கு உண்டு. இந்த படுகொலையை விசாரணை செய்த மத்திய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு மூன்று மாத காலங்கள் சிறைச்சாலையில் இருந்தார். அதுமட்டுமல்ல நிபந்தனை ஜாமீனில்  சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த அமித்ஷாவை   இரண்டு ஆண்டுகளுக்கு  குஜராத் மாநிலத்திற்குள்ளேயே  நுழையக்கூடாது என்று நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்தக்காலக்கட்டத்தில் தான் அமித்ஷா மோடியின் பிரதிநிதியாக - பாஜக-வின் மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உத்திரபிரதேச மாநிலத்தில் குடியேறினார். 
              உத்திரபிரதேசத்திலும் அமித்ஷா சும்மா இறக்கவில்லை. அங்கேயும் குஜராத்தில் தூவிய மதவெறி விஷத்தை மிக கச்சிதமாக தூவினார். அங்கே காப் பஞ்சாயத்துகள் என்ற மதவெறி தர்பார், முசாபர் நகர் மதக்கலவரம் போன்ற மதமோதல்களுக்கு காரணமாக திகழ்ந்தவர் தான் இந்த அமித்ஷா. மக்களவைத்தேர்தலின் போது மதவெறியை தூண்டும் வகையில் பொதுக்கூட்டங்களில் பேசியமைக்காக உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்கு அமித்ஷாவிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தபோதும், தான் ஏற்கனவே தூவிவிட்ட மதவாத விஷத்தையே மூலதனமாக வைத்து தான் உத்திரபிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 72 இடங்களில் பாஜக-வை வெற்றிபெற மூலகாரணமாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். அந்த மாபெரும் வெற்றியையே மோடிக்கு காணிக்கையாக்கினார். மோடியும், பாஜக-வும் மிருகபலம் பெற்று - இராட்சசபலம் பெற்று யாரும் எதிர்பாராதவிதமாக தனிப்பெரும் கட்சியாக விஸ்வரூபம் எடுப்பதற்கு ''மாபெரும் உதவி'' செய்ததனால் தான் அமித்ஷா பாஜக-வின் தேசியத்தலைவராக முடிசூட்டப்பட்டார் என்பதும்  யாரும் அறியாதது அல்ல. 
             ஏற்கனவே ஏராளமான கொலை வழக்குகள் நிலுவையிலுள்ள ஒருவர் ஆளுங்கட்சியின் தேசியத்தலைவர் என்பது பாஜக-விற்கு பெருமையான விஷயமாக இருக்கலாம். இப்படிப்பட்ட ''புகழ்'' வாய்ந்த தன் கூட்டாளியை தேசியத்தலைவராக ஆக்கிய பெருமை ''வளர்ச்சி நாயகன்'' மோடியையே சாரும். அப்படியென்றால் அவரது கை எப்படி ஓங்கியிருக்கிறது என்பதை பாருங்கள்.  

1 கருத்து:

Muthukumar சொன்னது…

போலி என்கவுன்ட்டர் வழக்கு இன்னும் முடியவில்லை. தீர்ப்பு அளிக்கப்படவும் இல்லை. ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதால் மட்டுமே அவர் குற்றவாளி என்று முடிவு செய்தல் தவறு. கடந்த பத்து வருடங்கள் காங்கிரஸ் அரசுதானே இருந்தது. ஏன் வழக்கை முடித்து அமித் ஷாவுக்கு எதிராக தீர்ப்பை வாங்கித்தர முடியவில்லை?. ஏராளமான கொலை வழக்குகள் உள்ளன என்று போகிற போக்கில் சொல்லிவிட்டீர்கள். என்ன வழக்குகள் என்று விவரமாக சொல்ல முடியுமா? அத்வானியை இப்போது தலைவராக்கவில்லை என்று சொல்லுவது தவறு. இதற்கு முன்பும் அவர் கடந்த பத்தாண்டுகளில் கட்சித் தலைவராகவோ நாடாளுமன்றத் தலைவராகவோ இல்லை. இதை வசதியாக மறைத்து விட்டீர்கள். அத்வானியை தலைவராகத் தேர்ந்தெடுக்கவும், அல்லது வேறு பதவிகளில் அமர்த்தவும் கட்சியில் ஆட்சிமன்றக் குழுவுக்குத்தான் அதிகாரம் உள்ளது. மோடியின் கட்டுப்பாட்டில்தான் பா.ஜ.க உள்ளது என்றால் அதில் என்ன தவறு? அவரும் பா.ஜ.க தலைவர்தானே. மதவெறியைத் தூண்டியதால்தான் உத்தரப் பிரதேசத்தில் மாபெரும் வெற்றியை குவிக்க முடிந்தது என்று தாங்கள் சொன்ன கருத்து மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்று சொல்வது போல் உள்ளது.. மொத்தத்தில் இந்தக் கட்டுரையில் சாரம் இல்லை. வெறுப்புணர்வுதான் மிஞ்சியுள்ளது.