பெட்ரோல் விலை உயர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெட்ரோல் விலை உயர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 மே, 2012

பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு - மத்திய மாநில அரசுகளின் வக்கிரபுத்தி...!

             கடந்த ஒரு வாரமாகவே புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் பெட்ரோல் - டீசல்
தட்டுப்பாடு என்பது மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த வாரம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதியோடு பெட்ரோலின் விலையை லிட்டருக்கு  7ரூபாய் 50 காசு உயர்த்தியது. இந்த விலையேற்றம் என்பது முன்னெப்போதும் செய்யாத அளவிற்கு உயர்த்தப்பட்டிருப்பதால், மக்கள் மத்தியில்  மத்திய அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தை உண்டுபண்ணியது. மக்கள் ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்திக்கு உள்ளாகினர் என்பது
கண்கூடாக பார்த்த உண்மை. பெட்ரோல் விலையேற்றத்தை கண்டித்து தலைமை அறிவிப்பதற்கு முன்பே பல அரசியல் கட்சிகள் நாடு முழுவதும் ஆங்காங்கே கூட்டாகவும், தனித்தனியாகவும் போராட்டங்களை நடத்தினர் என்பதும் நாம் கண்ட உண்மை.
             மக்களின் அதிருப்தியையும், கோபத்தையும் புரிந்து கொண்ட மத்திய - மாநில அரசுகள் ஒரு தந்திரத்தை பயன்படுத்தினர். அது தான் இருக்கோடுகள் தத்துவம். போடப்பட்ட ஒரு கோட்டை சிறியதாக்க வேண்டுமென்றால், அதன் பக்கத்தில் அதைவிட  பெரியக் கோட்டை போட்டால், முதலில் போட்ட கோடு என்பது சிறியதாகிவிடும். அது போல் தான்  இந்திய மக்கள் பெட்ரோல் விலை உயர்வினால் பெரும் அல்லல்களுக்கும், துயரங்களுக்கும், கஷ்டங்களுக்கும் உள்ளாகி அவதியுறும் போது, அவர்களுக்கு  அதை விட பெரிய கஷ்டத்தை கொடுத்து அவதிப்பட செய்தால் முதலில் கொடுத்த கஷ்டம் சிறியதாகிவிடும் என்கிற வக்கிரபுத்தியோடு தான் மத்திய - மாநில அரசுகள் சேர்ந்து செயற்கையாகவே பெட்ரோல் - டீசல்    தட்டுப்பாட்டை உருவாக்கி வேடிக்கைப் பார்க்கிறார்கள் என்பதும் விலை அதிகமாக கொடுத்தாலும் பரவாயில்லை. எனக்கு பெட்ரோல் கிடைத்தால் போதும் என்கிற நிலைமைக்கு    மக்கள்  தள்ளப்பட்டிருக்கிறார்கள்   என்பதும் தான் உண்மை.
              மத்திய - மாநில அரசுகளின் இந்த செயல்  பொறுப்பற்றத் தன்மையையும், வக்கிரபுத்தியையும்  தான் காட்டுகிறது. ஆட்சியாளர்களின் இந்த செயல் என்பது அந்தக் கால சினிமா வில்லன்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள். ஒரு பெண்ணின் குழந்தையை கையில் பிடித்துக்கொண்டு, நான் சொல்வது போல் உன்னை எனக்கு விருந்தாக்கவில்லை என்றால் உன் குழந்தையை சாகடித்து விடுவேன் என்று சொல்லி மிரட்டியே அந்த பெண்ணை அனுபவிக்கும் சினிமா வில்லன்களின் வக்கிரபுத்தி தான் நம் நினைவுக்கு வருகிறது. இந்த செயலுக்கும் ஆட்சியாளர்களின் இன்றைய செயல்களுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

மின்கட்டண உயர்வு.... பெட்ரோல் விலை உயர்வு... தலை சுத்துதடா சாமீமீமீமீ....

        தமிழ்நாட்டுல எல்லார் விட்டிலேயும் மக்கள் குறிப்பாக படிக்கிற பிள்ளைங்க இருக்கிற வீட்டுல... இப்ப என்ன ஓடிகிட்டு இருக்கு தெரியுமா...? ''குழந்தைகளுக்கு பரீட்சை முடியப்போவுது... லீவு விட்டு ஸ்கூல் திறந்தாங்கன்னா... குழந்தைகள்லாம் அடுத்த கிளாசுக்கு போய்டுவாங்க... புத்தகம் வாங்கணும்... நோட்டு வாங்கணும்... ஸ்கூல் பீஸ் எல்லாம் ஏத்திடுவாங்க... இதை எல்லாம் எப்படி சமாளிக்கிறது... எங்க கடன் வாங்கறது''.  இப்படித்தான் ஒவ்வொரு வீட்டிலேயும் பெற்றோர்கள் மத்தியில ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போதே அச்சமும், குழப்பமும் கலந்த பேச்சுக்கள் தான் எல்லார் வீட்டிலேயும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. 
                இந்த சூழ்நிலையில் மக்களின் தோளில் சுமந்துள்ள சுமையை எப்படி இறக்கி வைப்பது என்று தான் உண்மையான ''மக்கள் அரசு'' யோசிக்கும்... யோசிக்கவும் வேண்டும். ஆனால், மாநிலத்திலும், மத்தியிலும் ஆளுகின்ற அரசுகள் வேறாக யோசிக்கின்றன. சுமைகளை தூக்கியே கேள்விக்குறி போல் வளைந்து விட்ட மக்களின் முதுகில் இந்த அரசுகள் மனிதாபிமானமே இல்லாமல், மேலும் பளுவினை இந்த மக்கள் முதுகிலேயே தூக்கிவைக்கின்றன.
              மக்களுடைய பெருவாரியான நம்பிக்கைகளை பெற்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, வாக்களித்த மக்களுக்கு வாயார நன்றியை சொல்லிட்டு, அவர்கள் வயிறார பால் விலையையும், மனசார பேருந்து கட்டணத்தையும் உயர்த்தி   மக்களுக்கு பேரிடியைக் கொடுத்தார்.
              இதற்கிடையில், மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அவ்வப்போது பெட்ரோல் -  டீசல் விலையை தான்தோன்றித்தனமாக ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
                ஒரு பக்கம் மக்களுக்கு வருமானம் என்பது உயராமல் அப்படியே இருந்துகொண்டே இருக்கிறது. மக்களின் வருமானத்தை உயர்த்துவதில் மத்திய - மாநில அரசுகள் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. மாறாக,  மக்களிடம் சேமிப்பே இல்லாமல் அவர்கள் கையில் இருக்கும் பணத்தை பிடுங்கி அவர்களை எப்படி ஒட்டாண்டியாக்குவது என்பதைத் தான் யோசனை செய்கிறார்கள். மக்கள் போட்டிருக்கும் துணியையும் உருவிக்கொள்ளும் வேலையைத்தான் இந்த அரசுகள் செய்து வருகின்றன. 
                    இந்த சூழ்நிலையில் தான் தமிழக அரசு மக்கள் மீது தொடர்ந்து மின்சார தாக்குதல்களை நடத்தி வருகின்றது. மின்சாரமே இல்லாமல் தமிழகத்தை ''இருண்ட மாநிலமாக'' முன்மொழிந்த கருணாநிதியின்  ஆட்சியை அடுத்து, மின்வெட்டின் நேரத்தை அதிகமாக்கி அதை வழிமொழிந்து கொண்டிருக்கும்  ஜெயலலிதாவின் ஆட்சி நேற்று மேலும் ஒரு மின்சாரத் தாக்குதலை நடத்தியது. கண்மூடித்தனமாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் மீது பெரும் சுமையை முதலமைச்சர் ஜெயலலிதா போட்டிருப்பது என்பது நியாயமற்றது. கண்டிக்கத்தக்கது. இந்த உயர்வை   மக்கள்   எப்படி சமாளிப்பார்கள் என்ற குறைந்தபட்ச அறிவு கூட ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது நம்முடைய துரதஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
             இந்த உயர்வுகளெல்லாம் ஒன்று சேர்ந்து வரும் ஜூன் மாதத்தில் தான் மக்களின் கழுத்தை பிடித்து இருக்கப்போகிறது என்பது தான் உண்மை. ஆட்சியாளர்களுக்கு திசைத் திருப்ப வழிகளா தெரியாது. அப்போது சசிகலா மீண்டுமொரு முறை வெளியேற்றப்படுவார் என்பதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.               

சனி, 5 நவம்பர், 2011

இப்படி சொல்வதற்கு ''மண்ணு'' மோகன் சிங்குக்கு என்ன துணிச்சல்..?

                 நேற்று முன் தின இரவு பெட்ரோலின் விலையை  ரூ. 1.82 பெட்ரோல் நிறுவனங்கள் தன்னிச்சையாக உயர்த்தியிருக்கின்றன.  கடந்த இரண்டு மாதங்களில் இது இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த 2009  - ஆம் ஆண்டு  ஆட்சிக்கு வந்ததிலிருந்து - கடந்த இரண்டு ஆண்டுகளில் இருபத்து மூன்றாவது   முறையாக  இது போல் பெட்ரோலின் விலையை உயர்த்தியிருக்கிறது  என்பதை நினைக்கும் போது வயிறே எரிகிறது.
                   இதில் பெட்ரோல் விலையை உயர்த்திய அதே நாளில் இந்திய உணவு பணவீக்கம் என்பது 12.21 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது எரியும் வயிற்றில் மேலும் பெட்ரோலை ஊற்றியது போல் இருக்கிறது.
               இந்த விலை உயர்வு என்பது நாட்டின் பிரதமர் நாட்டில் இல்லாத போது தான் நடைபெறுகிறது. நம்ப பிரதமரு மண்ணு மோகன்  சிங்கு அவரு பாட்டுக்கு பிரான்ஸ் நாட்டுக்கு போயிட்டாரு.. அங்க கேன்ஸ் நகரத்துல   வளர்ந்த பணக்கார நாடுகளும், வளரும் நாடுகளும் சேர்ந்து ஜி 20 உச்சி மாநாடு நடக்குது. அங்க பேச போயிட்டாரு. இந்த மாநாட்டுல தான் வளர்ந்த பணக்கார நாடுகளெல்லாம் வளரும் நாடுகளை மேலும் வளராம எப்படி சுரண்டுவதுன்னு எல்லாருமா கூடி விவாதிப்பாங்க. அங்க தான் நம்ப நாட்டு ''பொருளாதார மேதை'' பேசுவாருங்க.. இந்த மேதை நம்ப நாட்டு மக்களோட மட்டும் பேசவே மாட்டாருன்னா பாத்துக்குங்களேன்.
              அப்படிப்பட்ட இந்த ''பொருளாதார மேதை'' தான் அந்த மாநாடு நடக்கும் கேன்ஸ் நகரத்துல பத்திரிக்கையாளர்கள் கூட்டத்துல ''இந்த பெட்ரோல் விலை உயர்வு சரியானது தான் என்றும், பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்கியதும் சரியே'' என்று சொன்னது மட்டுமில்லைங்க  பெட்ரோலைப் போலவே  மற்ற எரிபொருள்களுக்கும் தற்போதுள்ள விலை நிர்ணயக் கட்டுப்பாட்டைத் தளர்த்த திட்டமிட்டுள்ளதாக என்று சொல்லியிருப்பது என்பது நாம் இப்போது தான் இந்தியாவில் இல்லையே என்கிற தைரியமா..? அல்லது அப்படி செய்தால் மட்டும் இந்த மக்கள் என்ன செய்துடப் போறாங்க என்கிற  துணிச்சலா..?
இப்படி எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு சும்மா நடப்பதற்கு ஒரு அரசாங்கம் எதற்கு..? எந்த வேலையும் இல்லாமல் ஒரு பிரதமர் எதற்கு..?                   எகிப்திலும், லிபியாவிலும் தங்களுக்கு எதிரான அநியாயங்களை கண்டு கொதித்து மக்கள் எழுகிறார்கள். அந்த மக்களின் எழுச்சியைக் கண்டு பயந்து ஆட்சியாளர்கள் ஓடி ஒளிகிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் இந்திய மண்ணில் ஒரு எழுச்சியோ புண்ணாக்கோ வராது என்பதை மண்ணுமோகன் சிங்கு தெரிந்துவைத்திருக்கிறார். அதனால் தான் இவ்வளவு தைரியமாக பேசுகிறார். அப்படி தைரியமாக பேசிவிட்டு இந்தியாவிற்கும் துணிச்சலாக வருகிறார்.   இந்திய மக்களே அப்படியெல்லாம் எழுந்துவிடாதீர்கள்.. விழித்துவிடாதீர்கள்...!!!!