ஞாயிறு, 15 மே, 2016

தமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....!


             கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல்வேறு சந்தர்பங்களில், பல்வேறு வழிகளில் தமிழக மக்களை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும் இன்று மீண்டும் தலைகுனிய வைத்திருப்பது வெட்கக்கேடானது. 
                   கடுமையான பணப்பட்டுவாடா எதிரொலியாக அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும்  தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது வெட்கக்கேடானது. தேர்தல் விதிமுறைப்படி  இதுவரை வேட்பாளர் இறந்துவிட்டால் அல்லது கலவரங்கள் நடைபெற்றால் தான் தேர்தலை ஒத்திவைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். 
             அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவைச்  சேர்ந்த  முன்னாள் போக்குவரத்து அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும்  திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிச்சாமி போட்டியிடுகிறார்கள். இந்த இரு பணமுதலைகள் இந்த தொகுதியில் தேர்தல் ஆணையமே திணறிப்போயிருக்கிறது. இவர்கள் செய்த பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையத்தாலேயே  கட்டுப்படுத்த முடியாத அளவிற்குப் போனதால் தான் இந்த நடவடிக்கையாம். கடவுளிடம் தான் அரவக்குறிச்சி தொகுதியை ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு தேர்தல் ஆணையம் நொந்துப்போயிருக்கிறது. 
          கடுமையான பணப்பட்டுவாடா காரணமாகவும்,  இந்த தொகுதியில் தான் திமுக-அதிமுகவிடமிருந்து வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த பணம் அதிக அளவு கைப்பற்றப்பட்டதன் காரணமாகவும் தேர்தலை ஒத்திவைக்கும் முடிவுக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டிருக்கிறது. அநேகமாக இதுபோன்ற தேர்தல் ஒத்திவைப்பு என்பது தேர்தல் வரலாற்றிலேயே இது தான் முதல்முறையாக இருக்கும். தமிழகம் தான் முன்மாதிரியாக இருக்கும் என்பது வெட்ககேடானது. 
            தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை ஒரு வாரத்திற்கு  முன்னதாகவே எடுத்திருந்தால், மற்ற தொகுதிகளில் பணப்பட்டுவாடா குறைக்கப்பட்டிருக்கும். இந்த முடிவை எடுப்பதற்கு தேர்தல் பிரச்சாரம் முடியும் வரை காத்திருந்தது புதிராக இருக்கிறது. 
             இனிமேலாவது தங்களுக்கு பணத்தைக் கொடுத்து ஓட்டுகளை வாங்கி ஆட்சிக்கு வரத்துடிக்கும் திமுக-அதிமுக ஆட்சிகளை தூக்கியெறிய தமிழக மக்கள் தயங்கக்கூடாது. உலகத்தின் பார்வைக்கு தங்களை பிச்சைக்காரர்களாக படம் பிடித்துக்காட்டிய திமுக-அதிமுக கட்சிகளை தமிழக மக்கள் துரத்தியடிக்கவேண்டும். இப்போதாவது தமிழக மக்கள் திமுக அதிமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள...? 

வெள்ளி, 13 மே, 2016

இலாசுப்பேட்டை வாக்காளர்களை ஈர்க்கும் சி.பி.எம் வேட்பாளர்...!


கல்லூரியில் மாணவர்... போராட்டக்களத்தில் ஆசிரியர்...

கட்டுரையாளர் : புதுவை ராம்ஜி 


          மாணவர்களுக்கு எதற்காக அரசியல் என்று அவர்களை ஊறுகாயாக மட்டும் தொட்டுக்கொள்கிற பல அரசியல் கட்சிகளுக்கு மாறாக, புதிய சிந்தனைகள் கொண்ட மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் அரசியலுக்கு அவசியம் வரவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரியில் முதன்முறையாக இந்திய மாணவர் சங்கத்தை சார்ந்த ஒருவரை லாசுப்பேட்டை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. 
         அவர் அ. ஆனந்த், வயது 26, புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்ட மேற்படிப்பு படித்துக்கொண்டிருப்பவர். தமிழ்நாடு - புதுச்சேரி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே இவர்தான் இளம் வேட்பாளர். இவர் சமூக அக்கறையுள்ள மாணவப் போராளி. லாசுப்பேட்டையிலுள்ள நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேனிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே மாணவர்களுக்குரிய இலவச பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகங்களுக்காகப் போராடி அவற்றைப் பெற்றுத் தந்தது இவரது முதல் போராட்டம். சமூக அக்கறையே இல்லாமல் சுற்றித்திரிபவர்களாக சித்தரிக்கப்படும் இன்றைய இளைஞர்களிடையே, பகலில் கல்விக்கான நேரம் போக மற்ற நேரங்களில் இயக்கப்பணிகள், போராட்டங்கள் என்று தன்னை ஒரு சமூக சிந்தனையாளனாக செதுக்கிக்கொண்டவர். இரவிலும் பொறுப்புள்ள மகனாக தன் தந்தையாரின் பெட்டிக்கடையில் அவருக்கு உதவியாக இருப்பவர். இப்படிப் பல வகைகளில் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாய்த் திகழ்பவர். எளிய குடும்பத்தை சேர்ந்தவர். வாடகை வீட்டில்தான் குடியிருப்பு. அப்பா நடத்தும் பெட்டிக்கடையே பிரதான வருவாய். 
         தன்னொத்த சக மாணவர்களுக்காகக் களமிறங்கி, கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைபடுத்தவும், கல்வி நிறுவனங்களின் குளறுபடிகளுக்கு முடிவு கட்டவும், கல்விக் கட்டண உயர்வைத் தடுக்கவும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை நிறுத்தவும், மாணவர்களுக்கு அரசு கொடுக்க மறந்த லேப்டாப்களை வழங்கச் செய்யவும் என எத்தனையோ போராட்டங்களை மாணவர் சங்கத்தின் சார்பில் நடத்திப் பங்கேற்றிருப்பவர், மக்களைத் தாக்கும் விலைவாசி உயர்வுக்கு எதிராக, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு கோரி, தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 50 விழுக்காடு அரசு ஒதுக்கீடு கோரி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ராகிங், பாலியல் சீண்டலுக்கு எதிராக என இன்னும் எத்தனையோ போராட்டப் பங்களிப்புகள். இவரது தலைமையிலான போராட்டத்தின் விளைவாக, கடந்த தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் இருந்த லேப்டாப்களை முதலமைச்சர் ரங்கசாமி மாணவர்களுக்கு கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
           நீதிக்காக நடத்திய பல்வேறு போராட்டங்களுக்காக அரசு அளித்த பரிசாக இவர் மீது பல வழக்குகள். சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் பெரும்புள்ளிகளையும் காவல்துறையைச் சேர்ந்தவர்களையும் கைது செய்யக்கோரி போராட்டங்களை நடத்தியதால் அரசு ஆனந்த் மீது வழக்கு போட்டிருக்கிறது. அரசு பாலியல் குற்றம்புரிந்த காவல்துறையை சேர்ந்தவர்களை மட்டும் ஒப்புக்காக கைது செய்து வெளியே விட்டுவிட்டது. ஆனால் முக்கிய குற்றவாளிகளான அந்த 'பெரும்புள்ளிகள்' மட்டும் இன்றளவும் விட்டுவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் தற்போதைய தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள் என்பது கூடுதல் செய்தி!                    ஆனந்த் வாக்காளர்களை சந்திக்கும் விதமே அலாதியானது. தொகுதி முழுதும் பெரும்பாலும் பள்ளி-கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர் இருக்கும் வீடென்பதால் வாக்காளர்களை அணுகுவதில் சிரமமில்லாமல் உணர்கிறார். பார்க்கும் பெரியவர்கள் அனைவரையும் 'தாத்தா, பாட்டி, ஆன்ட்டி, அங்க்கிள்' என எப்போதும் போல் இயல்பாக அழைத்து வாக்குகளை கேட்கிறார். அவர்களும் தங்கள் வீட்டுப் பிள்ளையாய் வரவேற்று உள்ளே அழைத்துப் பேசுகிறார்கள்.
        ஒரு மாணவர் அரசியலில் ஈடுபட முடியுமா... அதுவும் தேர்தலில் நிற்கமுடியுமா... மாணவர்களுக்கு வாய்ப்புத் தரும் அரசியல் கட்சியும் இருக்கிறதா... இது சாத்தியம் தானா... என்றெல்லாம் பெரியவர்களும், மாணவர்களும், இளைஞர்களும் ஆனந்தை பார்த்து அதிசயித்துப் போகிறார்கள். தினந்தோறும் காலையும் மாலையும் மக்கள் நலக்கூட்டணியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது ஏராளமான பல்கலைக்கழக - கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் ஆனந்தோடு கூட்டமாக வருகிறார்கள். இது போட்டி வேட்பாளர்களுக்கு பயத்தை கிளப்பியுள்ளது. தற்போது அவர்களும் மாணவர்களை 'சம்பளத்திற்கு' அமர்த்தி தங்களோடு அழைத்துவரும் அளவிற்கு நிர்ப்பந்தம் உண்டாகியிருக்கிறது! 
       ஆனந்தின் பிரச்சாரத்தில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், பள்ளியில் அவருக்கு ஆசிரியராக இருந்த ஆர்.ஜெயராமன் மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் தலைமையில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் களத்தில் இறங்கி ஆனந்திற்காக பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதுதான்.

தேர்ந்தெடுக்கப்பட்டால்....


          ஆனந்த் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை பெற்றுத்தரப்படும். தனியார் கல்வி நிறுவனங்களில் நடக்கும் கட்டணக் கொள்ளையை தடுத்திட கல்விக்கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்படும். ''புதுச்சேரி மக்களின் கனவான மாநில பல்கலைக்கழகம் துவங்கவும், தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெற்றுத்தரவும், அரசுத்துறைகளில் சட்டவிரோத பணி நியமனத்தை தடுத்து, வேலைவாய்ப்பகம் மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யவும், லாசுப்பேட்டை அரசு மருத்துவமனை 24 மணிநேரம் செயல்படும் மருத்துவமனையாக மாற்றவும், வீடில்லாத மக்களுக்கு இலவச மனைப்பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்கவும், சட்டமன்றத்தில் போராடுவேன்,'' என்று உண்மை உணர்வோடு உறுதியளிக்கிறார். ஒரு மக்கள் ஊழியனாய் மக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்றும் தன் தொகுதி மக்களுக்கு வாக்குறுதியாக அளித்திருக்கிறார். 
           ஒரு மாணவரால் சட்டமன்ற உறுப்பினராய் செயல்பட முடியுமா என்று கேட்பவர்களுக்கு, 'முடியும் என்பதே மூலதனம்... முடியாது என்பது மூடத்தனம்... இது தான் என் கட்சி எனக்குக் கற்றுத்தந்த பாடம்...' என்று சொல்லிக்கொண்டே பிரச்சாரத்தில் வலம் வருகிறார் ஆனந்த்.

நன்றி : தீக்கதிர் / 13/05/2016