முல்லைப்பெரியாறு அணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முல்லைப்பெரியாறு அணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 டிசம்பர், 2011

முல்லைப் பெரியாறு : உரிமை காப்போம் - சகோதர உறவைக் காப்போம்!

                    
                    
                                                                 
தோழர். ஜி. ராமகிருஷ்ணன்,  
தமிழ்மாநிலச் செயலாளர்,  
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.   
                                                                         


                  முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் பாரம்பரிய உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
                     தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர முடியாது. அணையில் 142 அடி அளவுக்கு தண்ணீர் தேக்க வேண்டும், முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்புப்படையை அனுப்ப வேண்டும், அணையை பலப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பேரவையில் தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை, தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.
                      முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தின் அளவைப் பொறுத்தே தேனி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவை உள்ளது. இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய ஒன்றாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. அணையின் அளவு 136 அடியாக குறைக்கப்பட்டதால் ஏற்கெனவே பாசனப் பரப்பு சுருங்கியுள்ளதோடு, ஒரு பகுதியில் இருபோக சாகுபடி ஒருபோக சாகுபடியாக மாறி யுள்ளது.
               இந்தப் பிரச்சனையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் 5பேர் கொண்ட அதிகாரம் பெற்ற உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் பாசனப் பாதுகாப்பு குறித்து இந்த அதிகாரம் பெற்ற குழு ஆய்வு செய்து வருகிறது. இந்தக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க உள்ளது.
                     முல்லைப் பெரியாறு பிரச்சனை என்பது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனை ஆகும். அணையின் பாதுகாப்பு குறித்து பொறியாளர்கள் மற்றும் நீரியல் துறை நிபுணர்களே துல்லியமான முடிவை கூறமுடியும். உயர் நிலைக்குழு அமைத்துள்ள தொழில் நுட்பக்குழு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறது.
                    நிபுணர்குழுவின் அறிக்கை மற்றும் உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு இரு தரப்பும் காத்திருப்பதே பொருத்தமாக இருக்கும். தமிழகம் மற்றும் கேரளம் தங்களது தரப்பு நியாயத்தை முழுமை யாக உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கேரள சட்டமன்றத்தில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும், புதிய அணை கட்ட வேண்டுமென்றும் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஏற்புடையதல்ல.
                     இந்தப் பின்னணியில், தமிழக -கேரள எல்லையில் இருவாரங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன. கேரளத்திற்கு சென்ற சபரிமலை பக்தர்கள் தாக்கப்பட்டதாகவும், அங்கிருந்து தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. அதே போன்று தமிழகத்தில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு டீக்கடைகள், பேக்கரிகள் தாக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
                      தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகவும் கவலையளிக்கத்தக்க இத்தகைய போராட்டங்களை கைவிட வேண்டும். பொருளாதாரத்தடை, எல்லை முற்றுகை போன்றவைகள் பிரச்சனையை தீர்க்க உதவாது. மாறாக மக்கள் ஒற்று மையை சிதைக்கவே இட்டுச்செல்லும். தமிழகமும் கேரளமும் பாரம்பரியமாக நல்லிணக்கமும் நல்லுறவும் கொண்ட மாநிலங்களாகும், புவியியல் ரீதியாக மட்டுமின்றி பொருளியல் ரீதியாகவும் இரு மாநிலங்களும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. காய்கறி, முட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு செல்கின்றன. ஆழியாறு - பரம்பிக்குளம் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் ஒரு பகுதிக்கு குடிநீர் கிடைக்கிறது.
                     கேரளத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கேரளத்திலும் நீண்ட நெடுங்காலமாக நல்லிணக்கத்தின் அடிப்படையில் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்து வருகின்றனர். பண்பாட்டு ரீதியாகவும், இரு மாநில மக்களுக்கிடையிலும் நெருங்கிய உறவு நீடித்து வருகிறது என்பதை இலக்கியங்களின் வாயிலாகவும், கலைகளின் வாயிலாகவும் அறிந்து கொள்ள முடியும்.
                 இந்தப் பின்னணியில், சகோதர மக்களிடையே மோதல் தூண்டிவிடப்படுவது மிகவும் துரதிருஷ்டவசமாகும். தமிழக - கேரள எல்லையின் இரு பகுதியிலும் பதற் றத்தை ஏற்படுத்தும் சக்திகளுக்கு இடம் தராமலும், ஆத்திரமூட்டும் செயல்களுக்கு இரையாகா மலும், பாரம்பரிய நட்புறவு மற்றும் அண்டை மாநில நல்லுறவை பேணுமாறு இரு மாநில மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
                    கேரளாவில் வேலை நிமித்தம் பணிபுரியும் தமிழ் மக்களுக்கும் சபரிமலை பக்தர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரள அரசு வழங்க வேண்டுமென்றும், தமிழகத்தில் வன்முறைச் சம்பவங்களுக்கு இடமளிக்காமல் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டை தமிழக அரசு செய்திட வேண்டும் என்றும் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
                      மத்திய அரசு இந்த விசயத்தில் வெறும் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, இரு மாநிலங்களிலும் சுமூக நிலையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என்பதையும் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
                  கட்சியின் கேரள மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில், அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் விளைவிப்பவர்களை தடுத்திட இரு மாநிலங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளும், இடதுசாரி ஊழியர்களும் ஜனநாயக சக்திகளும் பணியாற்ற வேண்டும், சபரி மலைக்குச் செல்கிற அடுத்த மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோருக்கு அனைத்துவித பாதுகாப்பு வழங்குவது, அரசு மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும் ஈடுபடவேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சனையில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு விரைந்து கிடைத்திட மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

* தமிழகத்தின் பாரம்பரிய பாசன, குடிநீர் உரிமையை பாதுகாப்போம்.

* தமிழக-கேரள மக்களுக்கு இடையி லான சகோதர உறவை பாதுகாப்போம்.

வெள்ளி, 16 டிசம்பர், 2011

தமிழக உரிமையை பாதுகாப்போம் - இரு மாநில மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம்.....!

தமிழகச்  சட்டப்பேரவையில் 
தோழர். கே. பாலகிருஷ்ணன் பேச்சு
               முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் தண்ணீர் உரிமையை விட்டுத் தரமாட்டோம், இரண்டு மாநில மக்களுடைய பாதுகாப்பு ஒற்றுமையைப் பாதுகாப்போம் என்ற வகையில் பிரச்சனையை அணுக வேண்டும் என சட்டமன்றத்தில் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
                      முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: -
                  முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை 1979ம்ஆண்டு முதல் நீடித்து வருகிறது. குறிப்பாக இந்த அணை பாதுகாப்பற்றது என்று 1979ல் கேரள அரசு பிரச்சனையை எழுப்பியது. அப்போது, மத்திய நீரிவள ஆணையத்தின் ஆலோசனையின் அடிப்படையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அனைத்து வகையான ஆய்வுகளையும் மேற்கொண்டது. இந்த அணை பாதுகாப்பானது என்று உச்சநீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
                   நிபுணர் குழுவின் அறிக்கை மீது கேரள அரசு 34க்கும் மேற்பட்ட பிரச்சனைகளை எழுப்பி, அதற்கெல்லாம் விளக்கம் கேட்டது. அந்த விளக்கங்களுக்கு எல்லாம் அந்த நிபுணர் குழுவில் உள்ள அதிகாரிகள் மிக தெளிவான விளக்கங்களை தந்த பிறகு தான் அதை ஏற்றுக் கொண்டு உச்சநீதிமன்றம் 27.2.2006ல் வரலாற்று தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பை அப்போதே கேரள அரசு ஏற்று அமலாக்கியிருக்க வேண்டும்.
                 அந்த தீர்ப்பை ஏற்காதது மட்டுமல்ல, அந்த தீர்ப்பின் மீது ஒரு மறுசீர் ஆய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது கேரளா அரசு. அதனை விசாரித்த உச்சநீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. அதன் பிறகு அந்த தீர்ப்பை ஏற்பதற்கு மாறாக தான் கேரள “நீர்பாசன பாதுகாப்பு” சட்டத்திருத்தத்தை கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லாதவையாக்கும் வகையில், அந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்றினார்கள்.
                       அன்றைய தினம் அந்த சட்டத்திருத்தம் ஏற்புடைய தல்ல. அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாதவையாக் கும் வகையில் உள்ளதால் ஏற் புடையதல்ல என்று மத்திய அரசு அப்போதோ தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தமிழக அரசு மீண்டும் உச்சநீதி மன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
                     ஆனால் மத்திய அரசுக்கு எப்போதுமே இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட இந்த நதி நீர் தாவா பிரச்சனைகளில் ஆக்கப்பூர்வமான முறையில் தலையிட்டு தீர்வு காணுவதில் அக்கறைகாட்டுவதில்லை. இதனால்தான் அன்றைக்கு நம்முடைய உரிமையை வலுப்படுத்துகிற வகையில் நாம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தொடுத்து, அந்த வழக்கு இப்போது நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கின் விசார ணையில் தான் உச்சநீதிமன்றத்தால் முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அதிகாரம் பெற்ற குழுவை அமைத்தது. இப்போது அந்தக் குழுவின் முன்பு விசாரணையில் உள்ளது.
                   இந்த சூழ்நிலையில், கேரள அரசு இப்போது அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும். புதிய அணையைக் கட்ட வேண்டும் என்ற அடிப்படையில் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியது. அது மட்டுமல்லாமல் கேரளத்தில் போராட்டங்களையும் நடத்துவது ஏற்புடையது அல்ல.
                    எனவே, நாங்கள் இந்த நேரத்தில் வற்புறுத்த விரும்புவது எல்லாம், இன்றைக்கு உச்சநீதிமன்றம் அமைந்துள்ள ஐந்து பேர் கொண்ட அந்தக் குழுவின் விசாரணை யின் அமைப்பில் பல நிபுணர் குழுக்களை எல்லாம் ஆய்வுக்கு அமைத்து, அந்த அணையின் பலம் உள்பட ஆய்வு செய்து வருகிறது. ஏற்கெனவே அந்த அணை பலமாக இருக்கிறது என்ற தீர்ப்பு வந்திருக்கிற சூழ்நிலையில், மீண்டும் எள்ளளவும் சந்தேகமற்ற முறையில் அந்த அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அந்த அதிகாரம் பெற்ற நிபுணர்குழு, வருகிற பிப்ரவரி மாதம் தன்னுடைய இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க இருப்பதாக தெரிகிறது. அதன்மீது உச்ச நீதிமன்றம் உடனடியாக விரைந்து தீர்ப்பை வழங்கி, இந்த பிரச்சனையில் ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
                      இந்தச் சூழ்நிலையில், கேரளாவில் ஒரு தேவையற்ற உண்மைக்கு புறம்பாக, முல்லைப்பெரியாறுஅணை பாதுகாப்பற்றது, அது உடையப்போகிறது என்கிற முறையில் அச்சத்தைக் கிளப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மேலும், கிராபிக்ஸில் தயாரிக்கப் பட்டு மக்களை குழப்புகிறார்கள். இதற்கிடையில், டேம்999 என்ற திரைப்படம் மேலும் இந்தப் பிரச்சனையில் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போன்று அமைக்கப்பட்டு, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.
                    எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதையெல்லாம் பயன்படுத்தி ஒரு அமைதியற்ற நிலைமை அங்கேயும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கேயும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, முதல்வர் கூறியுள்ளதை போன்று அந்த அணை இன்றைக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய தொழில் பாதுகாப்பு குழு பரா மரிப்பில் அணையை ஒப் படைக்க வேண்டும் என்று நாங்களும் வற்புறுத்து கிறோம்.
                   ஆனால், அப்படி மத்திய தொழில் பாதுகாப்புக்குழு அனுப்ப வேண்டும் என்று சொன்னால் கேரளாவும் ஏற்றுக்கொண்டால்தான் அதை அனுப்பமுடியும் என்று பிரதமர் தெரிவித்ததாக வந்திருக்கிற செய்தி எந்த அளவிற்கு உண்மையோ, இல் லையோ நமக்குத்தெரியாது. ஆனால், அது உண்மையாக இருக்கும் என்று சொன்னால் அது ஏற்புடையது அல்ல. கேரளாவும் ஏற்றுக்கொண்டால்தான் அங்கே தொழில் பாதுகாப்புக்குழு அமைக்க முடியும் என்று சொன்னால், கேரளா ஏற்றுக்கொண்டால் பிரச்சனையே இருக்காது. எனவே, அந்த அணை பாது காப்பிற்கு மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படையை அனுப்பவேண்டும் . இது நாள் வரைக்கும் இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் ஒரு ஆத்திரமூட்டலுக்கு இரையாகாமல், நிதானமான முறையில் அணுகிவருவதை வர வேற்கிறோம். இது நிச்சய மாக அரசியல் பிரச்சனை அல்ல. இதை அரசியல் பிரச் சனையாக்கி ஆதாயம் தேடு கிற முறையில் சிலர் ஈடுபடு வதை நான் கவலையோடு இங்கு சுட்டிக் காட்ட விரும் புகிறேன்.

எல்லை மாவட்டமாக இருக்கிற தேனியில் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கேரளத்திலேயும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. நீண்ட நெடுங்காலமாக சகோதர பாசத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிற கேரளா, தமிழக மக்கள் மத்தியில் ஒரு பதற்றத்தை உருவாக்கி, மோதலை உருவாக்கி ஆதாயம் தேடுவதற்கான எந்தவிதமான முயற்சிக்கும் யாரும் இட மளித்துவிடக்கூடாது. இன் னும் சொல்லப்போனால், ஒரு சுமுகமான சூழ்நிலை, அமைதியான சூழ்நிலை ஏற்படுகிற பொழுதுதான் இப்படிப் பட்ட எல்லை, நதிநீர் தாவா பிரச்சனைகள், இரண்டு மாநி லப் பிரச்சனைகளில் நல்ல தீர்வை எட்டமுடியும்.
                     எனவே, இந்தச் சூழ் நிலையில் இன்றைக்கு நாங்கள் விரும்புவது எல்லாம் மத்திய அரசு அதில் அலட்சியமாக இருக்காமல் அவசர மாக தலையிட வேண்டும். உண்மையில் உச்சநீதிமன்ற விசாரணையில் அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச் சனைகள் இருக்கிறபோது, அவை சம்பந்தமாக மத்திய அரசு பேசி எந்த நியாயமான தீர்வும் எட்டமுடியாது. ஆனால், அந்தப் பிரச்சனைகளைத் தவிர்த்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையில் நாம் காத்திருப்போம். அதே நேரத்தில் இரண்டு மாநிலங்களிடையேயும் ஏற்பட்டிருக்கிற பதற்றத்தால் அசம்பாவிதங் கள் ஏற்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.
                                  சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய இரண்டு மாநிலத்திலும் உள்ள தமிழர்கள், மலையாள மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பும், கடமை யும் அனைவருக்கும் உள்ளது. எனவே, மத்திய அரசு இரண்டு மாநிலத்திலேயும் உள்ள மலையாளிகள், தமிழ் மக்களுக்கும் ஆபத்து இல்லாமல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தற்போது நிலவும் பதற்றத்தை போக்கி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க இரண்டு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய அரசு பேசவேண்டும்.
                        அத்தகைய பேச்சுவார்த்தையில் தமிழக அரசு கலந்து கொண்டு இரண்டு மாநிலங் களிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டும். இந்த முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சணையில் எந்தச் சூழ் நிலையிலும் தமிழகத்தின் தண்ணீர் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். இரண்டு மாநில மக்களுடைய பாதுகாப்பு, ஒற்றுமையைப் பாதுகாப்போம் என்ற வகை யில் பிரச்சனையை அணுகுவது அனைவருக்கும் பொருத்தமானவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு கே.பாலகிருஷ் ணன் பேசினார்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஊரு ரெண்டுபட்டா ஊடகங்களுக்கு தான் கொண்டாட்டம்...!

                     ''ஈரைப்  பேன் ஆக்கி... பேனை  பெருமாள் ஆக்கிறதுன்னு''  ஒரு பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வேலையை இன்றைக்கு ஊடகங்கள் ரொம்பப் பிரமாதமா செய்யறாங்க
               இன்றைக்கு முல்லைப்பெரியாறு அணை  சம்பந்தமான பிரச்சனை என்பது தமிழகத்திலும் கேரளாவிலும் பற்றி எரிகிற பிரச்சனையாக இருக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களின் எல்லைப்பகுதிகளிலும் பதற்றமாக இருக்கிறது. இவ்விரண்டு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் மோதிக்கொள்கிறார்கள். உணர்வுப்பூர்வமாக எழுந்துள்ள இந்த பதற்றங்களை தணிப்பதற்கு எந்தவிதமான   முயற்சிகளையும்  செய்யாமால், அந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும்  வேலையை   தான் இன்றைக்கு ஊடகங்கள் செய்துவருகின்றன.
              பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தனியார் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்ததிலிருந்து மக்களின் உணர்ச்சிகளையும், வேதனைகளையும் காசாக்கி அதில் இலாபம் கொழிக்கும் வெறியோடு தான் ஊடகங்கள் அலைகின்றன. 
                 அப்படித் தான் ஒரு முறை ''அப்போதைய முன்னாள் முதல்வர்'' செல்வி ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது அவரது ''ரத்தத்தின் ரத்தங்கள்''  சேலம் அருகில் கல்லூரி மாணவிகள் வந்த பேருந்தினை மாணவிகளோடு கொளுத்தினர். அதில் நான்கு மாணவிகள் பரிதாபமாக இறந்துபோனார்கள் என்பதை நீங்கள் மறந்திருப்பீர்கள். அந்த பஸ் எரியும் போது அருகில் இருந்த சன் தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள், எரியும் அந்த பஸ்ஸில் மாணவிகளும் சேர்ந்து  எரிகிறார்களே என்று பதட்டப்பட்டு அவர்களை காப்பாற்ற முயற்சி செய்யாமல், அந்த பஸ்சும் மாணவிகளும் எரிவதை நிதானமாக படம் எடுத்து அதை சன் தொலைக்காட்சியில் திரும்பத்திரும்பக் காட்டி காசாக்கினார்கள்.
               ஊடகங்கள் இன்று மனசாட்சியே இல்லாமல் இலாப நோக்கத்தோடு நடந்துகொள்வது என்பது வருத்தமளிக்கும் விஷயமாகும். ''BREAKING NEWS'', ''சற்று முன்'' என உணர்ச்சிமிக்க செய்திகளை தொடர்ந்து தொலைக்காட்சிகளில் காட்டிக்காட்டி கோடிக் கோடியாய்  சம்பாதித்து  விடுகின்றனர்.
               இது போன்ற சூடான செய்திகளை - உணர்ச்சிமிக்க செய்திகளை தொலைக்காட்சிகள் மட்டும் காசாக்குவதில்லை. பல தினப்பத்திரிக்கைகளும், வாரப்பத்திரிக்கைகளும்  கூட இப்படித் தான் பரப்பரப்பாக செய்திகளை போட்டு பத்திரிக்கையின் விற்பனையை கூட்டிவிடுகின்றனர்.      
             கொலை, கொள்ளை, திரைப்பட கலைஞர்களின் கிசுகிசு, அரசியல்வாதிகளின் அந்தரங்கம்,   சாமியார்களின் பாலியல் இவைகளெல்லாம் ஊடகங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் ரொம்ப சுவாரசியமாக பத்திரிகைகளில் பல மாதங்களுக்கு எழுதி தள்ளிவிடுவார்கள். தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பிக்கொண்டே இருப்பார்கள். இவைகளினால் இவர்களுக்கு கோடிக் கோடியாய் கொட்டிக்கொண்டே இருக்கும்.
             ஆனால் இவர்கள் ஒரு தொழிற்சங்கமோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளோ நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக, உழைப்பாளி மக்களுக்காக நடத்தும் இயக்கங்களையோ அல்லது போராட்டங்களையோ ஒரு சிறு துளி  கூட  தொலைக்காட்சிகளில் காட்ட மாட்டார்கள். பத்திரிகைகளில் அச்சிட மாட்டார்கள். இதை கூசாமலும் அச்சப்படாமலும் இன்றைய ஊடகங்கள் செய்கின்றன. இவர்களாகவே கூட மக்கள் பிரச்சனைகளையோ  - சமூக அவலங்களையோ   படம்பிடித்துக்காட்டவார்களா என்றால் -  பிரசுரிப்பார்களா என்றால் அதை செய்யமாட்டார்கள். ஏனென்றால் அதில் அவர்கள் எதிர்ப்பார்ப்பது போல் வருமானமோ இலாபமோ வராது என்பது தான் காரணம்.
இதில் இலாபம் கிடைக்கின்றது என்றால் மகாராஷ்டிரா மாநிலத்திலும், ஆந்திர மாநிலத்திலும் தினம் தினம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு சாகிறார்களே. அதை காட்டியிருப்பார்கள்.
              இப்படித்தான் இன்றைக்கு இலாபவெறி பிடித்து ஊடகங்கள் முல்லைப்பெரியாறு பிரச்சனைகளை ஊதி பெரிதாக்கி அதில் இலாபம் சம்பாதிக்க, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு  ஊடகங்களின் கண்களும், பார்வைகளும் தமிழக - கேரள  எல்லைப்பகுதி சூடான - பரப்பரப்பான செய்திகளுக்காக  உறங்காமல்  காத்துக்கொண்டிருக்கின்றன. இப்போதும் இந்த இரு மாநிலங்களின் இரண்டு எல்லைப்பகுதிகளிலும் இந்த ஊடகங்களின் காமிராக்கள் இரவும் பகலும் ''ஏதாவது நடக்காதா'' என்று நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு  கால் கடுக்க நின்றுகொண்டிருக்கின்றன.
              உலகமயம் - தாராளமயம் - தனியார்மயம் - இவைகளுக்கு வருமானம் - இலாபம் குவிப்பு - சொத்து சேர்ப்பு - இவைகள்   மட்டுமே தெரியும். மனிதநேயம் - ஒற்றுமை - ஒருமைப்பாடு - இவைகளைப் பற்றி அறியாது. அதைப்பற்றி கவலையும் படாது.