நோக்கியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோக்கியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 நவம்பர், 2014

நடுரோட்டுக்கு வந்த நோக்கியா தொழிலாளர்கள் - இது தான் ஆரம்பம்...!

             சென்னைக்கு அருகில் இயங்கிவந்த ''நோக்கியா'' செல்லிடபேசி பன்னாட்டு தொழிற்சாலை நேற்று நவம்பர் 1 முதல் மூடப்பட்டு,  இன்று அதில் வேலை செய்த தொழிலாளர்களும், ஊழியர்களும் நடுத்தெருவில் நிற்கிறார்கள். இதற்கு யார் காரணம்....? மத்திய - மாநில அரசுகள் தான் காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இதற்கு பேர் தான் ''மேக் இன் இந்தியா'' என்று பிரதமர் நரேந்திரமோடி சொல்கிறார். பன்னாட்டு முதலாளிகளே... உங்கள் நாட்டில் உங்கள் நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்து அவர்கள் உழைப்பை சுரண்டி கொள்ளையடித்து, பின் அவர்களை அம்போவென்று நடுத்தெருவில்  விட்டது போதும். இனி எங்கள் நாட்டிலும் அதை செய்யுங்கள். இதை தான் நம்ம மவராசன் மோடி மேக் இன் இந்தியா... மேக் இன் இந்தியான்னு கூவிகிட்டே இருக்கிறாரு.
                 எங்கள் நாட்டில் உங்கள் தொழிற்சாலைகளை  தொடங்குவதற்கு நாங்கள் இலவசமாய் இடத்தை கொடுக்கிறோம். தொழிற்சாலைகள் இயங்குவதற்கு நாங்கள் இலவசமாய் மின்சாரம் 24 மணிநேரமும் தருகிறோம். ஆற்று நீரை திருப்பிவிட்டு தண்ணீர் தருகிறோம். எங்க மக்களுக்கு இல்லேன்னாலும் பரவாயில்லை. நீங்க  தாராளமாய் எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்க சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்.
                   நீங்க உற்பத்தி செய்யற பொருட்களின் விற்பனை மூலமா கோடிக்கணக்கில உங்களுக்கு வருமானம் வரும். அதற்கெல்லாம் வருமான வரி, சேவை வரி, வணிக வரி எதையும் கட்டிபுடாதீங்க. ஆமா சொல்லிபுட்டேன். உங்க சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்.
            அப்புறம் நீங்க யாரை வேண்டுமென்றாலும் வேலைக்கு வெச்சிக்குங்க. மணிக்கணக்கா வேலை வாங்கிக்குங்க. வேலைக்கு தகுந்தமாதிரி சம்பளம் கொடுக்கணும்னு ஒன்னும் அவசியம் இல்லை. உங்க விருப்பத்துக்கு சும்மா கொஞ்சூண்டு சம்பளம் கொடுத்தா போதும். இந்த பொம்பள புள்ளைங்கள வேலைக்கு வெச்சீங்கன்னா பிரச்சனையே இருக்காது. மணிக்கணக்கா வேலைய  வாங்கிகிட்டு தும்மாதூண்டு காசு கொடுத்தாக்கூட போதும். வாயை மூடிகிட்டு சந்தோஷமா வாங்கிப்பாங்க. இயந்திரங்களை இயக்குறது, சுமை தூக்குறது, இரும்பை தூக்கி அடிக்கிறது - இதுமாதிரியான ஆம்பளைங்க செய்யற கடுமையான வேலைங்க எல்லாத்தையும் இனி மேல பொம்பள புள்ளைங்ககிட்டேயே கொடுத்துடுங்க. பாவம், பரிதாபமெல்லாம் பாக்காதீங்க.
உங்களுக்காகவே நான் தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தையே ஒழிச்சிக்கட்டிட்டேன். நீங்க கவலைப்படாதீங்க. இடஒதுக்கீட்டை கூட சுத்தமா ஒழிச்சிக்கட்டிட்டேன். ஏன்னா... உங்க சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்.
              இப்படியாக நீங்க கொஞ்சமான பணத்தை எங்க நாட்டுல போட்டு தொழிலை நடத்தி, அப்பாவி தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி, இலாபம் சம்பாதித்து, பணத்தெல்லாம் சுருட்டிக்கின்னு, உழைச்ச தொழிலாளர்களை நடுத்தெருவுல விட்டுட்டு நீங்க ஓடிப்போயிடலாம். நாங்க உங்கள ஒண்ணுமே கேக்கமாட்டோம். ஏன்னா... உங்க சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்.
             இதை தான் ''மேக் இன் இந்தியான்னு'' மோடி சொல்றாரு. அதனுடைய ஆரம்பம் தான் இந்த ''நோக்கியா'' - மேக் இன் இந்தியா... போவுது பார் நோக்கியா....!

சனி, 1 நவம்பர், 2014

தொழிலாளர்களைக் கைவிட்டது நோக்கியாவா... இந்தியாவா...?


கட்டுரையாளர் : எஸ். கண்ணன்   
                   மாநிலக்குழு உறுப்பினர்,        
                   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி             

 உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் தன் மக்களை இப்படியா கைவிடுவது?            

        நோக்கியன் விர்டா என்ற நதி, பின்லாந்து மக்களின் பேச்சு வழக்கில் நோக்கியா எனச் சுருங்கிவிட்டது. அந்த நதியின் கரையில் 1868-ம் ஆண்டு அமைந்த காகிதக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, ஐடெஸ்டெம் என்கிற உரிமையாளர் நோக்கியா எனப் பெயரிட்டுள்ளார். அடுத்தடுத்து வளர்ந்த நோக்கியா நிறுவனம், 1980-களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட செல்பேசிக்கும் அந்தப் பெயரையே சூட்டி, செல்பேசி உலகில் ஏக சக்ரவர்த்தியாக வளர்ச்சியும் பெற்றது. உலகில் 10 தொழிற்சாலைகள் மூலம் செய்யப்படும் உற்பத்தியைக் கொண்டு, சந்தையில் பெரும் பகுதியைத் தன் கையில் வைத்திருந்த நிறுவனம்தான் நோக்கியா.
         2010-ல் இந்திய செல்பேசிச் சந்தையில் 50% தக்கவைத்திருந்த நோக்கியா நிறுவனம், 2014-ன் ஆரம்பத்தில் 21% ஆகக் குறைந்தது. தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் தனது பங்குகளை ஒப்படைத்துவிட்டு, இந்திய நிறுவனத்தை மட்டும் விற்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. நவம்பர் 1 முதல் உற்பத்தி நிறுத்தம்குறித்த அறிவிப்பும், அது ஏற்படுத்தியுள்ள மற்றும் ஏற்படுத்தப்போகும் வேலை இழப்பும், இளம் தொழிலாளர் மத்தியில் பெரும் பதற்றத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் மீதான கேள்விகளையும் உருவாக்கியுள்ளது.

 விற்பது - இணைப்பது புதிதல்ல                    

       நோக்கியாவைப் பொறுத்த அளவில் தனது நிறுவனத்தை வேறொரு நிறுவனத்துடன் இணைப்பது புதிதல்ல. ஏற்கெனவே, செல்பேசித் தயாரிப்புக்குள் வருவதற்கு முன், ஃபின்னிஷ் ரப்பர் ஒர்க்ஸ் மற்றும் ஃபின்னிஷ் கேபிள் ஒர்க்ஸ் ஆகிய இரண்டு நிறு வனங்களுடன் இணைந்த வரலாறு 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இருந்திருக்கிறது. காகிதம், ரப்பர், கேபிள், மின்சாரம், மின்னணுச் சாதனங்கள் என ஐந்து தொழில்களில் ஈடுபட்டுவந்த நோக்கியா, பல்வேறு இணைப்புகளையும் விற்பனைகளையும் சந்தித்துதான் வளர்ந்திருக்கிறது. செல்பேசி தயாரிப்புக்குப் பின்னரே, குறிப்பாக 1994-க்குப் பின், உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக நோக்கியா மாறியது.
        ஜி.எஸ்.எம். என்ற இரண்டாம் தலைமுறை செல்பேசிக்கான ஒழுங்குமுறையையும், சி.டி.எம்.ஏ. என்ற மூன்றாம் தலைமுறை ஒழுங்குமுறையையும் மிக சாமர்த்தியமாகக் கையாண்டு, சந்தையில் தங்கள் செல்பேசி விற்பனையை மேம்படுத்திக்கொண்ட அனுபவம், மற்ற செல்பேசி நிறுவனங்களைவிடவும், நோக்கியாவுக்குத்தான் அதிகம். சி.டி.எம்.ஏ. ஒழுங்கு முறை என்ற 3ஜி, இந்தியாவில் அறிமுகம் செய்யப் படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அமெரிக் காவிலும் ஐரோப்பாவிலும் நோக்கியா அறிமுகப்படுத்தி, தனது செல்வாக்கை நிலைநாட்டியிருந்தது.
        ஒரு செல்பேசியைத் தயாரிப்பதற்கு, 300-க்கும் மேற்பட்ட உதிரி பாகங்கள் தேவை. இவை சரியான நேரத்தில் கிடைப்பதும், அதற்கான உற்பத்தித் திறன் கொண்ட நிறுவனங்களுடன் உடன்பாடு கொண்டு செயல்படுவதும் தவறில்லை என்று நோக்கியா தலைமை முடிவெடுத்து, வேலைகளைப் பிரித்தது. இதன் காரணமாகவே இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஃபாக்ஸ்கான், சால்காம்ப், லைட் ஆன் மொபைல் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. பி.ஒய்.டி, ஃபிலெக்ஸ்ட்ரானிக்ஸ், ஆர்.ஆர்.டோனல்லி ஆகியவை அருகில் உள்ள சிப்காட்டில் செயல்பட்டுவருகின்றன.
       நோக்கியா பல உதிரி பாகங்களை வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்து, பிரதான வடிவமைப்பைத் தன் கைவசம் வைத்துக்கொண்டு, பாகங்களை ஒன்று சேர்க்கும் வேலையில் தீவிரமாகக் கவனம் செலுத் தியது. நோக்கியாவின் சந்தை விரிவாக்கம் பரந்ததாக இருந்த நிலையில், தனது தயாரிப்புப் பெயரைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவும், சிக்கனத்தைக் கையாளவும், மேற்குறிப்பிட்ட உற்பத்தி முறையில் தீவிரமாகச் செயல்பட்டது. இது மிகப் பெரிய பலனையும் நோக்கியாவுக்கு அளித்தது.

 இந்தியாவில் முதலீடும் வருவாயும்          

          செல்பேசி விற்பனையில், இந்தியச் சந்தையைக் கைப்பற்ற எடுத்த முயற்சியிலும் வெற்றி பெற்றது. இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கும் முன்னரே இந்தியச் சந்தையில் நோக்கியா செல்பேசிகள் விற் பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கிய 2006-ல் மட்டும் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
            கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு நோக்கியா செல்பேசிகள் ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் நோக்கியா நிறுவனம் 2005, ஏப்ரல் மாதம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தொடக்கத்தில் ரூ. 675 கோடியும், பின்னர் அடுத்த கட்டத்தில், சில நூறு கோடி ரூபாயும் முதலீடு செய்யப்படும் என்று உறுதிப்படுத்தியது. தமிழ்நாடு அரசு தொழில்துறை அரசாணை எண்-59 இந்த விவரத்தை அளித்திருக்கிறது. இதற்காக சிப்காட் மூலம், ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரையில், 200 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம்செய்து, ஏக்கர் ஒன்றுக்கு 4.5 லட்சம் ரூபாய்க்கு 99 வருடக் குத்தகைக்குக் கொடுக்கப்படும், பத்திரப் பதிவுக் கட்டணம் 0% என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கிறது என அரசாணை தெரிவிக்கிறது. இதற்கு மேல், வணிக வரி, விற்பனை வரி ஆகியவற்றை 10 ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டியதில்லை. வேலை ஒப்பந்த வரி, குத்தகை வரி, நுழைவு வரி ஆகியவற்றிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இத்தனை சலுகைகளும், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவே என அரசுகள் அன்றைக்கு அறிவிப்பு செய்தன.
          மென்பொருள் இறக்குமதி, அதற்காகப் பணத்தைத் திருப்பிச் செலுத்தியது போன்றவை மத்திய வருமான வரித் துறையால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி என்று குறிப் பிடப்பட்டுள்ளது. மாநில அரசு, வாட் வரியைத் தள்ளுபடி செய்தது. உள்நாட்டு விற்பனைக்குக் கொடுத்த சலுகையை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததற்கெல்லாம் அளிக்க முடியாது என்று 2,400 கோடி ரூபாய் வரி கோரி வழக்குத் தொடுத்து, முடிவாகாமல் உள்ளது.
               இந்தப் பின்னணியில்தான் மைக்ரோசாஃப்ட், நோக்கியாவை விலைக்கு வாங்கியது. இந்திய ஆலையை வாங்க முடியாது என்று மறுத்துவிட்டதால், நோக்கியா பெயரில் செல்பேசி விற்கப்பட்டாலும் இந்தியாவில் உள்ள நோக்கியாவின் உரிமை, ஒப்பந்த தாரர் என்ற பெயரில் சுருங்கியது. ஒரு திரைப் படத்தில், “மாப்பிள்ளை இவர்தான். ஆனால், இவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என்று வரும் நகைச்சுவையைப் போல், நோக்கியா செல்பேசி விற்பனையாகும்; ஆனால், நோக்கியாவுக்குச் சொந்த மில்லை என்கின்றனர்.

கனெக்டிங் பீப்பிள் - டிஸ்கனெக்டிங் எம்ப்ளாயீஸ்     

             இந்தியாவில் உள்ள நோக்கியா ஆலையை, மைக்ரோ சாஃப்ட் வாங்க மறுத்ததால், குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே ஆர்டர் என்று ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் கூறுகிறார்கள். எனவே, முதலில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்கள் என்று 5,000 தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர், 4,500 நிரந்தரத் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் வெளியேற்றப்பட்டார்கள். உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களிலும் இது பிரதிபலித்தது. அங்கும் விருப்ப ஓய்வு, ஆலை மூடல் காரணமாக சுமார் 5,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
           மேலும், பல்லாயிரம் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. இளம் தொழிலாளர்கள் தங்கள் வேலையைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கிறார்கள். அரசுகளும் 8 மாத காலமாக எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் மவுனம் சாதிக்கின்றன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டது, அவர்களின் எதிர்காலம், குடும்ப நிலை போன்றவை குறித்து அரசுகளிடம் எந்தப் பதிலும் இல்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்று தன்னைப் பெருமையுடன் கூறிக்கொள்ளும் ஒரு நாடு, தன் மக்களை இப்படியா கைவிடுவது?    

நன்றி : தி இந்து - தமிழ்                                      

ஞாயிறு, 27 ஜூலை, 2014

''நோக்கியா'' தரும் பாடம் என்ன?

 கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்,                           
                                 மாநிலச்செயலாளர்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                   
            மத்திய அரசு 2005-ல் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தை உருவாக்கியது. உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதும், தொழில்கள் தொடங்குவதும், உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்வதும், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதும், பொருளாதார மண்டலங்களின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. இதன் அடிப்படையில் நூற்றுக்கணக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இதற்காக, பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
            2009-ல் மத்திய அரசு மின்னணு தொழில்துறையின் வளர்ச்சிக்கு ஆலோசனை அளித்திட அமைத்த பணிப்பிரிவு பல ஆலோசனைகளை வழங்கியது. இந்த ஆலோசனைகளையெல்லாம் தமிழகத்தில் அதிமுக அரசு அதற்கு முன்னதாகவே 2005-ம் ஆண்டிலிருந்தே அட்சரம் பிசகாமல் அமலாக்கியிருந்தது. அதனால் தான் மேற்கண்ட பணிப்பிரிவு நாடு முழுவதும் ‘ஸ்ரீபெரும்புதூர்களை உருவாக்கிட வேண்டும்’ என்று கூறியது. 2005-ல் ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நோக்கியா நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. ஏக்கருக்கு ரூ. 8 லட்சம் என்று நிலத்தை வாங்கி ஏக்கருக்கு ரூ. 4.5 லட்சம் என்று 210 ஏக்கர் நிலத்தை நோக்கியாவுக்கு மாநில அரசு வழங்கியது. பத்திரப் பதிவுக்கட்டணம் முழுமையாகத் தள்ளுபடிசெய்யப்பட்டது. தடையில்லா மின்சாரம், முதல் 5 ஆண்டுகளுக்கு வருமான வரிவிலக்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50% வரிவிலக்கு, மத்திய விற்பனை வரி மற்றும் சேவை வரி, வேலை ஒப்பந்த வரி, குத்தகை வரி, நுழைவு வரி போன்ற வரிகளிலிருந்தும் விலக்குகள் வாரி வழங்கப்பட்டன. மேலும், நோக்கியா நிறுவனத்தைப் பொதுப் பயன்பாட்டு நிறுவனம் என்றும் அரசு அறிவித்தது.
          நோக்கியாவில் சுமார் 8,000 பேர் நேரடித் தொழிலாளர்களாகப் பணிபுரிந்தனர். தொழிலாளர்களில் 60% பேர் பெண்கள். நோக்கியாவுக்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து தருவதற்கு ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி., சால்காம், லைட் ஆன் மொபைல், ஆர்.ஆர். டொனாலி போன்ற நிறுவனங்கள் உருவாயின. இந்த நிறுவனங்களின் தொழிலாளர்கள் உட்பட நோக்கியா வளாகத்தில் சுமார் 22,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் சேர்ந்தனர். நோக்கியாவில் உற்பத்தி வேகமாக நடந்தது. கைபேசி உலகச் சந்தையில், 32 சதவீதத்தையும், இந்திய கைபேசி சந்தையில் 52 சதவீதத்தையும் நோக்கியா கைப்பற்றியது. கோடிகோடியாய் விற்பனை, கோடிகோடியாய் லாபம். 

ரூ. 21,000 கோடி என்னவாயிற்று....?                      
 
                கைபேசிக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த மென்பொருளுக்கு மத்திய அரசுக்குக் கட்ட வேண்டிய வரி ரூ.21,000 கோடியைக் கட்டாமல் ஏய்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதைப் போலவே உள்நாட்டில் விற்பனை செய்த கைபேசிகளையும் ஏற்றுமதி செய்வதாக இணைத்துக் கணக்குக் காட்டி மாநில அரசுக்குக் கட்ட வேண்டிய சுமார் ரூ.2,430 கோடியை நோக்கியா ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. எனவே, மாநில வருவாய்த் துறையும் மத்திய வருமானத் துறையும் நோக்கியா நிறுவனம் மீது வழக்கு தொடுத்தன. வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், நோக்கியா நிறுவனம் வரியைக் கட்டியாக வேண்டுமென்று உத்தரவிட்டதோடு நோக்கியாவின் சொத்துக்களையும் முடக்கியது. இதற்கிடையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு உலகம் முழுவதுமுள்ள தனது கைபேசி உற்பத்தித் தொழிற்சாலைகளை நோக்கியா விற்றுவிட்டது. ஸ்ரீபெரும்புதூரிலுள்ள நோக்கியா தொழிற்சாலை மீது வரி பாக்கி வழக்கு இருப்பதால் இதை மட்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கவில்லை. வரி பாக்கிக்காக நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது நோக்கியா நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் தொடர்ந்து கைபேசி உற்பத்தி நடக்கும் என்றும், தொழிலாளர்களின் வேலைக்கு ஆபத்து இல்லையென்றும் நீதிமன்றத்துக்கு உறுதியளித்தது. நடைமுறையில் தொழிலாளர்களை விருப்ப ஓய்வுத்திட்டத்தில் செல்ல நிர்ப்பந்தித்தது.
             தொழிலாளர்களின் வேலையைப் பாதுகாக்கத் தொழிற்சங்கத்தலைமை பல முயற்சிகளை மேற்கொண்டது. மாநில தொழிலாளர் துறை, தொழில் துறை, முதல்வர் போன்றோரிடம் முறையிட்டு, தொழிற்சாலையையும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலையையும் பாதுகாக்க வேண்டுமென்று வலியுறுத்தியது. 31.3.2014-ல் 2000-க்கும் மேற்பட்ட நோக்கியா தொழிலாளர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கோட்டை முன்பு நடைபெற்றது. தொழிலாளர் துறையும், அரசும் இதில் தலையிடவே விரும்பவில்லை. 

திமுக-அதிமுக வேறுபாடு இல்லை....?             
 
              இந்த மாதிரி விஷயங்களில் மத்திய ஆட்சியில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் எப்படி வேறுபாடு இல்லையோ, அதே மாதிரி தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதிமுக அரசு போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, அடுத்து வந்த திமுக அரசு அட்சரம் பிசகாமல் அமலாக்கியது. நோக்கியா நிறுவனம் தொடக்கத்தில் மூலதனமிட்ட ரூ.650 கோடிக்கும் மேலாக மதிப்புக்கூட்டு வரியாக சுமார் ரூ.850 கோடியை மாநில அரசு நோக்கியாவுக்குத் திருப்பி அளித்துள்ளது.
           9 ஆண்டுகளில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா நிறுவனத்தின் உற்பத்தியின் மதிப்பு ரூ.1,50,000 கோடி என்பதை நிறுவனமே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. குறைந்த மூலதனம், கொள்ளை லாபம் இதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்கை. ஆனால், தொழிலாளர்களின் நலன்....? 

22 ஆயிரம் தொழிலாளர்களின் கதி....?                
 
            தங்களுடைய எதிர்காலம் ஒளிமயமாக அமையும் என்ற நம்பிக்கையில் பணியில் சேர்ந்த 5,000 தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வுத் திட்டத்தின் மூலம் நோக்கியா நிர்வாகம் வெளியேற்றிவிட்டது. நிர்வாகம் தன்னிச்சையாக அறிவித்த நஷ்ட ஈட்டை வாங்கவில்லையென்றால் வெறுங்கையோடு வெளியேற வேண்டியிருக்கும் என்ற பீதியில் தொழிலாளர்கள், நிர்வாகம் கொடுத்ததை விரக்தி யோடு வாங்கிக்கொண்டார்கள். சுமார் 850 தொழிலாளர்கள் மட்டுமே வேலையில் உள்ளனர். நோக்கியா மட்டுமல்ல; இந்த நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரித்துக் கொடுத்து வரும் மற்ற சிறு நிறுவனங்களும் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்துவருகின்றன. ஸ்ரீபெரும்புதூர் பகுதி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நோக்கியா தொழிலாளர்கள் உட்பட 22,000 தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
            சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் நோக்கமாகச் சொல்லப்பட்ட தொழில் வளர்ச்சி, நோக்கியா எல்லா சலுகைகளையும் பெற்றுக்கொண்ட 9 ஆண்டுகளோடு முடிந்துபோனது. வேலைவாய்ப்பும் குறுகிய காலத்துக்கே அளிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மாற்று வேலைகளுக்கான வாய்ப்புகளின்றி நிர்க்கதியாய் விரட்டப்பட்டுள்ளனர்.                 
          ஆனால், நோக்கியா தமிழக அரசிடமிருந்து குறைந்த விலையில் நிலம், பத்திரப்பதிவு சலுகை, வரியை திரும்பப் பெற்றதில் ரூ.850 கோடி, பல்லாயிரக் கணக்கான கோடிகள் வரிச்சலுகை இத்தனையும் பெற்றுக்கொண்ட பிறகு மத்திய அரசுக்கு ரூ.21,000 கோடி வரிஏய்ப்பு, மாநில அரசுக்கு ரூ.2,430 கோடி வரி ஏய்ப்பு என்று நம் நாட்டுச் செல்வங்களை எல்லாம் ஏப்பம் விட்டுவிட்டுக் கூடாரத்தைக் காலிசெய்துவிட்டது. என்ன செய்யப்போகிறோம் நாம்? வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோமா?                      
நன்றி :